Thursday 1 January 2015

மூணாவது சனிக்கிழமை


புரட்டாசி மாதம் மூணாவது சனிக்கிழமை வகை வகையாக சமைத்து , படையல் போட்டு வைத்து , பூஜை புனஸ்காரங்களை எல்லாம் சீராக முடித்து, கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்த சாப்பாட்டை  மயங்கி விழுவதற்குள் ஒரு வழியாக கடைசியாக வாயில் வைப்பார்கள் வீட்டு பெருசுகள். 

அதுப்போல, காலேஜில் ஒரு கருத்தரங்கு. மாதம் ஒரு முறை நடக்கும் சடங்கு இது. வார  நாட்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாவது சனிக்கிழமையும் அதுவுமாக மதிய உணவு  வேளையின் போது ஆரம்பிக்கும் இந்த கருத்தரங்கு. 

பெரும்பாலான உத்தியோகஸ்தர்களுக்கு சனி, ஞாயிறு இரு நாட்களுமே லீவ். வெள்ளிக்கிழமை சாயங்காலமே வீக்கெண்ட்  உற்சவம் காண்பவர்கள் சனிக்கிழமை வேலை செய்வதன் கடி உணர வாய்ப்பில்லை. மாதம் ஒரு முறை தான் கருத்தரங்கு என்றாலும் சனிக்கிழமை அன்று வேலை நேரம் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக வேலையிடத்தில் இருக்க வேண்டி இருந்தாலும் , பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு நிலைகொள்ளாமல் தவிக்கும் அம்மாக்கள் லிஸ்டில் நானும் சேர்த்தி. அப்பாக்களுமே தவிப்பார்கள், ஆனால் ஏன் என்று புரிந்ததில்லை. 

நான் முதுகலைப் படிப்பு முடிந்து அதே கல்லூரியில் பணியில் சேர்ந்த புதிதில் அறிவுப்பசியும் ஆர்வக்கோளாறும் சண்டைப்போட்டு என்னை வலுக்கட்டாயமாக இந்த கருத்தருங்குக்குள்    தள்ளிவிட்டுக்கொண்டிருந்தன.  நாட்கள்  செல்ல செல்ல வர வர மாமியார்  என்னவோ போல ஆனாளாம் கதையாக  அறிவும் ஆர்வமும் போய் பசியும் கோளாறும்  மட்டுமே  என்னை கருத்தரங்குக்குள் இழுத்துக் கொண்டிருந்தன. பசி  நேரமாதலால் அவர்கள் பொறையை  கொடுத்தாலும் பாய்ந்து பிடுங்கித் தின்றுக் கொண்டிருந்தேன். சில பல வருடங்களுக்குப் பிறகு அவ்வளவு சிரமப்பட்டு வலுக்கட்டாயமாக என்னால் என் அறிவை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் வேற வழி? 

தொடர்ந்து இரண்டு மூன்று  கருத்தரங்குகளுக்கு  வரவில்லை  என்றால் மெமோ வரும். என்றுமே கருத்தரங்குக்கு வராதவர்களுக்கு வராது. நடுவில் டிமிக்கி கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சன்மானம். இது வரை இந்த கருத்தரங்குக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக எல்லாம் நான் மெமோ வாங்கியதில்லை. காண்டீனில் போட்ட வாழைக்காய் பஜ்ஜியில் சோடா உப்பு கொஞ்சம் தூக்கலாமே போன்ற மிகவும் சீரியசான விஷயங்களுக்கு தான் மெமோ வாங்கியுள்ளேன். 

இந்த கருத்தரங்கு மேட்டரை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த புத்தாண்டிலிருந்து மாதாந்திர கருத்தரங்கு புதன் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. கிட்டதட்ட நூறு கருத்தரங்குகளாக இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தோல்வியடைந்து(!) , அப்படியே கிடப்பில் போடப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் கருத்தரங்கு வைக்காத வரை சந்தோஷம் என்று சலிப்போடு சடங்கு செய்துக்கொண்டிருந்த பொழுது இந்த கருத்தரங்கு நாள் மாற்றம் குறித்த சந்தோஷம் உண்மையிலேயே புத்தாண்டு பம்பர்.

 ஒரு பாஸிட்டிவ் நோட்டோடு வருடத்தை ஆரம்பிப்பது நல்ல விஷயம் தானே? வேலையிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு ஓடி வருவது எப்படி பாஸிட்டிவான விஷயமாகும் என்று சனிக்கிழமை காலை வீட்டில் சூப் சாப்பிட்டுக்கொண்டே கேள்வி  கேட்பவர்களுக்கு புத்தாண்டில் கொடுமையான சாபம் விடப்படும் . 

இனிமேல்  அந்த மூன்றாவது சனிக்கிழமை கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரம் வீடு வந்து சேரலாம் என்ற திருப்தியோடு இந்த வருடத்தை ஆரம்பிக்கிறேன் . 

3 comments:

sivagalai said...

ஜாலியான விஷயத்தை சீரியஸாகச் சொல்வதும், சீரியஸான விஷயத்தை ஜாலியாகச் சொல்வதும் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரம். உங்களுக்கும் இந்த வரம் வழங்கப்பட்டிருக்கிறது.

பதிவின் மூன்று இடங்களில் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

சிறந்த படைப்பாளி, தான் கடந்துபோகும் ஒவ்வொரு விஷயத்தையும் படைப்பின் தன்மையிலேயே கடந்துபோவான். இதனாலேயே, தனக்கு எரிச்சலைக் கொடுக்கிற விஷயங்களைக்கூட மென் புன்னகையுடன் இவர்கள் சமாளித்துக்கொண்டு போவார்கள். உங்களின் மூன்றாவது சனிக்கிழமை நிகழ்வு இப்படிப்பட்டதாகவே இருக்கிறது போலும்!

பிரபலமாகாத பிரபல எழுத்தாளரின் வரிசையில் நீங்களும் வருகிறீர்கள்!

தொடர்ந்து எழுதுங்கள்... கவனிக்கிறேன்!

sivagalai said...

ஜாலியான விஷயத்தை சீரியஸாகச் சொல்வதும், சீரியஸான விஷயத்தை ஜாலியாகச் சொல்வதும் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரம். உங்களுக்கும் இந்த வரம் வழங்கப்பட்டிருக்கிறது.

பதிவின் மூன்று இடங்களில் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

சிறந்த படைப்பாளி, தான் கடந்துபோகும் ஒவ்வொரு விஷயத்தையும் படைப்பின் தன்மையிலேயே கடந்துபோவான். இதனாலேயே, தனக்கு எரிச்சலைக் கொடுக்கிற விஷயங்களைக்கூட மென் புன்னகையுடன் இவர்கள் சமாளித்துக்கொண்டு போவார்கள். உங்களின் மூன்றாவது சனிக்கிழமை நிகழ்வு இப்படிப்பட்டதாகவே இருக்கிறது போலும்!

பிரபலமாகாத பிரபல எழுத்தாளரின் வரிசையில் நீங்களும் வருகிறீர்கள்!

தொடர்ந்து எழுதுங்கள்... கவனிக்கிறேன்!

அருணாவின் பக்கங்கள். said...

மிக்க நன்றி sivagalai.
தொடர்ந்து வாசிக்கவும்:-)