நம்மை சுற்றி நடக்கும் சில விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பின் நம்மை அறியாமல் கவனிக்கத் தொடங்கி விடுவோம் தானே? இது அதைப் போல நடந்த சில பல சம்பவங்களின் கோர்வை.
ஒரு நாள் காலை வேளையில் காலேஜில் லேப் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பயங்கர அலறல் சத்தம் கேட்டது. காரிடாரில் ஒரே இரைச்சல். வெளியே ஓடி எட்டி பார்த்தால் காரிடாரில் யாரோ தீ பற்றி எரிந்து கொண்டிருந்தார்கள். ஆணா பெண்ணா தெரியவில்லை.உடம்பு முழுக்க தீ. ஹாஸ்பிடல் பணியாளர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். சில தைரியமான மாணவர்களும் உதவிக்கு ஓடினர்.கலர் புடவை உடுத்திய ஒரு பெண்மணியும் மற்ற பணியாளர்களோடு சேர்ந்து போராடிக் கொண்டிருந்தார்.அந்தப் பெண்ணின் உடையிலும் ஆங்காங்கே தீ. ஒரு வழியாக தீயை அணைத்து அந்த உருவத்தை ஆம்புலன்ஸில் அள்ளிப்போட்டுக் கொண்டு பறந்தனர்.
ஏதோ ஹாஸ்பிடல் பணியாளர் தானாம். லேபுக்கு பக்கத்திலேயே கேஸ் ரூம்,கம்ப்ரஸார் ரூம். மற்றும் சீனியர் லேபில் பர்னேசும்(furnace)உண்டு.அதனால் எங்கிருந்து எப்படி தீ பிடித்தது என்பதற்கு விதவிதமான கதைகளை கேட்டோம். எது உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை. அவரவருக்கு பிடித்த கதையை நம்பினோம். சில நாட்கள் கழித்து அந்த பணியாளர் இறந்துவிட்டதாக காலேஜ் நோட்டீஸ் போர்ட் பார்த்து தெரிந்துக்கொண்டோம். அந்த காரிடாரில் இருந்து தேய்ந்து மறைந்த கருப்பு தீக்கறையைப் போல கொஞ்சம் கொஞ்சமாக அந்த தீ விபத்து பற்றிய நினைவுகள் மறைந்து மறந்து போய்விட்டன.
இந்த சம்பவம் நடந்து சில வருடங்களுக்கு பிறகு வளர்மதி என்று ஒரு பெண்மணி ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்ந்தார். முப்பத்தியைந்து வயது இருக்கும். தீ விபத்தில் இறந்துப்போன பணியாளரின் மனைவி கம்பாஷனெட் அடிப்படையில் வேலை கிடைத்ததாக சொன்னார்கள். வளர்மதிக்கு ஒரு பையன்.நான்கு ஐந்து வயதிருக்கும். அந்த தீ விபத்தின் கோரமான நினைவுகளை வளர்மதியின் முகத்தில் தழும்புகளாக காணமுடிந்தது. தீ விபத்து நடந்த அன்று அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த பெண்மணி இவர் தான் என்று கேள்விப்பட்டோம். ஒரு ஆர்வ மிகுதியில் வளர்மதி எதற்கு விபத்து நடந்த அன்று ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார் என நர்சுகளிடம் விசாரிக்கையில் பலப்பல ரகசியங்கள் வெளியே வந்தன. உண்மையில் அவை ரகசியங்களே அல்ல. ஹாஸ்பிடலில் பெரும்பாலும் அனைவருக்கும் இந்த மேட்டர் தெரிந்திருந்தது. என்னைப் போன்ற ஒன்றிரண்டு மாக்கான்களை தவிர.
அந்த பணியாளருக்கும் ஒரு நர்சுக்கும் ஏதோ கசமுசா .இது வளர்மதிக்கு தெரிய வரவே அவர் நர்சிடம் சண்டைப்பிடிக்க நேரே காலேஜுக்கே வந்துவிட்டார். விபத்து நடந்த அன்று சண்டை எல்லை மீறிப் போய்விட தலைவர் ஆத்திரத்தில் கேஸ் ரூமில் வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றிப் பற்ற வைத்துக்கொண்டாராம்!
அந்த நர்ஸ் யாரென்று தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். ஒரு குண்டு நர்ஸ். முகம் மட்டும் அழகாக இருக்கும். வளர்மதியும் குண்டு தான். ஏனோ தேவையில்லாமல் இருவரையும் ஒப்பிட்டு பார்த்து அந்த பணியாளரின் ரசனையை அலசிக்கொண்டிருந்தோம் ஹாஸ்டலில்.
படிப்பு முடிந்து அடுத்த வருடமே அரசுப்பணியில் சேர்ந்து குப்பைகொட்டத் தொடங்கினேன்.சில வருடங்களில் திருமணம் முடித்து மாற்றலாகி பட்டணத்தில் படு பிசியான ஒரு அரசு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். ஆச்சர்யம்! அந்த அழகு நர்ஸ் அங்கே தான் இருந்தார். என் டிபார்ட்மெண்டிலேயே.இன்னும் கொஞ்சம் வெயிட் ஏறி இருந்தார். ஆனால் அதே அழகு முகம்.அவரைப் பார்த்தவுடன் ஒரு கணம் வளர்மதியும் அவள் மகனும் ' வாம்மா மின்னல்' மாதிரி ஒரு நொடி மண்டைக்குள் வந்து போயினர்.
அந்த நர்ஸ் ஏன் அவ்வளவு வெயிட் போட்டிருந்தார் என்று அவரோடு வேலைப்பார்த்த கொஞ்ச நாட்களில் புரிந்துக்கொண்டேன். உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் வேலைப் பார்த்தார். அவரிடம் ஒரு வேலையை செய்யச் சொல்லும் நேரத்தில் அதே மாதிரி மூன்று நான்கு வேலைகளை செய்து முடித்து விடுவேன். வாழைப்பழத்தை விட வேறு பழம் இருந்தால் அவர் அந்த பழ சோம்பேறி. அவரிடம் வேலை வாங்கி நான் இளைத்துக் கொண்டிருந்தேன்.அவர் கணவரும் அதே ஆஸ்பத்திரியில் பணியாளர் வேலை.மனைவியைப் பார்க்க அவ்வப்போது வருவார். ஒடிசலான தேகம். மனைவியைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசுவார். எனக்கு பாவமாக இருக்கும். இவருக்கு அவர் மனைவியின் பழைய மேட்டர் எல்லாம் தெரியுமா தெரியாதா என்று அவரை பார்க்கும் போதெல்லாம் யோசிப்பேன்.ஆனால் பழைய விஷயங்களின் சுவடே தெரியாமல் ஒரு புது சூழ்நிலையில் எந்தவித சலனமும் இல்லாமல் கச்சிதமாக செட்டில் ஆகி இருந்தார் அந்த அழகு நர்ஸ்.
அந்த ஆஸ்பத்திரியிலிருந்து மேல்படிப்பு படிக்க என்னுடைய பழைய காலேஜுக்கே வந்தேன். நான் படித்த அதே துறையில் தான் வளர்மதிக்கு வேலை.இன்னும் குண்டாகி இருந்தாள். வளர்மதியை பார்க்க வேறு ஒரு துறையிலிருந்த முரளி அடிக்கடி வருவான். வான் இல்ல வார். அவரைப் பார்த்தால் பணியாளர் என்று சொல்லவே முடியாது. வெள்ளையுஞ்சொள்ளையுமாக படு ட்ரிம்மாக இருப்பார். நாற்பது வயது சொல்லலாம். ஆனால் ஐம்பதை தாண்டியவர். அவரை டாக்டர் முரளி இருக்காரா என்று விசாரித்து தேடி வரும் பல நோயாளிகளை பார்த்திருக்கிறேன். ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் பல பணியாளர்கள் அவரவர் வாழும் ஏரியாவில் டாக்டராகவே இருக்கிறார்கள்! யாரோ ஒரு மெய்யாலுமே மருத்துவம் படித்த டாக்டரின் பெயரைப் போட்டுக்கொண்டு ப்ராக்டீஸ் செய்வார்கள். இதற்கு மாதாமாதம் கணிசமான தொகை அந்த அல்ப டாக்டருக்கு கொடுத்து விட வேண்டும். சரி விடுங்க, நாம கதைக்கு வருவோம்.
முரளி பற்றி நிறைய புகார்கள் உண்டு. ஏற்கனவே மருத்துவமனையில் ஏதேதோ காணாமல் போய், சஸ்பென்ட் செய்யப்பட்டு கேஸ் நடந்து மறுபடியும் பணியில் சேர்ந்திருந்தார். முரளிக்கும் வளர்மதிக்கும் கசமுசா என்று ஆஸ்பத்திரிக்கே தெரியும். முரளிக்கு கல்யாண வயதில் பிள்ளைகள் உண்டு.வளர்மதி தினமும் சமைத்து முரளிக்கும் சேர்த்து ஒரு பெரிய கேரியர் எடுத்து வருவாள்.எந்தவித சங்கோஜமுமின்றி இருவரும் ஒன்றாகவே ஆஸ்பத்திரி காரிடாரில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.எந்த ஒரு விஷயமும் அரைகுறையாகவோ அரசல் புரசலாகவோ தெரிந்தால் தான் சுற்றி உள்ளவர்கள் தனக்கு பிடித்த மாதிரி கதையை நெய்து விடுவார்கள். அட நாங்க இப்படி தான், எங்களுக்குள்ள அப்படி தான் என்று எல்லோருக்கும் தெரியும் படி நடந்துக் கொண்டால் சொந்தமாக நெய்து விட வழியில்லாமல் சுற்றியுள்ளவர்கள் வாயடைத்து போவார்கள். இந்த ஜோடியின் விஷயத்தில் அதை தான் பார்த்தேன்.
தன் மகனை படிக்க வைப்பதிலிருந்து எல்லாவற்றையும் முரளி தான் கவனித்து வருவதாக வளர்மதி பெருமையாக சொல்லுவாள். அந்த பையன் தன்னை அப்பா என்று கூப்பிட வேண்டும் என்று முரளி வற்புறுத்த இருவருக்கும் அடிக்கடி காரிடரிலேயே பெரும் சத்தத்தோடு குடும்பச்சண்டை நடக்கும்.யார் பையன் இவன்? முரளி பையனா? இதென்ன புது குண்டு? அந்த பையன் இறந்து போன பணியாளரின் மகனே அல்ல என்று பலர் சொல்லத்தான் செய்தனர். எனக்கு தலையே சுற்றும்.இதைப்போல ஒரு உறவு/உரிமை பிரச்சனையில் தானே ஒரு ஜீவன் தன்னைத் தானே எரித்துக்கொண்டது என்ற உண்மை அந்த இருவரையுமே சுடவில்லையா அல்லது எல்லாவற்றையும் எளிதாக கடந்து வந்து விட்டார்களா என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.ஆருஷி கொலை வழக்கைப் போல சில உண்மைகள் கடைசி வரை வெளிவருவதே இல்லை.அதனால் யாரை நம்புவது என்று நமக்கு பிடிபடுவதும் இல்லை.
நான் படித்து முடித்து அந்த பாழாய்ப்போன ஆஸ்பத்திரியிலேயே வேலைக்கு சேர்ந்தேன். அப்போது வளர்மதியை வேறு துறைக்கு மாற்றிவிட்டு முரளியை எங்கள் துறையில் போட்டிருந்தார்கள். முரளியை பார்க்க தினமும் வந்துவிடுவாள் வளர்மதி. அதே போல கேரியர் சாப்பாடு.வளர்மதி வேறு ஆண் பணியாளர்களோடு பேசினாலே முரளிக்கும் அவளுக்கும் அன்று தகராறு உறுதி.விதவிதமான குடும்பச்சண்டைகளினூடே வாழ்ந்து வளர்ந்துக் கொண்டிருந்தனர்.
உறவுகள் துரத்த வருடங்கள் ஓடின. முரளி தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து அடுத்த வருடம் தாத்தாவாகி, ரிடையரும் ஆகிவிட்டார். இதற்கிடையே வளர்மதி நீண்ட விடுமுறையில் இருப்பதாக கேள்விப்பட்டு விசாரித்ததில் அவளுக்கு ஏதோ புற்றுநோய் என்று சொன்னார்கள்.சில மாதங்களுக்கு முன் முரளி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.கைத்தாங்கலாக ஒரு பதினாறு பதினேழு வயது வாலிபன் அவரை ஏதோ சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தான். வாய் கோணி போய் பேசுவதே புரியவில்லை. பார்க்கவே பரிதாபமாக இருந்தார். சிறிது நாட்களுக்கு முன்னால் தான் பக்கவாதம் வந்து இப்படி ஆகிவிட்டது என்றார். அவர் அந்த வாலிபனை அழைத்த போது தான் கவனித்தேன். அது வளர்மதியின் மகன். அவனிடம் வளர்மதியைப் பற்றி விசாரித்தேன். சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் பணியில் சேருவார் என்றும் கூறினான்.
இந்த சம்பவங்கள் இப்போது திடீரென ஞாபகம் வர காரணம் நான் சமீபத்தில் அந்த அழகு நர்சைப் பார்க்க நேர்ந்தது தான். அந்த அழகு முகம் பொலிவிழந்து களையிழந்து போயிருந்தது. ஆளும் சற்று இளைத்திருந்தார். விசாரித்ததில் அவர் கணவர் போன மாதம் தான் திடீரென மாரடைப்பால் காலமானதாக சொல்லி அழுதார். ஏனோ மறுபடியும் வளர்மதியின் கணவர் அலறியபடி நெருப்போடு போராடிக்கொண்டு காரிடாரில் ஓடி வந்தது ஞாபகம் வந்து தொலைத்து. ஒரு மனிதனின் அகால மரணத்தை விட அந்த மரணத்திற்கான காரணம் சீக்கிரமே மறக்கப்படுகிறது என்று மறுபடி ஒரு முறை முரளி, வளர்மதியோடு சேர்ந்து நர்சும் நினைவூட்டினார்.
1 comment:
வழக்கமான உங்கள் எழுத்து நடை விறுவிறுப்பைக் கூட்டினாலும்..
மிக கருத்தாளமிக்கதாய் இருந்ததாலும், கதை என் மனதில் கணமாய் அமர்ந்ததாலும்..
உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது இயல்பாய் வரும் சிரிப்பு இன்று மிஸ்ஸிங்.. :(
ஆனாலும் உங்களுக்கு இவ்வ்வ்வளவு சீரியஸான விஷயங்கள் கூட எழுத வருமா :O
பாராட்டுக்கள்!!!
Post a Comment