ஒரு வாரத்தில் மேலதிகாரி அவருடைய லீவு முடிந்து வந்து கையெழுத்து போட்டுவிட்டார். இந்த படிவத்தையும் கவரிங் லெட்டரையும் ஒரு மெசஞ்சர் மூலம் பிஏஒ வில் சேர்க்க வேண்டும் . லீவ் லிஸ்டில் அடுத்த ஆளாக எங்க ஆபிஸ் மெசஞ்சர் லீவு!
லீவ் முடித்து வந்த மெசஞ்சரை 'ரிஃப்ரெஷ்' செய்து தபாலை கொடுத்தனுப்பி பதிலுக்கு காத்திருந்தேன். சந்நிதியிலிருந்து 'இவருக்கு சம்பளம் போடலாம்' என்று பதில் வர வேண்டும். நம்ம தென்மேற்கு பருவமழை மாதிரியே இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் நடுராத்திரி வரும் என்று நான்கு நாட்களாக ஏமாற்றி கொண்டே இருந்தது பதில் கடிதம்.
பதில் அனுப்பாததற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஓரளவு இந்த 'லீவ் ரிதத்துக்கு' நான் செட்டாகி, சனி பகவானோடு சேர்ந்து நிறைய கஷ்டமான ஸ்டெப்ஸ் எல்லாம் பழகி இருந்ததால் பதில் வராத காரணத்தை சுலபமாக அனுமானிக்க முடிந்தது. வேற என்ன அதே தான். சம்பளம் போடும் செக்ஷன் ஆசாமி லீவு!
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பாடலை இழுத்து இழுத்து நான்காவது நாளாக பாடி சலித்த பின்னர் 'சம்பளம் போடலாஞ்சாமியோவ்' என்று ஒரு சுபயோக சுபதினத்தில் சந்நிதியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தது. அடுத்து சம்பள பில் தயார் செய்து அனுப்ப வேண்டும்.
இந்த சம்பள பில் என்பது பதினைந்து இடத்தில் ஆட்டோகிராஃப் போட வேண்டிய ஒரு ஆவணம். 'say no to paper ,save trees' என்று துக்ளியூண்டு ஏடிஎம் பேப்பருக்கு கூட ' நோ' சொல்லும் கால கட்டத்தில் இங்கே மாதா மாதம் ஷேஷசாயி பேப்பர் மில் ஓனர் வீட்டு கல்யாணம் போல கம்யூட்டர் ப்ரின்ட் அவுட் என்ற பெயரில் பக்கம் பக்கமாக சம்பள பேப்பருக்கு செலவிடப்படுகிறது. பிஏஒ வுக்கு ஒரு காப்பி, நம்ம ஆபீஸுக்கு ஒரு காப்பி. ஆக மொத்தம் முப்பது பக்கம். முப்பது பேப்பரிலும் ஆட்டோகிராஃப். சேரன் கூட இத்தனை ஆட்டோகிராஃப் போட்டிருக்க மாட்டார். இது போதாதென்று ஒவ்வொரு மாதமும் பதினைந்து பக்க ஆட்டோகிராஃபோடு ஒரு சாஃட் காப்பியும் (சிடி) சேர்த்து பிஏஒ அனுப்ப வேண்டும்.
காத்திருந்து காத்திருந்து பாடல் பாடிக் கொண்டே சம்பள பில்லை தயார் செய்ய சொல்லி ரெடியாக வைத்திருந்தேன். சாஃப்ட் காப்பி மட்டும் அலுவலகத்தில் வேறு ஒருவரிடம் இருந்தது. ஆனால் ரிதம் மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற கொள்கைப்பற்றோடு இருந்த சாப்ஃட் காப்பி வைத்திருந்த அலுவலர் அவர் பங்குக்கு லீவு!
நான் சேரனிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக சேதுவாக மாறிக்கொண்டிருந்தேன். சாஃப்ட் காப்பி ஆசாமி வராதபட்சத்தில் சம்பள பில்லோடு இந்த முறை கபாலி ஆடியோ சிடி வைத்து அனுப்பிவிடும் முடிவிலிருந்தேன். ஆனால் இரண்டு நாளில் வந்து விட்டார். பெரும்பாலும் நாளை இந்த பில் பிஏஒ வில் சமர்ப்பிக்கப்படலாம் சாஃப்ட் காப்பியுடன். இருபத்தி மூன்று நாட்கள் ஆகியிருக்கிறது நான் எடுத்த இருபது நாள் ஈட்டிய விடுப்புக்கான நற்பலன்களை அறுவடை செய்ய. ஆனால் வாசக் கதவ ராசலச்சுமி தட்ட இன்னும் கூட ஒரு வாரம் ஆகும்.
எங்கள் ஆபீஸில் காது சரிவர கேட்காத ஒரு அஸிஸ்டென்ட் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தம்மா என்னை பார்த்தவுடன் குட்மார்னிங்க்கு பதில் 'அவர் லீவும்மா' என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். 'வெற்றிக்கொடி கட்டு' பாடல் ரேஞ்சுக்கு வேகம் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் என்னுடைய ஆபிஸ் வேலைகள் அனைத்தும் 'சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் ' பிஜிஎம்முக்கு மட்டுமே செட்டாகிப் போனது தான் சோகம்.
அலுவலகம் சார்ந்த அனைவரும் அவரவர் விடுமுறையை என்னைப் போலவே தன் சொந்த காரணங்களுக்காக தான் எடுத்திருந்தனர். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் என்னுடைய பணி சம்பந்தப்பட்ட கோப்புகள் எந்த டேபிளுக்கு போகிறதோ அவர் கட்டாய விடுமுறையாக குறைந்தது இரண்டு நாட்களாவது காணாமல் போய் திரும்பி வந்த பிறகே ஒவ்வொரு ஸ்டேஜும் வேலை நடந்தது.
ப்ரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசு விதிமுறைகளை இன்னமும் ஜவ்வுமிட்டாய் மாதிரி பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். நல்ல விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் பரவாயில்லை.என் புருசனும் கச்சேரிக்கு போறான் கணக்காக எந்த ரூலா இருந்தாலும், அதனால எந்த பிரயோஜனமும் இல்லைன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு அடாவடியா ஃபாலோ பண்ற நம்ம ஆளுங்களோட கடமையுணர்வுக்கு ஈடு இணையே கிடையாது. நான் விடுப்பு எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் விடுப்பு முடிந்து வந்து நானே செய்ய வேண்டியிருந்தது இதற்கு ஒரு சின்ன உதாரணம்.
கொசுறு :
எல்லோருடைய ஜூன் மாத சம்பள பில்லோடு சேர்த்து என்னுடைய மே மாத சம்பள பில் 'pass' ஆக வேண்டும். அது ஓகேயானால் தான் எனக்கு ஜூன் மாத சம்பளம் போட முடியுமாம் . ஜூன் சம்பளம் ஜூலைக்குள் கிடைக்குமா பார்ப்போம். அதற்குள் 'ரிசர்வ் பேங்க் கவர்னர் லீவுங்க உங்க பில் பாஸ் ஆகல' என்று சேதி வராமல் இருக்க வேண்டும் எண்ட குருவாயூரப்பா!