Wednesday, 26 November 2014

இக்கரைக்கு அக்கரை...

ஒரு நாளின் முடிவில் இன்று முழுக்க என்ன செய்தேன் என்று யோசித்துப் பார்த்ததால்  "நாய்க்கு நிக்க நேரமும் இல்ல வேலையும் இல்ல" என்று நண்பன் சொல்வது தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. 

இந்நேரம் ஒரு ஹோம் மேக்கராக இருந்திருந்தால் வேலைக்கு செல்பவர்களை பார்த்து ஜெலூசில் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டேடஸ் போட்டிருப்பேன்.வேலைக்கு செல்வதைக் காட்டிலும் கடினம் ஹோம்மேக்கராக இருப்பது. ஆனால் அம்மாவை வேலைக்குப் செல்பவராகவே பார்த்துப் பழகியவர்கள் ஹோம்மேக்கராக இருக்க முடியும் என்று தோணவில்லை. பதினைந்து இருபது நாட்கள் லீவ் எடுத்தால் கூட பத்து நாட்களுக்கு மேல் வீட்டில் இருப்பு கொள்ளாது. இந்த பர பர வாழ்க்கை பழகிவிட்டது. 

வேலையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பிரச்சனை இல்லாமல் பேலன்ஸ் செய்ய முடிகிறது என்றாலும், அது முழு திருப்தியை தருகிறதா என்று கேட்டுப் பார்த்தால் விடை தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு வேலை முடித்து, அதற்கு பிறகு பிள்ளையை எக்ஸ்ட்ரா வகுப்புகளுக்கு அழைத்து வரும் அம்மாக்கள், பகல் முழுதும் வேலை செய்துவிட்டு மாலையும் க்ளினிக் ஓடும் அம்மாக்கள்... என்று பிஸியான அம்மாக்களோடு ஒப்பிட்டு  பார்த்து நம்ம நிலைமை பரவாயில்லை தான் போல என்று மனதை தேற்றிக் கொள்ள முடிந்தாலும் ப்ரொஃபஷனல் லைஃபில் ஒரு வெற்றிடம் உருவாகி இருப்பதை முழுவதுமாக அகற்ற முடியல்லை.

முழு நேர வேலையை தியாகம் செய்யத் தோன்றாவிட்டாலும் எனக்கான விருப்பங்கள் கனவுகள் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு பிள்ளைக்காக மாலை வேளை முழுவதையும் டெடிகேட் செய்ய முடிவது ஒரு வகையில் கொடுப்பினை தானோ? தெரியவில்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு காலந்தள்ள சௌகர்யமாக உள்ளது என்பது தான் நிதர்சனம். 

எனது உடனடி தேவை எனக்கே எனக்கான நேரம் எனப்படும் "மீ-டைம்". இருபத்திநாலு மணி நேரத்தில் தூங்கும் அந்த ஐந்து மணி நேரம் மட்டும் தான் என்னுடயது என்று நினைத்தால் அந்த நேரம் கூட பெரும்பாலும் கனவுகளுக்கு சொந்தமாகிப் போகிறது. கஞ்சூரிங் பேய் முதல் பழக்கடைக்கார சின்ன பையன் வரை கனவில் வருகிறார்கள். பின் எனக்கான நேரம் தான் எது? 

பல நேரங்களில் நாம்  இருக்கும் கரையை தவிர்த்து மற்ற எல்லா கரையுமே பச்சையாக தெரியும் வியாதிக்கு இன்னும் சரியான பெயர் வைக்கப்படவில்லை. இந்த வியாதிக்கெல்லாம்  அமேசான் காடுகளில் அரிய வகை மூலிகை மருந்து எதுவும் கிடைப்பதில்லையா? 

இருப்பதை வைத்து திருப்தி அடைந்து இல்லாத ஒன்றை நினைத்து ஏங்கிப் புலம்பாமல் இருந்தால் இந்நேரம் 'மாதா அருணானந்தமை' ஆகி என் பக்த கோடிகளுக்கு  தீட்சை வழங்கிக் கொண்டிருந்திருப்பேனோ என்னவோ. அக்கரைக்கே வெளிச்சம்! 


1 comment:

suresh said...

...."பல நேரங்களில் நாம் இருக்கும் கரையை தவிர்த்து மற்ற எல்லா கரையுமே பச்சையாக தெரியும் வியாதிக்கு இன்னும் சரியான பெயர் வைக்கப்படவில்லை. இந்த வியாதிக்கெல்லாம் அமேசான் காடுகளில் அரிய வகை மூலிகை மருந்து எதுவும் கிடைப்பதில்லையா?

இருப்பதை வைத்து திருப்தி அடைந்து இல்லாத ஒன்றை நினைத்து ஏங்கிப் புலம்பாமல் இருந்தால் இந்நேரம் 'மாதா அருணானந்தமை' ஆகி என் பக்த கோடிகளுக்கு தீட்சை வழங்கிக் கொண்டிருந்திருப்பேனோ என்னவோ. அக்கரைக்கே வெளிச்சம்!"........

இவ்வரிகளில் உங்கள் தனித்துவ முத்திரையை பார்க்கிறேன்..
செம!!!