Friday, 27 March 2015

லைவ் ரிலே

ஹைவேயில் நின்றுக்கொண்டு 
'இதோ நம்ம ஸ்ட்ரீட் திரும்பிட்டே இருக்கேம்மா'

டெப்போவிலிருந்தே கிளம்பாத பஸ்ஸிலிருந்து....
"இன்னும் ரெண்டே ஸ்டாப் தான், இறங்கின உடனே ஃபோன் பண்றேன்"

வீட்டு வாசப்படியில் நின்றுக் கொண்டே
'வை வை வை சிக்னல் போட்டாங்க' 

கால் வெய்டிங் ஆப்ஷனே இல்லாத ஃபோனில் 'இன்னொரு லைன்ல பாஸ் வர்றார் அப்புறம் பேசறேன்' 

கும்மிடிபூண்டியில் கிளம்பிக் கொண்டே 
'நாளைக்கு மார்னிங் சென்னை ரீச் ஆயிடுவேன்'

இதெல்லாம் இப்போது அன்றாடம் சுலபமாக கேட்கக் கூடிய வசனங்கள்.

ஒரு ஃபோனுக்கு இரண்டு ஃபோன், ஓரே ஃபோனில் இரண்டு சிம் என்ற அலப்பறை ஒரு பக்கம். அது போக, உச்சா போவதை கூட ரன்னிங் கமெண்ட்ரி தருபவர்கள் மறுபக்கம். 

அலைப்பேசியற்ற ஒரு தெருவை கடந்து வருவதோ, பத்து பேர் கூடியுள்ள ஒரிடத்தில் அலைபேசியே இல்லாத ஒருவரை கண்பதோ குத்துப்பாட்டில்லாத தமிழ் படம் போல அரிதான விஷயமாகிவிட்டது. 

எது நடந்தாலும் உடனுக்குடன் மார்ஸ் கிரகம் வரை தெரிவிக்கவில்லையென்றால் ரத்தம் கக்கி சாவோம் என்ற சாபமும் அலைபேசி வாங்கும்போதே நமக்கு இலவச இணைப்பாக கிடைத்துவிடுகிறது. 

டிவி சேனல்களுக்கு கடுமையான போட்டியாக நாமே பல நேரங்களில் 24/7 நியூஸ் சேனல்களாக மாறி ரன்னிங் கமென்டரியோடு  லைவ் டெலிகாஸ்ட்டும் தந்து வருகிறோம்.'இப்ப தான் சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிச்சேன் அடுத்து ரசம்' என்று சொல்லி முடிக்கும் முன் 3ஜியின் மகிமையில் பாதி தின்ற ரசம் சாத ஃபோட்டோ வாட்ஸப்பில் டவுன்லோட் ஆகியிருக்கும். 

கொஞ்சம் பின்னோக்கி யோசித்தால் 
எந்நேரமும் மனதுக்கு பிடித்தவர்களுடன் தொடர்பிலேயே இருக்க ஏங்கிய நாட்கள் உண்டு என்பதை நம்மால் மறுக்கவே முடியாது. நமது அன்புக்குரியவர்களின் குரலைக் கேட்க பல கிமீகள் நடந்து சென்ற பொழுது கையடக்கத்தில் ஒரு சாதனம் இருக்காதா என நினைத்ததும் உண்மை தான்.

 எஸ்டிடி பேசும் போது மீட்டரை விட வேகமாக நமது பிபி எகிறிக்கொண்டிருந்த காலத்தை கடந்து தான் இரவெல்லாம் இலவசமாகவோ, பிடித்தவரோடு மணிக்கு பத்து பைசாவோ செலவு செய்து பேசும் நிலையை எட்டியுள்ளோம். ஆனால் இலவசமே கசந்து போகுமளவு அலைபேசி உபயோகத்தை ஓவர்டோஸாக்கி, ஃபோனில் சார்ஜ் இல்லையெனில் ஜன்னி கண்டுவிடும்  அபாய நிலையை நாமாகவே உருவாக்கிக் கொண்டு வருகிறோம் என்பதுமே மறுப்பதற்கில்லை. 

உதாரணமாக, ட்ரெய்னில் டாய்லெட்டில் தண்ணீர் இல்லை என்பது ஒரு பெரிய கவலையாகவே தெரியாது, ஆனால் சார்ஜ் பண்ண அந்த கம்ப்பார்ட்மென்டில் ப்ளக் பாயின்ட் இல்லை என்ற வருத்தமே அதிகமிருக்கும். 
 
ஆனால் என்ன தான் கான்ஸ்டன்ட்லி-இன்-டச் ஆசை கல்யாணத்திற்கு முன் டைரிமில்க் சில்க் மாதிரி திகட்டாத சுவையை தந்தாலும், கல்யாணமாகி ஆறு மாதம் கடந்த நிலையிலேயே கணவர்கள் 'இந்த செல்ஃபோன் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனான்...'என்ற டயலாக்கோடு அலைவதை சகஜமாக பார்க்க முடிகிறது. 

இந்த 24/7 நான்ஸ்டாப் கம்யூனிகேஷனை மறைமுகமாக ஊக்குவிக்கும் தொடர்பு சாதனங்கள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை பெருமளவு பதம் பார்த்திருக்கின்றன என்பதை இப்போதுள்ள தலைமுறை உணர இன்னும் சில வருடங்கள் ஆகும். 
அவ்வாறு உணரும் நேரம் அலைபேசி உபயோகம் பல் துலக்குதலைக் காட்டிலும் இன்றியமையாத ஒரு இடத்தை எட்டியிருக்கும். 







Wednesday, 4 February 2015

மெமோ



அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு டிஏ அரியர்ஸ், இன்க்ரிமென்ட், ஈட்டிய விடுப்பு மாதிரி பழக்கப்பட்ட ஒரு வார்த்தை 'மெமோ'. பழக்கப்படாத வார்த்தை தமிழில் 'குறிப்பாணை'. 
அடுத்தடுத்து தொடர்ச்சியாக மெமோ வாங்கியதாலோ என்னவோ பணியிடத்தில் நான் ஒரு கைப்புள்ளை. உடனே கைப்புள்ளைக்கே இந்த கதின்னா என்று யாரும் யோசிக்கப்படாது. கட்டதுரை யாருன்னும் கேட்கப்படாது. 

ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு முதல் முறை மெமோ வாங்கிய போது முதல் வருடம்  பிசியாலஜியில் முதல் கிளாஸ் டெஸ்ட்டில் ஃபெயில் ஆன போது கிடைத்த ஷாக் மறுபடியும் கிடைத்தது. இருக்காதா பின்ன? +2 வரை துக்ளியூண்டு புத்தகங்களை படித்து, உரு போட்டு ஜில்லாவிலேயே அதிக மதிப்பெண் பெற்று, இதுவரை பள்ளி வாழ்க்கையில் ஃபெயில் என்பதையே அறியாமல் இருந்துவிட்டு காலேஜ் வந்து பெயிலானால்? ஆங், அதே ஷாக் தான். தலைகாணி அளவு பெரிய புத்தகத்தில் படிக்கத் தெரியாமல் கப் வாங்கியது மறக்கவே முடியாது வாழ்நாள் முழுதும். அப்புறம் அதுவே பழகி விட்டது.ஃபெயில் ஆக அல்ல. மெமோ வாங்கினால் அலட்டிக்கொள்ளாமல் பதில் எழுத. 

முதல் முறை மெமோ வாங்கிய போது கிடைத்த 'ஷாக் வேல்யூ'அடுத்தடுத்து வாங்கும் போது நீர்த்துப் போய் மெமோவுக்கான மதிப்பு குறைந்துவிடுவதென்னவோ உண்மை. அதே சமயம் மெமோ வாங்கி விட்டால் நம் குலப்பெருமையே களங்கப்பட்டு விட்டதாக நம்மை சுற்றி உள்ளவர் போடும் படங்களை தான் சகித்துக் கொள்ளவே முடியாது. உங்க பொண்ணு யார் கூடவோ ஓடி போயிடிச்சாமே என்ற ரீதியில் தொடரும் மெமோ பற்றிய போலியான விசாரிப்புகளை கடக்கவே அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும். 

நான் வான்டடாக ஜீப்பில் ஏறிய மற்றொரு விஷயம் கோர்ட் கேஸ். கோர்ட்டில் கிடைத்த ஆப்பு பத்தாது என்று காலேஜிலும் கிடைத்தது பம்பர் பரிசு. 
வழக்கு தோற்ற கையோடு கேஸ் போட்ட மூவருக்கும் மெமோ கையில் திணிக்கப்பட்டது உச்சபட்ச கொடுமை. அந்த கேஸ் தோற்றதன் விளைவுகளை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருப்பது தான் ஆறாத சோகம்.

ஆனால் மெமோ வாங்கியதில் புரிந்து கொண்ட ஒரு அரிய உண்மை என்னவென்றால் நாம் கஷ்டப்படுகிறோமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், தனக்கு ஆதாயம் இல்லையெனில்  நியாயத்துக்காக கூட உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதே. சிவப்பாக இருந்தாலே ரத்தம் தான், தக்காளி சட்னி அல்ல என நம்பும் என்னை போன்ற ஆட்களுக்கு ,சுற்றியிருந்த பலருடைய நீலச்சாயம் வெளுத்தது இந்த மெமோ விஷயத்தில் தான். 

மேலும் நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என்று நாட்டாமை சரத்குமார், விஜய்குமார் ரேஞ்சுக்கு கையில் சொம்போடு அலைந்தால் உண்மையிலேயே நாம் வாங்கும் மெமோக்களுக்கு என  தனியாக ஒரு ஃபைலை சுமந்தபடி மரத்தடிக்கே வர வாய்ப்பிருக்கிறது.அதற்காக நேர்மையாக இருக்கவே கூடாது என்று சொல்ல வரவில்லை.ஹமாம் சோப்பு போட்டு குளித்தால்  மட்டும் போதாது, அரசுப்பணியில் சமயோஜிதமாக நடந்துக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். 

அரசுத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் மெமோ என்ற விஷயத்தை ஒரு மானக்கேடானா விஷயமாகவே கருதுகின்றனர், என் பெற்றோர் உட்பட . 
இருவருமே அரசு பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள்.நான் வாங்கிய மெமோக்களினால் பெரிதும் வருந்தியது என் பெற்றோர் மட்டுமே. ஏனோ எனக்கு மெமோவுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுத்து வருந்த முடிந்தில்லை. 

உண்மையிலேயே தவறு இழைத்து, அரசு விதிமுறைகளை மீறுவதற்காக தரப்படும் மெமோக்கள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவை. அவற்றுக்கான சரியான விளக்கத்தை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது மெமோ வாங்கியவரின் கடமை. 

அரசுப் பணியில இதெல்லாம் சாதாரணமம்பா என்ற 'டேக் இட் ஈஸி ஆட்டிடியூட்' டிஎன்பிஎஸ்சி பரீட்சை எழுதும் போதே வந்துவிட்டால் நல்லது. அதை விட நல்லது அரசு வேலையாக இருந்தாலும் நேரமும் நேர்மையும் தவறாமல் இருப்பது. 

டிஸ்கி: 
இந்த பதிவுக்காக மண்டையை உடைத்துக் கொண்டு அரசு குறிப்பாணையை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள்  என்று அவசியமில்லாமல் யாரும் பொங்கி பொங்கல் வைத்துவிடாதீர்கள். இது ஒரு ஜாலி பதிவு. அதற்கேற்ற முக்கியத்துவம் அளித்தாலே போதுமானது. 




Friday, 16 January 2015

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

சட்டை போடாமல் மூன்று பேர்.அதில் ஒருவன் வேஷ்டி, ஒருவன் சின்ன ஜட்டி, இன்னொருவன் கொஞ்சம் பெரிதாக கட்டிய கோவணம். பாவாடை சட்டையோடு ஒரு பெண். குல்லாய் போட்டுக்கொண்டு இரு சிறுவர்கள். இவர்களோடு சேர்ந்து ஒரு குரங்கு.

 எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் இந்த ஏழு பேர் அடங்கிய கும்பல் சேர்ந்தது தான் அந்த ஊர் பள்ளியில் ஒரு வகுப்பு! அதற்கு ஒரு வாத்தியார் குரங்குக்கும் சேர்த்து பாடம் வேறு எடுப்பார்.  

எகிப்து மம்மியாகட்டும், சீனாவின் புத்தர் சிலையாகட்டும், பக்கத்து ஊரில் காணாமல் போன ஒரு மாணிக்க கல்லாகட்டும், சொந்த ஊரில் மாயமாய் மறைந்த பாதி தின்ற லட்டாகட்டும் ... எதுவாக இருந்தாலும் அந்த ஊரின் குற்ற புலனாய்வுதுறை, சிபிசிஐடி, சிஐஏ எல்லாமே இந்த ஏழு பேர் அடங்கிய குழு தான். 

நடுநடுவே ஒரு சயின்டிஸ்டோடு சேர்ந்து ரோபொடிக்ஸ், பறக்கும் பந்து, கதிர்வீச்சு  போன்ற கண்டுபிடிப்புகளில் சயின்டிஸ்டுக்கே சொல்லி தருவார்கள். 

ஊரில் எந்த  போட்டி நடந்தாலுமே இந்த ஏழு பேருமே கலந்து கொள்வார்கள், அவர்களில் ஒருவர் கட்டாய வின்னர். 

இது போக ரேக்ளா ரேஸ்,பனிச்சறுக்கு,  கேரளாவில் நடைபெறும் களரி, ஜப்பானில் நடக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகள், உலகளவில் நடக்கும் கிராண்ட் ப்ரீ என்று வெளுத்துக்கட்டும் இந்த குழு. கவனிக்க, எல்லாவற்றிலும் குரங்கும் உண்டு. 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குதிரை வண்டி, மாட்டு வண்டி, சில சமயம் பறக்கும் கம்பளம் என ஏதோ ஒன்றில் மொத்த கும்பலும் பயணிக்கும் .  திடீரென க்ளைடர், ட்ரெயின், நீர்மூழ்கி கப்பல்கள் என மார்டன் டே ட்ரான்ஸ்போர்ட்டை அவர்களே அனாயாசமாக ஓட்டவும் செய்வார்கள். 
 
இவர்கள் எது கேட்டாலும் செய்யக்கூடிய ஒரு ராஜா. நாட்டில் எந்த ப்ரச்சினை வந்தாலும் ராஜா இவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஒரு துரும்பை கூட அசைப்பதில்லை. கதை தமிழ் நாட்டில் நடப்பது போல தோன்றுவது இந்த ராஜாவை பார்க்கும் போது மட்டும்தான் தான். மற்றபடி மேற்கூறிய அனைத்தும் நடப்பது வடநாட்டில் ஒரு கிராமத்தில். 

இதெல்லாம் என்ன கொடுமையோ. சரி, இருந்துட்டு போகட்டும். 

நேக்கு ஒரே ஒரு டவுட்டு தான். 

 இந்த கதைகளும் சம்பவங்களும் எந்த கால கட்டத்தில் நடக்கின்றன? முன்னுக்குப் பின் முரணாக ஏகத்துக்கு பூ சுற்றும் இந்த தொடர் சிலபல வருடங்களாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதர்சம்! பிள்ளைகளுக்கு இதில் சந்தேகம் வர வாய்ப்பில்லை. காலங்கள் புரிய தொடங்கும் போது பென் டென்னுக்கோ டீனேஜ் ம்யூட்டன்ட் நின்ஜா டர்ட்லுக்கோ மாறி இருக்கும் கவனம். உடன் அமர்ந்து பார்க்கும் நமக்கு தான் மண்ட காயீ!! 

இதில் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கான தமிழ் சேனல்களில் இது போன்ற தூக்கிவைத்து கொண்டாடும்படியான ஹீரோ கதாபாத்திரம் எதுவுமே இல்லை.அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், ராணி காமிக்ஸ் இவற்றில் நாமெல்லாம் படித்து ரசித்தளவு கூட தமிழ் சேனல்களில் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் இல்லை. சுட்டி டிவியின் டப்பிங் செய்யப்பட்டும், சுடப்பட்டும்  ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் படு மொக்கை. 

அது ஏன் குழந்தைகளுக்கான ஹீரோக்கள் வடக்கிலோ வெளிநாட்டிலோ தான் உருவாகிறார்கள்? சோட்டாபீம்,ஹிஷிமோரோ,கிட்டரெட்சு,
டோரேமான்,கிஸ்னா, ரோல் நம்பர் 21, டோரா, டியகோ, ஷக்திமான்,ஸ்பைடர்மேன், பவர் ரேஞ்சர்ஸ், சூப்பர்மேன்,  லிட்டில் கிருஷ்ணா, பால் கணேஷ், ஜாக்கி சான் என எல்லாமே இரவல் ஹீரோக்கள் தான். தமிழ் திரையுலகில் சொந்தமாக தமிழ் பேசும் ஹீரோயினுக்கு பஞ்சம் மாதிரி குழந்தைகளுக்கான லோக்கல் ஹீரோக்கள் பஞ்சம்.

'ஓடு ஓடு  அது நம்மை நோக்கி தான் வருது'  போன்ற டப்பிங் தமிழுக்கு நமது குழந்தைகள் கைகொட்டி சிரிப்பதைப் பார்த்து திருப்தியடைந்து விடுகிறோமோ?! 
யாராவது நல்ல தமிழ் பேசும் சூப்பர் ஹீரோவை உருவாக்கினால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் என்ன, நாமளே 'டாமில் ஈஸ் யுவர் மதர் டங்' என்று பிள்ளைக்கு சொல்லும் நிலையில் தானே இருக்கிறோம்.
 வாட் டு டூ?? 

Sunday, 4 January 2015

ஆட்டோ


ஆட்டோ ஒன்று செய்ய வேண்டும். ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை வைத்து. 

இது ஒரு எல்கேஜி ஸ்கூல் பையனுக்கான அஸைன்மென்ட்.  இதுப் போன்றதொரு வேலையை எனக்கு காலேஜ் படிக்கும் போது கொடுத்திருந்தால் கூட என்னால் செய்திருக்க முடியாது. கைவினைப் பொருட்கள் செய்வதோ, ஏதாவது மாடல் செய்வதோ, வரைவதோ எதுவுமே வராது. ஒரு வட்டத்தை கூட வட்டமாக  போட வராது. நான் பிள்ளைக்கு என்னத்த சொல்லித் தர போகிறேன்? 

எந்த துறையாக இருந்தாலும் நமக்கு வழிக்காட்டிகளுக்கா பஞ்சம்!அறிந்த தெரிந்த நண்பர்களிடம் ஆட்டோ மாடல் யார் செய்து தருவார்கள் என்று விசாரித்து சில நம்பர்களை பிடித்தேன். யாராவது சைட் பிஸினெஸாக இது போல ப்ராஜெக்ட்டுகள் செய்ய கிடைப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.மௌண்ட் ரோட்டில் ஸ்கூல்/ சயின்ஸ் ப்ராஜெக்ட்ஸ் செய்வதர்க்கென்றே ஒரு தனி கடையே இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. வெப்சைட், ஈமெயில் சகிதம் நிறைய பேர் வேலை செய்யும் ஒரு கடை! 
ஃபேஸ்புக் ஐடி போட்டு 'லைக் அஸ் ஆன் ஃபேஸ்புக்' என்று நேற்று ஒரு மெசேஜ் வேறு! 

அந்த கடைக்கு ஃபோன் பண்ணியதில் ஒரு முதியவர் லைனில் சிக்கினார். 

'ஆட்டோ மாடல் செய்து தர முடியுங்களா?'

'செய்யலாம் மேடம்'

'குச்சி, துணி,வைக்கோல், களிமண் மாதிரி ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருள் வச்சு செய்யனும்'

'ஓ செய்யலாமே. எவ்வளோ பெருசா வேணும்?' 

'ரெண்டு உள்ளஙகையகலம் இருந்தா போதுங்க‌'

'சரி, பேட்டரி போடற மாதிரியா இல்ல கரெண்ட்ல ஓடற மாதிரியா'

'இல்லைங்க ஆட்டோ ஒடற மாதிரி வேணாம்' (மைண்ட் வாய்ஸ் - களிமண்ணில் செய்யும் ஆட்டோ ஓடுமா??) 

'எந்த க்ளாசுக்கு?' 

'எல்கேஜி'

'ஓ அப்பிடியா. ஆனா ஆட்டோ ஓடற மாதிரி தான செய்யணும்? '

'இல்லைங்க , சின்ன பசங்க இல்ல, அதனால மாடல் மாதிரி இருந்தா போதும்'

'ஆனா ஆட்டோன்னா ஓடணுமே? '

அய்யோ இவர் ஐஐடி ப்ராஜெக்ட் லெவல்ல பேசறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சி ஆனது.விட்டா சோலார் எனர்ஜி , மூலிகை பெட்ரோல் என்று அடுத்து ஆரம்பிப்பார்  போலிருந்தது. 

'இல்லைங்க ஆட்டோ ஸ்ட்ரைக்னு நெனச்சிக்கோங்களேன்,ஓடாத ஆட்டோ தான் வேணும்'.

'கஷ்டம் மேடம், நாங்க அப்படி சிம்பிள் ப்ராஜெக்டஸ் எடுக்கறதில்லீங்க. நீங்க இந்த கடைல ட்ரை பண்ணி பாருங்களேன்' என்று வேறு இரண்டு நம்பர்களை கொடுத்தார். 

சரி இந்த ஸ்கூல் ப்ராஜெக்ட் விஷயம் ஆட்டோவோடு நிற்கப்போகிறதா என்ன. ஃப்யூச்சர்ல  ஏரோப்ளேன் பறக்க வைக்கிற ப்ராஜெக்டுக்கு இவரை யூஸ் பண்ணிக்கலாம் என்று நம்பரை சேவ் செய்து விட்டு,  அவர் கொடுத்த வேறு நம்பர்களை முயன்றால் எல்லோருமே 'சயின்ஸ டே'வுக்கு ப்ராஜெக்ட் செய்யும் லெவலிலேயே பேசினார்கள். கடைசியாக உடன் பணிபுரியும் ஒருவரின் உதவியால் ஓடாத பொம்மை ஆட்டோ செய்ய ஒருவரை பிடித்தாயிற்று. 

இதற்கு மேல் வருவது கொஞ்சம் புலம்பல். முகநூலில் இதை பாலிஷ்டாக அறச்சீற்றம் என்று சொல்வதுண்டு. யு-டர்ன் எடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளவும். 

எனக்கு சில விஷயங்கள் புரியவேயில்லை. 
ஒரு எல்கேஜி பிள்ளைக்கு எதை புரிய வைக்க இந்த மாடல் என்று ஆராய்ந்து பார்த்தால், ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளவதற்காக என்று பதில் வருகிறது பள்ளியிலிருந்து. என்ன கொடுமை இது? இதற்கு ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை கொண்டு வர சொன்னால் பத்தாதா? இல்லை பிள்ளையின் கைவினைப் பொருள் செய்யும் திறமையை (ஆர்ட் & க்ராஃட்) ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதை பள்ளியில் தானே பயிற்றுவிக்க வேண்டும்? 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகள் 'பேரண்ட் சைலட் இன்ட்ராக்ஷன்' மேம்படுத்த தான் என்றால், என்னைப் போன்ற பெற்றோர் என்ன செய்வார்கள்? எல்லா பெற்றோருக்குமே க்ராஃப்ட் வொர்க்கும் ஆர்ட் வொர்க்கும் நன்றாக வருமா என்ன? பெற்றோருக்கே இவ்வாறான வேலைகள் நன்றாக செய்ய வரும் பட்சத்தில்  பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்தலாம். யாரோ ஒருவரிடம் கொடுத்து செய்யப்படும் ப்ராஜெக்டில் பிள்ளை என்ன கற்றுக்கொள்ள முடியும்? அப்படியனால் இந்த ப்ராஜெக்ட் யாருக்கான ஹோம்வொர்க்? 

நாம் படிக்கும் காலத்தில் வீட்டுப்பாடம் எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கும். இது போல ஆட்டோ , ஹெலிகாப்டர் எல்லாம் எதிலும், எந்த காலத்திலும் யாரும் செய்ய‌ சொன்னதில்லை. மிஞ்சிப் போனால் தையல் க்ளாஸுக்கு பாவாடை தைக்க துணியும் கலர் நூலும் வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் பிள்ளைகளை தையல் மிஷினே வாங்கி வர சொன்னாலும் ஆச்சர்யப்பட கூடாது. 

பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டைப் போடுபவர் என்று கூட அறியப்படும் ஒருவர் இருக்கிறார் என்பது இந்த ப்ராஜெக்ட் விஷயமாக அலையும் போது தான் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தை விட , தன் பிள்ளைகளுக்கு அட்டைப் போட்டுத்தர  கூட நேரம் கிடைக்காத பிஸியான ஒபாமா, மோடிக்கள் நம் ஊரில் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சி! 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகளினால் பெற்றோருக்கு வீண் செலவு என்ற குறைபாடு  இருந்தாலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் திறமையுள்ள நிறைய பேருக்கு  கிடைத்துள்ள வேலை வாய்ப்பு. 
இது ஒரு நல்ல பயனுள்ள பிசினெஸாகவே மாறியிருக்கிறது.

 நம் ஊரில் கல்வியே பிசினெஸ் தானே? 










Thursday, 1 January 2015

மூணாவது சனிக்கிழமை


புரட்டாசி மாதம் மூணாவது சனிக்கிழமை வகை வகையாக சமைத்து , படையல் போட்டு வைத்து , பூஜை புனஸ்காரங்களை எல்லாம் சீராக முடித்து, கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்த சாப்பாட்டை  மயங்கி விழுவதற்குள் ஒரு வழியாக கடைசியாக வாயில் வைப்பார்கள் வீட்டு பெருசுகள். 

அதுப்போல, காலேஜில் ஒரு கருத்தரங்கு. மாதம் ஒரு முறை நடக்கும் சடங்கு இது. வார  நாட்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாவது சனிக்கிழமையும் அதுவுமாக மதிய உணவு  வேளையின் போது ஆரம்பிக்கும் இந்த கருத்தரங்கு. 

பெரும்பாலான உத்தியோகஸ்தர்களுக்கு சனி, ஞாயிறு இரு நாட்களுமே லீவ். வெள்ளிக்கிழமை சாயங்காலமே வீக்கெண்ட்  உற்சவம் காண்பவர்கள் சனிக்கிழமை வேலை செய்வதன் கடி உணர வாய்ப்பில்லை. மாதம் ஒரு முறை தான் கருத்தரங்கு என்றாலும் சனிக்கிழமை அன்று வேலை நேரம் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக வேலையிடத்தில் இருக்க வேண்டி இருந்தாலும் , பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு நிலைகொள்ளாமல் தவிக்கும் அம்மாக்கள் லிஸ்டில் நானும் சேர்த்தி. அப்பாக்களுமே தவிப்பார்கள், ஆனால் ஏன் என்று புரிந்ததில்லை. 

நான் முதுகலைப் படிப்பு முடிந்து அதே கல்லூரியில் பணியில் சேர்ந்த புதிதில் அறிவுப்பசியும் ஆர்வக்கோளாறும் சண்டைப்போட்டு என்னை வலுக்கட்டாயமாக இந்த கருத்தருங்குக்குள்    தள்ளிவிட்டுக்கொண்டிருந்தன.  நாட்கள்  செல்ல செல்ல வர வர மாமியார்  என்னவோ போல ஆனாளாம் கதையாக  அறிவும் ஆர்வமும் போய் பசியும் கோளாறும்  மட்டுமே  என்னை கருத்தரங்குக்குள் இழுத்துக் கொண்டிருந்தன. பசி  நேரமாதலால் அவர்கள் பொறையை  கொடுத்தாலும் பாய்ந்து பிடுங்கித் தின்றுக் கொண்டிருந்தேன். சில பல வருடங்களுக்குப் பிறகு அவ்வளவு சிரமப்பட்டு வலுக்கட்டாயமாக என்னால் என் அறிவை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் வேற வழி? 

தொடர்ந்து இரண்டு மூன்று  கருத்தரங்குகளுக்கு  வரவில்லை  என்றால் மெமோ வரும். என்றுமே கருத்தரங்குக்கு வராதவர்களுக்கு வராது. நடுவில் டிமிக்கி கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சன்மானம். இது வரை இந்த கருத்தரங்குக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக எல்லாம் நான் மெமோ வாங்கியதில்லை. காண்டீனில் போட்ட வாழைக்காய் பஜ்ஜியில் சோடா உப்பு கொஞ்சம் தூக்கலாமே போன்ற மிகவும் சீரியசான விஷயங்களுக்கு தான் மெமோ வாங்கியுள்ளேன். 

இந்த கருத்தரங்கு மேட்டரை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த புத்தாண்டிலிருந்து மாதாந்திர கருத்தரங்கு புதன் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. கிட்டதட்ட நூறு கருத்தரங்குகளாக இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தோல்வியடைந்து(!) , அப்படியே கிடப்பில் போடப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் கருத்தரங்கு வைக்காத வரை சந்தோஷம் என்று சலிப்போடு சடங்கு செய்துக்கொண்டிருந்த பொழுது இந்த கருத்தரங்கு நாள் மாற்றம் குறித்த சந்தோஷம் உண்மையிலேயே புத்தாண்டு பம்பர்.

 ஒரு பாஸிட்டிவ் நோட்டோடு வருடத்தை ஆரம்பிப்பது நல்ல விஷயம் தானே? வேலையிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு ஓடி வருவது எப்படி பாஸிட்டிவான விஷயமாகும் என்று சனிக்கிழமை காலை வீட்டில் சூப் சாப்பிட்டுக்கொண்டே கேள்வி  கேட்பவர்களுக்கு புத்தாண்டில் கொடுமையான சாபம் விடப்படும் . 

இனிமேல்  அந்த மூன்றாவது சனிக்கிழமை கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரம் வீடு வந்து சேரலாம் என்ற திருப்தியோடு இந்த வருடத்தை ஆரம்பிக்கிறேன் .