Saturday 23 August 2014

எல்லா மருந்தும் கசப்பானதல்ல!

மருத்துவர்கள் பற்றிய பதிவுகளைப் படித்து படித்து ஒரு வித சலிப்பே மேலோங்கி நிற்கிறது. 

ஒரு புறம் இது தாண்டா சான்ஸ் இதை விட்டா இவனுங்கள நாம பப்ளிக்கா திட்டவே முடியாது என்று வரிந்து கட்டிக் கொண்டு ஆளாளுக்கு மருத்துவர்களை சகட்டுமேனிக்கு காய்ச்சுகிறார்கள். தன்னுடைய அப்பாவுக்கு மருத்துவம் பார்த்தது முதல் சின்ன மாமியாருக்கு சுண்டு விரல் சுளுக்கிக் கொண்டது வரை எல்லாவற்றையும் பதிவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் நடு நடுவே மருத்துவர்களுக்கு வசையோடு கூட என்ன ட்ரீட்மென்ட் செய்திருக்க வேண்டும், எந்தெந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும்,எவ்வளவு ஃபீஸ் வாங்கியிருக்க வேண்டும் என்று அவரவரின் இஷ்டத்துக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு தங்களின் வேலை பற்றி புரிய(!) வைக்க தான் வாங்கும் சம்பளம் முதல் வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் வரை பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர். 

மருத்துவர்களை சாடி பதிவிடுபவர்கள் அனைவரும் தனக்கு ஏற்பட்ட ஒரு  ஒரே ஒரு கசப்பான அனுபவத்தை வைத்து மருத்துவ துறையே மோசம் என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கோபிநாத்தைக் காட்டிலும் மட்டமாக பேசிவருவதைப் பார்க்க பாவமாகத் தான் இருக்கிறது. 
இவர்களின் பதிவுகளை படித்து படித்து சலிப்பும் எரிச்சலும் மட்டுமல்லாது சில கேள்விகளும் மனதில் எழுகின்றன.  

முதலில் இவர்களுக்கு அந்த கசப்பான மருந்தை அளித்தது யார்? தேவையில்லாத பரிசோதனைகளை செய்ய சொல்கிறார், வேறு இடத்தில் செய்த பரிசோதனைகளை மறுபடி செய்ய சொல்கிறார், நிறைய காசு கேட்கிறார்....இதை எல்லாம் செய்ய சொல்லும் மோசமான மருத்துவரிடம் உங்களை போகச் சொன்னது யார்?இந்த மாதிரி மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்ப்பந்தித்தது யார்?
எனக்கு இந்த பரிசோதனை செய்துக்கொள்ள விருப்பமில்லை என்று ரைட் ராயலாக வெளியே வராமல் குத்துதே குடையுதே என்று புலம்ப வேண்டிய அவசியம் என்ன? 

மூன்று மணி நேரம் செலவழிக்கும் ஒரு படத்தைப்  பார்க்க எத்தனை பேரிடம் விசாரிக்கிறோம், எத்தனை விமர்சனங்களைப் தேடி தேடி படிக்கிறோம்? ஒரு புடவை எடுக்க பத்து கடை ஏறி இறங்குவதில்லையா? உங்கள் உடலைப் பரிசோதிக்க நல்ல மருத்துவரைப் பற்றியும் மருத்துவமனைகளைக் கட்டணங்களைப் பற்றியும் விசாரித்து, இது நமக்கு ஒத்து வருமா என்று யோசித்து செயல்படலாமே?இதில் ஏதேனும் ஒரு காரணம் உதைத்தாலும் வேறு மருத்துவமனையை அணுகலாம் தானே? உங்கள் அதிருப்தியை சம்பந்தப்பட்ட மருத்துவரிடமே இது நாள் வரை தெரிவித்ததுண்டா? இதை எல்லாம் செய்யாமல் எனக்கு சரவணபவனில் அதுவும் லெக் பீஸோடு தான் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிப்பது அபத்தமில்லையா? 

மருத்துவர்களை பற்றி இவ்வளவு கிழிப்பவர்கள் அடுத்த முறை உங்கள் ஆஸ்தான மருத்துவரிடம் செல்ல வேண்டி நேர்ந்தால் மருத்துவர்கள் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அவர்களை முகநூலில் துவைத்து தொங்கவிட்டதையும் தில்லாக சொல்லிவிட்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்களேன்? 

உங்கள் உடலைப் பரிசோதனை செய்துக்கொள்ள எங்கே செல்ல வேண்டும் என்ற முடிவை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். பணம் பிடுங்கும் ஏதோ ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் சிகிச்சையை நிராகரியுங்கள்.உங்க‌ளுக்கு தோதான, நம்பிக்கையான மருத்துவரையும் மருத்துவமனையையும் அணுகுங்கள். அதை விடுத்து மருத்துவர்கள் எல்லாம் உயிர் காக்க அவதரித்த தெய்வங்கள், தவறே செய்யக்கூடாத ஜாம்பவான்கள், காசு பற்றி நினைக்கவே கூடாத தியாகிகள் என்று அவசியமற்ற பட்ட பேர்களையும் பிம்பங்களையும் நீங்களாக உருவாக்கிக்கொண்டு அந்த கட்டத்துக்குள் தான் மருத்துவர்கள் இருக்க வேண்டுமென அசட்டுத்தனமாக எதிர்ப்பார்க்காதீர்கள். காசே வாங்காமல் பணி புரிவது மட்டும் தான் உங்கள் அகராதியில் 'சேவை'என்றால் அதை செய்யும் மருத்துவர்களும் இங்கு இல்லாமல் இல்லை. அடையாளம் காண வேண்டியது உங்கள் சாமார்த்தியம். 

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கே வரவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை உங்கள் தெரு முனை திரும்பினால் இருக்கும் க்ளீனிக்கு கூட போகலாம். அரசு மருத்துவமனைக்கு செல்லுவதால் உங்கள் குலப்பெருமை பாதிக்காமலும் சிறிய க்ளீனிக்கு செல்வதால் உங்கள் அறிவை யாரும் மட்டம் தட்டி விடாமலும் கவனித்துக்கொள்ளவும். 

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். உங்க‌ளுக்கோ உங்கள் பிரியமானவர்களுக்கோ ஒரு இதய அறுவை சிகிச்சையோ எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையோ நடப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு அறுவை சிகிச்சையில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.சாதாரண டான்சில்ஸ் ஆபரேஷனில் இறந்துப் போன குழந்தையும் உண்டு கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்டில் உயிர் பிழைத்து சுகமாக வாழ்பவர்களும் உண்டு. ஆக இது போன்ற அறுவை சிகிச்சைகளில் உங்கள் உயிர் அந்த மருத்துவரின் கைகளில் மட்டுமே. அந்த உயிர் காக்கும் தொழிலுக்குரிய மரியாதையை மட்டும் மனதில் நிறுத்துங்கள். தனிப்பட்ட பாதிப்பினால் உண்டாகும் எரிச்சலை 'அறச்சீற்றம்' என்ற பெயரில் பொதுவெளியில் தெளிக்காதீர்கள். 

பேருந்து விபத்துக்கு பிறகு காட்சியளிக்கும் அவசர சிகிச்சை/ ட்ராமா வார்ட்டை போல் ரணகளமாக இருக்கிறது முகநூல்.இங்கு மருத்துவர்களை கிழிப்பவ‌ர்கள் எல்லாம் , நேரம் கிடைத்தால் ஒரு சாலை விபத்தோ, தீ விபத்தோ நடந்து முடிந்த அன்றோ அதற்கு மறுநாளோ அவசர சிகிச்சை/ ட்ராமா வார்ட் போன்ற இட‌ங்க‌ளுக்கு ஒரு விசிட் அடிக்கவும்..நீங்கள் இங்கே ஃப்ரன்ட் லோடிங்  வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அங்கே என்னத்த கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என கண்கூடாக பார்க்க முடியும்.  

அதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து மருத்துவர்கள் லெமன் சேவை செய்கிறார்களா இல்லை பிரியாணி கிண்டுகிறார்களா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். 

5 comments:

கானகம் said...

//உங்கள் அதிருப்தியை சம்பந்தப்பட்ட மருத்துவரிடமே இது நாள் வரை தெரிவித்ததுண்டா? இதை எல்லாம் செய்யாமல் எனக்கு சரவணபவனில் அதுவும் லெக் பீஸோடு தான் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிப்பது அபத்தமில்லையா? //

//பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கே வரவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை உங்கள் தெரு முனை திரும்பினால் இருக்கும் க்ளீனிக்கு கூட போகலாம். அரசு மருத்துவமனைக்கு செல்லுவதால் உங்கள் குலப்பெருமை பாதிக்காமலும் சிறிய க்ளீனிக்கு செல்வதால் உங்கள் அறிவை யாரும் மட்டம் தட்டி விடாமலும் கவனித்துக்கொள்ளவும். //

//அதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து மருத்துவர்கள் லெமன் சேவை செய்கிறார்களா இல்லை பிரியாணி கிண்டுகிறார்களா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். //

டாக்டர் அருணா,

செமையான பதிவு. :) நக்கல் சர்வசாதாரனமான வருகிறது. ஒரு கட்டுரையில் எங்காவது வந்துகொண்டிருந்த கிண்டல், நக்கல் எல்லாம் இப்போது கட்டுரை முழுவதும். அருமை.

மருத்துவராக உங்கள் கோபத்தை மதிக்கிறேன். ஆனால், கொஞ்சம் ஓவராகிவிட்டதான எண்ணம் எனக்கு.

Dr.Rudhran said...

well written.

அருணாவின் பக்கங்கள். said...

Thank you sir, am honoured.

அமர பாரதி said...

Take it easy boss.

suresh said...

1. "மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு தங்களின் வேலை பற்றி புரிய(!) வைக்க தான் வாங்கும் சம்பளம் முதல் வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் வரை பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர்."

2. "இதை எல்லாம் செய்யாமல் எனக்கு சரவணபவனில் அதுவும் லெக் பீஸோடு தான் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிப்பது அபத்தமில்லையா?"

3. "மருத்துவர்களை பற்றி இவ்வளவு கிழிப்பவர்கள் அடுத்த முறை உங்கள் ஆஸ்தான மருத்துவரிடம் செல்ல வேண்டி நேர்ந்தால் மருத்துவர்கள் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அவர்களை முகநூலில் துவைத்து தொங்கவிட்டதையும் தில்லாக சொல்லிவிட்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்களேன்?"

4. "அதை விடுத்து மருத்துவர்கள் எல்லாம் உயிர் காக்க அவதரித்த தெய்வங்கள், தவறே செய்யக்கூடாத ஜாம்பவான்கள், காசு பற்றி நினைக்கவே கூடாத தியாகிகள் என்று அவசியமற்ற பட்ட பேர்களையும் பிம்பங்களையும் நீங்களாக உருவாக்கிக்கொண்டு அந்த கட்டத்துக்குள் தான் மருத்துவர்கள் இருக்க வேண்டுமென அசட்டுத்தனமாக எதிர்ப்பார்க்காதீர்கள்."

5. "அரசு மருத்துவமனைக்கு செல்லுவதால் உங்கள் குலப்பெருமை பாதிக்காமலும் சிறிய க்ளீனிக்கு செல்வதால் உங்கள் அறிவை யாரும் மட்டம் தட்டி விடாமலும் கவனித்துக்கொள்ளவும்."

6. "தனிப்பட்ட பாதிப்பினால் உண்டாகும் எரிச்சலை 'அறச்சீற்றம்' என்ற பெயரில் பொதுவெளியில் தெளிக்காதீர்கள்."

7. "நீங்கள் இங்கே ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அங்கே என்னத்த கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என கண்கூடாக பார்க்க முடியும்.

அதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து மருத்துவர்கள் லெமன் சேவை செய்கிறார்களா இல்லை பிரியாணி கிண்டுகிறார்களா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்."

Salutes Aruna!
I am too much touched and moved by this article..in your own style!

அவர்கள் ஃப்ரெண்ட் லோடிங்கில் போட்டது போல்.. உங்கள் பாணியில் இன்னும் கொஞ்சம் நிறையவே சுள்ளுனு காயப்போட்டிருக்கலாம் என்பதே எனது ஆதங்கம்..

பொது மக்கள் தாறுமாறாக அநாகரீகமாக பேசும்போது மனதுக்கு ரொம்ப வலித்தது..
இப்பொழுது ஆறுதலாக இருக்கிறது.

பதிவுக்கு நன்றி feeling peaceful!