அந்த மூன்று மாதங்கள்.
வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டம். நான் ஐந்து நாட்கள் வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் செல்வதால் இந்த அரசு கவிழும் அபாயமோ, பொருளாதார சிக்கல்களோ , கலாச்சார சீரழிவோ ஏற்படாது என்று உறுதிபட தெரிந்த பின்னரே எனக்கு நம் பாரத எல்லையை கடப்பதற்கான அனுமதி கிடைக்கும்.சுருக்கமாக, அரசிடமிருந்து NOC எனப்படும் நோ அப்ஜக்ஷன் சான்றிதழ் பெற வேண்டும்.
முதல் கட்டமாக ஈட்டிய விடுப்பில் வெளிநாடு செல்ல அனுமதி வேண்டி, செல்ல வேண்டிய தேதிக்கு மூன்று மாதம் முன்னரே, (கவனிக்க , மூன்று மாதம் முன்னரே) துறைத்தலைவர் மூலமாக கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அந்த கடிதம் கல்லூரி அலுவலகம் மூலம் சம்பளக் கணக்கு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
'சரி சரி லீவ் எடுத்துக் கொள்ளலாம்' என்று சம்பளக் கணக்கு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வரவே, அந்த கடிதத்தோடு சேர்த்து 24 பக்க வண்ணப்படக்கதை ஒன்றை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு பூர்த்திசெய்து மறுபடி கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்தேன். இது தான் NO OBJECTION CERTIFICATEக்காக (NOC) தொன்று தொட்டு நம் முன்னோர்கள் புழங்கி வரும் படிவம்.
இந்த 24 பக்க வண்ணப் படக்கதையுடன், பேங்க் ஸ்டேட்மென்ட் முதல் நாலாம்பாதத்தில் அஷ்டமத்து சனி என்று எழுதியிருக்கும் எனது ஜாதகம் வரை சேர்த்து அனுப்ப வேண்டும். இதுவரைக்கும் எல்லாம் ஓரளவு ஓகே.
அந்த வண்ணப் படக்கதை எங்கள் கல்லூரியிலிருந்து மருத்துவக்கல்வி இயக்கக அலுவலகத்துக்கு (Directorate of medical education ) அனுப்பப்பட வேண்டும். எனக்கு தான் எல்லா வேலையுமே டக் டக்கென்று நடக்கும் ராசியுண்டே. சனி பகவான் 'உன் மேல ஒரு கண்ணு' என்று எத்தனையாவது சீசனாகவோ மறுபடி தனது நடனத்தை ஆரம்பித்திருந்தார். கடிதம் அனுப்பி 15 நாள் ஆகியும் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய சிறுகதைப் போல மருத்துவக்கல்வி இயக்ககத்திலிருந்து எந்த பதிலும் இல்லை.
என்னோடு காதல் கடிதம் தீட்டிய அனைவருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமான நிலையில், காதலை தெளிவாக எடுத்து சொல்லிய பிறகும் நான் மட்டும் இதயம் முரளி போலவே அலைந்துக் கொண்டிருந்தேன். 'நீங்களே நேர்ல போனா தான் வேலை நடக்கும்' - இந்த வாக்கியத்தை திரும்ப திரும்ப கேட்டு,சலித்துப் போய் வேறு வழியில்லாமல் ம.கல்வி இயக்ககம் சென்றேன்.
'என்ன மேடம் கவரிங் லெட்டர் இல்லாம அனுப்பினா நாங்க என்ன பண்ண முடியும் ?' என்று செல்லமாக கடிந்து கொண்டனர். அதாவது, இந்த பதிவின் ஆரம்பத்தில் எழுதிய முதல் கடிதத்தை காணவில்லையாம். எந்த இடத்தில் அந்த கல்யாணியை கவரிங்கை போய் தேட? எங்கள் கல்லூரி அலுவலகமா, முதல்வர் அறையிலா, சம்பளக்கணக்கு அலுவலகமா..??
'எனக்கு தகவல் சொல்லணும் இல்லங்க லெட்டர் இல்லைன்னா' என்ற கேள்விக்கு 'உங்க ஆபீஸுக்கு சொல்லி பத்து நாள் ஆச்சுங்க' என்று பதில் வந்தது.
எங்கள் கல்லூரி அலுவலகம் ஒரு 'சித்தர் உலகம்'. எல்லோரும் அலுவலகத்தில் இருப்பார்கள் ஆனால் யார் கண்ணுக்கும் தென்பட மாட்டார்கள். எப்போதாவது சிலர் கண்களுக்கு மட்டும் அதுவும் சிலர் மட்டுமே காட்சி தருவார்கள். நாம் கொடுக்கும் சகலவிதமான கடிதங்களையும் - 'ஒரு விஷயம் இருக்கு, ஆனா இல்ல..... வரும், ஆனா வராது' ரேஞ்சிலேயே தான் நாம் டீல் பண்ண வேண்டும்.
மறுபடி ஒரு கவரிங் லெட்டர் எழுதி , துறைத்தலைவர், கல்லூரி முதல்வர், கல்லூரி அலுவலகம் மூலமாக படிப்படியாக கையெழுத்தாகி , எங்கும் மாயமாய் மறைவதற்குள் நானே மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கு நேரில் சென்று கொடுத்தேன்.
இந்த முறை ம.கல்வி இயக்ககம் சென்ற போது அந்த 24 பக்க வண்ணப்படக்கதையில் இரண்டு இடங்களில் முதல்வரின் கையெழுத்து மிஸ்ஸிங் என்றனர். இதை முதல் முறை வந்த போதே சொல்லியிருக்கலாம் தானே? அது தான் அரசு அலுவலகம். மறுபடி கடிதத்தை வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு வந்து , முதல்வரிடம் கையெழுத்துப் பெற்று ம.க. இயக்ககத்தில் சமர்ப்பித்தேன்.
அங்கிருந்து அந்த படக்கதை தலைமை செயலகத்திலுள்ள சுகாதாரத்துறை செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
சுகாதாரத்துறை செயலாளர் அலுவலகத்திலிருந்து 'யாரும்மா அது அருணா?' என்று கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளிக்காமல் ஒரு எட்டு நேரில் சென்று அந்த ஃபோட்டாவில் இருக்கும் அழகி நான்தாங்கோ என்று என் திருமுக தரிசனம் தந்த பின்னர் சுகாதாரத் துறை செயலர் 'போயிட்டு வா ராசாத்தி ' என என் படக்கதையை சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அமைச்சர் அலுவலகத்தில் 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்' ஒருவர் அமைச்சர் கேபினுக்கு வெளியே அமர்ந்திருப்பார். அந்த பூசாரியை தரிசித்தால் தான் 'நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்' கிடைக்கும்.
தரிசனத்துக்கு காத்திருந்த வேளையில் என்னம்மா வேணும், வெளில வெயிட் பண்ணு , இப்பல்லாம் பாக்க முடியாது, அதெல்லாம் ஆபீஸ்ல போய் கேளு போன்ற முழங்கையில் அடிபட்ட எஃபெக்ட் தரும் வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டும்.
முழங்கையை தேய்த்துக்கொண்டே வரிசையில் நின்று தரிசனம் முடித்த பின்னர், இரண்டொரு நாளில் மறுபடி சுகாரத்துறை துறை அலுவலகத்துக்கு சென்று நோ அப்ஜக்ஷன் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இது தான் நம் குல வழக்கம். கலாச்சாரம். முன்னோர் மரபு.
இந்த மூன்று மாத கால சீரியல் கடந்த சனிக்கிழமையோடு இனிதே நிறைவுற்றது. விசா ஸ்டாம்ப் ஆகி வந்து, டிக்கெட் வந்து, கரன்ஸி மாற்றி, ஊருக்கு கிட்டதட்ட பேக்கிங்கும் முடிந்த நிலையில் கடைசியாக வந்து சேர்ந்தது NOC.
இந்த சான்றிதழை கையில் வாங்கும் வரை 'இப்படி வெளிநாடு போயே ஆகணுமா, கள்ளத்தோணில போக முடியுமா, திருப்பதி மலை ஏறுவதைப்போல நடந்தே போயிடலாமா, அரசு வேலையை விட்ரலாமா போன்ற சிந்தனைகள் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது வந்து போயின.
சரி இவ்வளவு சிரமப்பட்டு வாங்கிய இந்த ' நோ அப்ஜக்ஷென் சான்றிதழை' வைத்து கொண்டு என்ன பண்ணுவது? எந்த ஒரு வீணா போன ஆணியை கழட்டவும் இது பயன்தராது. நமக்கு வேண்டாதவர்கள் யாராவது 'கவர்மென்ட்ல பர்மிஷன் வாங்காம வெளிநாட்டுக்கு டொனால்ட் ட்ரம்ப பாக்க ஓடிருச்சு இந்தம்மா' ன்னு ஏதாவது வழக்கு நொழக்கு போடாமல் இருக்க வேண்டுமானால் உதவும்.
இவ்வளவு அலைக்கழிப்பு கற்றுக் கொண்ட பாடம் என்ன? அடுத்த முறை வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசுக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு நீ NOC தரும் போது தா என்று நாம் பாட்டுக்கு கிளம்பிவிட வேண்டும். இல்லையென்றால் 'கமுக்கமாக' போய் வருவது சாலச்சிறந்தது. நாலு முறை வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த எஃபெக்ட்ட உள்ளூர்லயே காட்டிட்டாங்க பரமா!
1 comment:
என்னங்க...? எழுத்துல இம்புட்டு ப்லொவ் ? அருமையா எழுதி இருக்கீங்க. "கமுக்கமா".. நிறைய நாட்களுக்கு பின் படித்த வார்த்தை. தொடர்ந்து எழுதுங்கள். மற்றும்.. விடுமுறைக்கு எந்த ஊரு போறீங்க. எங்க ஊர் பக்கம்ன்னா சொல்லிட்டு வாங்க. சந்திப்போம்.
Post a Comment