Monday 30 December 2013

க்ராவிடி


 

3D யில் பார்க்கத்தவறிய படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.அதனால்  ஹோம் தியேட்டரில்... 

படம் ரிலீசானவுடன் வந்த சுடச்சுட விமர்சனங்களை படித்து,ரசித்து,  அலசி ,ஆராய்ந்து ,கழுவி ஊற்றி முடிய பின் எல்லோரும் கிட்டதட்ட படத்தை மறந்தே போய்விட்ட நிலையில் இப்போது தான் இந்த படம் பார்க்கும் வாய்ப்பே எனக்கு அமைந்தது. 
அஸ்ட்ரோநோமி எனப்படும் விண்வெளி சம்பந்தமான சயின்ஸ் அறிவு உள்ளவர்கள் இந்த படத்தை ஒரு டெக்னிகல் குப்பை என்று விமர்சித்து இருந்தாலும் ஒன்றரை மணிநேரம் விண்வெளியில் மிதந்த , பறந்த, திக்கற்று அலைந்த உணர்வை பெற்றவர்களே அதிகம் என்று நம்பலாம்.ஏனென்றால் இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மற்றும் ஆஸ்கார் அவார்ட் லிஸ்டில் ரிசர்வ் செய்யப்பட்டுள்ள இடமும் அப்படி! 

படத்தில் இல்லவே இல்லாத ஒன்றைப் பற்றி தான் படத்தின் தலைப்பு சொல்கிறது- புவி ஈர்ப்பு. படம் முழுக்க முழுக்க அண்டவெளியில் நடக்கிறது.படத்தில் மொத்தமே 5 கதாபாத்திரங்கள் தான். அதில் நாம் படத்தில் பார்ப்பவை மூன்றே கதாபாத்திரங்கள்.அந்த மூன்றில், ஒருவர் இறந்த பின்பு ஓட்டை விழுந்த முகத்தையும்  மற்ற இருவரும் உயிரற்று மிதப்பதையும் மட்டுமே பார்க்கிறோம். வேறு எந்த ஜீவராசியும் கடைசி வரை கண்ணில் படுவதில்லை,படம் முடியும் போது வரும்  ஒரு சிறிய தவளையைத் தவிர. 

கதை இவ்வளவு தான்- பூமிக்கு மேலே 600 கி மீ தொலைவில் விண்வெளியில் சுற்றிகொண்டிருக்கும் ஒரு சாட்டிலைட்டின்  ஹப்பெல் (Hubble )டெலஸ்கோப்பினை ரிப்பேர் செய்ய   எக்ஸ்ப்ளோரர் 
 எனப்படும் விண்கலத்தில் வருகிறார்கள் டாக்டர் ரயான் ஸ்டோன்( Sandra Bullock),மிஷன் கமாண்டர்  மாத்யூ கொவல்ஸ்கி(George Clooney) மற்றும் அவரது மூன்று பேர் அடங்கிய குழு.

ரயான் ஸ்டோன் ஒரு மெடிக்கல்-எஞ்சினியர் (என்ன படிச்சிருப்பாங்க?? சரி விடுங்க, நமக்கு எதுக்கு). எக்ஸ்ப்ளோரர் விண்கலத்திற்கு வெளியே நின்று டெலஸ்கோப்பை ரிப்பேர் செய்துக் கொண்டிருக்க,கொவல்ஸ்கி முதுகில் ஒரு ஜெட் பாக்கை மாட்டிக்கொண்டு பறந்த படியே பாட்டு கேட்டுகொண்டே விண்வெளியில் இருந்து பூமியை ரசித்த வண்ணம் தொணதொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறார். திடீரென,  ரஷ்ய சாட்டிலைட்  ஒன்று வெடித்து சிதறியதால் அதன் துகள்கள் (shrapnel )படுவேகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் வருவதாக தகவல் வர விண்கலத்திற்கு வெளியே இருப்பவர்களை உடனடியாக உள்ளே வரும்படி அறிவிப்பு வருகிறது. ஆனால் இவர்கள் சுதாரித்து உள்ளே போவதற்குள் வேகமாக வந்த துகள் எக்ஸ்ப்ளோரர்  விண்கலத்தையும் தாக்க ரயான் எக்ஸ்ப்ளோரருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, விண் வெளியில் வீசி எறியப்படுகிறார்.  எந்தவித கட்டுபாடுமில்லாமல் திக்கில்லாமல் தனியே அலறிய படி  சுழன்று கொண்டே இருளில் விழுகிறார்.  அவரைக் காப்பாற்றி எக்ஸ்ப்ளோரர் வின்கலதுக்கே கொண்டு வருகிறார் கொவல்ஸ்கி. வந்தபின்பே தெரிகிறது பாதி விண்கலமே மீதமிருப்பது. உள்ளே இருந்த மற்ற இருவரும் உயிரற்று மிதக்கிறார்கள். 
அங்கிருந்து ரயானும் கொவல்ஸ்கியும் தப்பிக்கிறார்களா பூமிக்கு வந்து சேருகிறார்களா என்பதே மீதமுள்ள விறுவிறுப்பான ஒன்னே கால் மணி நேர கதை. 

ஆக்சிஜென் இல்லாத, ஒலி பயணிக்காத, இருண்ட வெளியில் வரையறை இல்லாமல் மிதந்து கொண்டே போய் இன்னொரு விண்கலத்தில் ஏறுவது, ஒரு ஃபயர் எக்ஸ்டிங்கிஷர் வைத்துக்கொண்டு நகர்ந்துக்கொண்டிருக்கும்  மற்றொரு விண்கலத்தில் ஏறுவது என்று சகட்டு மேனிக்கு சாகசம் காட்டுகிறார் ரயான்.
இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனிலும்(ISS )சீன விண்கலத்திலும் ரஷ்ய  மற்றும் சீன மொழிகளில் உள்ள ஆபரேஷன் மேனுவலை படித்து படித்து  அநாயாசமாக கண்ட்ரோல் பேனலை கையாளுகிறார் ரயான் என்பதும் அவர் தவறாக அழுத்தும் எந்த பட்டனாலும் எதுவுமே ஆவதில்லை என்பதும் நம் தமிழ் படங்களை தூக்கிச்  சாப்பிடும் லாஜிக்   ஒட்டைகள்.ISS மற்றும் சீன விண்கலங்கள் எக்ஸ்ப்ளோரர் இருக்கும் இடத்திலிருந்தே தெரிவது, ஜீரோ க்ராவிடியில் ரயானின் முடி பறக்காமல் இருப்பது, கன்னாபின்னா வேகத்துடன் தெறித்து விழும் துகள்கள் எதுவும் ரயானின் மேல் மட்டும் படாமல் இருப்பது.....இது போன்ற "சயின்ஸ் டிஃபயிங் ஃபாக்ட்ஸ்"  எதுவும் என்னால்  முதல் முறை பார்த்த பொழுது சரியாக உணர முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஒரு க்ரிப்பிங் ஸ்க்ரீன்ப்ளே. ரயானுடன் சேர்ந்து எப்படியாவது பூமி வந்தால் போதும் என்ற தவிப்பு படம் முடியும் வரை குறையவே இல்லை. 

 சுற்றி நடந்தேறும் குரூரத்தின் தீவிரம் தெரியாமல் இருக்க ரயானிடம் பறந்துக் கொண்டே பேச்சுக் கொடுக்கும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அசத்தல்!மனிதர் எந்நேரத்தில் என்ன பேசுவது என்ற விதிமுறை இல்லாமல் ஜோக் அடிப்பது,கடைசி வரை தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் பேசிக்கொண்டே இருப்பது,  தன் உயிர் போனால் பரவாயில்லை என்று ஜஸ்ட் லைக் தட் விட்டுக்கொடுப்பது...என்று மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறார்.
ஸ்பீட் படத்திற்கு பிறகு சாண்டராவின் அற்புதமான நடிப்பினை இந்த படத்தில் காண முடிகிறது.தன் மகளின் இழப்பு, சாகப்போகிறோம் எனத் தெரிந்த பின் பூமியிலிருந்து கேட்கும் குரலோடு சேர்ந்து நாய் போல் கத்துவது, ஒரு குழந்தையின் அழுகையை கேட்டு ஒரு தாயாக உணர்வது, தனக்குதானே பேசி தன்னம்பிக்கை ஏற்றிக்கொள்வது என பலப்பல பரிமாணங்களில் பிரகாசிக்கிறார் . 

சன் ரைஸ், சன் செட் போன்றவற்றை விண்வெளியில் இருந்து பார்க்கும் பிரம்மிப்பையும், விண்கலத்திற்கு அருகே இருந்து பூமியை காட்டும் கோணங்களையும் வெகு அழகாக கிராஃபிக்சில் கொண்டு வருகிறார்கள். 3D யில் நிச்சயம் பலமடங்கு அசத்தலாக இருந்திருக்க வேண்டும். 
பூமி ,விண்வெளி ,சூரியன் ,விண்கலம் என எல்லாமே ஒரு அறைக்குள் கம்ப்யூட்டரில்  உருவாக்கப்பட்டவை என்பதை நம்ப மறுக்கிறது மனம். ஒலி பயணிக்க முடியாத விண்வெளியில் விண்கலங்கள் சத்தமே இல்லாமல் வெடித்து சிதறினாலும் நமக்கு மரண பயத்தை தருகிறது க்ராஃபிக்சுக்கு அடுத்த படியாக படத்தின் உயிர்நாடியான சவுண்ட்  ட்ராக். 

அவதார் படத்திற்கு பிறகு கிராஃபிக்சில் அசரடித்த மற்றொரு படம் என்று ஈசியாக சொல்லமுடியும். இந்த படத்தினை அபோல்லோ -13 படத்துடன் ஒப்பிட்டு வரும் விமர்சனங்கள் எனக்கு புரியவில்லை. ஏனென்றால் அபோல்லோ படத்தை இன்னும் பார்க்கவில்லை.

இயக்குனர் அல்போன்சோவின் முந்தைய படமான சில்றன் ஆஃப் மென் அருமையான ஒன்று.ஆனால்  க்ராவிடியின் கமெர்ஷியல் வெற்றி  அதை தூக்கி சாப்பிட்டுவிட்டது. ஒரு தனி மனிதன் ஆளில்லா தீவில் மாட்டிகொண்டு அவதிப்படும் (ஆஸ்காருக்காக எடுக்கப்பட்ட )காஸ்ட் அவே படத்துடனும் ஒப்பிட்டு விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் காஸ்ட் அவே  படத்தை சாய்ந்து உட்கார்ந்து சாவதானமாக பார்க்க முடிந்த மாதிரி இந்த படத்தை பார்க்க முடியாது...பூமியில் கால் படும் வரை நம்மையும்  டென்ஷனோடு இருக்க வைத்திருப்பது  இயக்குனரின் சாமார்த்தியம். 

பூமியில் எடுக்கும் லாஜிக் இல்லாத குப்பைகளை எவ்வளவோ ரசித்திருப்பதால் பூமியிலேயே இல்லாமல் முழுக்க முழுக்க விண்வெளியில் எடுக்கப்பட்ட படத்தில் எவ்வளவு ஓட்டைகள்   இருந்தால் என்ன! லாஜிக் பார்க்காமல்,ஏன் இவ்வளவு ஓட்டைகள் என்று சலித்துக்  கொள்ளாமல்  டெக்னிகல் புலிகளும் சயின்டிஸ்ட்டுகளும் கூட ஜாலியாக  ரசிக்கலாம்.  இந்தப்படம் நடக்க முடியாத ஒரு கற்பனை கதை என்று தோன்றாமல் ,சமகாலத்தில் விண்வெளியில் நடைப்பெறும் ஒரு எமோஷனல் டிராமா-த்ரில்லெர் என்ற வகையில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

No comments: