நம்முடைய பற்கள் சொத்தையோ நல்ல பல்லோ , அவை பிடுங்கிய பிறகும் பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சிக்காக பயன்படுகிறது என்பது பல் மருத்துவம் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தவிர்த்து மற்றவர்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. சொத்தைப்பல்லை தவிர வயதானவர்களுக்கும், ஈறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆட்டம் காணும் பற்களை பொதுவாக எடுத்துவிடுவதுண்டு.
சமீப காலம் வரை அவரவர் ஊரில் இருக்கும் ஒரு பல் மருத்துவரிடம் ஒரு காலி பாட்டில் கொடுத்து நல்ல பற்களை பிடுங்கினால் அதில் போட்டு வைக்க சொல்லுவார்கள் மாணவர்கள். ஆனால் தெருவுக்கு நாலு பல் மருத்துவர்கள் பல்கிப்பெருவிட்ட நிலையில் ஒரு பல் மருத்துவரிடம் மட்டும் புட்டியை கொடுத்துவிட்டால் வேலைக்கு ஆகாது. தெரிந்த தெரியாத அனைத்து டென்டல் கிளினிக்குகளிலும், அவர் முந்தாநாள் தான் கிளினிக் திறந்தவராக இருந்தாலும் ஒரு பாட்டிலில் நம் பெயர் எழுதி பல் தர்மம் பண்ணுங்க சாமி என்று அவர் கிளினிக்கில் வைத்து விட வேண்டும். இரண்டே இரண்டு பற்கள் கிடைத்தால் கூட எதற்காகவாவது பயன்படும்.
பல் மருத்துவக்கல்லூரிகளில் வாய் நோய் அறுவை சிகிச்சை துறையில் இதைப் போல நிறைய புட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பல் கிடைக்கும். அதிர்ஷ்டம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த துறையில் பணி புரியும் பணியாளர்களே நாம் வைத்த புட்டியிலிருந்து பற்களை எடுத்துக் கொள்வார்கள். பல் மருத்துவமனை பணியாளர்கள் இதனை ஒரு வியாபாரமாகவே செய்து வருகின்றனர். சென்னையில் தனியார் பல் மருத்துவக்கல்லூரிகள் மொத்தமே நான்கைந்து இருந்த காலத்தில் இவர்கள் பிசினஸ் அமோகமாக நடந்தது. தற்போது சென்னையில் மட்டும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பதினைந்திற்கும் மேல் உள்ள நிலையில் பற்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.அதனால் இயற்கை பற்களுக்கு பதிலாக டைஃபோடான்ட் எனப்படும் செயற்கை பற்களைக் கொண்டு செய்யப்படும் மாடல்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாடலின் விலை மூவாயிரத்துக்கும் மேல். அவ்வளவு பல் தட்டுப்பாடு. ஆனால்
இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கு நிஜ பற்களின் தேவை இன்னும் தீர்ந்தப்படில்லை. பல் விற்பனையாளர்கள் இதில் நல்ல லாபம் பார்க்கின்றனர். நாங்கள் படிக்கும் காலத்தில் இருபத்தியெட்டு பற்கள் கொண்ட ஒரு முழு பல் செட் எண்ணூறு ரூபாய் வரை விற்கும். ஆனால் இப்போது ஒரு பல்லின் விலையே நூற்றி ஐம்பதிலிருந்து முன்னூறு வரை ஆகிறது. சுலபமாக கிடைக்காத கடைவாய்பற்களின் விலை இன்னும் அதிகம். அப்படியானால் ஒரு முழு பல் செட்டின் விலை என்னவாக இருக்கும்?டிமாண்ட் இன்னும் இருப்பதால் இந்த விற்பனையாளர்கள் மருத்துவமனைகளில் பற்கள் சேகரிப்பதுப்போக இடுகாட்டிலிருந்தும் பற்களை எடுத்து வருகின்றனர். முன்பெல்லாம் அனாடமி படிக்கத் தேவையான எலும்புகளை இடுகாட்டில் வாங்கி வருவார்கள் . அண்மைக்காலங்களில் பற்களும் எலும்புகளோடு சேர்ந்துக்கொண்டன. இடுகாட்டு பல் கலெக்ஷனிலும் நிறைய வரைமுறைகள் உண்டு என்கிறார் பல் வியாபாரி ஒருவர். புதைக்கப்பட்ட பிணங்களில் இருந்து மட்டுமே பற்கள் கிடைக்கும். ஒவ்வொரு பிணத்திலிருந்தும் புதைத்த பதினைந்திலிருந்து இருபது நாட்களுக்குள் பற்களையும் எலும்புகளையும் எடுத்து விட வேண்டும். இல்லையெனில் அதன் மீதே இன்னொரு பிணத்தை புதைத்து விடுவார்கள்.இடப்பற்றாக்குறை தான். .மீண்டும் ஒரு இருபது நாள் காத்திருக்க வேண்டும். இதில் வெட்டியானுக்கு கணிசமான பங்கு உண்டு.பிணம் புதைக்கப்படும் போதே புக்கிங் செய்துவிடுவார்களாம் பல் வியாபாரிகள். சரியாக இருபது நாட்கள் கழித்து வந்து பற்களை சுத்தம் செய்து வாங்கிச் செல்வார்களாம். ஒரு பிணத்திலிருந்தே முழு பல் செட்டும் கிடைத்துவிடாது. நான்கைந்து பிணங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பற்களில் இருந்து ஒரு முழு செட்டை உருவாக்க வேண்டும். சிரமமான வேலை தான். அதனால் தான் அவ்வளவு விலையோ என்னவோ. புதைக்க இடமில்லாமல் மின்தகனம் செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் இடுகாட்டிலிருந்தும் பற்கள் வரத்து குறைந்துள்ளது பல் வியாபாரிகளின் சமீபத்திய வருத்தம்.
ஆதலால் ஏதாவது தானம் செய்ய நினைத்து செய்ய முடியாமல் இறந்து போய்விட்டாலும் பெரிதாக வருத்தப்பட வேண்டாம்.நீங்கள் எரியூட்டப்படாதவரை யாராவது உங்கள் பல்லை கையில் வைத்து நோண்டிக்கொண்டிருக்கக் கூடும்- பயிற்சிக்காக!
4 comments:
Good one Aruna..I loved the title :)
Interesting. There is a world after death for living people.
Thank you Hema:-)
Thank you Sivaram :-) sorry about the late response. Some problem in replying here....
Post a Comment