Friday 27 March 2015

லைவ் ரிலே

ஹைவேயில் நின்றுக்கொண்டு 
'இதோ நம்ம ஸ்ட்ரீட் திரும்பிட்டே இருக்கேம்மா'

டெப்போவிலிருந்தே கிளம்பாத பஸ்ஸிலிருந்து....
"இன்னும் ரெண்டே ஸ்டாப் தான், இறங்கின உடனே ஃபோன் பண்றேன்"

வீட்டு வாசப்படியில் நின்றுக் கொண்டே
'வை வை வை சிக்னல் போட்டாங்க' 

கால் வெய்டிங் ஆப்ஷனே இல்லாத ஃபோனில் 'இன்னொரு லைன்ல பாஸ் வர்றார் அப்புறம் பேசறேன்' 

கும்மிடிபூண்டியில் கிளம்பிக் கொண்டே 
'நாளைக்கு மார்னிங் சென்னை ரீச் ஆயிடுவேன்'

இதெல்லாம் இப்போது அன்றாடம் சுலபமாக கேட்கக் கூடிய வசனங்கள்.

ஒரு ஃபோனுக்கு இரண்டு ஃபோன், ஓரே ஃபோனில் இரண்டு சிம் என்ற அலப்பறை ஒரு பக்கம். அது போக, உச்சா போவதை கூட ரன்னிங் கமெண்ட்ரி தருபவர்கள் மறுபக்கம். 

அலைப்பேசியற்ற ஒரு தெருவை கடந்து வருவதோ, பத்து பேர் கூடியுள்ள ஒரிடத்தில் அலைபேசியே இல்லாத ஒருவரை கண்பதோ குத்துப்பாட்டில்லாத தமிழ் படம் போல அரிதான விஷயமாகிவிட்டது. 

எது நடந்தாலும் உடனுக்குடன் மார்ஸ் கிரகம் வரை தெரிவிக்கவில்லையென்றால் ரத்தம் கக்கி சாவோம் என்ற சாபமும் அலைபேசி வாங்கும்போதே நமக்கு இலவச இணைப்பாக கிடைத்துவிடுகிறது. 

டிவி சேனல்களுக்கு கடுமையான போட்டியாக நாமே பல நேரங்களில் 24/7 நியூஸ் சேனல்களாக மாறி ரன்னிங் கமென்டரியோடு  லைவ் டெலிகாஸ்ட்டும் தந்து வருகிறோம்.'இப்ப தான் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிச்சேன் அடுத்து ரசம்' என்று சொல்லி முடிக்கும் முன் 3ஜியின் மகிமையில் பாதி தின்ற ரசம் சாத ஃபோட்டோ வாட்ஸப்பில் டவுன்லோட் ஆகியிருக்கும். 

கொஞ்சம் பின்னோக்கி யோசித்தால் 
எந்நேரமும் மனதுக்கு பிடித்தவர்களுடன் தொடர்பிலேயே இருக்க ஏங்கிய நாட்கள் உண்டு என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. நமது அன்புக்குரியவர்களின் குரலைக் கேட்க பல கிமீகள் நடந்து சென்ற பொழுது கையடக்கத்தில் ஒரு சாதனம் இருக்காதா என நினைத்ததும் உண்மை தான்.

 எஸ்டிடி பேசும் போது மீட்டரை விட வேகமாக நமது பிபி எகிறிக்கொண்டிருந்த காலத்தை கடந்து தான் இரவெல்லாம் இலவசமாகவோ, பிடித்தவரோடு மணிக்கு பத்து பைசாவோ செலவு செய்து பேசும் நிலையை எட்டியுள்ளோம். ஆனால் இலவசமே கசந்து போகுமளவு அலைபேசி உபயோகத்தை ஓவர்டோஸாக்கி, ஃபோனில் சார்ஜ் இல்லையெனில் ஜன்னி கண்டுவிடும்  அபாய நிலையை நாமாகவே உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என்பதுமே மறுப்பதற்கில்லை. 

உதாரணமாக, ட்ரெய்னில் டாய்லெட்டில் தண்ணீர் இல்லை என்பது ஒரு பெரிய கவலையாகவே தெரியாது, ஆனால் சார்ஜ் பண்ண அந்த கம்ப்பார்ட்மென்டில் ப்ளக் பாயின்ட் இல்லை என்ற வருத்தமே அதிகமிருக்கும். 
 
ஆனால் என்ன தான் கான்ஸ்டன்ட்லி-இன்-டச் ஆசை கல்யாணத்திற்கு முன் டைரிமில்க் சில்க் மாதிரி திகட்டாத சுவையை தந்தாலும், கல்யாணமாகி ஆறு மாதம் கடந்த நிலையிலேயே கணவர்கள் 'இந்த செல்ஃபோன் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனான்...'என்ற டயலாக்கோடு அலைவதை சகஜமாக பார்க்க முடிகிறது. 

இந்த 24/7 நான்ஸ்டாப் கம்யூனிகேஷனை மறைமுகமாக ஊக்குவிக்கும் தொடர்பு சாதனங்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை பெருமளவு பதம் பார்த்திருக்கின்றன என்பதை இப்போதுள்ள தலைமுறை உணர இன்னும் சில வருடங்கள் ஆகும். 
அவ்வாறு உணரும் நேரம் அலைபேசி உபயோகம் பல் துலக்குதலைக் காட்டிலும் இன்றியமையாத ஒரு இடத்தை எட்டியிருக்கும்.