Monday 27 November 2017

நானும் ஒரு பெண்

மருத்துவ துறையில் பணிக்கு சேர்ந்தவுடன் சீனியாரிட்டி அடிப்படையின் பேரில் ஒவ்வொருவருக்கும் கைதி எண் போல ஒரு நம்பர் தரப்படும். அதன் பெயர் CML நம்பர். Civil Medical List நம்பர்

அரசுத் துறையில் தடுக்கி விழுந்தால் இந்த நம்பரை கேட்பார்கள். ஏனென்றால் அந்த நம்பரை வைத்து தான் நமது பதவி உயர்வு, பணி இடமாற்றம், சம்பளம் முதல் அனைத்தையும் கணக்கிடுவார்கள். என்னை இன்னொரு மிஸ் திட்டிட்டாங்க முதற்கொண்டு நீங்க அப்பா ஆகப் போறீங்க என்பது  வரை இந்த நம்பரை வைத்து பகடை உருட்டுவார்கள்

எங்கள் கல்லூரியில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே... காலேஜில் கார் பார்க்கிங் முதற்கொண்டு, எந்த டாய்லெட்டில் உச்சா போக வேண்டும் என்பது வரை இந்த நம்பரை வைத்தே முடிவு செய்வார்கள். காரை மாத்தி வேறு ஒரு இடத்தில் பார்க் பண்ணிவிட்டாலோ அல்லது வேறு பாத்ரூமில் உச்சா போய்விட்டாலோ அம்புட்டுதேன்... சேகர், சேகரோட மச்சான், அவனோட ஒன்னு(க்கு) விட்ட சித்தப்பா வரை எல்லோருமே செத்துவிடுவார்கள். அர்னாப் கோஸ்வாமியே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு காலேஜே இந்த மேட்டரை பேசித் தீர்க்கும். அதை கேட்டு அடுத்த நான்கு நாட்களுக்கு கடைவீதியில் கார் பார்க் பண்ணும் போது கூட அங்கே இருப்பவரிடம் சீனிரியட்டி நம்பர் கேட்கத் தோன்றும். வீட்டில் உச்சா போக கூட யோசனையாக இருக்கும்

சரி இப்ப எதுக்கு இந்த கதை

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை தற்போது Civil Medical List  என்னும் சீனியாரிட்டி லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இது ஒரு tentative list. அதாவது  இது ஒரு உத்தேசமான லிஸ்ட். ஏனென்றால் அதில் உள்ள பாதி பேரின் தகவல்கள் அப்டேட் செய்யப்படாமலே உள்ளன

உதாரணமாக நான் இன்னும் உதவிப் பேராசியராக கிருஷ்ணகிரியில பணிபுரிவதாகவே இருக்கும், நான் சென்னைக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆன பிறகும். ரிடையர் ஆனவர், வேலையை ராஜினாமா செய்தவர், ரிடையார் ஆகி பரலோகம் அடைந்தவர் முதற்கொண்டு இன்னும் இந்த லிஸ்ட்டில் உள்ளனர்அரசுத் துறை ஆபீஸ் நிர்வாகம் பற்றி யாரும் யாருக்கும் சொல்லித் தெரிய தேவையில்லை

 சரியாக அப்டேட் செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது CML நம்பரோடு பச்சை கலரும்  அப்டேட் ஆகாதவர்களுக்கு கருப்பு கலருமாக இந்த லேட்டஸ்ட் லிஸ்ட் சிங்குசானாக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த ஒன்பதாவது உலக அதிசயமாக எனக்குப் பச்சை கலர்

என் துறையில் லிஸ்டில் உள்ள கறுப்ப கலர் ஆட்கள் தங்களது விபரங்களை ஒரு கவரிங் லெட்டரோடு(அரசுத் துறையில் எந்த கடிதமும்  கல்யாணி இல்லாமல் செல்லுபடி ஆகாதுஅதற்கான படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆதாரங்களோடு ஆபீஸில் ஒப்படைக்க ஓடிக்கொண்டிருந்தனர்

எந்த நல்ல காரியமும் சட்டென நடந்திடாத எனக்கு பச்சை கலரா என்று லேசாக நெருட மறுபடி என்னைப் பற்றிய விபரங்களை அந்த லிஸ்டில் செக் செய்தேன். மோடி இந்தியாவில் இருப்பதைப் போல பேரதிர்ச்சியாக எல்லா விபரங்களும் சரியாகவே இருந்தன, ஒன்றைத் தவிர. Gender- Male என குறிப்பிடப்பட்டிருந்தது

துறையில் உள்ள தோழியிடம் அதை காண்பிக்க, சரியான தான இருக்கு என்று சீரியஸாக பதில் சொன்னார். அருணா ராஜ் என்பதை எப்படி நினைத்தார்களோ தெரியவில்லை. இப்போது நான் ஆண் என்பதை பெண் என்று மாற்றச் சொல்ல வேண்டும்

எனக்கு இதை அப்டேட் செய்வதில் இரண்டு ப்ரச்சனைகள்
நான் பெண் தான் என பூர்த்தி செய்து கொடுக்கும் படிவம் எங்கள் சித்தர்கள் அலுவலகத்திலிருந்து தொலைக்கப்படாமல் சேர வேண்டிய இடம் சென்று சேர வேண்டும்.பிறகு அரசுத் துறை அதை அப்டேட் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் விட எளிது நான் ஆபரேஷன் செய்து ஆணாய் மாறிவிடுவது

இரண்டாவது ப்ரச்சனை... நான் பெண் என்பதற்கு எந்த வகையான சான்றை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றே தெரியவில்லை


ஒரு மனுசனுக்கு ச்சே ஒரு மனுஷிக்கு எப்படியெல்லாம் ப்ரச்சனை வருது பாருங்க.....

1 comment:

Unknown said...

Ha ha haa.. இதைப் படித்ததும் என் வாழ்வில் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

1998 ல் என் மகன் பிறந்த போது பிறப்பு சான்று வாங்க கோடம்பாக்கத்தில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு போனேன். சான்றை வாங்கி பார்த்ததும்தான் தெரிந்தது அதில் சித்தார்த் , பெண் என போட்டிருந்தது.. ( உங்கள் பேராவது அருனாராஜ.. குழப்பத்துக்கு சான்ஸ் உண்டு).. அதை கொடுத்த ஆஃபீசர் ஒரு பெண்.. நான் தவறை சுட்டிக்காட்டியதும் என்னையும் ஒரு கல்யாணி லெட்டருடன் விண்ணப்பிக்க சொன்னார். பின் 4 மாதங்கள் நடையா நடந்ததுதான் மிச்சம்..கடைசியில் டெலிவரி பார்த்த டாக்டரிடம் ஒரு கடிதம் கேட்டார்..நான் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் லஞ்சம் தரக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக இருப்பவன்..

நல்ல கோபம் வந்தது.. என் நண்பரை அழைத்துக்கொண்டு ஒரு வீடியோ கேமரா மற்றும் 5 மாத பையன் சகிதமாக நத்திங் அலுவலகம். போனேன்..

நண்பர் வீடியோ எடுக்க நான் அந்த அலுவலரிடம் என் பையனை தூக்கி டரவுசரை கழட்டி காட்டினேன்.. " அம்மா நல்லா பார்த்துக்கீங்க இப்பவாவது அவன் ஆண் என certificate தாங்க" என்றேன்..

பின் இந்த விவரம் ஜூனியர் விகடனில் பிரசுரிப்போம் என மிரட்டி புது சான்று வாங்கினேன்..


But doctor the pithiest situation is you can't follow this method.. தப்பாயிடும் வேற யோசிங்க!!