மக்கள் சிறுதானியத்திற்கு மாற யோசிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம்.
ஒன்று சுவை. அடுத்து விலை.
சுவையை பொறுத்தமட்டில் அரிசியை உபயோகிக்கும் அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களை சப்ஸ்டியூட் செய்யலாம். சுவையில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. மாற்றம் தெரிந்தாலுமே அதை பழகிக்கொள்வதில் தவறேதும் இல்லை.
சிறுதானியத்தை சோறாகத் தான் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரவை, சேமியா, மாவு என எல்லா வடிவங்களிலும் சிறுதானியங்கள் கிடைக்கின்றன. அன்றாடம் உண்ணக்கூடிய இட்லி, தோசை, ரொட்டி , உப்புமா, பொங்கல் , அடை, வடை ,பனியாரம், இடியாப்பம், புலவ் என எல்லாவற்றையும் இந்த சிறுதானியங்களில் செய்யலாம். இதற்காக ஏகப்பட்ட ரெஸிபி புத்தகங்களும் கிடைக்கின்றன. அவற்றை விரும்பி சாப்பிடுவதற்கு நம் வயனமான நாக்கை காட்டிலும் நம் மனநிலையே முக்கியம்.
அடுத்து விலை.
நமக்கு நன்கு பரிச்சயமான கேழ்வரகு, கம்பு ஆகியவை குறைந்த விலையில் தான் கிடைக்கின்றன. புதிதாக மார்கெட்டை பிடித்திருக்கும் மற்ற சிறுதானியங்கள் தான் ஏகத்துக்கு விலை. கிலோ 120 ரூபாய் என்பது ரொம்பவே அதிகம். அரசாக பார்த்து சாதாரண வெள்ளை அரிசி, கோதுமை போல இந்த சிறுதானியங்களை பல்பொருள் அங்காடிகளில் விநியோகம் செய்ய ஆரம்பித்தால் தான் விலை குறைய வாய்ப்புள்ளது.
உலகிலேயே இந்தியா தான் இந்த தானியங்கள் (major & minor millets) உற்பத்தியில் முதலிடம் என்பது ஆச்சர்யமான விஷயம். எழுபதுகளில் ஸ்டேபில் (staple) டயட்டாகவே இருந்த சிறுதானியங்கள், 2000 மாவது ஆண்டில் கிட்டதட்ட 75% குறைந்து விட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. 2005 ம் ஆண்டு முதல் இவை பெரும்பாலும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவாகவே (fodder) மாறிவிட்டது.
நம் ஊரில் மனிதர்கள் இந்த தானியங்களை சீண்டுவதே இல்லையா என்று கவலை கொள்ள வேண்டாம். ஆல்கஹால் (மது) உற்பத்தியில் இவை பயன்படுகின்றன. மில்லட் பீர் நேபால், ஜப்பான்,ஆப்பிரிக்கா,இந்தியா நாடுகளில் டோங்பா(tongpa), அஜோனோ(ajono), ரக்ஷி, போஸோ (bozo ) என வெவ்வேறு பெயர்களில் பிரசித்தம்.
சரி இங்கே விளையும் தானியங்கள் அனைத்தும் என்ன தான் ஆகின்றன? வழக்கம் போல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் , உற்பத்தி செய்யப்படும் நாட்டிலேயே கொள்ளை விலை போவது புதிய விஷயம் அல்ல . இங்கே அவற்றுக்கான சந்தை இல்லாத போது வேறு என்ன செய்ய முடியும் ? இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் நம் நாட்டில் இந்த தானியங்களின் உபயோகத்தை அதிகரிக்க 'விலைக் குறைப்பு' என்ற அத்தியாவசிய தேவை தவிர மற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக வழக்கமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எளிதில் கிடைக்கக் கூடிய/ கிடைக்க வேண்டிய பொருள்களே நான்கு குட்டி கர்ணம் அடித்து, வராத சாகசங்களை எல்லாம் செய்து காட்டினால் தான் சாமானிய மனிதனுக்கு கிட்டுகிறது (உ.த. எல் பி ஜி சிலிண்டர்). சுலபமாக சல்லிசாக கிடைக்க கூடிய தானியங்கள்களை சந்தைப்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ளுமா? செய்தால் நன்றாகத் தானிருக்கும். அரசு இந்த வகை தானியங்களை விநியோகிக்க முன் வரும் நிலையில், இதனை எவ்வளவு பேர் அரசு பல்பொருள் அங்காடிகளில் வாங்க முன் வருவர்?
இன்று சிறுதானிய உணவு ஒரு வகையான லக்ஷுரி உணவாகவே பார்க்கப்படுவது வருந்தத்தக்க விஷயம். 'ப்ரௌன் ரைஸ்' சாப்பிடுவதையே மட்டமாக நினைப்பவர்கள் நம்மிடையே இருக்கதானே செய்கிறார்கள். அரிசி சோறு சாப்பிடுவதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைத்த/ நினைக்கும் தலைமுறை நாம்.
சில யோசனைகள்...
பள்ளியில் பாட திட்டத்தில் சிறுதானியங்கள் பற்றி சேர்த்து குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அவற்றின் அருமை பெருமையை புரிய வைக்கலாம்.
பண்டிகை கொண்டாட்டங்களில், கோவில்களில் நிறைய பயன்படுத்தலாம்.
தரம் குறைந்த அரிசியை உபயோகிப்பதாக வரும் சத்துணவு புகார்களுக்கு சிறுதானியங்கள் மூலம் பதில் தரலாம்.
அதே இட்லி தோசை பனியாரத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புதிது புதிதாக சமைக்கும் முறைகளை கண்டறியலாம்.
இது போன்ற ஏதாவது புது ஐடியாக்களை இப்போதே செயல்படுத்த ஆரம்பித்தால் கூட சிறுதானிய உணவு மாற்றம் அடுத்த தலைமுறையில் நிச்சயம் சாத்தியப்படலாம்.
சிறுதானிய உணவு முறைக்கு மாறுவது ஒன்றும் தலைகீழாக நின்று தண்ணி குடிக்கும் சாசகசமல்ல.சைனீஸ் ஃப்ரைடு ரைஸையும் நூடுல்ஸையும் எவ்வளவு மோசமாக இருந்தாலும் உண்ணத் தெரிந்த நமக்கு சத்துள்ள இந்த சிறுதானிய சுவையை பழகுவதிலும் சிரமம் இருக்காது.
முயற்சி செய்வோம்.
No comments:
Post a Comment