தண்ணீர் தண்ணீர் - பாகம் 3
ஏதோ ஒரு நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பல்வேறு வகையான சுத்தீகரிப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்பட்டு பின்னர் சந்தைக்கு வருகிறது.அதுவே நாம் குடிக்கும் 'பேக்கேஜ்டு ட்ரிங்கிங்' வாட்டர். அதாவது பாட்டில் வாட்டர்.
பாட்டில் வாட்டர் புழக்கத்தில் வந்த காலத்திலிருந்து அதை 'மினரல் வாட்டர்' என்றே அழைத்து பழக்கப்பட்டு விட்டோம். உண்மையில் மினரல் வாட்டர் வேறு பாட்டில் வேறு. எந்த பாட்டில் வாட்டர் கம்பெனியும் எங்களுடையது மினரல் வாட்டர் அல்ல என்று பகிரங்கமாக சாமானிய மக்கள் புரிந்துக் கொள்ளும்படி எந்த அறிவிப்பும் செய்ததில்லை.
வெறும் பேக்கேஜ்டு வாட்டர் என்ற முத்திரையோடு இருந்த பாட்டில் வாட்டர் சமீப காலமாக 'வித் அடட் மினரல்ஸ்' (with added minerals) என்ற கேப்ஷனையும் சேர்த்து கொண்டது. அப்படியானால் இத்தனை காலமாக மினரல்ஸ் இல்லையா என்ற மைண்ட் வாய்ஸ் , மைண்ட் வாய்ஸாகவே இருக்கட்டும். ஏனென்றால் இது போன்ற கேள்விகளுக்கு என்றுமே உண்மையான பதில்கள் கிடைக்காது. ஒரிஜினல் 'மினரல் வாட்டரில்' இருப்பதை போல அத்தனை மினரல்களையும் இந்த added minerals பாட்டில்களில் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எல்லா மினரல்களையும் சேர்த்துவிடாமல் கால்சியம் , மெக்னீசியம் , சோடியம் , பொட்டாசியம் என்ற வரிசையில் ஏதாவது இரண்டு அல்லது மூன்று கனிமங்களை மட்டும் சேர்த்திருப்பதாக பாட்டிலில் ஒட்டியுள்ளன வாட்டர் கம்பனிகள்.
சரி, குழாய் தண்ணீர் என்ற முனிசிபல் வாட்டர் சப்ளை இருக்கும் போது எதற்கு இந்த பாட்டில் தண்ணீர்?பாட்டில் தண்ணீருக்கென அதன் தூய்மையை தாண்டி சில வசதிகள் உண்டு. வீட்டிலிருந்தே பாட்டிலை சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. பாட்டில் தண்ணீரை எங்கு வேண்டுமானாலும் போகிற வழியில் வாங்கி கொள்ளலாம் என்பது இதன் ஆகப்பெரிய ப்ளஸ். தாகத்துக்கு சோடாவோ கூல்ட்ரிங்க்ஸோ குடிப்பதற்கு பதில் தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம் தானே? பூகம்பம், நில அதிர்வு, சுனாமி போன்ற பேரிடர் சமயங்களில் மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் குழாய்கள் நல்ல நிலையில் இல்லாத போது கேன் மற்றும் பாட்டில் தண்ணீரே ஆபத்பாந்தவன்.
பாட்டில் வாட்டரால் என்னென்ன கெடுதல் என்று பார்த்தால் பாட்டில் தான் முதல் பிரச்சினை. அதாவது ப்ளாஸ்டிக். தண்ணீரை குடித்தப்பின் பாட்டிலை என்ன செய்கிறோம்?பாட்டில் ஓட்டை விழும் வரையோ அல்லது மூடி காணாமல் போகும் வரையோ இந்த மினரல் வாட்டர் பாட்டில்களை உபயோகிப்பவர்கள் ஏராளம்.அது ஃபுட் க்ரேட் ப்ளாஸ்டிக்காக, மறுஉபயோகம் (recyclable) செய்யக்கூடிய ப்ளாஸ்டிக்காக இருக்கும் பட்சத்தில் உபயோகிப்பவருக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு இல்லை. ஆனால் ரீ-சைக்கிள் செய்வதற்கே கூட எந்த ப்ளாஸ்டிக்காக இருந்தாலும் உபயோகித்த பின் அதை சரியான முறையில் சரியான இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு 'இஷ்டப்பட்ட இடத்தில் கடாசி எறிவது' அல்லது 'லிட்டரிங்' எனது பிறப்புரிமை என்ற கொள்கையை கொஞ்சமாவது தளர்த்தியாக வேண்டியது அவசியம்.
ப்ளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள இரசாயன பொருட்கள் அடுத்த கவலை. தண்ணீர் தரமானதா, தூய்மையானதா என்று பார்க்கிறோமேயொழிய பாட்டில் பற்றி பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. மறுஉபயோகம் செய்ய தரமில்லாத பாட்டில்களில் கிருமிகள் சுலபமாக வளரும் அபாயம் உண்டு. இந்த மினரல் வாட்டர் பாட்டில்கள் எளிதில் சூடாகக் கூடியவையும் கூட. வெப்பத்தில் பாட்டிலில் உள்ள ரசாயன பொருட்கள் தண்ணீரில் கலந்துவிடுவதால், இது போல சூடேறிவிட்ட பாட்டில் தண்ணீரை முற்றிலும் புறக்கணிக்கும்படி WHO அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் நம்மை வந்து அடைவதற்கு முன்னர் இதே ப்ளாஸ்டிக் பாட்டில்களும் வாட்டர் கேன்களும் எவ்வளவு நேரம் வெயிலில் காய்ந்தன போன்ற கேள்விகள் மனதில் எழாமல் பார்த்து கொள்ளுதல் அவசியம்.
சரி,இதற்கு மாற்று தான் என்ன?
ப்ளாஸ்டிக் பாட்டில்களுக்கு கண்ணாடி குடுவைகளே ஆகச்சிறந்த மாற்று. அடுத்து நல்ல தரமான பீங்கான் குடுவைகள். மூன்றாவதாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர் போன்ற உலோக குடுவைகள். இவை அனைத்துமே நடைமுறையில் சிரமம் தான். இத்தனை மாற்றுக்குப் பதிலாக உபயோகிக்கும் ப்ளாஸ்டிக்கின் தரத்தை உயர்த்தலாமே போன்ற அறிவார்ந்த கேள்விகள் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.
அடுத்து, பாட்டிலில் அடைக்கப்படும் நீரும் , அதன் தரமும். பாட்டில் வாட்டர் தொழில் நல்லதொரு லாபகரமான தொழிலாக வளர வளர குறுகிய கால கட்டத்தில் எக்கச்சக்கமான கம்பெனிகள் காளான் போல முளைத்துக் கிடக்கின்றன. எல்லா கம்பெனிகளிலும் தண்ணீர் சுத்தீகரிப்பு முறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே சீரான கண்டிப்புடன் கண்காணிக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 'தரக்கட்டுப்பாடு' என்பது அவரவர் வசதிக்கேற்ப மாறுபடுவது தான் வருந்தத்தக்க விஷயம். சுத்தமான ஆரோக்கியமான நீரை தான் மக்கள் பருகிறார்கள் என்பதற்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு நம் நாட்டில் இருக்கிறதா? சாய்ஸில் விடுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்ற கேள்வி இது.
பாட்டில் வாட்டருக்கான நீர் விவசாயத்திற்கோ அல்லது மக்கள் பயன்பாட்டுக்குரிய நீர்நிலையிலிருந்தோ தான் எடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பயன்படவேண்டிய இயற்கை நீர் நிலைகள் சுரண்டப்பட்டு தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசு தாரைவார்த்து கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பாட்டிலில் அடைக்கப்படும் நீர் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்று கோகோ கோலா, பெப்ஸி போன்ற பெரு நிறுவனங்களே மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க மறுக்கின்றன.
ப்ளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க கரூட் ஆயில் தேவைப்படுகிறது. தண்ணீர் சுத்திகரிக்கவும் ஆயில் தேவை. ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தண்ணீர் அடைக்கப்பட்டு நாம் இருக்கும் இடத்துக்கே வந்து சேர மறுபடியும் ஆயில் (பெட்ரோலோ, டீசலோ )தேவை. ஆக ஒரு பாட்டில் தண்ணீருக்காக எண்ணெய் வளத்தையும் இழக்க வேண்டியுள்ளது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாட்டில் வாட்டரை உபயோகிப்பதன் மூலம் ஒரு வகையில் பூமியின் வளத்தை சுரண்டி மறுபடி பூமியையே குப்பை மேடாக்குகிறோம் தானே?
நல்ல குடி நீர் என்பது பெரும் கனவாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. நம் சுற்றுபுறத்தையும் இயற்கை வளங்களையும் சரியான முறையில் பராமரிக்காமல், இருந்த நீர் நிலைகளையும் நிலத்தடி நீரையும் மாசு படிய வைத்து விட்டு இன்று 'எந்த தண்ணி நல்ல தண்ணி' என யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆர் ஓ வாட்டர், மினரல் வாட்டர் , பாட்டில் வாட்டர் என்று நல்ல தண்ணீரை வழங்க எத்தனையோ டெக்னாலாஜி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் ஆதாரமான இயற்கை வளங்களை அறிவியல் பூர்வமாக அணுகி இனி வரும் சந்ததியினரையும் கணக்கில் கொண்டு செயல்படும் நம் சமூக மாற்றமே சரியான தீர்வாக அமைய முடியும். நம் நீர் நிலைகளை பாதிக்கும் எந்த செயல்பாட்டையும் குறைந்த பட்சம் கண்டிக்கவாவது பழக வேண்டும். நம்மை சுற்றியுள்ள நீராதாரங்களை சரியான முறையில் பராமரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
இதெல்லாம் சரி, எந்த தண்ணீரை தான் நம்பி குடிப்பது? எந்த குடி தண்ணீராக இருந்தாலும் அதை கொதிநிலைக்கு காய்ச்சி, ஆறவைத்து, வடிகட்டிய பின்னர் குடிப்பதே நலம்.
சியர்ஸ்ஸ்!!!