சமீப காலமாக தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் ஊருக்கு வெளியே ஏகத்துக்கு முளைத்துள்ளன. சென்னைக்கு மிக மிக அருகில், திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் என்று ஃப்ளாட் ப்ரமோட்டர்கள் விளம்பரம் செய்வதைப் போல டிவி, ரேடியோவில் எல்லாம் கூவி கூவி அழைக்கிறார்கள். தாம்பரத்திலிருந்து பத்தே நிமிட பயணம் என்று சொல்லப்படும் கல்லூரிகளுக்கு பத்து நிமிடத்தில் செல்ல நாம் மைக்கேல் ஷூமேக்கரோடு தான் போக வேண்டும். சென்னையிலிருந்து இந்த கல்லூரிகளில் படிக்க வருபவர்கள் கல்லூரியில் இருப்பதை விட அதிக நேரம் கல்லூரி பேருந்தில் தான் செலவழிக்கிறார்கள்.
ஜன நடமாட்டமே இல்லாத, நோயாளிகளுக்குப் போதுமான போக்குவரத்து வசதியும் இல்லாத,ஊருக்கு ஒதுக்கப்புறமாக பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள இக்கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும்பாலும் எந்த குறைச்சலும் இருப்பதில்லை. இது போன்ற தனியார் கல்லூரிகளில் நோயாளிகளை சப்ளை செய்வதைத் தவிர மற்ற எல்லா வசதிகளையுமே நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு செய்து தர முடிகிறது.
இந்த ஆளே இல்லாத டீ கடைகளுக்கு நோயாளிகள் வருவது பிள்ளையார் பால் குடிப்பதைப் போல அபூர்வ நிகழ்வாகும். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் வாங்கும் காபிடேஷன் பத்தாது என்று
வரும் சொச்ச நோயாளிகளிடமும் வைத்தியத்திற்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.நோயாளிகள் வரத்து குறைவாக உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.கட்டணத்திற்கு பயந்து பாதி வைத்தியத்தில் அரசு மருத்துவமனைக்கு ஓடி வரும் நோயாளிகள் ஏராளம்.ஆடிக்கும் அமாவாசைக்கும் வரும் அந்த கொஞ்ச பேருக்காகவாவது இலவசமாக சிகிச்சை அளித்தால் தான் என்ன? மாட்டார்கள். எல்லா வகையிலும் காசு பார்க்க வேண்டுமே!
இது ஒரு கலைக்கல்லூரியாகவோ பொறியியல் கல்லூரியாகவோ இருக்கும் பட்சத்தில் கல்லூரி எந்த ஆள் நடமாட்டமில்லாத தனித்தீவில் இருந்தாலும் யாரும் அதனால் பாதிப்படைய போவதில்லை. ஆனால் மருத்துவம் பயில அடிப்படையே மனிதர்கள் தானே? அதற்கான வசதியே இல்லாத போதும் எந்த நம்பிக்கையில் இது போன்ற கல்லூரிகளில் எக்கச்சக்கமாக காசு கொடுத்து மாணவர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர் என்றே புரியவில்லை.உபரித் தகவலாக 90% கல்லூரிக் கட்டிடங்கள் அரசு அனுமதி பெற்று கட்டப்படவில்லை என்ற உண்மையை வேறு ஏதோ ஒரு அமைச்சர் சமீபத்தில் உளறிக் கொட்டி கிளறி மூடி அடங்கியுள்ளார். நம் நாட்டில் இதுப் போன்ற கல்லூரிகளுக்கு எவ்வாறு அனுமதி கிடைக்கிறது என்று அமெரிக்கா ரிடர்ன் மப்பிள்ளை நம்மூர் ரோட்டில் குப்பையை பார்த்து அதிர்ச்சி ஆவதைப் போல ஜர்க் எல்லாம் கொடுக்க கூடாது. நம்நாட்டில் எதுவும் சாத்தியம் என்பது அனைவரும் அறிந்ததே.
அரசிடம் அனுமதி பெற்று நடத்தப்படும் இந்த கல்லூரிகள் அனைத்தும் அடுத்த கட்டமாக நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மேலும் 'தரம் உயர்ந்து' நாற்பது ஐம்பது லட்சங்கள் காபிடெஷன் ஃபீஸ் வாங்கி தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கும் சேவையையும் நம் தமிழ்த்திருநாட்டில் செவ்வனே செய்யும். மருத்துவம் படிக்கும் போது நோயாளிகளையே பார்க்காதவன் எல்லாம் நம்ம இளைய தளபதி டாக்டர்.விஜய் வைத்துள்ள டாக்டர் பட்டத்தைப் போல ஒரு டிகிரியோடு வெளியே வருவான். இவர்களை நம்பி வைத்தியம் செய்துக் கொள்ளப்போகும் மக்களின் நிலை நமது புரட்சிக் கலைஞரிடம் சிக்கிய வேட்பாளர் நிலைமை போலத்தான்.எப்படியாவது பெயருக்கு முன் டாக்டர் என்ற இரண்டெழுத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் இந்த விபரீத விளையாட்டு மேலும் மேலும் பணத்தாசை பிடித்தவர்களால் ஊக்குவிக்கப்படுகிறதேயொழிய இந்த தவறான ஆசையை ஒடுக்குவார் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
இந்த 'அனுமதி' அளிப்பது 'தரச்சான்றிதழ்' தருவது போன்றவை எத்தனையோ உயிர்களை பணயம் வைத்து செய்யப்படும் விஷயம். தனக்காக கட்டிக்கொள்ளும் தன் சொந்த வீட்டைத் தவிர, மற்ற எல்லாவற்றுக்கும்- அது ஒரு அடுக்கு மாடி கட்டிடமோ, பள்ளியோ, ஆஸ்பத்திரியோ, சினிமா தியேட்டரோ, மேம்பாலமோ- அவற்றின் தரத்தை நிர்ணயம் செய்ய மனித உயிர்களைக் காட்டிலும் விலைமதிப்பில்லாதது பணம் மட்டுமே என நினைக்கும் அதிகாரிகளின் பங்கு அசாத்தியமனது. இவர்கள் உள்ளவரை தகுதியற்ற அங்கீகாரங்கள் வழங்கப்படுவதையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் அந்நியன், ரமணா , கந்தசாமி மாதிரி யாராவது வந்து தடுத்து நிறுத்தினால் தான் உண்டு!
டிஸ்கி : இந்த கட்டுரை மருத்துவக்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் கண்ட ஆதங்கத்தின் வெளிப்பாடே அன்றி எந்த தனியார் அமைப்பை சாடும் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.
7 comments:
A beautiful narration of a sincere doctor towards rendering safe care to the public .. Hats off Aruna x
Please translate it for me
Seems to be a much talked about blog
Thank you Suji :-)
Ha ha Ayan ! Shall do it for you:-)
Yeah ! Factu Factu !
Well written article. This is the true face of our system.
Thank you Sivaram
Post a Comment