உணவுக் கட்டுப்பாடு என்பது எதாவது உடல் உபாதை வந்த பிறகோ, வரக்கூடிய அபாயம் உள்ளது என்று எதிர்பார்த்தோ , ஒரு எச்சரிக்கை மணிக்குப் பின்னே தான் நம்மால் மேற்கொள்ள முடிகிறது. சுயமாக முடிவெடுத்து நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்வோம் என்றெல்லாம் தினமும் கட்டுப்பாடாக சாப்பிடுவது நடைமுறையில் சிரமமான விஷயம். அவ்வாறு தாமாகவே மனமுவந்து உணவுகட்டுப்பாட்டுடன் இருப்பவரை ஹெல்த் ஃப்ரீக் என்று அழைப்பதுண்டு. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நானெல்லாம் எப்பவுமே ஸ்ட்ரிக்டா ஹெல்த்தி ஃபுட் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்பவர்களுக்கு ஒரு ஷொட்டு. ஸ்கிப் திஸ் போஸ்ட்.
என்னைப் போன்ற ஆட்கள் மேலே தொடரலாம்.
டயடிங் / உணவுக் கட்டுப்பாடு மற்றும் எடை குறைத்தல் என்று ஆரம்பித்தாலே முதலில் காதில் விழும் வார்த்தை ரைஸ் சாப்பிடாதீங்க என்பதே.அரிசி சார்ந்த கார்போஹைட்ரேட் வகை உணவு வகைகளை நம் மருத்துவர்கள் நம்மை தவிர்க்கச் செய்யச் சொல்வதற்கான அடிப்படை காரணத்தை ரொம்ப மேலோட்டமாக கீழே சொல்லியுள்ளேன்.
காருக்கு பெட்ரோல்/ டீசல் மாதிரி நம் உடலுக்கு தேவையான எரிபொருளை (fuel) இரண்டு வகையில் பெற முடியும். ஒன்று சர்க்கரை(glucose) இன்னொன்று கொழுப்பு (fat) . சர்க்கரை சத்து அதிகமுள்ள அரிசி சோறு உண்ணும் போது, உடலுக்குத் தேவையான எரிபொருளை சர்க்கரையிலிருந்தே எடுத்துக்கொள்கிறோம். நாம் சேர்த்து வைத்துள்ள கொழுப்பு (உ.த. தொப்பை) உபயோகிக்கப்படாமல் அப்படியே உடலில் நின்று விடுகிறது. அதாவது வெயிட் குறைவதில்லை. மேலும், உபயோகப்படுத்தியது போக மிச்சமுள்ள சர்க்கரை மீண்டும் கொழுப்பாக மாற்றப்பட்டு நம்மை டிஸ்ஃபிகர் செய்யக்கூடிய அனைத்து இடங்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது. அளவுக்கதிகமாக போகும் பட்சத்தில் இரத்த நாளங்களிலும் படியத் தொடங்கும்.
ஒரு குறிப்பிட்ட உணவில் சர்க்கரையின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை க்ளைஸிமிக் இன்டெக்ஸ் (glycemic index) நம்பரை வைத்து சொல்கிறார்கள்.GI அதிகம் உள்ள உணவு எளிதில் ஜீரணமடைந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடுதியில் அதிகப்படுத்தும். உதாரணத்திற்கு க்ளூகோஸின் GI-100 , பொன்னி அரிசியின் GI-75, கைக்குத்தல் அரிசியின் GI - 50 , ஓட்ஸ் GI- 49 ... இப்படி.
GI -75க்கு அதிகம் உள்ள உணவு அதிகமான GI உள்ள உணவாக கருதப்படுகிறது. பழங்கள் காய்கறிகளுக்கு GI மிகவும் குறைவு.
GI வால்யூ (value) முழுக்க முழுக்க க்ளூகோஸை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது. அதிக GI உள்ள உணவினை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் உடல் பருமன் (obesity), சர்க்கரை நோய், இருதய கோளாறு(coronary heart disease) போன்று பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கிலியூட்டுகிறார்கள். சிகரெட் பிடித்தால் கான்சர் வரும், சீக்கிரம் செத்துப்போய்டுவீங்க போன்ற மிரட்டல்களுக்கே அசராதவர்கள் ஆச்சே நாம். என்னத்த பெரிசா நமக்கு வந்துடப் போகுது என்று தெனாவட்டாக திரிபவர்கள் எல்லாம் சர்க்கரை நோயோ,ஹார்ட் அட்டாக்கோ வந்த ஒரே மாதத்தில் உருக்குலைந்து போய் விடுகிறார்கள் என்பதே நிதர்சனம்.
குறைந்த GI உள்ள எல்லா உணவும் உடலுக்கு நல்லது என்றும் சொல்லவிட முடியாது. உதாரணமாக சாக்லேட் கேக், ஐஸ்க்ரீம் போன்றவை உடலுக்கு நல்லது அல்ல எனினும் இவற்றின் GI 50க்கும் குறைவு. எனவே GI ஒன்றை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு உணவை தெரிவு செய்ய முடியாது.
GI 100 உள்ள வெள்ளை அரிசியையும் உருளைக்கிழங்கையும் மட்டும் சாப்பிட்டு எந்த தொந்தரவும் இல்லாமல் நலமாக வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புகை பிடிக்கும் அனைவருக்கும் புற்றுநோய் வருவதில்லையே அது போல. அது அவரவர் உடற்கூறு (constitution of body) பொறுத்த விஷயம். பிரச்சனை இல்லாத பத்து பேரை முன்மாதிரியாக வைத்து நமது உணவுப் பழக்க வழக்கங்களை தீர்மானிப்பதை விட பிரச்சனை உள்ளவர்களின் காரணத்தை தெரிந்துக் கொண்டு அதை தவிர்க்க முயல்வது புத்திசாலித்தனமில்லையா?
இந்த அரிசி மோகத்திலிருந்து விடுபடுவது சாதாரண விஷயமே அல்ல. நாம் எல்லோருமே ஒரு வகையில் சோத்துமாடு தான்.நாம் அவ்வாறே பழக்கப்பட்டுவிட்டோம். மன அழுத்தத்துடன் கூடிய செடன்ட்ரி வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டது நாம் தானே? அப்படியானால் அந்த வாழ்க்கை முறைக்கேற்ற உணவு பழக்கத்தையும் நாமாக மாற்றிக் கொள்வது நல்லதில்லையா?
அதனால் ஏதாவது வியாதி வந்த பின்பு தான் அரிசி சோறு தின்பதை நிறுத்துவேன் என்று அடம் பிடிப்பவர்கள் கொஞ்சம் உஷாராக முன்கூட்டியே அரிசியை குறைத்து சிறுதானியங்கள், நிறைய பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம்.ஏழு வகை சிறுதானியங்களுக்குமே அரிசியை விட GI குறைவு. அதைப்பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் நலிந்திருக்கும் வியாதிகளையும் கட்டுப்பாடற்ற பழக்க வழக்கங்களையும் கருத்தில் கொண்டால் ஒவ்வொருவருமே ஹெல்த் ஃப்ரீக்காக இருப்பது நல்லது. முப்பத்தி ஐந்து , நாற்பது வயது வரை நம் உடலை இப்படி பார்த்து பார்த்து பேண வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அது வரை தன்னை தானே தட்டி கொடுத்து ஒடத் தெரிந்த நமது உடல் நாற்பதை எட்டும் போது என்னையும் கொஞ்சம் கவனிக்கலாமே என்று குரல் கொடுக்க ஆரம்பிக்கிறது. 'லைஃப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபார்டி'என்பதை வேண்டுமானால் 'ஹெல்த்தி லைஃப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபார்டி' என்று மாற்றிக் கொள்ளலாம். 'ஸ்டேயிங் ஹெல்த்தி' என்பதை ஒரு வாழ்க்கைமுறையாகவே கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
(தொடரும்)
2 comments:
"பிரச்சனை இல்லாத பத்து பேரை முன்மாதிரியாக வைத்து நமது உணவுப் பழக்க வழக்கங்களை தீர்மானிப்பதை விட பிரச்சனை உள்ளவர்களின் காரணத்தை தெரிந்துக் கொண்டு அதை தவிர்க்க முயல்வது புத்திசாலித்தனமில்லையா?"
i agree!
your interesting thumb impression in the following lines...
"நாம் எல்லோருமே ஒரு வகையில் சோத்துமாடு தான்.நாம் அவ்வாறே பழக்கப்பட்டுவிட்டோம்."
என்னதான் சீரியஸான விஷயங்களை நீங்கள் சொன்னாலும் நகைச்சுவை கலந்து கொடுக்குறீர்கள்..
thanks for this Article Aruna!
please write more and more for your fans like me..
Thank you suresh...
Post a Comment