சட்டை போடாமல் மூன்று பேர்.அதில் ஒருவன் வேஷ்டி, ஒருவன் சின்ன ஜட்டி, இன்னொருவன் கொஞ்சம் பெரிதாக கட்டிய கோவணம். பாவாடை சட்டையோடு ஒரு பெண். குல்லாய் போட்டுக்கொண்டு இரு சிறுவர்கள். இவர்களோடு சேர்ந்து ஒரு குரங்கு.
எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் இந்த ஏழு பேர் அடங்கிய கும்பல் சேர்ந்தது தான் அந்த ஊர் பள்ளியில் ஒரு வகுப்பு! அதற்கு ஒரு வாத்தியார் குரங்குக்கும் சேர்த்து பாடம் வேறு எடுப்பார்.
எகிப்து மம்மியாகட்டும், சீனாவின் புத்தர் சிலையாகட்டும், பக்கத்து ஊரில் காணாமல் போன ஒரு மாணிக்க கல்லாகட்டும், சொந்த ஊரில் மாயமாய் மறைந்த பாதி தின்ற லட்டாகட்டும் ... எதுவாக இருந்தாலும் அந்த ஊரின் குற்ற புலனாய்வுதுறை, சிபிசிஐடி, சிஐஏ எல்லாமே இந்த ஏழு பேர் அடங்கிய குழு தான்.
நடுநடுவே ஒரு சயின்டிஸ்டோடு சேர்ந்து ரோபொடிக்ஸ், பறக்கும் பந்து, கதிர்வீச்சு போன்ற கண்டுபிடிப்புகளில் சயின்டிஸ்டுக்கே சொல்லி தருவார்கள்.
ஊரில் எந்த போட்டி நடந்தாலுமே இந்த ஏழு பேருமே கலந்து கொள்வார்கள், அவர்களில் ஒருவர் கட்டாய வின்னர்.
இது போக ரேக்ளா ரேஸ்,பனிச்சறுக்கு, கேரளாவில் நடைபெறும் களரி, ஜப்பானில் நடக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகள், உலகளவில் நடக்கும் கிராண்ட் ப்ரீ என்று வெளுத்துக்கட்டும் இந்த குழு. கவனிக்க, எல்லாவற்றிலும் குரங்கும் உண்டு.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குதிரை வண்டி, மாட்டு வண்டி, சில சமயம் பறக்கும் கம்பளம் என ஏதோ ஒன்றில் மொத்த கும்பலும் பயணிக்கும் . திடீரென க்ளைடர், ட்ரெயின், நீர்மூழ்கி கப்பல்கள் என மார்டன் டே ட்ரான்ஸ்போர்ட்டை அவர்களே அனாயாசமாக ஓட்டவும் செய்வார்கள்.
இவர்கள் எது கேட்டாலும் செய்யக்கூடிய ஒரு ராஜா. நாட்டில் எந்த ப்ரச்சினை வந்தாலும் ராஜா இவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஒரு துரும்பை கூட அசைப்பதில்லை. கதை தமிழ் நாட்டில் நடப்பது போல தோன்றுவது இந்த ராஜாவை பார்க்கும் போது மட்டும்தான் தான். மற்றபடி மேற்கூறிய அனைத்தும் நடப்பது வடநாட்டில் ஒரு கிராமத்தில்.
இதெல்லாம் என்ன கொடுமையோ. சரி, இருந்துட்டு போகட்டும்.
நேக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.
இந்த கதைகளும் சம்பவங்களும் எந்த கால கட்டத்தில் நடக்கின்றன? முன்னுக்குப் பின் முரணாக ஏகத்துக்கு பூ சுற்றும் இந்த தொடர் சிலபல வருடங்களாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதர்சம்! பிள்ளைகளுக்கு இதில் சந்தேகம் வர வாய்ப்பில்லை. காலங்கள் புரிய தொடங்கும் போது பென் டென்னுக்கோ டீனேஜ் ம்யூட்டன்ட் நின்ஜா டர்ட்லுக்கோ மாறி இருக்கும் கவனம். உடன் அமர்ந்து பார்க்கும் நமக்கு தான் மண்ட காயீ!!
இதில் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கான தமிழ் சேனல்களில் இது போன்ற தூக்கிவைத்து கொண்டாடும்படியான ஹீரோ கதாபாத்திரம் எதுவுமே இல்லை.அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், ராணி காமிக்ஸ் இவற்றில் நாமெல்லாம் படித்து ரசித்தளவு கூட தமிழ் சேனல்களில் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் இல்லை. சுட்டி டிவியின் டப்பிங் செய்யப்பட்டும், சுடப்பட்டும் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் படு மொக்கை.
அது ஏன் குழந்தைகளுக்கான ஹீரோக்கள் வடக்கிலோ வெளிநாட்டிலோ தான் உருவாகிறார்கள்? சோட்டாபீம்,ஹிஷிமோரோ,கிட்டரெட்சு,
டோரேமான்,கிஸ்னா, ரோல் நம்பர் 21, டோரா, டியகோ, ஷக்திமான்,ஸ்பைடர்மேன், பவர் ரேஞ்சர்ஸ், சூப்பர்மேன், லிட்டில் கிருஷ்ணா, பால் கணேஷ், ஜாக்கி சான் என எல்லாமே இரவல் ஹீரோக்கள் தான். தமிழ் திரையுலகில் சொந்தமாக தமிழ் பேசும் ஹீரோயினுக்கு பஞ்சம் மாதிரி குழந்தைகளுக்கான லோக்கல் ஹீரோக்கள் பஞ்சம்.
'ஓடு ஓடு அது நம்மை நோக்கி தான் வருது' போன்ற டப்பிங் தமிழுக்கு நமது குழந்தைகள் கைகொட்டி சிரிப்பதைப் பார்த்து திருப்தியடைந்து விடுகிறோமோ?!
யாராவது நல்ல தமிழ் பேசும் சூப்பர் ஹீரோவை உருவாக்கினால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் என்ன, நாமளே 'டாமில் ஈஸ் யுவர் மதர் டங்' என்று பிள்ளைக்கு சொல்லும் நிலையில் தானே இருக்கிறோம்.
வாட் டு டூ??