Monday 30 December 2013

க்ராவிடி


 

3D யில் பார்க்கத்தவறிய படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.அதனால்  ஹோம் தியேட்டரில்... 

படம் ரிலீசானவுடன் வந்த சுடச்சுட விமர்சனங்களை படித்து,ரசித்து,  அலசி ,ஆராய்ந்து ,கழுவி ஊற்றி முடிய பின் எல்லோரும் கிட்டதட்ட படத்தை மறந்தே போய்விட்ட நிலையில் இப்போது தான் இந்த படம் பார்க்கும் வாய்ப்பே எனக்கு அமைந்தது. 
அஸ்ட்ரோநோமி எனப்படும் விண்வெளி சம்பந்தமான சயின்ஸ் அறிவு உள்ளவர்கள் இந்த படத்தை ஒரு டெக்னிகல் குப்பை என்று விமர்சித்து இருந்தாலும் ஒன்றரை மணிநேரம் விண்வெளியில் மிதந்த , பறந்த, திக்கற்று அலைந்த உணர்வை பெற்றவர்களே அதிகம் என்று நம்பலாம்.ஏனென்றால் இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மற்றும் ஆஸ்கார் அவார்ட் லிஸ்டில் ரிசர்வ் செய்யப்பட்டுள்ள இடமும் அப்படி! 

படத்தில் இல்லவே இல்லாத ஒன்றைப் பற்றி தான் படத்தின் தலைப்பு சொல்கிறது- புவி ஈர்ப்பு. படம் முழுக்க முழுக்க அண்டவெளியில் நடக்கிறது.படத்தில் மொத்தமே 5 கதாபாத்திரங்கள் தான். அதில் நாம் படத்தில் பார்ப்பவை மூன்றே கதாபாத்திரங்கள்.அந்த மூன்றில், ஒருவர் இறந்த பின்பு ஓட்டை விழுந்த முகத்தையும்  மற்ற இருவரும் உயிரற்று மிதப்பதையும் மட்டுமே பார்க்கிறோம். வேறு எந்த ஜீவராசியும் கடைசி வரை கண்ணில் படுவதில்லை,படம் முடியும் போது வரும்  ஒரு சிறிய தவளையைத் தவிர. 

கதை இவ்வளவு தான்- பூமிக்கு மேலே 600 கி மீ தொலைவில் விண்வெளியில் சுற்றிகொண்டிருக்கும் ஒரு சாட்டிலைட்டின்  ஹப்பெல் (Hubble )டெலஸ்கோப்பினை ரிப்பேர் செய்ய   எக்ஸ்ப்ளோரர் 
 எனப்படும் விண்கலத்தில் வருகிறார்கள் டாக்டர் ரயான் ஸ்டோன்( Sandra Bullock),மிஷன் கமாண்டர்  மாத்யூ கொவல்ஸ்கி(George Clooney) மற்றும் அவரது மூன்று பேர் அடங்கிய குழு.

ரயான் ஸ்டோன் ஒரு மெடிக்கல்-எஞ்சினியர் (என்ன படிச்சிருப்பாங்க?? சரி விடுங்க, நமக்கு எதுக்கு). எக்ஸ்ப்ளோரர் விண்கலத்திற்கு வெளியே நின்று டெலஸ்கோப்பை ரிப்பேர் செய்துக் கொண்டிருக்க,கொவல்ஸ்கி முதுகில் ஒரு ஜெட் பாக்கை மாட்டிக்கொண்டு பறந்த படியே பாட்டு கேட்டுகொண்டே விண்வெளியில் இருந்து பூமியை ரசித்த வண்ணம் தொணதொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறார். திடீரென,  ரஷ்ய சாட்டிலைட்  ஒன்று வெடித்து சிதறியதால் அதன் துகள்கள் (shrapnel )படுவேகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் வருவதாக தகவல் வர விண்கலத்திற்கு வெளியே இருப்பவர்களை உடனடியாக உள்ளே வரும்படி அறிவிப்பு வருகிறது. ஆனால் இவர்கள் சுதாரித்து உள்ளே போவதற்குள் வேகமாக வந்த துகள் எக்ஸ்ப்ளோரர்  விண்கலத்தையும் தாக்க ரயான் எக்ஸ்ப்ளோரருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விண் வெளியில் வீசி எறியப்படுகிறார்.  எந்தவித கட்டுபாடுமில்லாமல் திக்கில்லாமல் தனியே அலறிய படி  சுழன்று கொண்டே இருளில் விழுகிறார்.  அவரைக் காப்பாற்றி எக்ஸ்ப்ளோரர் வின்கலதுக்கே கொண்டு வருகிறார் கொவல்ஸ்கி. வந்தபின்பே தெரிகிறது பாதி விண்கலமே மீதமிருப்பது. உள்ளே இருந்த மற்ற இருவரும் உயிரற்று மிதக்கிறார்கள். 
அங்கிருந்து ரயானும் கொவல்ஸ்கியும் தப்பிக்கிறார்களா பூமிக்கு வந்து சேருகிறார்களா என்பதே மீதமுள்ள விறுவிறுப்பான ஒன்னே கால் மணி நேர கதை. 

ஆக்சிஜென் இல்லாத, ஒலி பயணிக்காத, இருண்ட வெளியில் வரையறை இல்லாமல் மிதந்து கொண்டே போய் இன்னொரு விண்கலத்தில் ஏறுவது, ஒரு ஃபயர் எக்ஸ்டிங்கிஷர் வைத்துக்கொண்டு நகர்ந்துக்கொண்டிருக்கும்  மற்றொரு விண்கலத்தில் ஏறுவது என்று சகட்டு மேனிக்கு சாகசம் காட்டுகிறார் ரயான்.
இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனிலும்(ISS )சீன விண்கலத்திலும் ரஷ்ய  மற்றும் சீன மொழிகளில் உள்ள ஆபரேஷன் மேனுவலை படித்து படித்து  அநாயாசமாக கண்ட்ரோல் பேனலை கையாளுகிறார் ரயான் என்பதும் அவர் தவறாக அழுத்தும் எந்த பட்டனாலும் எதுவுமே ஆவதில்லை என்பதும் நம் தமிழ் படங்களை தூக்கிச்  சாப்பிடும் லாஜிக்   ஒட்டைகள்.ISS மற்றும் சீன விண்கலங்கள் எக்ஸ்ப்ளோரர் இருக்கும் இடத்திலிருந்தே தெரிவது, ஜீரோ க்ராவிடியில் ரயானின் முடி பறக்காமல் இருப்பது, கன்னாபின்னா வேகத்துடன் தெறித்து விழும் துகள்கள் எதுவும் ரயானின் மேல் மட்டும் படாமல் இருப்பது.....இது போன்ற "சயின்ஸ் டிஃபயிங் ஃபாக்ட்ஸ்"  எதுவும் என்னால்  முதல் முறை பார்த்த பொழுது சரியாக உணர முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஒரு க்ரிப்பிங் ஸ்க்ரீன்ப்ளே. ரயானுடன் சேர்ந்து எப்படியாவது பூமி வந்தால் போதும் என்ற தவிப்பு படம் முடியும் வரை குறையவே இல்லை. 

 சுற்றி நடந்தேறும் குரூரத்தின் தீவிரம் தெரியாமல் இருக்க ரயானிடம் பறந்துக் கொண்டே பேச்சுக் கொடுக்கும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அசத்தல்!மனிதர் எந்நேரத்தில் என்ன பேசுவது என்ற விதிமுறை இல்லாமல் ஜோக் அடிப்பது,கடைசி வரை தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் பேசிக்கொண்டே இருப்பது,  தன் உயிர் போனால் பரவாயில்லை என்று ஜஸ்ட் லைக் தட் விட்டுக்கொடுப்பது...என்று மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறார்.
ஸ்பீட் படத்திற்கு பிறகு சாண்டராவின் அற்புதமான நடிப்பினை இந்த படத்தில் காண முடிகிறது.தன் மகளின் இழப்பு, சாகப்போகிறோம் எனத் தெரிந்த பின் பூமியிலிருந்து கேட்கும் குரலோடு சேர்ந்து நாய் போல் கத்துவது, ஒரு குழந்தையின் அழுகையை கேட்டு ஒரு தாயாக உணர்வது, தனக்குதானே பேசி தன்னம்பிக்கை ஏற்றிக்கொள்வது என பலப்பல பரிமாணங்களில் பிரகாசிக்கிறார் . 

சன் ரைஸ், சன் செட் போன்றவற்றை விண்வெளியில் இருந்து பார்க்கும் பிரம்மிப்பையும், விண்கலத்திற்கு அருகே இருந்து பூமியை காட்டும் கோணங்களையும் வெகு அழகாக கிராஃபிக்சில் கொண்டு வருகிறார்கள். 3D யில் நிச்சயம் பலமடங்கு அசத்தலாக இருந்திருக்க வேண்டும். 
பூமி ,விண்வெளி ,சூரியன் ,விண்கலம் என எல்லாமே ஒரு அறைக்குள் கம்ப்யூட்டரில்  உருவாக்கப்பட்டவை என்பதை நம்ப மறுக்கிறது மனம். ஒலி பயணிக்க முடியாத விண்வெளியில் விண்கலங்கள் சத்தமே இல்லாமல் வெடித்து சிதறினாலும் நமக்கு மரண பயத்தை தருகிறது க்ராஃபிக்சுக்கு அடுத்த படியாக படத்தின் உயிர்நாடியான சவுண்ட்  ட்ராக். 

அவதார் படத்திற்கு பிறகு கிராஃபிக்சில் அசரடித்த மற்றொரு படம் என்று ஈசியாக சொல்லமுடியும். இந்த படத்தினை அபோல்லோ -13 படத்துடன் ஒப்பிட்டு வரும் விமர்சனங்கள் எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அபோல்லோ படத்தை இன்னும் பார்க்கவில்லை.

இயக்குனர் அல்போன்சோவின் முந்தைய படமான சில்றன் ஆஃப் மென் அருமையான ஒன்று.ஆனால்  க்ராவிடியின் கமெர்ஷியல் வெற்றி  அதை தூக்கி சாப்பிட்டுவிட்டது. ஒரு தனி மனிதன் ஆளில்லா தீவில் மாட்டிகொண்டு அவதிப்படும் (ஆஸ்காருக்காக எடுக்கப்பட்ட )காஸ்ட் அவே படத்துடனும் ஒப்பிட்டு விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் காஸ்ட் அவே  படத்தை சாய்ந்து உட்கார்ந்து சாவதானமாக பார்க்க முடிந்த மாதிரி இந்த படத்தை பார்க்க முடியாது...பூமியில் கால் படும் வரை நம்மையும்  டென்ஷனோடு இருக்க வைத்திருப்பது  இயக்குனரின் சாமார்த்தியம். 

பூமியில் எடுக்கும் லாஜிக் இல்லாத குப்பைகளை எவ்வளவோ ரசித்திருப்பதால் பூமியிலேயே இல்லாமல் முழுக்க முழுக்க விண்வெளியில் எடுக்கப்பட்ட படத்தில் எவ்வளவு ஓட்டைகள்   இருந்தால் என்ன! லாஜிக் பார்க்காமல்,ஏன் இவ்வளவு ஓட்டைகள் என்று சலித்துக்  கொள்ளாமல்  டெக்னிகல் புலிகளும் சயின்டிஸ்ட்டுகளும் கூட ஜாலியாக  ரசிக்கலாம்.  இந்தப்படம் நடக்க முடியாத ஒரு கற்பனை கதை என்று தோன்றாமல் ,சமகாலத்தில் விண்வெளியில் நடைப்பெறும் ஒரு எமோஷனல் டிராமா-த்ரில்லெர் என்ற வகையில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

Friday 20 December 2013

இது கதையல்ல நிஜம்.



நம்மை சுற்றி நடக்கும் சில  விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பின் நம்மை அறியாமல் கவனிக்கத் தொடங்கி விடுவோம் தானே? இது அதைப் போல நடந்த சில பல சம்பவங்களின் கோர்வை. 

ஒரு நாள் காலை வேளையில் காலேஜில் லேப் வேலை செய்து கொண்டிருந்த பொழுது  பயங்கர அலறல் சத்தம் கேட்டது. காரிடாரில் ஒரே இரைச்சல். வெளியே ஓடி எட்டி பார்த்தால் காரிடாரில் யாரோ தீ பற்றி எரிந்து கொண்டிருந்தார்கள்.   ஆணா  பெண்ணா தெரியவில்லை.உடம்பு முழுக்க தீ. ஹாஸ்பிடல்  பணியாளர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். சில தைரியமான மாணவர்களும் உதவிக்கு ஓடினர்.கலர் புடவை உடுத்திய ஒரு பெண்மணியும் மற்ற பணியாளர்களோடு சேர்ந்து போராடிக்  கொண்டிருந்தார்.அந்தப் பெண்ணின் உடையிலும் ஆங்காங்கே தீ. ஒரு வழியாக தீயை அணைத்து அந்த உருவத்தை ஆம்புலன்ஸில் அள்ளிப்போட்டுக் கொண்டு பறந்தனர். 

ஏதோ ஹாஸ்பிடல் பணியாளர் தானாம். லேபுக்கு பக்கத்திலேயே  கேஸ் ரூம்,கம்ப்ரஸார் ரூம். மற்றும் சீனியர் லேபில் பர்னேசும்(furnace)உண்டு.அதனால் எங்கிருந்து எப்படி  தீ பிடித்தது என்பதற்கு விதவிதமான கதைகளை கேட்டோம். எது உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை. அவரவருக்கு பிடித்த கதையை நம்பினோம். சில நாட்கள் கழித்து அந்த பணியாளர் இறந்துவிட்டதாக காலேஜ் நோட்டீஸ்  போர்ட் பார்த்து தெரிந்துக்கொண்டோம். அந்த காரிடாரில் இருந்து தேய்ந்து மறைந்த  கருப்பு தீக்கறையைப் போல கொஞ்சம் கொஞ்சமாக அந்த தீ விபத்து பற்றிய நினைவுகள் மறைந்து மறந்து போய்விட்டன.

இந்த சம்பவம் நடந்து சில வருடங்களுக்கு பிறகு வளர்மதி என்று ஒரு பெண்மணி ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்தார். முப்பத்தியைந்து வயது இருக்கும்.  தீ விபத்தில் இறந்துப்போன பணியாளரின் மனைவி கம்பாஷனெட் அடிப்படையில் வேலை கிடைத்ததாக சொன்னார்கள். வளர்மதிக்கு ஒரு பையன்.நான்கு ஐந்து வயதிருக்கும். அந்த தீ விபத்தின் கோரமான நினைவுகளை வளர்மதியின் முகத்தில் தழும்புகளாக காணமுடிந்தது. தீ விபத்து நடந்த அன்று அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த பெண்மணி இவர் தான் என்று கேள்விப்பட்டோம். ஒரு ஆர்வ மிகுதியில் வளர்மதி எதற்கு விபத்து நடந்த அன்று ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார் என நர்சுகளிடம் விசாரிக்கையில் பலப்பல ரகசியங்கள்  வெளியே வந்தன. உண்மையில் அவை ரகசியங்களே அல்ல. ஹாஸ்பிடலில் பெரும்பாலும் அனைவருக்கும் இந்த மேட்டர் தெரிந்திருந்தது. என்னைப் போன்ற ஒன்றிரண்டு மாக்கான்களை தவிர. 

அந்த பணியாளருக்கும் ஒரு நர்சுக்கும் ஏதோ கசமுசா .இது வளர்மதிக்கு  தெரிய வரவே அவர் நர்சிடம் சண்டைப்பிடிக்க நேரே காலேஜுக்கே வந்துவிட்டார். விபத்து நடந்த அன்று சண்டை எல்லை மீறிப்  போய்விட தலைவர் ஆத்திரத்தில் கேஸ்  ரூமில் வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றிப் பற்ற வைத்துக்கொண்டாராம்! 
அந்த நர்ஸ் யாரென்று தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். ஒரு குண்டு நர்ஸ். முகம் மட்டும் அழகாக இருக்கும். வளர்மதியும் குண்டு தான். ஏனோ தேவையில்லாமல் இருவரையும் ஒப்பிட்டு பார்த்து அந்த பணியாளரின் ரசனையை அலசிக்கொண்டிருந்தோம் ஹாஸ்டலில். 

  படிப்பு முடிந்து அடுத்த வருடமே அரசுப்பணியில் சேர்ந்து குப்பைகொட்டத்  தொடங்கினேன்.சில வருடங்களில் திருமணம் முடித்து மாற்றலாகி பட்டணத்தில் படு பிசியான ஒரு அரசு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆச்சர்யம்! அந்த அழகு நர்ஸ் அங்கே தான் இருந்தார். என் டிபார்ட்மெண்டிலேயே.இன்னும் கொஞ்சம் வெயிட் ஏறி இருந்தார். ஆனால் அதே அழகு முகம்.அவரைப் பார்த்தவுடன் ஒரு கணம் வளர்மதியும் அவள் மகனும் ' வாம்மா மின்னல்' மாதிரி ஒரு நொடி மண்டைக்குள்  வந்து போயினர். 
அந்த நர்ஸ் ஏன் அவ்வளவு வெயிட் போட்டிருந்தார் என்று அவரோடு வேலைப்பார்த்த கொஞ்ச நாட்களில் புரிந்துக்கொண்டேன். உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் வேலைப் பார்த்தார். அவரிடம் ஒரு வேலையை செய்யச் சொல்லும் நேரத்தில் அதே மாதிரி மூன்று நான்கு வேலைகளை செய்து முடித்து விடுவேன். வாழைப்பழத்தை விட வேறு பழம் இருந்தால் அவர் அந்த பழ சோம்பேறி. அவரிடம் வேலை வாங்கி நான் இளைத்துக்  கொண்டிருந்தேன்.அவர் கணவரும் அதே ஆஸ்பத்திரியில் பணியாளர் வேலை.மனைவியைப் பார்க்க அவ்வப்போது வருவார். ஒடிசலான தேகம். மனைவியைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுவார். எனக்கு பாவமாக இருக்கும். இவருக்கு அவர் மனைவியின் பழைய மேட்டர் எல்லாம் தெரியுமா தெரியாதா என்று அவரை பார்க்கும் போதெல்லாம் யோசிப்பேன்.ஆனால்  பழைய விஷயங்களின் சுவடே தெரியாமல் ஒரு புது சூழ்நிலையில் எந்தவித சலனமும் இல்லாமல் கச்சிதமாக செட்டில் ஆகி இருந்தார் அந்த அழகு நர்ஸ். 

அந்த ஆஸ்பத்திரியிலிருந்து மேல்படிப்பு படிக்க என்னுடைய பழைய காலேஜுக்கே வந்தேன். நான் படித்த   அதே துறையில் தான் வளர்மதிக்கு வேலை.இன்னும் குண்டாகி இருந்தாள். வளர்மதியை பார்க்க வேறு ஒரு  துறையிலிருந்த முரளி அடிக்கடி வருவான். வான் இல்ல வார். அவரைப் பார்த்தால் பணியாளர் என்று சொல்லவே முடியாது. வெள்ளையுஞ்சொள்ளையுமாக படு ட்ரிம்மாக இருப்பார். நாற்பது வயது சொல்லலாம். ஆனால் ஐம்பதை தாண்டியவர். அவரை டாக்டர் முரளி இருக்காரா  என்று விசாரித்து தேடி வரும் பல நோயாளிகளை பார்த்திருக்கிறேன்.  ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் பல பணியாளர்கள்  அவரவர் வாழும் ஏரியாவில் டாக்டராகவே இருக்கிறார்கள்! யாரோ ஒரு மெய்யாலுமே மருத்துவம் படித்த டாக்டரின் பெயரைப் போட்டுக்கொண்டு ப்ராக்டீஸ் செய்வார்கள். இதற்கு மாதாமாதம்  கணிசமான தொகை அந்த அல்ப டாக்டருக்கு கொடுத்து விட வேண்டும். சரி விடுங்க, நாம கதைக்கு வருவோம். 

முரளி பற்றி நிறைய புகார்கள் உண்டு. ஏற்கனவே மருத்துவமனையில் ஏதேதோ காணாமல் போய், சஸ்பென்ட் செய்யப்பட்டு கேஸ் நடந்து மறுபடியும் பணியில் சேர்ந்திருந்தார். முரளிக்கும் வளர்மதிக்கும் கசமுசா என்று ஆஸ்பத்திரிக்கே  தெரியும். முரளிக்கு கல்யாண வயதில் பிள்ளைகள் உண்டு.வளர்மதி தினமும் சமைத்து  முரளிக்கும் சேர்த்து ஒரு பெரிய கேரியர் எடுத்து வருவாள்.எந்தவித சங்கோஜமுமின்றி  இருவரும் ஒன்றாகவே ஆஸ்பத்திரி காரிடாரில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.எந்த ஒரு விஷயமும் அரைகுறையாகவோ அரசல் புரசலாகவோ தெரிந்தால் தான் சுற்றி உள்ளவர்கள் தனக்கு பிடித்த மாதிரி கதையை நெய்து விடுவார்கள். அட நாங்க இப்படி தான், எங்களுக்குள்ள அப்படி தான் என்று எல்லோருக்கும் தெரியும் படி நடந்துக் கொண்டால் சொந்தமாக நெய்து விட வழியில்லாமல்  சுற்றியுள்ளவர்கள் வாயடைத்து போவார்கள். இந்த ஜோடியின் விஷயத்தில் அதை தான் பார்த்தேன்.  

தன் மகனை படிக்க வைப்பதிலிருந்து எல்லாவற்றையும் முரளி தான் கவனித்து வருவதாக வளர்மதி பெருமையாக சொல்லுவாள். அந்த பையன் தன்னை அப்பா என்று கூப்பிட வேண்டும் என்று முரளி வற்புறுத்த இருவருக்கும் அடிக்கடி காரிடரிலேயே பெரும் சத்தத்தோடு குடும்பச்சண்டை நடக்கும்.யார் பையன் இவன்?  முரளி பையனா? இதென்ன புது குண்டு? அந்த பையன் இறந்து போன பணியாளரின் மகனே அல்ல என்று பலர் சொல்லத்தான் செய்தனர். எனக்கு தலையே சுற்றும்.இதைப்போல ஒரு உறவு/உரிமை  பிரச்சனையில் தானே ஒரு ஜீவன் தன்னைத் தானே எரித்துக்கொண்டது என்ற உண்மை அந்த இருவரையுமே சுடவில்லையா அல்லது எல்லாவற்றையும் எளிதாக கடந்து வந்து விட்டார்களா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.ஆருஷி கொலை வழக்கைப் போல சில உண்மைகள் கடைசி வரை வெளிவருவதே இல்லை.அதனால் யாரை நம்புவது என்று நமக்கு பிடிபடுவதும் இல்லை. 

நான் படித்து முடித்து அந்த பாழாய்ப்போன ஆஸ்பத்திரியிலேயே வேலைக்கு சேர்ந்தேன்.  அப்போது வளர்மதியை வேறு துறைக்கு மாற்றிவிட்டு முரளியை எங்கள் துறையில் போட்டிருந்தார்கள். முரளியை பார்க்க தினமும் வந்துவிடுவாள் வளர்மதி. அதே போல கேரியர் சாப்பாடு.வளர்மதி வேறு ஆண் பணியாளர்களோடு பேசினாலே முரளிக்கும் அவளுக்கும் அன்று தகராறு உறுதி.விதவிதமான  குடும்பச்சண்டைகளினூடே வாழ்ந்து வளர்ந்துக் கொண்டிருந்தனர்.  

உறவுகள் துரத்த வருடங்கள் ஓடின.  முரளி தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து அடுத்த வருடம் தாத்தாவாகி, ரிடையரும் ஆகிவிட்டார்.  இதற்கிடையே வளர்மதி நீண்ட  விடுமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டு விசாரித்ததில் அவளுக்கு ஏதோ புற்றுநோய் என்று சொன்னார்கள்.சில மாதங்களுக்கு முன்  முரளி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.கைத்தாங்கலாக ஒரு பதினாறு பதினேழு வயது வாலிபன்  அவரை ஏதோ சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தான். வாய் கோணி போய் பேசுவதே புரியவில்லை. பார்க்கவே பரிதாபமாக இருந்தார். சிறிது நாட்களுக்கு முன்னால் தான் பக்கவாதம் வந்து இப்படி ஆகிவிட்டது என்றார். அவர் அந்த வாலிபனை அழைத்த போது தான் கவனித்தேன். அது வளர்மதியின் மகன். அவனிடம் வளர்மதியைப் பற்றி விசாரித்தேன்.  சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் பணியில் சேருவார் என்றும் கூறினான். 

இந்த சம்பவங்கள் இப்போது திடீரென ஞாபகம் வர காரணம் நான் சமீபத்தில் அந்த அழகு நர்சைப் பார்க்க நேர்ந்தது தான். அந்த அழகு முகம் பொலிவிழந்து களையிழந்து போயிருந்தது. ஆளும் சற்று இளைத்திருந்தார். விசாரித்ததில் அவர் கணவர் போன மாதம் தான் திடீரென மாரடைப்பால் காலமானதாக சொல்லி அழுதார். ஏனோ மறுபடியும் வளர்மதியின் கணவர் அலறியபடி நெருப்போடு போராடிக்கொண்டு காரிடாரில் ஓடி வந்தது ஞாபகம் வந்து தொலைத்து. ஒரு மனிதனின் அகால மரணத்தை விட அந்த மரணத்திற்கான காரணம் சீக்கிரமே மறக்கப்படுகிறது என்று மறுபடி ஒரு முறை முரளி, வளர்மதியோடு சேர்ந்து நர்சும் நினைவூட்டினார். 

Monday 16 December 2013

அவன்


அவன் .  

காலையில் சீக்கிரமே முழிப்பு வந்து விட்டது. விண் விண்ணென்று யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்து எழுப்பினார்கள். சூடாக ஒரு ஸ்ட்ராங் காஃபி  தேவைப்பட்டது. டைம் 5:20 மின்னியது டேபிளில் டைம் பீஸ் .புதுசா அடிச்சி மண்ட வலி வந்தா பரவாயில்ல, எழவு வாரத்துக்கு ரெண்டு மூணு முறை அடிச்சாலும் என்ன கருமத்துக்கு இப்பிடி தலைய வலிக்குது. யோசனையோடு பல் துலக்கிவிட்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்தான். காஃபி டேபிளில் ஆவி பறக்க காஃபி.ச்சே நேத்து குடிச்சிருக்க கூடாதோ?

சக்கரை கம்மியாக  நுரையோடு பைப்பிங்  ஹாட் காஃபி. நுரையை மெதுவாக ஊத சூடான  ஆவி கண்களில் படிந்தது. சுகம். மண்டையிடியையும் சேர்த்து ஆவியாக்கும் வித்தை இந்த பானத்துக்கு இருப்பதாக நம்பினான். அவனுக்கு  மிகவும் பிடித்த பானங்களின் வரிசையில் இதற்கு இரண்டாவது இடம்.

பேப்பரை மேய்ந்துவிட்டு குளிக்க கிளம்பினான்.  கிச்சனில் குக்கர் விசிலடித்து. எங்க போனா இவ ஆளையே பாக்கல காலையில இருந்து என்று முனகிக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய ஹாலில்  இருந்த பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.படுக்கையில்  புரண்டு படுத்தாள் யாமினி, அம்மா என்ற முனகலோடு. சத்தம் போடாமல் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்த  பின் தான் தலைவலியில் கெய்சர் போட மறந்தது உறைத்தது. சலிப்போடு ஷவரை திருப்ப சூடாக வந்தது தண்ணி.  ஹாங்-ஓவரைப்  போல சில விஷயங்கள் டிஃபால்டாக நடக்கும் சரக்கடித்த அடுத்த நாள். நேத்து குடிச்சிருக்க கூடாதோ?

குளித்து முடித்து வெளியே வந்தான்.  யாமினி பாதி தூக்கத்தில்,கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து படுக்கையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள்.
"ஹாய் குட்டிம்மா குட் மார்னிங்".
"மார்னிங் அப்பா. எப்ப வந்தீங்க?" 
"லேட் ஆயிடிச்சி குட்டி நைட் வரும்போது".
"ஆமாப்பா நாங்க ரொம்ப நேரம் வெயிட் பண்ணோம்".

யாமினி குரல் கேட்டு  ஓடி வந்தாள். நேற்று காலையில் அலுவலகம் செல்லும் போது பார்த்தது. இப்போது தான் மறுபடியும் பார்க்கிறான்.தலைக்கு குளித்து ஈரத்துண்டு தலையில் கட்டி கும்மென்று வாசனையாக...புதுச்சேலையோ? பார்த்த மாதிரியே இல்லையே. ஐந்து வயது பிள்ளைக்கு அம்மா மாதிரியே இருக்க மாட்டாள். முப்பத்திநான்கு வயது என்று சொல்லவே முடியாது.  மிஞ்சிப் போனால் இருபத்தியாறு, இருபத்தியேழு சொல்லலாம். உருவி விட்டதை போல ஒரு  உடல் வாகு.அணைக்க இலகுவாக எக்ஸ்ட்ரா  மடிப்பு தடிப்பு எதுவும் இல்லாத அழகான வளைவான இடுப்பு. இந்த வளைவை காலை கிளம்பும் நேரத்தில் பார்த்து எத்தனை முறை ஆபீசுக்கு  லேட், பெர்மிஷன், லீவ்......குனிந்து யாமினியைத் தூக்கிகொண்டு வெளியே போய்விட்டாள். அவனை நிமிர்ந்து கூட  பார்க்கவில்லை. நேத்து குடிச்சிருக்க வேணாமோ? 

"அகீ, அவள குடு நீ போய் கிளம்பு"
"வரேங்க ". 
ஒரு வார்த்தை அதிகமா பேச மாட்டாள் அழுத்தக்காரி.எப்படி பேசுவாள் ? எவ்வளவோ முறை சொல்லி, திட்டி, அழுது, கதறி, சண்டையிட்டு  சலித்துப் போய்... அவளின் இந்த அனிமெடட் பேச்சுக்கு அவன் தான் காரணம்  என்று இருவருக்குமே தெரியும். வாடா போடா என்றிருந்த பேச்சு இப்போது... 
"இந்தாங்க" என்று யாமினியை தந்தாள்.  

ஷூ போடும் போது,
"இன்னைக்கு சீக்கிரம் வருவீங்களா?" 
அட ,அதிசயமா அவளா பேசறா. 
 "ம்ம்" 
முகத்தில் ஏதோ ஒரு பரவசம் தென்பட்டது. சொந்த கற்பனையோ? நேத்து அடிச்சது தெளியலையோ இன்னும்? மெலிதான புன்னைகையோடு உள்ளே சென்று விட்டாள். 

கடைசியாக  எப்போது அவளிடம் மனது விட்டு பேசியது என்று யோசித்துப் பார்த்தான். ஒரு  ஏழெட்டு  மாதமிருக்கும்.அந்த ஒரு நாள்.தேதி  எல்லாம்  ஞாபகமில்லை . அவளிடம்   கேட்டால்  தேதி, நேரம் , அஷ்டமி    நவமி , குளிகை  எல்லாம் சேர்த்து  சொல்வாள். பெண்களுக்கே உரிய குணாதிசயங்களில்  இதுவும் ஒன்று. ஆண்கள் மறக்க நினைப்பதை எல்லாம் கச்சிதமாக ஞாபகம் வைத்திருப்பது. அன்று நடந்த  அந்த  கோரமான  சண்டைக்குப்  பிறகு  அகி இவனோடு   சாதரணமாக  பேசுவதையே  குறைத்துக் கொண்டாள் . கேட்ட கேள்விக்கு நேர்த்தியான பதில். வெளியே கூட்டி செல்லும் போது மட்டும் இறுக்கத்தை தாண்டிய ஒரு சந்தோசம் முகத்தில் தெரியும்.  
ஆனால்  இன்று  வரை  அந்த  சண்டைக்கு  பிறகு  எந்த  கேள்விக்குமே  பதில்  சொல்லாமலோ  கோபமாகவோ  எடுத்தெறிந்தோ     பேசியதே  இல்லை . அவனோடு  கோபித்துக்  கொள்வதற்கான  உரிமை கூட   அவசியமற்றது போலவே பட்டும் படாமல் நடந்துக்கொள்வாள்.சண்டை நடந்த அன்று  சாயங்காலமே அவளை பீச்சுக்கு   அழைத்தான்.
" சரிங்க, போலாம்".  
ரெண்டே வார்த்தை.  அன்று ஆரம்பித்த இந்த 'ங்க' இன்று வரை மாறவில்லை.
 
பீச். யாமினி மணல் வீட்டோடு ஒன்றிப் போயிருந்தாள்.அகியிடம்  மன்னிப்புக்  கேட்டான் . 
"இட்ஸ்  ஓகே"  
"நான்  வேணும்னு  பண்ணல  அகீ. நீ  அப்பிடி கேட்டதும்  ரொம்ப  கோவம்  வந்துடுச்சி"
"ஸாரிங்க" என்று  ஒற்றை  வார்த்தையோடு  முடித்துக்கொண்டாள் . அதற்கு  மேல் அவனுக்கும்  என்ன பேசுவதென்றே  தெரியவில்லை . வாதமோ விவாதமோ இல்லாமல்  ஏதோ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவள் போல நிலாவையே வெறித்துக் கொண்டிருந்தாள். மௌனத்தோடும் ஈகோவோடும் மாறி மாறி சண்டையிட்டு கடற்கரை இருட்டில் தோற்றுக் கொண்டிருந்தான் அவன். 

இன்று சண்டை  எப்படி  ஆரம்பித்தது  என்று யோசித்தால்  சுத்தி  சுத்தி எங்கு  வந்து  முடியும்  என்று தெரியும். எத்தனையோ முறை போட்ட சண்டை தான். ஆனால் இன்று நடந்தது உச்சம்.
கண்ணு மண்ணு தெரியாமல் முரட்டுத்தனமாக அடி வெளுத்திருந்தான். இது தான் அவள் மீது கை நீட்டியது முதல் முறை. இது தான் கடைசி முறை என்று அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. தன்னால் இப்படி கூட நடந்துக் கொள்ள முடியும் என்பதே அவனுக்கு இன்று தான் தெரியும். இந்த நிமிடம் அவனை வெறுப்பு கோபம் குற்ற உணர்ச்சி இயலாமை எல்லாம் சேர்ந்து  போட்டிப் போட்டுக்கொண்டு மென்று தின்று சக்கையாய்  துப்பிக்கொண்டிருந்தன.  இத்தகைய அபாயகரமான உணர்வுகளை அவன் சில நிமிடங்களுக்கு மேல் அவனுள் குடிகொள்ள அனுமதிப்பதில்லை.உடனடியாக தெளிந்து   சண்டைக்கான  காரணத்தையே  மறுபடியும்  செய்தால்  தேவலை போல் தோன்ற,அவர்கள் இருவரையும்  வீட்டில் விட்டுவிட்டு  நண்பனுக்கு  ஃபோன் அடித்து ,அடுத்த  பத்தாவது  நிமிடம்   "அண்ணே ரெண்டு  ஆஃப்  பாயில்"  என்றான். இரவு  வீடு  வந்து சேரும்  போது மணி ரெண்டரை. சாப்பிடத் தோன்றாமல் அப்படியே கெஸ்ட் பெட்ரூமில் போய் படுத்துவிட்டான். லேட்டாக, டைட்டாக வரும் நாட்களில் எப்போதுமே கெஸ்ட் பெட்ரூம் தான்.  சரக்கடித்த அடுத்த நாள் கட்டாயம் அவளையும் குழந்தையையும் வெளியே அழைத்துச் செல்வான்.பல   டிஃபால்ட்டுகளில் இந்த சம்பிரதாயமும் ஒன்றாக பழகிவிட்டிருந்தது.சந்தோஷமாக வருவாள். புடவை , நகை, பூ, குழந்தைக்கு விளையாட்டு சாமான், புக்ஸ்... எதையாவது வாங்கி தருவான். சந்தோஷமாக வாங்கிக் கொள்வாள். எதுவுமே வாங்கவில்லையெனில் பீச், சினிமா , பார்க், மால், ஹோட்டல், கண்காட்சி..... இப்படி  எங்கயாவது! பொம்பளைங்கள குஷிப்படுத்தவா  வழி இல்லை.ஆனால் அப்போதும் அதே அளவான பேச்சு தான்.   அதை விட அளவான சிரிப்பு நடுநடுவே. ஆனால் யாமினியோடு கூட குழந்தையாகவே மாறி இருப்பாள்.  

இப்படி பேசாமல் இருப்பது ஒரு வகையில் அவனுக்கு வசதியாகவே இருந்தது. ஏன் இப்படி எங்கள கஷ்டபடுத்துறீங்க, இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவீங்க, யார் கூட இருக்கீங்க,எங்க இருக்கீங்க, ஏன் போன் எடுக்கவே இல்ல, உங்களுக்கு எங்க மேல அக்கறையே இல்ல... போன்ற பொண்டாட்டிகளின் டெம்ப்ளேட் வசனங்கள் இல்லாத வாழ்கையை தாண்டி தான்  ஒரு படி மேலே போய் விட்டதாக நம்பினான்.அகிலாவிடம் கிடைப்பதை விட ஆல்கஹாலிடம் கிடைக்கும் ஆர்கசம் அவனுக்கு பிடித்திருந்தது.பொண்டாட்டி பிள்ளையின் மேல் அக்கறையோ அன்போ இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு கல்யாணியோ ஓல்ட் மாங்க்கோ கண்ணுக்கு முன் நிழலாடும் போது அகிலாவும் யாமினியும் அவுட் ஆப் ஃபோகஸ் ஆகிவிடுகிறாள்கள். அப்போதெல்லாம் 
ஐயம் நாட் கட் அவுட் ஃபார் மாரீட் லைஃப் என்று தனக்கு தானே சொல்லிக்கொள்வான். 
இந்த சுயநலம் அவனுக்கு ரத்தத்திலேயே ஊறியிருந்தது, தன் அம்மாவை போல என்பதும் அவனுக்கு  நன்றாக   தெரியும். திருமணமான புதிதில் அகிலாவிடம் செய்து கொடுத்த சத்தியங்களையும்,  தன்னால் என்றுமே அப்படி இருக்க முடியாது என்ற முகத்திலறையும் அப்பட்டமான உண்மையும் அவன் மனதை என்றுமே கனக்க செய்ததில்லை .  இது தான் அவன். தன்னை சுற்றியுள்ளவர்களிடமும்,தன்னை  சார்ந்து உள்ளவர்களிடமும் அவனுடைய ' காம்ப்ரமைஸ் ' செய்து  கொள்ளாத ஆட்டிடியூட் சிறுவயதிலிருந்தே உரமிட்டு வளர்க்கப்பட்டதோ,கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டதோ... ஆனால் இது தான் அவன்!  

இன்று ஏன் இவ்வளவு  டார்டாயிஸ் கொசுவத்தி புகையுது மண்டைக்குள்ள  என்ற யோசனையோடு பார்கிங்கில் காரை பார்க் செய்துவிட்டு ஆபீசுக்குள் நுழைந்தான். வேலை என்று வந்து விட்டால் 'அல்கா' வை தூக்கி விட்டு 'வொர்க்க' ஹாலிக் என்று கண்ணை மூடிக்கொண்டு செர்டிபிகேட்  தரலாம். சாயங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு சுழன்றுக் கொண்டிருந்தான் .நல்ல பதவி,கை நிறையவில்லை என்றாலும் நிம்மதியாக வாழ போதுமான  சம்பளம். சொந்த வீடு,கார். அழகான பொண்டாட்டி பிள்ளை. கேடு கேட்ட நண்பர்கள்.  
சரியாக ஆறு மணிக்கு ஃபோன் அடித்தது.
 "டேய் மச்சான்... "
அவ்வளவு தான். எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆனது. அந்த கேடு கெட்ட மச்சானுக்கு டாட்டா பை பை சொல்ல நள்ளிரவு ஆனது. அதே  கெஸ்ட் பெட்ரூம் தூக்கம்.அதே விடியற்காலை மண்டையிடி. அதே காஃபி. 

டேபிளின் மேல் ஒரு பொக்கே.

ஹாப்பி பர்த்டே  டியர் என்ற சிறிய வாழ்த்து அட்டையோடு. 
"ஹோ ஷிட்!!  "
எப்படி மறந்தேன்? காதலித்த காலத்திலிருந்தே ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவளை ஆச்சர்யப்படுத்தி குஷிபடுத்தி திக்குமுக்காட வைத்து விடுவான்.தலைக்கு குளித்து  புது புடவை...சாயங்காலம் சீக்கிரம் வருவீங்களா...முகத்தில் தெரிந்த பரவசம்... ச்சே! காஃபி குடித்தும் மண்டையோடு மனமும் சேர்ந்து கொண்டது இடிக்கும் வேலையில்! வெறுப்பாக இருந்தது. 

கிச்சனில் சத்தம் கேட்டது. 
"ஸாரி, நேத்து ஆபீஸ்ல இருந்து வர லேட் ஆயிடுச்சி"
"பரவாயில்லைங்க". 
இதுக்கு செருப்பாலேயே  நாலு சாத்து சாத்தி இருக்கலாம். 
"உனக்கு என் மேல கோவமே வரலையா?" 
"எதுக்குங்க?" 
சரி தான்.   
அது எதுக்குங்க?? இல்லை.  எதுக்குங்க. முற்றுப்புள்ளி. அவள் பதில்களுக்கு திருப்பி கேள்வியும் கேட்க முடியாது. அவளுடைய கேள்விகள் போன்ற முற்றுப்புள்ளி வாக்கியங்களுக்கு  பதிலும் சொல்ல முடியாது. ச்சை! எல்லா உரையாடல்களும் அறுபது நொடிக்குள்ளேயே முடிந்துவிடுகின்றன. அடுத்த உரையாடலுக்கு ஒரு கமெர்ஷியல் பிரேக் கொடுத்து புது டாபிக் ஆரம்பிக்க வேண்டும். 
 
அவள் பிறந்த நாளைக்காவது அவளை அசத்தி பழைய மாதிரி பேச வைத்து விட வேண்டும் என்று ஏதேதோ  மனக்கணக்கு  போட்டு  வைத்திருந்தான். இவளை ஜடமாகவே மாற்றி விட்டோமோ?
"சாயந்திரம் வெளில போலாமா?"என்றான் ஷூ போட்டுக்கொண்டே.பிரேக் முடிந்து  புது டாபிக். அழுத்தமாக சிரித்துக்கொண்டே 
"சரிங்க" என்றாள். இது அவளுடைய வழக்கமான சிரிப்பு இல்லையே. 
மனதை என்னவோ செய்தது அந்த சிரிப்பு. யாமினியை பள்ளியிலும் அவளை பஸ் ஸ்டாப்பிலும் இறக்கி விட்டான். 
"வரேன் அகீ". 
"சரிங்க"
மறுபடியும் அதே அன்யூஷுவல் சிரிப்பு. எப்போதும் சிரிக்கும் சிரிப்பில் எந்த அர்த்தமுமே அவனுக்கு பிடிப்பட்டதில்லை. அது ஒரு ஜீவனில்லாத ஷாலோ ஸ்மைல்.அவ்வளவு தான். இன்று அவனுக்கு அந்த சிரிப்பில் பல நூறு அர்த்தங்கள் தெரிந்தன, ஆனால் புரியவில்லை. 

அவளை உணர்ச்சி யற்ற ஜடமாக்கி விட்டோமா இல்லை அவள் என்னை ஜடம் என்கிறாளா? 
 சம்பாதிக்கும், சரக்கடிக்கும், வெளியில கூட்டிட்டு போகும்.இதை தாண்டி  அகியை பொறுத்தவரை தான் ஒரு ஜடம். அதாவது டம்மி பீஸ்.தன்னை ஒரு மெஷீன் போல நினைக்கிறாள் அகீ என்ற உண்மை கொஞ்சம் சுடத்தான் செய்தது.அகியின் சிரிப்பிற்கான அர்த்தம் புரிந்தது போல் இருந்தது.யோசிக்க யோசிக்க மறுபடியும் மண்டையிடி. இது நாள் வரை இது எப்படி உறைக்காமல் போனது ? பிறந்த நாளைக்கு தான் ஒரு விஷ் பண்ணாதது கூட அவளுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. ஏன்? 

சட்டென்று டேபிளின் மேல் இருந்த ரோஜா  கொத்து மூளையை துளைத்தது.  பொக்கே யார் கொடுத்தது? உண்மையாகவே யார் கொடுத்த பொக்கே அது என்று கேட்க ஏனோ தன்மானம் இடம் தரவில்லை.
அவளுடைய தோழிகள் யாரும் இது நாள் வரை அவளுக்கு பொக்கே கொடுத்ததில்லை. பெண்களுக்குள் பெரும்பாலும் பொருட்களே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. பூக்கள் அல்ல.  அவளுடைய தோழிகள் , நண்பர்கள் எல்லோரையும் ஃபோன் கான்டாக்ட் லிஸ்ட்டை ஸ்க்ரோல் செய்வதைப் போல கண்ணைமூடி நியூஸ் ரீல் ஓட்டிப் பார்த்தான். ம்ம்ம்ஹூம்.அவளுடைய ரசனை அறிந்த   யாரோ தான் கொடுத்திருக்க   வேண்டும். அவளுக்கு பிடித்த ரோஸும் அல்லாத ஆரஞ்சும் அல்லாத ஒரு பெயர் தெரியாத நிறத்தில் ரோஜா கொத்து.இத்தனை வருடமாக இவன் கொடுத்ததை தவிர எந்த பூங்கொத்தும் வீட்டிற்கு வந்ததில்லை. இது நேரம் வரை சாதாரணமாய் தெரிந்த அழகான பொக்கே இப்போது தன்னைப் பார்த்து ஏளனமானாக சிரிப்பது போல் தோன்றியது.ஃபார்மலாக யாரவது கொடுத்திருக்கும் பட்சத்தில் எதற்கு அந்த 'டியர்'? 'ஹாப்பி பர்த்டே டியர் அகிலா' என்று போட்டிருந்தால் இவ்வளவு குடைச்சல் இருந்திருக்காதோ? "டியர்" என்று தொக்கி நிற்கும் அந்த சிறிய வார்த்தை  பாறாங்கல்லை விட அதிகமாக நெஞ்சுக்குள்  கனக்க ஆரம்பித்தது. இதுவரை சந்தித்திராத ஒரு புது அரக்கன் மண்டைக்குள் முக்காலி போட்டு உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான். 

முதல் முறையாக சரக்கில்லாமலே தலை கிறுகிறுத்தது. தன்னை ஒரு 'கணவனாக' உணரத் தொடங்கி இருந்தான். 

Tuesday 10 December 2013

காடும் காடு சார்ந்த நாமும்

காடும் காடு சார்ந்த நாமும்...

EPIC ( எபிக்)

3 D யில் திரையரங்கில் காண முடியாமல் போன படங்களில் இதுவும் ஒன்று.  தற்போது வழக்கம் போல சீடியில்.

கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. காட்டை அழிக்கத் துடிக்கும் போகன்(boggan) எனப்படும் நச்சு கிருமிகளிலிருந்து காட்டின் உயிர்நாடியை இலை மனிதர்கள் காப்பாற்றுவதே கதை.
பச்சைப் பசேலென  இருக்கும் காடுகளுக்கு தாரா என்ற ஒரு கருப்பழகியே ராணி. காட்டின் உயிர் நாடி.நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பௌர்ணமி நாளில் தனது வாரிசை தேர்ந்தெடுக்க செல்லும் தாரா போகன்களால் தாக்கப்பட , தேர்ந்தெடுத்த ஒரு தாமரை மொட்டுக்கு(pod) தனது சக்தி அனைத்தையும் கொடுத்து அந்த மொட்டை காட்டில் தனது நாயை தேடி வரும்  ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளரின்  மகளிடம் ஒப்படைத்து விட்டு உயிர் துறக்கிறார். பௌர்ணமி நிலவொளியில் அந்த தாமரை மொட்டு மலரும் வரையில் வில்லன்களிடமிருந்து அதனை கட்டிக் காப்பதே மீதி கதை.

காட்டில் வாழும் இலை தழை பூ காய் கனி பூச்சி பொட்டு என அனைத்துக்கும் மனித வடிவம் கொடுத்து சற்றே கற்பனைக்கலந்து அழகழகான ஆடை அணிவித்து  கிராபிக்சில் அசரடிக்கிறார்கள். பூவும் இலையும் கலந்தது போன்ற தாராவின் ஆடை வடிவமைப்பு , இலை மனிதர்கள் மற்றும் காளான் முதல் அனைத்து பூக்களுக்கும் பூச்சிகளுக்கும் ஆடை தேர்வு ஒரு தேர்ந்த டிசைனரின் கைவண்ணத்தில் மனதை கொள்ளை கொள்கிறது.

இலை மனிதர்களின் (leaf men)தலைமைக்காவலர் ரோனின்னுக்கும் தாராவுக்கும் இடையே சொல்லப்படாமல் இழையோடும் ஒரு மெலிதான காதல் படத்தின் முதல்  முப்பது நிமிடங்களுக்குள்ளாகவே இறந்து விட்டாலும் காட்டின் உயிர்நாடியான  தாராவின் கதாபாத்திரம் படம் முழுக்க வியாபித்திருக்கிறது.  

இதற்கிடையே இலை மனிதன் இனத்தை சேர்ந்த ஒரு விடலைப் பையனின் விளையாட்டுத்தனம், ஒரு டெடிகெடெட் இயற்கை வள ஆராய்ச்சியாளரின் இலை மனிதர்கள்/பச்சை நிறப் பறவைகள் பற்றிய  கண்டுபிடிப்புகள், இவர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு இலை மனிதர்கள் அளவுக்கே சிறிதாக்கப்பட்டு அவர்கள் உலகத்திற்கே செல்லும் ஆராய்ச்சியாளரின் மகள் என்று அழகாக புனையப்பட்ட கதையில் நம் திரைப்படங்களில் வருவதைப் போலவே கோட்டா ஸ்ரீனிவாச ராவ்  மாதிரியான ஒரு கொடூர வில்லன்,முதல் அரைமணி நேரத்திலேயே செத்துப் போகும் வில்லனின் மொன்னையான மகன் அதற்குப் பழி தீர்க்கத் துடிக்கும் அப்பா
என்று அரதப்பழசான புளித்த மாவையும் டொமேட்டோ   ஊத்தப்பம் போல அலங்கரித்து தருகிறார்கள்.சுவையாகத்தான் உள்ளது!

இலை மனிதர்கள் பச்சை பறவைகளின் மேல் பறப்பது ஒரு வகை அழகு என்றால் மான்  கொம்பின் மீதமர்ந்து காட்டில் ஆராய்ச்சியாளர் மகளும் விடலைப் பயனும் வலம் வரும் காட்சி ஒரு அழகான கவிதை!
மூன்றே காலுடைய ஆராய்ச்சியாளரின் நாய், தாராவின் நண்பர்களான இரு நத்தைகள், மத குரு போன்ற கதாபாத்திரத்தில் வரும் மண்புழு ,ராணியாக ஆசைப் படும் ஒரு சிறு பூ(பெண்) ... என்று எல்லா கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் கதையை நகர்த்த உதவுகின்றன.

க்ராபிக்ஸும் இசையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு நம்மை படத்தோடு லயிக்க வைக்கின்றன.
AVATAR & HONEY I SHRUNK THE KIDS போன்ற படங்களை   சில பல இடங்களில் நினைவூட்டினாலும் குழந்தையோடு குழந்தையாக நிச்சயம் ரசிக்க முடிந்ததென்னவோ உண்மை.

தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் என்னைப் போல் சீடியிலாவது பார்த்து விடுங்கள்!
......
அழகான இந்த கிரீன் மூவியை ரசித்து விட்டு அடுத்த நாள் மகனுடைய பள்ளிக்கு அவனை அழைத்து சென்றேன். நான் விடுமறை எடுத்திருந்ததால் எனக்கு மிகவும் பிடித்த இந்த வேலையை செய்யும் பாக்கியம் கிட்டியது.யோஹான் பள்ளியில் மாதம் ஒரு முறை முதல் வெள்ளிக்கிழமை கலர் டே. என்ன கலர் என்று முன்பே நமக்கு மெசேஜ்   வந்துவிடும்.கலர் டே அன்று ஒரே நிறத்திலும் அந்த நிறம் சார்ந்த வண்ணங்களிலும் (shades )வித விதமான ஆடைகளில் குழந்தைகளை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி. அன்று முழுதும்  ரைம்ஸ், பூ பழம் காய்கறி விலங்கு பறவை என அனைத்தும் அந்த நிறம் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும்.

இந்த மாதம் பச்சை.
யோஹனுக்கு ஒரு பச்சை சொக்காயை போட்டு பள்ளிக்கு அழைத்து சென்றேன்... ஆஹா பச்சை பச்சையாய் குழந்தைகள்! அது மட்டுமல்லாது பள்ளியையே பச்சையாக மாற்றி இருந்தார்கள்.  இதற்கு முன் வேறு கலர் நாட்களில் பள்ளியை இப்படி பார்த்தது இல்லை!
செயற்கை மரம், செயற்கை புல்வெளி, பச்சை காய்கறிகளில் படகு, கிரீடம், முதலை என்று எக்கச்சக்க பச்சை! அன்று ஆசிரியர்களும், ஒரு சில பெற்றோரும்( அம்மாஸ்!)  கூட பச்சை நிறத்தில் உடுத்தி இருந்தார்கள் ! கோ கிரீன் என்ற பெரிய பெரிய தெர்மாகோல் எழுத்துக்கள் வாசலிலேயே தோரணமாக தொங்க விடப்பட்டு இருந்தது. கோலம் கூட பச்சையாய்!பள்ளி   ப்ரீ ஸ்கூல் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு பசுமையின் முக்கியத்துவத்தை உணர வைத்து விட முடியும்?ஆனாலும் கடுமையாக மெனக்கெட்டிருந்தார்கள் பள்ளி நிர்வாகத்தினர்.  முதல் நாள் எபிக் படத்தை பார்த்துவிட்டு வந்து அடுத்த நாளே இப்படி பச்சை பச்சையாய்   பார்த்ததில் யோஹனுக்கு கொண்டாட்டம் தாளவில்லை.படத்தை பார்த்ததிலிருந்தே யோஹான் இந்த செடி ப்ரீத்(breath) பண்ணுதும்மா சத்தம் கேக்குதா , அந்த க்ரோ மேல போக்கன்ஸ்  வராங்கம்மா,  இந்த குட்டி பேர்ட் மேல ஏன் லீப் மேன் இல்ல என்று காட்டிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.பள்ளியிலிருந்து வந்து அன்று இரவு தூங்கப்போகும் வரை  காய்கறி,செடிகளை எல்லாம் எபிக் படத்தோடு ஒப்பிட்டுக் கொண்டே இருந்தான்!
பச்சை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி மூக்குக்கு மலர்ச்சி காதுக்கு கிளர்ச்சி போன்ற தத்துபித்துகளை தாண்டி என்னையும் சில  மணித்துளிகள் குழந்தையாய் உணர வைத்த பள்ளி நிர்வாகத்தினரை நேரில் பார்த்து பாராட்டி விட்டு வந்தேன்.

பச்சையா போங்க!  I mean GO GREEEEEEN!! 

Saturday 7 December 2013

டிரைவிங் #1




எனக்கும் டிரைவிங்குக்கும் அப்படி ஒரு  ஏழாம் பொருத்தம் சிறுவயதிலிருந்தே!

 எனக்கு பெரிய சைக்கிள் பழகி விட்டது எங்கள் எதிர் வீட்டு அண்ணன். சைக்கிள் பழகிய புதிதில் நன்றாக ஓட்ட  மட்டுமே தெரியும் ஆனால் ஏற இறங்க வராது. யாரவது சைக்கிளை பிடித்துக் கொண்டால் தான் இறங்க வரும். 

பழகிய புதிதில் அண்ணன் ஏற்றி விட வண்டி ஒட்டிக்கொண்டிருந்தேன்... ஒரு தெருவில் நுழைந்து அடுத்த தெரு வழியாக வருவேன் எங்கும் நிற்காமல்.  அண்ணன் ஏற்றி விட்ட இடத்தில் எனக்காக காத்துக்கொண்டு இருப்பார், இறக்கி விட.
அவ்வாறு ஒரு நாள் பெரிய சைக்கிளில் அடுத்த தெரு சுற்றி வரும்போது அண்ணனைக் காணவில்லை. இன்னொரு சுற்று போய் வந்தேன்.  அப்போதும் அவரைக் காணவில்லை. 

சரி எதையாவது தாங்கி பிடித்து குதித்து விடலாம் என்ற எண்ணத்தில் எதிர்வீட்டில் முடிந்து போன ஒரு விசேஷத்திற்காக இன்னும் கழட்டப்படாமல் கட்டி வைத்திருந்த  வாழைமரம் கண்ணில் பட்டது. மெதுவாக ஒட்டி வாழைமரம் அருகில் வந்ததும் அதை பற்றிக்கொண்டேன்.ஆனால் ஒரே நேரத்தில் வாழைமரத்தையும் சைக்கிளையும்  விட்டு குதிக்கத் தெரியவில்லை. மரத்தை இறுகப்பற்றிக் கொண்டு கால்களைத் தூக்கியவுடன் சைக்கிள் கீழே விழுந்து விட்டது....நான் மட்டும்  வாழைமரத்தை கட்டிக்கொண்டு குதிக்கவோ சறுக்கி இறங்கவோ பயந்துக்கொண்டு  குரங்கு மாதிரி தொங்கிக் கொண்டிருந்தேன்! 

தெருவிலும் அவ்வளவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரமது. என்னைக் கடந்து சென்ற ஒரு சிலரும் நான் வாழைப்பழம் பறிக்க முயற்சி செய்வதாகவே நினைத்திருப்பர் போல... இதுல ஏறி ஏம்மா குட்டி விளையாடுற என்ற பார்வையுடனே நிற்காமல் சென்றனர்.  

தெருவில் போவோர் உதவாததர்க்கு மற்றுமொரு காரணம்  என்னுடைய திமிரு தான். இறக்கி விடுங்க என்று யாரையாவது கேட்டிருக்க வேண்டும்.செய்யவில்லை.கத்திக்  கூப்பாடு போடவும் இல்லை.பழம் பறிக்க ஏறிய  அறியாப்பிள்ளை போலவே திருட்டு முழியுடன் சத்தமில்லாமல்  டிரைவிங்# 1

எனக்கும் டிரைவிங்குக்கும் அப்படி ஒரு  ஏழாம் பொருத்தம் சிறுவயதிலிருந்தே!

 எனக்கு பெரிய சைக்கிள் பழகி விட்டது எங்கள் எதிர் வீட்டு அண்ணன். சைக்கிள் பழகிய புதிதில் நன்றாக ஓட்ட  மட்டுமே தெரியும் ஆனால் ஏற இறங்க வராது. யாரவது சைக்கிளை பிடித்துக் கொண்டால் தான் இறங்க வரும். 

பழகிய புதிதில் அண்ணன் ஏற்றி விட வண்டி ஒட்டிக்கொண்டிருந்தேன்... ஒரு தெருவில் நுழைந்து அடுத்த தெரு வழியாக வருவேன் எங்கும் நிற்காமல்.  அண்ணன் ஏற்றி விட்ட இடத்தில் எனக்காக காத்துக்கொண்டு இருப்பார், இறக்கி விட.
அவ்வாறு ஒரு நாள் பெரிய சைக்கிளில் அடுத்த தெரு சுற்றி வரும்போது அண்ணனைக் காணவில்லை. இன்னொரு சுற்று போய் வந்தேன்.  அப்போதும் அவரைக் காணவில்லை. 

சரி எதையாவது தாங்கி பிடித்து குதித்து விடலாம் என்ற எண்ணத்தில் எதிர்வீட்டில் முடிந்து போன ஒரு விசேஷத்திற்காக இன்னும் கழட்டப்படாமல் கட்டி வைத்திருந்த  வாழைமரம் கண்ணில் பட்டது. மெதுவாக ஒட்டி வாழைமரம் அருகில் வந்ததும் அதை பற்றிக்கொண்டேன்.ஆனால் ஒரே நேரத்தில் வாழைமரத்தையும் சைக்கிளையும்  விட்டு குதிக்கத் தெரியவில்லை. மரத்தை இறுகப்பற்றிக் கொண்டு கால்களைத் தூக்கியவுடன் சைக்கிள் கீழே விழுந்து விட்டது....நான் மட்டும்  வாழைமரத்தை கட்டிக்கொண்டு குதிக்கவோ சறுக்கி இறங்கவோ பயந்துக்கொண்டு  குரங்கு மாதிரி தொங்கிக் கொண்டிருந்தேன்! 

தெருவிலும் அவ்வளவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரமது. என்னைக் கடந்து சென்ற ஒரு சிலரும் நான் வாழைப்பழம் பறிக்க முயற்சி செய்வதாகவே நினைத்திருப்பர் போல... இதுல ஏறி ஏம்மா குட்டி விளையாடுற என்ற பார்வையுடனே நிற்காமல் சென்றனர்.  

தெருவில் போவோர் உதவாததர்க்கு மற்றுமொரு காரணம்  என்னுடைய திமிரு தான். இறக்கி விடுங்க என்று யாரையாவது கேட்டிருக்க வேண்டும்.செய்யவில்லை.கத்திக்  கூப்பாடு போடவும் இல்லை.பழம் பறிக்க ஏறிய  அறியாப்பிள்ளை போலவே திருட்டு முழியுடன் சத்தமில்லாமல்  தொங்கிக் கொண்டிருந்தால் யார் வருவார் உதவ ?    

சும்மாங்காட்டி கட்டி நிறுத்தி வைத்திருந்த வாழைமரம் சிறுது நேரத்திலேயே ஆட்டம் கண்டு மரத்தோடு சேர்ந்து சைக்கிள் மேலேயே விழுந்தேன். விழுந்தவுடன் எழுந்து யாரவது பார்த்துவிட்டார்களா என்பதை உறுதி செய்துக் கொண்டு சத்தம் கேட்டு ஆள் வருவதற்குள் எழுந்து சைக்கிளை அங்கிருந்து உருட்டி வந்துவிட்டேன்.  பின்னரே எங்கே அடிப்பட்டது என்று தேடினேன்.பெரிய அடி எதுவும் இல்லாத காரணத்தினால் வீட்டிலும் சொல்லவில்லை.

ஆட மாட்டாதவளுக்கு  கூடம் பத்தல கணக்காக சரியாக ஏற இறங்க பழகாத என் தவறைக் காட்டிலும் எனக்காக காத்திருக்காத அண்ணன், சின்ன சைக்கிள்  இல்லாததால் உயரமான சைக்கிள் வாடகைக்கு தந்த சைக்கிள் கடைக்காரர்,எனக்கு உதவாமல் என்னைப் பார்த்து சிரித்திக்கொண்டே  கடந்து சென்றவர்கள், வாழைமரத்தை சரியாக கட்டாத விசேஷ வீட்டுக்காரர்கள் என எல்லார் மீதும் சரமாரியாக கோபம் வந்து திட்டித்தீர்த்தேன் மனதுக்குள்..அவமானம் தாங்காமல். 

சைக்கிளயும் வாழைமரத்தையும் பார்க்கும் போதெல்லாம் இந்த குரங்கு போஸை நினைத்து வெகு நாட்கள் சிரித்துக் கொண்டிருந்தேன்.   

பழைய நினைவுகளைக் கிளறியது வழக்கம் போல என் செல்ல வாண்டு தான்!
இன்று யோஹனுக்கு புஷ் ஸ்கூட்டர் பழகும் போது கால்  இடறி விழுந்தவன் அதே வேகத்தில் எழுந்தும் விட்டான்.எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  மெதுவாக பின்னர் தனக்கு அடிப்பட்டதை ஆராய்ந்து ,சற்று யோசனைக்குப்பின் என்னைக் கண்டவுடன் 
அழ ஆரம்பித்தான்.

# யாரு பிள்ளை!