Sunday, 23 February 2014

ஸ்போர்ட்ஸ் டே

 யோஹான் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே. 
அழகான இளம் அம்மாக்களோடு சனிக்கிழமையாதலால் அப்பாக்களும் வந்திருந்தனர். அப்பாக்கள் அனைவரும் காம் கார்டர் காமெராக்களுடன் ப்ரொபஷனல் போடோக்ராபர் போலவே அலைந்து கொண்டிருக்க, அம்மாக்கள் பெரும்பாலும் ஐ பேட், டேபிலேட்டோடு செட்டில் ஆகி இருந்தனர். 

குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியோ நடனமோ எதுவாக இருந்தாலும் சொல்லிக்கொடுக்கப்பட்டதை செய்யாமல் சுற்றி உள்ளவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தனக்கே சொந்தமான உலகில் தனக்கு தெரிந்ததை செய்யும் குழந்தைகள் பலருடைய கவனத்திலிருந்து தப்பி விடுகின்றனர். உண்மையில் அவ்வாறான குழந்தைகளை ரசிப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அது ஒரு தனி அழகு! நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிப்போம் குழந்தை தவறாகவே செய்தாலும். சொல்லிகொடுத்த மிஸ்ஸுக்கு தான் செம கடுப்பாக இருக்கும். 

ஆசிரியை என்றால் என்றால் ஏனோ சற்று வயதானவர் என்ற உணர்வு நம்மை அறியாமல் தொற்றிக்கொள்கிறது. அதனால்  முடிந்த வரை மிஸ் என்றே வைத்துக்கொள்வோம். மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த ஆடைகளில் அனைத்து மிஸ்களும் வளைய வர,  மூன்று பிரிவுகளாக (houses)பிரிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் சிவப்பு, நீலம், மற்றும் சந்தன கலர் சட்டையுடனும் தொப்பியுடனும் செய்த அணிவகுப்பு அழகோ அழகு.வண்ணமயமாக குழந்தைகள் அனைவரும் மார்ச் பாஸ்ட் செய்து வந்து வரிசைக் கட்டி நின்றனர். மிஸ்களும் எதிரே நின்று குழந்தைகளோடு சேர்ந்து மிக அருமையானதொரு இசைக்கோர்வைக்கு (வழக்கமான டிரில் மியூசிக் இல்லை!)  டிரில் செய்தனர். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தாலே மண்டை காயும் நமக்கு இத்தனை குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து  வெகு நேர்த்தியாக அவைகளை இசைக்கு ஏற்றவாறு செய்ய வைப்பது சாதாரண விஷயமல்ல.அனைவரும் மூன்றரை  வயதுக்குட்பட்ட வாண்டுகள். ஆசிரியர்களின் மெனக்கெடல்  இம்முறையும் ஆச்சர்யமூட்டியது. 

ரசனையான விளையாட்டுக்கள். ஒரு தட்டில் நிறைய ஹேர் கிளிப்புகள் கிரௌண்ட் நடுவே வைக்கப்பட்டிருந்தன.விசில் அடித்தவுடன் குழந்தை ஓடி சென்று ஒரு கிளிப்பை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு ஓடி வர வேண்டும். அவ்வாறு விசில் அடித்தவுடன் ஓடிய  பெண் குழந்தை ஒன்று சீரியசாக   ஒவ்வொரு கிளிப்பாக போட்டு போட்டு பார்த்து திருப்தி அடையாமல் கழட்டி வைத்துக்கொண்டே இருந்தது. கடைசி வரை அந்த தட்டை விட்டு நகரவே இல்லை!மற்றொரு விளையாட்டில் கலர் கலராக செய்து வைக்கப்பட்ட மலர்களிலிருந்து வண்டுகள் போல உடை அணிந்த குழந்தைகள் தேன் சேகரிக்க வேண்டும் என்று போட்டி. சொல்லி வைத்தாற்போல ஒவ்வொவொரு குழந்தையும் தனக்கு கொடுக்கப்பட்ட மலரை விட்டு அடுத்த ட்ராக்கில் இருந்த மலரிடமே ஓடின! சொல்லிகொடுத்த மிஸ்ஸுகள் அலறியடித்துக்கொண்டு குழந்தையின் பின்னே ஓடினர்.  ஓட்டப்பந்தயத்தில் விசில் அடித்தவுடன் நேராக பார்வையாளர் இடத்தில் நின்றிருந்த அதன் அம்மாவிடம் ஓடிய குழந்தை, எதிர் திசையில் திரும்பி ஓடிய குழந்தை, அசராமல் மூக்கு நோண்டியபடி நின்ற இடத்தை விட்டு அசையாத குழந்தை,எத்தனை முறை தனியே பிடித்து நிறுத்தி வைத்தாலும் பக்கத்து ட்ராக் பையன்  கையை விட மறுத்த குழந்தை என சிரிப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடந்தேறின விளையாட்டுப்  போட்டிகள் அனைத்தும். 

பரிசளிப்பின் போதும் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை.முதல் பரிசை பெற்றுக்கொள்ள மேடை ஏறிய  குழந்தை ஒன்று நடுவில் எங்கும் நிற்காமல் ஓடி மேடையின் இன்னொரு பக்கத்தில் இருந்த படிக்கட்டில் இறங்கி ஓடியே போய்விட்டது. அதனோடு கூட பரிசை பிடுங்கிக்கொண்டு ஓடிய குழந்தை, பரிசு வாங்கிய பின்னர் மேடையை விட்டு இறங்க மறுத்த குழந்தை என குழந்தைத்தனம் எல்லா ரூபத்திலும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது தான் நிகழ்ச்சியின் ஹை லைட்! 

நிகழ்ச்சிகள் தொடங்கியதிலிருந்தே  கருப்பு கண்ணாடி அணிந்த அப்பாக்கள் யாரை ஃபோகஸ் செய்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் பிஸியாக கவர் செய்துக் கொண்டிருக்க, அம்மாக்கள் குழந்தைகளை வளைத்து வளைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தனர். கண் முன்னே நடப்பதை ரசிக்காமல்  என்றோ பார்பதற்காக காமெராவில் படம் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர் பெற்றோர்.போட்டிகளில் பங்குபெற்ற பல குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதோ நுழைவுத்தேர்வுக்கு பிள்ளையை அனுப்பிய டென்ஷனோடு இருந்தது உச்ச பட்ச காமெடி. 

உண்மையிலேயே இவர்களை எல்லாம் விட குழந்தைகளுக்கு அடுத்த படியாக உள்ளபடியே சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து களித்தது தாத்தா பாட்டிகள் தான்.  இல்லை எனக்குத் தான் அப்படி தோன்றியதா ?

Sunday, 16 February 2014

தாத்தா பாட்டி

அண்மையில் ஒரு க்ரெஷ் (crèche)பற்றி விசாரிக்க சென்றிருந்த போது ஒரு காட்சியை காண நேர்ந்தது.  ஆர்வம் தாளாமல் (என்பதை விட மனசு கேட்காமல் என்பதே சரி) அங்கு இருந்த ஒரு எட்டு மாத குழந்தையைப் பற்றி விசாரித்தேன். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் பால் புட்டி, பால் பவுடர், சத்து மாவு காஞ்சி சகிதம் வந்து இறங்கி விடுவார் போல. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இல்லையாம். பெண்ணைப் பெற்றவர்களுக்கு சென்னை ஒத்து வர வில்லையாம். பையனைப் பெற்றவர்கள் ரொம்பவே வயதானவர்கள். ஆக, குழந்தையைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி இல்லை. வேலைக்காரியை நம்பி வீட்டில் தனியாக குழந்தையை விட்டுவிட்டு வர மனதில்லை. வேலையையும் விட முடியாத சூழ்நிலை. வேறு வழி? ஆறு மாதத்திலிருந்தே க்ரெஷ் தானாம்.  
கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரம்! இரவு குழந்தையை வந்து எடுத்துச் செல்ல ஏழு எட்டு மணி ஆகிவிடுமாம். குழந்தை பெரும்பாலும் தூங்கிவிட்டிருக்கும்.அது விழிப்போடு பெற்றோரிடம் விளையாடும் நேரம் எவ்வளவு எப்போது என்பதையெல்லாம் யோசிக்காமல் இருப்பது நல்லது. அப்படி எதுக்கு வேலைக்கு போகணும் என்று வேடிக்கை பார்க்கும் எவரும் சுலபமாக கமெண்ட் அடிக்க முடியும்.அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ யாரு கண்டா! 

தவிர்க்க முடியாத சூழலில் வேலைக்கு செல்வது ஒருபுறமிருக்க வேறு எதற்கோ ஆசைப்பட்டு பால் குடி மாறா பச்சப்பிள்ளையை விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்களும் உண்டு.குழந்தைப் பிறந்து மூன்றாவது மாதத்திலேயே தாய்க்கு ஆன்- சைட் வேலை. வேறு எங்கே  குட்டி சுவரில் தான்.இப்போது வாய்ப்பை விட்டால் மறுபடி கிடைக்காதாம்.மூன்றே மாதமான தாய்ப்பால் மட்டுமே உண்ணும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு பறந்தாயிற்று.போனால் வருவதற்கு குறைந்தது எட்டு மாதம் ஆகும் என்று தெரிந்தே செல்லும் பெற்றோரை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? இதற்கு பின் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்காது என்று பறப்பவர்களுக்கு குழந்தையின் இந்த பருவமும் திரும்ப கிடைக்காது என்று கேட்காமலே அறிவுரை வழங்குபவர்களிடம் அதெல்லாம் நாங்க அடுத்த குழந்தைக்கு பார்த்துக்கிறோம் என்று வாயடைத்து விடுகிறார்கள். 

தாய்பாலின் மகத்துவத்தை அறிவுறுத்தி அரசுப்பணிகளில் கூட மூன்று மாதம் இருந்த மட்டர்னிட்டி லீவை ஆறு மாதமாக மாற்றி விட்டார்கள்.ஒரு குழந்தைய பாத்துக்கவே வழிய காணோம் இதுல ரெண்டாவது வேறயா என்று சலித்துக்கொள்ளும் என்னைப் போன்ற ஆட்களிடம் இப்பத்தான் ஆறு மாசம் லீவாமே என்று இழுத்து வாக்கியத்தை பூர்த்தி செய்யாமல் ஆவலோடு நம் முகம் பார்ப்பவரிடம் ஏழாம் மாசம் பிள்ளைய ஸ்கூல்ல  சேர்த்துட்டு நீங்க கூட இருந்து கவனிச்சிக்க  முடியுமா என்றே கேட்க தோன்றுகிறது! 

குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள்- தாத்தா பாட்டி அத்தை யாரோ ஒருவர்-  உள்ளனர் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் என்று வேலைக்கு செல்லும் ஒரு தாயிடம் கேட்டால் புரியும். வேலைக்காரியிடம் குழந்தையை விட்டு செல்லும் குடும்பங்களையே சென்னைப் போன்ற பெருநகரங்களில் பார்க்க முடிகிறது. வேலையாள் குழந்தையை பார்த்துக்கொள்வாள் சரி, வேலையாளை பார்த்துக்கொள்வது யார்?? 

சரியான வயதில் திருமணம் முடித்து குழந்தையையும் பெற்றுக்கொள்ள சொல்லி பெருசுகள் வலியுறுத்துவதில், இந்த ஒன்னே காலணா சமூகம் தங்களை கேள்வி கேட்கும் முன் தங்கள் கடமையை  முடித்துவிட வேண்டும் என்ற உண்மையை தாண்டி வேறு ஒரு அர்த்தமும் உள்ளது.அது வயதான காலத்தில் தங்களால் பேர பிள்ளைகளை வளர்க்க உதவ முடியாது என்ற அவர்களின் நியாயமான கவலையே ஆகும். தாய் தந்தையை முதியோர் இல்லத்திற்கு பத்தி விட்டவர்களை இதில் கணக்கில் கொள்ள வேண்டாம். 

எங்களை எல்லாம் எப்படி வளர்த்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.பெற்றோர்  இருவரும் ஆசிரியர்கள். வீட்டில் எப்போதுமே எங்களை கவனித்துக்கொள்ள ஊரிலிருந்து வரவழைத்த ஒரு பெண் இருக்கும். என் அக்காவுக்கு ஏழு வயதென்றால் எனக்கு இரண்டு வயது. எங்களைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயதிருக்கும். அது ஊட்டுவது தான் சாப்பாடு. எந்த நம்பிக்கையில் எங்களை விட்டு சென்றனரோ பெற்றோர் அந்த நம்பிக்கை இன்று எள்ளளவும் வேலையாள் மீது வைக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படி. பத்து வருடம் வீட்டில் சோறு போட்டு வளர்த்தவனே அந்த வீட்டு குழந்தையை பலாத்காரம் செய்வது,ஒரு தங்க சங்கிலிக்காக வீட்டு டிரைவர் குழந்தையை கொல்வது, நூறு இருநூறுக்காக குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு அனுப்புவது, குழந்தைக்கு காஃப் சிரப்பை ஊற்றிவிட்டு தங்கள் 'மற்ற' வேலைகளை கவனிப்பது...இப்படி எல்லாம் நடக்க கூட முடியுமா என்று பெற்றவர்கள் யோசித்து கூட பார்க்க முடியாத சூழலில் நம்மை வளர்த்து ஆளாக்கி கல்யாணமே கட்டிக் கொடுத்து விட்டார்கள் நம் பெற்றோர்கள்.  இத்தகைய குரூரமான சூழல் நம் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பது துரதிஷ்டமே! 

தாத்தா பாட்டி மீது குற்றச்சாட்டுகளும் உண்டு. நம்மை ஊரில் இல்லாத கெடுபிடிகளோடு வளர்த்துவிட்டு பேரப்பிள்ளைகளிடம் அநியாயத்திற்கு செல்லம் கொஞ்ச வேண்டியது. அதோடு நின்றால் பரவாயில்லை. நாம் நம் பிள்ளையை கண்டிக்க போக, குழந்தைக்கு என்ன தெரியும் அதை ஏன் திட்ற என்று வரிந்துக் கட்டிக்கொண்டு முன்னாடி நிற்பார்கள். தாத்தா பாட்டி செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்ற பரவலான கருத்து எல்லா இடங்களிலும் உண்டு. உங்க அப்பாவால தான் இப்படி பேசுறான் உங்க அம்மாவால தான் அப்படி ஆடறான் என்று தாத்தா பாட்டி கொடுக்கும் செல்லத்தினால் கணவன் மனைவியிடையேயும் மனஸ்தாபம் வரும். ஆனால் இப்போது குழந்தைகள் வளரும் சூழலில் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை . குழந்தை ஓரளவு வளரும் வரை அவர்கள் உடனிருப்பது ஆகப் பெரும் துணை. அந்த கொடுப்பினை இல்லை என்றால் தாயாவது குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டும் வரை உடனிருக்க வேண்டும். ஆனால் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் தான் பெருவாரியான குடும்பங்கள் பெருநகரங்களில் தத்தளிக்கின்றன. 

தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு, பிள்ளைகளுக்காக வாழ்ந்தது போதாது என்று பேரப்பிள்ளைகளுக்காகவும் மெனக்கட தயாராக இருக்கும் தாத்தா பாட்டிகளின் நடுவே சற்றே வித்தியாசமான தம்பதியரும் உள்ளனர். கல்யாணம் செய்து வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக சொல்லி  எதிலும் தலையிடாமல் இருப்பவர்கள், 
இனிமேல் தான் நாங்கள் எங்கள் வாழ்கையை வாழ வேண்டும் என்ற கோரிக்கையோடு ஊர் உலகத்தை சுற்றிப் பார்க்க கிளம்புபவர்கள்,கடைசி காலத்தில் தாங்கள் வாழ்ந்த ஊரிலேயே இருக்க ஆசைப்படுபவர்கள்....இப்படி ஒரு நியாயமான லிஸ்டும் உண்டு. 

தங்கள் வாழ்கையை இனிமேலாவது தாங்கள் விரும்பியபடி வாழ விரும்பும் அவர்களை நாம் இன்னமும் சார்ந்து இருந்து இம்சைப்படுத்தாமல் வாழவிடுவதும் நமது கடமை தானே? 

Monday, 10 February 2014

மெலூஹாவின் அமரர்கள்



THE IMMORTALS OF MELUHA ஆங்கிலத்தில் தான் வாசித்தேன்.ஆனால் தமிழில் இந்த புத்தகம் வந்திருப்பது ஆங்கிலத்தில் நூறு பக்கங்களுக்கு மேல் படித்த பின்னரே தெரிய வந்தது. 
இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள் அவ்வளவாக என்னை ஈர்க்காத காரணத்தால் ஒரு சிறு தயக்கத்துடனே ஆரம்பித்தேன்.ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருக்கும் பட்சத்தில் எனக்கு கதா பாத்திரங்களின் ஆங்கில உரையாடல்கள் வடஇந்திய அக்சென்ட்டுடனே வாசிக்க முடிந்தது சற்று கவலையாகவே இருந்தது. 
ஆனால் முதல் இரண்டு பக்கங்களிலேயே மெலூஹா நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. 

சிவபெருமான் என்ற கடவுளை பூமியில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஷிவா என்ற ஒரு சாதாரண மனிதனாகவும் பார்வதி, தச்சன் என்று சிவபுராண கதாபத்திரங்களை பண்டைய சிந்து சமவெளி நாகரீகத்திலும்  ராம ஜென்ம பூமி அயோத்தியிலும் நேர்த்தியாக பின்னப்பட்ட கற்பனைக்  கதையில் உலவ விட்டிருக்கிறார் கதாசிரியர். 

இமய மலையின் அடிவாரத்தில் வசிக்கும் குணா என்ற பழங்குடி இனத்தின் தலைவன் ஷிவா, அங்கு மற்ற இனத்தோடு அடிக்கடி ஏற்படும் சண்டைக் காரணமாக தனது பரிவாரங்களுடன் மெலூஹாவுக்கு அகதியாக புறப்படுகிறார். மெலூஹாவுக்குள்    அனுமதிக்கப்படும் முன்னர் குணா இனத்தவர் அனைவருக்கும் உள்ள நோய்கள் கண்டறியப்பட்டு, மருத்துவம் பார்க்கப்படுகிறது.அப்போது அனைவருக்கும் சோம ரஸம் என்னும் பானம் மருந்து என்ற பெயரில் அளிக்கபடுகிறது. அதைப் பருகியவுடன் ஷிவாவிற்கு கழுத்து நீலமாக மாறிப் போக அவரை நீலகண்டர் என பாவித்து மெலூஹாவின் தலைநகரான தேவகிரியில் உள்ள  சக்ரவர்த்தி தச்சனிடம் அழைத்துச் செல்கின்றனர். தாங்கள் இவ்வளவு  காலம் காத்திருந்தது இந்த நீலகண்டருக்காகத் தான் என அவரை கடவுளாகவே தொழுகின்றனர் மெலூஹாவினர்.  சூரியவம்சத்தை சேர்ந்த மெலூஹாவினர் சந்திரவம்சம் மற்றும் நாகா எனப்படுபவர்களின் 
 தாக்குதல்களிடமிருந்து  தங்களை காக்க வந்த கடவுளாகவே ஷிவாவை கொண்டாடுகின்றனர். ஷிவா உண்மையாகவே கடவுள் தானா,  சூரியவம்சத்தை காப்பாற்றினாரா இல்லையா சந்திரவம்சத்தினர் உண்மையில் செய்த மோசடி என்ன என்பதே மீதி கதை. 

ஷிவா என்ற கதாபாத்திரத்தை அனைவரும் வணங்கும் சிவபெருமானுக்கான நடனம், மரிஜுஅனா புகைத்தல்,தீயவற்றை அழிக்கும் ஆற்றல்....போன்ற குணங்களோடு கூட குற்ற உணர்ச்சி முதற்கொண்டு காமம், கோபம், காதல் என்று ஒரு சாதாரண மனிதனை போல உலவ விட்டிருப்பதில் வெளிப்படுகிறது அமிஷ் திரிபாதியின் அசத்தலான  கதைசொல்லும் திறமை.ஷிவாவை நீலகண்டராக ஊரே வணங்கும் போதும் அந்த போதை சற்றும் தலைக்கு ஏறாமல், நீல கழுத்தை கொண்டதாலேயே தான் கடவுளாகிவிட முடியாது என்று தன்னடக்கத்தோடு ஷிவா அமைதி காப்பதும், பல இடங்களில் பாராட்டை ஏற்றுக் கொள்ள முடியாமல் நெளிவதும், சாமர்த்தியமாக போரில் வியூகம் அமைப்பதும், போர் முடிந்து குற்ற உணர்ச்சியில் யாரிடமும் பேசக்கூட முடியாமல் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று கண்ணீர்விட்டு அழுவதும்... ஷிவாவின் கதாபாத்திரம் படிப்படியாக உயர்ந்து நம் மனதில் இடம் பிடிக்கிறது. 

சிந்து சமவெளி நாகரிகம், ராமபிரான் வரலாறு, அயோத்தியா, ஆன்மீகம்,நட்பு, காதல், துரோகம் பழிவாங்கல் ... என பல தளங்களில் சிரமமில்லாமல் பயணிக்கிறது கதை. பண்டைய சிந்துசமவெளி நாகரிகத்தின் உள் கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்கை முறையையும் வெகு அழகாக விவரிக்கிறார் கதாசிரியர்.அதுவே ஒரு சில இடங்களில் 'ஓவர் டோஸ்' போல் ஆகிவிடுகிறது. கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஷிவாவை ஊர் ஊராக அலைய விட்டிருப்பது போல் ஒரு உணர்வு... நடுவில் வரும் இந்த தொய்வான நூறு பக்ககங்களை கடந்து விட்டால் கடைசி நூற்றி  ஐம்பது பக்கங்களும் செம விறுவிறுப்பு. ஷிவா சதியை (பார்வதியை) முதன் முதலில் பார்ப்பது,அவள்  பின்னாலேயே நம் வழக்கமான ஹீரோக்கள் போல தன்னை மறந்து போவது, பிக் அப் செய்வது, காதலில் உருகுவது, கல்யாணம் முடிப்பது  என இந்த காட்சிகள் அனைத்திலும் ஒரு வித சினிமாத்தனம் விரவிக்கிடக்கிறது. நமக்கு பிடித்த ஹிந்தி ஹீரோவை கற்பனை செய்து கொண்டு படித்தால் (ஹ்ரிதிக் ரோஷன் நன்றாக செட் ஆவார்!) , ஆன்மீக பாகம் தவிர்த்து இது ஒரு செம மசாலா மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்.

தெளிவான ஆன்மீக விளக்கங்களும், வரலாற்று குறிப்புகளும் தனி ஆவர்த்தனம் செய்யாமல்  கதையோடு பயணிக்கின்றன. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வட இந்திய பெயர்களுடன் வலம் வந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் கொடுத்து நினைவில் நிற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது கதைசொல்லியின் கைவண்ணம்!  

கதையின் பல இடங்களில் வரும் டாக்டர், வார் மஷீன்ஸ், டெரரிஸ்ட்  அட்டாக், ஹை ப்ரொபைல் டார்கெட், பாக்டரி  போன்ற வார்த்தைகள் இந்த கதை எந்த கால கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சோமரசத்தை உண்டவர்கள் இளமை மாறாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்வதும், சோமரசம் தயாரிக்க சரஸ்வதி நதிநீரைத் தவிர வேறு எதையும் பயன்படுத்த முடியாது என்பதும், சோமரசத்தை  ஒரு தனி மலையிலே எக்கக்சக்க பாதுக்காப்புடன் தயாரிப்பதும்...கதாசிரியரின் அதீத கற்பனை என்பதா அல்லது கற்பனை வறட்சி என்பதா புரியவில்லை. 

ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.முதல் புத்தகத்தை வாங்கும் போதே அடுத்த இரண்டு பாகங்களையும் சேர்த்து வாங்குவது நல்லது. முதல் பாகம் படித்து முடித்தவுடன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க பரபரக்கிறது மனது.