அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு டிஏ அரியர்ஸ், இன்க்ரிமென்ட், ஈட்டிய விடுப்பு மாதிரி பழக்கப்பட்ட ஒரு வார்த்தை 'மெமோ'. பழக்கப்படாத வார்த்தை தமிழில் 'குறிப்பாணை'.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக மெமோ வாங்கியதாலோ என்னவோ பணியிடத்தில் நான் ஒரு கைப்புள்ளை. உடனே கைப்புள்ளைக்கே இந்த கதின்னா என்று யாரும் யோசிக்கப்படாது. கட்டதுரை யாருன்னும் கேட்கப்படாது.
ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு முதல் முறை மெமோ வாங்கிய போது முதல் வருடம் பிசியாலஜியில் முதல் கிளாஸ் டெஸ்ட்டில் ஃபெயில் ஆன போது கிடைத்த ஷாக் மறுபடியும் கிடைத்தது. இருக்காதா பின்ன? +2 வரை துக்ளியூண்டு புத்தகங்களை படித்து, உரு போட்டு ஜில்லாவிலேயே அதிக மதிப்பெண் பெற்று, இதுவரை பள்ளி வாழ்க்கையில் ஃபெயில் என்பதையே அறியாமல் இருந்துவிட்டு காலேஜ் வந்து பெயிலானால்? ஆங், அதே ஷாக் தான். தலைகாணி அளவு பெரிய புத்தகத்தில் படிக்கத் தெரியாமல் கப் வாங்கியது மறக்கவே முடியாது வாழ்நாள் முழுதும். அப்புறம் அதுவே பழகி விட்டது.ஃபெயில் ஆக அல்ல. மெமோ வாங்கினால் அலட்டிக்கொள்ளாமல் பதில் எழுத.
முதல் முறை மெமோ வாங்கிய போது கிடைத்த 'ஷாக் வேல்யூ'அடுத்தடுத்து வாங்கும் போது நீர்த்துப் போய் மெமோவுக்கான மதிப்பு குறைந்துவிடுவதென்னவோ உண்மை. அதே சமயம் மெமோ வாங்கி விட்டால் நம் குலப்பெருமையே களங்கப்பட்டு விட்டதாக நம்மை சுற்றி உள்ளவர் போடும் படங்களை தான் சகித்துக் கொள்ளவே முடியாது. உங்க பொண்ணு யார் கூடவோ ஓடி போயிடிச்சாமே என்ற ரீதியில் தொடரும் மெமோ பற்றிய போலியான விசாரிப்புகளை கடக்கவே அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும்.
நான் வான்டடாக ஜீப்பில் ஏறிய மற்றொரு விஷயம் கோர்ட் கேஸ். கோர்ட்டில் கிடைத்த ஆப்பு பத்தாது என்று காலேஜிலும் கிடைத்தது பம்பர் பரிசு.
வழக்கு தோற்ற கையோடு கேஸ் போட்ட மூவருக்கும் மெமோ கையில் திணிக்கப்பட்டது உச்சபட்ச கொடுமை. அந்த கேஸ் தோற்றதன் விளைவுகளை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருப்பது தான் ஆறாத சோகம்.
ஆனால் மெமோ வாங்கியதில் புரிந்து கொண்ட ஒரு அரிய உண்மை என்னவென்றால் நாம் கஷ்டப்படுகிறோமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், தனக்கு ஆதாயம் இல்லையெனில் நியாயத்துக்காக கூட உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதே. சிவப்பாக இருந்தாலே ரத்தம் தான், தக்காளி சட்னி அல்ல என நம்பும் என்னை போன்ற ஆட்களுக்கு ,சுற்றியிருந்த பலருடைய நீலச்சாயம் வெளுத்தது இந்த மெமோ விஷயத்தில் தான்.
மேலும் நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என்று நாட்டாமை சரத்குமார், விஜய்குமார் ரேஞ்சுக்கு கையில் சொம்போடு அலைந்தால் உண்மையிலேயே நாம் வாங்கும் மெமோக்களுக்கு என தனியாக ஒரு ஃபைலை சுமந்தபடி மரத்தடிக்கே வர வாய்ப்பிருக்கிறது.அதற்காக நேர்மையாக இருக்கவே கூடாது என்று சொல்ல வரவில்லை.ஹமாம் சோப்பு போட்டு குளித்தால் மட்டும் போதாது, அரசுப்பணியில் சமயோஜிதமாக நடந்துக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.
அரசுத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் மெமோ என்ற விஷயத்தை ஒரு மானக்கேடானா விஷயமாகவே கருதுகின்றனர், என் பெற்றோர் உட்பட .
இருவருமே அரசு பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள்.நான் வாங்கிய மெமோக்களினால் பெரிதும் வருந்தியது என் பெற்றோர் மட்டுமே. ஏனோ எனக்கு மெமோவுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுத்து வருந்த முடிந்தில்லை.
உண்மையிலேயே தவறு இழைத்து, அரசு விதிமுறைகளை மீறுவதற்காக தரப்படும் மெமோக்கள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவை. அவற்றுக்கான சரியான விளக்கத்தை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது மெமோ வாங்கியவரின் கடமை.
அரசுப் பணியில இதெல்லாம் சாதாரணமம்பா என்ற 'டேக் இட் ஈஸி ஆட்டிடியூட்' டிஎன்பிஎஸ்சி பரீட்சை எழுதும் போதே வந்துவிட்டால் நல்லது. அதை விட நல்லது அரசு வேலையாக இருந்தாலும் நேரமும் நேர்மையும் தவறாமல் இருப்பது.
டிஸ்கி:
இந்த பதிவுக்காக மண்டையை உடைத்துக் கொண்டு அரசு குறிப்பாணையை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள் என்று அவசியமில்லாமல் யாரும் பொங்கி பொங்கல் வைத்துவிடாதீர்கள். இது ஒரு ஜாலி பதிவு. அதற்கேற்ற முக்கியத்துவம் அளித்தாலே போதுமானது.