Thursday 23 January 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்




அது ஒரு அழகான குடும்பம். என் நெருங்கிய  தோழியின் உடன் பிறந்த அக்காவின் குடும்பம். என் தோழிக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா. அக்கா திருமணம் முடித்து கணவரோடு ஹோசூரில் செட்டில் ஆகி இருந்தார். அக்காவுக்கு மின் வாரியத்தில் எஞ்சினியர் வேலை. அக்கா வீட்டுகாரருக்கு பெங்களூருவில் சாப்ட் வேர் வேலை. அடிக்கடி வெளி நாடுகளுக்கும் சென்று வருவார். இரண்டு மகன்கள்.அக்கா அப்படி ஒரு அழகு. பன்னீர் புஷ்பங்கள் காயத்ரி மாதிரியே இருப்பார்.  அந்த கணவன் மனைவியின் அன்யோநியத்தை பார்க்கவே ஆசையாக இருக்கும். மாமாவின்(அக்கா கணவர்) நகைச்சுவை உணர்வால் வீடே கல கலவென இருக்கும்.

 தோழிக்கு அப்பா இல்லை.அப்பா இறந்த பின் அம்மா அக்கா வீட்டோடு தங்கி பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொண்டார். அண்ணனோ எந்த வித கவலையுமின்றி அவருடைய மாமனாரின் குடும்பத்தோடு ஏதோ ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தார். தாத்தா, பாட்டி எழவு, அப்பா எழவு என்று துக்கம் விசாரிக்க மட்டுமே இந்தியா வருவார். கோடை விடுமுறையில் நாமக்கலுக்கு ஏதோ நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு காரில் வந்தனர் அக்கா குடும்பத்தினர். 
கோவிலை சென்றடைவதற்கு  முன்னரே ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் அந்த கோர விபத்து நிகழ்ந்தது.  ஒரு லாரிக்கு பின்னால் சென்ற இவர்கள் காரை ஓவர் டேக் செய்ய முயன்ற பேருந்து ஒன்று, எதிரில் வேறேதோ ஒரு லாரி வர , இவர்கள் காரின்  பின்புறத்தில் கடுமையாக மோதியுள்ளது.  பின் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய பையனுக்கும்   அக்காவுக்கும் மட்டும் அடி. பையனுக்கு முகத்தில் அடி. அக்காவுக்கு எந்த காயமும் இல்லை. பின்னால் பேருந்து இடித்ததில் முன் சீட்டில் இடித்து அதே வேகத்தில் அப்படியே பின்னாடி சாய கழுத்து எலும்பு முறிந்து விட்டது. 

இன்ஸ்டன்ட் கோமா.  எந்த காயமுமே இல்லாமல் ஹெட் இஞ்சுரி, கோமா. டாக்டர்கள் கொடுத்த நம்பிக்கையின் பேரில் காத்திருந்தனர் குடும்பத்தினர். பிரைன் ஸ்டெம் அடி வாங்கி இருந்ததால் ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்க மாட்டார்.நிச்சயம் தேறி விடுவார் என்று நம்பிக்கை துளிர் விடும் போது அடுத்த நாள் படு மோசமாக போயிருக்கும் நிலைமை.  மாமாவும் , என் தோழியின் கணவரும்,  இரவு பகல் பாராமல் பழியாய் கிடந்தனர் மருத்துவமனையில். சேலத்திலிருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றினர். ஒரு வாரம் ஆயிற்று. ஹெட் இஞ்சுரி கேஸ்கள் என்ன ஆகும் என்று கணிப்பது மிகவும் கடினம். தலையில் அடிப்பட்டு நன்றாகவே இருப்பவர் திடீரென கோமாவுக்கு போவதும் கோமாவில் இருந்தவர் அடுத்த நாள் எழுந்து உட்கார்ந்து காபி குடிப்பதும் மனித மூளையின் பிடிபடாத ஆச்சர்யங்கள். அவ்வாறு ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டால் நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை கடவுளாகவும் , மருத்துவர் யாமறியேன் பராபரமே என வானத்தை நோக்கி கையை தூக்குவதும் சினிமாவில் அல்ல, நிஜத்தில் நிறையவே பார்க்கலாம்.

அதே வாரத்தில்  ஒரு காலை வேளையில் நண்பன் போன் செய்தான் அக்கா போயிடாங்க என்று. ஆக்சிடென்ட்  கேஸ் ஆதலால்  பிரேதப் பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். மாமா பித்து பிடித்தவர் போல் இருந்தார். சின்ன பையனுக்கு  விவரம் தெரியவில்லை சரியாக. கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தான். பெரியவன் ஒரு மூலையில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். தோழியின் அண்ணன் வழக்கம் போல எழவுக்கு வந்திருந்து காரியத்துக்கு கூட காத்திராமல் அடுத்த  நாளே கிளம்பிவிட்டான். 
ஒரு வழியாக நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து முடிந்தன. 
மாமாவின் குடும்பம் பெரிய குடும்பம். ஐந்து அண்ணன்கள். இவர் தான் கடைக்குட்டி.மாமாஅண்ணன்கள் குடும்பம் அங்கேயே டேரா போட்டிருந்தன. பதினோராம் நாள் காரியம் முடித்த அடுத்த நாளே மனசாட்சியே இல்லாமல் அவருக்கு மறுமண பேச்சை ஆரம்பித்தனர். 

கொதித்து போய்விட்டனர் தோழியின் அம்மாவும் அவள் கணவரும்.  மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் மாமா.தோழியும் அவள் அம்மாவும் அவர்களோடு சண்டை போட்டு ஒரு வழியாக இந்த டாபிக்கை கைவிட செய்தனர். தோழியின் அம்மா அங்கேயே தங்கி குழந்தைகளை கவனித்து கொண்டார். மூன்று மாதம் கழித்து மறுபடியும் பூதம் கிளம்பியது.  இந்த முறை மாமா ஆரம்பித்தார். 
தோழி அவள் கணவரோடு தன் அக்கா வீட்டிற்கு சென்று மாமாவோடு பேசினார்.  பெரியவன் இப்போது +2.  அவன் படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படி கேட்க, மாமா ஒத்துக்கொள்ளவில்லை. இப்ப கல்யாணம் பண்ணலேன்னா நாளைக்கே நான் செத்து போய்டுவேன் என்ற ரீதியில் பேசவே, தோழியும் அவள் கணவரும் சரி குழந்தைகளை தங்களிடம் கொடுத்துவிடுமாறு கேட்டனர்.  பேச்சு வளர்ந்து வளர்ந்து கடைசியில் கைகலப்பில் முடிய... மாமா தன் இறந்த மனைவியின் சொந்தபந்தங்கள் யாரும் வீட்டு பக்கம் காலடி வைக்க கூடாது என அனைவரையும் விரட்டி அடித்தார். தோழியின் அம்மா மட்டும் தன்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை என குழந்தைகளுக்காக அங்கேயே தங்கி விட்டார்.ஒரு தாய் இல்லாவிட்டால் எப்படியெல்லாம் ஒரு குடும்பம் அலைகழிக்கப்படுகிறது என்பதை பார்த்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் , அக்காவுடன் பணி புரிந்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ,மற்ற சொந்தபந்தங்கள் என அனைவரும் பார்த்து நொந்து போகாதவர்களே இல்லை.இந்த நொந்த லிஸ்டில் நானும் சேர்த்தி. தோழிக்கு ஆதரவாய் இருப்பதை தவிர வேறு எந்த ஆணியையும் எந்நாளும் என்னால் கழட்ட முடியாது. 

எனக்கு உள்ள ஆதங்கமே பதினைந்து வருடம் குடும்பம் நடத்திய மனைவிக்கு மாற்று மூன்றே மாதங்களில் ஒரு ஆணுக்கு தேவைப்படுகிறதா? இது கடந்த  ஒரு  வருடத்தில் நான் பார்க்கும் மூன்றாவது நிகழ்வு . இந்த  மாமாவே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கே உள்ளது மற்ற இரண்டு ஆண்களும் செய்தது . ஒருவர், மனைவி புற்றுநோயால் இரண்டு வருடம்  படாத பாடுப்பட்டு இறந்த மூன்றாவது மாதம் மேள தாளத்துடன் பத்திரிக்கை அடித்து தடபுடலாக திருமணமே முடித்துவிட்டார். இவர் ரொம்ப வெகுளி,விவரமே பத்தாது என்று பல முறை அவர் மனைவி சொல்ல கேட்டிருக்கிறேன்! மற்றொருவர் மனைவிக்கு  அடிக்கடி தலைவலி என்று டெஸ்ட் செய்யப்போய் மூலையில் கட்டி என்று கண்டறியப்பட்டு, உடனடியாக அறுவைசிகிச்சை செய்த பின் இரண்டு நாட்களில் இறந்துவிடுகிறார். எல்லாம் ஒரே வாரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட, இரண்டாவது மாதம்  ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டார்.  இந்த இருவருக்குமே குழந்தைகள் இல்லாமல் இல்லை. முதலாமவருக்கு கல்லூரியில்  படிக்கும் பையன்,இரண்டாமவருக்கு  பள்ளிக்கு செல்லத் தொடங்கியுள்ள இரண்டு நண்டு சிண்டுகள். இத்தகைய அவசர கல்யாணங்கள் எல்லாம் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளத்தான் என்று சொல்பவர்களை தூக்கிப்போட்டு யோசிக்காமல் சங்கிலேயே மிதிக்கலாம். இவர்களுக்கென்று,  கல்யாணம் ஆனால் போதும் என்று  தள்ளி விடப்படும் பெண்களும்,தோஷம் என்று மணம் தட்டிப்போன முதிர்கன்னிகளும் கிடைக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க இதைப்  போன்ற ஆண்கள் திருமணம் செய்யும் வேகத்தை பார்த்தால் இரண்டு விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கின்றன. ஒன்று,ஆண்கள் இந்த அளவுக்கா காய்ந்து போய் இருக்கிறார்கள் ? இரண்டாவது, மனைவியின் இடத்தில் வேறொருவரை ஏதோ வீட்டு வேலைக்கு ஆள் மாற்றுவதை போல ஜஸ்ட் லைக் தட் ஏற்றுக்கொள்ளும் திறமை. எல்லா ஆண்களையும் குறை சொல்ல வரவில்லை என்றாலும் இவர்களும் சராசரி குடும்பஸ்தனாக இருந்தவர்கள் தானே! யாரும் மனைவி சீக்கிரம் செத்து போய்விட வேண்டும் என்று வேண்டிக்  கொண்டிருந்த ஆசாமிகளும் அல்ல. சட சடவென தனது தேவைக்கேற்ப வாழ்கையை மாற்றி அமைத்து,அதை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் மனநிலையும் பார்த்து அசந்து போனேன்.

ஒரு இழப்பிலிருந்து மீண்டு வர எவ்வளவு காலம் ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும்? தெய்வாதீனமாக தப்பிப்பிழைத்த   ஒரு விபத்திலிருந்து மீண்டுவரவே ஒரு மனிதனுக்கு பல மாதங்கள் ஆகிறது. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒன்றாக படுத்து உறங்கி பிள்ளை பெற்று சுக துக்கங்களில் ஆதரவாய் நின்று, ஒரு ஆணின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிற ஒரு பெண்ணின் இழப்பை ஈடு செய்ய மூன்று மாதம் போதுமா? இதில் பெண்ணீயம் ஆணீயம் என்று எந்த ஈயம் பித்தளை பற்றியும் நான் பேசவில்லை. மனைவிகளின் மரணங்களைவிட எனக்கு அவர்கள் கணவர்களின் செயல்களே கடுமையான அதிர்ச்சியை தருகின்றன என்பதையே சொல்ல வருகிறேன்.

பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை என்று பல நூற்றாண்டு பழம் பல்லவியை இன்றும் வெள்ளித்திரையில் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் இந்த 'adaptive nature ' குறித்து எதிலும் கோடிட்டு கூட காட்டப்படுவதாக தெரியவில்லை.   
 நண்பிகளிடம் இந்த தலைப்பை பற்றி பேசிய பொழுது அவர்கள் தனக்கு தெரிந்த  கதைகளை கூறினார். அதே மனைவி அகால மரணம் கணவர் மூன்றே மாதத்தில் மறுமணம் கதைகள். ஆணோ பெண்ணோ வாழ்க்கைத்துணை இறந்த பின் வேறு துணையே தேட கூடாது, இறந்தவரையே நினைத்து கடைசி வரை உருகி உருகி சாகவேண்டும் என்ற லூசுத்தனமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஆண்களின் இந்த மறுமண வேகம் தான் ஆயாசத்தை தருகிறது. 

'கணவனை இழந்தோருக்கு காட்டுவதற்கு இல்'... மனைவியை இழந்தோருக்கு?உடனடியாக இன்னொரு பெண்ணை காட்டினால் போதும் போல! 



1 comment:

vcl said...

There are even more bitter experiences about men... They are from mars and I couldn't figure out what they learn at Mars b4 they come to earth