Tuesday 10 December 2013

காடும் காடு சார்ந்த நாமும்

காடும் காடு சார்ந்த நாமும்...

EPIC ( எபிக்)

3 D யில் திரையரங்கில் காண முடியாமல் போன படங்களில் இதுவும் ஒன்று.  தற்போது வழக்கம் போல சீடியில்.

கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. காட்டை அழிக்கத் துடிக்கும் போகன்(boggan) எனப்படும் நச்சு கிருமிகளிலிருந்து காட்டின் உயிர்நாடியை இலை மனிதர்கள் காப்பாற்றுவதே கதை.
பச்சைப் பசேலென  இருக்கும் காடுகளுக்கு தாரா என்ற ஒரு கருப்பழகியே ராணி. காட்டின் உயிர் நாடி.நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பௌர்ணமி நாளில் தனது வாரிசை தேர்ந்தெடுக்க செல்லும் தாரா போகன்களால் தாக்கப்பட , தேர்ந்தெடுத்த ஒரு தாமரை மொட்டுக்கு(pod) தனது சக்தி அனைத்தையும் கொடுத்து அந்த மொட்டை காட்டில் தனது நாயை தேடி வரும்  ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளரின்  மகளிடம் ஒப்படைத்து விட்டு உயிர் துறக்கிறார். பௌர்ணமி நிலவொளியில் அந்த தாமரை மொட்டு மலரும் வரையில் வில்லன்களிடமிருந்து அதனை கட்டிக் காப்பதே மீதி கதை.

காட்டில் வாழும் இலை தழை பூ காய் கனி பூச்சி பொட்டு என அனைத்துக்கும் மனித வடிவம் கொடுத்து சற்றே கற்பனைக்கலந்து அழகழகான ஆடை அணிவித்து  கிராபிக்சில் அசரடிக்கிறார்கள். பூவும் இலையும் கலந்தது போன்ற தாராவின் ஆடை வடிவமைப்பு , இலை மனிதர்கள் மற்றும் காளான் முதல் அனைத்து பூக்களுக்கும் பூச்சிகளுக்கும் ஆடை தேர்வு ஒரு தேர்ந்த டிசைனரின் கைவண்ணத்தில் மனதை கொள்ளை கொள்கிறது.

இலை மனிதர்களின் (leaf men)தலைமைக்காவலர் ரோனின்னுக்கும் தாராவுக்கும் இடையே சொல்லப்படாமல் இழையோடும் ஒரு மெலிதான காதல் படத்தின் முதல்  முப்பது நிமிடங்களுக்குள்ளாகவே இறந்து விட்டாலும் காட்டின் உயிர்நாடியான  தாராவின் கதாபாத்திரம் படம் முழுக்க வியாபித்திருக்கிறது.  

இதற்கிடையே இலை மனிதன் இனத்தை சேர்ந்த ஒரு விடலைப் பையனின் விளையாட்டுத்தனம், ஒரு டெடிகெடெட் இயற்கை வள ஆராய்ச்சியாளரின் இலை மனிதர்கள்/பச்சை நிறப் பறவைகள் பற்றிய  கண்டுபிடிப்புகள், இவர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு இலை மனிதர்கள் அளவுக்கே சிறிதாக்கப்பட்டு அவர்கள் உலகத்திற்கே செல்லும் ஆராய்ச்சியாளரின் மகள் என்று அழகாக புனையப்பட்ட கதையில் நம் திரைப்படங்களில் வருவதைப் போலவே கோட்டா ஸ்ரீனிவாச ராவ்  மாதிரியான ஒரு கொடூர வில்லன்,முதல் அரைமணி நேரத்திலேயே செத்துப் போகும் வில்லனின் மொன்னையான மகன் அதற்குப் பழி தீர்க்கத் துடிக்கும் அப்பா
என்று அரதப்பழசான புளித்த மாவையும் டொமேட்டோ   ஊத்தப்பம் போல அலங்கரித்து தருகிறார்கள்.சுவையாகத்தான் உள்ளது!

இலை மனிதர்கள் பச்சை பறவைகளின் மேல் பறப்பது ஒரு வகை அழகு என்றால் மான்  கொம்பின் மீதமர்ந்து காட்டில் ஆராய்ச்சியாளர் மகளும் விடலைப் பயனும் வலம் வரும் காட்சி ஒரு அழகான கவிதை!
மூன்றே காலுடைய ஆராய்ச்சியாளரின் நாய், தாராவின் நண்பர்களான இரு நத்தைகள், மத குரு போன்ற கதாபாத்திரத்தில் வரும் மண்புழு ,ராணியாக ஆசைப் படும் ஒரு சிறு பூ(பெண்) ... என்று எல்லா கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் கதையை நகர்த்த உதவுகின்றன.

க்ராபிக்ஸும் இசையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு நம்மை படத்தோடு லயிக்க வைக்கின்றன.
AVATAR & HONEY I SHRUNK THE KIDS போன்ற படங்களை   சில பல இடங்களில் நினைவூட்டினாலும் குழந்தையோடு குழந்தையாக நிச்சயம் ரசிக்க முடிந்ததென்னவோ உண்மை.

தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள் என்னைப் போல் சீடியிலாவது பார்த்து விடுங்கள்!
......
அழகான இந்த கிரீன் மூவியை ரசித்து விட்டு அடுத்த நாள் மகனுடைய பள்ளிக்கு அவனை அழைத்து சென்றேன். நான் விடுமறை எடுத்திருந்ததால் எனக்கு மிகவும் பிடித்த இந்த வேலையை செய்யும் பாக்கியம் கிட்டியது.யோஹான் பள்ளியில் மாதம் ஒரு முறை முதல் வெள்ளிக்கிழமை கலர் டே. என்ன கலர் என்று முன்பே நமக்கு மெசேஜ்   வந்துவிடும்.கலர் டே அன்று ஒரே நிறத்திலும் அந்த நிறம் சார்ந்த வண்ணங்களிலும் (shades )வித விதமான ஆடைகளில் குழந்தைகளை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி. அன்று முழுதும்  ரைம்ஸ், பூ பழம் காய்கறி விலங்கு பறவை என அனைத்தும் அந்த நிறம் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும்.

இந்த மாதம் பச்சை.
யோஹனுக்கு ஒரு பச்சை சொக்காயை போட்டு பள்ளிக்கு அழைத்து சென்றேன்... ஆஹா பச்சை பச்சையாய் குழந்தைகள்! அது மட்டுமல்லாது பள்ளியையே பச்சையாக மாற்றி இருந்தார்கள்.  இதற்கு முன் வேறு கலர் நாட்களில் பள்ளியை இப்படி பார்த்தது இல்லை!
செயற்கை மரம், செயற்கை புல்வெளி, பச்சை காய்கறிகளில் படகு, கிரீடம், முதலை என்று எக்கச்சக்க பச்சை! அன்று ஆசிரியர்களும், ஒரு சில பெற்றோரும்( அம்மாஸ்!)  கூட பச்சை நிறத்தில் உடுத்தி இருந்தார்கள் ! கோ கிரீன் என்ற பெரிய பெரிய தெர்மாகோல் எழுத்துக்கள் வாசலிலேயே தோரணமாக தொங்க விடப்பட்டு இருந்தது. கோலம் கூட பச்சையாய்!பள்ளி   ப்ரீ ஸ்கூல் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு பசுமையின் முக்கியத்துவத்தை உணர வைத்து விட முடியும்?ஆனாலும் கடுமையாக மெனக்கெட்டிருந்தார்கள் பள்ளி நிர்வாகத்தினர்.  முதல் நாள் எபிக் படத்தை பார்த்துவிட்டு வந்து அடுத்த நாளே இப்படி பச்சை பச்சையாய்   பார்த்ததில் யோஹனுக்கு கொண்டாட்டம் தாளவில்லை.படத்தை பார்த்ததிலிருந்தே யோஹான் இந்த செடி ப்ரீத்(breath) பண்ணுதும்மா சத்தம் கேக்குதா , அந்த க்ரோ மேல போக்கன்ஸ்  வராங்கம்மா,  இந்த குட்டி பேர்ட் மேல ஏன் லீப் மேன் இல்ல என்று காட்டிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.பள்ளியிலிருந்து வந்து அன்று இரவு தூங்கப்போகும் வரை  காய்கறி,செடிகளை எல்லாம் எபிக் படத்தோடு ஒப்பிட்டுக் கொண்டே இருந்தான்!
பச்சை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி மூக்குக்கு மலர்ச்சி காதுக்கு கிளர்ச்சி போன்ற தத்துபித்துகளை தாண்டி என்னையும் சில  மணித்துளிகள் குழந்தையாய் உணர வைத்த பள்ளி நிர்வாகத்தினரை நேரில் பார்த்து பாராட்டி விட்டு வந்தேன்.

பச்சையா போங்க!  I mean GO GREEEEEEN!! 

5 comments:

vk said...

மிக நன்று. உங்களுடைய அனுபவங்களை பிறருடைய கண்ணோட்டத்தின் வழியே எழுதுவீர்களானால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

அருணாவின் பக்கங்கள். said...

நிச்சயம் முயற்சி செய்கிறேன்... நன்றி.

SEKAR said...

உங்கள் தமிழ் புத்துணர்வளிக்கின்றது

SEKAR said...

இப்பொழுதுதான் எபிக் டவுன்லோட் ஆகியுள்ளது

அமர பாரதி said...

Nicely written. A very good flow, all the best in writing.