Monday 16 December 2013

அவன்


அவன் .  

காலையில் சீக்கிரமே முழிப்பு வந்து விட்டது. விண் விண்ணென்று யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்து எழுப்பினார்கள். சூடாக ஒரு ஸ்ட்ராங் காஃபி  தேவைப்பட்டது. டைம் 5:20 மின்னியது டேபிளில் டைம் பீஸ் .புதுசா அடிச்சி மண்ட வலி வந்தா பரவாயில்ல, எழவு வாரத்துக்கு ரெண்டு மூணு முறை அடிச்சாலும் என்ன கருமத்துக்கு இப்பிடி தலைய வலிக்குது. யோசனையோடு பல் துலக்கிவிட்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்தான். காஃபி டேபிளில் ஆவி பறக்க காஃபி.ச்சே நேத்து குடிச்சிருக்க கூடாதோ?

சக்கரை கம்மியாக  நுரையோடு பைப்பிங்  ஹாட் காஃபி. நுரையை மெதுவாக ஊத சூடான  ஆவி கண்களில் படிந்தது. சுகம். மண்டையிடியையும் சேர்த்து ஆவியாக்கும் வித்தை இந்த பானத்துக்கு இருப்பதாக நம்பினான். அவனுக்கு  மிகவும் பிடித்த பானங்களின் வரிசையில் இதற்கு இரண்டாவது இடம்.

பேப்பரை மேய்ந்துவிட்டு குளிக்க கிளம்பினான்.  கிச்சனில் குக்கர் விசிலடித்து. எங்க போனா இவ ஆளையே பாக்கல காலையில இருந்து என்று முனகிக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய ஹாலில்  இருந்த பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.படுக்கையில்  புரண்டு படுத்தாள் யாமினி, அம்மா என்ற முனகலோடு. சத்தம் போடாமல் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்த  பின் தான் தலைவலியில் கெய்சர் போட மறந்தது உறைத்தது. சலிப்போடு ஷவரை திருப்ப சூடாக வந்தது தண்ணி.  ஹாங்-ஓவரைப்  போல சில விஷயங்கள் டிஃபால்டாக நடக்கும் சரக்கடித்த அடுத்த நாள். நேத்து குடிச்சிருக்க கூடாதோ?

குளித்து முடித்து வெளியே வந்தான்.  யாமினி பாதி தூக்கத்தில்,கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து படுக்கையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள்.
"ஹாய் குட்டிம்மா குட் மார்னிங்".
"மார்னிங் அப்பா. எப்ப வந்தீங்க?" 
"லேட் ஆயிடிச்சி குட்டி நைட் வரும்போது".
"ஆமாப்பா நாங்க ரொம்ப நேரம் வெயிட் பண்ணோம்".

யாமினி குரல் கேட்டு  ஓடி வந்தாள். நேற்று காலையில் அலுவலகம் செல்லும் போது பார்த்தது. இப்போது தான் மறுபடியும் பார்க்கிறான்.தலைக்கு குளித்து ஈரத்துண்டு தலையில் கட்டி கும்மென்று வாசனையாக...புதுச்சேலையோ? பார்த்த மாதிரியே இல்லையே. ஐந்து வயது பிள்ளைக்கு அம்மா மாதிரியே இருக்க மாட்டாள். முப்பத்திநான்கு வயது என்று சொல்லவே முடியாது.  மிஞ்சிப் போனால் இருபத்தியாறு, இருபத்தியேழு சொல்லலாம். உருவி விட்டதை போல ஒரு  உடல் வாகு.அணைக்க இலகுவாக எக்ஸ்ட்ரா  மடிப்பு தடிப்பு எதுவும் இல்லாத அழகான வளைவான இடுப்பு. இந்த வளைவை காலை கிளம்பும் நேரத்தில் பார்த்து எத்தனை முறை ஆபீசுக்கு  லேட், பெர்மிஷன், லீவ்......குனிந்து யாமினியைத் தூக்கிகொண்டு வெளியே போய்விட்டாள். அவனை நிமிர்ந்து கூட  பார்க்கவில்லை. நேத்து குடிச்சிருக்க வேணாமோ? 

"அகீ, அவள குடு நீ போய் கிளம்பு"
"வரேங்க ". 
ஒரு வார்த்தை அதிகமா பேச மாட்டாள் அழுத்தக்காரி.எப்படி பேசுவாள் ? எவ்வளவோ முறை சொல்லி, திட்டி, அழுது, கதறி, சண்டையிட்டு  சலித்துப் போய்... அவளின் இந்த அனிமெடட் பேச்சுக்கு அவன் தான் காரணம்  என்று இருவருக்குமே தெரியும். வாடா போடா என்றிருந்த பேச்சு இப்போது... 
"இந்தாங்க" என்று யாமினியை தந்தாள்.  

ஷூ போடும் போது,
"இன்னைக்கு சீக்கிரம் வருவீங்களா?" 
அட ,அதிசயமா அவளா பேசறா. 
 "ம்ம்" 
முகத்தில் ஏதோ ஒரு பரவசம் தென்பட்டது. சொந்த கற்பனையோ? நேத்து அடிச்சது தெளியலையோ இன்னும்? மெலிதான புன்னைகையோடு உள்ளே சென்று விட்டாள். 

கடைசியாக  எப்போது அவளிடம் மனது விட்டு பேசியது என்று யோசித்துப் பார்த்தான். ஒரு  ஏழெட்டு  மாதமிருக்கும்.அந்த ஒரு நாள்.தேதி  எல்லாம்  ஞாபகமில்லை . அவளிடம்   கேட்டால்  தேதி, நேரம் , அஷ்டமி    நவமி , குளிகை  எல்லாம் சேர்த்து  சொல்வாள். பெண்களுக்கே உரிய குணாதிசயங்களில்  இதுவும் ஒன்று. ஆண்கள் மறக்க நினைப்பதை எல்லாம் கச்சிதமாக ஞாபகம் வைத்திருப்பது. அன்று நடந்த  அந்த  கோரமான  சண்டைக்குப்  பிறகு  அகி இவனோடு   சாதரணமாக  பேசுவதையே  குறைத்துக் கொண்டாள் . கேட்ட கேள்விக்கு நேர்த்தியான பதில். வெளியே கூட்டி செல்லும் போது மட்டும் இறுக்கத்தை தாண்டிய ஒரு சந்தோசம் முகத்தில் தெரியும்.  
ஆனால்  இன்று  வரை  அந்த  சண்டைக்கு  பிறகு  எந்த  கேள்விக்குமே  பதில்  சொல்லாமலோ  கோபமாகவோ  எடுத்தெறிந்தோ     பேசியதே  இல்லை . அவனோடு  கோபித்துக்  கொள்வதற்கான  உரிமை கூட   அவசியமற்றது போலவே பட்டும் படாமல் நடந்துக்கொள்வாள்.சண்டை நடந்த அன்று  சாயங்காலமே அவளை பீச்சுக்கு   அழைத்தான்.
" சரிங்க, போலாம்".  
ரெண்டே வார்த்தை.  அன்று ஆரம்பித்த இந்த 'ங்க' இன்று வரை மாறவில்லை.
 
பீச். யாமினி மணல் வீட்டோடு ஒன்றிப் போயிருந்தாள்.அகியிடம்  மன்னிப்புக்  கேட்டான் . 
"இட்ஸ்  ஓகே"  
"நான்  வேணும்னு  பண்ணல  அகீ. நீ  அப்பிடி கேட்டதும்  ரொம்ப  கோவம்  வந்துடுச்சி"
"ஸாரிங்க" என்று  ஒற்றை  வார்த்தையோடு  முடித்துக்கொண்டாள் . அதற்கு  மேல் அவனுக்கும்  என்ன பேசுவதென்றே  தெரியவில்லை . வாதமோ விவாதமோ இல்லாமல்  ஏதோ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவள் போல நிலாவையே வெறித்துக் கொண்டிருந்தாள். மௌனத்தோடும் ஈகோவோடும் மாறி மாறி சண்டையிட்டு கடற்கரை இருட்டில் தோற்றுக் கொண்டிருந்தான் அவன். 

இன்று சண்டை  எப்படி  ஆரம்பித்தது  என்று யோசித்தால்  சுத்தி  சுத்தி எங்கு  வந்து  முடியும்  என்று தெரியும். எத்தனையோ முறை போட்ட சண்டை தான். ஆனால் இன்று நடந்தது உச்சம்.
கண்ணு மண்ணு தெரியாமல் முரட்டுத்தனமாக அடி வெளுத்திருந்தான். இது தான் அவள் மீது கை நீட்டியது முதல் முறை. இது தான் கடைசி முறை என்று அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. தன்னால் இப்படி கூட நடந்துக் கொள்ள முடியும் என்பதே அவனுக்கு இன்று தான் தெரியும். இந்த நிமிடம் அவனை வெறுப்பு கோபம் குற்ற உணர்ச்சி இயலாமை எல்லாம் சேர்ந்து  போட்டிப் போட்டுக்கொண்டு மென்று தின்று சக்கையாய்  துப்பிக்கொண்டிருந்தன.  இத்தகைய அபாயகரமான உணர்வுகளை அவன் சில நிமிடங்களுக்கு மேல் அவனுள் குடிகொள்ள அனுமதிப்பதில்லை.உடனடியாக தெளிந்து   சண்டைக்கான  காரணத்தையே  மறுபடியும்  செய்தால்  தேவலை போல் தோன்ற,அவர்கள் இருவரையும்  வீட்டில் விட்டுவிட்டு  நண்பனுக்கு  ஃபோன் அடித்து ,அடுத்த  பத்தாவது  நிமிடம்   "அண்ணே ரெண்டு  ஆஃப்  பாயில்"  என்றான். இரவு  வீடு  வந்து சேரும்  போது மணி ரெண்டரை. சாப்பிடத் தோன்றாமல் அப்படியே கெஸ்ட் பெட்ரூமில் போய் படுத்துவிட்டான். லேட்டாக, டைட்டாக வரும் நாட்களில் எப்போதுமே கெஸ்ட் பெட்ரூம் தான்.  சரக்கடித்த அடுத்த நாள் கட்டாயம் அவளையும் குழந்தையையும் வெளியே அழைத்துச் செல்வான்.பல   டிஃபால்ட்டுகளில் இந்த சம்பிரதாயமும் ஒன்றாக பழகிவிட்டிருந்தது.சந்தோஷமாக வருவாள். புடவை , நகை, பூ, குழந்தைக்கு விளையாட்டு சாமான், புக்ஸ்... எதையாவது வாங்கி தருவான். சந்தோஷமாக வாங்கிக் கொள்வாள். எதுவுமே வாங்கவில்லையெனில் பீச், சினிமா , பார்க், மால், ஹோட்டல், கண்காட்சி..... இப்படி  எங்கயாவது! பொம்பளைங்கள குஷிப்படுத்தவா  வழி இல்லை.ஆனால் அப்போதும் அதே அளவான பேச்சு தான்.   அதை விட அளவான சிரிப்பு நடுநடுவே. ஆனால் யாமினியோடு கூட குழந்தையாகவே மாறி இருப்பாள்.  

இப்படி பேசாமல் இருப்பது ஒரு வகையில் அவனுக்கு வசதியாகவே இருந்தது. ஏன் இப்படி எங்கள கஷ்டபடுத்துறீங்க, இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவீங்க, யார் கூட இருக்கீங்க,எங்க இருக்கீங்க, ஏன் போன் எடுக்கவே இல்ல, உங்களுக்கு எங்க மேல அக்கறையே இல்ல... போன்ற பொண்டாட்டிகளின் டெம்ப்ளேட் வசனங்கள் இல்லாத வாழ்கையை தாண்டி தான்  ஒரு படி மேலே போய் விட்டதாக நம்பினான்.அகிலாவிடம் கிடைப்பதை விட ஆல்கஹாலிடம் கிடைக்கும் ஆர்கசம் அவனுக்கு பிடித்திருந்தது.பொண்டாட்டி பிள்ளையின் மேல் அக்கறையோ அன்போ இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு கல்யாணியோ ஓல்ட் மாங்க்கோ கண்ணுக்கு முன் நிழலாடும் போது அகிலாவும் யாமினியும் அவுட் ஆப் ஃபோகஸ் ஆகிவிடுகிறாள்கள். அப்போதெல்லாம் 
ஐயம் நாட் கட் அவுட் ஃபார் மாரீட் லைஃப் என்று தனக்கு தானே சொல்லிக்கொள்வான். 
இந்த சுயநலம் அவனுக்கு ரத்தத்திலேயே ஊறியிருந்தது, தன் அம்மாவை போல என்பதும் அவனுக்கு  நன்றாக   தெரியும். திருமணமான புதிதில் அகிலாவிடம் செய்து கொடுத்த சத்தியங்களையும்,  தன்னால் என்றுமே அப்படி இருக்க முடியாது என்ற முகத்திலறையும் அப்பட்டமான உண்மையும் அவன் மனதை என்றுமே கனக்க செய்ததில்லை .  இது தான் அவன். தன்னை சுற்றியுள்ளவர்களிடமும்,தன்னை  சார்ந்து உள்ளவர்களிடமும் அவனுடைய ' காம்ப்ரமைஸ் ' செய்து  கொள்ளாத ஆட்டிடியூட் சிறுவயதிலிருந்தே உரமிட்டு வளர்க்கப்பட்டதோ,கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டதோ... ஆனால் இது தான் அவன்!  

இன்று ஏன் இவ்வளவு  டார்டாயிஸ் கொசுவத்தி புகையுது மண்டைக்குள்ள  என்ற யோசனையோடு பார்கிங்கில் காரை பார்க் செய்துவிட்டு ஆபீசுக்குள் நுழைந்தான். வேலை என்று வந்து விட்டால் 'அல்கா' வை தூக்கி விட்டு 'வொர்க்க' ஹாலிக் என்று கண்ணை மூடிக்கொண்டு செர்டிபிகேட்  தரலாம். சாயங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு சுழன்றுக் கொண்டிருந்தான் .நல்ல பதவி,கை நிறையவில்லை என்றாலும் நிம்மதியாக வாழ போதுமான  சம்பளம். சொந்த வீடு,கார். அழகான பொண்டாட்டி பிள்ளை. கேடு கேட்ட நண்பர்கள்.  
சரியாக ஆறு மணிக்கு ஃபோன் அடித்தது.
 "டேய் மச்சான்... "
அவ்வளவு தான். எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆனது. அந்த கேடு கெட்ட மச்சானுக்கு டாட்டா பை பை சொல்ல நள்ளிரவு ஆனது. அதே  கெஸ்ட் பெட்ரூம் தூக்கம்.அதே விடியற்காலை மண்டையிடி. அதே காஃபி. 

டேபிளின் மேல் ஒரு பொக்கே.

ஹாப்பி பர்த்டே  டியர் என்ற சிறிய வாழ்த்து அட்டையோடு. 
"ஹோ ஷிட்!!  "
எப்படி மறந்தேன்? காதலித்த காலத்திலிருந்தே ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் அவளை ஆச்சர்யப்படுத்தி குஷிபடுத்தி திக்குமுக்காட வைத்து விடுவான்.தலைக்கு குளித்து  புது புடவை...சாயங்காலம் சீக்கிரம் வருவீங்களா...முகத்தில் தெரிந்த பரவசம்... ச்சே! காஃபி குடித்தும் மண்டையோடு மனமும் சேர்ந்து கொண்டது இடிக்கும் வேலையில்! வெறுப்பாக இருந்தது. 

கிச்சனில் சத்தம் கேட்டது. 
"ஸாரி, நேத்து ஆபீஸ்ல இருந்து வர லேட் ஆயிடுச்சி"
"பரவாயில்லைங்க". 
இதுக்கு செருப்பாலேயே  நாலு சாத்து சாத்தி இருக்கலாம். 
"உனக்கு என் மேல கோவமே வரலையா?" 
"எதுக்குங்க?" 
சரி தான்.   
அது எதுக்குங்க?? இல்லை.  எதுக்குங்க. முற்றுப்புள்ளி. அவள் பதில்களுக்கு திருப்பி கேள்வியும் கேட்க முடியாது. அவளுடைய கேள்விகள் போன்ற முற்றுப்புள்ளி வாக்கியங்களுக்கு  பதிலும் சொல்ல முடியாது. ச்சை! எல்லா உரையாடல்களும் அறுபது நொடிக்குள்ளேயே முடிந்துவிடுகின்றன. அடுத்த உரையாடலுக்கு ஒரு கமெர்ஷியல் பிரேக் கொடுத்து புது டாபிக் ஆரம்பிக்க வேண்டும். 
 
அவள் பிறந்த நாளைக்காவது அவளை அசத்தி பழைய மாதிரி பேச வைத்து விட வேண்டும் என்று ஏதேதோ  மனக்கணக்கு  போட்டு  வைத்திருந்தான். இவளை ஜடமாகவே மாற்றி விட்டோமோ?
"சாயந்திரம் வெளில போலாமா?"என்றான் ஷூ போட்டுக்கொண்டே.பிரேக் முடிந்து  புது டாபிக். அழுத்தமாக சிரித்துக்கொண்டே 
"சரிங்க" என்றாள். இது அவளுடைய வழக்கமான சிரிப்பு இல்லையே. 
மனதை என்னவோ செய்தது அந்த சிரிப்பு. யாமினியை பள்ளியிலும் அவளை பஸ் ஸ்டாப்பிலும் இறக்கி விட்டான். 
"வரேன் அகீ". 
"சரிங்க"
மறுபடியும் அதே அன்யூஷுவல் சிரிப்பு. எப்போதும் சிரிக்கும் சிரிப்பில் எந்த அர்த்தமுமே அவனுக்கு பிடிப்பட்டதில்லை. அது ஒரு ஜீவனில்லாத ஷாலோ ஸ்மைல்.அவ்வளவு தான். இன்று அவனுக்கு அந்த சிரிப்பில் பல நூறு அர்த்தங்கள் தெரிந்தன, ஆனால் புரியவில்லை. 

அவளை உணர்ச்சி யற்ற ஜடமாக்கி விட்டோமா இல்லை அவள் என்னை ஜடம் என்கிறாளா? 
 சம்பாதிக்கும், சரக்கடிக்கும், வெளியில கூட்டிட்டு போகும்.இதை தாண்டி  அகியை பொறுத்தவரை தான் ஒரு ஜடம். அதாவது டம்மி பீஸ்.தன்னை ஒரு மெஷீன் போல நினைக்கிறாள் அகீ என்ற உண்மை கொஞ்சம் சுடத்தான் செய்தது.அகியின் சிரிப்பிற்கான அர்த்தம் புரிந்தது போல் இருந்தது.யோசிக்க யோசிக்க மறுபடியும் மண்டையிடி. இது நாள் வரை இது எப்படி உறைக்காமல் போனது ? பிறந்த நாளைக்கு தான் ஒரு விஷ் பண்ணாதது கூட அவளுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. ஏன்? 

சட்டென்று டேபிளின் மேல் இருந்த ரோஜா  கொத்து மூளையை துளைத்தது.  பொக்கே யார் கொடுத்தது? உண்மையாகவே யார் கொடுத்த பொக்கே அது என்று கேட்க ஏனோ தன்மானம் இடம் தரவில்லை.
அவளுடைய தோழிகள் யாரும் இது நாள் வரை அவளுக்கு பொக்கே கொடுத்ததில்லை. பெண்களுக்குள் பெரும்பாலும் பொருட்களே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. பூக்கள் அல்ல.  அவளுடைய தோழிகள் , நண்பர்கள் எல்லோரையும் ஃபோன் கான்டாக்ட் லிஸ்ட்டை ஸ்க்ரோல் செய்வதைப் போல கண்ணைமூடி நியூஸ் ரீல் ஓட்டிப் பார்த்தான். ம்ம்ம்ஹூம்.அவளுடைய ரசனை அறிந்த   யாரோ தான் கொடுத்திருக்க   வேண்டும். அவளுக்கு பிடித்த ரோஸும் அல்லாத ஆரஞ்சும் அல்லாத ஒரு பெயர் தெரியாத நிறத்தில் ரோஜா கொத்து.இத்தனை வருடமாக இவன் கொடுத்ததை தவிர எந்த பூங்கொத்தும் வீட்டிற்கு வந்ததில்லை. இது நேரம் வரை சாதாரணமாய் தெரிந்த அழகான பொக்கே இப்போது தன்னைப் பார்த்து ஏளனமானாக சிரிப்பது போல் தோன்றியது.ஃபார்மலாக யாரவது கொடுத்திருக்கும் பட்சத்தில் எதற்கு அந்த 'டியர்'? 'ஹாப்பி பர்த்டே டியர் அகிலா' என்று போட்டிருந்தால் இவ்வளவு குடைச்சல் இருந்திருக்காதோ? "டியர்" என்று தொக்கி நிற்கும் அந்த சிறிய வார்த்தை  பாறாங்கல்லை விட அதிகமாக நெஞ்சுக்குள்  கனக்க ஆரம்பித்தது. இதுவரை சந்தித்திராத ஒரு புது அரக்கன் மண்டைக்குள் முக்காலி போட்டு உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான். 

முதல் முறையாக சரக்கில்லாமலே தலை கிறுகிறுத்தது. தன்னை ஒரு 'கணவனாக' உணரத் தொடங்கி இருந்தான். 

15 comments:

அருணாவின் பக்கங்கள். said...

Thank you!!

vk said...

Good finish

Unknown said...

மிகவும் அழகாக உங்கள் கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுத்து வரிகளாய் அமைத்து..
வரிகள் ஒவ்வொன்றும் உண்மையான உணர்வை உணர்த்தப்படும் விதமாய் அழுத்தமாய் அமைக்கப்பட்டு இது கதையல்ல நிஜம் என்று உரைக்கும் படியாய் அவை உயிர் பெறப்பட்டு இருந்தது..
'கதை தான்' என்று நீங்கள் தான் சொல்லிக்கொள்ள வேண்டும்..
உங்கள் கற்பனையில் சற்றே நான் வாழ்ந்து போனேன் சில நிமிடங்கள்.. !!

அமர பாரதி said...

அழகு. அருமையான கதை.

அனுஷ்யா said...

செம்ம is the word :-)

அருணாவின் பக்கங்கள். said...

Thank you!

ரோகிணிசிவா said...

Wow...I really enjoyed reading ,lost in your writing

அருணாவின் பக்கங்கள். said...

Thank you Rohini Siva :-)

ரோகிணிசிவா said...

Yaarunga bouquet kuduthathu;)

ரோகிணிசிவா said...

Can you please remove the verification in comments and instead have comment moderation?

அருணாவின் பக்கங்கள். said...

Done rohini... Pls check.:-)

அருணாவின் பக்கங்கள். said...

Innoru kathai ezhuthanum rohini atha solla...;-)

suresh said...

உங்களுக்குள் இப்படியொரு அசாத்திய எழுத்தாற்றல் இருப்பது எனக்கு மிக மிக வியப்பாக இருக்கிறது!

நீங்கள் ஒரு முழுநீள கதையெழுத (கதையோ அல்லது வேறு எதுவுமாவது)எழுத வேண்டும் என்பது என் ஆவல்.

நிச்சயம் மிகப்பெரிய புகழை அடைவீர்கள்!

இந்த கதையை ஒரு ஆண் எழுதியது போன்ற ஒரு நடை.. ஒரு ஆண் பார்க்கும் பார்வை.. சிந்தனை.. சொல்லாடல் எல்லாமே.

ஒரு நல்ல இயக்குனராகக்கூட வாய்ப்பிருக்கிறது! வாழ்த்துக்கள்!!!

Nirmal said...

Keeping connection and enjoy that feel is a real challenge for all men. I don't drink I don't beat wife I don't shout I respect but still I could not keep myself connected to one lady whose expectation is only that.

Men sucks.
Let our kids learn to stay connected with their loved ones.
Amen

Unknown said...

Hi Aruna,

Greetings.presented well,doesn't looks like its ur first story.Finishing line was nachchu.

Wishing to write many more.

Murali Ramakrishnan Ganapathi