Sunday, 8 January 2017

தண்ணீர் தண்ணீர் - பாகம் 3


தண்ணீர் தண்ணீர் - பாகம் 3

ஏதோ ஒரு நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு வகையான சுத்தீகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்பட்டு பின்னர் சந்தைக்கு வருகிறது.அதுவே நாம் குடிக்கும்  'பேக்கேஜ்டு ட்ரிங்கிங்' வாட்டர்.  அதாவது பாட்டில் வாட்டர்.

பாட்டில் வாட்டர் புழக்கத்தில் வந்த காலத்திலிருந்து அதை 'மினரல் வாட்டர்' என்றே அழைத்து பழக்கப்பட்டு விட்டோம். உண்மையில் மினரல் வாட்டர் வேறு பாட்டில் வேறு. எந்த பாட்டில் வாட்டர் கம்பெனியும் எங்களுடையது மினரல் வாட்டர் அல்ல என்று பகிரங்கமாக சாமானிய மக்கள் புரிந்துக் கொள்ளும்படி எந்த அறிவிப்பும்  செய்ததில்லை.

வெறும் பேக்கேஜ்டு வாட்டர் என்ற முத்திரையோடு இருந்த பாட்டில் வாட்டர் சமீப காலமாக 'வித் அடட் மினரல்ஸ்' (with added minerals)  என்ற கேப்ஷனையும் சேர்த்து கொண்டது. அப்படியானால் இத்தனை காலமாக மினரல்ஸ் இல்லையா என்ற மைண்ட் வாய்ஸ் , மைண்ட் வாய்ஸாகவே இருக்கட்டும். ஏனென்றால் இது போன்ற கேள்விகளுக்கு என்றுமே உண்மையான பதில்கள் கிடைக்காது.  ஒரிஜினல்  'மினரல் வாட்டரில்' இருப்பதை போல அத்தனை மினரல்களையும்  இந்த added minerals பாட்டில்களில் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எல்லா மினரல்களையும் சேர்த்துவிடாமல்  கால்சியம் , மெக்னீசியம் , சோடியம் , பொட்டாசியம் என்ற வரிசையில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று கனிமங்களை மட்டும் சேர்த்திருப்பதாக பாட்டிலில் ஒட்டியுள்ளன வாட்டர் கம்பனிகள்.

சரி,  குழாய் தண்ணீர் என்ற முனிசிபல் வாட்டர் சப்ளை இருக்கும் போது எதற்கு இந்த பாட்டில் தண்ணீர்?பாட்டில் தண்ணீருக்கென அதன் தூய்மையை தாண்டி சில வசதிகள் உண்டு.  வீட்டிலிருந்தே பாட்டிலை சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. பாட்டில் தண்ணீரை எங்கு வேண்டுமானாலும் போகிற வழியில் வாங்கி கொள்ளலாம் என்பது இதன் ஆகப்பெரிய ப்ளஸ். தாகத்துக்கு சோடாவோ கூல்ட்ரிங்க்ஸோ குடிப்பதற்கு பதில் தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம் தானே? பூகம்பம், நில அதிர்வு, சுனாமி போன்ற பேரிடர் சமயங்களில் மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் குழாய்கள் நல்ல நிலையில் இல்லாத போது கேன் மற்றும் பாட்டில் தண்ணீரே ஆபத்பாந்தவன்.

பாட்டில் வாட்டரால் என்னென்ன கெடுதல் என்று பார்த்தால் பாட்டில் தான் முதல் பிரச்சினை. அதாவது ப்ளாஸ்டிக். தண்ணீரை குடித்தப்பின் பாட்டிலை என்ன செய்கிறோம்?பாட்டில் ஓட்டை விழும் வரையோ அல்லது மூடி காணாமல் போகும் வரையோ இந்த மினரல் வாட்டர் பாட்டில்களை உபயோகிப்பவர்கள் ஏராளம்.அது ஃபுட் க்ரேட் ப்ளாஸ்டிக்காக,  மறுஉபயோகம் (recyclable) செய்யக்கூடிய ப்ளாஸ்டிக்காக இருக்கும் பட்சத்தில் உபயோகிப்பவருக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு இல்லை. ஆனால் ரீ-சைக்கிள் செய்வதற்கே கூட எந்த ப்ளாஸ்டிக்காக இருந்தாலும் உபயோகித்த பின் அதை சரியான முறையில் சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு 'இஷ்டப்பட்ட இடத்தில் கடாசி எறிவது' அல்லது  'லிட்டரிங்' எனது பிறப்புரிமை என்ற கொள்கையை கொஞ்சமாவது தளர்த்தியாக வேண்டியது அவசியம்.

ப்ளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள இரசாயன பொருட்கள் அடுத்த கவலை. தண்ணீர் தரமானதா, தூய்மையானதா என்று பார்க்கிறோமேயொழிய பாட்டில் பற்றி பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. மறுஉபயோகம் செய்ய தரமில்லாத பாட்டில்களில் கிருமிகள் சுலபமாக வளரும் அபாயம் உண்டு. இந்த மினரல் வாட்டர் பாட்டில்கள் எளிதில் சூடாகக் கூடியவையும் கூட. வெப்பத்தில் பாட்டிலில் உள்ள ரசாயன பொருட்கள் தண்ணீரில் கலந்துவிடுவதால், இது போல சூடேறிவிட்ட பாட்டில் தண்ணீரை முற்றிலும் புறக்கணிக்கும்படி WHO அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் நம்மை வந்து அடைவதற்கு முன்னர் இதே ப்ளாஸ்டிக் பாட்டில்களும் வாட்டர் கேன்களும் எவ்வளவு நேரம் வெயிலில் காய்ந்தன போன்ற கேள்விகள் மனதில் எழாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம்.

சரி,இதற்கு மாற்று தான் என்ன?
ப்ளாஸ்டிக் பாட்டில்களுக்கு கண்ணாடி குடுவைகளே ஆகச்சிறந்த மாற்று. அடுத்து நல்ல தரமான பீங்கான் குடுவைகள். மூன்றாவதாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர் போன்ற உலோக குடுவைகள். இவை அனைத்துமே நடைமுறையில் சிரமம் தான். இத்தனை மாற்றுக்குப் பதிலாக உபயோகிக்கும் ப்ளாஸ்டிக்கின் தரத்தை உயர்த்தலாமே போன்ற அறிவார்ந்த கேள்விகள் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.

  அடுத்து, பாட்டிலில் அடைக்கப்படும் நீரும் , அதன் தரமும். பாட்டில் வாட்டர் தொழில் நல்லதொரு லாபகரமான தொழிலாக வளர வளர குறுகிய கால கட்டத்தில் எக்கச்சக்கமான கம்பெனிகள் காளான் போல முளைத்துக் கிடக்கின்றன. எல்லா கம்பெனிகளிலும் தண்ணீர் சுத்தீகரிப்பு முறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே சீரான கண்டிப்புடன் கண்காணிக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 'தரக்கட்டுப்பாடு' என்பது அவரவர் வசதிக்கேற்ப மாறுபடுவது தான் வருந்தத்தக்க விஷயம். சுத்தமான ஆரோக்கியமான நீரை தான் மக்கள் பருகிறார்கள் என்பதற்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு நம் நாட்டில் இருக்கிறதா? சாய்ஸில் விடுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்ற கேள்வி இது.

 பாட்டில் வாட்டருக்கான நீர் விவசாயத்திற்கோ அல்லது மக்கள் பயன்பாட்டுக்குரிய நீர்நிலையிலிருந்தோ  தான் எடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பயன்படவேண்டிய இயற்கை நீர் நிலைகள் சுரண்டப்பட்டு தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசு தாரைவார்த்து கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பாட்டிலில் அடைக்கப்படும் நீர் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்று கோகோ கோலா, பெப்ஸி போன்ற பெரு நிறுவனங்களே மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க மறுக்கின்றன.

    ப்ளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க கரூட் ஆயில் தேவைப்படுகிறது. தண்ணீர் சுத்திகரிக்கவும் ஆயில் தேவை. ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தண்ணீர் அடைக்கப்பட்டு நாம் இருக்கும் இடத்துக்கே வந்து சேர மறுபடியும் ஆயில் (பெட்ரோலோ, டீசலோ )தேவை. ஆக ஒரு பாட்டில் தண்ணீருக்காக எண்ணெய் வளத்தையும் இழக்க வேண்டியுள்ளது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாட்டில் வாட்டரை உபயோகிப்பதன் மூலம் ஒரு வகையில் பூமியின் வளத்தை சுரண்டி மறுபடி பூமியையே குப்பை மேடாக்குகிறோம் தானே?

 நல்ல குடி நீர் என்பது பெரும் கனவாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. நம் சுற்றுபுறத்தையும் இயற்கை வளங்களையும் சரியான முறையில் பராமரிக்காமல், இருந்த நீர் நிலைகளையும் நிலத்தடி நீரையும் மாசு படிய வைத்து விட்டு இன்று 'எந்த தண்ணி நல்ல தண்ணி' என யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆர் ஓ வாட்டர், மினரல் வாட்டர் , பாட்டில் வாட்டர் என்று  நல்ல தண்ணீரை வழங்க எத்தனையோ டெக்னாலாஜி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் ஆதாரமான இயற்கை வளங்களை அறிவியல் பூர்வமாக அணுகி இனி வரும் சந்ததியினரையும் கணக்கில் கொண்டு செயல்படும் நம் சமூக மாற்றமே சரியான தீர்வாக அமைய முடியும். நம்  நீர் நிலைகளை பாதிக்கும் எந்த செயல்பாட்டையும் குறைந்த பட்சம் கண்டிக்கவாவது பழக வேண்டும். நம்மை சுற்றியுள்ள நீராதாரங்களை சரியான முறையில் பராமரிப்பது  நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

இதெல்லாம் சரி, எந்த தண்ணீரை தான் நம்பி குடிப்பது? எந்த குடி தண்ணீராக இருந்தாலும் அதை கொதிநிலைக்கு காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டிய பின்னர் குடிப்பதே நலம்.

சியர்ஸ்ஸ்!!!





Tuesday, 3 January 2017

தண்ணீர் தண்ணீர் -2

தண்ணீர் தண்ணீர்- பாகம் 2.

100% சுத்தம்!!!

ஆர்ஓ வாட்டர் உபயோகிப்பவரா நீங்கள் ?
எனில் அதன் விற்பன்னர்கள் செய்து காட்டிய சாகசங்களை பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு கருவியை வைத்து குழாயில் பிடித்த நீரை சோதித்து காண்பித்து அது பழுப்பு நிறமாக மாறுவதையும், ஆர்ஓ வாட்டர் கலர் மாறாமல் பளிங்கு போல தூய்மையாக இருப்பதையும் ஒப்பிட்டுக் காண்பிப்பார்கள். நாமும் பிரமித்து போவோம். உண்மையில் இதன் வேதியல் பின்புலம் வேறு. இதன் பெயர் ஜாம் ஜார் (Jam Jar) டெஸ்ட்.
சாதாரண நீரில் எக்கசக்கமாக கனிமங்கள் இருப்பதால் அந்த கருவியின் மூலம் மின்சாரம் பாய்ச்சியதும் கனிமங்களின் வேதியியல் மாற்றம் நடந்து கலங்கலும், பழுப்பு நிறத்தில் படிமம் போலவும் நிச்சயம் ஏற்படும். ஆனால் ஆர்ஓ தண்ணியில் கனிமங்கள் அறவே இல்லாததால் நீர் சலனமற்று கலங்காமல் இருக்கும்.ஆனால் நாம் புரிந்து கொண்டது இதுவல்ல.

இதே போல் இன்னொரு டெஸ்ட்டும் நம் முன்னே செய்து காட்டப்படும். அதன் பெயர் டிடிஎஸ் (TDS) டெஸ்ட். Total dissolved solvents என்பதன் சுருக்கமே இந்த TDS. மொத்தமாக தண்ணீரில் கலந்துள்ளவற்றை பற்றிய ஒரு குத்துமதிப்பான கூட்டுத்தொகை இந்த எண்.  ஆர்ஓ வாட்டரில் இந்த டிடிஎஸ் அளவு மிகவும் குறைவு. பாட்டில் மற்றும் குழாய் தண்ணீரில் இதன் அளவு அதிகம். உலக சுகாதார மையத்தின் அறிக்கைபடி டிடிஎஸ் அளவு குறைந்தபட்சம் 100 mg/L இருக்கும் நீரே குடிப்பதற்கு உகந்த நீராக கருதப்படுகிறது. ஆனால் 80mg/L டிடிஎஸ் உள்ள நீர் அசுத்தமான நீர் என்பதே நம்மிடம் சொல்லப்படும் கட்டுகதை.

காரீயம், ஆர்ஸெனிக் போன்ற உலோகங்கள், பூச்சுக் கொல்லி மருந்துகள், கிருமிகள், கிருமி நாசினிகள்  என்று சகலத்தையும் வடிகட்டி தூய்மையான நீரைத் தருகிறது ஆர் ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்.

இது தான் நமக்கு ஆர் ஓ வாட்டர் விற்பன்னர்கள் அன்றாடம் தொலைக்காட்சியிலும் பல சமயங்களில் வீட்டுக்கே வந்து நேரிலும் சலிக்காமல் திரும்ப திரும்ப சொல்லுவது. ஆஹா இது போதாதா நமக்கு ஒரு பொருளை வாங்க!

நம்மிடம் சொல்லாமல் விடப்படுவது - ஆர்ஓ சுத்திகரிப்பு முறை அசுத்தங்களோடு சேர்த்து அத்தியாவசிய கனிமங்களையும் காவு வாங்கி விடுகிறது என்னும் முக்கியமான உண்மையை.

இரும்பு, கால்ஷியம், மெக்னீஷியம் , பொட்டாசியம், சோடியம் என சகலத்தையும் நீக்கிவிட்டு தூய்மையான நீரை மட்டுமே வழங்குகிறது.
கனிமங்கள் முழுதும் நீக்கப்பட்ட நீரை டீ- மினரலைஸ்டு (demineralised) வாட்டர் என்றே குறிப்பிடுகின்றனர். அதாவது கனிமங்களற்ற நீர். இந்த நீரை வெறும் சக்கையோடு ஒப்பிடலாம். இந்த சக்கையை அருந்துவதால் என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு என்று உலகசுகாதார அமையம் (World Health Organisation) ஆர் ஓ வாட்டரின் தெளிவைப் போலவே தெள்ளத்தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.கனிமக் குறைப்பாட்டினால் நமக்கு வரும் குறைபாடுகள் என ஒரு பெரிய பட்டியலே நீள்வதை பார்க்கும் போது தான் கனிமங்களின் முக்கியத்துவம் பிடிபடுகிறது.

மெக்னீசியம் குறைபாட்டினால் இருதய நோய்களும் , கால்சியம் குறைவினால் எலும்பு , தசை, பற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள், பொட்டாசியம் குறைவதால் நரம்பு தளர்ச்சி என ஏகத்துக்கு பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கால்ஷியமும் மெக்னீஷியமும் நாம் பருகும் நீரின் மூலமாகத் தான் நம் உடலில் சேர வேண்டும் என்று அவசியமில்லை. அவை பல்வேறு உணவுப் பொருட்களின் மூலம் நம் உடலில் சேர்ந்தாலும், நீரின் மூலம் கிடைக்கப்பெறும் போது அவை  ரத்தத்தில் இலகுவாக கலக்கக்கூடிய மூலக்கூறுகளாக  கிடைப்பது தான் அதன் சிறப்பு.

தண்ணீரில் கிடைக்காமல் போன கனிமங்களை உணவின் மூலம் 'ஓரளவே' சரிகட்ட முடியும். நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் 90% நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கின்றன. ஆனால் சமைத்தல் , பதப்படுத்துதல் , சமைத்ததை சேமித்து வைத்தல் போன்ற நிலைகளிலேயே பாதிக்குமேல் ஊட்டச்சத்தை இழந்துவிடுகிறது நாம் உண்ணும் உணவு. இது போதாதென்று கனிமங்களற்ற ஆர் ஓ தண்ணீரை சமைக்கவும் பயன்படுத்தினால் எரியும் நெருப்பில் நெய்யை வார்த்தது போலாகிவிடும்.

கனிமங்களற்ற நீர் குடிப்பதால் நாம் தான் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வீரியம் குறைந்து அவதிப்படுவோம். ஆனால் இந்த நீருக்கு அதீத வீரியமுண்டு. அது செல்லும் குழாய் முதல் தேக்கி வைக்கப்படும் தொட்டி வரை அனைத்தையும் அரித்து விடும். அவ்வாறு அரித்து எடுக்கப்படும் நச்சு பொருட்கள் அனைத்தும் இறுதியாக குடி கொள்ளும் இடம் நமது உடல் தான்! ரத்தத்தில் கலக்கும் நச்சு உலோகங்களை (காரீயம், கேட்மியம்) நீக்குவதற்கு கால்சியமும் மெக்னீசியமும் அவசியம் தேவை.கனிமங்களற்ற நீரினால் இந்த வேலையை சீராக செய்ய முடியாது.

உடலிலிருந்து வெளியேறும் போது கூட  இந்த நீர் தனியாக போகாமல் துணைக்கு  நம் உடலில் உள்ள மற்ற கனிமங்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு தான் வெளியேறுகிறது. அதனால் ஏற்கனவே 'இருக்கு ஆனா இல்லை' என்ற ரீதியில் கனிமக்குறைபாடு உள்ளவர்கள்(borderline)   இந்த கனிமங்களற்ற நீரை அருந்துவதால் கனிமக்குறைபாடு மேலும் வலுவடைகிறது.

. கனிமங்களற்ற நீரினால் வரும் விளைவுகள் பற்றி இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறது உலக சுகாதார மையம்(WHO). இதை எந்த ஆர்ஓ வாட்டர் யூனிட் சப்ளையரும் நமக்கு சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை.  ஆர் ஓ ப்ராண்டுகளிலேயே அக்வா கார்ட் பெஸ்ட்டா, கென்ட் பெட்டரா , ப்யூரிட் ஓகேவா என்று தான் நாம் பார்ப்போமே தவிர ஆர்ஓ வாட்டர்ரே ஓகே வா என்று யோசிக்கும் நிலையை கடந்து வந்து விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். இது போன்ற எண்ணற்ற திறமையான மார்கெட்டிங் உத்திகளின் மேல் சம்மணமிட்டு அமர்ந்து, தண்ணீர் உலகுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது ஆர்ஓ வாட்டர்.

அப்படியானால் ஆர்ஓ தண்ணீரை பற்றி பாஸிட்டிவ்வாக சொல்ல எதுவுமே இல்லையா? நிறையவே இருக்கிறது. ஆர்ஓ சுத்திகரிப்பு முறை கனிமங்களை நீக்கி விடுகிறது என்ற குறையை தவிர, இந்த தண்ணீரில் வேறு எந்த நச்சு பொருளோ இரசாயனமோ கிடையாது. பாட்டில், வாட்டர் கேன் வாங்கும் செலவும் மிச்சப்படுகிறது.மொத்ததில் ஆர் ஓ தண்ணீர் விற்பன்னர்கள் கூறுவதைப் போலவே  கலங்கல் இல்லாத தெளிந்த, வாசனையற்ற, நோய்தொற்று கிருமிகளற்ற, சுத்தமான நல்ல சுவையுடன் கூடிய நீர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் கனிமங்களற்ற சுத்தமான நீர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

அண்மைக் காலங்களில் ஆர்ஓ முறையில் சுத்திகரிப்பு செய்த பின்னர், தேவையான அளவு  கனிமங்களை மீண்டும் தண்ணீரில் சேர்ப்பதற்கான வழிமுறைகளும் பிரபலமாகி வருகின்றன. இதற்காக கனிமங்கள் தனியாகவே கிடைக்கின்றன. ஆனால் நம் ஊரில் ஆர்ஓ வாட்டர் பற்றிய வழிப்புணர்வு போதுமானளவு இல்லாத  காரணத்தால் இன்னும் இந்த விஷயங்கள் பிரபலமாகாமல் இருக்கின்றன.இரும்பு சத்துக்கு இயற்கையாக கிடைக்கும் கீரை காய்கறிகளை விட்டுவிட்டு அயர்ன் டேப்லட் ,அயர்ன் இன்ஜெக்‌ஷன் எடுத்துக்கொள்வதைப் போல் தான் இது.

தாகத்தை தணிக்கும் நீர் நல்ல ஆரோக்கியமான பலன்களை தராவிட்டால் கூட பரவாயில்லை, கேடு விளைவிக்காமல் இருப்பது அவசியமல்லவா?

                          (இன்னும் பருகுவோம்)

Monday, 2 January 2017

தண்ணீர் தண்ணீர் - பாகம் 1.

தண்ணீர் தண்ணீர்.      

"என் குழந்தைக்கு எப்பவுமே மினரல் வாட்டர் தான் தருவேன்"

"ஆர் ஓ வாட்டர் தவிர எது குடிச்சாலும் எனக்கு ஒத்துக்காது"

"எனக்கு இந்த ப்ராண்ட் வாட்டர் மட்டும் தான் பிடிக்கும்"

இது போன்ற வசன‌ங்களை இப்போது அன்றாடம் கேட்க முடிகிறது.

தூய்மையான தண்ணீர் என்பது ஒரு 'முழுமையான' உணவு. அதில் இதை சேர்த்து, அதை எடுத்து, ஒன்றை அதிகப்படுத்தி மற்றொன்றை குறைத்து நம் கைவரிசையை காட்ட ஆரம்பிக்கும் போது தண்ணீர் அதன் தூய்மையையும், நம் உடலுக்கு இயற்கையாக அளிக்க கூடிய நற்பலன்களையும் இழந்து விடுகிறது.

தண்ணீரில் இயற்கையில் என்னென்ன கலந்துள்ளன? புட்டிகளில் அடைத்து  விற்கப்படும் தண்ணீரில் என்னென்ன கலக்கப்படுக்கிறது? என்னென்ன நீக்கப்படுகிறது? தண்ணீர், தெள்ளத் தெளிவாக கலங்கல் இல்லாமல் இருந்தால் மட்டும் போதுமா?நாம் பருகும் தண்ணீர் எந்த அளவு பாதுகாப்பானது? மொத்ததில் எந்த வகையான நீரை குடிக்கிறோம்?

தாகத்துக்கு அருந்தும் தண்ணீரைப் பற்றி இப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்க நமக்கு நேரம் உண்டா? ஆனால் தாம் பருகும் தண்ணீர் சரியானது தானா என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு முன் குடிதண்ணீர் என்னென்ன பெயர்களில் இயற்கையிலும் , சந்தையிலும் வலம் வருகிறது என்று பார்ப்போம்.

ஊற்றுத் தண்ணீர் (Spring water)
உலகிலேயே மிகவும் தூய்மையான நீராக கருதப்படுவது ஊற்றுத் தண்ணீர் தான். எந்த ரசாயனங்களும் கலக்காத, நமக்கு தேவையான அனைத்து கனிமங்களும் நிறைந்த , இயற்கையே வடிகட்டி தரும் உறுத்தாத சுவையுடன் கூடிய தண்ணீர்.  ஊற்றுத் தண்ணீர் பாட்டில்களில் அடைப்பட்டு மார்க்கெட்டுக்கு வந்து விட்டாலும், அதன் எக்குதப்பான விலை தான் யோசிக்க வைக்கிறது. எல்லோருக்கும் ஊற்றுத்தண்ணீர் என்பது எல்லோருக்கும் சமமான கல்வி போன்றது. எந்த அளவு அது நடைமுறையில் சாத்தியம் என்பது கேள்விகுறியே.

பொங்கு நீர் கிணறு (Artesian well).
இதுவும் ஒரு வகையான ஊற்றுத்தண்ணீரே.
நிலத்தடி அழுத்தம் காரணமாக தண்ணீர் நாம் பம்பு போட்டு எடுக்க வேண்டிய அவசியமின்றி தானாகவே தரைமட்டம் வரை நிரம்பி தளும்பி நிற்கும். குடிப்பதற்கு மிகவும் உகந்த தண்ணீர். ஆனால் கிடைப்பது அரிது, ஊற்றுத்தண்ணீரைப் போலவே.

ஆல்கலைன் வாட்டர்( Alkaline water)

இவ்வகை தண்ணீர் அதன் ஆல்கலைன் பதத்திற்காகவும், ஆன்டி ஆக்ஸிடன்ட் (anti- oxidant) தன்மைக்காகவுமே தேர்வுசெய்யப்படுகிறது.
கார்பன் ஃபில்டர் மூலம்  தயாராகும் வாட்டரிலும் சரி , தலைகீழ் சவ்வூடு பரவல் வழியாக சுத்திகரிக்கப்படும் வாட்டரிலும் சரி செயற்கையாக சேர்க்கப்பட்ட ஆல்கலைன் தன்மையோடே உருவாகிறது ஆல்கலைன் வாட்டர். கார்பன் ஃபில்டர்  வழியாக செலுத்தப்படும் நீர் அதிவேகமாக ஃபில்டரை கடந்து விடுவதால் பல வகையான நச்சு ரசாயன குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படுவதில்லை. பொதுவாக உடலை ஆல்கலைன் (காரத்தன்மை) நிலையில் வைத்திருக்க முடியாத‌வர்களுக்காகவே (அதாவது உடலின் அதீத அமிலத்தன்மையை குறைக்க)  இந்த வகையான தண்ணீர் பரிந்துரைக்கபடுகிறது. ஆனால் நல்ல சத்துள்ள காய்கறிகள், பழங்கள், உணவுமுறைகள்  மூலமாகவே அமிலத்தன்மையை குறைத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும். பிறகு எதற்கு இந்த தண்ணீர் என்று யோசிக்க ஆரம்பித்தால் அதன் வியாபார நுணுக்கங்கள் புலப்படும்.  இந்த தண்ணீர் தயாரிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அதன் ஆல்கலைன் பதத்தையும், இரண்டு வாரங்க‌ளில் ஆன்டி ஆக்ஸ்டென்ட் தன்மையையும் இழந்து விடுகிறது என்ற உண்மையை இதை விற்பவர்கள் நமக்கு சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். மேலும் இவ்வகையான நீரைப் பற்றி போதுமான ஆராய்ச்சிகள் நடப்பதற்கு முன்பே எக்குத்தப்பாக பிரபலமடைந்துவிட்டது தான் பிரச்சினை.

குழாய்த் தண்ணிர் (Tap water)

நம் வீடுகளில் பைப்பை திறந்தால் வரும் தண்ணிர். மேலை நாடுகளில் குழாயில் வரும் தண்ணிரை அப்படியே க்ளாஸில் பிடித்து பருகுவார்கள். அந்த நாடுகளின் நீரின் தூய்மை அப்படி. ஆனால் நம் ஊரில் அதே போல செய்ய முடியாது. நாம் குடியிருக்கும் வீட்டில் பம்ப்செட் போட்டு நீர் சேகரித்து வைக்கும் மொட்டை மாடி தொட்டியின் நிலைமை நமக்குத் தெரியதா? அதனால் தான் காய்ச்சி வடிகட்டிய நீரை பருகும்படி அரசே நமக்கு அறிவுறுத்துகிறது.

குழாய்த் தண்ணீரில் எக்கச்சக்கமாக க்ளோரின் , ஃப்ளுரின் இவற்றோடு எந்த அளவீட்டிலும் சேராத அளவு பலவிதமான மருந்துப்பொருட்களும் கலந்துள்ளன. இந்த நீரை சுத்தம் செய்வதன் மூலம் நச்சுப்பொருட்களை நீக்க முடிந்தாலும், ஃப்ளூரின், க்ளோரின் அளவுகள்  சரியாக இருப்பதில்லை. க்ளோரின் சமூக குடி நீர்த்தொட்டிகளில் அதன் கிருமி நாசினி குணத்திற்காக சேர்க்கப்படுகிறது.
நல்ல விஷயம் தானே?ஆமாம், அளவுகள் சரியான முறையில் கண்காணிக்கப்படும் வரை எதுவுமே நல்ல விஷயம் தான்.

அதைப் போலவே ஃப்ளுரினும். இயற்கையாகவே சில ஊர்களில் நீரில் ஃப்ளுரின் அதிகப்படியாக கலந்திருக்கும். நாம் பருகும் நீரில் ஃப்ளுரினின் அளவு 1பிபிஎம்க்கு மேலிருந்தால் பற்களில் மஞ்சள் கரை
( ஃப்ளூரோஸிஸ் ) முதல் எலும்பு சார்ந்த நோய்கள்  (ஆஸ்டியோபோரோஸிஸ்) வரை வர வாய்ப்புள்ளது. ஃப்ளுரின் குறைவாக உள்ள ஊர்களில் அரசே குடிநீர் வாரிய சேமிப்பு தொட்டிகளிலும் (community water fluoridation) பள்ளிகளில் உள்ள நீர்த்தொட்டிகளிலும் (school water fluoridation) ஃப்ளூரினை 1பிபிஎம்க்கு குறைவாக சேர்க்கிறது. ஆனால் இந்த அளவீடுகளை சரியான முறையில் நடைமுறை படுத்துகிறார்களா என்பதில் தொக்கி நிற்கிறது ஃப்ளூரினின் நற்குணங்கள்.

குடி தண்ணீர் ( Drinking water )

இதுவும் முனிசிபல் வாட்டர் சப்ளை தான். சில வீடுகளில் குடி நீருக்கென பொருத்தப்பட்ட குழாயிலும், பல இடங்களில் தெருமுனை குழாயிலும், தண்ணீர் லாரிகளிலும் கிடைக்கும் குடி தண்ணீரை நாம் குடிப்பது சமைப்பதை தவிர மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது கிடையாது. ஆனால் குழாய்த் தண்ணீருக்கும் குடி தண்ணீருக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை என்றே ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (Distilled water)

எல்லா விதமான மாசுப் பொருட்களும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களும் நீங்கும்படி அதிதீவிர முறையில் சுத்திகரிக்கப்படுகிறது இவ்வகை நீர். ஆனால் படு சுத்தமான இந்த நீர் குடி தண்ணீராக அன்றாடம் பயன்படுத்துவதற்கு ஏதுவானது அல்ல. காரணம் ஊற்றுத் தண்ணீரிலும், குழாய் தண்ணீரிலும் இயற்கையிலேயே கலந்திருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட, நம் உடலுக்கு அத்தியாவசியமான கனிமங்கள் அனைத்தும் இதன் சுத்திகரிக்கும் முறையில் சுத்தமாக நீக்கப்படுகின்றன. ஆகையால் இவ்வகை நீர் தொழிற்சாலைகளில் தான் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. கனிமங்கள் ஏதுமில்லாத காரணத்தினால்
கனமான நச்சு உலோகங்களோடு சுலபமாக சேர்ந்து கொள்ளும் ஆற்றல் (chelation) வாய்ந்தது சுத்திகரிப்பட்ட தண்ணீர். இந்த பண்புக்காகவே இந்நீரை நம் உடலில் உள்ள தேவையற்ற கனரக உலோகங்களையும் (heavy metal toxicity) ரசாயன பொருட்களையும் நீக்க சில மாதங்கள் வரை தைரியமாக பயன்படுத்தலாம். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தினால் அத்தியாவசிய கனிம குறைபாட்டில் கொண்டு நிறுத்திவிடும் அபாயம் உள்ளது.

கிணற்று தண்ணீர் (Well water)

போர்வெல் தண்ணீர், அடி பம்ப்பில் வரும் தண்ணீர் எல்லாம் இந்த வகையை சார்ந்ததே. எல்லா நிலத்தடி நீர் வகைகளுமே ஒரளவு பாதுகாப்பானது தான், அந்த இடத்தில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத பட்சத்தில். நிலத்தடி நீர் பெரும்பாலும் ஏதாவது ஒரு உலோக (இரும்பு அல்லது மேங்கனீஸ்)வாசனையோ சுவையோ கொண்டதாகவே இருக்கும்(metallic taste) .  நாம் வசிக்கும் இடம் சுத்தமானதாகவே இருந்தாலும் கூட கிணறுகள் வெகு சுலபமாக மாசுபட்டுப் போகின்றன. கிணற்று நீரை குடிப்பதற்கு உபயோகப்படுத்த முடிவெடுத்துவிட்டால் அதில் கலந்துள்ள மேங்கனீஸ் மற்றும் இன்ன பிற கனிமங்களின்  நச்சு தன்மையை ஆய்வு செய்த பிறகு பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

ஃபங்ஷனல் வாட்டர் ( Functional water/ Zero calorie water)

நல்ல குடி தண்ணீர் இயற்கையிலேயே நிறமும் சுவையும் அற்றதாக தானிருக்கும். வியாபார உத்தியாக இந்த பெயரில் விற்கப்படும் தண்ணீரில் செயற்கையான நிறமிகள், சர்க்கரை (அஸ்பார்டேம், ஃப்ரக்டோஸ்) போன்றவை சேர்க்கப்படுகின்றன. விளம்பரம் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை இது போன்ற வியாபார உத்திகள் தண்ணீர் சந்தையில் சுலபமாக செல்லுபடியாகும்.

மினரல் வாட்டர் (Mineral water)

நாம் முதன் முதலில் பாட்டிலில் அடைத்து விற்கப்பட்ட குடிநீரை காசு கொடுத்து  வாங்க ஆரம்பித்த போது மினரல் வாட்டர் என்ற முத்திரையுடன் தான் பார்த்திருப்போம். உண்மையில் மினரல் வாட்டர் என்பதற்கும் நாம் பருகிய/ பருகும் நீருக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை. மினரல் வாட்டரில் சற்றேக்குறைய இருனூற்றி ஐம்பது கனிமங்களாவது கரைந்திருக்கும். அதற்கு மேல் அதில் வேறு கனிமங்களை சேர்ப்பது கடினம். நம் ஊரில் அப்படி ஒரு நீர் லிட்டர் பத்து ரூபாய்க்கு  கிடைக்க வாய்ப்பிருக்கிற‌தா? இதில் 'ஸ்பார்க்ளிங் மினரல் வாட்டர்' என்ற கார்பனேட்டட் ( carbonated )வகையும் உண்டு. அதாவது கார்பன்டை ஆக்ஸைட் வாயுவுடன் பெப்ஸி, கோக் போல கொஞ்சம் சுறு சுறு சுவையுடன் இருக்கும்.

பாட்டில் வாட்டர் (அ) பேக்கேஜ்டு குடிநீர்  (Bottle water or Packaged drinking water)

நாம் காசு கொடுத்து கடைகளில் வாங்கும் பேக்கேஜெட்  குடி தண்ணீர் இது. குழாய் தண்ணீருக்கும் பாட்டில் வாட்டருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், பல நிலைகளில் தூய்மைப்படுத்தப்பட்டே இவ்வகை தண்ணீர் சந்தைக்கு பாட்டிலில் வருகிறது. மற்றுமொரு குழப்பமான விஷயம் பாட்டில் வாட்டரை மினரல் வாட்டர் என்று நம்புவது. அடிப்படையில் மினரல் வாட்டர் வேறு, பாட்டில் வாட்டர் வேறு. அது புரியாமல் இன்னும் நம் ஊரில் பாட்டில் வாட்டரை மினரல் வாட்டர் என்றே அழைக்கிறோம். கடையிலும் அவ்வாறே கேட்கிறோம்- ' ஒரு மினரல் வாட்டர் பாட்டில் குடுங்க'. ஏன் அப்படி? அப்படியானால் என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?

தலைகீழ் சவ்வூடு பரவல் தண்ணீர்.
 (Reverse Osmosis water).

சுருக்கமாக ஆர் ஓ (RO) வாட்டர்.
தண்ணீரை அதிக அழுத்தத்துடன் ஒரு ப்ளாஸ்டிக் சவ்வின் வழியாக அனுப்பும் போது கிடைக்கும் இந்த தூய்மையான, அதே சமயம் கொஞ்சம் சுவையுடன் கூடிய நீரில் நம் ஆரோக்கியத்துக்கு தேவையான முக்கால்வாசி கனிமங்கள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன. இதனால்  இந்த நீரை எவ்வளவு பருகினாலும், ஊற்றுத்தண்ணீரில் தாகம் தணிவது போல் தணிவது கிடையாது. வீடுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், குளிர் பானங்கள் மற்றும் பெரும்பாலான பாட்டிலில்களில் அடைத்து விற்கப்படுவதும், இன்று  பரவலாக உப‌யோகிக்கப்படுவதும்  இந்த வகை தண்ணீரே.வீட்டுக்கு வீடு ஒரு மினி சுத்திகரிப்பு மெஷினை பைப்  லைனுடன் பொருத்திவிட்டு, வாட்டர் கேன் ( water can) தண்ணியெல்லாம் மட்டம் என்று பெருமித்ததோடு ஆர் ஓ வாட்டர் புகழ் பெருக்கிவருகிறோம். இது எந்தளவு உண்மை? ஆர் ஓ வாட்டர் உண்மையில் பாதுகாப்பானது தானா??

தண்ணீரில் உள்ள வகைகளே தலைசுற்ற வைக்கிறதா? 'குடிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான தண்ணீர்' (potable water)   நல்லதொரு லாபகரமான தொழிலாக முன்னேற்றமடைந்து வரும் இந்த காலகட்டத்தில் , வியாபார நோக்கில் மேலும் பல புதிய தண்ணீர் வகைகள் கவர்ச்சியான பெயர்களுடன் சந்தைக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இனி ஆர்ஓ வாட்டர் , மினரல் வாட்டர் மற்றும் பாட்டில் வாட்டர் வகையறாவின்  உண்மை தன்மை குறித்தும் இந்த வகை தண்ணீர் பற்றி இதுநாள் வரை நாம் நம்பி வரும் விஷயங்களை இனியும் நம்பலாமா என்பது பற்றியும் விரிவாக பார்ப்போம் .

                           மருத்துவர்.அருணா ராஜ்


         ( இன்னும் பருகுவோம்)





Monday, 27 June 2016

ஈட்டிய விடுப்பும் ஈட்டாத சம்பளமும்-2/2



ஒரு வாரத்தில் மேலதிகாரி அவருடைய லீவு முடிந்து வந்து கையெழுத்து போட்டுவிட்டார். இந்த படிவத்தையும் கவரிங் லெட்டரையும் ஒரு மெசஞ்சர் மூலம்  பிஏஒ வில் சேர்க்க வேண்டும் . லீவ் லிஸ்டில் அடுத்த ஆளாக எங்க ஆபிஸ் மெசஞ்சர் லீவு!

லீவ் முடித்து வந்த மெசஞ்சரை 'ரிஃப்ரெஷ்' செய்து தபாலை கொடுத்தனுப்பி பதிலுக்கு காத்திருந்தேன். சந்நிதியிலிருந்து 'இவருக்கு சம்பளம் போடலாம்' என்று பதில் வர வேண்டும். நம்ம தென்மேற்கு பருவமழை மாதிரியே இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் நடுராத்திரி வரும் என்று நான்கு நாட்களாக  ஏமாற்றி கொண்டே இருந்தது பதில் கடிதம்.

பதில் அனுப்பாததற்கு என்ன காரணம் இருக்க முடியும்?  ஓரளவு இந்த 'லீவ்  ரிதத்துக்கு'  நான் செட்டாகி, சனி பகவானோடு சேர்ந்து நிறைய  கஷ்டமான ஸ்டெப்ஸ் எல்லாம் பழகி  இருந்ததால் பதில் வராத  காரணத்தை  சுலபமாக அனுமானிக்க முடிந்தது. வேற என்ன அதே தான். சம்பளம் போடும் செக்ஷன் ஆசாமி லீவு!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பாடலை இழுத்து இழுத்து நான்காவது நாளாக பாடி சலித்த  பின்னர் 'சம்பளம் போடலாஞ்சாமியோவ்'  என்று ஒரு சுபயோக சுபதினத்தில் சந்நிதியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தது.  அடுத்து சம்பள பில் தயார் செய்து அனுப்ப வேண்டும்.

இந்த சம்பள பில் என்பது பதினைந்து இடத்தில் ஆட்டோகிராஃப் போட வேண்டிய ஒரு ஆவணம். 'say no to paper ,save trees' என்று  துக்ளியூண்டு ஏடிஎம் பேப்பருக்கு கூட ' நோ' சொல்லும் கால கட்டத்தில்  இங்கே  மாதா மாதம் ஷேஷசாயி பேப்பர் மில் ஓனர் வீட்டு கல்யாணம் போல கம்யூட்டர் ப்ரின்ட் அவுட் என்ற பெயரில்  பக்கம் பக்கமாக சம்பள பேப்பருக்கு  செலவிடப்படுகிறது. பிஏஒ வுக்கு ஒரு காப்பி,  நம்ம ஆபீஸுக்கு ஒரு காப்பி. ஆக மொத்தம் முப்பது பக்கம். முப்பது பேப்பரிலும் ஆட்டோகிராஃப். சேரன் கூட இத்தனை ஆட்டோகிராஃப் போட்டிருக்க மாட்டார். இது  போதாதென்று  ஒவ்வொரு மாதமும் பதினைந்து பக்க ஆட்டோகிராஃபோடு  ஒரு சாஃட் காப்பியும் (சிடி) சேர்த்து பிஏஒ அனுப்ப வேண்டும்.

காத்திருந்து காத்திருந்து பாடல் பாடிக் கொண்டே சம்பள பில்லை தயார் செய்ய சொல்லி ரெடியாக வைத்திருந்தேன்.  சாஃப்ட் காப்பி மட்டும் அலுவலகத்தில் வேறு ஒருவரிடம் இருந்தது. ஆனால் ரிதம் மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற கொள்கைப்பற்றோடு இருந்த  சாப்ஃட் காப்பி வைத்திருந்த அலுவலர் அவர் பங்குக்கு லீவு!

நான் சேரனிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக  சேதுவாக மாறிக்கொண்டிருந்தேன். சாஃப்ட் காப்பி ஆசாமி வராதபட்சத்தில் சம்பள பில்லோடு  இந்த முறை கபாலி ஆடியோ சிடி வைத்து அனுப்பிவிடும் முடிவிலிருந்தேன். ஆனால் இரண்டு நாளில் வந்து விட்டார்.  பெரும்பாலும் நாளை இந்த பில் பிஏஒ வில் சமர்ப்பிக்கப்படலாம் சாஃப்ட் காப்பியுடன்.  இருபத்தி மூன்று நாட்கள்  ஆகியிருக்கிறது நான் எடுத்த இருபது நாள் ஈட்டிய விடுப்புக்கான நற்பலன்களை அறுவடை செய்ய. ஆனால் வாசக் கதவ ராசலச்சுமி தட்ட  இன்னும் கூட ஒரு வாரம் ஆகும்.

எங்கள் ஆபீஸில் காது சரிவர கேட்காத ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தம்மா என்னை பார்த்தவுடன் குட்மார்னிங்க்கு பதில் 'அவர் லீவும்மா' என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். 'வெற்றிக்கொடி கட்டு'  பாடல் ரேஞ்சுக்கு வேகம் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும்  என்னுடைய ஆபிஸ் வேலைகள் அனைத்தும்  'சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் ' பிஜிஎம்முக்கு மட்டுமே செட்டாகிப் போனது தான் சோகம்.

அலுவலகம் சார்ந்த அனைவரும்  அவரவர் விடுமுறையை என்னைப் போலவே  தன்  சொந்த காரணங்களுக்காக தான் எடுத்திருந்தனர். ஆனால்  ஆச்சர்யம் என்னவென்றால் என்னுடைய பணி சம்பந்தப்பட்ட கோப்புகள் எந்த டேபிளுக்கு போகிறதோ அவர் கட்டாய விடுமுறையாக குறைந்தது இரண்டு நாட்களாவது காணாமல் போய் திரும்பி வந்த பிறகே ஒவ்வொரு ஸ்டேஜும் வேலை நடந்தது.

ப்ரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசு விதிமுறைகளை இன்னமும் ஜவ்வுமிட்டாய் மாதிரி பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். நல்ல விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் பரவாயில்லை.என் புருசனும் கச்சேரிக்கு போறான் கணக்காக எந்த ரூலா இருந்தாலும், அதனால  எந்த பிரயோஜனமும் இல்லைன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு  அடாவடியா ஃபாலோ பண்ற நம்ம ஆளுங்களோட கடமையுணர்வுக்கு ஈடு இணையே கிடையாது. நான் விடுப்பு எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் விடுப்பு முடிந்து வந்து நானே  செய்ய வேண்டியிருந்தது இதற்கு ஒரு சின்ன உதாரணம்.

கொசுறு :

எல்லோருடைய ஜூன் மாத சம்பள பில்லோடு சேர்த்து  என்னுடைய மே மாத சம்பள பில்  'pass' ஆக வேண்டும். அது ஓகேயானால் தான் எனக்கு ஜூன் மாத சம்பளம் போட முடியுமாம் . ஜூன் சம்பளம் ஜூலைக்குள் கிடைக்குமா பார்ப்போம். அதற்குள் 'ரிசர்வ் பேங்க் கவர்னர் லீவுங்க உங்க பில் பாஸ் ஆகல' என்று சேதி வராமல் இருக்க வேண்டும் எண்ட குருவாயூரப்பா!

Sunday, 26 June 2016

ஈட்டிய விடுப்பும் ஈட்டாத சம்பளமும்- 1/2


அரசு அலுவலகங்களில் ஈட்டிய விடுப்பு எடுக்கவேண்டுமானால் 15  நாட்களுக்கு முன்பே கண்மனி அன்போட என்று ஆரம்பித்து லெட்டர் , மடல் கடுதாசி கடிதம் என்று ஏதோ ஒரு பெயரில் வஸ்து ஒன்றை
சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். யானும் அவ்வண்ணமே ஒன்றை சமர்ப்பித்து,  லீவ் எடுக்க வேண்டிய நாள் வரை அபிராமி ராமி அபிராபி என்று அனுமதி கடிதம் வேண்டி காத்திருந்து, வராமல் போகவே ( பெரும்பாலும் யாருக்கும்  வராது) லீவில் அப்ஸ்காண்ட் ஆகிவிட்டேன்.

இருபது நாள் லீவ் முடிந்து லீவில் எடுத்த அவதாரங்களை களைந்து வெற்றிகரமாக மீண்டும்  வேலையில் சேர்ந்தாகிவிட்டது. அரசுப் பணியில் சில பல வருடங்கள் கூட்டி பெருக்கினால், குப்பை கொட்டுவதற்கு   'செல்ஃப் ட்ராயிங் ஆபீஸர்' என்ற  சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும்  'உயர் பதவியில்' தூக்கி அமர்த்தப்படுவோம்.
அதாவது தன்னுடைய சம்பள பில்லை(  pay bill)  தானே மாதா மாதம் தயாரித்து பிஏஒ எனப்படும் pay and accounts officeக்கு(PAO) அனுப்ப வேண்டும். இந்த நேர்த்திக்கடனை மாதா மாதம் செய்தால் தான் சம்பளம். வேலைக்கு தான் வர்றோமே ஆபீஸ்ல சம்பளம் போடுவாங்க என்று தெனாவட்டாக இருந்தால் வீட்டில் சோறு பொங்க முடியாது.

இந்த சொ.செ.சூ பதவியில் மருத்துவ விடுப்போ ஈட்டிய விடுப்போ எடுக்கும் போது தான்  சனி பகவான் எந்தளவு 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' ரேஞ்சுக்கு உக்கிரத்துடன் நம் ராசியில்
குத்தாட்டம் ஆடுகிறார் என்பது  புரியும்.

 நம்ம லீவ் கதைக்கு வருவோம்.

லீவ் முடிந்து வந்து பணியில் சேர்ந்த பிறகு தான் நான் ஈட்டிய விடுப்பு எடுக்கலாமா வேண்டாமா என்ற அனுமதியளிக்கும் கடிதம் பிஏஓ வுக்கு அனுப்பப்பட தயார் நிலையில் இருந்தது. அடங்கொன்னியா!  இந்த லெட்டர் எப்ப அங்க போறது எனக்கு எப்ப சம்பளம் வர்றது என்று அயர்ச்சியாக இருந்தது. சில பல சாங்கியங்களுக்குப் பின்
இந்த லெட்டர் அனுப்பப்பட்டு  நீங்க லீவ் எடுக்க தகுதியானவர் தாங்கோ  என்றுரைக்கும் leave eligibility report( LER) நான் லீவ் முடித்து பணியில் சேர்ந்த எட்டாம் நாள்  பிஏஒ விலிருந்து எங்கள் அலுவலகம்  வந்தடைந்தது. இந்த  LER ஐ தொடர்ந்து மேலும் பல சடங்குகள் காத்து கிடந்தன.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தாரக மந்திரத்தை ஒரு நாளைக்கு 108  முறை உச்சாடனம்  செய்யும் அரசு ஊழியராகிய நான் விடுப்பில் செல்லும் காலங்களில் எனது பணியினை இன்னாரிடம் ஒப்படைக்கும் certificate of transfer of charge(CTC)  என்ற படிவத்தை பூர்த்தி செய்து மறுபடி சந்நிதானத்துக்கு  (பிஏஒ) அனுப்ப வேண்டும்.

அந்த படிவத்தை ஆபிஸில் யார் வைத்திருக்கார் என்பதை சிபிசிஐடி மூலம் கண்டறிந்து அந்த நபரிடம் கேட்க அவர் ஏதோ ரேஷன் கடையில் சர்க்கரை தீர்ந்து போனது போல 'இனிமே கவர்மென்ட்ல ப்ரிண்ட் ஆகி வந்தா தான் படிவம்' என்றார். நமக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும் போலயே சம்பளம் வாங்க என்ற அதிர்ச்சியை காலை உணவோடு சேர்த்து செமிக்க முயற்சிக்கையில் 'அந்த கடைசி டேபிள்ல வேணா கேட்டு பாருங்க  மேடம்' என்று இன்னொரு டிப்பையும் தந்தார். நேராக கடைசி டேபிளுக்கு படையெடுத்தால் சீட்டில் ஆள் இல்லை. விசாரித்ததில் அவர் லீவ் என்று தெரியவந்தது. இந்த கடைசி டேபிளில் ஆரம்பித்தது தான் சனி பகவானின் ' லீவ் ரிதம்' என்ற சூப்பர் டான்ஸர் நடன நிகழ்ச்சி.

அடுத்த நாள் அந்த கடைசி டேபிளிடம் படிவத்தை வாங்கி பூர்த்தி  செய்து ஆரத்தி எடுக்காத குறையாக ஆபீஸிலிருந்து சீக்கிரம் பிஏஒவுக்கு அனுப்புங்க என்று மன்றாடிவிட்டு வந்து மூன்று நாள் கழிந்த பிறகே தெரிய வந்தது இதை அனுப்ப வேண்டிய ஆபீஸர் இரண்டு நாட்களாக லீவு!

 ஆபீஸர் ஒரு வழியாக வந்து ஒரு  கல்யாணி கவரிங் லெட்டரை டைப்பி  முடித்த போது அதில் கையெழுத்திட வேண்டிய மேலதிகாரி ஒரு வாரம் விடுமுறையில் சென்று விட்டார். அடுத்த லீவு! 

மறுநாள் காலையிலிருந்து  பல் விளக்குகிறேனோ இல்லையோ அன்றைய ராசி பலனை தவறாமல்  பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ரேடியோவில் சொல்லப்படும் கேலி ஜோசியத்தை கூட விட்டு வைக்க வில்லை. அநேகமாக எல்லா நாட்களிலும் இன்று உங்கள் ராசியான நிறம் கறுப்பு அனுகூலமான எண் ஏழரை என்றே சொல்லப்பட்டது.

(தொ.....)


Tuesday, 7 June 2016

அசெம்ப்ளி(ங்).

அசெம்ப்ளி(ங்).

பேட்டரி வாங்கி மாளாமல் பேட்டரி ஆப்பரேட்டட் பொம்மைகளை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருந்த நான் இப்போது அசெம்ப்ளிங் செட்டுகளை கண்டு கலங்கிப் போயிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு லீகோ(Lego) அசெம்ப்ளிங் செட் ஒன்றை யோஹானின் தாத்தா வாங்கி தந்திருந்தார். 75 பார்ட்ஸ். லீகோ பொம்மை என்னவோ நம் சுண்டு விரல் அளவு தான். அந்த பொம்மை ஓட்டும் படகு செய்யத்தான் அவ்வளவு பார்ட்ஸ் . லீகோவின் படகு சவாரி கற்பனையில் மிதந்து கொண்டே  இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டரை மணி நேர உழைப்பு. நிஜமான படகு ஒன்றை கட்டி முடித்த திருப்தியுடன் இன்ஸ்ட்ரக்‌ஷனை மறுபடி படித்தால் படகை தண்ணியில் போட வேண்டாம் என்று தெளிவாக சொல்லப்பட்டிருந்தது.  படகில் லீகோ பொம்மையை வைத்து ஷோகேஸில் வைத்துக்கொள்ள வேண்டுமாம். என்ன கொடுமை! நடுராத்திரி எனது  உண்மை சொரூபத்தை காண்பித்து கோவப்படக்கூட திராணி இன்றி அசந்து தூங்கிவிட்டேன்.

உண்மையில் அசெம்ப்ளிங் செய்வதில் ஒரு த்ரில் உண்டு. நம் கையில் ஒரு பொருள் படிப்படியாக உருபெறுவதை ரசிப்பது ஆனந்தமான விஷயம். எண்ட் ப்ராடக்கட்டை பார்க்கும் போது ராணாடார் டிஎம்டி முறுக்கு கம்பியில் கட்டிய வீட்டை பார்ப்பது போல ஒரு மிதப்பு வரும்.ஆனால்  எல்லா நேரங்களும் அப்படி அமைவதில்லை. நடுரோட்டில் செருப்பு பிய்ந்து போன எரிச்சல் தான் பெரும்பாலும் மிஞ்சுகிறது.

பல நேரங்களில் செய்முறை விளக்க படங்களை  பார்க்கும் போது நமக்கு பிடிக்காத பாடத்தில் பரிட்சை எழுதுவது போலவே இருக்கும் . ஒவ்வொரு ஸ்டெப்பையும் புரிந்துகொள்வதற்குள் எர்வாமேட்டீன் விளம்பரம் நம் கண்முன்னே தோன்றி மறையும். A வை C யில் தலைகீழாக மாட்டி(B எங்கே என்று ஆராய கூடாது)  D யை மூன்று முறை சுற்றி மீடியம் சைஸ் நட்டு போட்டு எக்ஸ்ட்ரா ஸ்மால் சைஸ் போல்ட்டு போட்டு .... ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆ நமக்கு  கழுத்து திருகி விடும். பல நேரங்களில் பையன் 'அம்மா நீங்க ஏம்மா இப்படி கோணலா உட்கார்ந்திருக்கீங்க?' என்பான் .

இதில் இன்னொரு ப்ரச்சனை சில சமயம் எல்லாம் செய்து முடிக்கும் நேரத்தில் ஏதோ ஒரு சிறு நட்டோ போல்டோ காணாமல் போயிருக்கும் அல்லது வந்த பேக்கிங்லேயே மிஸ் ஆகி இருக்கும். வீட்டையே உருட்டி புரட்டி போட்டு தேடி முடித்தபின்  நம் ஆடை மடிப்பிலேயே எங்கேயாவது ஒளிந்து கொண்டிருந்துவிட்டு  ரொம்ப நேரமா நம்மள தான் தேடுறாங்க என்று கீழே விழும். கடைசி வரை கிடைக்காமல் போன சிறு சிறு பாகங்களும் உண்டு.இந்த ஏழுகடல் ஏழுமலையெல்லாம் உருண்டு புரண்டு நீந்தி தாண்டி தவ்வி கடைசியாக கிளியைப் பிடிக்கப்போகும் சமயத்தில் ஆரம்பத்தில் செய்த ஏதோ ஒரு சிறு தவறினால் மொத்தத்தையும் கழட்டி மாட்ட வேண்டிய அதிர்ஷ்டமும் பல சமயங்களில் வாய்க்கும். இதற்கெல்லாம் அசந்துவிடவே கூடாது.

பல மணி நேரங்கள்  முட்டி மோதி பார்த்து,  தலைகீழாக அமர்ந்தும் பார்த்து அசெம்பிள் செய்ய முடியாமல் திணறினாலும் பிள்ளையின் முன் தோல்வியை ஒத்துக்கொள்ள மனசு வரவே வராது. அவ்வாறு ஒத்துக்கொள்ளும் நிலை வரும்போது  'மாற்றம் முன்னேற்றம் ....' என்ற மாம்பழ கலர் போஸ்டரில் வந்ததை போல மோட்டுவலையை வெறிக்க வெறிக்க பார்த்தபடி "இது அவ்ளோ தான்டா கண்ணா, இந்த செட் வேஸ்ட் " என்று சொல்லவேண்டி வரும்.

எனக்கு இப்போதெல்லாம் ஸ்கூல் ப்ராஜக்ட்டுகளை விட  வயிற்றில் புளியை கரைப்பது அசெம்ப்ளிங் செட்டுகளாக வரும் கிஃப்டுகள் தான். இவை பெரும்பாலும் நம்மீது எதற்காகவோ, நம்மீது நேரடியாக காட்ட முடியாமல் காண்டாக உள்ள நல்ல நண்பர்களாலேயே நம் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக தரப்படுவதாக நினைக்கிறேன். நம்மை பழிவாங்கும் ஒரு நூதன முயற்சியாக இதற்காக மெனக்கெட்டு அதிகமான பாட்ர்ஸ் உள்ள அசெம்ப்ளிங் செட்டாக தேடிப்பிடித்து வாங்குகிறார்கள் இந்த நல்லெண்ணம் கொண்டவர்கள்.

இது போன்ற அசெம்ப்ளிங் செட்டுகளை குழந்தைகளோடு சேர்ந்து செய்தால் குழந்தைகளுக்கு ப்ராப்ளம் சால்விங் திறன் வரும் என்று நமது அறிவார்ந்த சமூகம் சொல்கிறது. எனக்கென்னமோ இந்த அசெம்ப்ளிங் செட் கிஃப்டாக வர ஆரம்பித்த பிறகு தான் குடும்பத்தில் ப்ராப்ளமே அதிகமானது போல் தோன்றுகிறது. நமக்காக இலவசமாக ஏகப்பட்ட ப்ரச்சனைகள் காத்திருக்கும்  போது யாராவது இதை வேறு காசு கொடுத்து வாங்குவார்களா?


சமீபத்தில் யோஹான் பிறந்த நாளைக்கு என் உயிர் நண்பி கொடுத்த ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் பொம்மைக்கு 176 pieces only என்று அதன் அட்டையில்
போட்டிருந்தது. மிரண்டு போய் எடுத்து ஒளித்து வைத்து விட்டேன். அரை நாள் லீவ்
போட்டு தான் அசெம்பிள் செய்ய வேண்டும்.
ஒரு லாரியில் இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் அளவுக்கு பொம்மைக்கு ஏண்டா தர்றீங்க?! நண்பிக்கு நானும் இப்படி ஏதாவது அன்பளிப்பு அளித்து எனது அன்பை காட்ட ப்ரியப்படுகிறேன். நண்பியை  பழிவாங்க வேறு நல்ல ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.


யாரையாவது பழிவாங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால் யோசிக்காமல் உள்ளதிலேயே காம்ப்ளிகேடட் அசெம்ப்ளிங் செட்டை ஒன்றை அவர் பிள்ளைக்கு பரிசளிக்கவும். அதோடு நின்று விடாமல் அம்மா செட் பண்ணிட்டாங்களா, அப்பா இன்னும் பண்ணவே இல்லையான்னு இரண்டு நாளுக்கொருமுறை சிரமம் பார்க்காமல் ஃபோன் போட்டு விசாரிக்கவும். ஏதோ நம்மளால முடிஞ்சது.

Friday, 27 March 2015

லைவ் ரிலே

ஹைவேயில் நின்றுக்கொண்டு 
'இதோ நம்ம ஸ்ட்ரீட் திரும்பிட்டே இருக்கேம்மா'

டெப்போவிலிருந்தே கிளம்பாத பஸ்ஸிலிருந்து....
"இன்னும் ரெண்டே ஸ்டாப் தான், இறங்கின உடனே ஃபோன் பண்றேன்"

வீட்டு வாசப்படியில் நின்றுக் கொண்டே
'வை வை வை சிக்னல் போட்டாங்க' 

கால் வெய்டிங் ஆப்ஷனே இல்லாத ஃபோனில் 'இன்னொரு லைன்ல பாஸ் வர்றார் அப்புறம் பேசறேன்' 

கும்மிடிபூண்டியில் கிளம்பிக் கொண்டே 
'நாளைக்கு மார்னிங் சென்னை ரீச் ஆயிடுவேன்'

இதெல்லாம் இப்போது அன்றாடம் சுலபமாக கேட்கக் கூடிய வசனங்கள்.

ஒரு ஃபோனுக்கு இரண்டு ஃபோன், ஓரே ஃபோனில் இரண்டு சிம் என்ற அலப்பறை ஒரு பக்கம். அது போக, உச்சா போவதை கூட ரன்னிங் கமெண்ட்ரி தருபவர்கள் மறுபக்கம். 

அலைப்பேசியற்ற ஒரு தெருவை கடந்து வருவதோ, பத்து பேர் கூடியுள்ள ஒரிடத்தில் அலைபேசியே இல்லாத ஒருவரை கண்பதோ குத்துப்பாட்டில்லாத தமிழ் படம் போல அரிதான விஷயமாகிவிட்டது. 

எது நடந்தாலும் உடனுக்குடன் மார்ஸ் கிரகம் வரை தெரிவிக்கவில்லையென்றால் ரத்தம் கக்கி சாவோம் என்ற சாபமும் அலைபேசி வாங்கும்போதே நமக்கு இலவச இணைப்பாக கிடைத்துவிடுகிறது. 

டிவி சேனல்களுக்கு கடுமையான போட்டியாக நாமே பல நேரங்களில் 24/7 நியூஸ் சேனல்களாக மாறி ரன்னிங் கமென்டரியோடு  லைவ் டெலிகாஸ்ட்டும் தந்து வருகிறோம்.'இப்ப தான் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிச்சேன் அடுத்து ரசம்' என்று சொல்லி முடிக்கும் முன் 3ஜியின் மகிமையில் பாதி தின்ற ரசம் சாத ஃபோட்டோ வாட்ஸப்பில் டவுன்லோட் ஆகியிருக்கும். 

கொஞ்சம் பின்னோக்கி யோசித்தால் 
எந்நேரமும் மனதுக்கு பிடித்தவர்களுடன் தொடர்பிலேயே இருக்க ஏங்கிய நாட்கள் உண்டு என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. நமது அன்புக்குரியவர்களின் குரலைக் கேட்க பல கிமீகள் நடந்து சென்ற பொழுது கையடக்கத்தில் ஒரு சாதனம் இருக்காதா என நினைத்ததும் உண்மை தான்.

 எஸ்டிடி பேசும் போது மீட்டரை விட வேகமாக நமது பிபி எகிறிக்கொண்டிருந்த காலத்தை கடந்து தான் இரவெல்லாம் இலவசமாகவோ, பிடித்தவரோடு மணிக்கு பத்து பைசாவோ செலவு செய்து பேசும் நிலையை எட்டியுள்ளோம். ஆனால் இலவசமே கசந்து போகுமளவு அலைபேசி உபயோகத்தை ஓவர்டோஸாக்கி, ஃபோனில் சார்ஜ் இல்லையெனில் ஜன்னி கண்டுவிடும்  அபாய நிலையை நாமாகவே உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என்பதுமே மறுப்பதற்கில்லை. 

உதாரணமாக, ட்ரெய்னில் டாய்லெட்டில் தண்ணீர் இல்லை என்பது ஒரு பெரிய கவலையாகவே தெரியாது, ஆனால் சார்ஜ் பண்ண அந்த கம்ப்பார்ட்மென்டில் ப்ளக் பாயின்ட் இல்லை என்ற வருத்தமே அதிகமிருக்கும். 
 
ஆனால் என்ன தான் கான்ஸ்டன்ட்லி-இன்-டச் ஆசை கல்யாணத்திற்கு முன் டைரிமில்க் சில்க் மாதிரி திகட்டாத சுவையை தந்தாலும், கல்யாணமாகி ஆறு மாதம் கடந்த நிலையிலேயே கணவர்கள் 'இந்த செல்ஃபோன் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனான்...'என்ற டயலாக்கோடு அலைவதை சகஜமாக பார்க்க முடிகிறது. 

இந்த 24/7 நான்ஸ்டாப் கம்யூனிகேஷனை மறைமுகமாக ஊக்குவிக்கும் தொடர்பு சாதனங்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை பெருமளவு பதம் பார்த்திருக்கின்றன என்பதை இப்போதுள்ள தலைமுறை உணர இன்னும் சில வருடங்கள் ஆகும். 
அவ்வாறு உணரும் நேரம் அலைபேசி உபயோகம் பல் துலக்குதலைக் காட்டிலும் இன்றியமையாத ஒரு இடத்தை எட்டியிருக்கும்.