Thursday, 17 April 2014

108 #1


அழகான ஒரு  காலையின் அமைதியை கிழித்து தொங்கவிட்டிருந்தது அந்த இரைச்சல். இரண்டு வாகனங்கள் மோதிக்கொள்ளும் இடி போன்ற சத்தம். டயர்கள் க்ரீச்சிடும் ஒலி. வாகனங்களில் பயணம் செய்தவர்களின் ஓலம். அந்த குடியிருப்பு பகுதியின் விஸ்தாரமான நான்கு பாதைகள் சந்திப்பில் எந்த வண்டி எந்த புறமிருந்து வந்து எப்படி மோதியது என்று சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் யூகிக்க முடியாமல் சிரமப்பட்டனர். மோதியவை ஒரு ஸ்கார்பியோவும் வென்டோவும். இரண்டு வாகனங்களுமே சாலையின் எதிர் எதிர் திசையில் ஓர் ஓரத்திற்கு தள்ளப்பட்டிருந்தன. கார் தட்டாமாலை சுற்றி, ஒரு சிமெண்ட் டெலிபோன் போஸ்ட்டையே சாய்த்து பிளாட்ஃபார்மில் பாதியும் ரோட்டில் பாதியுமாக சொருகி நின்றிருந்தது. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வேறு திசையை பார்த்து நின்றிருந்தது ஸ்கார்பியோ. வென்டோ இடது புறம் பப்படம் ஆகி இருந்தது. ஸ்கார்பியோ முன்புறம் பம்பர் பானெட் எல்லாம் காலி. 

வென்டோவிலிருந்து ஒரே புகை. வென்டோவின் ஓட்டுனர் கார் கதவை திறந்துக்கொண்டு இறங்கி நிற்க முயன்று கீழே விழுந்தார்.  நொடியில் கூட்டம் கூடி விட்டது. அவரை தூக்கி உட்கார வைத்தனர். ஒரே புகை மண்டலம். மறுபுறம் உள்ள கதவை யார்யாரோ தட்டி திறக்க முயன்று முடியாமல் போகவே டிரைவர் சீட் இருந்த பக்கமே ஓடி வந்தனர். யாரோ ஒரு தம்பி காருக்குள் குனிந்து அக்கா பிள்ளைய குடுங்க மொதல்ல என்று குழந்தையை  வாங்கி வெளியே நின்றிருந்தவர்களிடம் கொடுத்தான். இப்ப நீங்க கைய குடுங்க அக்கா என்று மெதுவாக கையை பிடித்து வெளியே இழுத்தான். அவன் ஒருவனால் முடியாமல் போகவே  இன்னும் இருவர் சேர்ந்து இரு கைகளையும் பற்றி  சிரமப்பட்டு காருக்கு வெளியே இழுத்தனர்.வெளியே இழுக்கப்பட்ட ஜீவன் அடியேன் தான். கணவர் தான் வண்டியை ஒட்டியது.

 நடு ரோட்டில் இழுத்துப்போட்டிருந்தார்கள் என்னை. அரை மயக்கம். தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார்கள். கணவருக்கு  கையில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. இந்த களேபரத்தில் பெருங்குரலெடுத்து அழுதுக்கொண்டிருந்த என் மகன் என்னைக் கண்டதும் 
இறுகக்கட்டிக்கொண்டான்.

அவன் அழுகையை நிறுத்திய பின்னும் 
நான் வெகு நேரமாக அழுதுக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதே அங்கு என்னைச் சுற்றி நின்ற மக்கள்  பயப்படாதீங்க அழுகைய நிறுத்துங்க என்று சொன்ன பிறகே உரைத்தது. வென்டோ வாங்கியிருந்த அடிக்கு எங்களுக்கு பட்ட அடியை பார்த்தவர்கள் நம்புவது சிரமம். அவனுக்கு எந்த அடியும் இல்லை என்பதே பெரிய ஆறுதல். யாரோ எனக்கும் பையனுக்கும் திருநீறு வைத்து விட்டார்கள்.காலை நீட்டி நீட்டி மடக்க வைத்தார்கள்.  என் இடது கையில் மட்டும் சுரீர் சுரீரென்று வலி. அப்போது ஒரு பட்டுப்புடவை கட்டி  நகை  எல்லாம் போட்ட பெண்மணி ஒருவர் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் தண்ணி குடிங்க என்று அவருடைய பாட்டில் திறந்து கொடுத்தார். வாங்கி குடித்துக்கொண்டிருக்கும்   போதே 108 ஆம்புலன்ஸ் சைரனோடு வந்து நின்றது. 

என் கணவர் கையில் ரத்தம் ஒழுக ஒரு போலீஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் ஒரு சபரிமலை வேஷ்டி கட்டிய மனிதர். ஆம்புலன்சை பார்த்ததும் பகீரென்றது.  ஸ்கார்பியோவில்  வந்த யாருக்கோ ரொம்ப சீரியஸ் போல என்று   பயந்து விட்டேன். ஆம்புலன்சிலிருந்து இறங்கிய பாரா மெடிகல் ஸ்டாஃப் நேராக ஸ்ட்ரெச்சரோடு என்னருகே வந்த பின்பு தான் நம்மை அழைத்துச் செல்லவே வந்துள்ளது ஆம்புலன்ஸ் என புரிந்தது.விபத்தில் யாருக்கு என்ன அடி என்றெல்லாம் பார்க்காமல் விபத்து நடந்த விதத்தைப் பார்த்தே யாரோ 108 க்கு போன் செய்திருந்தார்கள்.அவசர சிகிச்சைக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு செல்லும் அளவுக்கு அடிபடாமல் தப்பித்தது தம்பிரான்( இவர் யாரு?) புண்ணியம்.   எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டேன்.எந்த பேஷன்ட்டும் இப்படி பேசிக்கொண்டே 108ஆம்புலன்சில் ஏறி இருப்பார்களா என்று தெரியவில்லை...... 

3 comments:

aekaanthan said...

நிசப்தம் மூலமாக உங்கள் பக்கத்து வந்து படித்தேன். அதிர்ச்சி. நல்ல வேளையாக நீங்களும், கணவரும், குழந்தையும் தப்பித்தீர்கள் பெரிய ஆபத்து ஏதுமின்றி. அருகிலிருந்தோர் பாய்ந்து வந்து உதவியது மிகவும் நல்ல விஷயம். நமக்கென்ன, ஏதோ சத்தம் என கடந்து செல்லும் உலகமிது.

தம்பிரான் யார்? உங்களையும் என்னையும் படைத்த அந்த புண்ணியவான் தான்! நம் தலையெல்லாம் இருக்கவேண்டிய இடத்தில் அவனால்தான் இருக்கிறது.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
-ஏகாந்தன்
www.aekaanthan.wordpress.com
silver1peak@gmail.com

அருணாவின் பக்கங்கள். said...

Thank you aekaanthan. Am grateful to all those souls who helped us on that fateful day.

அமர பாரதி said...

Good to see that you are OK. Take care.