Thursday, 9 October 2014

மாறுவேடம்


மிஸ்டிக் மெட்ராஸ் மற்றும் க்ராண்ட் பேரன்ட்ஸ் டே இரண்டையும் சேர்த்து குழந்தைகளின் அலங்கார அணிவகுப்புடன் கொண்டாடியது யோஹானின் பள்ளி. தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற புள்ளிகள் போல குழந்தைகளுக்கு மாறுவேடம் தான் ஹைலைட்.வீரபாண்டிய கட்டபொம்மன்  முதல் விஜய் அமிர்தராஜ் வரை, டாக்டர் முத்துலக்ஷமி ரெட்டியிலிருந்து அம்மா வரை என்று ஏகத்துக்கு கவர் செய்திருந்தனர். எந்த அடிப்படையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பெர்சனாலிட்டியின் பெயர் தரப்பட்டதோ யாமறியேன் பராபரமே. யோஹானின் நண்பனுக்கு புஷ்பவனம் குப்புசாமி வேடம்! அந்த பையனின் அம்மா என்னிடம் அவர் யார், என்ன செய்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். யோஹானுக்கு 
சர்.சி.வி. ராமன் வேடம். 

சர்.சி.வி. ராமனைப் பற்றி தெரிந்ததெல்லாம் ராமன் எஃபெக்ட்டும் நோபல் பரிசும் மட்டுமே. விக்கியில் தேடியதில், அவரைப் பற்றியும் அவர் உடுத்திய உடையை பற்றியும்  ஒரளவுக்கு ஐடியா கிடைத்தது. இந்த வேடத்திற்கான உடையை பற்றி இந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டையோடு விழுங்கியவர்களை  விசாரித்ததில் ஏகப்பட்ட கடைகளை பட்டியலிட்டனர். குழந்தைகளின் உடையலங்காரத்திற்கென சினிமா நாடக கம்பெனி போல தனியாக கடைகளே இருப்பது எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

முகப்பேரின் ஒரு குறுக்குச் சந்தின் ஒரு இடுக்கான கட்டிடத்தின் குறுகலான மாடியின் கடைசியில் ஒரு சிறிய அறை. அது தான் கடை. கடையின் வெளித்தோற்றத்திற்கும் உள்ளே இருந்த விதவிதமான ஆடைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை.அன்னி பெஸன்ட் முதல் சுனிதா வில்லியம்ஸ் ஆடை வரை எல்லா விதமான ஆடைகளும் இருந்தன. ஆனால் எல்லா ஆடைகளையுமே சௌகார்பெட் ஹோல் சேல் வியாபாரி கணக்காக குப்பைப் போல குவித்து வைத்திருந்தார்கள். 

நான் சர்.சி வி ராமன் உடை என கேட்டவுடன் ஒரு கருநீல கலர் அங்கியை ஹேங்கரில் இருந்து எடுத்து 'நேரு, ராதாகிருஷ்ணன் எல்லாருக்கும் இதே தான்' என்று கொடுத்தார் கடையில் இருந்தவர். அந்த குப்பை மேட்டை கலைக்கவில்லை என்று ஒரு சின்ன திருப்தி. ஆனால் அந்த திருப்தி கொஞ்ச நேரம் கூட நீடிக்க வில்லை. 'கீழ போட தோத்தி' என்று கேட்டது தான் தாமதம் அந்த குப்பயைக் கிளறத் தொடங்கி மேட்டுக்குள் தலைமறைவானார் அந்த அங்கி தந்த மனிதர். 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ஒரு பழுப்பு கலர் தோத்தியை உருவி நீட்டினார்.

'ப்ரவுன் வேண்டாம் வெள்ளை குடுங்களேன்'
'இது வெள்ளை தான் மேடம் கொஞ்சம் (!!) கலர் டல் ஆயிடுச்சி'
'எப்ப துவச்சது கடைசியா?'
'ஞாபகமில்லையே'
'தலைப்பாகை ? '
'பாரதியாருக்கு போடுறது தான் மேடம் இவருக்கும்'  

அழுக்கேறிய தலைப்பாகை ஒன்றை தந்தார்.சர் சி. வி ராமன் என்றாலே இதெல்லாம் செட்டாக தான் தருவார்களாம். தோத்தி வேண்டாம் என்று சொன்னாலும் அதே காசு தானாம். வாடகைக்கு எடுத்துத் தொலைத்தேன் எல்லாவற்றையும். கிளம்பும் போது 'கண்ணாடி மறந்துட்டீங்க , காந்திக்கும் இவருக்கும் ஒரே கண்ணாடி தான், இந்தாங்க'  என்றார். 

என்னைப் போல் வேறு யாராவது காந்தி, நேரு, ராதாகிருஷ்ணன்,பாரதியார் ஆகியோரது காஸ்டியூம்  தனித்தனியாக கேட்டு வந்தால் என்ன செய்வார்கள்  என்ற யோசனையோடு அந்த அழுக்கு துணிமணிகளை அள்ளிக் கொண்டு கிளம்பினேன். சர். சி. வி .ராமனுடைய உடை இத்தனைப் பேருடைய உடைகளையும் கலந்து கட்டிய ஒரு ராமன் எஃபெக்ட் என்று அன்று தான் தெரிந்தது. அவர் ஷெர்வானி குர்தா போட்ட புகைப்படங்களும் இருந்தன. ஆனால் அந்த ஆடைகள் அனைத்தும்  சூப்பர் சிங்கர் அனந்த் வைத்தியநாதனை ஞாபகப்படுத்துவதாய் இருந்ததால் வேண்டாமென ஒதுக்கிவிட்டேன். 

சர். சி. வி ராமனுடய ட்ரெஸ்ஸை சர்ஃப் எக்ஸல் போட்டு துவைத்து காய வைத்து ரெடி பண்ணியாகிவிட்டது. அடுத்து சிவி ராமனை தயார் பண்ண வேண்டும். 

'ஃபுல் நேம் சொல்லு கண்ணா- சர்.சந்திரசேகர வெங்கட ராமன்'.
'சர் னா? '
'அது ஒரு பட்டம் மாதிரி கண்ணா'
'பட்டம் னா கைட் டாம்மா?' 
'இல்ல கண்ணா சர் வேண்டாம்,
சந்திரசேகர வெங்கட ராமன் மட்டும் சொல்லு'
'சந்திரசேகர வாமன ரூப ... '
'அய்யோ கண்ணா அது கணபதி ஸ்லோகம். சந்திரசேகர வெங்கட ராமன். எங்க சொல்லு'
'சந்திரசேகர...
'ம்ம்ம் சொல்லு'
'வாமன வெங்கட...'
'கண்ணா, வாமன விட்ரு, இன்னொரு முறை சேர்த்துக்கலாம் . இப்ப சொல்லு..'

 முழு பெயரையும் ஒரு வழியாக சொல்ல வைத்து கூட நாலு வரியையும் மனதில் ஏற்றி...சர்.சி வி ராமன் ரெடி. 

எல்லா ஆடைகளையும் திரும்பத் தருகையில் மறுபடியும் துவைத்து அயர்ன் செய்து கொடுத்தேன். பாவம் அடுத்து இந்த உடையை உடுத்தப் போகும் நம் தேச தலைவர்களின் அம்மாக்களுக்கு துவைக்கும் வேலையாவது குறையட்டும். 

1 comment:

Unknown said...

Your Kanna reminds me of Babu's Kanna Akka :-)