Sunday 26 June 2016

ஈட்டிய விடுப்பும் ஈட்டாத சம்பளமும்- 1/2


அரசு அலுவலகங்களில் ஈட்டிய விடுப்பு எடுக்கவேண்டுமானால் 15  நாட்களுக்கு முன்பே கண்மனி அன்போட என்று ஆரம்பித்து லெட்டர் , மடல் கடுதாசி கடிதம் என்று ஏதோ ஒரு பெயரில் வஸ்து ஒன்றை
சமர்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். யானும் அவ்வண்ணமே ஒன்றை சமர்ப்பித்து,  லீவ் எடுக்க வேண்டிய நாள் வரை அபிராமி ராமி அபிராபி என்று அனுமதி கடிதம் வேண்டி காத்திருந்து, வராமல் போகவே ( பெரும்பாலும் யாருக்கும்  வராது) லீவில் அப்ஸ்காண்ட் ஆகிவிட்டேன்.

இருபது நாள் லீவ் முடிந்து லீவில் எடுத்த அவதாரங்களை களைந்து வெற்றிகரமாக மீண்டும்  வேலையில் சேர்ந்தாகிவிட்டது. அரசுப் பணியில் சில பல வருடங்கள் கூட்டி பெருக்கினால், குப்பை கொட்டுவதற்கு   'செல்ஃப் ட்ராயிங் ஆபீஸர்' என்ற  சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும்  'உயர் பதவியில்' தூக்கி அமர்த்தப்படுவோம்.
அதாவது தன்னுடைய சம்பள பில்லை(  pay bill)  தானே மாதா மாதம் தயாரித்து பிஏஒ எனப்படும் pay and accounts officeக்கு(PAO) அனுப்ப வேண்டும். இந்த நேர்த்திக்கடனை மாதா மாதம் செய்தால் தான் சம்பளம். வேலைக்கு தான் வர்றோமே ஆபீஸ்ல சம்பளம் போடுவாங்க என்று தெனாவட்டாக இருந்தால் வீட்டில் சோறு பொங்க முடியாது.

இந்த சொ.செ.சூ பதவியில் மருத்துவ விடுப்போ ஈட்டிய விடுப்போ எடுக்கும் போது தான்  சனி பகவான் எந்தளவு 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' ரேஞ்சுக்கு உக்கிரத்துடன் நம் ராசியில்
குத்தாட்டம் ஆடுகிறார் என்பது  புரியும்.

 நம்ம லீவ் கதைக்கு வருவோம்.

லீவ் முடிந்து வந்து பணியில் சேர்ந்த பிறகு தான் நான் ஈட்டிய விடுப்பு எடுக்கலாமா வேண்டாமா என்ற அனுமதியளிக்கும் கடிதம் பிஏஓ வுக்கு அனுப்பப்பட தயார் நிலையில் இருந்தது. அடங்கொன்னியா!  இந்த லெட்டர் எப்ப அங்க போறது எனக்கு எப்ப சம்பளம் வர்றது என்று அயர்ச்சியாக இருந்தது. சில பல சாங்கியங்களுக்குப் பின்
இந்த லெட்டர் அனுப்பப்பட்டு  நீங்க லீவ் எடுக்க தகுதியானவர் தாங்கோ  என்றுரைக்கும் leave eligibility report( LER) நான் லீவ் முடித்து பணியில் சேர்ந்த எட்டாம் நாள்  பிஏஒ விலிருந்து எங்கள் அலுவலகம்  வந்தடைந்தது. இந்த  LER ஐ தொடர்ந்து மேலும் பல சடங்குகள் காத்து கிடந்தன.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தாரக மந்திரத்தை ஒரு நாளைக்கு 108  முறை உச்சாடனம்  செய்யும் அரசு ஊழியராகிய நான் விடுப்பில் செல்லும் காலங்களில் எனது பணியினை இன்னாரிடம் ஒப்படைக்கும் certificate of transfer of charge(CTC)  என்ற படிவத்தை பூர்த்தி செய்து மறுபடி சந்நிதானத்துக்கு  (பிஏஒ) அனுப்ப வேண்டும்.

அந்த படிவத்தை ஆபிஸில் யார் வைத்திருக்கார் என்பதை சிபிசிஐடி மூலம் கண்டறிந்து அந்த நபரிடம் கேட்க அவர் ஏதோ ரேஷன் கடையில் சர்க்கரை தீர்ந்து போனது போல 'இனிமே கவர்மென்ட்ல ப்ரிண்ட் ஆகி வந்தா தான் படிவம்' என்றார். நமக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும் போலயே சம்பளம் வாங்க என்ற அதிர்ச்சியை காலை உணவோடு சேர்த்து செமிக்க முயற்சிக்கையில் 'அந்த கடைசி டேபிள்ல வேணா கேட்டு பாருங்க  மேடம்' என்று இன்னொரு டிப்பையும் தந்தார். நேராக கடைசி டேபிளுக்கு படையெடுத்தால் சீட்டில் ஆள் இல்லை. விசாரித்ததில் அவர் லீவ் என்று தெரியவந்தது. இந்த கடைசி டேபிளில் ஆரம்பித்தது தான் சனி பகவானின் ' லீவ் ரிதம்' என்ற சூப்பர் டான்ஸர் நடன நிகழ்ச்சி.

அடுத்த நாள் அந்த கடைசி டேபிளிடம் படிவத்தை வாங்கி பூர்த்தி  செய்து ஆரத்தி எடுக்காத குறையாக ஆபீஸிலிருந்து சீக்கிரம் பிஏஒவுக்கு அனுப்புங்க என்று மன்றாடிவிட்டு வந்து மூன்று நாள் கழிந்த பிறகே தெரிய வந்தது இதை அனுப்ப வேண்டிய ஆபீஸர் இரண்டு நாட்களாக லீவு!

 ஆபீஸர் ஒரு வழியாக வந்து ஒரு  கல்யாணி கவரிங் லெட்டரை டைப்பி  முடித்த போது அதில் கையெழுத்திட வேண்டிய மேலதிகாரி ஒரு வாரம் விடுமுறையில் சென்று விட்டார். அடுத்த லீவு! 

மறுநாள் காலையிலிருந்து  பல் விளக்குகிறேனோ இல்லையோ அன்றைய ராசி பலனை தவறாமல்  பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ரேடியோவில் சொல்லப்படும் கேலி ஜோசியத்தை கூட விட்டு வைக்க வில்லை. அநேகமாக எல்லா நாட்களிலும் இன்று உங்கள் ராசியான நிறம் கறுப்பு அனுகூலமான எண் ஏழரை என்றே சொல்லப்பட்டது.

(தொ.....)


No comments: