Sunday 4 January 2015

ஆட்டோ


ஆட்டோ ஒன்று செய்ய வேண்டும். ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை வைத்து. 

இது ஒரு எல்கேஜி ஸ்கூல் பையனுக்கான அஸைன்மென்ட்.  இதுப் போன்றதொரு வேலையை எனக்கு காலேஜ் படிக்கும் போது கொடுத்திருந்தால் கூட என்னால் செய்திருக்க முடியாது. கைவினைப் பொருட்கள் செய்வதோ, ஏதாவது மாடல் செய்வதோ, வரைவதோ எதுவுமே வராது. ஒரு வட்டத்தை கூட வட்டமாக  போட வராது. நான் பிள்ளைக்கு என்னத்த சொல்லித் தர போகிறேன்? 

எந்த துறையாக இருந்தாலும் நமக்கு வழிக்காட்டிகளுக்கா பஞ்சம்!அறிந்த தெரிந்த நண்பர்களிடம் ஆட்டோ மாடல் யார் செய்து தருவார்கள் என்று விசாரித்து சில நம்பர்களை பிடித்தேன். யாராவது சைட் பிஸினெஸாக இது போல ப்ராஜெக்ட்டுகள் செய்ய கிடைப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.மௌண்ட் ரோட்டில் ஸ்கூல்/ சயின்ஸ் ப்ராஜெக்ட்ஸ் செய்வதர்க்கென்றே ஒரு தனி கடையே இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. வெப்சைட், ஈமெயில் சகிதம் நிறைய பேர் வேலை செய்யும் ஒரு கடை! 
ஃபேஸ்புக் ஐடி போட்டு 'லைக் அஸ் ஆன் ஃபேஸ்புக்' என்று நேற்று ஒரு மெசேஜ் வேறு! 

அந்த கடைக்கு ஃபோன் பண்ணியதில் ஒரு முதியவர் லைனில் சிக்கினார். 

'ஆட்டோ மாடல் செய்து தர முடியுங்களா?'

'செய்யலாம் மேடம்'

'குச்சி, துணி,வைக்கோல், களிமண் மாதிரி ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருள் வச்சு செய்யனும்'

'ஓ செய்யலாமே. எவ்வளோ பெருசா வேணும்?' 

'ரெண்டு உள்ளஙகையகலம் இருந்தா போதுங்க‌'

'சரி, பேட்டரி போடற மாதிரியா இல்ல கரெண்ட்ல ஓடற மாதிரியா'

'இல்லைங்க ஆட்டோ ஒடற மாதிரி வேணாம்' (மைண்ட் வாய்ஸ் - களிமண்ணில் செய்யும் ஆட்டோ ஓடுமா??) 

'எந்த க்ளாசுக்கு?' 

'எல்கேஜி'

'ஓ அப்பிடியா. ஆனா ஆட்டோ ஓடற மாதிரி தான செய்யணும்? '

'இல்லைங்க , சின்ன பசங்க இல்ல, அதனால மாடல் மாதிரி இருந்தா போதும்'

'ஆனா ஆட்டோன்னா ஓடணுமே? '

அய்யோ இவர் ஐஐடி ப்ராஜெக்ட் லெவல்ல பேசறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சி ஆனது.விட்டா சோலார் எனர்ஜி , மூலிகை பெட்ரோல் என்று அடுத்து ஆரம்பிப்பார்  போலிருந்தது. 

'இல்லைங்க ஆட்டோ ஸ்ட்ரைக்னு நெனச்சிக்கோங்களேன்,ஓடாத ஆட்டோ தான் வேணும்'.

'கஷ்டம் மேடம், நாங்க அப்படி சிம்பிள் ப்ராஜெக்டஸ் எடுக்கறதில்லீங்க. நீங்க இந்த கடைல ட்ரை பண்ணி பாருங்களேன்' என்று வேறு இரண்டு நம்பர்களை கொடுத்தார். 

சரி இந்த ஸ்கூல் ப்ராஜெக்ட் விஷயம் ஆட்டோவோடு நிற்கப்போகிறதா என்ன. ஃப்யூச்சர்ல  ஏரோப்ளேன் பறக்க வைக்கிற ப்ராஜெக்டுக்கு இவரை யூஸ் பண்ணிக்கலாம் என்று நம்பரை சேவ் செய்து விட்டு,  அவர் கொடுத்த வேறு நம்பர்களை முயன்றால் எல்லோருமே 'சயின்ஸ டே'வுக்கு ப்ராஜெக்ட் செய்யும் லெவலிலேயே பேசினார்கள். கடைசியாக உடன் பணிபுரியும் ஒருவரின் உதவியால் ஓடாத பொம்மை ஆட்டோ செய்ய ஒருவரை பிடித்தாயிற்று. 

இதற்கு மேல் வருவது கொஞ்சம் புலம்பல். முகநூலில் இதை பாலிஷ்டாக அறச்சீற்றம் என்று சொல்வதுண்டு. யு-டர்ன் எடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளவும். 

எனக்கு சில விஷயங்கள் புரியவேயில்லை. 
ஒரு எல்கேஜி பிள்ளைக்கு எதை புரிய வைக்க இந்த மாடல் என்று ஆராய்ந்து பார்த்தால், ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளவதற்காக என்று பதில் வருகிறது பள்ளியிலிருந்து. என்ன கொடுமை இது? இதற்கு ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை கொண்டு வர சொன்னால் பத்தாதா? இல்லை பிள்ளையின் கைவினைப் பொருள் செய்யும் திறமையை (ஆர்ட் & க்ராஃட்) ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதை பள்ளியில் தானே பயிற்றுவிக்க வேண்டும்? 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகள் 'பேரண்ட் சைலட் இன்ட்ராக்ஷன்' மேம்படுத்த தான் என்றால், என்னைப் போன்ற பெற்றோர் என்ன செய்வார்கள்? எல்லா பெற்றோருக்குமே க்ராஃப்ட் வொர்க்கும் ஆர்ட் வொர்க்கும் நன்றாக வருமா என்ன? பெற்றோருக்கே இவ்வாறான வேலைகள் நன்றாக செய்ய வரும் பட்சத்தில்  பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்தலாம். யாரோ ஒருவரிடம் கொடுத்து செய்யப்படும் ப்ராஜெக்டில் பிள்ளை என்ன கற்றுக்கொள்ள முடியும்? அப்படியனால் இந்த ப்ராஜெக்ட் யாருக்கான ஹோம்வொர்க்? 

நாம் படிக்கும் காலத்தில் வீட்டுப்பாடம் எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கும். இது போல ஆட்டோ , ஹெலிகாப்டர் எல்லாம் எதிலும், எந்த காலத்திலும் யாரும் செய்ய‌ சொன்னதில்லை. மிஞ்சிப் போனால் தையல் க்ளாஸுக்கு பாவாடை தைக்க துணியும் கலர் நூலும் வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் பிள்ளைகளை தையல் மிஷினே வாங்கி வர சொன்னாலும் ஆச்சர்யப்பட கூடாது. 

பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டைப் போடுபவர் என்று கூட அறியப்படும் ஒருவர் இருக்கிறார் என்பது இந்த ப்ராஜெக்ட் விஷயமாக அலையும் போது தான் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தை விட , தன் பிள்ளைகளுக்கு அட்டைப் போட்டுத்தர  கூட நேரம் கிடைக்காத பிஸியான ஒபாமா, மோடிக்கள் நம் ஊரில் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சி! 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகளினால் பெற்றோருக்கு வீண் செலவு என்ற குறைபாடு  இருந்தாலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் திறமையுள்ள நிறைய பேருக்கு  கிடைத்துள்ள வேலை வாய்ப்பு. 
இது ஒரு நல்ல பயனுள்ள பிசினெஸாகவே மாறியிருக்கிறது.

 நம் ஊரில் கல்வியே பிசினெஸ் தானே? 










1 comment:

Unknown said...

Superb Puppykka . Best read of all your stories. Thoroughly enjoyed ... Surprised too