Sunday, 9 March 2014

எல்.கே.ஜி

எல். கே. ஜி அட்மிஷன் என்பது சாதாரண விஷயமே அல்ல. என் அப்பா எங்கள் காலேஜ் அட்மிஷனுக்கு கூட இவ்வளவு அலைந்திருக்க மாட்டார். 

உண்மையில் பிரச்சனை எல்கேஜி சீட்டில் இல்லை. நமக்கு தேவையான பள்ளியில் எல்கேஜிசீட் என்பதே சரி. தேவையான என்பதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம்.வீட்டுக்கு பக்கத்தில், டொனேஷன் குறைவாக, அண்ணனோ அக்காவோ படிக்கும் அதே பள்ளியாக,வேலைக்கு செல்லும் வழியில் பள்ளியில் இறக்கி விட அம்மாவுக்கோ அப்பாவுக்கோ வசதியாக... இப்படி அவரவருக்கு ஏற்ற காரணங்கள்.  

விடிகாலை மூன்றரை மணி இருக்கும்.நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது  போன் அடித்தது.தூக்கம் கலைந்த எரிச்சலோடு  எடுத்தேன். மாமியார் வீட்டிலிருந்து என் கோ -சிஸ்டர் ஃபோன். 'என்னம்மா ஆச்சு அத்தைக்கு உடம்பு முடியலையா?' வயதானவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு வேளை கெட்ட வேளையில் ஃபோன் வந்தால் என்னவென்று நினைப்பது? தங்கை வேறு மிகவும் மெலிதான குரலில் 'அக்கா மாமாவோட ஆபீஸ் அட்ரஸ் என்ன' என்றாள். எனக்கெல்லாம் அதிகாலை நாலு மணியே நடு ராத்திரி தான். மூன்றரை  மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி எனக்கு நான் குடியிருக்கும் வீட்டு அட்ரஸ் கேட்டாலே தெரியாது. ஏம்மா என்ன ஆச்சு என்றேன் பதட்டம் குறையாமல். 'மறந்துட்டீங்களா அக்கா, அட்மிஷன்  ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு இருக்கேன், மாமாவோட சாலரி உங்க சாலரி எல்லாம் சொல்லுங்க'. 'இந்த நேரத்துலயா?' 'ஆமா அக்கா, நைட் பன்னெண்டு மணில இருந்து ட்ரை பண்ணி இப்ப தான் சைட் ஓபன் ஆச்சு'.
'விடிஞ்ச பிறகு பண்ணிக்கலாமே?' 'இல்ல இந்த ஸ்கூல் சைட் ஒபனே ஆகாதுன்னு சொன்னாங்க அதான்...'
அதற்கு மேல் என்னால் வேறு கேள்விகள் கேட்க முடியாமல் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொன்னேன்.  அதற்கு பிறகு எங்கே தூங்குவது. என்னுடைய பிள்ளைக்கும் சேர்த்து அவள் தான் அப்ளிகேஷன் பூர்த்தி செய்கிறாள் எனும்போது நான் படுத்து தூங்க முடியுமா? என்ன டௌட் இருந்தாலும் போன் பண்ணுமா என்று சொல்லிவிட்டு நாவலை விட்ட  இடத்திலிருந்து  தொடர்ந்தேன். 

எல்கேஜி அட்மிஷனுக்காக நடுராத்திரியிலிருந்து ஆன்லைன் ஃபார்ம் ஃபில் பண்ணுவது எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பட்டது.ஏனோ ஊர்க்காவலன் படத்தில் ரஜினி நடுராத்திரியில் இட்லி சாப்பிட்டது ஞாபகத்துக்கு  வந்து தொலைத்தது.நமக்காக ஒருவர் உதவி செய்யும் போது நான் அதை குறை சொல்ல விரும்ப வில்லை எனினும் இந்த ஃபார்ம் ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு  கிடைக்கும். நான் விடிந்த பின் அப்ளை செய்துக்கொள்ளலாம் என்றிருந்தேன். நான் வாழ்க்கையில் என்றுமே முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்ததே இல்லை. எப்போதுமே சாகும் போது சங்கர சங்கரா தான்.அதனால் வாழ்க்கையில் பெரிய இழப்பேதும் சந்தித்ததில்லை.விடியற்காலை மூன்றரைக்கு அப்ளை செய்ததற்கே என்னுடைய டோக்கன் எண்ணூற்றி  சொச்சம்.

ஒரு பள்ளிக்கு சுமார் ஆயிரம் ஆயிரத்தி ஐநூறு பேர் அப்ளை பண்ணினால் கூட இரண்டு நாட்கள் போதுமானது என்பது என் கணிப்பு. அமெரிக்கன் கான்சுலேட் முன் இரவெல்லாம் துண்டு போட்டு மக்கள் நைட் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்த கண்கொள்ளா காட்சியை சென்னையில் இருப்பவர்கள் கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சென்னையின் புகழ்ப்பெற்ற சில பள்ளிகளின் வாசல்களிலும் இதே போன்ற கூட்டம் எல்கேஜி அட்மிஷனுக்கு காத்திருக்கும். அந்த நைட் வாட்ச்மேன்   வேலையை சுலபமாக்கவே இப்போதெல்லாம் அனைத்தும் ஆன்லைனில். 

ஆன்லைனில் ஃபில் பண்ண அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொடுக்கப்பட்ட தேதியில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.  பின்னர் ஒரு தேதியில் குழந்தைக்கு பெற்றோரோடு சேர்த்து ஒரு நேர்முகம். நான் வீட்டுக்கு அருகே இருக்கும் மூன்று பள்ளிகளிலும்  விண்ணப்பத்திருந்தேன். எல்லா பள்ளிகளிலும் விசாரித்த வரை இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்தி முன்னூறு விண்ணப்பங்கள் வந்திருந்தனவாம். ஒரு செக்ஷனில் இருபத்தியைந்து குழந்தைகள் வீதம் சேர்த்தாலும் ஆறு ஏழு செக்ஷனுக்கு மேல் எந்த பள்ளியிலும் இல்லை. ஆக நூற்றி ஐம்பது இடங்களுக்கு இரண்டாயிரம் விண்ணப்பங்கள். பெரும்பாலும் அனைவரும் என்னைப்போல மூன்று நான்கு பள்ளிகளுக்கு விண்ணப்பம் அளித்தவர்களே. ஆனால் எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன
 என்பது தான் புரியாத புதிர். 

பள்ளிக்கு மூன்று கி.மீ சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும்,பெற்றோர் படித்திருக்க வேண்டும் போன்ற அடிப்படை தகுதியை தாண்டி நிறைய கெடுபிடிகள். பெற்றோர் இருவரும் மருத்துவர்கள், குழந்தையை கவனிக்க மாட்டார்கள் என்று பெற்றவர்களை விட அதிக அக்கறைக்கொண்டு ஒரு பள்ளி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. 
ஒரு பள்ளியில் போர்ட் எழுதியே வைத்திருந்தார்கள்- அதிகப்படியான விண்ணப்பங்கள் வருவதால் மானாட மயிலாட முறையிலேயே தேர்வு செய்யப்படும் என்று. 

என்ன தான்டா வேணும் உங்களுக்கு என்று விசாரித்ததில் எதாவது ஒரு கரும்புள்ளி சாரி பெரும்புள்ளியின் சிபாரிசு தேவையாம். 
இந்த நேர்முகம் எல்லாம் வெறும் கண்துடைப்பே என்று தெளிவாக இருக்கிறார்கள் மக்கள்.பெரும்புள்ளி அரசியல்வாதியாக  இருக்க  வேண்டிய  அவசியமில்லை . பள்ளி  கணக்கு  வைத்துள்ள  வங்கியின்  மேலாளர்  முதல்  ஸ்கூல்  பிரின்சிபால்  காருக்கு  பெட்ரோல்  போடும்   பங்க்  ஓனர்  வரை  யாராக  வேண்டுமானால்  இருக்கலாம். சிபாரிசுக்கு  ஏத்த டொனேஷன் . சில பல லட்சங்கள் வரை கூட ஆகும் போல.  

ஆரம்பத்திலேயே சொன்னது போல எல்கேஜி அட்மிஷனில் பிரச்சினையே இல்லை.எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சீட் கிடைக்கும். ஆனால்  நம்முடைய வசதிக்காகவும் ஆசைக்காகவும் நமக்கு தேவையான பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்று கொக்கு போல் நாம் நிற்பது தான் பிரச்சனை. இந்த கொக்கு பிரச்சனை உள்ளவரை கல்வி வியாபாரம் மேலும் மேலும் செழித்து வளர   பிசினஸ்மேன்களுக்கு நம்மை காட்டிலும் சிறப்பாக வேறு யாரும் உதவி செய்து விடமுடியாது. 

7 comments:

கானகம் said...

இன்றைக்கு இப்படி கஷ்டப்பட்டதைச் சொன்னாத்தான் குழந்தைக்கு சீட் வாங்குன அப்பா அம்மாவுக்கு மரியாதை. அதுக்காச்சும், இப்படி அவசியமே இல்லாம பெத்த பேர் வாங்குன பள்ளியில் சேக்குற கொடுமையெல்லாம் நடக்குது. எனது அண்ணன் மகள் மதுரையில் இருக்கும் அக்‌ஷரா பள்ளியில் படித்தாள். 5ம் வகுப்புவரை மாண்டிசோரி ஸ்டைலில்தான் வகுப்புகள். குழந்தை எங்கே இப்படிப் படிச்சா என்ன ஆவானோன்னு இழுத்துக்கொண்டு போய் கொடுமைப் படுத்தும் பள்ளிகளில் சேர்த்தனர் பல பெற்றோர்கள். மாதம் 100 ரூபாய் ஃபீஸ் வாங்கி குழந்தைகளின் ஆளுமையை வளர்த்த இந்தப் பள்ளியை விட்டுவிட்டு செக்குமாடு மாதிரி குழந்தையை உருவாக்கும் பள்ளிகளில் சேர்ப்பதில் அவ்வளவு ஆனந்தம். ஃபீஸ் அப்போதே 500 ரூபாய் மாதம்.. சட்டைப்பையில் இருந்து காசை எடுத்துக்கோ என நாமே கொள்ளையடிக்க பள்ளிகளுக்கு தரும்போது அவர்கள் இப்படித்தான் செய்வார்கள்..

Unknown said...

As good as ever madam. Getting polished day by day. Miles to go. :-)

அருணாவின் பக்கங்கள். said...

Thank you mani:-) for all the support n encouragement...

அருணாவின் பக்கங்கள். said...

It's become very common to think that anything that costs less is of less value. Unfortunately we have started applying this thought to education as well...

Anonymous said...

You can send a msg to this email to get a quick admission in any school in tamil nadu zone


onlineschoolpatrol@gmail.com

அமர பாரதி said...

Nice writeup

sathishsangkavi.blogspot.com said...

சிலபேருக்கு அவர்கள் நினைத்த பள்ளியில் சீட் கிடைக்கவில்லை என்றால் அந்த பள்ளி சரியில்லையாம் என்று இரண்டு பிட் சேர்த்து போடுவாங்க...