ஏழெட்டு வயதான சிறுமி ஒருத்தி, படுத்தால் மூச்சு விடச் சிரமமாக உள்ளதாகத் தன் தாயுடன் பல் மருத்துவமனைக்கு வருகிறாள். இடது பக்க அன்னத்தில் ஒரு சிறிய கட்டி. அரசு மருத்துவமனைக்கே உரிய சாங்கிய சம்பிரதாயங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டியிலிருந்து திசு எடுத்து,பரிசோதனைக்கு (பயாப்சி) அனுப்பப்படுகிறது.அந்தக் கட்டி,அன்னத்தில் சிறிதாக தெரிந்தாலும்,இடது மேல் தாடையின் சைனஸ் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது சி டி ஸ்கேனில் தெரிய வருகிறது. அதற்குள் அது புற்றுநோய் கட்டி அல்ல, சாதாரணக் கட்டி தான் என்று திசுப்பரிசோதனை ரிப்போர்ட் வரவே, கட்டியை மருந்துகள் மூலமாகக் குறைத்து, பின்னர் தேவையெனில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தத் திசுவைப் பரிசோதனைக்கு அனுப்பிய பல்மருத்துவருக்கு திருப்தி ஏற்படாமல் தன்னிடம் பயிலும் முதுகலை மாணவர்களின் உதவியோடு கொஞ்சம் பணம் சேர்த்து மேலும் ஒரு முறை கட்டியிலிருந்து திசுவை எடுத்து,வேறு சில சிறப்பு பரிசோதனைகளுக்காக அபோல்லோ கேன்சர் மருத்துவமனைக்கு அனுப்புகிறார். அவர் சந்தேகித்தபடியே படியே அது ஈவிங்க்ஸ் சார்கோமா என்ற புற்று நோய்க் கட்டி என்று ரிப்போர்ட் வருகிறது. உடனே அந்தச் சிறுமி பல் மருத்துவக்கல்லூரியிலிருந்து, அரசு பொது மருத்துவமனையின் கேன்சர் பிரிவுக்கு கீமோதெரபிக்காக.
பரிந்துரைக்கப்படுகிறார். கீமோதெரபி கொடுக்கக் கொடுக்க கட்டியின் அளவு சிறியதாகத் தொடங்கியது. ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் இங்கிருந்து ஆரம்பமாகியது.
அந்தச் சிறுமி, மருத்துவமனைக்குத் தன் தாயுடனேயே வருவாள். தாய்க்கு கூலி வேலை. தந்தைக்கு நமது அரசு வேறு சில முக்கியப் பொறுப்புகள் அளித்துள்ளதால் அவர் அதைச் சிறப்பாக செய்துக்கொண்டிருந்தார். தாம்பரத்தைத் தாண்டி வீடு. அரசுப் பொது மருத்துவமனை இருப்பதோ சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில். பஸ் கட்டணமே, இருவர் வந்து போக ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகும். இது தவிர சாப்பாடு செலவுகள். தாய் கூலி வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு. தந்தை பல நேரங்களில் தாயிடம் உள்ள பணத்தையும் பிடுங்கி, அரசின் வருமானத்தை அதிகரிக்க உதவிக்கொண்டிருந்தார். இதனால் தாம்பரத்திலிருந்து அந்த சிறுமியை கூட்டிக் கொண்டு நேரத்துக்கு வைத்தியத்துக்கு வர முடியாமல் தாயும் திண்டாடினார். மேலும் அவர் அடிக்கடி தாமதமாக வரவே, லேட்டாக வருவதால் மருந்து போட முடியாது என்று இரண்டு மூன்று முறை மருத்துவமனையிலுருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தாய், வைத்தியத்துக்கு வருவதையே நிறுத்தி விட்டிருக்கிறார். பல் மருத்துவர் தரப்பிலிருந்து பல முறை தொலைபேசியில் அழைக்க முயற்சித்தும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, அவரும் விட்டு விட்டார். கிட்டத்தட்ட இரண்டுவருடம் கழித்து மறுபடி தொடர்பு கொண்டு அந்தத் தாயிடம் பேசி, வைத்தியத்திற்கு வரவழைத்தனர். அந்தச் சிறுமியின் அன்றைய நிலையை ஃபோட்டோவில் பார்த்த மாத்திரத்திலிருந்து நடு மண்டையில் யாரோ சுத்தியால் அடித்ததைப் போன்ற பாரம்.
வாயை திறந்துக் காட்டினாலொழிய எங்கே இருக்கிறது என்றே தெரியாத அந்தக் கட்டி, சிகிச்சை எடுக்காததால் அந்தச் சிறுமியின் முகத்தில் கோர தாண்டவமாடியிருந்தது. வாய் என்று சொல்லப்படும் துவாரம் முக்கால்வாசிக்கு மேல் அந்தப் புற்று நோய்க் கட்டியால் அடைக்கப்பட்டு எங்கேயோ வலது புறம் தள்ளபட்டிருந்தது. இடதுகண் வேறு திசையை நோக்கி இருந்தது. சில புகைப்படங்கள் நம் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன. கும்பகோணம் தீ விபத்தில் கரிக் கட்டைகளாய் கிடந்த குழந்தைகள், முள் வேலிக்குப் பின்னால் நிற்கும் குழந்தைகள், துப்பாக்கியோடு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போராளிக் குழந்தைகள்...அந்த வரிசையில் இதுவும்.
இந்தச் சிறுமி விஷயத்தில் யாரோ ஒருவரை நிச்சயம் குறை கூற முடியாது. குடியினால் குலைந்து போகும் குடும்பங்களைப் பற்றி கவலையில்லாமல், இத்தனை கோடி வசூல் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் அரசாங்கம் முதல்,அரசுமருத்துவமனையில்
நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்கத் தவறியவர்கள் வரை எல்லோரும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு இந்தச் சிறுமியின் பரிதாபமான நிலைக்குப் பங்களித்துள்ளனர். தன் குடும்பத்தைப் பற்றிக் கவலையே படாத எத்தனையோ ஆண் குடிமகன்களில் இந்த தந்தையும் ஒருவரே. ஒருவர் தவறு செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துக்கொண்டே அவர் திருந்த வேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. அந்தப் படிப்பறிவில்லாத தாயையும் குறை சொல்ல முடியவில்லை. இருவரின் வறுமை, அறியாமை, இயலாமை, முயலாமை என்று ஏகப்பட்ட ஆமைகள் சேர்ந்து இவர்கள் மீது பரிதாபமே மிஞ்சுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் எந்நேரம் ஆனாலும் பார்க்கப்படும் வைத்தியம், ஏனோ பகல் நேரங்களிலேயே கூட அரசு மருத்துவமனைகளில் சாத்தியமாவதில்லை.
பணம் தான் எல்லாவற்றுக்கும் எல்லா இடங்களிலும் அடிப்படை என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், மேலோட்டமாகப் பார்க்கும் போது தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் வேலையாவது நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டியுள்ளது.அரசு மருத்துவமனைகளிலும் பணம் புழங்காமல் இல்லை.அடிமட்டப் பணியாளர் நிலையிலேயே ஆரம்பமாகி விடுகிறது வசூல் வேட்டை. யாருமே அரசுத் தரப்பில் சம்பளமில்லாமல் வேலை செய்து விடவில்லை. அரசு கொடுக்கும் ஊதியம், பிற மாநிலங்களின் மருத்துவத் துறைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே. அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தனியாக சேவை மனப்பான்மை பொங்கி ஊற்றெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் அவரவர் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற கடமையைச் செய்தால் கூட போதுமானது. வேலையே செய்ய வில்லை என்றாலும் அரசு தரும் சம்பளம் வந்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது (lack of accountability) என்ற மெத்தனமே இது போன்ற அலட்சியமான அணுகுமுறைக்கு அடிப்படையாகிறது.மேலும் நம்முடைய நேரம் தவறாமை,கடமை உணர்ச்சி,அதிகார பலம் போன்ற நமது 'சிறப்புத் தகுதிகளை' எதிர்க்கத் திராணி இல்லாத ஒருவனிடம் முழுவீச்சுடன் உபயோகிப்பதில் தானே நாமெல்லாம் கில்லாடிகள்!
வேறு எங்கும் பரவி இருக்காத நிலையில் ஆரம்பம் முதலே முறையான வைத்தியம் எடுத்துக்கொண்டிருந்தால் கூட இந்த வகை புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 25- 35 சதவிகிதம் மட்டுமே. அதனால் இதில் பெரிதாக அலட்டிக்கொள்ள எதுவும் இல்லை என அவரவர் வேலையை கவனிக்கக் கிளம்பி விட்டாலும் அந்தச் சிறுமியின் முகம் ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு கையாலாகாத்தனமும் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. என்னத்த படிச்சி என்ன பிரயோஜனம் என்று தாறுமாறாக மேலெழும்பும் எண்ணங்களை வழக்கம் போல் ஓர் ஓரமாக ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு, முகநூலில் ஃப்ரொஃபைல் ஃபோட்டோ என்ன வைக்கலாம் என்ற அதிமுக்கியமான வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த சிறுமியின் ஃபோட்டோவை பார்த்துவிட்டு வந்து பல நாட்கள் கழித்தே இந்தப் பதிவை எழுதுகிறேன். அண்மையில் தான் தெரியவந்தது அந்தச் சிறுமி இப்போது உயிரோடு இல்லை என்று. உண்மையில் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கிறது.
இதுவும் கடந்து போகும், நமக்கு எந்த பாதகமுமின்றி.
2 comments:
அரசாங்க மருத்துவமனைகளில் பெரிய பிரச்சனையே அங்க வரும் கூட்டம் தான் இருக்கும் கொஞ்சம் நஞ்ச அடிப்படை கட்டமைப்பை வெச்சி.. எவ்வுளவு கூட்டதை தான் அவங்களும் சமாளிப்பாங்க சொல்லுங்க..
1. "தந்தைக்கு நமது அரசு வேறு சில முக்கியப் பொறுப்புகள் அளித்துள்ளதால் அவர் அதைச் சிறப்பாக செய்துக்கொண்டிருந்தார்."
2. "தந்தை பல நேரங்களில் தாயிடம் உள்ள பணத்தையும் பிடுங்கி, அரசின் வருமானத்தை அதிகரிக்க உதவிக்கொண்டிருந்தார்."
3. "தன் குடும்பத்தைப் பற்றிக் கவலையே படாத எத்தனையோ ஆண் குடிமகன்களில் இந்த தந்தையும் ஒருவரே. ஒருவர் தவறு செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துக்கொண்டே அவர் திருந்த வேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை."
4. "அந்தச் சிறுமியின் முகம் ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு கையாலாகாத்தனமும் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. என்னத்த படிச்சி என்ன பிரயோஜனம் என்று தாறுமாறாக மேலெழும்பும் எண்ணங்களை வழக்கம் போல் ஓர் ஓரமாக ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு"...
5. "அண்மையில் தான் தெரியவந்தது அந்தச் சிறுமி இப்போது உயிரோடு இல்லை என்று. உண்மையில் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கிறது."
மிக அருமையான பதிவு..
கையாகாலாத விஷயமாகிவிட்டபடியால் எப்படி மன உளைச்சலை ஏற்படுத்துகிறது!
இதிலும் கூட உங்கள் முத்திரை..
"இருவரின் வறுமை, அறியாமை, இயலாமை, முயலாமை என்று ஏகப்பட்ட ஆமைகள் சேர்ந்து.."
Post a Comment