Wednesday, 19 March 2014

வேற வழி?

 

எல்கேஜி சீட்டுக்கு நேர்காணல் என்று சொல்லி வேலை செய்யும் இடத்தில லீவ் கேட்க கூட கூச்சமாக இருந்தது. ஆனால் அபியும் நானும் படத்தில் வரும் பிரகாஷ் ராஜைப் போல் எல்லாம் எதுவும் செய்யவில்லை. யோஹான் ஒழுங்காக பேசினால் போதும் என்பதில் தெளிவாக இருந்தேன்.  
வாட்ஸ் யுவர் நேம் என்ற கேள்விக்கு சோட்டா பீம் என்று சொல்லி அதிர வைத்தது என் தோழியின் குழந்தை. இந்த குழந்தையே பரவாயில்லை என்று சொல்லும்படி இருந்தது நண்பனின் குழந்தை பேசியது- அம்மா பேர் என்ன என்ற கேள்விக்கு, 'தனுஸ்ரீ அம்மா பேரு தான் நல்லா இருக்குப்பா, திவ்யா , அதையே சொல்லிடறேன்'.
ஆமா நல்லா தான் இருக்கு என்ற நண்பனின் ஏக்கப் பெருமூச்சு மகளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. யோஹான் இப்படியான குளறுபடிகளை  செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையோடு நேர்காணலுக்கு தயாரானேன். எதற்கும் இருக்கட்டுமே என்று கண்ணா வாட்ஸ் யுவர் நேம்  என கேட்க உங்களுக்கு தெரியாதாம்மா என்றான். சரி பதில் சொல்லி விடுவான் என்றே நம்புவோம். நம்பிக்கை. அதானே எல்லாம்!

நேர்காணலுக்கு டோக்கன் வாங்கி காத்திருந்தோம். நிறைய அம்மாக்கள் குழந்தையை கடுமையாக தயார் படுத்தி இருப்பார்கள் போல. பரீட்ச்சைக்கு முன் ரிவைஸ் செய்வதைப் போல , ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த அப்பாவின்  மடியில் தேமே என்று அமர்ந்திருந்த  குழந்தையின் காதில் மந்திரம் ஓதிக்கொண்டே இருந்தார்கள் அம்மாக்கள். காலேஜில் வைவா முடிந்து வருபவர்களிடம் நாம் பாய்ந்து சென்று ஹே,என்ன கேட்டாங்க என்ன கேட்டாங்க என்று சுற்றி நின்று  மொய்த்துக்கொள்வோமே  அதேப் போல நேர்காணல் முடிந்து வெளியே வரும் அனைத்து பெற்றோரையும்  பாய்ந்து சென்று அமுக்கியது ஒரு கூட்டம். ஒவ்வொவொரு முறை ஒரு பெற்றோர் இவ்வாறு அமுக்கப்பட்டு  விடுவிக்கப்படும் போதும் குழந்தைக்கு சொல்லி தரும் டாபிக் மாறிக்கொண்டே இருந்தது. 

எங்களை கடந்து சென்ற ஒரு அம்மா ஷேப்ஸ், கேம்ஸ் எவ்ளோ சொல்லிக் கொடுத்தேன் கடைசில உங்க வீட்டு கரெக்ட் அட்ரஸ் சொல்லுங்கன்னு மட்டும் தான் கேட்டாங்க என்று புலம்பிக்கொண்டே சென்றார். குழந்தையை கேள்வி கேட்கவில்லை என்று கூட வருத்தப்படுவார்களா? என்னுடைய பயமே வேறு. பெற்றோர் பெயராக  தனக்குப் பிடித்த பெயர்களையும், தன் பெயராக குங்க்பு பாண்டா என்றும்  என் மகன் சொல்லாமலிருந்தாலே போதும். 

எங்கள் முறை வந்தது. ஒரு போர்ட் மீட்டிங்கில் அமர்வதைப் போல ஆறு பேர் அமர்ந்து  இருந்தனர். எனக்கு என் முதுகலைப் பட்டப்படிப்பு க்ராண்ட் வைவா தான் ஞாபகம் வந்தது. நாங்கள் தான் குழந்தையின் சொந்த அம்மா அப்பா என்று ஃபோட்டோ, சான்றிதழ்கள் மூலம் ஓரளவு திருப்தி அடைந்தப் பின் இந்த அட்ரஸ் எங்க வருது கரெக்டா என்று கேட்டார் ஒருவர். ஆட்டோ டிரைவருக்கு வழி சொல்லுவதைப் போல கணவர் விளக்கியவுடன்,சாயங்காலம் கட்டாயம் காஃபி சாப்பிட வீட்டுக்கு வருபவரைப் போல மையமாக அமர்ந்திருந்தவர் திருப்தியாக சிரித்தார். அவ்வளவே. ரிசல்ட் இன்ன தேதில ஓட்டுவோம் பாத்துக்கோங்க என்றனர். இதுக்கு எதுக்கு ஆறு பேர்? ஆனால் யோஹான் வாயை கிளராத வரை நல்லதே என்று எஸ்கேப் ஆனேன். 

மற்றொரு பள்ளியில் வேறு மாதிரி இருந்தது நேர்காணல். முதலில் குழந்தையிடம் இரண்டு ஆசியர்கள் உரையாடுவார்கள். பின்னர் ஒருவர் சான்றிதழ்களை சரி பார்ப்பார். கடைசியாக பள்ளி முதல்வர் நம்மிடம் மாட்லாடுவார்.குழந்தையிடும் பேசும் ஆசிரியர்கள் பெரிய பெரிய படம் போட்ட புக்ஸ்,
ரைம்ஸ்,பிளாஸ்டிக்கினால் ஆன ஷேப்ஸ், பழங்கள், காய்கறிகள் என ஏகத்துக்கு ஸ்பாட்டர்ஸ்  வைத்திருந்தார்கள். 

இவை அனைத்தும் எல்கேஜி செல்ல ஆரம்பிக்கும் முன்னரே  ஒரு குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டுமா? என்ன அநியாயம் இது! அப்ப எல்கேஜியில்  என்ன சொல்லிதருவார்கள்?ப்ளே ஸ்கூல் செல்லாத குழந்தை என்ன செய்யும்? அப்படியானால் வீட்டில் பெற்றோர் இவை அனைத்தையும் பரிச்சயப்படுத்தி வைத்து இருக்க வேண்டுமா? மூன்றரை வயது குழந்தை முதலில்  யாரென்றே தெரியாதவர்களிடம்  என்னத்த பேசும்?இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. 

இந்த அட்மிஷன் ஆரம்பித்த நாளிலிருந்து நமது கல்வி முறையை நினைத்து நினைத்து புலம்பாத நாளே இல்லை எனலாம். 
புலம்பி என்னத்த ஆகப்போகிறது? போங்கடா நீங்களும் உங்க சிஸ்டமும் என்று தூக்கி போட்டுவிட்டு வர முடியாமல் நானும் அதே ஜோதியில் ஐக்கியமாக என்னை தயார் படுத்திக்கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. வீட்டுக்கு அருகில் நல்ல montessori  பள்ளி இல்லை என்பது ஏதோ நம் சொந்த வீட்டுக்கு மெட்ரோ வாட்டர் கனெக்ஷனே இல்லாததை போல பெருங்குறையாக வாட்டியது. 

ஒரு வழியாக மூன்று பள்ளிகளிலும் இன்டர்வியு முடித்து ரிசல்ட் வரும் திருநாளுக்காக காத்திருக்கிறேன்.  மூன்று பள்ளிகளும் கிட்டத்தட்ட ஒரே நாளில் ரிசல்ட் வெளியிடப்போவதாக தேதி குறித்துள்ளனர்.ஒரு மாங்காயாவது   விழுகிறதா பார்ப்போம். 

Sunday, 9 March 2014

எல்.கே.ஜி

எல். கே. ஜி அட்மிஷன் என்பது சாதாரண விஷயமே அல்ல. என் அப்பா எங்கள் காலேஜ் அட்மிஷனுக்கு கூட இவ்வளவு அலைந்திருக்க மாட்டார். 

உண்மையில் பிரச்சனை எல்கேஜி சீட்டில் இல்லை. நமக்கு தேவையான பள்ளியில் எல்கேஜிசீட் என்பதே சரி. தேவையான என்பதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம்.வீட்டுக்கு பக்கத்தில், டொனேஷன் குறைவாக, அண்ணனோ அக்காவோ படிக்கும் அதே பள்ளியாக,வேலைக்கு செல்லும் வழியில் பள்ளியில் இறக்கி விட அம்மாவுக்கோ அப்பாவுக்கோ வசதியாக... இப்படி அவரவருக்கு ஏற்ற காரணங்கள்.  

விடிகாலை மூன்றரை மணி இருக்கும்.நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது  போன் அடித்தது.தூக்கம் கலைந்த எரிச்சலோடு  எடுத்தேன். மாமியார் வீட்டிலிருந்து என் கோ -சிஸ்டர் ஃபோன். 'என்னம்மா ஆச்சு அத்தைக்கு உடம்பு முடியலையா?' வயதானவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு வேளை கெட்ட வேளையில் ஃபோன் வந்தால் என்னவென்று நினைப்பது? தங்கை வேறு மிகவும் மெலிதான குரலில் 'அக்கா மாமாவோட ஆபீஸ் அட்ரஸ் என்ன' என்றாள். எனக்கெல்லாம் அதிகாலை நாலு மணியே நடு ராத்திரி தான். மூன்றரை  மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி எனக்கு நான் குடியிருக்கும் வீட்டு அட்ரஸ் கேட்டாலே தெரியாது. ஏம்மா என்ன ஆச்சு என்றேன் பதட்டம் குறையாமல். 'மறந்துட்டீங்களா அக்கா, அட்மிஷன்  ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு இருக்கேன், மாமாவோட சாலரி உங்க சாலரி எல்லாம் சொல்லுங்க'. 'இந்த நேரத்துலயா?' 'ஆமா அக்கா, நைட் பன்னெண்டு மணில இருந்து ட்ரை பண்ணி இப்ப தான் சைட் ஓபன் ஆச்சு'.
'விடிஞ்ச பிறகு பண்ணிக்கலாமே?' 'இல்ல இந்த ஸ்கூல் சைட் ஒபனே ஆகாதுன்னு சொன்னாங்க அதான்...'
அதற்கு மேல் என்னால் வேறு கேள்விகள் கேட்க முடியாமல் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொன்னேன்.  அதற்கு பிறகு எங்கே தூங்குவது. என்னுடைய பிள்ளைக்கும் சேர்த்து அவள் தான் அப்ளிகேஷன் பூர்த்தி செய்கிறாள் எனும்போது நான் படுத்து தூங்க முடியுமா? என்ன டௌட் இருந்தாலும் போன் பண்ணுமா என்று சொல்லிவிட்டு நாவலை விட்ட  இடத்திலிருந்து  தொடர்ந்தேன். 

எல்கேஜி அட்மிஷனுக்காக நடுராத்திரியிலிருந்து ஆன்லைன் ஃபார்ம் ஃபில் பண்ணுவது எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பட்டது.ஏனோ ஊர்க்காவலன் படத்தில் ரஜினி நடுராத்திரியில் இட்லி சாப்பிட்டது ஞாபகத்துக்கு  வந்து தொலைத்தது.நமக்காக ஒருவர் உதவி செய்யும் போது நான் அதை குறை சொல்ல விரும்ப வில்லை எனினும் இந்த ஃபார்ம் ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு  கிடைக்கும். நான் விடிந்த பின் அப்ளை செய்துக்கொள்ளலாம் என்றிருந்தேன். நான் வாழ்க்கையில் என்றுமே முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்ததே இல்லை. எப்போதுமே சாகும் போது சங்கர சங்கரா தான்.அதனால் வாழ்க்கையில் பெரிய இழப்பேதும் சந்தித்ததில்லை.விடியற்காலை மூன்றரைக்கு அப்ளை செய்ததற்கே என்னுடைய டோக்கன் எண்ணூற்றி  சொச்சம்.

ஒரு பள்ளிக்கு சுமார் ஆயிரம் ஆயிரத்தி ஐநூறு பேர் அப்ளை பண்ணினால் கூட இரண்டு நாட்கள் போதுமானது என்பது என் கணிப்பு. அமெரிக்கன் கான்சுலேட் முன் இரவெல்லாம் துண்டு போட்டு மக்கள் நைட் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்த கண்கொள்ளா காட்சியை சென்னையில் இருப்பவர்கள் கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சென்னையின் புகழ்ப்பெற்ற சில பள்ளிகளின் வாசல்களிலும் இதே போன்ற கூட்டம் எல்கேஜி அட்மிஷனுக்கு காத்திருக்கும். அந்த நைட் வாட்ச்மேன்   வேலையை சுலபமாக்கவே இப்போதெல்லாம் அனைத்தும் ஆன்லைனில். 

ஆன்லைனில் ஃபில் பண்ண அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொடுக்கப்பட்ட தேதியில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.  பின்னர் ஒரு தேதியில் குழந்தைக்கு பெற்றோரோடு சேர்த்து ஒரு நேர்முகம். நான் வீட்டுக்கு அருகே இருக்கும் மூன்று பள்ளிகளிலும்  விண்ணப்பத்திருந்தேன். எல்லா பள்ளிகளிலும் விசாரித்த வரை இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்தி முன்னூறு விண்ணப்பங்கள் வந்திருந்தனவாம். ஒரு செக்ஷனில் இருபத்தியைந்து குழந்தைகள் வீதம் சேர்த்தாலும் ஆறு ஏழு செக்ஷனுக்கு மேல் எந்த பள்ளியிலும் இல்லை. ஆக நூற்றி ஐம்பது இடங்களுக்கு இரண்டாயிரம் விண்ணப்பங்கள். பெரும்பாலும் அனைவரும் என்னைப்போல மூன்று நான்கு பள்ளிகளுக்கு விண்ணப்பம் அளித்தவர்களே. ஆனால் எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன
 என்பது தான் புரியாத புதிர். 

பள்ளிக்கு மூன்று கி.மீ சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும்,பெற்றோர் படித்திருக்க வேண்டும் போன்ற அடிப்படை தகுதியை தாண்டி நிறைய கெடுபிடிகள். பெற்றோர் இருவரும் மருத்துவர்கள், குழந்தையை கவனிக்க மாட்டார்கள் என்று பெற்றவர்களை விட அதிக அக்கறைக்கொண்டு ஒரு பள்ளி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. 
ஒரு பள்ளியில் போர்ட் எழுதியே வைத்திருந்தார்கள்- அதிகப்படியான விண்ணப்பங்கள் வருவதால் மானாட மயிலாட முறையிலேயே தேர்வு செய்யப்படும் என்று. 

என்ன தான்டா வேணும் உங்களுக்கு என்று விசாரித்ததில் எதாவது ஒரு கரும்புள்ளி சாரி பெரும்புள்ளியின் சிபாரிசு தேவையாம். 
இந்த நேர்முகம் எல்லாம் வெறும் கண்துடைப்பே என்று தெளிவாக இருக்கிறார்கள் மக்கள்.பெரும்புள்ளி அரசியல்வாதியாக  இருக்க  வேண்டிய  அவசியமில்லை . பள்ளி  கணக்கு  வைத்துள்ள  வங்கியின்  மேலாளர்  முதல்  ஸ்கூல்  பிரின்சிபால்  காருக்கு  பெட்ரோல்  போடும்   பங்க்  ஓனர்  வரை  யாராக  வேண்டுமானால்  இருக்கலாம். சிபாரிசுக்கு  ஏத்த டொனேஷன் . சில பல லட்சங்கள் வரை கூட ஆகும் போல.  

ஆரம்பத்திலேயே சொன்னது போல எல்கேஜி அட்மிஷனில் பிரச்சினையே இல்லை.எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சீட் கிடைக்கும். ஆனால்  நம்முடைய வசதிக்காகவும் ஆசைக்காகவும் நமக்கு தேவையான பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்று கொக்கு போல் நாம் நிற்பது தான் பிரச்சனை. இந்த கொக்கு பிரச்சனை உள்ளவரை கல்வி வியாபாரம் மேலும் மேலும் செழித்து வளர   பிசினஸ்மேன்களுக்கு நம்மை காட்டிலும் சிறப்பாக வேறு யாரும் உதவி செய்து விடமுடியாது. 

Sunday, 2 March 2014

ப்ளே/ ப்ரீ ஸ்கூல்



எல்லோரும் வரப்போகும் தேர்தலில் யாருக்கு சீட் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் போது நான் முக்கியமான எல்கேஜி சீட்டுக்காக அலைந்துக்கொண்டிருந்தேன். 
காலேஜ் சீட் கிடைப்பது கூட பெரிய விஷயமில்லை. இந்த படிப்பு இல்லை என்றால் வேற படிப்பு படிக்கலாம். எல்கேஜியை அப்படி புறக்கணிக்க முடியாதல்லவா?இதற்கான தயாரிப்புகள் ப்ளே/ப்ரீ ஸ்கூல்களிலேயே ஆரம்பமாகிவிடுகின்றன. 

மூன்றரை வயதுக்கு மேல் பிள்ளையை வீட்டில் வைத்திருந்தால் நம்மை ஏதோ கொலைக் கேசில் பெயிலில் வந்தவரை போலவே பார்க்கும் சமூகம். இன்னுமா ஸ்கூல்ல போடல என்று நம் பிள்ளைக்கு ஏதோ  அவர்கள் தான் ஸ்கூல் பீஸ் கட்டப்போவதைப்  போல போக வர விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த பிரச்சனைக்கு இடமே கொடுக்காமல் இரண்டு, இரண்டரை வயதிலேயே ப்ளே ஸ்கூலில் விட்டுவிடுகின்றனர்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் க்ரெஷுக்கு  அடுத்த வரப்ரசாதமாக பார்ப்பது ப்ளே ஸ்கூல்களைத்தான்.

குழந்தையை ப்ளே/ப்ரீ  ஸ்கூலில் விட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். கூட்டிக் கழித்துப் பெருக்கி துடைத்துப் பார்த்தால் எல்லா நிலைகளிலும் குழந்தையின் நலனை விட பெற்றோரின் சுயநலம் தான் அடிப்படையாக உள்ளது புரியும். 

முழு முதற்காரணம் பெற்றோருக்கோ இல்லை குழந்தையைப் பார்த்துக் கொள்பவருக்கோ கிடைக்கும் இரண்டு மணி நேர விடுதலை.இரண்டு மணிநேரத்துக்கு மேல் ப்ளே ஸ்கூலில் இந்த சின்னப்பிள்ளைகளை  வைத்திருப்பதும் கடினம். அக்கம் பக்கம் சிறிய பிள்ளைகள் போகும் போது நம்ம பிள்ளையும் போகட்டுமே என்று சேர்ப்பவர்களே அதிகம். 

இரண்டாவது காரணம் +2 சிலபஸ்ஸை +1 னிலேயே பிள்ளையை மாங்குமாங்கென்று படிக்க வைப்பது போல எல்கேஜி,யுகேஜியில் படிக்க வேண்டியதை பிள்ளை இரண்டரை வயதிலேயே கற்று வந்து அக்கம் பக்கம், உற்றார், உறவினர், நண்பர் முன்னர் பேசியோ பாடியோ காட்டினால் பெற்றோருக்கு கிடைக்கும் பெருமிதம்.கண்ணா, மாமாவுக்கு அந்த ரைம்ஸ் சொல்லு அக்காவுக்கு இந்த பாட்டு பாடு என்று ஒரு நாள் முழுக்க பாடாய்படுத்தப்பட்ட குழந்தை ஒன்று அந்த நாளின் முடிவில் வீட்டுக்கு வந்த விருந்தினரை பார்த்து போடா பன்னி என்று சொன்னதாக முகநூலில் படித்த ஞாபகம்.  பாவம் எவ்வளவு முறை தான் அதுவும் செய்ததையே செய்து காட்டும்? 

அடுத்த வருடம் குழந்தை ரெகுலர் பள்ளியில் சேர்க்கும் பொழுது அழுது  அடம்  பிடிக்காமல் இருக்கவும்,பெற்றோரை விட்டு அரை நாள் வேறு ஒரு புது இடத்தில் கழிக்கவும்,மற்ற  குழந்தைகளோடு  சேர்ந்து  விளையாடிப் பழகவுமே  இந்த  
ப்ளே-ஸ்கூல்,ப்ரீ-ஸ்கூல் மண்ணு மண்ணாங்கட்டி  எல்லாம். ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக ப்ளே ஸ்கூல்லில் சேர்ப்பவர்கள் வெகு சிலரே. 

எல்லாமே வியாபாரமாக ஆகிவிட்ட இன்றைய உலகில் பெற்றோர்களின் பலவீனத்தை மிக அருமையாக பயன்படுத்தி ஏகப்பட்ட ப்ளேஸ்கூல்கள் காளான் போல முளைத்துக்கிடக்கின்றன. செமத்தியான லாபம் தரும் இந்த ப்ளே ஸ்கூல் வியாபாரத்தையும் விட்டு வைக்கவில்லை பெரிய பள்ளிகள். ப்ளே ஸ்கூல்களையும் தாங்களே ஆரம்பித்து அதற்கு ஒரு கோட்டாவும் ஒதுக்கி விட்டன.  சிப்லிங்க் கோட்டா, RTE கோட்டா, வடநாட்டவருக்கான கோட்டா போன்ற ஏகப்பட்ட கோட்டாக்களோடு   ப்ரீஸ்கூல் அங்கேயே படித்த கோட்டாவும் சேர்த்தி. ப்ளே/ப்ரீ ஸ்கூல்களில் குழந்தைகளை சேர்க்க மூன்றாவது   முக்கிய காரணம் இது. 

ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்க பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் தேவை இருப்பதில்லை. ஒரு பெரிய இன்டிபென்டென்ட் பங்களா இருந்தால் போதுமானது. பங்களா என்றால் நிச்சயம் கீழே ரெண்டு மேலே ரெண்டு பெட்ரூம், அதோடு கூட அட்டாச்டு பாத்ரூம், ரெண்டு கார் பார்க்,ஒரு குட்டி லான் (lawn) இதெல்லாம் கட்டாயம் இருக்கும். போதாதா? நாலு கிளாஸ் ரூம் கூட  நாலு  டாய்லெட்.ஒரு குட்டி  சறுக்கல் மற்றும் சீசாவோடு  கூடிய சிறிய  விளையாட்டு ஏரியாவாக  மாறிய  கார் பார்க்கும் லானும்.இல்லவே இல்லாத காலேஜிக்கு ரெகக்னிஷன் தரும் நம் நாட்டில் ப்ளே ஸ்கூலுக்கு பெர்மிஷன் வாங்குவது ஒரு வேலையே அல்ல.  அவ்வளவே ,ப்ளே ஸ்கூல் ரெடி. இதில் ஹோட்டல் ரூம் டாரிஃப் போல வித் ஏசி/ விதௌட் ஏசி வசதியும் உண்டு.

ப்ளே ஸ்கூல் கட்டணமும் எல்கேஜிக்கு  சளைத்தது   அல்ல. என்சான்டிங்  எல்வ்ஸ், சீசேம் ஸ்ட்ரீட், ஜங்கிள் சஃபாரி, ஸ்ப்ரிங் ப்லாசம்...என்றெல்லாம்  ஸ்டைலாக   ஆங்கிலத்தில் பெயரை வைத்துக்கொண்டு நிறைய ஃபீஸ்  வசூலித்தால்  தானே   மரியாதை?எல்கேஜி டெர்ம்  பீஸ் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியின்  வருடாந்திர  காலேஜ் பீஸ் அளவுக்கு இருக்கும்  போது  ப்ளே ஸ்கூலில் எல்கேஜி அளவுக்கு கூட பீஸ் இல்லையென்றால் எப்படி?குறைந்தது முப்பதிலிருந்து  நாற்பதாயிரம்  வரை  சர்வ சாதரணமாக வாங்குகிறார்கள் . ரெசீப்ட்டும் தருவார்கள். ஆனால் ஒரு டயபர் மாற்றினால் கூட மேடம் நேத்து உங்க சன்னுக்கு டயபர் சேன்ஜ் பண்ணினோம், ரீப்ளேஸ் பண்ணிடுங்க என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பட்டரில் ஜாம் தடவுவார்கள்.

இதை எல்லாம் சொல்லுவதால் ப்ளே ஸ்கூலில் குழந்தையை போடுவது சரி என்றோ தவறு என்றோ எந்த தீர்ப்பும் சொல்லவரவில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலேயே சொன்னது போல்  நானும் இதே குட்டையில் ஊறிய ஒரு சுயநல மட்டை தான். என் பிள்ளையும் நான் சொன்ன ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டரை வயதிலிருந்தே ப்ளே ஸ்கூல் செல்கிறான்.அவன் எழுத படிக்க கற்றுக்கொண்டானோ இல்லையோ தெளிவாக பேசவும், மற்றவர்களோடு பழகவும், சேர்ந்து விளையாடவும் ஓரளவேனும் தெளிவடைந்துள்ளான் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.எல்கேஜிக்கு வேறு ரெகுலர் பள்ளிக்கு அனுப்புவதில் சிரமமிருக்காது என்றே நம்புகிறேன். ஆனால் என்ன,  அதே அழகான கிளாஸ் மிஸ்ஸ கேட்பான். சமாளிக்கணும் ! 

Sunday, 23 February 2014

ஸ்போர்ட்ஸ் டே

 யோஹான் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே. 
அழகான இளம் அம்மாக்களோடு சனிக்கிழமையாதலால் அப்பாக்களும் வந்திருந்தனர். அப்பாக்கள் அனைவரும் காம் கார்டர் காமெராக்களுடன் ப்ரொபஷனல் போடோக்ராபர் போலவே அலைந்து கொண்டிருக்க, அம்மாக்கள் பெரும்பாலும் ஐ பேட், டேபிலேட்டோடு செட்டில் ஆகி இருந்தனர். 

குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியோ நடனமோ எதுவாக இருந்தாலும் சொல்லிக்கொடுக்கப்பட்டதை செய்யாமல் சுற்றி உள்ளவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தனக்கே சொந்தமான உலகில் தனக்கு தெரிந்ததை செய்யும் குழந்தைகள் பலருடைய கவனத்திலிருந்து தப்பி விடுகின்றனர். உண்மையில் அவ்வாறான குழந்தைகளை ரசிப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அது ஒரு தனி அழகு! நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிப்போம் குழந்தை தவறாகவே செய்தாலும். சொல்லிகொடுத்த மிஸ்ஸுக்கு தான் செம கடுப்பாக இருக்கும். 

ஆசிரியை என்றால் என்றால் ஏனோ சற்று வயதானவர் என்ற உணர்வு நம்மை அறியாமல் தொற்றிக்கொள்கிறது. அதனால்  முடிந்த வரை மிஸ் என்றே வைத்துக்கொள்வோம். மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த ஆடைகளில் அனைத்து மிஸ்களும் வளைய வர,  மூன்று பிரிவுகளாக (houses)பிரிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் சிவப்பு, நீலம், மற்றும் சந்தன கலர் சட்டையுடனும் தொப்பியுடனும் செய்த அணிவகுப்பு அழகோ அழகு.வண்ணமயமாக குழந்தைகள் அனைவரும் மார்ச் பாஸ்ட் செய்து வந்து வரிசைக் கட்டி நின்றனர். மிஸ்களும் எதிரே நின்று குழந்தைகளோடு சேர்ந்து மிக அருமையானதொரு இசைக்கோர்வைக்கு (வழக்கமான டிரில் மியூசிக் இல்லை!)  டிரில் செய்தனர். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தாலே மண்டை காயும் நமக்கு இத்தனை குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து  வெகு நேர்த்தியாக அவைகளை இசைக்கு ஏற்றவாறு செய்ய வைப்பது சாதாரண விஷயமல்ல.அனைவரும் மூன்றரை  வயதுக்குட்பட்ட வாண்டுகள். ஆசிரியர்களின் மெனக்கெடல்  இம்முறையும் ஆச்சர்யமூட்டியது. 

ரசனையான விளையாட்டுக்கள். ஒரு தட்டில் நிறைய ஹேர் கிளிப்புகள் கிரௌண்ட் நடுவே வைக்கப்பட்டிருந்தன.விசில் அடித்தவுடன் குழந்தை ஓடி சென்று ஒரு கிளிப்பை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு ஓடி வர வேண்டும். அவ்வாறு விசில் அடித்தவுடன் ஓடிய  பெண் குழந்தை ஒன்று சீரியசாக   ஒவ்வொரு கிளிப்பாக போட்டு போட்டு பார்த்து திருப்தி அடையாமல் கழட்டி வைத்துக்கொண்டே இருந்தது. கடைசி வரை அந்த தட்டை விட்டு நகரவே இல்லை!மற்றொரு விளையாட்டில் கலர் கலராக செய்து வைக்கப்பட்ட மலர்களிலிருந்து வண்டுகள் போல உடை அணிந்த குழந்தைகள் தேன் சேகரிக்க வேண்டும் என்று போட்டி. சொல்லி வைத்தாற்போல ஒவ்வொவொரு குழந்தையும் தனக்கு கொடுக்கப்பட்ட மலரை விட்டு அடுத்த ட்ராக்கில் இருந்த மலரிடமே ஓடின! சொல்லிகொடுத்த மிஸ்ஸுகள் அலறியடித்துக்கொண்டு குழந்தையின் பின்னே ஓடினர்.  ஓட்டப்பந்தயத்தில் விசில் அடித்தவுடன் நேராக பார்வையாளர் இடத்தில் நின்றிருந்த அதன் அம்மாவிடம் ஓடிய குழந்தை, எதிர் திசையில் திரும்பி ஓடிய குழந்தை, அசராமல் மூக்கு நோண்டியபடி நின்ற இடத்தை விட்டு அசையாத குழந்தை,எத்தனை முறை தனியே பிடித்து நிறுத்தி வைத்தாலும் பக்கத்து ட்ராக் பையன்  கையை விட மறுத்த குழந்தை என சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடந்தேறின விளையாட்டுப்  போட்டிகள் அனைத்தும். 

பரிசளிப்பின் போதும் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை.முதல் பரிசை பெற்றுக்கொள்ள மேடை ஏறிய  குழந்தை ஒன்று நடுவில் எங்கும் நிற்காமல் ஓடி மேடையின் இன்னொரு பக்கத்தில் இருந்த படிக்கட்டில் இறங்கி ஓடியே போய்விட்டது. அதனோடு கூட பரிசை பிடுங்கிக்கொண்டு ஓடிய குழந்தை, பரிசு வாங்கிய பின்னர் மேடையை விட்டு இறங்க மறுத்த குழந்தை என குழந்தைத்தனம் எல்லா ரூபத்திலும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது தான் நிகழ்ச்சியின் ஹை லைட்! 

நிகழ்ச்சிகள் தொடங்கியதிலிருந்தே  கருப்பு கண்ணாடி அணிந்த அப்பாக்கள் யாரை ஃபோகஸ் செய்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் பிஸியாக கவர் செய்துக் கொண்டிருக்க, அம்மாக்கள் குழந்தைகளை வளைத்து வளைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தனர். கண் முன்னே நடப்பதை ரசிக்காமல்  என்றோ பார்பதற்காக காமெராவில் படம் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர் பெற்றோர்.போட்டிகளில் பங்குபெற்ற பல குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதோ நுழைவுத்தேர்வுக்கு பிள்ளையை அனுப்பிய டென்ஷனோடு இருந்தது உச்ச பட்ச காமெடி. 

உண்மையிலேயே இவர்களை எல்லாம் விட குழந்தைகளுக்கு அடுத்த படியாக உள்ளபடியே சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து களித்தது தாத்தா பாட்டிகள் தான்.  இல்லை எனக்குத் தான் அப்படி தோன்றியதா ?

Sunday, 16 February 2014

தாத்தா பாட்டி

அண்மையில் ஒரு க்ரெஷ் (crèche)பற்றி விசாரிக்க சென்றிருந்த போது ஒரு காட்சியை காண நேர்ந்தது.  ஆர்வம் தாளாமல் (என்பதை விட மனசு கேட்காமல் என்பதே சரி) அங்கு இருந்த ஒரு எட்டு மாத குழந்தையைப் பற்றி விசாரித்தேன். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் பால் புட்டி, பால் பவுடர், சத்து மாவு காஞ்சி சகிதம் வந்து இறங்கி விடுவார் போல. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இல்லையாம். பெண்ணைப் பெற்றவர்களுக்கு சென்னை ஒத்து வர வில்லையாம். பையனைப் பெற்றவர்கள் ரொம்பவே வயதானவர்கள். ஆக, குழந்தையைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி இல்லை. வேலைக்காரியை நம்பி வீட்டில் தனியாக குழந்தையை விட்டுவிட்டு வர மனதில்லை. வேலையையும் விட முடியாத சூழ்நிலை. வேறு வழி? ஆறு மாதத்திலிருந்தே க்ரெஷ் தானாம்.  
கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரம்! இரவு குழந்தையை வந்து எடுத்துச் செல்ல ஏழு எட்டு மணி ஆகிவிடுமாம். குழந்தை பெரும்பாலும் தூங்கிவிட்டிருக்கும்.அது விழிப்போடு பெற்றோரிடம் விளையாடும் நேரம் எவ்வளவு எப்போது என்பதையெல்லாம் யோசிக்காமல் இருப்பது நல்லது. அப்படி எதுக்கு வேலைக்கு போகணும் என்று வேடிக்கை பார்க்கும் எவரும் சுலபமாக கமெண்ட் அடிக்க முடியும்.அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ யாரு கண்டா! 

தவிர்க்க முடியாத சூழலில் வேலைக்கு செல்வது ஒருபுறமிருக்க வேறு எதற்கோ ஆசைப்பட்டு பால் குடி மாறா பச்சப்பிள்ளையை விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்களும் உண்டு.குழந்தைப் பிறந்து மூன்றாவது மாதத்திலேயே தாய்க்கு ஆன்- சைட் வேலை. வேறு எங்கே  குட்டி சுவரில் தான்.இப்போது வாய்ப்பை விட்டால் மறுபடி கிடைக்காதாம்.மூன்றே மாதமான தாய்ப்பால் மட்டுமே உண்ணும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு பறந்தாயிற்று.போனால் வருவதற்கு குறைந்தது எட்டு மாதம் ஆகும் என்று தெரிந்தே செல்லும் பெற்றோரை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? இதற்கு பின் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்காது என்று பறப்பவர்களுக்கு குழந்தையின் இந்த பருவமும் திரும்ப கிடைக்காது என்று கேட்காமலே அறிவுரை வழங்குபவர்களிடம் அதெல்லாம் நாங்க அடுத்த குழந்தைக்கு பார்த்துக்கிறோம் என்று வாயடைத்து விடுகிறார்கள். 

தாய்பாலின் மகத்துவத்தை அறிவுறுத்தி அரசுப்பணிகளில் கூட மூன்று மாதம் இருந்த மட்டர்னிட்டி லீவை ஆறு மாதமாக மாற்றி விட்டார்கள்.ஒரு குழந்தைய பாத்துக்கவே வழிய காணோம் இதுல ரெண்டாவது வேறயா என்று சலித்துக்கொள்ளும் என்னைப் போன்ற ஆட்களிடம் இப்பத்தான் ஆறு மாசம் லீவாமே என்று இழுத்து வாக்கியத்தை பூர்த்தி செய்யாமல் ஆவலோடு நம் முகம் பார்ப்பவரிடம் ஏழாம் மாசம் பிள்ளைய ஸ்கூல்ல  சேர்த்துட்டு நீங்க கூட இருந்து கவனிச்சிக்க  முடியுமா என்றே கேட்க தோன்றுகிறது! 

குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள்- தாத்தா பாட்டி அத்தை யாரோ ஒருவர்-  உள்ளனர் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் என்று வேலைக்கு செல்லும் ஒரு தாயிடம் கேட்டால் புரியும். வேலைக்காரியிடம் குழந்தையை விட்டு செல்லும் குடும்பங்களையே சென்னைப் போன்ற பெருநகரங்களில் பார்க்க முடிகிறது. வேலையாள் குழந்தையை பார்த்துக்கொள்வாள் சரி, வேலையாளை பார்த்துக்கொள்வது யார்?? 

சரியான வயதில் திருமணம் முடித்து குழந்தையையும் பெற்றுக்கொள்ள சொல்லி பெருசுகள் வலியுறுத்துவதில், இந்த ஒன்னே காலணா சமூகம் தங்களை கேள்வி கேட்கும் முன் தங்கள் கடமையை  முடித்துவிட வேண்டும் என்ற உண்மையை தாண்டி வேறு ஒரு அர்த்தமும் உள்ளது.அது வயதான காலத்தில் தங்களால் பேர பிள்ளைகளை வளர்க்க உதவ முடியாது என்ற அவர்களின் நியாயமான கவலையே ஆகும். தாய் தந்தையை முதியோர் இல்லத்திற்கு பத்தி விட்டவர்களை இதில் கணக்கில் கொள்ள வேண்டாம். 

எங்களை எல்லாம் எப்படி வளர்த்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.பெற்றோர்  இருவரும் ஆசிரியர்கள். வீட்டில் எப்போதுமே எங்களை கவனித்துக்கொள்ள ஊரிலிருந்து வரவழைத்த ஒரு பெண் இருக்கும். என் அக்காவுக்கு ஏழு வயதென்றால் எனக்கு இரண்டு வயது. எங்களைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயதிருக்கும். அது ஊட்டுவது தான் சாப்பாடு. எந்த நம்பிக்கையில் எங்களை விட்டு சென்றனரோ பெற்றோர் அந்த நம்பிக்கை இன்று எள்ளளவும் வேலையாள் மீது வைக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படி. பத்து வருடம் வீட்டில் சோறு போட்டு வளர்த்தவனே அந்த வீட்டு குழந்தையை பலாத்காரம் செய்வது,ஒரு தங்க சங்கிலிக்காக வீட்டு டிரைவர் குழந்தையை கொல்வது, நூறு இருநூறுக்காக குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு அனுப்புவது, குழந்தைக்கு காஃப் சிரப்பை ஊற்றிவிட்டு தங்கள் 'மற்ற' வேலைகளை கவனிப்பது...இப்படி எல்லாம் நடக்க கூட முடியுமா என்று பெற்றவர்கள் யோசித்து கூட பார்க்க முடியாத சூழலில் நம்மை வளர்த்து ஆளாக்கி கல்யாணமே கட்டிக் கொடுத்து விட்டார்கள் நம் பெற்றோர்கள்.  இத்தகைய குரூரமான சூழல் நம் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பது துரதிஷ்டமே! 

தாத்தா பாட்டி மீது குற்றச்சாட்டுகளும் உண்டு. நம்மை ஊரில் இல்லாத கெடுபிடிகளோடு வளர்த்துவிட்டு பேரப்பிள்ளைகளிடம் அநியாயத்திற்கு செல்லம் கொஞ்ச வேண்டியது. அதோடு நின்றால் பரவாயில்லை. நாம் நம் பிள்ளையை கண்டிக்க போக, குழந்தைக்கு என்ன தெரியும் அதை ஏன் திட்ற என்று வரிந்துக் கட்டிக்கொண்டு முன்னாடி நிற்பார்கள். தாத்தா பாட்டி செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்ற பரவலான கருத்து எல்லா இடங்களிலும் உண்டு. உங்க அப்பாவால தான் இப்படி பேசுறான் உங்க அம்மாவால தான் அப்படி ஆடறான் என்று தாத்தா பாட்டி கொடுக்கும் செல்லத்தினால் கணவன் மனைவியிடையேயும் மனஸ்தாபம் வரும். ஆனால் இப்போது குழந்தைகள் வளரும் சூழலில் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை . குழந்தை ஓரளவு வளரும் வரை அவர்கள் உடனிருப்பது ஆகப் பெரும் துணை. அந்த கொடுப்பினை இல்லை என்றால் தாயாவது குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டும் வரை உடனிருக்க வேண்டும். ஆனால் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் தான் பெருவாரியான குடும்பங்கள் பெருநகரங்களில் தத்தளிக்கின்றன. 

தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு, பிள்ளைகளுக்காக வாழ்ந்தது போதாது என்று பேரப்பிள்ளைகளுக்காகவும் மெனக்கட தயாராக இருக்கும் தாத்தா பாட்டிகளின் நடுவே சற்றே வித்தியாசமான தம்பதியரும் உள்ளனர். கல்யாணம் செய்து வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக சொல்லி  எதிலும் தலையிடாமல் இருப்பவர்கள், 
இனிமேல் தான் நாங்கள் எங்கள் வாழ்கையை வாழ வேண்டும் என்ற கோரிக்கையோடு ஊர் உலகத்தை சுற்றிப் பார்க்க கிளம்புபவர்கள்,கடைசி காலத்தில் தாங்கள் வாழ்ந்த ஊரிலேயே இருக்க ஆசைப்படுபவர்கள்....இப்படி ஒரு நியாயமான லிஸ்டும் உண்டு. 

தங்கள் வாழ்கையை இனிமேலாவது தாங்கள் விரும்பியபடி வாழ விரும்பும் அவர்களை நாம் இன்னமும் சார்ந்து இருந்து இம்சைப்படுத்தாமல் வாழவிடுவதும் நமது கடமை தானே? 

Monday, 10 February 2014

மெலூஹாவின் அமரர்கள்



THE IMMORTALS OF MELUHA ஆங்கிலத்தில் தான் வாசித்தேன்.ஆனால் தமிழில் இந்த புத்தகம் வந்திருப்பது ஆங்கிலத்தில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த பின்னரே தெரிய வந்தது. 
இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள் அவ்வளவாக என்னை ஈர்க்காத காரணத்தால் ஒரு சிறு தயக்கத்துடனே ஆரம்பித்தேன்.ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருக்கும் பட்சத்தில் எனக்கு கதா பாத்திரங்களின் ஆங்கில உரையாடல்கள் வடஇந்திய அக்சென்ட்டுடனே வாசிக்க முடிந்தது சற்று கவலையாகவே இருந்தது. 
ஆனால் முதல் இரண்டு பக்கங்களிலேயே மெலூஹா நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. 

சிவபெருமான் என்ற கடவுளை பூமியில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஷிவா என்ற ஒரு சாதாரண மனிதனாகவும் பார்வதி, தச்சன் என்று சிவபுராண கதாபத்திரங்களை பண்டைய சிந்து சமவெளி நாகரீகத்திலும்  ராம ஜென்ம பூமி அயோத்தியிலும் நேர்த்தியாக பின்னப்பட்ட கற்பனைக்  கதையில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். 

இமய மலையின் அடிவாரத்தில் வசிக்கும் குணா என்ற பழங்குடி இனத்தின் தலைவன் ஷிவா, அங்கு மற்ற இனத்தோடு அடிக்கடி ஏற்படும் சண்டைக் காரணமாக தனது பரிவாரங்களுடன் மெலூஹாவுக்கு அகதியாக புறப்படுகிறார். மெலூஹாவுக்குள்    அனுமதிக்கப்படும் முன்னர் குணா இனத்தவர் அனைவருக்கும் உள்ள நோய்கள் கண்டறியப்பட்டு, மருத்துவம் பார்க்கப்படுகிறது.அப்போது அனைவருக்கும் சோம ரஸம் என்னும் பானம் மருந்து என்ற பெயரில் அளிக்கபடுகிறது. அதைப் பருகியவுடன் ஷிவாவிற்கு கழுத்து நீலமாக மாறிப் போக அவரை நீலகண்டர் என பாவித்து மெலூஹாவின் தலைநகரான தேவகிரியில் உள்ள  சக்ரவர்த்தி தச்சனிடம் அழைத்துச் செல்கின்றனர். தாங்கள் இவ்வளவு  காலம் காத்திருந்தது இந்த நீலகண்டருக்காகத் தான் என அவரை கடவுளாகவே தொழுகின்றனர் மெலூஹாவினர்.  சூரியவம்சத்தை சேர்ந்த மெலூஹாவினர் சந்திரவம்சம் மற்றும் நாகா எனப்படுபவர்களின் 
 தாக்குதல்களிடமிருந்து  தங்களை காக்க வந்த கடவுளாகவே ஷிவாவை கொண்டாடுகின்றனர். ஷிவா உண்மையாகவே கடவுள் தானா,  சூரியவம்சத்தை காப்பாற்றினாரா இல்லையா சந்திரவம்சத்தினர் உண்மையில் செய்த மோசடி என்ன என்பதே மீதி கதை. 

ஷிவா என்ற கதாபாத்திரத்தை அனைவரும் வணங்கும் சிவபெருமானுக்கான நடனம், மரிஜுஅனா புகைத்தல்,தீயவற்றை அழிக்கும் ஆற்றல்....போன்ற குணங்களோடு கூட குற்ற உணர்ச்சி முதற்கொண்டு காமம், கோபம், காதல் என்று ஒரு சாதாரண மனிதனை போல உலவ விட்டிருப்பதில் வெளிப்படுகிறது அமிஷ் திரிபாதியின் அசத்தலான  கதைசொல்லும் திறமை.ஷிவாவை நீலகண்டராக ஊரே வணங்கும் போதும் அந்த போதை சற்றும் தலைக்கு ஏறாமல், நீல கழுத்தை கொண்டதாலேயே தான் கடவுளாகிவிட முடியாது என்று தன்னடக்கத்தோடு ஷிவா அமைதி காப்பதும், பல இடங்களில் பாராட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் நெளிவதும், சாமர்த்தியமாக போரில் வியூகம் அமைப்பதும், போர் முடிந்து குற்ற உணர்ச்சியில் யாரிடமும் பேசக்கூட முடியாமல் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று கண்ணீர்விட்டு அழுவதும்... ஷிவாவின் கதாபாத்திரம் படிப்படியாக உயர்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறது. 

சிந்து சமவெளி நாகரிகம், ராமபிரான் வரலாறு, அயோத்தியா, ஆன்மீகம்,நட்பு, காதல், துரோகம் பழிவாங்கல் ... என பல தளங்களில் சிரமமில்லாமல் பயணிக்கிறது கதை. பண்டைய சிந்துசமவெளி நாகரிகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்கை முறையையும் வெகு அழகாக விவரிக்கிறார் கதாசிரியர்.அதுவே ஒரு சில இடங்களில் 'ஓவர் டோஸ்' போல் ஆகிவிடுகிறது. கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஷிவாவை ஊர் ஊராக அலைய விட்டிருப்பது போல் ஒரு உணர்வு... நடுவில் வரும் இந்த தொய்வான நூறு பக்ககங்களை கடந்து விட்டால் கடைசி நூற்றி  ஐம்பது பக்கங்களும் செம விறுவிறுப்பு. ஷிவா சதியை (பார்வதியை) முதன் முதலில் பார்ப்பது,அவள்  பின்னாலேயே நம் வழக்கமான ஹீரோக்கள் போல தன்னை மறந்து போவது, பிக் அப் செய்வது, காதலில் உருகுவது, கல்யாணம் முடிப்பது  என இந்த காட்சிகள் அனைத்திலும் ஒரு வித சினிமாத்தனம் விரவிக்கிடக்கிறது. நமக்கு பிடித்த ஹிந்தி ஹீரோவை கற்பனை செய்து கொண்டு படித்தால் (ஹ்ரிதிக் ரோஷன் நன்றாக செட் ஆவார்!) , ஆன்மீக பாகம் தவிர்த்து இது ஒரு செம மசாலா மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்.

தெளிவான ஆன்மீக விளக்கங்களும், வரலாற்று குறிப்புகளும் தனி ஆவர்த்தனம் செய்யாமல்  கதையோடு பயணிக்கின்றன. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வட இந்திய பெயர்களுடன் வலம் வந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் கொடுத்து நினைவில் நிற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது கதைசொல்லியின் கைவண்ணம்!  

கதையின் பல இடங்களில் வரும் டாக்டர், வார் மஷீன்ஸ், டெரரிஸ்ட்  அட்டாக், ஹை ப்ரொபைல் டார்கெட், பாக்டரி  போன்ற வார்த்தைகள் இந்த கதை எந்த கால கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சோமரசத்தை உண்டவர்கள் இளமை மாறாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்வதும், சோமரசம் தயாரிக்க சரஸ்வதி நதிநீரைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது என்பதும், சோமரசத்தை  ஒரு தனி மலையிலே எக்கக்சக்க பாதுக்காப்புடன் தயாரிப்பதும்...கதாசிரியரின் அதீத கற்பனை என்பதா அல்லது கற்பனை வறட்சி என்பதா புரியவில்லை. 

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.முதல் புத்தகத்தை வாங்கும் போதே அடுத்த இரண்டு பாகங்களையும் சேர்த்து வாங்குவது நல்லது. முதல் பாகம் படித்து முடித்தவுடன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க பரபரக்கிறது மனது. 

Thursday, 23 January 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்




அது ஒரு அழகான குடும்பம். என் நெருங்கிய  தோழியின் உடன் பிறந்த அக்காவின் குடும்பம். என் தோழிக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா. அக்கா திருமணம் முடித்து கணவரோடு ஹோசூரில் செட்டில் ஆகி இருந்தார். அக்காவுக்கு மின் வாரியத்தில் எஞ்சினியர் வேலை. அக்கா வீட்டுகாரருக்கு பெங்களூருவில் சாப்ட் வேர் வேலை. அடிக்கடி வெளி நாடுகளுக்கும் சென்று வருவார். இரண்டு மகன்கள்.அக்கா அப்படி ஒரு அழகு. பன்னீர் புஷ்பங்கள் காயத்ரி மாதிரியே இருப்பார்.  அந்த கணவன் மனைவியின் அன்யோநியத்தை பார்க்கவே ஆசையாக இருக்கும். மாமாவின்(அக்கா கணவர்) நகைச்சுவை உணர்வால் வீடே கல கலவென இருக்கும்.

 தோழிக்கு அப்பா இல்லை.அப்பா இறந்த பின் அம்மா அக்கா வீட்டோடு தங்கி பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொண்டார். அண்ணனோ எந்த வித கவலையுமின்றி அவருடைய மாமனாரின் குடும்பத்தோடு ஏதோ ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தார். தாத்தா, பாட்டி எழவு, அப்பா எழவு என்று துக்கம் விசாரிக்க மட்டுமே இந்தியா வருவார். கோடை விடுமுறையில் நாமக்கலுக்கு ஏதோ நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு காரில் வந்தனர் அக்கா குடும்பத்தினர். 
கோவிலை சென்றடைவதற்கு  முன்னரே ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் அந்த கோர விபத்து நிகழ்ந்தது.  ஒரு லாரிக்கு பின்னால் சென்ற இவர்கள் காரை ஓவர் டேக் செய்ய முயன்ற பேருந்து ஒன்று, எதிரில் வேறேதோ ஒரு லாரி வர , இவர்கள் காரின்  பின்புறத்தில் கடுமையாக மோதியுள்ளது.  பின் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய பையனுக்கும்   அக்காவுக்கும் மட்டும் அடி. பையனுக்கு முகத்தில் அடி. அக்காவுக்கு எந்த காயமும் இல்லை. பின்னால் பேருந்து இடித்ததில் முன் சீட்டில் இடித்து அதே வேகத்தில் அப்படியே பின்னாடி சாய கழுத்து எலும்பு முறிந்து விட்டது. 

இன்ஸ்டன்ட் கோமா.  எந்த காயமுமே இல்லாமல் ஹெட் இஞ்சுரி, கோமா. டாக்டர்கள் கொடுத்த நம்பிக்கையின் பேரில் காத்திருந்தனர் குடும்பத்தினர். பிரைன் ஸ்டெம் அடி வாங்கி இருந்ததால் ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்க மாட்டார்.நிச்சயம் தேறி விடுவார் என்று நம்பிக்கை துளிர் விடும் போது அடுத்த நாள் படு மோசமாக போயிருக்கும் நிலைமை.  மாமாவும் , என் தோழியின் கணவரும்,  இரவு பகல் பாராமல் பழியாய் கிடந்தனர் மருத்துவமனையில். சேலத்திலிருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றினர். ஒரு வாரம் ஆயிற்று. ஹெட் இஞ்சுரி கேஸ்கள் என்ன ஆகும் என்று கணிப்பது மிகவும் கடினம். தலையில் அடிப்பட்டு நன்றாகவே இருப்பவர் திடீரென கோமாவுக்கு போவதும் கோமாவில் இருந்தவர் அடுத்த நாள் எழுந்து உட்கார்ந்து காபி குடிப்பதும் மனித மூளையின் பிடிபடாத ஆச்சர்யங்கள். அவ்வாறு ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டால் நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை கடவுளாகவும் , மருத்துவர் யாமறியேன் பராபரமே என வானத்தை நோக்கி கையை தூக்குவதும் சினிமாவில் அல்ல, நிஜத்தில் நிறையவே பார்க்கலாம்.

அதே வாரத்தில்  ஒரு காலை வேளையில் நண்பன் போன் செய்தான் அக்கா போயிடாங்க என்று. ஆக்சிடென்ட்  கேஸ் ஆதலால்  பிரேதப் பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். மாமா பித்து பிடித்தவர் போல் இருந்தார். சின்ன பையனுக்கு  விவரம் தெரியவில்லை சரியாக. கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தான். பெரியவன் ஒரு மூலையில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். தோழியின் அண்ணன் வழக்கம் போல எழவுக்கு வந்திருந்து காரியத்துக்கு கூட காத்திராமல் அடுத்த  நாளே கிளம்பிவிட்டான். 
ஒரு வழியாக நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து முடிந்தன. 
மாமாவின் குடும்பம் பெரிய குடும்பம். ஐந்து அண்ணன்கள். இவர் தான் கடைக்குட்டி.மாமாஅண்ணன்கள் குடும்பம் அங்கேயே டேரா போட்டிருந்தன. பதினோராம் நாள் காரியம் முடித்த அடுத்த நாளே மனசாட்சியே இல்லாமல் அவருக்கு மறுமண பேச்சை ஆரம்பித்தனர். 

கொதித்து போய்விட்டனர் தோழியின் அம்மாவும் அவள் கணவரும்.  மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் மாமா.தோழியும் அவள் அம்மாவும் அவர்களோடு சண்டை போட்டு ஒரு வழியாக இந்த டாபிக்கை கைவிட செய்தனர். தோழியின் அம்மா அங்கேயே தங்கி குழந்தைகளை கவனித்து கொண்டார். மூன்று மாதம் கழித்து மறுபடியும் பூதம் கிளம்பியது.  இந்த முறை மாமா ஆரம்பித்தார். 
தோழி அவள் கணவரோடு தன் அக்கா வீட்டிற்கு சென்று மாமாவோடு பேசினார்.  பெரியவன் இப்போது +2.  அவன் படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படி கேட்க, மாமா ஒத்துக்கொள்ளவில்லை. இப்ப கல்யாணம் பண்ணலேன்னா நாளைக்கே நான் செத்து போய்டுவேன் என்ற ரீதியில் பேசவே, தோழியும் அவள் கணவரும் சரி குழந்தைகளை தங்களிடம் கொடுத்துவிடுமாறு கேட்டனர்.  பேச்சு வளர்ந்து வளர்ந்து கடைசியில் கைகலப்பில் முடிய... மாமா தன் இறந்த மனைவியின் சொந்தபந்தங்கள் யாரும் வீட்டு பக்கம் காலடி வைக்க கூடாது என அனைவரையும் விரட்டி அடித்தார். தோழியின் அம்மா மட்டும் தன்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை என குழந்தைகளுக்காக அங்கேயே தங்கி விட்டார்.ஒரு தாய் இல்லாவிட்டால் எப்படியெல்லாம் ஒரு குடும்பம் அலைகழிக்கப்படுகிறது என்பதை பார்த்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் , அக்காவுடன் பணி புரிந்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ,மற்ற சொந்தபந்தங்கள் என அனைவரும் பார்த்து நொந்து போகாதவர்களே இல்லை.இந்த நொந்த லிஸ்டில் நானும் சேர்த்தி. தோழிக்கு ஆதரவாய் இருப்பதை தவிர வேறு எந்த ஆணியையும் எந்நாளும் என்னால் கழட்ட முடியாது. 

எனக்கு உள்ள ஆதங்கமே பதினைந்து வருடம் குடும்பம் நடத்திய மனைவிக்கு மாற்று மூன்றே மாதங்களில் ஒரு ஆணுக்கு தேவைப்படுகிறதா? இது கடந்த  ஒரு  வருடத்தில் நான் பார்க்கும் மூன்றாவது நிகழ்வு . இந்த  மாமாவே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கே உள்ளது மற்ற இரண்டு ஆண்களும் செய்தது . ஒருவர், மனைவி புற்றுநோயால் இரண்டு வருடம்  படாத பாடுப்பட்டு இறந்த மூன்றாவது மாதம் மேள தாளத்துடன் பத்திரிக்கை அடித்து தடபுடலாக திருமணமே முடித்துவிட்டார். இவர் ரொம்ப வெகுளி,விவரமே பத்தாது என்று பல முறை அவர் மனைவி சொல்ல கேட்டிருக்கிறேன்! மற்றொருவர் மனைவிக்கு  அடிக்கடி தலைவலி என்று டெஸ்ட் செய்யப்போய் மூலையில் கட்டி என்று கண்டறியப்பட்டு, உடனடியாக அறுவைசிகிச்சை செய்த பின் இரண்டு நாட்களில் இறந்துவிடுகிறார். எல்லாம் ஒரே வாரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட, இரண்டாவது மாதம்  ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டார்.  இந்த இருவருக்குமே குழந்தைகள் இல்லாமல் இல்லை. முதலாமவருக்கு கல்லூரியில்  படிக்கும் பையன்,இரண்டாமவருக்கு  பள்ளிக்கு செல்லத் தொடங்கியுள்ள இரண்டு நண்டு சிண்டுகள். இத்தகைய அவசர கல்யாணங்கள் எல்லாம் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளத்தான் என்று சொல்பவர்களை தூக்கிப்போட்டு யோசிக்காமல் சங்கிலேயே மிதிக்கலாம். இவர்களுக்கென்று,  கல்யாணம் ஆனால் போதும் என்று  தள்ளி விடப்படும் பெண்களும்,தோஷம் என்று மணம் தட்டிப்போன முதிர்கன்னிகளும் கிடைக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க இதைப்  போன்ற ஆண்கள் திருமணம் செய்யும் வேகத்தை பார்த்தால் இரண்டு விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கின்றன. ஒன்று,ஆண்கள் இந்த அளவுக்கா காய்ந்து போய் இருக்கிறார்கள் ? இரண்டாவது, மனைவியின் இடத்தில் வேறொருவரை ஏதோ வீட்டு வேலைக்கு ஆள் மாற்றுவதை போல ஜஸ்ட் லைக் தட் ஏற்றுக்கொள்ளும் திறமை. எல்லா ஆண்களையும் குறை சொல்ல வரவில்லை என்றாலும் இவர்களும் சராசரி குடும்பஸ்தனாக இருந்தவர்கள் தானே! யாரும் மனைவி சீக்கிரம் செத்து போய்விட வேண்டும் என்று வேண்டிக்  கொண்டிருந்த ஆசாமிகளும் அல்ல. சட சடவென தனது தேவைக்கேற்ப வாழ்கையை மாற்றி அமைத்து,அதை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் மனநிலையும் பார்த்து அசந்து போனேன்.

ஒரு இழப்பிலிருந்து மீண்டு வர எவ்வளவு காலம் ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும்? தெய்வாதீனமாக தப்பிப்பிழைத்த   ஒரு விபத்திலிருந்து மீண்டுவரவே ஒரு மனிதனுக்கு பல மாதங்கள் ஆகிறது. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒன்றாக படுத்து உறங்கி பிள்ளை பெற்று சுக துக்கங்களில் ஆதரவாய் நின்று, ஒரு ஆணின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிற ஒரு பெண்ணின் இழப்பை ஈடு செய்ய மூன்று மாதம் போதுமா? இதில் பெண்ணீயம் ஆணீயம் என்று எந்த ஈயம் பித்தளை பற்றியும் நான் பேசவில்லை. மனைவிகளின் மரணங்களைவிட எனக்கு அவர்கள் கணவர்களின் செயல்களே கடுமையான அதிர்ச்சியை தருகின்றன என்பதையே சொல்ல வருகிறேன்.

பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை என்று பல நூற்றாண்டு பழம் பல்லவியை இன்றும் வெள்ளித்திரையில் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் இந்த 'adaptive nature ' குறித்து எதிலும் கோடிட்டு கூட காட்டப்படுவதாக தெரியவில்லை.   
 நண்பிகளிடம் இந்த தலைப்பை பற்றி பேசிய பொழுது அவர்கள் தனக்கு தெரிந்த  கதைகளை கூறினார். அதே மனைவி அகால மரணம் கணவர் மூன்றே மாதத்தில் மறுமணம் கதைகள். ஆணோ பெண்ணோ வாழ்க்கைத்துணை இறந்த பின் வேறு துணையே தேட கூடாது, இறந்தவரையே நினைத்து கடைசி வரை உருகி உருகி சாகவேண்டும் என்ற லூசுத்தனமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஆண்களின் இந்த மறுமண வேகம் தான் ஆயாசத்தை தருகிறது. 

'கணவனை இழந்தோருக்கு காட்டுவதற்கு இல்'... மனைவியை இழந்தோருக்கு?உடனடியாக இன்னொரு பெண்ணை காட்டினால் போதும் போல!