Monday, 20 January 2014

மாகடிகாரம்




தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் என்ற 'டாக் லைனுடன்' சிறுவர்களுக்கான புத்தகம்.  
தீமன் என்ற பத்து வயது விடலை சிறுவன் தான் கதையின் நாயகன். ஏட்டறிவோடு நின்று விடாமல் கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். தன் குடும்பத்தாருடன் ஏலகிரி மலைக்கு செல்ல, அவனை இருட்டுவதற்குள் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு திரும்பிவிட சொல்லி, மலையில் தனியே உலவ அனுமதிக்கிறார் தீமனின் அப்பா. அங்கு உள்ள ஒரு காட்டில் ஹெர்குலஸ் என்னும் தாத்தாவை சந்திக்கிறான் தீமன்.  அவர் தீமனை ,தான் இவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருந்த வாரிசாக கருதி மாகடிகாரம் பற்றிய உண்மையை அவனிடம் சொல்கிறார். அடுத்த ஐம்பது வருடங்களுக்கு அதற்கு சாவி கொடுக்க வேண்டிய பொறுப்பையும் அவனிடம் ஒப்படைக்கிறார். மறுநாள் காலையே தீமனை அழைத்துச் செல்ல யூக் என்ற இளைஞன் வருகிறான்.  பெற்றோரிடம் கூட சொல்லாமல் யூக்குடன் நீர்மூழ்கி கப்பலில் பயணிக்கிறான் தீமன். மரியானா ட்ரன்ச் என்ற இடத்திற்கு சென்று மாகடிகாரதிர்க்கு கொடுக்க வேண்டிய சாவியை ஒரு கோட்டையிலிருந்து எடுத்துக்கொண்டு மோன லோ ஆ என்ற இடத்தை சென்றடைகிறான்.  

அங்கு மடாகஸ் என்ற மற்றொரு வெள்ளை தாடி தாத்தாவையும் இன்பா என்ற சிறுவனையும் சந்திக்கிறான். ஹெர்குலசிற்க்கு தீமனைப் போல மடாகசிற்க்கு இன்பா தான் வாரிசு. தீமனை மாகடிகாரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை விளக்குகிறார் மடாகஸ். அன்று இரவே யாருக்கும்  தெரியாமல்  யார்  துணையும் இன்றி மாகடிகாரம் இருக்கும் இடத்திற்கு வந்து அதன் செயல்பாட்டை நிறுத்திவிடுகிறான் தீமன் . அடுத்த நாள் டிசம்பர் மாதம் இருபத்தியோராம் நாள், 2012 ஆம் ஆண்டு. உலகம் அழியப்போவதாக மாயன் காலேண்டர் குறித்த நாள். கடிகாரம் நின்று போனால் சுனாமி, பூகம்பம் போன்ற அசம்பாவிதம் உலகில் நிகழும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையை முந்தின நாள் இரவே கடிகாரத்தை நிறுத்தி முறியடிக்கிறான் தீமன். 

கடிகாரத்திற்கும் இயற்கை அசம்பாவிதங்களுக்கும் என்ன அறிவியல் தொடர்பு இருந்து விட முடியும், இந்த கேள்வியை ஏன் இவ்வளவு நாள் யாரும் கேட்கவில்லை என்பதோடு முடிகிறது மாகடிகாரம். அறிவியலுக்கு அடிப்படையே ஏன் எதற்கு எப்படி தானே என்று கதையின்  முடிவில் வரும் ஒற்றை வரியே கதையின் சாராம்சம். என்னை கவர்ந்த வரியும் கூட! 
........................................
அம்புலிமாமா, தெனாலிராமன், விக்கரமாதித்யன், மாயாவி .கோகுலம், பூந்தளிர் இவற்றோடு நின்று விட்டது எனது குழந்தைகளுக்கான சிறுவயது தமிழ் வாசிப்பு.  இது நான் படிக்கும் குழந்தைகளுக்கான முதல் தமிழ் நாவல். குழந்தைகள் வாசிப்பிற்கு ஏற்றார் போல தெளிவான,இயல்பான,எளிமையான நடை. ஆனால் சுலபமாக புரிந்துக்கொள்ள கூடியதா - கதையும் கதைக்களமும் என்பதில் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் டௌட்டு... 

விகடனின் 2013 ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய விருதை வாங்கி இருக்கும் இந்த கதை நான் எதிர் பார்த்த அளவு என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். நான் எழுதியுள்ள இந்த கதையின் சுருக்கம் எப்படி எந்த வித டெஸ்க்ரிப்ஷனும் இல்லாமல் மொட்டையாக உள்ளதோ கதையும் எனக்கு அப்படி தட்டையாக உள்ளாதாகவே பட்டது.எந்த ஒரு திருப்பமோ வளைவோ இல்லாத சென்னை பெங்களூரு ஹைவே போல ஒரே சீராக நேராக பயணிக்கிறது. . மரியானா  ட்ரன்ச் ,மோன  லோஆ , நீர் மூழ்கி கப்பல் போன்ற அறிவியல்/ பொது அறிவு சார்ந்த செய்திகள் இருந்தாலும் ஏனோ ஏலகிரி மலையை ஜப்பான் அருகிலிருக்கும் மரியானா  ட்ரன்ச்சோடு   இணைத்துப் பார்க்க முடியவில்லை. கதை நெடுக கற்பனை வறட்சி. குழந்தைகளுக்கு என்று எழுதும் போது அவர்களுடைய கற்பனைக்கு தீனி  போடுவது மிகவும் அவசியம். அது சாதாரண விஷயமும் அல்ல. ஒரு தீவைப் பற்றி விவரிக்கும் போதோ ஒரு ஆழ் கடல் பயணத்தைப் பற்றி சொல்லும் போதோ ஒரு எழுத்தாளரின் கற்பனைக்கு எவ்வளவு வேலை இருக்க வேண்டும்? நம்மை அந்த உலகத்துக்கே அழைத்து சென்றிட வேண்டாமா? நாமே கற்பனை செய்து படிப்பதற்கு கூட நல்ல கதை களம் இருந்த போதும் அதை விவரிக்கவோ வர்ணிக்கவோ இல்லை கதாசிரியர். ஒருவேளை குழந்தைகளுக்கான இலக்கியம் இப்படி தான் இருக்க வேண்டுமோ?கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு இன்னும் நல்ல அறிமுகம் கொடுத்திருந்தால் ஒன்றி படித்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை.  ஒரு புத்தகத்தை ஒன்றிப் போய் வாசித்தால் எனக்கு அந்த கதையிலிருந்து வெளியே வரவே சில நாட்கள் ஆகும்.படித்து முடித்த பின்னும் மனதுக்குள் ரீ டெலிகாஸ்ட் மாதிரி கதை ஓடிக்கொண்டே இருக்கும். இந்த கதையை படித்து முடித்து கதை சுருக்கம் எழுதும் போதே மறுபடி புத்தகத்தை எடுத்து ஒரு முறை பார்த்தேன். அவ்வளவு தான் என் மனதில் பதிந்திருந்தது. 


குழந்தைகளுக்கு தெரியாத சில முக்கிய இடங்களின் பெயர்களை சொல்வதற்கென்றே இந்த கதை எழுதப்பட்டது போன்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. இப்படி எழுதினால் தான் குழந்தைகளுக்கு வாசிக்க முடியும் என்ற ஏதாவது வரையறைக்குட்பட்டு  எழுதப்பட்டதா இந்த மாகடிகாரம் ? தெரிந்தவர்கள்  புரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். 
விகடன் விருது தவிர்த்து, பேஸ் புக்கில் ஆளாளுக்கு கொடுத்த லிஸ்டில் இந்த புத்தகத்தை நிறைய பேர் சிபாரிசு செய்திருந்தனர். விழியன் மேலும் பல குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். நான் அவற்றையும் படிக்க முடிவெடுத்துள்ளேன். குழந்தைகளுக்கான இலக்கியம் இப்படி தான் இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள ஆவல். எனக்கு இதை போன்ற வேறு யாரவது எழுதிய குழந்தை இலக்கியங்கள் தெரிந்தால் பரிந்துரை செய்யவும்.  




5 comments:

Prabhu said...

S.ra books are there

அருணாவின் பக்கங்கள். said...

Thank you Prabhu.

Unknown said...

very good review. Good to know you Aruna.

Guru said...

நான் வாசிக்கவில்ல, ஆனால் குழந்தைகளுக்கு ஃபேண்டசியை விட Fact கலந்த கதை புக்ஸை பரிந்துரைப்பேன். அதீத ஃபேண்டசியை(கற்பனை) கூட ஆபத்து தான்.... ப்ரதம் பதிப்பகத்தின் Read India மூவ்மெண்ட்டில் வரும் பல கதைகள் அவ்வாறு கலர்ஃபுல் படங்களுடன் வரும். யூரேகாவின் ஸ்டால் 604-ல் எல்லாம் கிடைத்தது. Thulika & Children Book Trust இந்த பதிப்பகங்களும் குழந்தைகள் கதை வருகிறது.

Kumar said...

Hi Aruna, I am Kumar and my publishing company has launched two children story books. Ipaatti stories .. peng-peng and thanga siripu.I can send a copy of the book.please let me know you address detail to kumar.sivalingam@ipaatti.com
Our website :www.ipaatti.com