Friday, 23 May 2014

மார்க்'கோமேனியா!


இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னால்  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் 481 முதல் மதிப்பெண்ணாக இருந்தது. அந்த 481க்கு ஏகப்பட்ட பெருமைகள் இருந்தன.ஒரு அரசுப் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவது முதல் பெருமை. கல்வித்துறையில் மிகவும் பின் தங்கிய ஒரு மாவட்டத்தில் இருந்த இந்த பள்ளி இதனால் வெளிச்சத்துக்கு வந்தது இன்னொரு பெருமை.இது வரை இல்லாத மற்றுமொரு பெருமை சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம். இந்த காலத்தைப் போல எந்தவித சிறப்பு கோச்சிங்கும் இல்லாமல், டியூஷனும் இல்லாமல் மரத்தடியில் படித்து மதிப்பெண் பெற்றது  மற்றுமொரு பெருமை. இரண்டு பாடங்களில்(கணிதம் மற்றும் சமூக அறிவியல்)நூறு மதிப்பெண் என்பது இருபது  வருடங்களுக்கு முன்னால் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.இன்று மாநிலத்தில் ரேங்க் வாங்கியுள்ள மாணாக்கியர் படிக்கும் பள்ளிகளில் 481என்பது சற்றே குறைவான மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 481லிருந்து 499க்குள் குறைந்தது ஐநூறு பேராவது இருப்பார்கள் என்று நம்புகிறேன்.சில பல வருடங்களுக்கு முன்பு வரை 490க்கு மேல் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன்/ மாணவி என்றிருந்த நிலை மாறி இப்போது 499மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலேயே பத்தொன்பது பேர் உள்ளனர்.

இதற்கு மாணவர்கள் இப்போதெல்லாம் அருமையாக படிக்கின்றனர் என்பது தான் சரியான காரணமாக இருக்க முடியும் என்பதை என்னால்  முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை. தேர்வுத்தாள்களை மதிப்பிடும் முறைகள் மிகவும் 
தளர்த்தப்பட்டுவிட்டனவா?நிச்சயமாக. ஏன்?  மதிப்பெண்களை வாரி வாரி வழங்க என்ன காரணம்?  பள்ளிகளை ப்ரொமோட் செய்யவா? இருக்கலாம். தெரியவில்லை. இப்போதைய மதிப்பெண்கள் கணக்கு இவ்வாறு ஏகப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறது.இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நாம் எல்லோருமே பெருமையுடன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.   ஆனால் ஏதோ இடிக்கிறது. 

அடிப்படையாக மாணவன் பயிலும் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். மாணவன் ஒரு கேள்விக்கு என்ன தேவையோ அத்தனை பாயின்ட்டுகளையும் ஒன்றை கூட தவற விடாமல் வரிசையாக எழுதினால், மதிப்பெண்ணை எப்படி குறைக்க முடியும்?இவ்வாறு எல்லா பாயின்ட்டுகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பி கேட்டால் கூட அந்த மாணவனால் யோசிக்காமல் கடகடவென ஒப்பிக்க முடியும். ஏனெனில் அத்தனையும் கணினி போல அவனுள் பதியப்பட்டு இருக்கும். அவ்வளவும் பயிற்சி. 

கணிதத்திற்கு  மட்டுமே உரித்தான நூறு இன்று மொழிப் பாடங்களுக்கு கூட வழங்கப்படுகிறது. இந்த நூறுக்கு ஆசைப்பட்டு வெவ்வேறு மொழிகளை கற்கிறார்கள் மாணவர்கள். பல்வேறு மொழிகளைக் கற்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய  விஷயம். சமஸ்க்ரிதம் ,பிரெஞ்சு படிப்பது தவறே அல்ல ஆனால் அதைப் படித்தவர்கள் கோவிலில் அர்ச்சகராகவா அல்லது பிரெஞ்சு டீச்சராக போகப் போகிறார்களா ? எல்லாமே மதிப்பெண்ணுக்காக மட்டுமே. இதற்காக அவர்கள் தியாகம் செய்வது அநேகமாக அவரவர் தாய் மொழியாகவே இருக்கும். பள்ளிப் பருவத்திலேயே இந்த மதிப்பெண் ஊசியை குழந்தைகளுக்கு ஏற்றி விடுகிறோம். தடுப்பூசி போல பள்ளிப்பருவம் முடியும் வரை இந்த மருந்து வேலை செய்யும். கல்லூரியில் சேர்ந்த பிறகே அங்குள்ள கல்வி முறைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிள்ளை திணறுவது தெரியும். 

கீ கொடுத்த பொம்மை போல அனைத்தையும் உருப்போட்டு பரீட்சையில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் பெற்றவுடன் கீ கொடுத்த பொம்மை ராசிபுரத்திலோ,   ஊத்தங்கரையிலோ செக்கு மாடாக மாற்றப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து செக்கிழுத்த செம்மல்கலாக வெளியேறி ஒரு வழியாக மருத்துவக்கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ தஞ்சம் புகுகிறார்கள். இவை இரண்டும் கிடைக்காத பட்சத்தில் தான் பயோ டெக்னொலொஜி, ஜெனெடிக் எஞ்சினீரிங் ,ஆர்கிடெக்சர் போன்ற சற்றே வித்தியாசமான படிப்புகளில் செம்மல்கள் தள்ளப்படுகிறார்கள். 
இப்படி வரிக்கு வரி டப்பா அடித்தே பனிரெண்டாம் வகுப்பு வரை வந்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் தலையணை அளவு புத்தகங்களை உருப்போட முடியாமல் திணறுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். பள்ளியில் உருப்போடுவதைப் போல படித்ததையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்க கல்லூரியில் நேரம் ஏது?பள்ளியில் முதல் ரேங்க் வாங்கிய மாணவன் ப்ரொஃபெஷனல் கல்லூரியில் ஃபெயில் ஆவது சர்வ சாதரணமான விஷயம். என்ன பெற்றோர் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

 'லாஜிகல் ரீசனிங்'  என்பது இம்மாதிரியாக 'கண்டீஷனிங்' செய்யப்பட்ட மாணவர்களிடம் மிகவும் குறைவு. என்ன சொல்லிக் கொடுத்தாலும் கற்பூரம் போல கப்பென்று பிடித்துக்கொள்வார்கள். ஆனால் அதை தாண்டி (வேறு யாராவது சொல்லிக் கொடுத்தாலொழிய) அவர்களால் யோசிக்கவே முடியாது. யோசிக்கத் தெரியாது என்பது தான் கசப்பான உண்மை. வண்டி மாடு போல ஏற்கனவே உள்ள தடத்தில் மட்டுமே போகத் தெரியும். அவர்களின் இந்த நிலைமைக்கு பெற்றோரை தவிர வேறு யாரையுமே குறை கூற முடியாது. இந்த செய்முறையை இப்படித் தான் செய்ய வேண்டுமென ஆசிரியர் ஏன் சொல்கிறார் என்ற சாதாரண  கேள்வி கூட ஒரு மாணவனுக்குள் எழவில்லை எனும் போதே  அவனது  அடிப்படைக் கல்விமுறையில் நாம் செய்துள்ள தவறு புரியும்.

மாணவர்களின் சுயமாக  சிந்திக்கும் திறனையும், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு புரிந்து கொள்ளும் ஆற்றலையும் மழுங்கடிக்கும் சேவையைத்தான் இன்றைய எண்ணெய் மில்கள் போட்டிப் போட்டுக்கொண்டு செவ்வனே செய்து வருகின்றன. மதிப்பெண்கள் அதிகமாக அதிகமாக அதன் மதிப்பு குறைந்து வருவது பெற்றோர்களுக்கு புரிகிறதா தெரியவில்லை.  மதிப்பெண்களுக்கு முக்கித்துவம் கொடுத்து கொடுத்து இன்னும் சில வருடங்களில்  நூற்றுக்கு நூறு எடுப்பவன் மட்டுமே தொழிற்கல்வி பயில முடியும் என்ற நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது. மதிப்பெண்களை மட்டுமே நோக்கிய நமது ஓட்டப்பந்தயம் முடிவுறும்  காலம் வரை மில் முதலாளிகள் நம் பிள்ளைகளை சக்கையாக பிழிந்து எண்ணெய் எடுப்பதை நிறுத்த வாய்ப்பே இல்லை.

இதற்காக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களையோ அவர்கள் பெற்றோர்களையோ நான் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ள  வேண்டாம்.மார்க் வாங்குவது மட்டுமே போதுமானது அல்ல என்று முதலில் பெற்றோர் தெளிய வேண்டும்.அந்தந்த மதிப்பெண்களுக்கு ஏற்ற  எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளை, பிள்ளைகளுக்கு உருவாக்கி தருவதோடு எதையும் சமாளித்து மேலே வருவதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டாலே போதுமானது. அருகே இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் ஸ்பூன் பீட் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது.மதிப்பெண்களைத் தாண்டிய,ரேங்க்குகளை  மீறிய அவனது சுயமாக சிந்திக்கும் ஆற்றலுக்கு முக்கியத்துவம்   கொடுத்து வளர்த்து விட்டாலே போதும். எப்படி படித்து எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை மாணவனே முடிவு செய்துக் கொள்வான். 

Tuesday, 6 May 2014

மொட்டை




மொட்டைகளின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. நல்ல உருண்டையான முகங்களின் மண்டைகள் லேசான மேடு பள்ளங்களோடு உருளை கிழங்கு போலவே இருக்கும். நல்ல சிவப்பான மொட்டை  வெள்ளைக்காரரைப் பார்த்தால் பீட் ரூட் போலவும் நீள்வட்ட முக அமைப்புக்கு மொட்டை சுரைக்கையாயை போல் தெரியும் எனக்கு. 
காய்கறிகள் ஏன் மொட்டைகளோடு எனக்கு ஞாபகம் வருகின்றன என்பது விளங்காத புதிர்   

குழந்தைப் பருவத்தில் போட்டப்படும் முதல் மொட்டை எப்போதுமே விசேஷமானது. வளர்ந்து பெரியவனாகும் வரை பெற்றோர் முடிவு செய்யும் காரணங்களுக்காக மட்டுமே மொட்டை . கல்லூரிக்கு  வந்த பிறகு பெரும்பாலும் பெற்றோர் மொட்டை விஷயத்தில் 'தலை'யிடுவதில்லை. மகனாக விருப்பப்பட்டு மொட்டை அடித்துக்கொண்டால் தான் உண்டு. பெரும்பாலும் கல்லூரியில் இடம் கிடைத்தது,பாஸ் செய்தது, பின்னர் வேலை கிடைத்தது, நல்லபடியாக கல்யாணம் நடந்தது என்று எல்லாவற்றுக்கும் அப்பா அம்மா என்று இரு ஜீவன்கள் நமக்கு முன்னே மொட்டை போட்டுக் கொண்டு   நிற்பதை பல குடும்பங்களில் காணலாம்.என்   திருமணம்   நன்றாக நடந்து  முடிந்த கையோடு என் அப்பா  நான் இவ்வளவு  நாட்கள்  அவருக்கு  அடித்த மொட்டை  போதாது என்று  புது மொட்டையோடு வந்து நின்றார்.நல்ல அழகான  மொட்டை அது . மறக்க முடியாத சில மொட்டைகளில் அதுவும் ஒன்று.

ஒருவர் மொட்டை அடித்துக்கொள்ள  அன்றாட வாழ்வில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன . சடங்கு மொட்டை, சம்பிரதாய  மொட்டை,வேண்டுதல் மொட்டை, வெயில் மொட்டை, பேஷன் மொட்டை,சொட்டைமொட்டை,
சரும நோய் மொட்டை,
ஹீரோவுக்காக மொட்டை,அரசியல்   தொண்டன் மொட்டை, கவன ஈர்ப்பு மொட்டை  என மொட்டைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.  
இதெல்லாம் நமக்கு நாமே திட்டமிட்டு போட்டுக்கொள்ளும் மொட்டை. நம்  சம்மதம் இல்லாமல் நமக்கு மொட்டை அடிக்கப்படுவது மண்டையைப் பிளந்து பார்க்கும் அறுவை சிகிச்சைக்காகவே இருக்கும். 

வேண்டுதலுக்காக அடிக்கப்படும்  மொட்டை கடவுளிடம் நாம் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் தானே. ஆனால் அதிலேயும் வெளிச்சம் பட்ட மொட்டையைப் போல நம் சுயநலம் பளிச்சிடும்.இல்லையா பின்ன? எடுக்கும் போதும் வலிக்காமல், எடுத்த சுவடே  தெரியாமல்  எடுத்தால் வளர்ந்து விடும் என்று தெரிந்து தானே மொட்டை போடுகிறோம்? ஒரு முறை  மொட்டை அடித்தால்  மறுபடி வளரவே வளராது  என்று படைக்கப்பட்டிருந்தால்  எத்தனைப்  பேர் முடி கொடுக்க முன் வருவார்கள்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டிக்கு வேலையே இல்லாமல் நின்று நிதானமாக பெருமாளை  ரசித்து சேவித்து வரலாம் தானே? உடனே சாமிக்கு மொட்டை போடுவதை  கிண்டல் செய்வதாக யாரும் பொங்கத் தேவையில்லை.

 வாழ்க்கையில் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கோ   நம்மை சார்ந்தவருக்கோ மொட்டைப் போட்டிருப்போம் . பிறந்த போது மண்டையில் முளைத்த முடியோடு மண்ணுக்குள்   செல்பவர்கள் குறைவு.கிட்டத்தட்ட எல்லா மதங்களிலுமே மொட்டை போடும் வழக்கம் உண்டு. ஹிந்து, கிருத்துவம், முஸ்லிம், ஜியூஸ், புத்திசம், சைனீஸ்... எல்லாவற்றிலும் முதல் முடி எடுத்தலை ஒரு சடங்காகவே கொண்டுள்ளனர். அதிலும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பாகவே செய்கின்றனர். ஏனெனில் அதற்கு பிறகு ஆண்களைப் போல பெண்கள் மொட்டை போடுவதில்லை என்ற காரணத்தினால். 

ஆண்களுக்கு எப்படியோ கூந்தல் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய அசெட்.நீண்ட கூந்தலே ஒரு தனி அழகு தான்.பெண்களின்  மொட்டைக்கான  காரணத்தை  தெரிந்துக்  கொள்ள எல்லோரிடமும் ஒரு சிறு ஆர்வம் எப்போதுமே தொக்கி நிற்கத்தான் செய்கிறது.பெண்கள் பெரும்பாலும் பூ முடி கொடுப்பதோடு நின்று விடுவார்கள்.மூன்று இன்ச்சுக்கும் குறைவாக முடியை வெட்டிவிட்டு அது வளருதா வளருதா என்று அளந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் துணிந்து மொட்டை போடும் பெண்களும் உண்டு. அது பெரும்பாலும்  கணவனின் உடல் நிலைக்கோ, குழந்தையின் உடல் நிலைக்கோ நேர்ந்துக்கொண்டதாகவே இருக்கும். தனது காதலை பெற்றோர் ஒத்துக்கொள்ள வேண்டும் அதே சமயம்  தன்னைப் பார்க்க வேறு வரனும் வரக்கூடாது என்று மொட்டைப்  போட்ட  பெண்களும் உண்டு.

சில குடும்பங்களில் இன்றளவும் முதல் குழந்தை பிறந்தவுடன் மருமகள் கட்டாயம் மொட்டை போட வேண்டும் என்ற சடங்கு உண்டு. அது இருபது வயது மருமகளானாலும் சரி முப்பது வயதான மருமளானாலும் சரி அதே மொட்டை தான். அந்த காலத்தில் சில வீடுகளில் இந்த பழக்கம் உண்டு. அடுத்த குழந்தை உடனே வேண்டாம் என்பதற்காக பெருசுகள் முதல் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கு முன்னரே தாய்க்கு மொட்டை போட்டு விடுவார்களாம். தாய்க்கு மொட்டை போட்டால் அடுத்த குழந்தையை எப்படி தள்ளி போட முடியும் என்று சின்னப்பிள்ளைதனமாக கேட்க கூடாது. ஆனால் நாளாக நாளாக அதை ஒரு சடங்காகவே மாற்றிவிட்டது வீட்டில் உள்ள பெருசுகள்.மொட்டையும் போட்டு அடுத்த ஒன்றரை  வருடத்துக்குள்  இரண்டாவது குழந்தை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தேர்தல் முடிந்த சமயம் எதற்கு இந்த மொட்டை புராணம்?  கூந்தல் பற்றியே எழுதி போர் அடித்துப் போனதால் ஒரு மாறுதலுக்காக மொட்டை... 

Friday, 2 May 2014

தங்கம்


தங்கம் 

அக்ஷய த்ருதியைக்கு தங்கம் வாங்கச் சொல்லி கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தங்க நகை கடைக்காரர்கள் விழுந்து புரண்டு மார்க்கெடிங் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் நகை கடைகளில் இந்த ஏப்ரல் மாத கூட்டம் மட்டும்  குறைவதே இல்லை. அக்ஷய த்ருதியைக்கு நகை வாங்கினால்  தங்கம்  சேரும்  என்பதை நம்பி கடன் வாங்கியாவது நகை வாங்கிவிடுகின்றனர் பலர். அவர்களுக்கு வருடம் முழுதும்  நகை சேருதோ இல்லையோ அடுத்த அக்ஷய த்ருதியைக்கு மறுபடியும் நகை வாங்க கூட்டம் கூட்டமாக கிளம்பி விடுகின்றனர். தங்கம் விலையேற்றத்தை பார்த்து தெறித்து ஓடுபவர்கள் கூட இந்த அக்ஷய த்ருதியைக்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்று தவித்து போகிறார்கள். 

தங்கம் விலை உயர உயர சீட்டு கம்பனிகளுக்கு நிகராக நகைக்கடைகள் நடத்தும்  வித விதமான நகைச் சீட்டு திட்டங்களும் சூடு பிடித்துவிட்டன.பதினோரு மாதங்கள் கட்டினால் பன்னிரெண்டாவது மாதம் தொகையை நிறுவனமே போடும் போன்ற திட்டத்திலிருந்து ஒரு வருட முடிவில் குலுக்கல் முறையில் ஒரு கிராம் தங்கம் இலவசம் போன்று  பல கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்து விலை சகட்டுமேனிக்கு ஏறினாலும் மக்களை கடைக்கு இழுக்கும் அத்தியாவசியமான சேவையை நகைக்கடைகள் செவ்வனே செய்து வருகின்றன. நகை  சீட்டுக்கு பெரிய கெடுபிடிகள் இல்லாமல் சுலபமாக  
ஈ சி எஸ் முறையிலும் பணம் செலுத்த முடியும். இந்த நகை கடைகளிடம்  ஒரு  கான்செல்  செய்த  காசோலை  மட்டும்  கொடுத்தால் போதும்.மிச்சத்தை  அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள்.நகை சீட்டு கட்டுபவர்களுக்கு அக்ஷய த்ருதியைக்கு  கூடுதல் சலுகை உண்டு.நகை சீட்டு போட்டு ஒரு கல்யாணமே நடத்திய காலம் போய் ஒரு பவுன் வாங்கவே வருடம் முழுதும் சீட்டு கட்ட வேண்டிய நிலையிலேயே உள்ளது தங்கத்தின் விலை.

அக்ஷய த்ருதியைக்கு  இந்த வருடம் ஒரு பிரபலமான நகை கடை பிக் அப் ட்ராப் சர்வீஸ் வேறு ஏற்பாடு செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் இந்த மொட்டை வெயிலில் நாம் சிரமப்பட கூடாதாம். என்ன கரிசனம்! நீங்கள்  அந்த   நகை  கடை   வண்டியில் ஜாலியாக   போய்  இறங்கி  நகை கடைக்குள்  பிடித்த  நகையெல்லாம்  போட்டு  பார்த்துவிட்டு  எதுவுமே  வாங்காமல்  கையை  வீசிக்கொண்டு  வந்தால்  திரும்பவும்  அதே  வண்டியில் ட்ராப்  உண்டா , உண்டெனில் உங்கள்   வீட்டில்  தான்  ட்ராப் செய்வார்களா  என்பதை உறுதி படுத்திக்  கொண்டு  வண்டியில் ஏறுவது நல்லது.

செய்கூலி இல்லை சேதாரம் இல்லை கிராமுக்கு இருநூறு குறைவு முன்னூறு குறைவு என்று கூவி கூவி அழைக்கிறார்கள். நகை கடைக்காரனுக்கு என்னைக்கு சேதாரம் ஆகி இருக்கிறது ? சேதாரம் எப்போதுமே நம்ம பர்ஸுக்கு தான். தங்கம், வெள்ளி, ஸ்டெயின்லெஸ்  ஸ்டீல் எல்லாவற்றிலுமே கண்ணுக்கு தெரியாத லாபம்.இதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எத்தனை விதமான க்ளியர் ப்ரைஸ் டாக் வந்தாலும் நமக்கு கடைகாரரின் ஹிட்டன் காஸ்ட் தெரியப்போவதில்லை! 

 கடன் வாங்கி நகை வாங்கி அதை  அணிந்து அழகு பார்கிறார்களோ  இல்லையோ அதை வங்கியில் வைத்து மறுபடியும் கடனாவது  வாங்கி விடுகிறார்கள்.தங்கம் விலை உயர  உயர கிராமுக்கு  ஆயிரம்  ஆயிரத்தி  ஐநூறு  இருந்த  நகை கடன் தற்போது     கிராமுக்கு   இரண்டாயிரம் வரை கிடைக்கிறது.

பெட்ரோல் டீசல் விலையைப் போல தங்கம் விலையும்  இதுவரை ஏறுமுகமாகவே இருந்து வந்துள்ளது.ஆடித்தள்ளுபடியில் விலையை ஏற்றி வைத்து பின்னர் தள்ளுபடி தருவது போலவே ஆகிவிட்டது தங்கத்தின் விலையேற்றமும்  இறக்கமும். கிராமுக்கு நானூறு ரூபாய்  ஒரேடியாக ஏற்றி விட்டு அதை ஐம்பது நூறு என்று இரண்டு மூன்று முறை குறைப்பார்கள். ஒரு மாத முடிவில் பார்த்தால் சென்ற மாதத்தை விட கிராம் விலை நூறு ருபாய் அதிகமாகவே இருக்கும். ஐம்பதாயிரம் கொண்டு போனால் இரண்டு பவுன் முழுதாக தேறுவது கூட கஷ்டமே. ஆனால்  இதற்காகவெல்லாம்  தங்கம் வாங்காமல் இருக்க முடியுமா என்ன! என்ன தேர்தல் அவர்கள் தொகுதியில் யார் தேர்தலில் நிற்கிறார்கள் என்று எதையுமே தெரிந்துக் கொள்ள விரும்பாத பெண்மணிகள் கூட  அன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை சரியாக சொல்வார்கள். 
தங்கத்தின் மேல் பெண்களுக்கு உள்ள மோகமும் மாமியார்களுக்கு உள்ள தேவையும் பேராசையும் குறைய வாய்ப்பே இல்லை. தங்க விலையும் அப்படியே!