Wednesday, 31 May 2017

எங்கே செல்லும் இந்த பாதை...

எங்கே செல்லும் இந்த பாதை.....

யோஹானுக்கு மாநில அளவிலான ஒரு கராத்தே போட்டிக்காக திருவள்ளூர் செல்ல வேண்டி இருந்தது. காலை எட்டு மணிக்கு முன்னே அங்கே இருக்க வேண்டும். இது வரை திருவள்ளூரை மேப்பில் கூட பார்த்ததில்லை. பெயர் கேள்விபட்டதோடு சரி. அதுவும் நானே காரை ஓட்டிக்கொண்டு மகனுடன் செல்லவேண்டும். முகநூலுக்கு போஸ்ட் ரெடியாயிடுமோ என்ற பயம் லேசாக தலை தூக்கியது

தெளிவாக வழி சொல்லக்கூடிய நண்பர் ஒருவரிடம் ஏற்கனவே வழி விசாரித்து வைத்திருந்தேன். அவரிடம் எங்கு செல்ல வழி கேட்டாலும் எங்கள் வீட்டு வாசப்படியிலிருந்து  ஆரம்பிப்பார்

'இப்ப நீங்க லிஃப்ட்ல கீழ இறங்குறீங்க....'

'படிகட்டுல எறங்க கூடாதா? '

'டிஸ்டர்ப் பண்ணாம கேளுங்க' என்று மறுபடி என்னை லிஃப்டில் வர சொல்லுவார்

கடந்த சில நாட்களாக கூகுள் அக்காவின் குரலில் நான் மையல் கொண்டிருந்ததால் அக்காவிடமும் வழி கேட்டு விடலாம் என்று காலையில் எழுந்து கூகுள் மேம்பை ஆன் செய்தால் அது வேறு ஒரு சுலபமான வழியை காட்டவே நண்பர் சொன்னபடி லிஃப்டில் இறங்காமல் படிக்கட்டில் இறங்கி  கூகுள் குரலழகியிடம் தஞ்சமானேன்

மகனும் நானும் ஏழுமணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம். காரில் சிறிது தூரம் சென்ற பிறகு கூகுள் மேப்பை ஆன் செய்தால் அக்கா குரல் கேட்கவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஃபோனை நோண்டி எடுத்துவிட்டேன். அக்காவுக்கு என்ன கோவமோ, வரவேயில்லைமேப்பை மட்டும் ஆன் செய்துவிட்டு பையனிடம் ஃபோனை தந்துவிட்டேன் வழி பார்த்து சொல்லும்படி

அம்மா அந்த கடை வருது, இந்த ரோடு தான், கரெக்டா தான் போறீங்க,ஏம்மா மேப்ல இவ்ளோ ஸ்லோவா மூவ் ஆகுது கார் என்று ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டே வந்தான்
திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸுக்கு பின்புறம் உள்ள ஸ்டேடியத்தில் தான் போட்டி. பதினைந்து நிமிடங்களில் கலெக்டர் ஆபீஸ் என்று மேப் காட்டியது. ஆனால் ரொம்ப நேரமாகியும் ஆபீஸ் வரவே இல்லை

'கண்ணா கரெக்டா தான் போறோமா? '

'கரெக்ட் தாம்மா'

'கலெக்டர் ஆபீஸே ரோட்ல வரவேயில்லையேடா'

'ஆனா மேப்ல அப்பவே வந்துருச்சேம்மா'

'அய்யோ அப்ப தப்பான ரூட்ல போறோம்டா!!'

காரை நிறுத்தி திருவள்ளூர் வழி கேட்டேன்
'இன்னும் இருவது கிமீ போகனுங்க'
'அப்ப கலெக்டர் ஆபீஸ்? '
'அது திருவள்ளூர்ல தாங்க இருக்கு, அதே இருவது கிமீ போகனும்

மேப்பை ஆஃப் செய்தேன். கூகுள் மண்டையா இப்படி காலவாறிட்டியே என்று திட்டிக்கொண்டே காரை ஓட்டினேன். கூகிள் அக்கா இருந்திருந்தா எனக்கு தப்பா வழி சொல்லி இருக்காது. என்ன இருந்தாலும் நமக்கு பிடித்தவர்களை விட்டு கொடுக்க மனம் ஒப்புவதில்லை

திருமழிசை, திருமுல்லைவாயில், திரு திரு என்று நிறைய ஊர்களை கடந்து ஒரு இடத்தில் போர்ட் பார்த்தேன் திருப்பதி ...கிமீ என்று போட்டிருந்தது. அய்யோ வழி மாறி வந்துட்டேனோ? நல்லபடியாக திருவள்ளூர் போய் சேர்ந்தால் எனக்கு வழி சொன்ன நண்பருக்கு திருப்பதியில் மொட்டை அடிப்பதாக வேண்டி கொண்டேன்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா ?' 
'என்ன லட்டும்மா? '
'திருப்பதி லட்டு கண்ணா'
'ஏது? '
'அங்க தான் போய்ட்டு இருக்கோம்னு நெனக்கறேன்
'அய்யோ அப்ப ஸ்டேடியதுக்கு போகலையாம்மா'
'அங்க திரும்புன பக்கமெல்லாம் ஸ்டேடியம் தான் கண்ணா'
'அம்மா மேட்சுக்கு லேட் ஆயிடும். ஒழுங்கா வழி கேளுங்க யார்கிட்டயாவது.'

மறுபடி வழி விசாரித்தேன். சரியான ரூட்டில் போவதாகவே விசாரித்தவர்கள் சொன்னார்கள்
கிட்டதட்ட திருவள்ளூரை அடைந்து காரை நிறுத்தி மறுபடி வழி விசாரித்தேன்

'ஸ்டேடியம் எங்க இருக்கு? '
'அது சென்னைல இருக்குங்க'
'நாங்க அங்க இருந்து தாங்க வரோம் ,இங்க ஸ்டேடியம் எங்க இருக்கு'
'இங்க அப்படி எதுவும் இல்லையே'
'இது திருவள்ளூர் தான? '
'ஆமா,ஆனா ஸ்டேடியம் சென்னைல தான் இருக்கு'
'சரி கலெக்டர் ஆபீஸ் எங்க இருக்கு?'

வழி சொன்னான்

'அங்க பக்கத்துல எங்கயும் விளையாடற இடம் எதுவும் இருக்கா? '
 ' அந்த க்ரவுண்டா? அப்படி கேக்கலாமில்லக்கா'

வழிகேட்டு சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தோம். போட்டியில் யோஹான் பரிசு வென்றதால் பரிசளிப்பு விழா வரை இருக்க வேண்டியதாகிவிட்டது. மற்ற போட்டிகள்  , பரிசளிப்பு விழா எல்லாம் முடிய இரவு ஏழரை மணியானது. நமக்கும் காருக்கும் ஏற்கனவே ஏழரை, வந்த  வழியை விசாரித்து மறுபடி இருட்டில் வண்டி ஓட்ட வேண்டும் என்று நினைத்த போதே பகீரென்றது.

வந்து சேர்ந்த கதையே இப்படியென்றால் திரும்பி வீட்டுக்கு போன கதை எப்படியிருக்கும்?   


ஒரு சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே..... 

ஓலாவும் நானும்.

ஓலாவும் நானும்.

ஏர்போர்ட்டில் இறங்கியவுடன், அடிக்கடி கூரைய பிச்சிட்டு கொட்டற சிமெண்ட்டும் கல்லும் கண்ணாடியும் எந்த பக்கம் என்று விசாரித்து, அந்த பக்கம் போகாமல் டேக்ஸி பிடிக்க வெளியே வந்தேன்

Fast track டாக்ஸி புக்கிங் விசாரித்ததில் விமான டிக்கெட்டில் பாதி விலை கேட்க, மறுபடி விமானம் ஏறி ஊருக்கே போய்விடலாமா என்று தோன்றியது. சரி நமக்கு இருக்கவே இருக்கு ola என்று ஒரு டாக்ஸியை புக்கினேன்

ஏர்போர்ட் பில்டிங் விட்டு வெளியே வந்து ட்ரைவருக்கு கால் செய்தேன். ரொம்ப பணிவாக பேசினார் முத்து

'எங்க நிக்கறீங்க மேடம்?'

'மெட்ராஸ் காஃபி ஹவுஸ் பக்கத்துலங்க'

'மேடம் அங்கயிருந்து அப்பிடியே அந்த காஃபி ஹவுஸ் பின்னாடி பாருங்க, தேசிய கொடி இருக்கா?'

சினிமா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி தேசிய கீதம் மாதிரி ஓலா டாக்ஸில ஏறத்துக்கு முன்னால கொடிக்கு சல்யூட் அடிக்கணும்னு கோர்ட் ஆர்டர் ஏதும் வந்திருக்குமோ

'கொடி இருக்குங்க'

'அங்க போய் வெயிட் பண்ணுங்க. அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்'

'சரிங்க'

கொடி காத்த குமரன் மாதிரி கொடி கம்பத்துக்கு கீழே எனக்கு முன்னாடியே நிறைய பேர் நின்று சல்யூட்  அடித்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு தேசப்பற்று ஜோதியில் ஐக்கியமான போது வேறு ஒரு நம்பரிலிருந்து ஃபோன்

'ஹலோ மேடம்'

'சொல்லுங்க'

'ஓலா டாக்ஸி புக் பண்ணியிருந்தீங்களே'

'ஆமா. நீங்க சொன்ன இடத்துல தான் நிக்கறேன். இது வேற நம்பர்லயிருந்து பண்றீங்களா?'

'இல்லையே மேடம். நான் இப்ப தான் பண்றேன். என் பேர் காமேஷ்'

'முத்துன்னு ஒருத்தர் பேசி இங்க நிக்க சொன்னாரே'

'தெரில மேடம் எனக்கு இப்ப தான் மெசேஜ் வந்தது. நீங்க அங்க நம்ம கொடி இருக்கும் பாருங்க. அந்த கம்பத்துக்கு பக்கம் வந்துருங்க'

ஓலாவின் தேசபக்தியை பாராட்டியே ஆக வேண்டும்.

'நான் அங்க தாங்க நிக்கறேன். ஆனா இருங்க நான் முத்து கிட்ட கேட்டுடறேன். அவர் வர்றாருன்னா நான் அந்த கேப்ல போறேன்'

' சரி மேடம்'

முத்துவுக்கு ஃபோன் போட்டேன்

'வந்துட்டேன் மேடம். ரெண்டு நிமிஷம்'

'சரிங்க'

அடுத்து காமேஷுக்கு ஃபோன்

'முத்து வந்துட்டாருங்க. நான் கிளம்பறேன். சாரி. உங்க ஆபீஸ்ல கேளுங்க, ஏன் இரண்டு புக்கிங் எடுத்தருக்காங்கன்னு

'ஓகே மேடம்'

முத்துவின் காரில் ஏறி காமேஷ் கதையை சொன்னேன். கார் நகர்ந்தது

'உங்களுக்கு ஏதும் மெசேஜ் வந்திருக்கா பாருங்க மேடம்'

பார்த்தேன். அட ஆமா. காமேஷ் எனக்காக காத்துக்கொண்டு இருப்பதாக ஓலா வாஞ்சையுடன் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தது. அப்ப முத்துவ என்னடா பண்றது

'சரி மேடம் நீங்க OTP சொல்லுங்க

சொன்னேன். நம்பரை அழுத்தினார்

'மேடம் OTP கரெக்ட்டா? இது இல்ல போல இருக்கே'

'இந்த OTP தாங்க வந்தது. ஆனா காமேஷுக்கும் இதே OTP தான் வந்திருக்கு'

'நீங்க ப்ரியா தான? '

சந்தோஷம். A status in the making - என் நண்பனிடம் நான் என் அனுபவத்தை சொல்லும் போதெல்லாம் இப்படி ஏதாவது கமெண்ட் பண்ணுவான் என்பது இப்போது ஞாபகம் வந்தது

'இல்லைங்க'

இந்த ஹீரோயினுக்கான யுனிவர்சல் பேரை விடவே மாட்டாங்க போல. அதற்குள் இன்னொரு மெசேஜ் வந்தது. யுவர் புக்கிங் வித் முத்து ஈஸ் கேன்சல்டு. அடப்பாவிங்களா. இவங்களே அனுப்புவாங்களாம் இவங்களே கேன்சல் பண்ணுவாங்களாம்

'உங்க ரைட் கேன்சல்னு வருதுங்க முத்து'

' அப்படியா? நீங்க காமேஷ்க்கு ஃபோன் பண்ணுங்க மேடம்'

பண்ணினேன்

'மேடம் ரெண்டு முறை புக்கிங் குடுத்திருக்கீங்கன்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க'

'இல்லையேங்க. சரி பரவாயில்ல. முத்து கூட ரைட் கேன்சல்னு வருது. நீங்க வர்றீங்களா பிக் அப் பண்ண? '

'அச்சோ மேடம் நீங்க கிளம்பிட்டதா ஃபோன் பண்ணதால உங்க ரைட நான் இப்ப தான் கேன்சல் பண்ணேன்'

ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? ஒரு வேள ஓலால என்னோட FB ஃபேன் யாராவது இருக்காங்களோ?

'நீங்க இன்னொரு முறை ஃபரெஷ்ஷா ரைட் புக் பண்ணுங்க மேடம்' என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் காமேஷ். அதற்குள் ப்ரியவிடமிருந்து முத்துவுக்கு ஃபோன்

'நீங்க அந்த கொடி இருக்கு இல்லைங்க... ' என்று தனது தேசபக்தியை மீண்டும் விவரித்தார் முத்து
முத்துவின் காரில் கொடி கம்பத்தை கடந்து 100 மீட்டருக்கு மேல் வந்துவிட்டிருந்தேன். நான்  வேறு ரைட் புக் செய்து, புது  காரோட்டி அர்ஜுனனுக்கு கால் செய்தேன்

'மேடம் அங்க ஒரு கொடி கம்பம் இருக்குல்ல....'

'தெரியுங்க தெரியுங்க வந்துடறேன்'

இன்னைக்கு தேஷ்பக்தில முங்கி குளிச்சு அநேகமா ராத்திரி அட்டென்ஷன்ல ஜனகணமன பாடிட்டு தான் தூங்குவேன்னு நெனக்கிறேன்

அதற்குள் முத்து,' மேடம் நான் அந்த கொடி கம்பத்துக்கிட்ட தான் அடுத்த ரைட் பிக் பண்ணனும். இப்படி ரிவர்ஸ்ல போக முடியாது. சுத்திவரணும் . நீங்க உட்காருங்க நான் ட்ராப் பண்றேன்'

'வேண்டாம் முத்து. தாங்கயூ. நான் நடந்துடறேன்'

இறங்கியபின் அழகாக டாட்டா காண்பித்தார் முத்து. நானும் டாட்டா காட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். இது ஓலாவே நட்டு வச்ச கொடி கம்பமா இருக்குமோ? யோசித்தபடியே நடந்து வந்து மறுபடி கொடிக்கு சல்யூட் அடித்தபடி காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் , எனக்கு முன்னே கொடி கம்பத்திடம் வந்து அட்டென்ஷனில் நின்று கொண்டிருந்த ப்ரியாவை பிக் அப் செய்ய முத்து வந்தார்

என்னைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி கண்ணாடி இறக்கி 'மேடம் இன்னும் வரலையா கார்? ' 

'வந்துடும் முத்து. தாங்க்யூ

இந்த கர்டஸியை எல்லா ட்ரைவர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. என்ன ஒரு கனிவு. மறுபடியும் அழகாக டாட்டா காட்டிவிட்டு நகர்ந்தார். ஸ்வீட் பர்சன்

காரோட்டி அர்ஜுனன் வந்தார்

'நீங்க அர்ஜுனன் தான? '

இல்ல நான் கர்ணன்னு சொல்லிடுவாரோ என்று பயந்தபடியே கேட்டேன்

'ஆமா மேடம் OTP சொல்லுங்க......'. 

ஓலாவுக்கும் எனக்குமான பூர்வ ஜென்ம பந்தம் வலுப்பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை எந்த சமாதியிலும் தியானம் செய்யாமலே உணர்ந்து கொண்டேன் . ஓலாவும் நானும்- பயண கட்டுரை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறேன்

பயணங்கள் முடிவதில்லை