இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னால் பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் 481 முதல் மதிப்பெண்ணாக இருந்தது. அந்த 481க்கு ஏகப்பட்ட பெருமைகள் இருந்தன.ஒரு அரசுப் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவது முதல் பெருமை. கல்வித்துறையில் மிகவும் பின் தங்கிய ஒரு மாவட்டத்தில் இருந்த இந்த பள்ளி இதனால் வெளிச்சத்துக்கு வந்தது இன்னொரு பெருமை.இது வரை இல்லாத மற்றுமொரு பெருமை சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம். இந்த காலத்தைப் போல எந்தவித சிறப்பு கோச்சிங்கும் இல்லாமல், டியூஷனும் இல்லாமல் மரத்தடியில் படித்து மதிப்பெண் பெற்றது மற்றுமொரு பெருமை. இரண்டு பாடங்களில்(கணிதம் மற்றும் சமூக அறிவியல்)நூறு மதிப்பெண் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.இன்று மாநிலத்தில் ரேங்க் வாங்கியுள்ள மாணாக்கியர் படிக்கும் பள்ளிகளில் 481என்பது சற்றே குறைவான மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 481லிருந்து 499க்குள் குறைந்தது ஐநூறு பேராவது இருப்பார்கள் என்று நம்புகிறேன்.சில பல வருடங்களுக்கு முன்பு வரை 490க்கு மேல் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன்/ மாணவி என்றிருந்த நிலை மாறி இப்போது 499மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலேயே பத்தொன்பது பேர் உள்ளனர்.
இதற்கு மாணவர்கள் இப்போதெல்லாம் அருமையாக படிக்கின்றனர் என்பது தான் சரியான காரணமாக இருக்க முடியும் என்பதை என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை. தேர்வுத்தாள்களை மதிப்பிடும் முறைகள் மிகவும்
தளர்த்தப்பட்டுவிட்டனவா?நிச்சயமாக. ஏன்? மதிப்பெண்களை வாரி வாரி வழங்க என்ன காரணம்? பள்ளிகளை ப்ரொமோட் செய்யவா? இருக்கலாம். தெரியவில்லை. இப்போதைய மதிப்பெண்கள் கணக்கு இவ்வாறு ஏகப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறது.இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நாம் எல்லோருமே பெருமையுடன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆனால் ஏதோ இடிக்கிறது.
அடிப்படையாக மாணவன் பயிலும் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். மாணவன் ஒரு கேள்விக்கு என்ன தேவையோ அத்தனை பாயின்ட்டுகளையும் ஒன்றை கூட தவற விடாமல் வரிசையாக எழுதினால், மதிப்பெண்ணை எப்படி குறைக்க முடியும்?இவ்வாறு எல்லா பாயின்ட்டுகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பி கேட்டால் கூட அந்த மாணவனால் யோசிக்காமல் கடகடவென ஒப்பிக்க முடியும். ஏனெனில் அத்தனையும் கணினி போல அவனுள் பதியப்பட்டு இருக்கும். அவ்வளவும் பயிற்சி.
கணிதத்திற்கு மட்டுமே உரித்தான நூறு இன்று மொழிப் பாடங்களுக்கு கூட வழங்கப்படுகிறது. இந்த நூறுக்கு ஆசைப்பட்டு வெவ்வேறு மொழிகளை கற்கிறார்கள் மாணவர்கள். பல்வேறு மொழிகளைக் கற்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சமஸ்க்ரிதம் ,பிரெஞ்சு படிப்பது தவறே அல்ல ஆனால் அதைப் படித்தவர்கள் கோவிலில் அர்ச்சகராகவா அல்லது பிரெஞ்சு டீச்சராக போகப் போகிறார்களா ? எல்லாமே மதிப்பெண்ணுக்காக மட்டுமே. இதற்காக அவர்கள் தியாகம் செய்வது அநேகமாக அவரவர் தாய் மொழியாகவே இருக்கும். பள்ளிப் பருவத்திலேயே இந்த மதிப்பெண் ஊசியை குழந்தைகளுக்கு ஏற்றி விடுகிறோம். தடுப்பூசி போல பள்ளிப்பருவம் முடியும் வரை இந்த மருந்து வேலை செய்யும். கல்லூரியில் சேர்ந்த பிறகே அங்குள்ள கல்வி முறைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிள்ளை திணறுவது தெரியும்.
கீ கொடுத்த பொம்மை போல அனைத்தையும் உருப்போட்டு பரீட்சையில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் பெற்றவுடன் கீ கொடுத்த பொம்மை ராசிபுரத்திலோ, ஊத்தங்கரையிலோ செக்கு மாடாக மாற்றப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து செக்கிழுத்த செம்மல்கலாக வெளியேறி ஒரு வழியாக மருத்துவக்கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ தஞ்சம் புகுகிறார்கள். இவை இரண்டும் கிடைக்காத பட்சத்தில் தான் பயோ டெக்னொலொஜி, ஜெனெடிக் எஞ்சினீரிங் ,ஆர்கிடெக்சர் போன்ற சற்றே வித்தியாசமான படிப்புகளில் செம்மல்கள் தள்ளப்படுகிறார்கள்.
இப்படி வரிக்கு வரி டப்பா அடித்தே பனிரெண்டாம் வகுப்பு வரை வந்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் தலையணை அளவு புத்தகங்களை உருப்போட முடியாமல் திணறுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். பள்ளியில் உருப்போடுவதைப் போல படித்ததையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்க கல்லூரியில் நேரம் ஏது?பள்ளியில் முதல் ரேங்க் வாங்கிய மாணவன் ப்ரொஃபெஷனல் கல்லூரியில் ஃபெயில் ஆவது சர்வ சாதரணமான விஷயம். என்ன பெற்றோர் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
'லாஜிகல் ரீசனிங்' என்பது இம்மாதிரியாக 'கண்டீஷனிங்' செய்யப்பட்ட மாணவர்களிடம் மிகவும் குறைவு. என்ன சொல்லிக் கொடுத்தாலும் கற்பூரம் போல கப்பென்று பிடித்துக்கொள்வார்கள். ஆனால் அதை தாண்டி (வேறு யாராவது சொல்லிக் கொடுத்தாலொழிய) அவர்களால் யோசிக்கவே முடியாது. யோசிக்கத் தெரியாது என்பது தான் கசப்பான உண்மை. வண்டி மாடு போல ஏற்கனவே உள்ள தடத்தில் மட்டுமே போகத் தெரியும். அவர்களின் இந்த நிலைமைக்கு பெற்றோரை தவிர வேறு யாரையுமே குறை கூற முடியாது. இந்த செய்முறையை இப்படித் தான் செய்ய வேண்டுமென ஆசிரியர் ஏன் சொல்கிறார் என்ற சாதாரண கேள்வி கூட ஒரு மாணவனுக்குள் எழவில்லை எனும் போதே அவனது அடிப்படைக் கல்விமுறையில் நாம் செய்துள்ள தவறு புரியும்.
மாணவர்களின் சுயமாக சிந்திக்கும் திறனையும், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு புரிந்து கொள்ளும் ஆற்றலையும் மழுங்கடிக்கும் சேவையைத்தான் இன்றைய எண்ணெய் மில்கள் போட்டிப் போட்டுக்கொண்டு செவ்வனே செய்து வருகின்றன. மதிப்பெண்கள் அதிகமாக அதிகமாக அதன் மதிப்பு குறைந்து வருவது பெற்றோர்களுக்கு புரிகிறதா தெரியவில்லை. மதிப்பெண்களுக்கு முக்கித்துவம் கொடுத்து கொடுத்து இன்னும் சில வருடங்களில் நூற்றுக்கு நூறு எடுப்பவன் மட்டுமே தொழிற்கல்வி பயில முடியும் என்ற நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது. மதிப்பெண்களை மட்டுமே நோக்கிய நமது ஓட்டப்பந்தயம் முடிவுறும் காலம் வரை மில் முதலாளிகள் நம் பிள்ளைகளை சக்கையாக பிழிந்து எண்ணெய் எடுப்பதை நிறுத்த வாய்ப்பே இல்லை.
இதற்காக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களையோ அவர்கள் பெற்றோர்களையோ நான் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.மார்க் வாங்குவது மட்டுமே போதுமானது அல்ல என்று முதலில் பெற்றோர் தெளிய வேண்டும்.அந்தந்த மதிப்பெண்களுக்கு ஏற்ற எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளை, பிள்ளைகளுக்கு உருவாக்கி தருவதோடு எதையும் சமாளித்து மேலே வருவதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டாலே போதுமானது. அருகே இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் ஸ்பூன் பீட் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது.மதிப்பெண்களைத் தாண்டிய,ரேங்க்குகளை மீறிய அவனது சுயமாக சிந்திக்கும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்து விட்டாலே போதும். எப்படி படித்து எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை மாணவனே முடிவு செய்துக் கொள்வான்.
2 comments:
Very good analysis. Those students will not have social skills. They cannot perform in a group and always they look for an example and never try to figure out anything by themselves. And they do not accept the fact that others also can be right. No practical knowledge at all.
உண்மை மேடம்
Post a Comment