GI பற்றிக் கொஞ்சம் இன்னும் சமாச்சாரம்....
GI குறைவாக உள்ள உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீரமைக்க உதவுவதுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய கோளாறுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகின்றன. புரத சத்து, கொழுப்பு சத்து, நார் சத்து, முழு தானியங்கள், பயிறு வகைகள், பழங்கள், காய்கறிகள் என GI குறைவாக உள்ள ஏராளமான உணவுகள் சடுதியில் ஜீரணம் அடையாது. அதாவது நீண்ட நேரம் நம்மால் பசியை தாக்குப்பிடிக்க முடியும். அதிக GI உள்ள உணவு வகைகள் இதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் குறைந்த GI உள்ள உணவுகளின் பங்கு கேள்விக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஒரு உணவுப் பொருளின் GI அதைப் பதப்படுத்தும் முறை, சமைக்கும் முறை, அதனோடு சேர்த்து சமைத்து , பரிமாறப்படும் மற்ற உணவுகள் போன்ற வெவ்வேறு காரணிகளை சார்ந்துள்ளது.
GI என்பதே அவசியமற்ற ஒன்று, அது சர்க்கரை நோயாளிக்களுக்கு மட்டும் தான் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.GI யை மட்டும் கணக்கில் கொண்டு சாப்பிடுவதனால் உடலுக்குத் தேவையான மற்ற அத்தியாவசிய சத்துக்களை நாம் இழக்கிறோம் என ஒரு கோஷ்டி கூவிக்கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்கான மாற்றுக் கருத்தையும் ஆராய்ந்து பார்ப்பதே புத்திசாலித்தனம். யாராவது ஒரு சாரார் சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு வண்டிமாடு போல ஒரே தடத்தில் போக வேண்டிய அவசியமில்லை.
டயடிங் என்பதை எடைக்குறைப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்காமல், உடல் ஆரோக்கியம் என்ற பரந்த சிந்தனையோடு அணுகலாம். உடலுக்கு நல்லது வயிற்றுக்கு நல்லது என்று சொல்லப்படும் பெரும்பாலான உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதி. இதனாலேயே டயடிங் என்று பேச்செடுத்தாலே பலரும் தெறித்து ஓடிவிடுகின்றனர்.
உணவு முறையை பொருத்தமட்டில் ஹார்ட் அன்ட் ஃபாஸ்ட் ரூலாக (hard & fast) எதை மேற்கொண்டாலுமே சில நாட்களிலேயே சலிப்பு தட்டும். அதைப்போல ஒரே மாதிரியான உணவு வகைகளை அன்றாடம் உண்பதும் சீக்கிரமே உணவு கட்டுப்பாட்டின் மீதே வெறுப்பை உண்டாக்கிவிடும். இந்த சலிப்பு வெறுப்போடு சேர்த்து நமக்கு பிடித்தமான உணவினை பார்க்கும் போது காஞ்ச மாடு கம்பங்கொல்லையை பார்த்த கதையாகிவிடுகிறது.
நாம் கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு ருசியான உணவினை மட்டும் இஷ்டம் போல முழுங்குவதை தவிர்த்து GI குறைவாக உள்ள உணவுகளோடு சேர்த்து உடலுக்கு தேவையான மற்ற வகை உணவுகளையும் உட்கொள்ளலாம். வொயிட் ப்ரெட்டுக்கு பதிலாக ஹோல் வீட்(whole wheat) ப்ரெட் சாப்பிடலாம்.(நாங்கெல்லாம் காய்ச்சல் வந்தால் தான் ப்ரெட் சாப்பிடுவோம் வம்சாவளியில் வந்தவர்கள்,மன்னிக்க )வெள்ளை அரிசிக்குப் பதில் கைக்குத்தல் அரிசியோ சிறுதானிய சோறோ சாப்பிடலாம். அதோடு சேர்த்து கொஞ்சம் பச்சை காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், முட்டை, மாமிசம் என கதம்பமாக நமது டயட்டை நாமே சுவாரஸ்யமாக டிசைன் செய்து கொள்ளலாம்.
சிக்கன் என்றாலே செக்கச்செவேலென எண்ணெயில் பொறித்த சிக்கன் 65 தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காமல், கோழியையும் மீனையும் அவித்தோ, குழம்பு வைத்தோ உண்ணலாம். சுவைக்காக சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், நன்றாக இல்லையென்றாலும் கூட ஆரோக்கியத்துக்காக சில உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும் என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே இருந்தே பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். எல்லாவற்றையுமே ஸ்பூன்ஃபீட் செய்து பழகிக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையில் நல்ல உணவு முறைகளையும் பழக்கிவிடுவதில் தவறேதும் இல்லை.
உணவுக் கட்டுப்பாட்டை எவ்வளவு சீராக கடைப்பிடிக்க முடிந்தாலும் தினமும் ஏதோவொரு வகையில் உடலுக்கு கொஞ்சம் வேலையும் தருவது அவசியம். ரிமோட்டில் சானல் மாற்றுவதையே மாபெரும் வேலையாக நினைக்கும் உழைப்பாளிகள் வீட்டுக்கு வீடு இருக்கத்தான் செய்கிறார்கள்.தானாக எழுந்து நடந்து தாகத்துக்கு தண்ணி மோந்து குடிப்பதை கூட மானக்கேடாக நினைத்து அடுத்தவரை வேலை வாங்குபவர்கள் அதிலிருந்தே ஆரம்பிக்கலாம், அதாவது தங்கள் வேலையை தானே செய்துக்கொள்ள. வாக்கிங், ஜாகிங், வொர்க்கவுட், ஸ்விம்மிங், டென்னிஸ் , பேட்மின்ட்டன் என ஏதாவது ஒரு பயிற்சி உடலுக்கு நிச்சயம் தேவை. நாம தான் நடக்கிறோமே, ஓடுறோமே என்று இஷ்டப்படி உண்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.மூக்கு பிடிக்க முழுங்கிவிட்டு மூச்சு வாங்க ஓடுவதில் பெரிய பலனேதும் எதிர்பார்க்க கூடாது.
நீங்க இதையெல்லாம் தொடவே கூடாது , அதையெல்லாம் வாசனை கூட பிடிக்க கூடாது, வாக்கிங் போகாமல் தூங்கவே கூடாது என்று டாக்டர் வந்து ஏகத்துக்கு ரூல்ஸ் போடும் வரை காத்திருக்க வேண்டாம் .பிறகு நாம் சாப்பிடாமல் இருக்க அவருக்கு வேறு மொய் எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து மோட்டு வலையை பார்த்து கேவி கேவி அழுவதற்கு நாமே என்ன சாப்பிடுவது என்பதை தேர்ந்தெடுத்து உண்பது நல்ல பழக்கம் தானே?
முயற்சிப்போம்.
No comments:
Post a Comment