இத்தனை காலமாய் சென்னையிலேயே இருந்தாலும் ஒரு முறை கூட சென்னை உயர்நீதி மன்றத்தின் உள்ளே சென்றதில்லை. அதன் அழகை வெளியில் இருந்து ரசித்ததோடு சரி. அண்மையில் ஒரு வழக்கு விஷயமாக உயர்நீதி மன்றத்துக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
இது அரசுப்பணி பதவி உயர்வு குறித்த வழக்கு. சர்வீஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் நடந்தது . மிக அழகான வேலைப்பாடமைந்த உயரமான கூரை. சுமார் பத்தடி உயரத்தில் நீதிபதி அமரும் இருக்கை. டர்கி டவல் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள் மெத்துமெத்தென்று. நீதிபதி இருக்கைக்கு பின்னே உள்ள சுவர் முழுக்க வண்ணமயமான கண்ணாடி. அதன் மேல் சூரிய ஒளி படும் போது இன்னும் அழகாக ஒளிர்ந்தது கலர் கண்ணாடி. அந்த காலத்திய வேலைப்பாடமைந்த பெரிய பெரிய மர நாற்காலிகள் இன்றைய வார்னிஷுடன் பளபளத்தன. அந்த உயரமான கூரையிலிருந்து நீண்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளை பெயிண்ட் அடித்த பழைய மின்விசிறிகளையும் ஏசி பத்தாது என்று சுழலவிட்டிருந்தார்கள். மின்விசிறி கூட ஒழுங்காக ஓடாத கோர்ட்டை பார்த்திருந்த எனக்கு இது ஒரு 'சொபிஸ்டிகெடெட்' வொர்கிங் அட்மாஸ்பியராக பட்டது.'உயர்' நீதி மன்றம் அல்லவா!
நீதிமன்றத்துக்கு போனது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு ஸ்டே வாங்குவதற்கு .சிலரின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப் போகும் வழக்கு. மனதில் இருந்த கலவரத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் இத்தனையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் .
அன்று சுபமுகூர்த்த தினமாக ஏதோ வழக்கறிஞர்கள் வேலைக்கு வராமல் போராட்டம் வேறு- அதாவது கறுப்பி அங்கி அணிந்து வாதிடமாட்டார்கள் என்று சொன்னார்கள். இன்று வழக்கு நடக்கா விட்டால் எங்கள் நிலைமை ரொம்பவே கவலைக்கிடம்.நம்ம ராசில தான் எப்பவுமே சனி பகவான் கல்லாச கலசலா பாட்டுக்கு சிம்புவுக்கு இணையாக தரையில் படுத்து படுத்து எழுந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்ததால் எல்லா விஷயங்களுமே கடைசி நேரத்தில் கழுத்தை நெரிப்பவையாகவே இருந்தன.
இந்த போராட்டத்தை சாக்கு சொல்லி எங்கள் வக்கீல் அவர் வராமல் அவரது ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார். அந்த வக்கீலம்மாவோ செத்தவன் கையில வெத்தல பாக்கு குடுத்த மாதிரியே ஜீவனே இல்லாமல் எங்கள் கேஸ் கட்டை கையில் வைத்திருந்தது. நேர்ந்து விட்ட ஆடு மஞ்சள் தண்ணிக்கு சிலிர்ப்பதைப் போல திடீர் திடீரென விழித்துக் கொண்டு எங்களை கேள்வி கேட்டார். அந்த அம்மாவை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்று கத்தினாலும் பெரிய ரியாக்ஷன் எதிர்பார்க்க முடியாது போல் தோன்ற அவரோடு பேசவே எரிச்சலாக இருந்தது.
'எப்போ மேடம் கேஸ் ஆரம்பிப்பாங்க?'என்று வெள்ளந்தியாக எங்க அஞ்சலி பாப்பாவிடம் கேட்டுத் தொலைக்க , 'நடந்துட்டு தான் மேடம் இருக்கு, நமக்கு முன்னாடி இன்னும் ஏழெட்டு ஐட்டம் தான்' என்று அவர் சொன்ன பிறகு தான் நீதிபதியை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
(சட்டத்தில் ஐட்டம், ப்ரேயர், கேஸ் என்பதற்கெல்லாம் சரியான முறையான அர்த்தம் உண்டு ).
'இட்ஸ் கிவென் இன் பேஜ் செவென் பாரா டூ மை லார்ட் ' என்று ஒரு பக்கம் சத்தம் வர, எதிர் தரப்பு 'பேஜ் த்ரீ லாஸ்ட் லைன் மை லார்ட்' என்று சொல்ல... ஜட்ஜ் எந்த பக்கத்தையும் திருப்பாமல் மசூதியில் பாடம் செய்பவரைப் போல ஏதோ முணுமுணுத்தபடி கேஸ் கட்டை கீழிருக்கும் அம்மாவிடம் கொடுத்து விடுகிறார். அம்புட்டுத்தேன்.
ஒவ்வொவொரு கேசுக்கும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள். இரு தரப்பு வக்கீல்களும் அன்று கேஸ் முடிந்து விட்டாதாக கிளம்பி விடுகிறார்கள்.
ஒரு பக்கம் ஏதோ ஒரு வழக்கு நடக்க அதை சட்டையே செய்யாமல் காமா சோமாவென வக்கீல்கள் கும்பலாக நின்று அவர்களுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.நீதிபதி பேசுவது சுத்தமாக கேட்க வில்லை. சர்வீஸ் வழக்குகள் பலருடைய வாழ்கையை நிர்ணயிப்பவை. அரசு பணியில் தவறாக மாற்றலானவர்கள், நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வை பெற முடியாதவர்கள்,உத்தியோகத்தை இழந்தவர்கள்,டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் ... என அரசுப் பணியில் நியாயம் தேடி வரும் வழக்குகளை, எத்தனையோ குறைகளை நிவர்த்தி செய்து நீதி கிடைக்கச் செய்யும் இடமாகவே நான் அறிந்துள்ளேன். ஆனால் இங்கு நடப்பவை அனைத்தும் என் அறிவுக்கு எட்டிய வரை அந்த எண்ணத்தை ப்ரீத்தி மிக்சியை விட வேகமாக தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்தன.
எங்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
நிச்சயம் நான் சினிமாவில் இருப்பதைப் போன்ற ஒரு செட்-அப்பை எதிர்பார்த்து நீதி மன்றத்துக்கு வரவில்லை. ஆனால் பேசும்படம் போல் ஒரு ஸ்க்ரீன்ப்ளேயை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இதைப் போன்ற சர்வீஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒரு நாளைக்கு 150 நடக்குமாம். கேட்கவே உச்சி குளிர்ந்தது. ஒரு மனிதரால் எப்படி ஒரு நாளைக்கு 150விதவிதமான வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க முடியும்? முந்தைய நாளே சம்மந்தப்பட்ட பார்ட்டியை 'பார்த்திருந்தாலும்' வழக்கை பற்றி வாசித்து இருந்தாலும் ஞாபகம் இருக்குமா, தீர்ப்பை முன்பே தீர்மானிக்காமல் இருந்தால்? ஸ்டே வாங்குவதர்க்கெல்லாம் நீதிபதியை ''தெரிந்திருந்தால்'' போதும், வாதிட ஏதும் கிடையாது என்பது சட்ட உலகில் உலவும் ஒரு பொதுவான கருத்து. என்ன கண்றாவியோ திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜாங்கிரி தரப் போகிறார்கள் என்று மட்டும் புரிந்தது.
இவ்வளவு பெரிய அறையில் ஏன் (நீதிபதிக்கு மட்டுமாவது )ஒரு மைக் வைக்க கூடாதா? நீதிபதியும் வக்கீல்களும் என்ன பேசுகிறார்கள் என்று எவ்வளவு அருகில் போய் நின்றும் தெளிவாக காதில் விழவில்லை.நானாகவே நிறைய அனுமானித்து ஃபில் இன் தி ப்லான்க்ஸ் செய்துக்கொண்டிருந்தேன். சரி நமக்கு தான் ரெண்டு ஸ்பீக்கரும் அவுட் போல என்று எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டிருக்கையில் திடீரென எனக்கு தெரிந்த பெயர்களாக வாசிக்கப்பட... அட நம்ம கேஸு! எங்கள் அஞ்சலி பாப்பா சடாரென விழித்துக்கொண்டு ஏதோ சொல்ல நீதிபதி ,இப்படி ஒரு ஜீவன் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருப்பதை கவனிக்க கூட இல்லை! எதிர் தரப்பு வக்கீல் பேசியதையும் சரியாக கேட்டதாக தெரியவில்லை. மற்ற எல்லா கேஸ்களைப் போலவே முன்பே முடிவு செய்திருந்த தீர்ப்பை வழங்கி சாரி முனகி கேஸ் கட்டை தூக்கிப் போட்டார்.
மற்ற வழக்குகளைப் கவனித்த பொழுதே ஓரளவு எனக்கு எங்கள் தீர்ப்பு தெரிந்திருந்தது. அதற்காக பெரிய ஏமாற்றம் எல்லாம் இல்லை என சப்பைக்கட்டு கட்டமுடியாது.நொறுங்கிப் போய் தான் வெளியே வந்தோம். அந்த இரண்டு நிமிடங்கள் எங்கள் வாழ்கையையே புரட்டி போட போவதன் தீவிரத்தை உணர நீண்ட நேரம் ஆனது. இந்த வழக்கிற்காக செலவிட்ட கிட்டத்தட்ட ஒன்றரை வருட உழைப்பின் பலனை இரண்டே நிமிடங்களில் இழந்துவிட்டிருந்தோம்.நீதி மன்ற அறைக்குள் இல்லாமல் போயிருந்தது நியாயத் தராசை ஏந்திய நீதிதேவதை சிலையும் , காந்தி புகைப்படமும் மட்டும் அல்ல(ஆமா ஏன் இல்ல? சினிமால இருக்கே..) என்பதை ஏற்றுக்கொள்ள தடுமாறிக்கொண்டிருந்தோம்.
அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை சாமானியர்கள் சிலர் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் பொழுது 'என்ன காரணத்திற்காக நிறுத்த சொல்கிறீர்கள்?'என்ற அடிப்படை கேள்வி கூட எழவில்லை நீதிபதியிடமிருந்து! பதவி, அதிகாரம்,பணத்திற்கு முன்னால் சாமானியனுக்கும் நீதிக்கும் சம்பந்தமே இல்லை. அரசுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளும், போடப்படும் வழக்குகளும் வெற்றி அடைந்ததாக சொல்லப்படும் ஒற்றைப்படை சதவிகித புள்ளிவிவரம் எந்த காலத்திலும் மாறாது போல. சரி,அதற்காக வாழ்கை அப்படியே நின்று விடுவதில்லையே! நமக்கு பிடிக்க வில்லை என்றாலும் நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் அடுத்த நாளில் விட்டுவிடுகிறது பாழாய்ப்போன காலம்!
நடக்க கூடாது என்று நினைத்த கலந்தாய்வும் மறுநாள் நடந்தேற நமக்கு ஆப்பு தலை வாழை இலையில் படையல் போட்டு ஐஸ் கிரீம் டெஸ்ஸர்ட்டோடு பரிமாறப்பட்டது. அரசுப்பணியை பொறுத்த வரை ஆப்பை கூட இளித்துக்கொண்டே வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஆப்பு கூட கிடைக்காது. காலி சட்டியும் அகப்பையும் மட்டும் கொடுத்து ருசியாக சமைக்க சொல்லுவார்கள் இல்லையேல் உயர் அதிகாரிகள் நாம் உயிரோடு இருக்கும் போதே நம்மை மார்ச்சுவரிக்கு அனுப்பி விடுவார்கள்!
பொங்கலுக்கு இப்படி ஒரு போனஸ்! சரி நடப்பது நடக்கட்டும்....
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
6 comments:
Etharkaga vazhakku enna vazhakku endrellam puriyavittalum vaasikka rusiyaga irunthathu
நன்றி Cyn .இரண்டாவது , மூன்றாவது பத்திகளின் முதல் வரியை படிக்கவும்.
ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க.
Thank you agila
Post a Comment