நமக்கு எல்லாவற்றிலும் வெரைட்டி வேண்டும். குடும்பம், அலுவலகம் போன்ற மாற்ற முடியாத சில விஷயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் வெரைட்டியை எதிர்ப்பார்த்தால் தான் மனித இனத்தில் சேர்த்தி.லெட்டரை ஈமெயிலாக்கி, ஈமெயிலை எஸ் எம் எஸ் ஆக்கி,அதையும் சுருக்கி சாட்டாக்கி, பிங் மீ, போக் மீ என்று வேகமாக எல்லோரும் மங்கள்யானைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரே மாதிரியான விஷயங்கள் நம் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பதுமில்லை, ஈர்த்தாலும் பெரிதாக நிலைத்திருப்பதுமில்லை. அதிலும் என்டெர்டெயின்மென்ட்- பொழுதுபோக்கு என்று வரும் பொழுது நமது எதிர்ப்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கும்.இசை இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரே மாதிரியான படங்களைப் பார்க்கவோ பாடல்களைக் கேட்கவோ எப்போதும் யாரும் விரும்புவதில்லை.
ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று இசையமைப்பாளர்களாவது பதிதாக அறிமுகமாகிறார்கள். இசையிலோ அல்லது பாடும் குரல்களிலோ வித்தியாசமும் புதுமையும் இல்லையெனில் ஒன் ஃபிலிம் ஒன்டரோடு காணாமல் போய்விடுகிறார்கள். ஒரே மாதிரியான குரல்கள் மூலமோ இசை மூலமோ நமக்கு சலிப்பு ஏற்படாமல் நமது மாறிக்கொண்டே இருக்கும் ரசனைக்கும் எதிர்ப்பார்பிற்கும் தீனி போடும் இசையமைப்பாளர்கள் வெகு சிலரே.
இன்றைய நிலையில் நம்பிக்கை தரும் இசையமைப்பாளர்கள் பட்டியலில் போட்டியின்றி சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிப்ரானை சேர்த்துக்கொள்ள முடியும்.
சமீப காலங்களில் ஹிட்(மட்டுமே) அடித்துக்கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன்,பாடல்களோடு பிண்ணனி இசைக்கோர்வையிலும் பின்னி எடுக்கிறார். (அதற்காக பத்து படம் கூட முடிக்காத ஒருவரை இளையராஜாவோடு கம்பேர் செய்வதெல்லாம் அநியாயம்) சந்தோஷ் நாராயணன் இசை என்றாலே வழக்கமான குரல்களை தவிர்த்து சற்றே வித்தியாசமான குரல்களை கேட்க முடிகிறது.வழக்கமான கார்த்திக், ஹரி சரண், ஹரன்... இவர்களின் குரல்களை எல்லாம் சந்தோஷின் இசையில் கேட்க முடிவதில்லை. ப்ரதீப் குமார், திவ்யா ரமணி, ஆன்டனி தாசன், கானா பாலா ( சில படங்களில் ஷான் ரோல்டன்) போன்றோர் குரல்களை நிறைய கேட்கலாம். ஆனால் அட்டக்கத்தி தொடங்கி அவரது ஏழாவது தமிழ் படமான மெட்ராஸ் வரை எல்லா படங்களிலும் கூட குறைய இந்த குரல்களை மட்டுமே திரும்ப திரும்ப கேட்க வேண்டியுள்ளது தான் சலிப்பு.
சந்தோஷ் நாராயணின் இசையில் தொடர்ந்து கேட்கும் குரல்களை (கானா பாலா விதிவிலக்கு) வேறு யார் இசையிலும் கேட்க முடிவதில்லை. இவர்களின் குரல்கள் ஓரளவு வித்தியாசமானதாகவே இருந்தாலும் கூட இந்த குரல்களை கேட்டாலே கண்ணை மூடிக்கொண்டு இது சந்தோஷ் நாராயணன் இசையோ என்று சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. மெட்ராஸ் படத்தில் 'ஆகாயம் தீ பிடிச்சா' என்ற பாடலை முதல் முறை எந்த படம் , இசையமைப்பாளர் பெயர் எல்லாம் தெரியாமலே கேட்டு , சந்தோஷ் நாராயணன் இசை போல் உள்ளதே என்று நண்பர்களிடம் விசாரித்தால், அட ஆமாம்! இது டிபிகல் ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக் என்று சொல்லும் நிலையை தனக்குத்தானே ஹாரிஸ் நிறுவியுள்ளதைப் போல சந்தோஷ் நாராயணனும் அதே சலிப்பூட்டும் குரல்கள் மூலம் ஒரு வட்டத்துக்குள் சிக்கி இருக்கிறாரோ?
இந்த ஒரு விஷயத்தில் சந்தோஷிடமிருந்து அழகாக வேறுபடுகிறார் ஜிப்ரான்.
ரஹ்மானுக்கு அடுத்து, இன்றைய நிலையில்
ஜிப்ரான் இசையில் இருக்கும் வெரைட்டி மற்றும் சாய்ஸ் ஆஃப் வாய்ஸ் வேறு எவரிடமும் இல்லை என்று தைரியமாக சொல்லலாம்.சுந்தர் நாராயண ராவை மட்டும் இவர் இசையில் அடிக்கடி கேட்க முடிகிறது.மேலும் தன்னுடைய பல படங்களில் ஜிப்ரானே பாடியும் விடுகிறார்.
வாகை சூடவா மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜிப்ரான் , தொடர்ந்து இசையமைத்த வத்திக்குச்சி, நையாண்டி, குட்டிபுலி போன்ற படங்களும் சோபிக்கவில்லை, இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சந்தோஷ் நாராயணன் அளவுக்கு இவர் பிரமலாகாதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் ஒரு காரணம் எனலாம். திருமணம் எனும் நக்காஹ, அமரகாவியம் ஆகிய படங்களும் சரியாக போகவில்லை எனினும்,இசை உலகில் அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்துள்ளது என்று சொல்லலாம்.அதன் விளைவே கமல்ஹாசனின் அடுத்த மூன்று படங்களுக்குமே இவர்தான் இசை. ஆனால் தொடர்ந்து கமல் படங்களுக்கு இசை என்பதே சற்று கலவரமளிப்பது வேறு விஷயம். காணாமல் போனவர்கள் லிஸ்டில் ஜிப்ரான் சேராதவரை நமக்கு அதிர்ஷ்டமே.
எல்லா இசையமைப்பாளர்களுமே ஓவ்வொரு கட்டத்தில் ஒரு பாடகன் அல்லது பாடகியின் குரல் மீது மையல் கொள்வது ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.தமன் இசையில் சுசித்ரா,அனிருத் இசையில் தனுஷ், ஜிவிபி இசையில் சைந்தவி, இமான் இசையில் ஷ்ரேயா, விஜய் ஆன்டனி இசையில் சாருலதா மணி- இப்படி எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ஆஸ்தான பாடகர்கள் உண்டு. ஆனால் இந்த இசையமைப்பாளர்களின் ஃபேவரைட் பாடகர்கள் வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடுவதால் ஒரே குரலை மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரு வித சலிப்பு சுலபத்தில் வருவதில்லை.
ஆடிக்கு ஒரு குத்து பாட்டும் அமாவாசைக்கு ஒரு மெலடியும் கொடுத்து யுவன், இமான் ,அனிருத் ,ஜிவிபி ,விஜய் ஆன்டனி ,செல்வ கணேஷ்,தமன், ஜோஷ்வா ஶ்ரீதர் ,ஷான் ரோல்டன் , விஜய் எபினேசர், தரண் ஆகியோர் களத்தில் இருந்தாலும் சகலரையும் ஓரங்கட்டி தங்களுக்கென ஒரு தனி இடத்தை தங்களின் கன்சிஸ்டென்சி மூலம் சந்தோஷும் ஜிப்ரானும் நிறுவிய வண்ணம் உள்ளனர். இன்னும் அருமையான இசைக் கோர்வைகளையும் வித்தியாசமான குரல்களையும் இருவரிடமிருந்துமே வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்.
2 comments:
நல்ல அலசல்தான். இப்போது பாடல்களை கேட்கும் ஆர்வமே போய்விட்டது. கேட்ட உடன் மனதில் ஒட்டிக்கொள்ளும் பாடல்கள் எல்லாம் போய் இனி கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்ற அளவில்தான் இன்றைய இசை இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசை மட்டுமே நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. அப்பாவின் பெருமையில் காலந்தள்ளிய யுவண் இன்றைக்கு ஃபீல்ட் அவுட்.
ஆச்சர்யமாக இருக்கிறது..
உங்களது விசாலமான அறிவையும் அலசலையும் எண்ணி..
நாற்பதை கடந்த நிறைய பேர் பழைய கூழையே ருசித்துக்கொண்டிருக்கும் போது (நான் பாடல்களைப் பொறுத்த மட்டில் என்னைப் பற்றி சொல்லிக்கொள்கிறேன்)இன்றைய இளைய சமூகத்தோடு சேர்ந்துகொண்டு இன்றைய இசையை சிலாகிக்கவும் அலசும் ஆர்வமும் உங்களிடம் இருக்கிறதே!
முடிகிறதே உங்களால்!
புத்தம் புது காலை வீடியோ க்ளிப்போடு நீங்கள் போட்ட முந்தைய பதிவைப்போல் ஒன்று இங்கில்லாதது ஒரு சின்ன ஏமாற்றமே..
மல்டிமீடியாவோடு உங்கள் பதிவு இருந்தால் என்னைப் போன்றவர்கள் இன்னும் சுவாரஸ்யமாகப் படிப்போம் அல்லவா!
Post a Comment