Sunday, 20 April 2014

108 #2


ஸ்ட்ரெட்சரில் படுக்கவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.மகனை மடியில் அமர்த்தி நானும் உட்கார்ந்து கொண்டேன். ஆம்புலன்ஸ் டிரைவர் படு வேகமாக வண்டியைக்கிளப்ப 'நான்- க்ரிடிகல் கேஸ்' தான மெதுவாவே போங்க என  நான் பிதற்ற உள்ளே இருந்த கிரிடிகல் கேர் நர்ஸ் உங்களுக்கு கொஞ்ச நாளைக்கு பயமா தாங்க இருக்கும் என்றார். 
எங்கள் ஊரில் பணியாற்றிய போது வருமுன் காப்போம் கேம்ப் செல்ல  ஆம்புலன்சில்  சென்ற அனுபவம் உண்டு.ஆனால் ஒரு பேஷன்டாக ஆம்புலன்சுக்குள் பேசியபடி, அம்புலன்சுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும் மற்ற வாகனங்களை பார்த்தபடி, மெயின் ரோட்டில் போட்டிருந்த தற்காலிக தடுப்பை நீக்கி அம்புலன்சுக்கு வழி அமைத்துக்கொடுத்த போலீஸ்காரர்களை  கவனித்தபடி எனக்கு எதுக்கு ஆம்புலன்ஸ் என்று யோசித்துக்கொண்டே  அமர்ந்திருந்தேன். பேஷன்டாக ஆம்புலன்சில் உட்கார்ந்துக்கொண்டு சுற்றி நடப்பதைப் பார்க்க உண்மையாகவே வித்தியாசமாக இருந்தது. பையனுக்கு எதுவும் புரியவில்லை. அம்மா இந்த வண்டியிலேயே மாமா வீட்டுக்கு போறோமா என்று கேட்டுக்கொண்டிருந்தான். 

எந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஏதோ ஒரு மருத்துவமனை பெயரை சொன்னார்கள். நான் அண்ணா நகரில் உள்ள சற்றே பிரபலமான மருத்துவமனை பெயரை சொல்லி அங்கே ஏன் செல்லவில்லை என்றேன்.  அந்த மருத்துவமனையில் அட்மிஷன் போடுவதாக இருந்தால் மட்டுமே அவசர சிகிச்சை அளிக்க ஒத்துக்கொள்வார்கள்,வெறும் முதலுதவி மட்டும் தானென்றால் சிகிச்சை அளிக்கமாட்டார்கள்  என்று அதிர்ச்சி தகவல் அளித்தனர் .அது சரி, செத்தா தான சுடுகாட்டுக்கு வழி தெரியும் ?

ஆம்புலன்சில் போகும் போது தான் கணவர் சொன்னார் அந்த சபரி மலை பார்ட்டி தான் ஸ்கார்பியோ ஓட்டி வந்தவராம், அந்த பட்டுப்புடவை கட்டிய பெண் அவர் மனைவி போல. குடும்பத்தோடு இருமுடி கட்ட சென்றுக் கொண்டிருந்தார்களாம். இந்த வேகத்தில் போனால் சாமியை நேரிலேயே பார்க்கலாம் என்றேன். ஆனால் அவர் வேகமாக வருவதை கவனிக்க நாம் மெதுவாக சென்றிருக்க வேண்டும்தானே என்றதற்கு கணவரிடமிருந்து பதிலை காணோம். எங்கள் விபத்துக்கு பிறகு அண்ணாநகரில் இரண்டு மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் தற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கண்கெட்ட பின் தானே நம் ஊரில் எப்போதுமே சூர்ய நமஸ்காரம். ஓட்டுனர்கள் இருவரும் வேகமாக போனதால் கடைசியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த எனக்கு தான் அதிகப்பட்ச அடி.ஆஸ்பத்திரியில் இடது கை மூட்டு எலும்பு ஹேர் லைன் கிராக் என்று சொல்லி மாவு கட்டு போட்டு, பதினைந்து நாள் லீவும் போட்டு அப்போதும் வலி குறையாமல் மேலும் பதினைந்து நாளைக்கு ஆர்ம் ஸ்லிங் போட்டு,எனக்கான வேலைகளை கூட என்னால் செய்துக்கொள்ள முடியாமல்  எலும்போடு சேர்த்து நானும் க்ராக்காகி இருந்தேன். இயலாமையில் வரும் வெறுப்பும் எரிச்சலும் என்னை விட்டு விலக ஒரு மாத காலம் ஆனது. . 

எனக்கு ஸ்பீட் என்றால் அந்த படத்தில் நடித்த கியனு ரீவ்ஸ் தான் முதலில் ஞாபகம் வருவார். ரேசிங் பற்றிய எனது அறிவும் ஆர்வமும் அவ்வளவே. ஆனால் இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஷூமேக்கர்களையும்  நரேன் கார்த்திகேயன்களையும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. 
பின்னால் ஒரு  லெக்கிங்க்ஸ்  போட்ட  யுவதி  இறுக கட்டியிருந்தால் ஷூமேக்கர் ஏர் போர்ஸ் ஒன் பைலட்டாகவே  மாறிவிடுகிறார். முன்புறம் யார் காலிலோ விழப்போவதை போன்ற போஸில் அமர்ந்தபடி யாராவது பைக்கில் வந்தாலே பதறி ஒதுங்க வேண்டி உள்ளது. 

இன்னமும் கணவரோடு காரில் அமர்ந்து கிராஸ் ரோடுகளில் செல்லும் போது எங்கிருந்து யார் வேகமாக வருவார்களோ என்று பயமாகவே உள்ளது. ஒவ்வொரு முறையும்  இடது கையால்  கனமான பொருளை தூக்கும் போது அந்த அதிகாலை வேகமும்,இரைச்சலும், மகனை கட்டிக்கொண்டு நடுரோட்டில் அமர்ந்து அழுத அழுகையும், ஆம்புலன்சும் ஒரு சேர நினைவுக்கு வந்து போகும், வலியோடு. 

9 comments:

ஜெயக்குமார் said...

நல்ல பதிவு டாக்டர். எழுத எழுத சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லும் விதம் பிடிபட்டிருக்கிறது. கடைசி பாராவும், அதற்கு முந்திய பாராவும் மிக உண்மை. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

Osai Chella said...

I always spot talents early ! lol ! Cheers !

Unknown said...

Pora pokka paatha - Thi. Janakiraman picchai vaanganum polrukkae !!!

அருணாவின் பக்கங்கள். said...

Thank you sir:-)

அருணாவின் பக்கங்கள். said...

Chella :-):-):-)!!

அருணாவின் பக்கங்கள். said...

Sujji .... Unakku irukka nakkal!

அமர பாரதி said...

Nice narration. Keep it up. A well written article and happy to see that things are not bad.

அருணாவின் பக்கங்கள். said...

Thank you Sivaram:-)

tspbabu. said...

Visualised,horrified.admire the resilience quality in you.