Monday, 27 June 2016

ஈட்டிய விடுப்பும் ஈட்டாத சம்பளமும்-2/2



ஒரு வாரத்தில் மேலதிகாரி அவருடைய லீவு முடிந்து வந்து கையெழுத்து போட்டுவிட்டார். இந்த படிவத்தையும் கவரிங் லெட்டரையும் ஒரு மெசஞ்சர் மூலம்  பிஏஒ வில் சேர்க்க வேண்டும் . லீவ் லிஸ்டில் அடுத்த ஆளாக எங்க ஆபிஸ் மெசஞ்சர் லீவு!

லீவ் முடித்து வந்த மெசஞ்சரை 'ரிஃப்ரெஷ்' செய்து தபாலை கொடுத்தனுப்பி பதிலுக்கு காத்திருந்தேன். சந்நிதியிலிருந்து 'இவருக்கு சம்பளம் போடலாம்' என்று பதில் வர வேண்டும். நம்ம தென்மேற்கு பருவமழை மாதிரியே இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் நடுராத்திரி வரும் என்று நான்கு நாட்களாக  ஏமாற்றி கொண்டே இருந்தது பதில் கடிதம்.

பதில் அனுப்பாததற்கு என்ன காரணம் இருக்க முடியும்?  ஓரளவு இந்த 'லீவ்  ரிதத்துக்கு'  நான் செட்டாகி, சனி பகவானோடு சேர்ந்து நிறைய  கஷ்டமான ஸ்டெப்ஸ் எல்லாம் பழகி  இருந்ததால் பதில் வராத  காரணத்தை  சுலபமாக அனுமானிக்க முடிந்தது. வேற என்ன அதே தான். சம்பளம் போடும் செக்ஷன் ஆசாமி லீவு!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பாடலை இழுத்து இழுத்து நான்காவது நாளாக பாடி சலித்த  பின்னர் 'சம்பளம் போடலாஞ்சாமியோவ்'  என்று ஒரு சுபயோக சுபதினத்தில் சந்நிதியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தது.  அடுத்து சம்பள பில் தயார் செய்து அனுப்ப வேண்டும்.

இந்த சம்பள பில் என்பது பதினைந்து இடத்தில் ஆட்டோகிராஃப் போட வேண்டிய ஒரு ஆவணம். 'say no to paper ,save trees' என்று  துக்ளியூண்டு ஏடிஎம் பேப்பருக்கு கூட ' நோ' சொல்லும் கால கட்டத்தில்  இங்கே  மாதா மாதம் ஷேஷசாயி பேப்பர் மில் ஓனர் வீட்டு கல்யாணம் போல கம்யூட்டர் ப்ரின்ட் அவுட் என்ற பெயரில்  பக்கம் பக்கமாக சம்பள பேப்பருக்கு  செலவிடப்படுகிறது. பிஏஒ வுக்கு ஒரு காப்பி,  நம்ம ஆபீஸுக்கு ஒரு காப்பி. ஆக மொத்தம் முப்பது பக்கம். முப்பது பேப்பரிலும் ஆட்டோகிராஃப். சேரன் கூட இத்தனை ஆட்டோகிராஃப் போட்டிருக்க மாட்டார். இது  போதாதென்று  ஒவ்வொரு மாதமும் பதினைந்து பக்க ஆட்டோகிராஃபோடு  ஒரு சாஃட் காப்பியும் (சிடி) சேர்த்து பிஏஒ அனுப்ப வேண்டும்.

காத்திருந்து காத்திருந்து பாடல் பாடிக் கொண்டே சம்பள பில்லை தயார் செய்ய சொல்லி ரெடியாக வைத்திருந்தேன்.  சாஃப்ட் காப்பி மட்டும் அலுவலகத்தில் வேறு ஒருவரிடம் இருந்தது. ஆனால் ரிதம் மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற கொள்கைப்பற்றோடு இருந்த  சாப்ஃட் காப்பி வைத்திருந்த அலுவலர் அவர் பங்குக்கு லீவு!

நான் சேரனிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக  சேதுவாக மாறிக்கொண்டிருந்தேன். சாஃப்ட் காப்பி ஆசாமி வராதபட்சத்தில் சம்பள பில்லோடு  இந்த முறை கபாலி ஆடியோ சிடி வைத்து அனுப்பிவிடும் முடிவிலிருந்தேன். ஆனால் இரண்டு நாளில் வந்து விட்டார்.  பெரும்பாலும் நாளை இந்த பில் பிஏஒ வில் சமர்ப்பிக்கப்படலாம் சாஃப்ட் காப்பியுடன்.  இருபத்தி மூன்று நாட்கள்  ஆகியிருக்கிறது நான் எடுத்த இருபது நாள் ஈட்டிய விடுப்புக்கான நற்பலன்களை அறுவடை செய்ய. ஆனால் வாசக் கதவ ராசலச்சுமி தட்ட  இன்னும் கூட ஒரு வாரம் ஆகும்.

எங்கள் ஆபீஸில் காது சரிவர கேட்காத ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தம்மா என்னை பார்த்தவுடன் குட்மார்னிங்க்கு பதில் 'அவர் லீவும்மா' என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். 'வெற்றிக்கொடி கட்டு'  பாடல் ரேஞ்சுக்கு வேகம் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும்  என்னுடைய ஆபிஸ் வேலைகள் அனைத்தும்  'சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் ' பிஜிஎம்முக்கு மட்டுமே செட்டாகிப் போனது தான் சோகம்.

அலுவலகம் சார்ந்த அனைவரும்  அவரவர் விடுமுறையை என்னைப் போலவே  தன்  சொந்த காரணங்களுக்காக தான் எடுத்திருந்தனர். ஆனால்  ஆச்சர்யம் என்னவென்றால் என்னுடைய பணி சம்பந்தப்பட்ட கோப்புகள் எந்த டேபிளுக்கு போகிறதோ அவர் கட்டாய விடுமுறையாக குறைந்தது இரண்டு நாட்களாவது காணாமல் போய் திரும்பி வந்த பிறகே ஒவ்வொரு ஸ்டேஜும் வேலை நடந்தது.

ப்ரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசு விதிமுறைகளை இன்னமும் ஜவ்வுமிட்டாய் மாதிரி பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். நல்ல விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் பரவாயில்லை.என் புருசனும் கச்சேரிக்கு போறான் கணக்காக எந்த ரூலா இருந்தாலும், அதனால  எந்த பிரயோஜனமும் இல்லைன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு  அடாவடியா ஃபாலோ பண்ற நம்ம ஆளுங்களோட கடமையுணர்வுக்கு ஈடு இணையே கிடையாது. நான் விடுப்பு எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் விடுப்பு முடிந்து வந்து நானே  செய்ய வேண்டியிருந்தது இதற்கு ஒரு சின்ன உதாரணம்.

கொசுறு :

எல்லோருடைய ஜூன் மாத சம்பள பில்லோடு சேர்த்து  என்னுடைய மே மாத சம்பள பில்  'pass' ஆக வேண்டும். அது ஓகேயானால் தான் எனக்கு ஜூன் மாத சம்பளம் போட முடியுமாம் . ஜூன் சம்பளம் ஜூலைக்குள் கிடைக்குமா பார்ப்போம். அதற்குள் 'ரிசர்வ் பேங்க் கவர்னர் லீவுங்க உங்க பில் பாஸ் ஆகல' என்று சேதி வராமல் இருக்க வேண்டும் எண்ட குருவாயூரப்பா!

Sunday, 26 June 2016

ஈட்டிய விடுப்பும் ஈட்டாத சம்பளமும்- 1/2


அரசு அலுவலகங்களில் ஈட்டிய விடுப்பு எடுக்கவேண்டுமானால் 15  நாட்களுக்கு முன்பே கண்மனி அன்போட என்று ஆரம்பித்து லெட்டர் , மடல் கடுதாசி கடிதம் என்று ஏதோ ஒரு பெயரில் வஸ்து ஒன்றை
சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். யானும் அவ்வண்ணமே ஒன்றை சமர்ப்பித்து,  லீவ் எடுக்க வேண்டிய நாள் வரை அபிராமி ராமி அபிராபி என்று அனுமதி கடிதம் வேண்டி காத்திருந்து, வராமல் போகவே ( பெரும்பாலும் யாருக்கும்  வராது) லீவில் அப்ஸ்காண்ட் ஆகிவிட்டேன்.

இருபது நாள் லீவ் முடிந்து லீவில் எடுத்த அவதாரங்களை களைந்து வெற்றிகரமாக மீண்டும்  வேலையில் சேர்ந்தாகிவிட்டது. அரசுப் பணியில் சில பல வருடங்கள் கூட்டி பெருக்கினால், குப்பை கொட்டுவதற்கு   'செல்ஃப் ட்ராயிங் ஆபீஸர்' என்ற  சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும்  'உயர் பதவியில்' தூக்கி அமர்த்தப்படுவோம்.
அதாவது தன்னுடைய சம்பள பில்லை(  pay bill)  தானே மாதா மாதம் தயாரித்து பிஏஒ எனப்படும் pay and accounts officeக்கு(PAO) அனுப்ப வேண்டும். இந்த நேர்த்திக்கடனை மாதா மாதம் செய்தால் தான் சம்பளம். வேலைக்கு தான் வர்றோமே ஆபீஸ்ல சம்பளம் போடுவாங்க என்று தெனாவட்டாக இருந்தால் வீட்டில் சோறு பொங்க முடியாது.

இந்த சொ.செ.சூ பதவியில் மருத்துவ விடுப்போ ஈட்டிய விடுப்போ எடுக்கும் போது தான்  சனி பகவான் எந்தளவு 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' ரேஞ்சுக்கு உக்கிரத்துடன் நம் ராசியில்
குத்தாட்டம் ஆடுகிறார் என்பது  புரியும்.

 நம்ம லீவ் கதைக்கு வருவோம்.

லீவ் முடிந்து வந்து பணியில் சேர்ந்த பிறகு தான் நான் ஈட்டிய விடுப்பு எடுக்கலாமா வேண்டாமா என்ற அனுமதியளிக்கும் கடிதம் பிஏஓ வுக்கு அனுப்பப்பட தயார் நிலையில் இருந்தது. அடங்கொன்னியா!  இந்த லெட்டர் எப்ப அங்க போறது எனக்கு எப்ப சம்பளம் வர்றது என்று அயர்ச்சியாக இருந்தது. சில பல சாங்கியங்களுக்குப் பின்
இந்த லெட்டர் அனுப்பப்பட்டு  நீங்க லீவ் எடுக்க தகுதியானவர் தாங்கோ  என்றுரைக்கும் leave eligibility report( LER) நான் லீவ் முடித்து பணியில் சேர்ந்த எட்டாம் நாள்  பிஏஒ விலிருந்து எங்கள் அலுவலகம்  வந்தடைந்தது. இந்த  LER ஐ தொடர்ந்து மேலும் பல சடங்குகள் காத்து கிடந்தன.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தாரக மந்திரத்தை ஒரு நாளைக்கு 108  முறை உச்சாடனம்  செய்யும் அரசு ஊழியராகிய நான் விடுப்பில் செல்லும் காலங்களில் எனது பணியினை இன்னாரிடம் ஒப்படைக்கும் certificate of transfer of charge(CTC)  என்ற படிவத்தை பூர்த்தி செய்து மறுபடி சந்நிதானத்துக்கு  (பிஏஒ) அனுப்ப வேண்டும்.

அந்த படிவத்தை ஆபிஸில் யார் வைத்திருக்கார் என்பதை சிபிசிஐடி மூலம் கண்டறிந்து அந்த நபரிடம் கேட்க அவர் ஏதோ ரேஷன் கடையில் சர்க்கரை தீர்ந்து போனது போல 'இனிமே கவர்மென்ட்ல ப்ரிண்ட் ஆகி வந்தா தான் படிவம்' என்றார். நமக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும் போலயே சம்பளம் வாங்க என்ற அதிர்ச்சியை காலை உணவோடு சேர்த்து செமிக்க முயற்சிக்கையில் 'அந்த கடைசி டேபிள்ல வேணா கேட்டு பாருங்க  மேடம்' என்று இன்னொரு டிப்பையும் தந்தார். நேராக கடைசி டேபிளுக்கு படையெடுத்தால் சீட்டில் ஆள் இல்லை. விசாரித்ததில் அவர் லீவ் என்று தெரியவந்தது. இந்த கடைசி டேபிளில் ஆரம்பித்தது தான் சனி பகவானின் ' லீவ் ரிதம்' என்ற சூப்பர் டான்ஸர் நடன நிகழ்ச்சி.

அடுத்த நாள் அந்த கடைசி டேபிளிடம் படிவத்தை வாங்கி பூர்த்தி  செய்து ஆரத்தி எடுக்காத குறையாக ஆபீஸிலிருந்து சீக்கிரம் பிஏஒவுக்கு அனுப்புங்க என்று மன்றாடிவிட்டு வந்து மூன்று நாள் கழிந்த பிறகே தெரிய வந்தது இதை அனுப்ப வேண்டிய ஆபீஸர் இரண்டு நாட்களாக லீவு!

 ஆபீஸர் ஒரு வழியாக வந்து ஒரு  கல்யாணி கவரிங் லெட்டரை டைப்பி  முடித்த போது அதில் கையெழுத்திட வேண்டிய மேலதிகாரி ஒரு வாரம் விடுமுறையில் சென்று விட்டார். அடுத்த லீவு! 

மறுநாள் காலையிலிருந்து  பல் விளக்குகிறேனோ இல்லையோ அன்றைய ராசி பலனை தவறாமல்  பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ரேடியோவில் சொல்லப்படும் கேலி ஜோசியத்தை கூட விட்டு வைக்க வில்லை. அநேகமாக எல்லா நாட்களிலும் இன்று உங்கள் ராசியான நிறம் கறுப்பு அனுகூலமான எண் ஏழரை என்றே சொல்லப்பட்டது.

(தொ.....)


Tuesday, 7 June 2016

அசெம்ப்ளி(ங்).

அசெம்ப்ளி(ங்).

பேட்டரி வாங்கி மாளாமல் பேட்டரி ஆப்பரேட்டட் பொம்மைகளை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருந்த நான் இப்போது அசெம்ப்ளிங் செட்டுகளை கண்டு கலங்கிப் போயிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு லீகோ(Lego) அசெம்ப்ளிங் செட் ஒன்றை யோஹானின் தாத்தா வாங்கி தந்திருந்தார். 75 பார்ட்ஸ். லீகோ பொம்மை என்னவோ நம் சுண்டு விரல் அளவு தான். அந்த பொம்மை ஓட்டும் படகு செய்யத்தான் அவ்வளவு பார்ட்ஸ் . லீகோவின் படகு சவாரி கற்பனையில் மிதந்து கொண்டே  இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டரை மணி நேர உழைப்பு. நிஜமான படகு ஒன்றை கட்டி முடித்த திருப்தியுடன் இன்ஸ்ட்ரக்‌ஷனை மறுபடி படித்தால் படகை தண்ணியில் போட வேண்டாம் என்று தெளிவாக சொல்லப்பட்டிருந்தது.  படகில் லீகோ பொம்மையை வைத்து ஷோகேஸில் வைத்துக்கொள்ள வேண்டுமாம். என்ன கொடுமை! நடுராத்திரி எனது  உண்மை சொரூபத்தை காண்பித்து கோவப்படக்கூட திராணி இன்றி அசந்து தூங்கிவிட்டேன்.

உண்மையில் அசெம்ப்ளிங் செய்வதில் ஒரு த்ரில் உண்டு. நம் கையில் ஒரு பொருள் படிப்படியாக உருபெறுவதை ரசிப்பது ஆனந்தமான விஷயம். எண்ட் ப்ராடக்கட்டை பார்க்கும் போது ராணாடார் டிஎம்டி முறுக்கு கம்பியில் கட்டிய வீட்டை பார்ப்பது போல ஒரு மிதப்பு வரும்.ஆனால்  எல்லா நேரங்களும் அப்படி அமைவதில்லை. நடுரோட்டில் செருப்பு பிய்ந்து போன எரிச்சல் தான் பெரும்பாலும் மிஞ்சுகிறது.

பல நேரங்களில் செய்முறை விளக்க படங்களை  பார்க்கும் போது நமக்கு பிடிக்காத பாடத்தில் பரிட்சை எழுதுவது போலவே இருக்கும் . ஒவ்வொரு ஸ்டெப்பையும் புரிந்துகொள்வதற்குள் எர்வாமேட்டீன் விளம்பரம் நம் கண்முன்னே தோன்றி மறையும். A வை C யில் தலைகீழாக மாட்டி(B எங்கே என்று ஆராய கூடாது)  D யை மூன்று முறை சுற்றி மீடியம் சைஸ் நட்டு போட்டு எக்ஸ்ட்ரா ஸ்மால் சைஸ் போல்ட்டு போட்டு .... ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ நமக்கு  கழுத்து திருகி விடும். பல நேரங்களில் பையன் 'அம்மா நீங்க ஏம்மா இப்படி கோணலா உட்கார்ந்திருக்கீங்க?' என்பான் .

இதில் இன்னொரு ப்ரச்சனை சில சமயம் எல்லாம் செய்து முடிக்கும் நேரத்தில் ஏதோ ஒரு சிறு நட்டோ போல்டோ காணாமல் போயிருக்கும் அல்லது வந்த பேக்கிங்லேயே மிஸ் ஆகி இருக்கும். வீட்டையே உருட்டி புரட்டி போட்டு தேடி முடித்தபின்  நம் ஆடை மடிப்பிலேயே எங்கேயாவது ஒளிந்து கொண்டிருந்துவிட்டு  ரொம்ப நேரமா நம்மள தான் தேடுறாங்க என்று கீழே விழும். கடைசி வரை கிடைக்காமல் போன சிறு சிறு பாகங்களும் உண்டு.இந்த ஏழுகடல் ஏழுமலையெல்லாம் உருண்டு புரண்டு நீந்தி தாண்டி தவ்வி கடைசியாக கிளியைப் பிடிக்கப்போகும் சமயத்தில் ஆரம்பத்தில் செய்த ஏதோ ஒரு சிறு தவறினால் மொத்தத்தையும் கழட்டி மாட்ட வேண்டிய அதிர்ஷ்டமும் பல சமயங்களில் வாய்க்கும். இதற்கெல்லாம் அசந்துவிடவே கூடாது.

பல மணி நேரங்கள்  முட்டி மோதி பார்த்து,  தலைகீழாக அமர்ந்தும் பார்த்து அசெம்பிள் செய்ய முடியாமல் திணறினாலும் பிள்ளையின் முன் தோல்வியை ஒத்துக்கொள்ள மனசு வரவே வராது. அவ்வாறு ஒத்துக்கொள்ளும் நிலை வரும்போது  'மாற்றம் முன்னேற்றம் ....' என்ற மாம்பழ கலர் போஸ்டரில் வந்ததை போல மோட்டுவலையை வெறிக்க வெறிக்க பார்த்தபடி "இது அவ்ளோ தான்டா கண்ணா, இந்த செட் வேஸ்ட் " என்று சொல்லவேண்டி வரும்.

எனக்கு இப்போதெல்லாம் ஸ்கூல் ப்ராஜக்ட்டுகளை விட  வயிற்றில் புளியை கரைப்பது அசெம்ப்ளிங் செட்டுகளாக வரும் கிஃப்டுகள் தான். இவை பெரும்பாலும் நம்மீது எதற்காகவோ, நம்மீது நேரடியாக காட்ட முடியாமல் காண்டாக உள்ள நல்ல நண்பர்களாலேயே நம் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக தரப்படுவதாக நினைக்கிறேன். நம்மை பழிவாங்கும் ஒரு நூதன முயற்சியாக இதற்காக மெனக்கெட்டு அதிகமான பாட்ர்ஸ் உள்ள அசெம்ப்ளிங் செட்டாக தேடிப்பிடித்து வாங்குகிறார்கள் இந்த நல்லெண்ணம் கொண்டவர்கள்.

இது போன்ற அசெம்ப்ளிங் செட்டுகளை குழந்தைகளோடு சேர்ந்து செய்தால் குழந்தைகளுக்கு ப்ராப்ளம் சால்விங் திறன் வரும் என்று நமது அறிவார்ந்த சமூகம் சொல்கிறது. எனக்கென்னமோ இந்த அசெம்ப்ளிங் செட் கிஃப்டாக வர ஆரம்பித்த பிறகு தான் குடும்பத்தில் ப்ராப்ளமே அதிகமானது போல் தோன்றுகிறது. நமக்காக இலவசமாக ஏகப்பட்ட ப்ரச்சனைகள் காத்திருக்கும்  போது யாராவது இதை வேறு காசு கொடுத்து வாங்குவார்களா?


சமீபத்தில் யோஹான் பிறந்த நாளைக்கு என் உயிர் நண்பி கொடுத்த ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் பொம்மைக்கு 176 pieces only என்று அதன் அட்டையில்
போட்டிருந்தது. மிரண்டு போய் எடுத்து ஒளித்து வைத்து விட்டேன். அரை நாள் லீவ்
போட்டு தான் அசெம்பிள் செய்ய வேண்டும்.
ஒரு லாரியில் இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் அளவுக்கு பொம்மைக்கு ஏண்டா தர்றீங்க?! நண்பிக்கு நானும் இப்படி ஏதாவது அன்பளிப்பு அளித்து எனது அன்பை காட்ட ப்ரியப்படுகிறேன். நண்பியை  பழிவாங்க வேறு நல்ல ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.


யாரையாவது பழிவாங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் யோசிக்காமல் உள்ளதிலேயே காம்ப்ளிகேடட் அசெம்ப்ளிங் செட்டை ஒன்றை அவர் பிள்ளைக்கு பரிசளிக்கவும். அதோடு நின்று விடாமல் அம்மா செட் பண்ணிட்டாங்களா, அப்பா இன்னும் பண்ணவே இல்லையான்னு இரண்டு நாளுக்கொருமுறை சிரமம் பார்க்காமல் ஃபோன் போட்டு விசாரிக்கவும். ஏதோ நம்மளால முடிஞ்சது.

Friday, 27 March 2015

லைவ் ரிலே

ஹைவேயில் நின்றுக்கொண்டு 
'இதோ நம்ம ஸ்ட்ரீட் திரும்பிட்டே இருக்கேம்மா'

டெப்போவிலிருந்தே கிளம்பாத பஸ்ஸிலிருந்து....
"இன்னும் ரெண்டே ஸ்டாப் தான், இறங்கின உடனே ஃபோன் பண்றேன்"

வீட்டு வாசப்படியில் நின்றுக் கொண்டே
'வை வை வை சிக்னல் போட்டாங்க' 

கால் வெய்டிங் ஆப்ஷனே இல்லாத ஃபோனில் 'இன்னொரு லைன்ல பாஸ் வர்றார் அப்புறம் பேசறேன்' 

கும்மிடிபூண்டியில் கிளம்பிக் கொண்டே 
'நாளைக்கு மார்னிங் சென்னை ரீச் ஆயிடுவேன்'

இதெல்லாம் இப்போது அன்றாடம் சுலபமாக கேட்கக் கூடிய வசனங்கள்.

ஒரு ஃபோனுக்கு இரண்டு ஃபோன், ஓரே ஃபோனில் இரண்டு சிம் என்ற அலப்பறை ஒரு பக்கம். அது போக, உச்சா போவதை கூட ரன்னிங் கமெண்ட்ரி தருபவர்கள் மறுபக்கம். 

அலைப்பேசியற்ற ஒரு தெருவை கடந்து வருவதோ, பத்து பேர் கூடியுள்ள ஒரிடத்தில் அலைபேசியே இல்லாத ஒருவரை கண்பதோ குத்துப்பாட்டில்லாத தமிழ் படம் போல அரிதான விஷயமாகிவிட்டது. 

எது நடந்தாலும் உடனுக்குடன் மார்ஸ் கிரகம் வரை தெரிவிக்கவில்லையென்றால் ரத்தம் கக்கி சாவோம் என்ற சாபமும் அலைபேசி வாங்கும்போதே நமக்கு இலவச இணைப்பாக கிடைத்துவிடுகிறது. 

டிவி சேனல்களுக்கு கடுமையான போட்டியாக நாமே பல நேரங்களில் 24/7 நியூஸ் சேனல்களாக மாறி ரன்னிங் கமென்டரியோடு  லைவ் டெலிகாஸ்ட்டும் தந்து வருகிறோம்.'இப்ப தான் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிச்சேன் அடுத்து ரசம்' என்று சொல்லி முடிக்கும் முன் 3ஜியின் மகிமையில் பாதி தின்ற ரசம் சாத ஃபோட்டோ வாட்ஸப்பில் டவுன்லோட் ஆகியிருக்கும். 

கொஞ்சம் பின்னோக்கி யோசித்தால் 
எந்நேரமும் மனதுக்கு பிடித்தவர்களுடன் தொடர்பிலேயே இருக்க ஏங்கிய நாட்கள் உண்டு என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. நமது அன்புக்குரியவர்களின் குரலைக் கேட்க பல கிமீகள் நடந்து சென்ற பொழுது கையடக்கத்தில் ஒரு சாதனம் இருக்காதா என நினைத்ததும் உண்மை தான்.

 எஸ்டிடி பேசும் போது மீட்டரை விட வேகமாக நமது பிபி எகிறிக்கொண்டிருந்த காலத்தை கடந்து தான் இரவெல்லாம் இலவசமாகவோ, பிடித்தவரோடு மணிக்கு பத்து பைசாவோ செலவு செய்து பேசும் நிலையை எட்டியுள்ளோம். ஆனால் இலவசமே கசந்து போகுமளவு அலைபேசி உபயோகத்தை ஓவர்டோஸாக்கி, ஃபோனில் சார்ஜ் இல்லையெனில் ஜன்னி கண்டுவிடும்  அபாய நிலையை நாமாகவே உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என்பதுமே மறுப்பதற்கில்லை. 

உதாரணமாக, ட்ரெய்னில் டாய்லெட்டில் தண்ணீர் இல்லை என்பது ஒரு பெரிய கவலையாகவே தெரியாது, ஆனால் சார்ஜ் பண்ண அந்த கம்ப்பார்ட்மென்டில் ப்ளக் பாயின்ட் இல்லை என்ற வருத்தமே அதிகமிருக்கும். 
 
ஆனால் என்ன தான் கான்ஸ்டன்ட்லி-இன்-டச் ஆசை கல்யாணத்திற்கு முன் டைரிமில்க் சில்க் மாதிரி திகட்டாத சுவையை தந்தாலும், கல்யாணமாகி ஆறு மாதம் கடந்த நிலையிலேயே கணவர்கள் 'இந்த செல்ஃபோன் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனான்...'என்ற டயலாக்கோடு அலைவதை சகஜமாக பார்க்க முடிகிறது. 

இந்த 24/7 நான்ஸ்டாப் கம்யூனிகேஷனை மறைமுகமாக ஊக்குவிக்கும் தொடர்பு சாதனங்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை பெருமளவு பதம் பார்த்திருக்கின்றன என்பதை இப்போதுள்ள தலைமுறை உணர இன்னும் சில வருடங்கள் ஆகும். 
அவ்வாறு உணரும் நேரம் அலைபேசி உபயோகம் பல் துலக்குதலைக் காட்டிலும் இன்றியமையாத ஒரு இடத்தை எட்டியிருக்கும். 







Wednesday, 4 February 2015

மெமோ



அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு டிஏ அரியர்ஸ், இன்க்ரிமென்ட், ஈட்டிய விடுப்பு மாதிரி பழக்கப்பட்ட ஒரு வார்த்தை 'மெமோ'. பழக்கப்படாத வார்த்தை தமிழில் 'குறிப்பாணை'. 
அடுத்தடுத்து தொடர்ச்சியாக மெமோ வாங்கியதாலோ என்னவோ பணியிடத்தில் நான் ஒரு கைப்புள்ளை. உடனே கைப்புள்ளைக்கே இந்த கதின்னா என்று யாரும் யோசிக்கப்படாது. கட்டதுரை யாருன்னும் கேட்கப்படாது. 

ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு முதல் முறை மெமோ வாங்கிய போது முதல் வருடம்  பிசியாலஜியில் முதல் கிளாஸ் டெஸ்ட்டில் ஃபெயில் ஆன போது கிடைத்த ஷாக் மறுபடியும் கிடைத்தது. இருக்காதா பின்ன? +2 வரை துக்ளியூண்டு புத்தகங்களை படித்து, உரு போட்டு ஜில்லாவிலேயே அதிக மதிப்பெண் பெற்று, இதுவரை பள்ளி வாழ்க்கையில் ஃபெயில் என்பதையே அறியாமல் இருந்துவிட்டு காலேஜ் வந்து பெயிலானால்? ஆங், அதே ஷாக் தான். தலைகாணி அளவு பெரிய புத்தகத்தில் படிக்கத் தெரியாமல் கப் வாங்கியது மறக்கவே முடியாது வாழ்நாள் முழுதும். அப்புறம் அதுவே பழகி விட்டது.ஃபெயில் ஆக அல்ல. மெமோ வாங்கினால் அலட்டிக்கொள்ளாமல் பதில் எழுத. 

முதல் முறை மெமோ வாங்கிய போது கிடைத்த 'ஷாக் வேல்யூ'அடுத்தடுத்து வாங்கும் போது நீர்த்துப் போய் மெமோவுக்கான மதிப்பு குறைந்துவிடுவதென்னவோ உண்மை. அதே சமயம் மெமோ வாங்கி விட்டால் நம் குலப்பெருமையே களங்கப்பட்டு விட்டதாக நம்மை சுற்றி உள்ளவர் போடும் படங்களை தான் சகித்துக் கொள்ளவே முடியாது. உங்க பொண்ணு யார் கூடவோ ஓடி போயிடிச்சாமே என்ற ரீதியில் தொடரும் மெமோ பற்றிய போலியான விசாரிப்புகளை கடக்கவே அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும். 

நான் வான்டடாக ஜீப்பில் ஏறிய மற்றொரு விஷயம் கோர்ட் கேஸ். கோர்ட்டில் கிடைத்த ஆப்பு பத்தாது என்று காலேஜிலும் கிடைத்தது பம்பர் பரிசு. 
வழக்கு தோற்ற கையோடு கேஸ் போட்ட மூவருக்கும் மெமோ கையில் திணிக்கப்பட்டது உச்சபட்ச கொடுமை. அந்த கேஸ் தோற்றதன் விளைவுகளை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருப்பது தான் ஆறாத சோகம்.

ஆனால் மெமோ வாங்கியதில் புரிந்து கொண்ட ஒரு அரிய உண்மை என்னவென்றால் நாம் கஷ்டப்படுகிறோமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், தனக்கு ஆதாயம் இல்லையெனில்  நியாயத்துக்காக கூட உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதே. சிவப்பாக இருந்தாலே ரத்தம் தான், தக்காளி சட்னி அல்ல என நம்பும் என்னை போன்ற ஆட்களுக்கு ,சுற்றியிருந்த பலருடைய நீலச்சாயம் வெளுத்தது இந்த மெமோ விஷயத்தில் தான். 

மேலும் நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என்று நாட்டாமை சரத்குமார், விஜய்குமார் ரேஞ்சுக்கு கையில் சொம்போடு அலைந்தால் உண்மையிலேயே நாம் வாங்கும் மெமோக்களுக்கு என  தனியாக ஒரு ஃபைலை சுமந்தபடி மரத்தடிக்கே வர வாய்ப்பிருக்கிறது.அதற்காக நேர்மையாக இருக்கவே கூடாது என்று சொல்ல வரவில்லை.ஹமாம் சோப்பு போட்டு குளித்தால்  மட்டும் போதாது, அரசுப்பணியில் சமயோஜிதமாக நடந்துக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். 

அரசுத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் மெமோ என்ற விஷயத்தை ஒரு மானக்கேடானா விஷயமாகவே கருதுகின்றனர், என் பெற்றோர் உட்பட . 
இருவருமே அரசு பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள்.நான் வாங்கிய மெமோக்களினால் பெரிதும் வருந்தியது என் பெற்றோர் மட்டுமே. ஏனோ எனக்கு மெமோவுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுத்து வருந்த முடிந்தில்லை. 

உண்மையிலேயே தவறு இழைத்து, அரசு விதிமுறைகளை மீறுவதற்காக தரப்படும் மெமோக்கள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவை. அவற்றுக்கான சரியான விளக்கத்தை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது மெமோ வாங்கியவரின் கடமை. 

அரசுப் பணியில இதெல்லாம் சாதாரணமம்பா என்ற 'டேக் இட் ஈஸி ஆட்டிடியூட்' டிஎன்பிஎஸ்சி பரீட்சை எழுதும் போதே வந்துவிட்டால் நல்லது. அதை விட நல்லது அரசு வேலையாக இருந்தாலும் நேரமும் நேர்மையும் தவறாமல் இருப்பது. 

டிஸ்கி: 
இந்த பதிவுக்காக மண்டையை உடைத்துக் கொண்டு அரசு குறிப்பாணையை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள்  என்று அவசியமில்லாமல் யாரும் பொங்கி பொங்கல் வைத்துவிடாதீர்கள். இது ஒரு ஜாலி பதிவு. அதற்கேற்ற முக்கியத்துவம் அளித்தாலே போதுமானது. 




Friday, 16 January 2015

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

சட்டை போடாமல் மூன்று பேர்.அதில் ஒருவன் வேஷ்டி, ஒருவன் சின்ன ஜட்டி, இன்னொருவன் கொஞ்சம் பெரிதாக கட்டிய கோவணம். பாவாடை சட்டையோடு ஒரு பெண். குல்லாய் போட்டுக்கொண்டு இரு சிறுவர்கள். இவர்களோடு சேர்ந்து ஒரு குரங்கு.

 எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் இந்த ஏழு பேர் அடங்கிய கும்பல் சேர்ந்தது தான் அந்த ஊர் பள்ளியில் ஒரு வகுப்பு! அதற்கு ஒரு வாத்தியார் குரங்குக்கும் சேர்த்து பாடம் வேறு எடுப்பார்.  

எகிப்து மம்மியாகட்டும், சீனாவின் புத்தர் சிலையாகட்டும், பக்கத்து ஊரில் காணாமல் போன ஒரு மாணிக்க கல்லாகட்டும், சொந்த ஊரில் மாயமாய் மறைந்த பாதி தின்ற லட்டாகட்டும் ... எதுவாக இருந்தாலும் அந்த ஊரின் குற்ற புலனாய்வுதுறை, சிபிசிஐடி, சிஐஏ எல்லாமே இந்த ஏழு பேர் அடங்கிய குழு தான். 

நடுநடுவே ஒரு சயின்டிஸ்டோடு சேர்ந்து ரோபொடிக்ஸ், பறக்கும் பந்து, கதிர்வீச்சு  போன்ற கண்டுபிடிப்புகளில் சயின்டிஸ்டுக்கே சொல்லி தருவார்கள். 

ஊரில் எந்த  போட்டி நடந்தாலுமே இந்த ஏழு பேருமே கலந்து கொள்வார்கள், அவர்களில் ஒருவர் கட்டாய வின்னர். 

இது போக ரேக்ளா ரேஸ்,பனிச்சறுக்கு,  கேரளாவில் நடைபெறும் களரி, ஜப்பானில் நடக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகள், உலகளவில் நடக்கும் கிராண்ட் ப்ரீ என்று வெளுத்துக்கட்டும் இந்த குழு. கவனிக்க, எல்லாவற்றிலும் குரங்கும் உண்டு. 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குதிரை வண்டி, மாட்டு வண்டி, சில சமயம் பறக்கும் கம்பளம் என ஏதோ ஒன்றில் மொத்த கும்பலும் பயணிக்கும் .  திடீரென க்ளைடர், ட்ரெயின், நீர்மூழ்கி கப்பல்கள் என மார்டன் டே ட்ரான்ஸ்போர்ட்டை அவர்களே அனாயாசமாக ஓட்டவும் செய்வார்கள். 
 
இவர்கள் எது கேட்டாலும் செய்யக்கூடிய ஒரு ராஜா. நாட்டில் எந்த ப்ரச்சினை வந்தாலும் ராஜா இவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஒரு துரும்பை கூட அசைப்பதில்லை. கதை தமிழ் நாட்டில் நடப்பது போல தோன்றுவது இந்த ராஜாவை பார்க்கும் போது மட்டும்தான் தான். மற்றபடி மேற்கூறிய அனைத்தும் நடப்பது வடநாட்டில் ஒரு கிராமத்தில். 

இதெல்லாம் என்ன கொடுமையோ. சரி, இருந்துட்டு போகட்டும். 

நேக்கு ஒரே ஒரு டவுட்டு தான். 

 இந்த கதைகளும் சம்பவங்களும் எந்த கால கட்டத்தில் நடக்கின்றன? முன்னுக்குப் பின் முரணாக ஏகத்துக்கு பூ சுற்றும் இந்த தொடர் சிலபல வருடங்களாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதர்சம்! பிள்ளைகளுக்கு இதில் சந்தேகம் வர வாய்ப்பில்லை. காலங்கள் புரிய தொடங்கும் போது பென் டென்னுக்கோ டீனேஜ் ம்யூட்டன்ட் நின்ஜா டர்ட்லுக்கோ மாறி இருக்கும் கவனம். உடன் அமர்ந்து பார்க்கும் நமக்கு தான் மண்ட காயீ!! 

இதில் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கான தமிழ் சேனல்களில் இது போன்ற தூக்கிவைத்து கொண்டாடும்படியான ஹீரோ கதாபாத்திரம் எதுவுமே இல்லை.அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், ராணி காமிக்ஸ் இவற்றில் நாமெல்லாம் படித்து ரசித்தளவு கூட தமிழ் சேனல்களில் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் இல்லை. சுட்டி டிவியின் டப்பிங் செய்யப்பட்டும், சுடப்பட்டும்  ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் படு மொக்கை. 

அது ஏன் குழந்தைகளுக்கான ஹீரோக்கள் வடக்கிலோ வெளிநாட்டிலோ தான் உருவாகிறார்கள்? சோட்டாபீம்,ஹிஷிமோரோ,கிட்டரெட்சு,
டோரேமான்,கிஸ்னா, ரோல் நம்பர் 21, டோரா, டியகோ, ஷக்திமான்,ஸ்பைடர்மேன், பவர் ரேஞ்சர்ஸ், சூப்பர்மேன்,  லிட்டில் கிருஷ்ணா, பால் கணேஷ், ஜாக்கி சான் என எல்லாமே இரவல் ஹீரோக்கள் தான். தமிழ் திரையுலகில் சொந்தமாக தமிழ் பேசும் ஹீரோயினுக்கு பஞ்சம் மாதிரி குழந்தைகளுக்கான லோக்கல் ஹீரோக்கள் பஞ்சம்.

'ஓடு ஓடு  அது நம்மை நோக்கி தான் வருது'  போன்ற டப்பிங் தமிழுக்கு நமது குழந்தைகள் கைகொட்டி சிரிப்பதைப் பார்த்து திருப்தியடைந்து விடுகிறோமோ?! 
யாராவது நல்ல தமிழ் பேசும் சூப்பர் ஹீரோவை உருவாக்கினால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் என்ன, நாமளே 'டாமில் ஈஸ் யுவர் மதர் டங்' என்று பிள்ளைக்கு சொல்லும் நிலையில் தானே இருக்கிறோம்.
 வாட் டு டூ?? 

Sunday, 4 January 2015

ஆட்டோ


ஆட்டோ ஒன்று செய்ய வேண்டும். ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை வைத்து. 

இது ஒரு எல்கேஜி ஸ்கூல் பையனுக்கான அஸைன்மென்ட்.  இதுப் போன்றதொரு வேலையை எனக்கு காலேஜ் படிக்கும் போது கொடுத்திருந்தால் கூட என்னால் செய்திருக்க முடியாது. கைவினைப் பொருட்கள் செய்வதோ, ஏதாவது மாடல் செய்வதோ, வரைவதோ எதுவுமே வராது. ஒரு வட்டத்தை கூட வட்டமாக  போட வராது. நான் பிள்ளைக்கு என்னத்த சொல்லித் தர போகிறேன்? 

எந்த துறையாக இருந்தாலும் நமக்கு வழிக்காட்டிகளுக்கா பஞ்சம்!அறிந்த தெரிந்த நண்பர்களிடம் ஆட்டோ மாடல் யார் செய்து தருவார்கள் என்று விசாரித்து சில நம்பர்களை பிடித்தேன். யாராவது சைட் பிஸினெஸாக இது போல ப்ராஜெக்ட்டுகள் செய்ய கிடைப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.மௌண்ட் ரோட்டில் ஸ்கூல்/ சயின்ஸ் ப்ராஜெக்ட்ஸ் செய்வதர்க்கென்றே ஒரு தனி கடையே இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. வெப்சைட், ஈமெயில் சகிதம் நிறைய பேர் வேலை செய்யும் ஒரு கடை! 
ஃபேஸ்புக் ஐடி போட்டு 'லைக் அஸ் ஆன் ஃபேஸ்புக்' என்று நேற்று ஒரு மெசேஜ் வேறு! 

அந்த கடைக்கு ஃபோன் பண்ணியதில் ஒரு முதியவர் லைனில் சிக்கினார். 

'ஆட்டோ மாடல் செய்து தர முடியுங்களா?'

'செய்யலாம் மேடம்'

'குச்சி, துணி,வைக்கோல், களிமண் மாதிரி ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருள் வச்சு செய்யனும்'

'ஓ செய்யலாமே. எவ்வளோ பெருசா வேணும்?' 

'ரெண்டு உள்ளஙகையகலம் இருந்தா போதுங்க‌'

'சரி, பேட்டரி போடற மாதிரியா இல்ல கரெண்ட்ல ஓடற மாதிரியா'

'இல்லைங்க ஆட்டோ ஒடற மாதிரி வேணாம்' (மைண்ட் வாய்ஸ் - களிமண்ணில் செய்யும் ஆட்டோ ஓடுமா??) 

'எந்த க்ளாசுக்கு?' 

'எல்கேஜி'

'ஓ அப்பிடியா. ஆனா ஆட்டோ ஓடற மாதிரி தான செய்யணும்? '

'இல்லைங்க , சின்ன பசங்க இல்ல, அதனால மாடல் மாதிரி இருந்தா போதும்'

'ஆனா ஆட்டோன்னா ஓடணுமே? '

அய்யோ இவர் ஐஐடி ப்ராஜெக்ட் லெவல்ல பேசறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சி ஆனது.விட்டா சோலார் எனர்ஜி , மூலிகை பெட்ரோல் என்று அடுத்து ஆரம்பிப்பார்  போலிருந்தது. 

'இல்லைங்க ஆட்டோ ஸ்ட்ரைக்னு நெனச்சிக்கோங்களேன்,ஓடாத ஆட்டோ தான் வேணும்'.

'கஷ்டம் மேடம், நாங்க அப்படி சிம்பிள் ப்ராஜெக்டஸ் எடுக்கறதில்லீங்க. நீங்க இந்த கடைல ட்ரை பண்ணி பாருங்களேன்' என்று வேறு இரண்டு நம்பர்களை கொடுத்தார். 

சரி இந்த ஸ்கூல் ப்ராஜெக்ட் விஷயம் ஆட்டோவோடு நிற்கப்போகிறதா என்ன. ஃப்யூச்சர்ல  ஏரோப்ளேன் பறக்க வைக்கிற ப்ராஜெக்டுக்கு இவரை யூஸ் பண்ணிக்கலாம் என்று நம்பரை சேவ் செய்து விட்டு,  அவர் கொடுத்த வேறு நம்பர்களை முயன்றால் எல்லோருமே 'சயின்ஸ டே'வுக்கு ப்ராஜெக்ட் செய்யும் லெவலிலேயே பேசினார்கள். கடைசியாக உடன் பணிபுரியும் ஒருவரின் உதவியால் ஓடாத பொம்மை ஆட்டோ செய்ய ஒருவரை பிடித்தாயிற்று. 

இதற்கு மேல் வருவது கொஞ்சம் புலம்பல். முகநூலில் இதை பாலிஷ்டாக அறச்சீற்றம் என்று சொல்வதுண்டு. யு-டர்ன் எடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளவும். 

எனக்கு சில விஷயங்கள் புரியவேயில்லை. 
ஒரு எல்கேஜி பிள்ளைக்கு எதை புரிய வைக்க இந்த மாடல் என்று ஆராய்ந்து பார்த்தால், ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளவதற்காக என்று பதில் வருகிறது பள்ளியிலிருந்து. என்ன கொடுமை இது? இதற்கு ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை கொண்டு வர சொன்னால் பத்தாதா? இல்லை பிள்ளையின் கைவினைப் பொருள் செய்யும் திறமையை (ஆர்ட் & க்ராஃட்) ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதை பள்ளியில் தானே பயிற்றுவிக்க வேண்டும்? 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகள் 'பேரண்ட் சைலட் இன்ட்ராக்ஷன்' மேம்படுத்த தான் என்றால், என்னைப் போன்ற பெற்றோர் என்ன செய்வார்கள்? எல்லா பெற்றோருக்குமே க்ராஃப்ட் வொர்க்கும் ஆர்ட் வொர்க்கும் நன்றாக வருமா என்ன? பெற்றோருக்கே இவ்வாறான வேலைகள் நன்றாக செய்ய வரும் பட்சத்தில்  பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்தலாம். யாரோ ஒருவரிடம் கொடுத்து செய்யப்படும் ப்ராஜெக்டில் பிள்ளை என்ன கற்றுக்கொள்ள முடியும்? அப்படியனால் இந்த ப்ராஜெக்ட் யாருக்கான ஹோம்வொர்க்? 

நாம் படிக்கும் காலத்தில் வீட்டுப்பாடம் எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கும். இது போல ஆட்டோ , ஹெலிகாப்டர் எல்லாம் எதிலும், எந்த காலத்திலும் யாரும் செய்ய‌ சொன்னதில்லை. மிஞ்சிப் போனால் தையல் க்ளாஸுக்கு பாவாடை தைக்க துணியும் கலர் நூலும் வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் பிள்ளைகளை தையல் மிஷினே வாங்கி வர சொன்னாலும் ஆச்சர்யப்பட கூடாது. 

பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டைப் போடுபவர் என்று கூட அறியப்படும் ஒருவர் இருக்கிறார் என்பது இந்த ப்ராஜெக்ட் விஷயமாக அலையும் போது தான் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தை விட , தன் பிள்ளைகளுக்கு அட்டைப் போட்டுத்தர  கூட நேரம் கிடைக்காத பிஸியான ஒபாமா, மோடிக்கள் நம் ஊரில் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சி! 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகளினால் பெற்றோருக்கு வீண் செலவு என்ற குறைபாடு  இருந்தாலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் திறமையுள்ள நிறைய பேருக்கு  கிடைத்துள்ள வேலை வாய்ப்பு. 
இது ஒரு நல்ல பயனுள்ள பிசினெஸாகவே மாறியிருக்கிறது.

 நம் ஊரில் கல்வியே பிசினெஸ் தானே?