Sunday, 23 February 2014

ஸ்போர்ட்ஸ் டே

 யோஹான் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே. 
அழகான இளம் அம்மாக்களோடு சனிக்கிழமையாதலால் அப்பாக்களும் வந்திருந்தனர். அப்பாக்கள் அனைவரும் காம் கார்டர் காமெராக்களுடன் ப்ரொபஷனல் போடோக்ராபர் போலவே அலைந்து கொண்டிருக்க, அம்மாக்கள் பெரும்பாலும் ஐ பேட், டேபிலேட்டோடு செட்டில் ஆகி இருந்தனர். 

குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியோ நடனமோ எதுவாக இருந்தாலும் சொல்லிக்கொடுக்கப்பட்டதை செய்யாமல் சுற்றி உள்ளவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தனக்கே சொந்தமான உலகில் தனக்கு தெரிந்ததை செய்யும் குழந்தைகள் பலருடைய கவனத்திலிருந்து தப்பி விடுகின்றனர். உண்மையில் அவ்வாறான குழந்தைகளை ரசிப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அது ஒரு தனி அழகு! நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிப்போம் குழந்தை தவறாகவே செய்தாலும். சொல்லிகொடுத்த மிஸ்ஸுக்கு தான் செம கடுப்பாக இருக்கும். 

ஆசிரியை என்றால் என்றால் ஏனோ சற்று வயதானவர் என்ற உணர்வு நம்மை அறியாமல் தொற்றிக்கொள்கிறது. அதனால்  முடிந்த வரை மிஸ் என்றே வைத்துக்கொள்வோம். மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த ஆடைகளில் அனைத்து மிஸ்களும் வளைய வர,  மூன்று பிரிவுகளாக (houses)பிரிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் சிவப்பு, நீலம், மற்றும் சந்தன கலர் சட்டையுடனும் தொப்பியுடனும் செய்த அணிவகுப்பு அழகோ அழகு.வண்ணமயமாக குழந்தைகள் அனைவரும் மார்ச் பாஸ்ட் செய்து வந்து வரிசைக் கட்டி நின்றனர். மிஸ்களும் எதிரே நின்று குழந்தைகளோடு சேர்ந்து மிக அருமையானதொரு இசைக்கோர்வைக்கு (வழக்கமான டிரில் மியூசிக் இல்லை!)  டிரில் செய்தனர். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தாலே மண்டை காயும் நமக்கு இத்தனை குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து  வெகு நேர்த்தியாக அவைகளை இசைக்கு ஏற்றவாறு செய்ய வைப்பது சாதாரண விஷயமல்ல.அனைவரும் மூன்றரை  வயதுக்குட்பட்ட வாண்டுகள். ஆசிரியர்களின் மெனக்கெடல்  இம்முறையும் ஆச்சர்யமூட்டியது. 

ரசனையான விளையாட்டுக்கள். ஒரு தட்டில் நிறைய ஹேர் கிளிப்புகள் கிரௌண்ட் நடுவே வைக்கப்பட்டிருந்தன.விசில் அடித்தவுடன் குழந்தை ஓடி சென்று ஒரு கிளிப்பை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு ஓடி வர வேண்டும். அவ்வாறு விசில் அடித்தவுடன் ஓடிய  பெண் குழந்தை ஒன்று சீரியசாக   ஒவ்வொரு கிளிப்பாக போட்டு போட்டு பார்த்து திருப்தி அடையாமல் கழட்டி வைத்துக்கொண்டே இருந்தது. கடைசி வரை அந்த தட்டை விட்டு நகரவே இல்லை!மற்றொரு விளையாட்டில் கலர் கலராக செய்து வைக்கப்பட்ட மலர்களிலிருந்து வண்டுகள் போல உடை அணிந்த குழந்தைகள் தேன் சேகரிக்க வேண்டும் என்று போட்டி. சொல்லி வைத்தாற்போல ஒவ்வொவொரு குழந்தையும் தனக்கு கொடுக்கப்பட்ட மலரை விட்டு அடுத்த ட்ராக்கில் இருந்த மலரிடமே ஓடின! சொல்லிகொடுத்த மிஸ்ஸுகள் அலறியடித்துக்கொண்டு குழந்தையின் பின்னே ஓடினர்.  ஓட்டப்பந்தயத்தில் விசில் அடித்தவுடன் நேராக பார்வையாளர் இடத்தில் நின்றிருந்த அதன் அம்மாவிடம் ஓடிய குழந்தை, எதிர் திசையில் திரும்பி ஓடிய குழந்தை, அசராமல் மூக்கு நோண்டியபடி நின்ற இடத்தை விட்டு அசையாத குழந்தை,எத்தனை முறை தனியே பிடித்து நிறுத்தி வைத்தாலும் பக்கத்து ட்ராக் பையன்  கையை விட மறுத்த குழந்தை என சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடந்தேறின விளையாட்டுப்  போட்டிகள் அனைத்தும். 

பரிசளிப்பின் போதும் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை.முதல் பரிசை பெற்றுக்கொள்ள மேடை ஏறிய  குழந்தை ஒன்று நடுவில் எங்கும் நிற்காமல் ஓடி மேடையின் இன்னொரு பக்கத்தில் இருந்த படிக்கட்டில் இறங்கி ஓடியே போய்விட்டது. அதனோடு கூட பரிசை பிடுங்கிக்கொண்டு ஓடிய குழந்தை, பரிசு வாங்கிய பின்னர் மேடையை விட்டு இறங்க மறுத்த குழந்தை என குழந்தைத்தனம் எல்லா ரூபத்திலும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது தான் நிகழ்ச்சியின் ஹை லைட்! 

நிகழ்ச்சிகள் தொடங்கியதிலிருந்தே  கருப்பு கண்ணாடி அணிந்த அப்பாக்கள் யாரை ஃபோகஸ் செய்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் பிஸியாக கவர் செய்துக் கொண்டிருக்க, அம்மாக்கள் குழந்தைகளை வளைத்து வளைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தனர். கண் முன்னே நடப்பதை ரசிக்காமல்  என்றோ பார்பதற்காக காமெராவில் படம் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர் பெற்றோர்.போட்டிகளில் பங்குபெற்ற பல குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதோ நுழைவுத்தேர்வுக்கு பிள்ளையை அனுப்பிய டென்ஷனோடு இருந்தது உச்ச பட்ச காமெடி. 

உண்மையிலேயே இவர்களை எல்லாம் விட குழந்தைகளுக்கு அடுத்த படியாக உள்ளபடியே சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து களித்தது தாத்தா பாட்டிகள் தான்.  இல்லை எனக்குத் தான் அப்படி தோன்றியதா ?

Sunday, 16 February 2014

தாத்தா பாட்டி

அண்மையில் ஒரு க்ரெஷ் (crèche)பற்றி விசாரிக்க சென்றிருந்த போது ஒரு காட்சியை காண நேர்ந்தது.  ஆர்வம் தாளாமல் (என்பதை விட மனசு கேட்காமல் என்பதே சரி) அங்கு இருந்த ஒரு எட்டு மாத குழந்தையைப் பற்றி விசாரித்தேன். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் பால் புட்டி, பால் பவுடர், சத்து மாவு காஞ்சி சகிதம் வந்து இறங்கி விடுவார் போல. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இல்லையாம். பெண்ணைப் பெற்றவர்களுக்கு சென்னை ஒத்து வர வில்லையாம். பையனைப் பெற்றவர்கள் ரொம்பவே வயதானவர்கள். ஆக, குழந்தையைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி இல்லை. வேலைக்காரியை நம்பி வீட்டில் தனியாக குழந்தையை விட்டுவிட்டு வர மனதில்லை. வேலையையும் விட முடியாத சூழ்நிலை. வேறு வழி? ஆறு மாதத்திலிருந்தே க்ரெஷ் தானாம்.  
கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரம்! இரவு குழந்தையை வந்து எடுத்துச் செல்ல ஏழு எட்டு மணி ஆகிவிடுமாம். குழந்தை பெரும்பாலும் தூங்கிவிட்டிருக்கும்.அது விழிப்போடு பெற்றோரிடம் விளையாடும் நேரம் எவ்வளவு எப்போது என்பதையெல்லாம் யோசிக்காமல் இருப்பது நல்லது. அப்படி எதுக்கு வேலைக்கு போகணும் என்று வேடிக்கை பார்க்கும் எவரும் சுலபமாக கமெண்ட் அடிக்க முடியும்.அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ யாரு கண்டா! 

தவிர்க்க முடியாத சூழலில் வேலைக்கு செல்வது ஒருபுறமிருக்க வேறு எதற்கோ ஆசைப்பட்டு பால் குடி மாறா பச்சப்பிள்ளையை விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்களும் உண்டு.குழந்தைப் பிறந்து மூன்றாவது மாதத்திலேயே தாய்க்கு ஆன்- சைட் வேலை. வேறு எங்கே  குட்டி சுவரில் தான்.இப்போது வாய்ப்பை விட்டால் மறுபடி கிடைக்காதாம்.மூன்றே மாதமான தாய்ப்பால் மட்டுமே உண்ணும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு பறந்தாயிற்று.போனால் வருவதற்கு குறைந்தது எட்டு மாதம் ஆகும் என்று தெரிந்தே செல்லும் பெற்றோரை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? இதற்கு பின் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்காது என்று பறப்பவர்களுக்கு குழந்தையின் இந்த பருவமும் திரும்ப கிடைக்காது என்று கேட்காமலே அறிவுரை வழங்குபவர்களிடம் அதெல்லாம் நாங்க அடுத்த குழந்தைக்கு பார்த்துக்கிறோம் என்று வாயடைத்து விடுகிறார்கள். 

தாய்பாலின் மகத்துவத்தை அறிவுறுத்தி அரசுப்பணிகளில் கூட மூன்று மாதம் இருந்த மட்டர்னிட்டி லீவை ஆறு மாதமாக மாற்றி விட்டார்கள்.ஒரு குழந்தைய பாத்துக்கவே வழிய காணோம் இதுல ரெண்டாவது வேறயா என்று சலித்துக்கொள்ளும் என்னைப் போன்ற ஆட்களிடம் இப்பத்தான் ஆறு மாசம் லீவாமே என்று இழுத்து வாக்கியத்தை பூர்த்தி செய்யாமல் ஆவலோடு நம் முகம் பார்ப்பவரிடம் ஏழாம் மாசம் பிள்ளைய ஸ்கூல்ல  சேர்த்துட்டு நீங்க கூட இருந்து கவனிச்சிக்க  முடியுமா என்றே கேட்க தோன்றுகிறது! 

குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள்- தாத்தா பாட்டி அத்தை யாரோ ஒருவர்-  உள்ளனர் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் என்று வேலைக்கு செல்லும் ஒரு தாயிடம் கேட்டால் புரியும். வேலைக்காரியிடம் குழந்தையை விட்டு செல்லும் குடும்பங்களையே சென்னைப் போன்ற பெருநகரங்களில் பார்க்க முடிகிறது. வேலையாள் குழந்தையை பார்த்துக்கொள்வாள் சரி, வேலையாளை பார்த்துக்கொள்வது யார்?? 

சரியான வயதில் திருமணம் முடித்து குழந்தையையும் பெற்றுக்கொள்ள சொல்லி பெருசுகள் வலியுறுத்துவதில், இந்த ஒன்னே காலணா சமூகம் தங்களை கேள்வி கேட்கும் முன் தங்கள் கடமையை  முடித்துவிட வேண்டும் என்ற உண்மையை தாண்டி வேறு ஒரு அர்த்தமும் உள்ளது.அது வயதான காலத்தில் தங்களால் பேர பிள்ளைகளை வளர்க்க உதவ முடியாது என்ற அவர்களின் நியாயமான கவலையே ஆகும். தாய் தந்தையை முதியோர் இல்லத்திற்கு பத்தி விட்டவர்களை இதில் கணக்கில் கொள்ள வேண்டாம். 

எங்களை எல்லாம் எப்படி வளர்த்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.பெற்றோர்  இருவரும் ஆசிரியர்கள். வீட்டில் எப்போதுமே எங்களை கவனித்துக்கொள்ள ஊரிலிருந்து வரவழைத்த ஒரு பெண் இருக்கும். என் அக்காவுக்கு ஏழு வயதென்றால் எனக்கு இரண்டு வயது. எங்களைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயதிருக்கும். அது ஊட்டுவது தான் சாப்பாடு. எந்த நம்பிக்கையில் எங்களை விட்டு சென்றனரோ பெற்றோர் அந்த நம்பிக்கை இன்று எள்ளளவும் வேலையாள் மீது வைக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படி. பத்து வருடம் வீட்டில் சோறு போட்டு வளர்த்தவனே அந்த வீட்டு குழந்தையை பலாத்காரம் செய்வது,ஒரு தங்க சங்கிலிக்காக வீட்டு டிரைவர் குழந்தையை கொல்வது, நூறு இருநூறுக்காக குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு அனுப்புவது, குழந்தைக்கு காஃப் சிரப்பை ஊற்றிவிட்டு தங்கள் 'மற்ற' வேலைகளை கவனிப்பது...இப்படி எல்லாம் நடக்க கூட முடியுமா என்று பெற்றவர்கள் யோசித்து கூட பார்க்க முடியாத சூழலில் நம்மை வளர்த்து ஆளாக்கி கல்யாணமே கட்டிக் கொடுத்து விட்டார்கள் நம் பெற்றோர்கள்.  இத்தகைய குரூரமான சூழல் நம் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பது துரதிஷ்டமே! 

தாத்தா பாட்டி மீது குற்றச்சாட்டுகளும் உண்டு. நம்மை ஊரில் இல்லாத கெடுபிடிகளோடு வளர்த்துவிட்டு பேரப்பிள்ளைகளிடம் அநியாயத்திற்கு செல்லம் கொஞ்ச வேண்டியது. அதோடு நின்றால் பரவாயில்லை. நாம் நம் பிள்ளையை கண்டிக்க போக, குழந்தைக்கு என்ன தெரியும் அதை ஏன் திட்ற என்று வரிந்துக் கட்டிக்கொண்டு முன்னாடி நிற்பார்கள். தாத்தா பாட்டி செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்ற பரவலான கருத்து எல்லா இடங்களிலும் உண்டு. உங்க அப்பாவால தான் இப்படி பேசுறான் உங்க அம்மாவால தான் அப்படி ஆடறான் என்று தாத்தா பாட்டி கொடுக்கும் செல்லத்தினால் கணவன் மனைவியிடையேயும் மனஸ்தாபம் வரும். ஆனால் இப்போது குழந்தைகள் வளரும் சூழலில் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை . குழந்தை ஓரளவு வளரும் வரை அவர்கள் உடனிருப்பது ஆகப் பெரும் துணை. அந்த கொடுப்பினை இல்லை என்றால் தாயாவது குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டும் வரை உடனிருக்க வேண்டும். ஆனால் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் தான் பெருவாரியான குடும்பங்கள் பெருநகரங்களில் தத்தளிக்கின்றன. 

தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு, பிள்ளைகளுக்காக வாழ்ந்தது போதாது என்று பேரப்பிள்ளைகளுக்காகவும் மெனக்கட தயாராக இருக்கும் தாத்தா பாட்டிகளின் நடுவே சற்றே வித்தியாசமான தம்பதியரும் உள்ளனர். கல்யாணம் செய்து வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக சொல்லி  எதிலும் தலையிடாமல் இருப்பவர்கள், 
இனிமேல் தான் நாங்கள் எங்கள் வாழ்கையை வாழ வேண்டும் என்ற கோரிக்கையோடு ஊர் உலகத்தை சுற்றிப் பார்க்க கிளம்புபவர்கள்,கடைசி காலத்தில் தாங்கள் வாழ்ந்த ஊரிலேயே இருக்க ஆசைப்படுபவர்கள்....இப்படி ஒரு நியாயமான லிஸ்டும் உண்டு. 

தங்கள் வாழ்கையை இனிமேலாவது தாங்கள் விரும்பியபடி வாழ விரும்பும் அவர்களை நாம் இன்னமும் சார்ந்து இருந்து இம்சைப்படுத்தாமல் வாழவிடுவதும் நமது கடமை தானே? 

Monday, 10 February 2014

மெலூஹாவின் அமரர்கள்



THE IMMORTALS OF MELUHA ஆங்கிலத்தில் தான் வாசித்தேன்.ஆனால் தமிழில் இந்த புத்தகம் வந்திருப்பது ஆங்கிலத்தில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த பின்னரே தெரிய வந்தது. 
இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள் அவ்வளவாக என்னை ஈர்க்காத காரணத்தால் ஒரு சிறு தயக்கத்துடனே ஆரம்பித்தேன்.ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருக்கும் பட்சத்தில் எனக்கு கதா பாத்திரங்களின் ஆங்கில உரையாடல்கள் வடஇந்திய அக்சென்ட்டுடனே வாசிக்க முடிந்தது சற்று கவலையாகவே இருந்தது. 
ஆனால் முதல் இரண்டு பக்கங்களிலேயே மெலூஹா நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. 

சிவபெருமான் என்ற கடவுளை பூமியில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஷிவா என்ற ஒரு சாதாரண மனிதனாகவும் பார்வதி, தச்சன் என்று சிவபுராண கதாபத்திரங்களை பண்டைய சிந்து சமவெளி நாகரீகத்திலும்  ராம ஜென்ம பூமி அயோத்தியிலும் நேர்த்தியாக பின்னப்பட்ட கற்பனைக்  கதையில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். 

இமய மலையின் அடிவாரத்தில் வசிக்கும் குணா என்ற பழங்குடி இனத்தின் தலைவன் ஷிவா, அங்கு மற்ற இனத்தோடு அடிக்கடி ஏற்படும் சண்டைக் காரணமாக தனது பரிவாரங்களுடன் மெலூஹாவுக்கு அகதியாக புறப்படுகிறார். மெலூஹாவுக்குள்    அனுமதிக்கப்படும் முன்னர் குணா இனத்தவர் அனைவருக்கும் உள்ள நோய்கள் கண்டறியப்பட்டு, மருத்துவம் பார்க்கப்படுகிறது.அப்போது அனைவருக்கும் சோம ரஸம் என்னும் பானம் மருந்து என்ற பெயரில் அளிக்கபடுகிறது. அதைப் பருகியவுடன் ஷிவாவிற்கு கழுத்து நீலமாக மாறிப் போக அவரை நீலகண்டர் என பாவித்து மெலூஹாவின் தலைநகரான தேவகிரியில் உள்ள  சக்ரவர்த்தி தச்சனிடம் அழைத்துச் செல்கின்றனர். தாங்கள் இவ்வளவு  காலம் காத்திருந்தது இந்த நீலகண்டருக்காகத் தான் என அவரை கடவுளாகவே தொழுகின்றனர் மெலூஹாவினர்.  சூரியவம்சத்தை சேர்ந்த மெலூஹாவினர் சந்திரவம்சம் மற்றும் நாகா எனப்படுபவர்களின் 
 தாக்குதல்களிடமிருந்து  தங்களை காக்க வந்த கடவுளாகவே ஷிவாவை கொண்டாடுகின்றனர். ஷிவா உண்மையாகவே கடவுள் தானா,  சூரியவம்சத்தை காப்பாற்றினாரா இல்லையா சந்திரவம்சத்தினர் உண்மையில் செய்த மோசடி என்ன என்பதே மீதி கதை. 

ஷிவா என்ற கதாபாத்திரத்தை அனைவரும் வணங்கும் சிவபெருமானுக்கான நடனம், மரிஜுஅனா புகைத்தல்,தீயவற்றை அழிக்கும் ஆற்றல்....போன்ற குணங்களோடு கூட குற்ற உணர்ச்சி முதற்கொண்டு காமம், கோபம், காதல் என்று ஒரு சாதாரண மனிதனை போல உலவ விட்டிருப்பதில் வெளிப்படுகிறது அமிஷ் திரிபாதியின் அசத்தலான  கதைசொல்லும் திறமை.ஷிவாவை நீலகண்டராக ஊரே வணங்கும் போதும் அந்த போதை சற்றும் தலைக்கு ஏறாமல், நீல கழுத்தை கொண்டதாலேயே தான் கடவுளாகிவிட முடியாது என்று தன்னடக்கத்தோடு ஷிவா அமைதி காப்பதும், பல இடங்களில் பாராட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் நெளிவதும், சாமர்த்தியமாக போரில் வியூகம் அமைப்பதும், போர் முடிந்து குற்ற உணர்ச்சியில் யாரிடமும் பேசக்கூட முடியாமல் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று கண்ணீர்விட்டு அழுவதும்... ஷிவாவின் கதாபாத்திரம் படிப்படியாக உயர்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறது. 

சிந்து சமவெளி நாகரிகம், ராமபிரான் வரலாறு, அயோத்தியா, ஆன்மீகம்,நட்பு, காதல், துரோகம் பழிவாங்கல் ... என பல தளங்களில் சிரமமில்லாமல் பயணிக்கிறது கதை. பண்டைய சிந்துசமவெளி நாகரிகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்கை முறையையும் வெகு அழகாக விவரிக்கிறார் கதாசிரியர்.அதுவே ஒரு சில இடங்களில் 'ஓவர் டோஸ்' போல் ஆகிவிடுகிறது. கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஷிவாவை ஊர் ஊராக அலைய விட்டிருப்பது போல் ஒரு உணர்வு... நடுவில் வரும் இந்த தொய்வான நூறு பக்ககங்களை கடந்து விட்டால் கடைசி நூற்றி  ஐம்பது பக்கங்களும் செம விறுவிறுப்பு. ஷிவா சதியை (பார்வதியை) முதன் முதலில் பார்ப்பது,அவள்  பின்னாலேயே நம் வழக்கமான ஹீரோக்கள் போல தன்னை மறந்து போவது, பிக் அப் செய்வது, காதலில் உருகுவது, கல்யாணம் முடிப்பது  என இந்த காட்சிகள் அனைத்திலும் ஒரு வித சினிமாத்தனம் விரவிக்கிடக்கிறது. நமக்கு பிடித்த ஹிந்தி ஹீரோவை கற்பனை செய்து கொண்டு படித்தால் (ஹ்ரிதிக் ரோஷன் நன்றாக செட் ஆவார்!) , ஆன்மீக பாகம் தவிர்த்து இது ஒரு செம மசாலா மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்.

தெளிவான ஆன்மீக விளக்கங்களும், வரலாற்று குறிப்புகளும் தனி ஆவர்த்தனம் செய்யாமல்  கதையோடு பயணிக்கின்றன. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வட இந்திய பெயர்களுடன் வலம் வந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் கொடுத்து நினைவில் நிற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது கதைசொல்லியின் கைவண்ணம்!  

கதையின் பல இடங்களில் வரும் டாக்டர், வார் மஷீன்ஸ், டெரரிஸ்ட்  அட்டாக், ஹை ப்ரொபைல் டார்கெட், பாக்டரி  போன்ற வார்த்தைகள் இந்த கதை எந்த கால கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சோமரசத்தை உண்டவர்கள் இளமை மாறாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்வதும், சோமரசம் தயாரிக்க சரஸ்வதி நதிநீரைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது என்பதும், சோமரசத்தை  ஒரு தனி மலையிலே எக்கக்சக்க பாதுக்காப்புடன் தயாரிப்பதும்...கதாசிரியரின் அதீத கற்பனை என்பதா அல்லது கற்பனை வறட்சி என்பதா புரியவில்லை. 

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.முதல் புத்தகத்தை வாங்கும் போதே அடுத்த இரண்டு பாகங்களையும் சேர்த்து வாங்குவது நல்லது. முதல் பாகம் படித்து முடித்தவுடன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க பரபரக்கிறது மனது. 

Thursday, 23 January 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்




அது ஒரு அழகான குடும்பம். என் நெருங்கிய  தோழியின் உடன் பிறந்த அக்காவின் குடும்பம். என் தோழிக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா. அக்கா திருமணம் முடித்து கணவரோடு ஹோசூரில் செட்டில் ஆகி இருந்தார். அக்காவுக்கு மின் வாரியத்தில் எஞ்சினியர் வேலை. அக்கா வீட்டுகாரருக்கு பெங்களூருவில் சாப்ட் வேர் வேலை. அடிக்கடி வெளி நாடுகளுக்கும் சென்று வருவார். இரண்டு மகன்கள்.அக்கா அப்படி ஒரு அழகு. பன்னீர் புஷ்பங்கள் காயத்ரி மாதிரியே இருப்பார்.  அந்த கணவன் மனைவியின் அன்யோநியத்தை பார்க்கவே ஆசையாக இருக்கும். மாமாவின்(அக்கா கணவர்) நகைச்சுவை உணர்வால் வீடே கல கலவென இருக்கும்.

 தோழிக்கு அப்பா இல்லை.அப்பா இறந்த பின் அம்மா அக்கா வீட்டோடு தங்கி பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொண்டார். அண்ணனோ எந்த வித கவலையுமின்றி அவருடைய மாமனாரின் குடும்பத்தோடு ஏதோ ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தார். தாத்தா, பாட்டி எழவு, அப்பா எழவு என்று துக்கம் விசாரிக்க மட்டுமே இந்தியா வருவார். கோடை விடுமுறையில் நாமக்கலுக்கு ஏதோ நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு காரில் வந்தனர் அக்கா குடும்பத்தினர். 
கோவிலை சென்றடைவதற்கு  முன்னரே ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் அந்த கோர விபத்து நிகழ்ந்தது.  ஒரு லாரிக்கு பின்னால் சென்ற இவர்கள் காரை ஓவர் டேக் செய்ய முயன்ற பேருந்து ஒன்று, எதிரில் வேறேதோ ஒரு லாரி வர , இவர்கள் காரின்  பின்புறத்தில் கடுமையாக மோதியுள்ளது.  பின் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய பையனுக்கும்   அக்காவுக்கும் மட்டும் அடி. பையனுக்கு முகத்தில் அடி. அக்காவுக்கு எந்த காயமும் இல்லை. பின்னால் பேருந்து இடித்ததில் முன் சீட்டில் இடித்து அதே வேகத்தில் அப்படியே பின்னாடி சாய கழுத்து எலும்பு முறிந்து விட்டது. 

இன்ஸ்டன்ட் கோமா.  எந்த காயமுமே இல்லாமல் ஹெட் இஞ்சுரி, கோமா. டாக்டர்கள் கொடுத்த நம்பிக்கையின் பேரில் காத்திருந்தனர் குடும்பத்தினர். பிரைன் ஸ்டெம் அடி வாங்கி இருந்ததால் ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்க மாட்டார்.நிச்சயம் தேறி விடுவார் என்று நம்பிக்கை துளிர் விடும் போது அடுத்த நாள் படு மோசமாக போயிருக்கும் நிலைமை.  மாமாவும் , என் தோழியின் கணவரும்,  இரவு பகல் பாராமல் பழியாய் கிடந்தனர் மருத்துவமனையில். சேலத்திலிருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றினர். ஒரு வாரம் ஆயிற்று. ஹெட் இஞ்சுரி கேஸ்கள் என்ன ஆகும் என்று கணிப்பது மிகவும் கடினம். தலையில் அடிப்பட்டு நன்றாகவே இருப்பவர் திடீரென கோமாவுக்கு போவதும் கோமாவில் இருந்தவர் அடுத்த நாள் எழுந்து உட்கார்ந்து காபி குடிப்பதும் மனித மூளையின் பிடிபடாத ஆச்சர்யங்கள். அவ்வாறு ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டால் நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை கடவுளாகவும் , மருத்துவர் யாமறியேன் பராபரமே என வானத்தை நோக்கி கையை தூக்குவதும் சினிமாவில் அல்ல, நிஜத்தில் நிறையவே பார்க்கலாம்.

அதே வாரத்தில்  ஒரு காலை வேளையில் நண்பன் போன் செய்தான் அக்கா போயிடாங்க என்று. ஆக்சிடென்ட்  கேஸ் ஆதலால்  பிரேதப் பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். மாமா பித்து பிடித்தவர் போல் இருந்தார். சின்ன பையனுக்கு  விவரம் தெரியவில்லை சரியாக. கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தான். பெரியவன் ஒரு மூலையில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். தோழியின் அண்ணன் வழக்கம் போல எழவுக்கு வந்திருந்து காரியத்துக்கு கூட காத்திராமல் அடுத்த  நாளே கிளம்பிவிட்டான். 
ஒரு வழியாக நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து முடிந்தன. 
மாமாவின் குடும்பம் பெரிய குடும்பம். ஐந்து அண்ணன்கள். இவர் தான் கடைக்குட்டி.மாமாஅண்ணன்கள் குடும்பம் அங்கேயே டேரா போட்டிருந்தன. பதினோராம் நாள் காரியம் முடித்த அடுத்த நாளே மனசாட்சியே இல்லாமல் அவருக்கு மறுமண பேச்சை ஆரம்பித்தனர். 

கொதித்து போய்விட்டனர் தோழியின் அம்மாவும் அவள் கணவரும்.  மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் மாமா.தோழியும் அவள் அம்மாவும் அவர்களோடு சண்டை போட்டு ஒரு வழியாக இந்த டாபிக்கை கைவிட செய்தனர். தோழியின் அம்மா அங்கேயே தங்கி குழந்தைகளை கவனித்து கொண்டார். மூன்று மாதம் கழித்து மறுபடியும் பூதம் கிளம்பியது.  இந்த முறை மாமா ஆரம்பித்தார். 
தோழி அவள் கணவரோடு தன் அக்கா வீட்டிற்கு சென்று மாமாவோடு பேசினார்.  பெரியவன் இப்போது +2.  அவன் படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படி கேட்க, மாமா ஒத்துக்கொள்ளவில்லை. இப்ப கல்யாணம் பண்ணலேன்னா நாளைக்கே நான் செத்து போய்டுவேன் என்ற ரீதியில் பேசவே, தோழியும் அவள் கணவரும் சரி குழந்தைகளை தங்களிடம் கொடுத்துவிடுமாறு கேட்டனர்.  பேச்சு வளர்ந்து வளர்ந்து கடைசியில் கைகலப்பில் முடிய... மாமா தன் இறந்த மனைவியின் சொந்தபந்தங்கள் யாரும் வீட்டு பக்கம் காலடி வைக்க கூடாது என அனைவரையும் விரட்டி அடித்தார். தோழியின் அம்மா மட்டும் தன்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை என குழந்தைகளுக்காக அங்கேயே தங்கி விட்டார்.ஒரு தாய் இல்லாவிட்டால் எப்படியெல்லாம் ஒரு குடும்பம் அலைகழிக்கப்படுகிறது என்பதை பார்த்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் , அக்காவுடன் பணி புரிந்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ,மற்ற சொந்தபந்தங்கள் என அனைவரும் பார்த்து நொந்து போகாதவர்களே இல்லை.இந்த நொந்த லிஸ்டில் நானும் சேர்த்தி. தோழிக்கு ஆதரவாய் இருப்பதை தவிர வேறு எந்த ஆணியையும் எந்நாளும் என்னால் கழட்ட முடியாது. 

எனக்கு உள்ள ஆதங்கமே பதினைந்து வருடம் குடும்பம் நடத்திய மனைவிக்கு மாற்று மூன்றே மாதங்களில் ஒரு ஆணுக்கு தேவைப்படுகிறதா? இது கடந்த  ஒரு  வருடத்தில் நான் பார்க்கும் மூன்றாவது நிகழ்வு . இந்த  மாமாவே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கே உள்ளது மற்ற இரண்டு ஆண்களும் செய்தது . ஒருவர், மனைவி புற்றுநோயால் இரண்டு வருடம்  படாத பாடுப்பட்டு இறந்த மூன்றாவது மாதம் மேள தாளத்துடன் பத்திரிக்கை அடித்து தடபுடலாக திருமணமே முடித்துவிட்டார். இவர் ரொம்ப வெகுளி,விவரமே பத்தாது என்று பல முறை அவர் மனைவி சொல்ல கேட்டிருக்கிறேன்! மற்றொருவர் மனைவிக்கு  அடிக்கடி தலைவலி என்று டெஸ்ட் செய்யப்போய் மூலையில் கட்டி என்று கண்டறியப்பட்டு, உடனடியாக அறுவைசிகிச்சை செய்த பின் இரண்டு நாட்களில் இறந்துவிடுகிறார். எல்லாம் ஒரே வாரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட, இரண்டாவது மாதம்  ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டார்.  இந்த இருவருக்குமே குழந்தைகள் இல்லாமல் இல்லை. முதலாமவருக்கு கல்லூரியில்  படிக்கும் பையன்,இரண்டாமவருக்கு  பள்ளிக்கு செல்லத் தொடங்கியுள்ள இரண்டு நண்டு சிண்டுகள். இத்தகைய அவசர கல்யாணங்கள் எல்லாம் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளத்தான் என்று சொல்பவர்களை தூக்கிப்போட்டு யோசிக்காமல் சங்கிலேயே மிதிக்கலாம். இவர்களுக்கென்று,  கல்யாணம் ஆனால் போதும் என்று  தள்ளி விடப்படும் பெண்களும்,தோஷம் என்று மணம் தட்டிப்போன முதிர்கன்னிகளும் கிடைக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க இதைப்  போன்ற ஆண்கள் திருமணம் செய்யும் வேகத்தை பார்த்தால் இரண்டு விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கின்றன. ஒன்று,ஆண்கள் இந்த அளவுக்கா காய்ந்து போய் இருக்கிறார்கள் ? இரண்டாவது, மனைவியின் இடத்தில் வேறொருவரை ஏதோ வீட்டு வேலைக்கு ஆள் மாற்றுவதை போல ஜஸ்ட் லைக் தட் ஏற்றுக்கொள்ளும் திறமை. எல்லா ஆண்களையும் குறை சொல்ல வரவில்லை என்றாலும் இவர்களும் சராசரி குடும்பஸ்தனாக இருந்தவர்கள் தானே! யாரும் மனைவி சீக்கிரம் செத்து போய்விட வேண்டும் என்று வேண்டிக்  கொண்டிருந்த ஆசாமிகளும் அல்ல. சட சடவென தனது தேவைக்கேற்ப வாழ்கையை மாற்றி அமைத்து,அதை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் மனநிலையும் பார்த்து அசந்து போனேன்.

ஒரு இழப்பிலிருந்து மீண்டு வர எவ்வளவு காலம் ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும்? தெய்வாதீனமாக தப்பிப்பிழைத்த   ஒரு விபத்திலிருந்து மீண்டுவரவே ஒரு மனிதனுக்கு பல மாதங்கள் ஆகிறது. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒன்றாக படுத்து உறங்கி பிள்ளை பெற்று சுக துக்கங்களில் ஆதரவாய் நின்று, ஒரு ஆணின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிற ஒரு பெண்ணின் இழப்பை ஈடு செய்ய மூன்று மாதம் போதுமா? இதில் பெண்ணீயம் ஆணீயம் என்று எந்த ஈயம் பித்தளை பற்றியும் நான் பேசவில்லை. மனைவிகளின் மரணங்களைவிட எனக்கு அவர்கள் கணவர்களின் செயல்களே கடுமையான அதிர்ச்சியை தருகின்றன என்பதையே சொல்ல வருகிறேன்.

பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை என்று பல நூற்றாண்டு பழம் பல்லவியை இன்றும் வெள்ளித்திரையில் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் இந்த 'adaptive nature ' குறித்து எதிலும் கோடிட்டு கூட காட்டப்படுவதாக தெரியவில்லை.   
 நண்பிகளிடம் இந்த தலைப்பை பற்றி பேசிய பொழுது அவர்கள் தனக்கு தெரிந்த  கதைகளை கூறினார். அதே மனைவி அகால மரணம் கணவர் மூன்றே மாதத்தில் மறுமணம் கதைகள். ஆணோ பெண்ணோ வாழ்க்கைத்துணை இறந்த பின் வேறு துணையே தேட கூடாது, இறந்தவரையே நினைத்து கடைசி வரை உருகி உருகி சாகவேண்டும் என்ற லூசுத்தனமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஆண்களின் இந்த மறுமண வேகம் தான் ஆயாசத்தை தருகிறது. 

'கணவனை இழந்தோருக்கு காட்டுவதற்கு இல்'... மனைவியை இழந்தோருக்கு?உடனடியாக இன்னொரு பெண்ணை காட்டினால் போதும் போல! 



Monday, 20 January 2014

மாகடிகாரம்




தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் என்ற 'டாக் லைனுடன்' சிறுவர்களுக்கான புத்தகம்.  
தீமன் என்ற பத்து வயது விடலை சிறுவன் தான் கதையின் நாயகன். ஏட்டறிவோடு நின்று விடாமல் கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். தன் குடும்பத்தாருடன் ஏலகிரி மலைக்கு செல்ல, அவனை இருட்டுவதற்குள் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு திரும்பிவிட சொல்லி, மலையில் தனியே உலவ அனுமதிக்கிறார் தீமனின் அப்பா. அங்கு உள்ள ஒரு காட்டில் ஹெர்குலஸ் என்னும் தாத்தாவை சந்திக்கிறான் தீமன்.  அவர் தீமனை ,தான் இவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருந்த வாரிசாக கருதி மாகடிகாரம் பற்றிய உண்மையை அவனிடம் சொல்கிறார். அடுத்த ஐம்பது வருடங்களுக்கு அதற்கு சாவி கொடுக்க வேண்டிய பொறுப்பையும் அவனிடம் ஒப்படைக்கிறார். மறுநாள் காலையே தீமனை அழைத்துச் செல்ல யூக் என்ற இளைஞன் வருகிறான்.  பெற்றோரிடம் கூட சொல்லாமல் யூக்குடன் நீர்மூழ்கி கப்பலில் பயணிக்கிறான் தீமன். மரியானா ட்ரன்ச் என்ற இடத்திற்கு சென்று மாகடிகாரதிர்க்கு கொடுக்க வேண்டிய சாவியை ஒரு கோட்டையிலிருந்து எடுத்துக்கொண்டு மோன லோ ஆ என்ற இடத்தை சென்றடைகிறான்.  

அங்கு மடாகஸ் என்ற மற்றொரு வெள்ளை தாடி தாத்தாவையும் இன்பா என்ற சிறுவனையும் சந்திக்கிறான். ஹெர்குலசிற்க்கு தீமனைப் போல மடாகசிற்க்கு இன்பா தான் வாரிசு. தீமனை மாகடிகாரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை விளக்குகிறார் மடாகஸ். அன்று இரவே யாருக்கும்  தெரியாமல்  யார்  துணையும் இன்றி மாகடிகாரம் இருக்கும் இடத்திற்கு வந்து அதன் செயல்பாட்டை நிறுத்திவிடுகிறான் தீமன் . அடுத்த நாள் டிசம்பர் மாதம் இருபத்தியோராம் நாள், 2012 ஆம் ஆண்டு. உலகம் அழியப்போவதாக மாயன் காலேண்டர் குறித்த நாள். கடிகாரம் நின்று போனால் சுனாமி, பூகம்பம் போன்ற அசம்பாவிதம் உலகில் நிகழும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையை முந்தின நாள் இரவே கடிகாரத்தை நிறுத்தி முறியடிக்கிறான் தீமன். 

கடிகாரத்திற்கும் இயற்கை அசம்பாவிதங்களுக்கும் என்ன அறிவியல் தொடர்பு இருந்து விட முடியும், இந்த கேள்வியை ஏன் இவ்வளவு நாள் யாரும் கேட்கவில்லை என்பதோடு முடிகிறது மாகடிகாரம். அறிவியலுக்கு அடிப்படையே ஏன் எதற்கு எப்படி தானே என்று கதையின்  முடிவில் வரும் ஒற்றை வரியே கதையின் சாராம்சம். என்னை கவர்ந்த வரியும் கூட! 
........................................
அம்புலிமாமா, தெனாலிராமன், விக்கரமாதித்யன், மாயாவி .கோகுலம், பூந்தளிர் இவற்றோடு நின்று விட்டது எனது குழந்தைகளுக்கான சிறுவயது தமிழ் வாசிப்பு.  இது நான் படிக்கும் குழந்தைகளுக்கான முதல் தமிழ் நாவல். குழந்தைகள் வாசிப்பிற்கு ஏற்றார் போல தெளிவான,இயல்பான,எளிமையான நடை. ஆனால் சுலபமாக புரிந்துக்கொள்ள கூடியதா - கதையும் கதைக்களமும் என்பதில் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் டௌட்டு... 

விகடனின் 2013 ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய விருதை வாங்கி இருக்கும் இந்த கதை நான் எதிர் பார்த்த அளவு என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். நான் எழுதியுள்ள இந்த கதையின் சுருக்கம் எப்படி எந்த வித டெஸ்க்ரிப்ஷனும் இல்லாமல் மொட்டையாக உள்ளதோ கதையும் எனக்கு அப்படி தட்டையாக உள்ளாதாகவே பட்டது.எந்த ஒரு திருப்பமோ வளைவோ இல்லாத சென்னை பெங்களூரு ஹைவே போல ஒரே சீராக நேராக பயணிக்கிறது. . மரியானா  ட்ரன்ச் ,மோன  லோஆ , நீர் மூழ்கி கப்பல் போன்ற அறிவியல்/ பொது அறிவு சார்ந்த செய்திகள் இருந்தாலும் ஏனோ ஏலகிரி மலையை ஜப்பான் அருகிலிருக்கும் மரியானா  ட்ரன்ச்சோடு   இணைத்துப் பார்க்க முடியவில்லை. கதை நெடுக கற்பனை வறட்சி. குழந்தைகளுக்கு என்று எழுதும் போது அவர்களுடைய கற்பனைக்கு தீனி  போடுவது மிகவும் அவசியம். அது சாதாரண விஷயமும் அல்ல. ஒரு தீவைப் பற்றி விவரிக்கும் போதோ ஒரு ஆழ் கடல் பயணத்தைப் பற்றி சொல்லும் போதோ ஒரு எழுத்தாளரின் கற்பனைக்கு எவ்வளவு வேலை இருக்க வேண்டும்? நம்மை அந்த உலகத்துக்கே அழைத்து சென்றிட வேண்டாமா? நாமே கற்பனை செய்து படிப்பதற்கு கூட நல்ல கதை களம் இருந்த போதும் அதை விவரிக்கவோ வர்ணிக்கவோ இல்லை கதாசிரியர். ஒருவேளை குழந்தைகளுக்கான இலக்கியம் இப்படி தான் இருக்க வேண்டுமோ?கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு இன்னும் நல்ல அறிமுகம் கொடுத்திருந்தால் ஒன்றி படித்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை.  ஒரு புத்தகத்தை ஒன்றிப் போய் வாசித்தால் எனக்கு அந்த கதையிலிருந்து வெளியே வரவே சில நாட்கள் ஆகும்.படித்து முடித்த பின்னும் மனதுக்குள் ரீ டெலிகாஸ்ட் மாதிரி கதை ஓடிக்கொண்டே இருக்கும். இந்த கதையை படித்து முடித்து கதை சுருக்கம் எழுதும் போதே மறுபடி புத்தகத்தை எடுத்து ஒரு முறை பார்த்தேன். அவ்வளவு தான் என் மனதில் பதிந்திருந்தது. 


குழந்தைகளுக்கு தெரியாத சில முக்கிய இடங்களின் பெயர்களை சொல்வதற்கென்றே இந்த கதை எழுதப்பட்டது போன்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. இப்படி எழுதினால் தான் குழந்தைகளுக்கு வாசிக்க முடியும் என்ற ஏதாவது வரையறைக்குட்பட்டு  எழுதப்பட்டதா இந்த மாகடிகாரம் ? தெரிந்தவர்கள்  புரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். 
விகடன் விருது தவிர்த்து, பேஸ் புக்கில் ஆளாளுக்கு கொடுத்த லிஸ்டில் இந்த புத்தகத்தை நிறைய பேர் சிபாரிசு செய்திருந்தனர். விழியன் மேலும் பல குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். நான் அவற்றையும் படிக்க முடிவெடுத்துள்ளேன். குழந்தைகளுக்கான இலக்கியம் இப்படி தான் இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள ஆவல். எனக்கு இதை போன்ற வேறு யாரவது எழுதிய குழந்தை இலக்கியங்கள் தெரிந்தால் பரிந்துரை செய்யவும்.  




Monday, 13 January 2014

பொங்கல் போனஸ்.




இத்தனை  காலமாய் சென்னையிலேயே இருந்தாலும் ஒரு முறை கூட சென்னை உயர்நீதி மன்றத்தின் உள்ளே சென்றதில்லை.  அதன் அழகை வெளியில் இருந்து ரசித்ததோடு சரி. அண்மையில் ஒரு வழக்கு விஷயமாக உயர்நீதி மன்றத்துக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியது. 

இது அரசுப்பணி பதவி உயர்வு குறித்த வழக்கு. சர்வீஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் நடந்தது . மிக அழகான வேலைப்பாடமைந்த உயரமான கூரை. சுமார் பத்தடி உயரத்தில் நீதிபதி அமரும் இருக்கை. டர்கி டவல் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள் மெத்துமெத்தென்று. நீதிபதி இருக்கைக்கு பின்னே உள்ள சுவர் முழுக்க வண்ணமயமான கண்ணாடி. அதன் மேல்  சூரிய ஒளி படும் போது இன்னும் அழகாக ஒளிர்ந்தது கலர் கண்ணாடி. அந்த காலத்திய வேலைப்பாடமைந்த பெரிய பெரிய மர நாற்காலிகள் இன்றைய வார்னிஷுடன் பளபளத்தன. அந்த உயரமான கூரையிலிருந்து நீண்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளை  பெயிண்ட்  அடித்த பழைய மின்விசிறிகளையும் ஏசி பத்தாது என்று  சுழலவிட்டிருந்தார்கள். மின்விசிறி கூட ஒழுங்காக ஓடாத கோர்ட்டை பார்த்திருந்த  எனக்கு இது ஒரு 'சொபிஸ்டிகெடெட்' வொர்கிங் அட்மாஸ்பியராக  பட்டது.'உயர்' நீதி மன்றம் அல்லவா! 

நீதிமன்றத்துக்கு போனது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு ஸ்டே  வாங்குவதற்கு .சிலரின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப் போகும் வழக்கு.  மனதில்  இருந்த கலவரத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்  இத்தனையும் பார்த்து ரசித்துக்  கொண்டிருந்தேன் . 
அன்று சுபமுகூர்த்த தினமாக ஏதோ வழக்கறிஞர்கள் வேலைக்கு வராமல் போராட்டம் வேறு- அதாவது கறுப்பி அங்கி அணிந்து வாதிடமாட்டார்கள் என்று சொன்னார்கள். இன்று  வழக்கு நடக்கா விட்டால் எங்கள் நிலைமை  ரொம்பவே கவலைக்கிடம்.நம்ம ராசில தான் எப்பவுமே சனி பகவான் கல்லாச கலசலா பாட்டுக்கு சிம்புவுக்கு இணையாக தரையில் படுத்து படுத்து எழுந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்ததால் எல்லா விஷயங்களுமே கடைசி நேரத்தில் கழுத்தை நெரிப்பவையாகவே இருந்தன.

இந்த போராட்டத்தை சாக்கு சொல்லி எங்கள் வக்கீல் அவர் வராமல் அவரது ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார். அந்த வக்கீலம்மாவோ செத்தவன் கையில வெத்தல பாக்கு குடுத்த மாதிரியே  ஜீவனே இல்லாமல்  எங்கள் கேஸ் கட்டை கையில் வைத்திருந்தது. நேர்ந்து விட்ட ஆடு மஞ்சள் தண்ணிக்கு சிலிர்ப்பதைப் போல திடீர் திடீரென விழித்துக் கொண்டு எங்களை கேள்வி கேட்டார். அந்த அம்மாவை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி ஏந்திரு அஞ்சலி  ஏந்திரு என்று கத்தினாலும் பெரிய ரியாக்ஷன் எதிர்பார்க்க முடியாது  போல் தோன்ற அவரோடு  பேசவே எரிச்சலாக இருந்தது. 

'எப்போ மேடம் கேஸ் ஆரம்பிப்பாங்க?'என்று வெள்ளந்தியாக எங்க அஞ்சலி பாப்பாவிடம் கேட்டுத் தொலைக்க , 'நடந்துட்டு தான் மேடம் இருக்கு, நமக்கு முன்னாடி இன்னும்  ஏழெட்டு ஐட்டம் தான்'  என்று அவர் சொன்ன பிறகு தான்  நீதிபதியை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
(சட்டத்தில் ஐட்டம், ப்ரேயர், கேஸ் என்பதற்கெல்லாம் சரியான முறையான அர்த்தம் உண்டு ). 
 'இட்ஸ் கிவென் இன் பேஜ் செவென் பாரா டூ மை லார்ட் ' என்று ஒரு பக்கம் சத்தம் வர, எதிர் தரப்பு 'பேஜ் த்ரீ லாஸ்ட் லைன் மை லார்ட்' என்று சொல்ல... ஜட்ஜ் எந்த பக்கத்தையும் திருப்பாமல் மசூதியில் பாடம் செய்பவரைப் போல  ஏதோ முணுமுணுத்தபடி கேஸ் கட்டை கீழிருக்கும் அம்மாவிடம் கொடுத்து விடுகிறார். அம்புட்டுத்தேன்.
ஒவ்வொவொரு கேசுக்கும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள். இரு தரப்பு வக்கீல்களும் அன்று கேஸ் முடிந்து விட்டாதாக கிளம்பி விடுகிறார்கள். 

ஒரு பக்கம் ஏதோ ஒரு வழக்கு நடக்க அதை சட்டையே செய்யாமல் காமா சோமாவென வக்கீல்கள் கும்பலாக நின்று அவர்களுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.நீதிபதி பேசுவது சுத்தமாக கேட்க வில்லை.  சர்வீஸ் வழக்குகள் பலருடைய வாழ்கையை நிர்ணயிப்பவை. அரசு பணியில் தவறாக மாற்றலானவர்கள், நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வை பெற முடியாதவர்கள்,உத்தியோகத்தை இழந்தவர்கள்,டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் ... என அரசுப் பணியில்  நியாயம்  தேடி வரும் வழக்குகளை, எத்தனையோ குறைகளை நிவர்த்தி செய்து நீதி கிடைக்கச் செய்யும் இடமாகவே நான் அறிந்துள்ளேன். ஆனால் இங்கு நடப்பவை அனைத்தும்  என் அறிவுக்கு எட்டிய  வரை அந்த எண்ணத்தை ப்ரீத்தி மிக்சியை விட வேகமாக தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்தன. 
எங்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
நிச்சயம் நான் சினிமாவில் இருப்பதைப் போன்ற ஒரு செட்-அப்பை எதிர்பார்த்து நீதி மன்றத்துக்கு வரவில்லை.  ஆனால் பேசும்படம் போல் ஒரு ஸ்க்ரீன்ப்ளேயை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இதைப் போன்ற சர்வீஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒரு நாளைக்கு 150 நடக்குமாம். கேட்கவே உச்சி குளிர்ந்தது. ஒரு மனிதரால் எப்படி ஒரு நாளைக்கு 150விதவிதமான வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க முடியும்? முந்தைய நாளே சம்மந்தப்பட்ட   பார்ட்டியை 'பார்த்திருந்தாலும்'  வழக்கை பற்றி வாசித்து இருந்தாலும்  ஞாபகம் இருக்குமா, தீர்ப்பை முன்பே தீர்மானிக்காமல் இருந்தால்? ஸ்டே வாங்குவதர்க்கெல்லாம் நீதிபதியை ''தெரிந்திருந்தால்'' போதும், வாதிட ஏதும் கிடையாது  என்பது சட்ட உலகில் உலவும் ஒரு பொதுவான கருத்து. என்ன கண்றாவியோ திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜாங்கிரி தரப் போகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. 

இவ்வளவு பெரிய அறையில் ஏன் (நீதிபதிக்கு மட்டுமாவது )ஒரு மைக் வைக்க கூடாதா? நீதிபதியும் வக்கீல்களும் என்ன பேசுகிறார்கள் என்று எவ்வளவு அருகில் போய் நின்றும் தெளிவாக காதில் விழவில்லை.நானாகவே நிறைய அனுமானித்து ஃபில் இன் தி ப்லான்க்ஸ் செய்துக்கொண்டிருந்தேன். சரி நமக்கு தான் ரெண்டு ஸ்பீக்கரும்  அவுட் போல என்று எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டிருக்கையில் திடீரென எனக்கு தெரிந்த பெயர்களாக வாசிக்கப்பட... அட நம்ம கேஸு! எங்கள் அஞ்சலி பாப்பா  சடாரென விழித்துக்கொண்டு ஏதோ சொல்ல நீதிபதி ,இப்படி ஒரு ஜீவன் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருப்பதை கவனிக்க கூட இல்லை! எதிர் தரப்பு வக்கீல் பேசியதையும் சரியாக கேட்டதாக தெரியவில்லை. மற்ற எல்லா கேஸ்களைப்  போலவே முன்பே முடிவு செய்திருந்த தீர்ப்பை வழங்கி சாரி முனகி கேஸ் கட்டை தூக்கிப் போட்டார். 

மற்ற வழக்குகளைப் கவனித்த  பொழுதே ஓரளவு எனக்கு எங்கள் தீர்ப்பு தெரிந்திருந்தது. அதற்காக பெரிய ஏமாற்றம் எல்லாம் இல்லை என சப்பைக்கட்டு கட்டமுடியாது.நொறுங்கிப் போய் தான் வெளியே வந்தோம். அந்த இரண்டு நிமிடங்கள் எங்கள் வாழ்கையையே புரட்டி போட போவதன் தீவிரத்தை உணர நீண்ட நேரம் ஆனது. இந்த வழக்கிற்காக செலவிட்ட கிட்டத்தட்ட ஒன்றரை வருட உழைப்பின் பலனை இரண்டே நிமிடங்களில் இழந்துவிட்டிருந்தோம்.நீதி மன்ற அறைக்குள் இல்லாமல் போயிருந்தது நியாயத் தராசை  ஏந்திய நீதிதேவதை சிலையும் , காந்தி புகைப்படமும் மட்டும் அல்ல(ஆமா ஏன் இல்ல? சினிமால இருக்கே..)  என்பதை ஏற்றுக்கொள்ள தடுமாறிக்கொண்டிருந்தோம்.  

அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை சாமானியர்கள் சிலர் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் பொழுது 'என்ன காரணத்திற்காக நிறுத்த சொல்கிறீர்கள்?'என்ற அடிப்படை கேள்வி கூட  எழவில்லை நீதிபதியிடமிருந்து! பதவி, அதிகாரம்,பணத்திற்கு முன்னால் சாமானியனுக்கும் நீதிக்கும் சம்பந்தமே இல்லை. அரசுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளும், போடப்படும் வழக்குகளும் வெற்றி அடைந்ததாக சொல்லப்படும் ஒற்றைப்படை சதவிகித புள்ளிவிவரம் எந்த காலத்திலும் மாறாது போல.  சரி,அதற்காக வாழ்கை அப்படியே நின்று விடுவதில்லையே! நமக்கு பிடிக்க வில்லை என்றாலும் நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் அடுத்த நாளில் விட்டுவிடுகிறது  பாழாய்ப்போன காலம்! 

நடக்க  கூடாது என்று நினைத்த கலந்தாய்வும் மறுநாள் நடந்தேற நமக்கு ஆப்பு தலை  வாழை இலையில் படையல் போட்டு ஐஸ் கிரீம் டெஸ்ஸர்ட்டோடு பரிமாறப்பட்டது. அரசுப்பணியை பொறுத்த வரை ஆப்பை கூட இளித்துக்கொண்டே வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஆப்பு கூட கிடைக்காது. காலி சட்டியும் அகப்பையும் மட்டும் கொடுத்து ருசியாக சமைக்க சொல்லுவார்கள் இல்லையேல்  உயர் அதிகாரிகள் நாம் உயிரோடு இருக்கும் போதே  நம்மை மார்ச்சுவரிக்கு அனுப்பி விடுவார்கள்!  

பொங்கலுக்கு இப்படி ஒரு போனஸ்! சரி நடப்பது நடக்கட்டும்.... 

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! 

Monday, 30 December 2013

க்ராவிடி


 

3D யில் பார்க்கத்தவறிய படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.அதனால்  ஹோம் தியேட்டரில்... 

படம் ரிலீசானவுடன் வந்த சுடச்சுட விமர்சனங்களை படித்து,ரசித்து,  அலசி ,ஆராய்ந்து ,கழுவி ஊற்றி முடிய பின் எல்லோரும் கிட்டதட்ட படத்தை மறந்தே போய்விட்ட நிலையில் இப்போது தான் இந்த படம் பார்க்கும் வாய்ப்பே எனக்கு அமைந்தது. 
அஸ்ட்ரோநோமி எனப்படும் விண்வெளி சம்பந்தமான சயின்ஸ் அறிவு உள்ளவர்கள் இந்த படத்தை ஒரு டெக்னிகல் குப்பை என்று விமர்சித்து இருந்தாலும் ஒன்றரை மணிநேரம் விண்வெளியில் மிதந்த , பறந்த, திக்கற்று அலைந்த உணர்வை பெற்றவர்களே அதிகம் என்று நம்பலாம்.ஏனென்றால் இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மற்றும் ஆஸ்கார் அவார்ட் லிஸ்டில் ரிசர்வ் செய்யப்பட்டுள்ள இடமும் அப்படி! 

படத்தில் இல்லவே இல்லாத ஒன்றைப் பற்றி தான் படத்தின் தலைப்பு சொல்கிறது- புவி ஈர்ப்பு. படம் முழுக்க முழுக்க அண்டவெளியில் நடக்கிறது.படத்தில் மொத்தமே 5 கதாபாத்திரங்கள் தான். அதில் நாம் படத்தில் பார்ப்பவை மூன்றே கதாபாத்திரங்கள்.அந்த மூன்றில், ஒருவர் இறந்த பின்பு ஓட்டை விழுந்த முகத்தையும்  மற்ற இருவரும் உயிரற்று மிதப்பதையும் மட்டுமே பார்க்கிறோம். வேறு எந்த ஜீவராசியும் கடைசி வரை கண்ணில் படுவதில்லை,படம் முடியும் போது வரும்  ஒரு சிறிய தவளையைத் தவிர. 

கதை இவ்வளவு தான்- பூமிக்கு மேலே 600 கி மீ தொலைவில் விண்வெளியில் சுற்றிகொண்டிருக்கும் ஒரு சாட்டிலைட்டின்  ஹப்பெல் (Hubble )டெலஸ்கோப்பினை ரிப்பேர் செய்ய   எக்ஸ்ப்ளோரர் 
 எனப்படும் விண்கலத்தில் வருகிறார்கள் டாக்டர் ரயான் ஸ்டோன்( Sandra Bullock),மிஷன் கமாண்டர்  மாத்யூ கொவல்ஸ்கி(George Clooney) மற்றும் அவரது மூன்று பேர் அடங்கிய குழு.

ரயான் ஸ்டோன் ஒரு மெடிக்கல்-எஞ்சினியர் (என்ன படிச்சிருப்பாங்க?? சரி விடுங்க, நமக்கு எதுக்கு). எக்ஸ்ப்ளோரர் விண்கலத்திற்கு வெளியே நின்று டெலஸ்கோப்பை ரிப்பேர் செய்துக் கொண்டிருக்க,கொவல்ஸ்கி முதுகில் ஒரு ஜெட் பாக்கை மாட்டிக்கொண்டு பறந்த படியே பாட்டு கேட்டுகொண்டே விண்வெளியில் இருந்து பூமியை ரசித்த வண்ணம் தொணதொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறார். திடீரென,  ரஷ்ய சாட்டிலைட்  ஒன்று வெடித்து சிதறியதால் அதன் துகள்கள் (shrapnel )படுவேகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் வருவதாக தகவல் வர விண்கலத்திற்கு வெளியே இருப்பவர்களை உடனடியாக உள்ளே வரும்படி அறிவிப்பு வருகிறது. ஆனால் இவர்கள் சுதாரித்து உள்ளே போவதற்குள் வேகமாக வந்த துகள் எக்ஸ்ப்ளோரர்  விண்கலத்தையும் தாக்க ரயான் எக்ஸ்ப்ளோரருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விண் வெளியில் வீசி எறியப்படுகிறார்.  எந்தவித கட்டுபாடுமில்லாமல் திக்கில்லாமல் தனியே அலறிய படி  சுழன்று கொண்டே இருளில் விழுகிறார்.  அவரைக் காப்பாற்றி எக்ஸ்ப்ளோரர் வின்கலதுக்கே கொண்டு வருகிறார் கொவல்ஸ்கி. வந்தபின்பே தெரிகிறது பாதி விண்கலமே மீதமிருப்பது. உள்ளே இருந்த மற்ற இருவரும் உயிரற்று மிதக்கிறார்கள். 
அங்கிருந்து ரயானும் கொவல்ஸ்கியும் தப்பிக்கிறார்களா பூமிக்கு வந்து சேருகிறார்களா என்பதே மீதமுள்ள விறுவிறுப்பான ஒன்னே கால் மணி நேர கதை. 

ஆக்சிஜென் இல்லாத, ஒலி பயணிக்காத, இருண்ட வெளியில் வரையறை இல்லாமல் மிதந்து கொண்டே போய் இன்னொரு விண்கலத்தில் ஏறுவது, ஒரு ஃபயர் எக்ஸ்டிங்கிஷர் வைத்துக்கொண்டு நகர்ந்துக்கொண்டிருக்கும்  மற்றொரு விண்கலத்தில் ஏறுவது என்று சகட்டு மேனிக்கு சாகசம் காட்டுகிறார் ரயான்.
இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனிலும்(ISS )சீன விண்கலத்திலும் ரஷ்ய  மற்றும் சீன மொழிகளில் உள்ள ஆபரேஷன் மேனுவலை படித்து படித்து  அநாயாசமாக கண்ட்ரோல் பேனலை கையாளுகிறார் ரயான் என்பதும் அவர் தவறாக அழுத்தும் எந்த பட்டனாலும் எதுவுமே ஆவதில்லை என்பதும் நம் தமிழ் படங்களை தூக்கிச்  சாப்பிடும் லாஜிக்   ஒட்டைகள்.ISS மற்றும் சீன விண்கலங்கள் எக்ஸ்ப்ளோரர் இருக்கும் இடத்திலிருந்தே தெரிவது, ஜீரோ க்ராவிடியில் ரயானின் முடி பறக்காமல் இருப்பது, கன்னாபின்னா வேகத்துடன் தெறித்து விழும் துகள்கள் எதுவும் ரயானின் மேல் மட்டும் படாமல் இருப்பது.....இது போன்ற "சயின்ஸ் டிஃபயிங் ஃபாக்ட்ஸ்"  எதுவும் என்னால்  முதல் முறை பார்த்த பொழுது சரியாக உணர முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஒரு க்ரிப்பிங் ஸ்க்ரீன்ப்ளே. ரயானுடன் சேர்ந்து எப்படியாவது பூமி வந்தால் போதும் என்ற தவிப்பு படம் முடியும் வரை குறையவே இல்லை. 

 சுற்றி நடந்தேறும் குரூரத்தின் தீவிரம் தெரியாமல் இருக்க ரயானிடம் பறந்துக் கொண்டே பேச்சுக் கொடுக்கும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அசத்தல்!மனிதர் எந்நேரத்தில் என்ன பேசுவது என்ற விதிமுறை இல்லாமல் ஜோக் அடிப்பது,கடைசி வரை தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் பேசிக்கொண்டே இருப்பது,  தன் உயிர் போனால் பரவாயில்லை என்று ஜஸ்ட் லைக் தட் விட்டுக்கொடுப்பது...என்று மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறார்.
ஸ்பீட் படத்திற்கு பிறகு சாண்டராவின் அற்புதமான நடிப்பினை இந்த படத்தில் காண முடிகிறது.தன் மகளின் இழப்பு, சாகப்போகிறோம் எனத் தெரிந்த பின் பூமியிலிருந்து கேட்கும் குரலோடு சேர்ந்து நாய் போல் கத்துவது, ஒரு குழந்தையின் அழுகையை கேட்டு ஒரு தாயாக உணர்வது, தனக்குதானே பேசி தன்னம்பிக்கை ஏற்றிக்கொள்வது என பலப்பல பரிமாணங்களில் பிரகாசிக்கிறார் . 

சன் ரைஸ், சன் செட் போன்றவற்றை விண்வெளியில் இருந்து பார்க்கும் பிரம்மிப்பையும், விண்கலத்திற்கு அருகே இருந்து பூமியை காட்டும் கோணங்களையும் வெகு அழகாக கிராஃபிக்சில் கொண்டு வருகிறார்கள். 3D யில் நிச்சயம் பலமடங்கு அசத்தலாக இருந்திருக்க வேண்டும். 
பூமி ,விண்வெளி ,சூரியன் ,விண்கலம் என எல்லாமே ஒரு அறைக்குள் கம்ப்யூட்டரில்  உருவாக்கப்பட்டவை என்பதை நம்ப மறுக்கிறது மனம். ஒலி பயணிக்க முடியாத விண்வெளியில் விண்கலங்கள் சத்தமே இல்லாமல் வெடித்து சிதறினாலும் நமக்கு மரண பயத்தை தருகிறது க்ராஃபிக்சுக்கு அடுத்த படியாக படத்தின் உயிர்நாடியான சவுண்ட்  ட்ராக். 

அவதார் படத்திற்கு பிறகு கிராஃபிக்சில் அசரடித்த மற்றொரு படம் என்று ஈசியாக சொல்லமுடியும். இந்த படத்தினை அபோல்லோ -13 படத்துடன் ஒப்பிட்டு வரும் விமர்சனங்கள் எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அபோல்லோ படத்தை இன்னும் பார்க்கவில்லை.

இயக்குனர் அல்போன்சோவின் முந்தைய படமான சில்றன் ஆஃப் மென் அருமையான ஒன்று.ஆனால்  க்ராவிடியின் கமெர்ஷியல் வெற்றி  அதை தூக்கி சாப்பிட்டுவிட்டது. ஒரு தனி மனிதன் ஆளில்லா தீவில் மாட்டிகொண்டு அவதிப்படும் (ஆஸ்காருக்காக எடுக்கப்பட்ட )காஸ்ட் அவே படத்துடனும் ஒப்பிட்டு விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் காஸ்ட் அவே  படத்தை சாய்ந்து உட்கார்ந்து சாவதானமாக பார்க்க முடிந்த மாதிரி இந்த படத்தை பார்க்க முடியாது...பூமியில் கால் படும் வரை நம்மையும்  டென்ஷனோடு இருக்க வைத்திருப்பது  இயக்குனரின் சாமார்த்தியம். 

பூமியில் எடுக்கும் லாஜிக் இல்லாத குப்பைகளை எவ்வளவோ ரசித்திருப்பதால் பூமியிலேயே இல்லாமல் முழுக்க முழுக்க விண்வெளியில் எடுக்கப்பட்ட படத்தில் எவ்வளவு ஓட்டைகள்   இருந்தால் என்ன! லாஜிக் பார்க்காமல்,ஏன் இவ்வளவு ஓட்டைகள் என்று சலித்துக்  கொள்ளாமல்  டெக்னிகல் புலிகளும் சயின்டிஸ்ட்டுகளும் கூட ஜாலியாக  ரசிக்கலாம்.  இந்தப்படம் நடக்க முடியாத ஒரு கற்பனை கதை என்று தோன்றாமல் ,சமகாலத்தில் விண்வெளியில் நடைப்பெறும் ஒரு எமோஷனல் டிராமா-த்ரில்லெர் என்ற வகையில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.