Wednesday, 27 August 2014

ட்ரங்கன் ட்ரைவிங்

சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த செய்தி."கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் பலி. மூன்றாமவர் படுகாயம்." 

அந்த விபத்தில் இறந்த இரண்டு இளைஞர்களுக்குமே இருபத்தியேழு வயது.இரவு ஒன்பது மணிக்கு ஊருக்குள் இருக்கும் ஒரு முக்கியச் சாலையில் (புறவழிச்சாலை அல்ல)குடித்துவிட்டு காரை தறிக்கெட்டு ஓட்டியதால் விபத்து நேர்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் (அன்று) குடித்திருக்கவில்லை. இவர்கள் கெட்ட நேரம் அன்று குடித்திருந்தது கார் ஒட்டுனர் மட்டுமே. 

இரு சக்கர வாகன விபத்தில் பலி என்ற செய்தியை படிக்கும் போதெல்லாம் மனதிலெழும் காரணங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது தண்ணி. இரண்டாவது ஹெல்மெட். ஒன்றைப் போடக்கூடாது, இன்னொன்றை கட்டாயம் போடவேண்டும். பெரும்பாலான வாகன விபத்துகள் இந்த இரண்ணடையும் மாற்றிப் பின்பற்றுவதாலேயே ஏற்படுகின்றன. 

குடி போதையில் வண்டி ஓட்டி தன் குடியோடு சேர்த்து அடுத்தவன் குடியையும் கெடுக்கும் புண்ணியாத்மாக்கள் கத்துக்குட்டிகளாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.பல முறை இதே முக்திநிலையில் வண்டி ஓட்டி எந்த விபத்தும் செய்யாத, செய்தாலும் யாரிடமும் சிக்காத,சிக்கினாலும் சுலபத்தில் சிக்கலிலிருந்து விடுபடத் தெரிந்த, ஆள், பதவி, பணம் என ஏதோ ஒரு வகையில் பலம் பொருந்தியவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

இப்போதெல்லாம் 'ட்ரங்கன் ட்ரைவிங்' என்ற வார்த்தை தினமும் ஒரு முறையாவது எங்கேயாவது எப்படியோ காதில் விழுந்துத் தொலைத்து விடுகிறது. குடித்துவிட்டு வண்டியை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பது ஆட்டோவின் பின் எழுதப்பட்டுள்ள பெண்ணின் திருமண வயது 21 மாதிரி அழுத்தமில்லாத ஒரு சாதாரண வாக்கியமாகிவிட்டது. நம் ஊரில் ஒருவன் குடித்துவிட்டு வண்டியை ஓட்டி மாட்டும் போது முதல் முறை அபராதம் விதிக்கப்படுகிறது. மாத கடைசியாக இருந்தால் இந்த அபராதமும் அவசியமற்று போகும். இரண்டாவது, மூன்றாவது முறையும் அதே தவறு செய்தால் அந்த அபராதத் தொகையும் அது போய்ச் சேரும் இடமும் மட்டுமே மாறுபடுகின்றன. 

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பதைக் கடுமையாகப் பின்பற்றினால் வாரா வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஊரெங்கும் நடக்கும் உற்சவங்களில் ஊரில் பாதிப் பேருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் இல்லாமல் போயிருக்கும். திங்கட் கிழமை காலை ஆட்டோக்காரர்களுக்கு அமோகமாய் விடிந்திருக்கும். ஆனால் நம் ஊரில் 'குடி போதையில் வண்டி ஓட்டியவர் ஓட்டுனர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது' போன்ற செய்திகள் ரமணன் சொல்லி மழை வரும் கதை மாதிரி தானே உள்ளது? 

சாலை விபத்தினால் மரணம் எனும் செய்தி தினமும் டிவியிலும் பேப்பரிலும் ராசிப்பலன், வானிலை, தங்கம் விலை நிலவரம் மாதிரி தினமுமே சொல்லப்படும் வழக்கமான செய்தியாகிப் போய்விட்டது. பாதிக்கப்பட்டவரோ இறந்தவரோ நமக்குத் 
தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் நாம் இது போன்ற சம்பவங்களைச் செய்தித்தாளின் அடுத்தப் பக்கம் திருப்பும் போதே பெரும்பாலும் மறந்து விடுவோம். 
மேற்கூறிய சம்பவமும் அவ்வாறான ஒன்றே. 

நாலு ரவுண்டுக்குப் பின்னாடியும் நானெல்லாம் ஸ்டெடியா ஏரோப்ளேனே ஓட்டுவேன் போன்ற வீர வசனங்கள் பப்ளிக்காக ஒலிக்கத் தொடங்கியுள்ள காலம் இது. குடி இந்த அளவு ஊக்குவிக்கப்படும் நம் ஊரில் லோக்கல் சரக்கடித்தால் மூன்று ரவுண்டு ,ஃபாரின் சரக்கு என்றால் இரண்டு ரவுண்டு வரை வண்டி ஓட்டலாம், அதற்கு அதிகமானால் வண்டி ஓட்டக்கூடாது போன்ற புது மாதிரி சட்டங்களைக் கூட வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம். 

சாலை விபத்துகளுக்கான வேறு பல சில்லறைக் காரணங்கள் என்று பார்த்தால் ஓவர் ஸ்பீடிங், இருவர் செல்ல வேண்டிய வாகனத்தில் சர்க்கஸ் மாதிரி எத்தனை பேர் வேண்டுமானலும் தொற்றிக்கொண்டு பயணித்தல், நோ என்ட்ரியில் வண்டி ஓட்டுதல், அவரவர் வசதிக்கேற்ப சிவப்பு மஞ்சள் பச்சையை மதித்தல் என ஒரு லிஸ்டே போடலாம். குடித்துவிட்டு ஓட்டுவது குற்றமாகப் பார்க்கப்படுமளவு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர்,சில சமயங்களில் ஐந்து பேர் (பெட்ரோல் டாங்கின் மீது ஒன்று,அப்பாவுக்குப் பின்னாடி ஒன்று,அம்மா மடியில் ஒன்று) அடங்கிய குடும்பமே அசாதாரணமாகப் பயணிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை,அந்த குடும்பத்துக்கும் இது போன்ற ஒரு விபத்து நேரும் வரை. 

கூட்டிக் கழித்துப் பெருக்கி துடைத்துப் பார்த்தால் இத்தகைய விபத்துகள் எல்லாவற்றுக்குமே மூலக்காரணம் சாலை விதிகளை அவரவர் இஷ்டப்படி மதிப்பதே என்பது தெளிவாகப் புரியும் .முதல் முறை கண்டுக்கொள்ளாமல் விடப்படும் சிறு சிறு தவறுகள் அனைத்தும் பூதாகரமாக அதன் விளைவுகளைக் காண்பிக்கத் தொடங்கிய பின்னரே கதறுவது நமக்கும் ரொம்பவே பழகிவிட்டது.சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக உள்ள நாடுகளில் கூட மற்ற குற்றங்கள் எப்படியோ ஆனால் 'சாலை விபத்தின் மூலம் உயிரிழப்பு' நம் நாட்டைப் போல எங்குமே மலிந்து காணப்படுவதில்லை. 

முதல் பத்தியில் கூறிய விபத்தை நிகழ்த்தியவர் என்னவோ அதற்கான சுவடே தெரியாமல் தனது அன்றாட வாழ்வினை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.ஏற்கனவே இரண்டு முறை இதே பரவச நிலைமையில் விபத்து உண்டாக்கிய பெருமையும் இவரைச் சேரும்.சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கும் இந்தப் புத்திசாலிக்குத் தண்டனைப் பெற்றுத் தருவது அத்தனை எளிதான விஷயமல்ல என்பதை நன்றாகப் புரிந்துக்கொண்டுள்ள இறந்த இளைஞர்களின் பெற்றோர், இன்னமுமே வழக்குப் பதிவுசெய்யாமல் தயங்கி தயங்கி நிற்கின்றனர் என்பது கூடுதல் செய்தி. 

நம் நாட்டில் என்ன தவறு செய்தாலும் பணம்,பதவி,பலம் இருந்தால் எப்பேர்பட்ட குற்றங்களிலிருந்தும் வெளியே வந்துவிட முடியும் என்ற மோசமான முன்னுதாரணம் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் பதிய வைக்கப்படுவது வேதனையான விஷயம். இந்த விபத்தும் அதே தர்ம கணக்கில் தான் சேர்த்தி. இதுவே விதி மீறல்களுக்கான அடிப்படை காரணமாகவும் அமைந்து போவது நமது துரதிஷ்டமே. 

Saturday, 23 August 2014

எல்லா மருந்தும் கசப்பானதல்ல!

மருத்துவர்கள் பற்றிய பதிவுகளைப் படித்து படித்து ஒரு வித சலிப்பே மேலோங்கி நிற்கிறது. 

ஒரு புறம் இது தாண்டா சான்ஸ் இதை விட்டா இவனுங்கள நாம பப்ளிக்கா திட்டவே முடியாது என்று வரிந்து கட்டிக் கொண்டு ஆளாளுக்கு மருத்துவர்களை சகட்டுமேனிக்கு காய்ச்சுகிறார்கள். தன்னுடைய அப்பாவுக்கு மருத்துவம் பார்த்தது முதல் சின்ன மாமியாருக்கு சுண்டு விரல் சுளுக்கிக் கொண்டது வரை எல்லாவற்றையும் பதிவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் நடு நடுவே மருத்துவர்களுக்கு வசையோடு கூட என்ன ட்ரீட்மென்ட் செய்திருக்க வேண்டும், எந்தெந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும்,எவ்வளவு ஃபீஸ் வாங்கியிருக்க வேண்டும் என்று அவரவரின் இஷ்டத்துக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு தங்களின் வேலை பற்றி புரிய(!) வைக்க தான் வாங்கும் சம்பளம் முதல் வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் வரை பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர். 

மருத்துவர்களை சாடி பதிவிடுபவர்கள் அனைவரும் தனக்கு ஏற்பட்ட ஒரு  ஒரே ஒரு கசப்பான அனுபவத்தை வைத்து மருத்துவ துறையே மோசம் என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கோபிநாத்தைக் காட்டிலும் மட்டமாக பேசிவருவதைப் பார்க்க பாவமாகத் தான் இருக்கிறது. 
இவர்களின் பதிவுகளை படித்து படித்து சலிப்பும் எரிச்சலும் மட்டுமல்லாது சில கேள்விகளும் மனதில் எழுகின்றன.  

முதலில் இவர்களுக்கு அந்த கசப்பான மருந்தை அளித்தது யார்? தேவையில்லாத பரிசோதனைகளை செய்ய சொல்கிறார், வேறு இடத்தில் செய்த பரிசோதனைகளை மறுபடி செய்ய சொல்கிறார், நிறைய காசு கேட்கிறார்....இதை எல்லாம் செய்ய சொல்லும் மோசமான மருத்துவரிடம் உங்களை போகச் சொன்னது யார்?இந்த மாதிரி மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்ப்பந்தித்தது யார்?
எனக்கு இந்த பரிசோதனை செய்துக்கொள்ள விருப்பமில்லை என்று ரைட் ராயலாக வெளியே வராமல் குத்துதே குடையுதே என்று புலம்ப வேண்டிய அவசியம் என்ன? 

மூன்று மணி நேரம் செலவழிக்கும் ஒரு படத்தைப்  பார்க்க எத்தனை பேரிடம் விசாரிக்கிறோம், எத்தனை விமர்சனங்களைப் தேடி தேடி படிக்கிறோம்? ஒரு புடவை எடுக்க பத்து கடை ஏறி இறங்குவதில்லையா? உங்கள் உடலைப் பரிசோதிக்க நல்ல மருத்துவரைப் பற்றியும் மருத்துவமனைகளைக் கட்டணங்களைப் பற்றியும் விசாரித்து, இது நமக்கு ஒத்து வருமா என்று யோசித்து செயல்படலாமே?இதில் ஏதேனும் ஒரு காரணம் உதைத்தாலும் வேறு மருத்துவமனையை அணுகலாம் தானே? உங்கள் அதிருப்தியை சம்பந்தப்பட்ட மருத்துவரிடமே இது நாள் வரை தெரிவித்ததுண்டா? இதை எல்லாம் செய்யாமல் எனக்கு சரவணபவனில் அதுவும் லெக் பீஸோடு தான் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிப்பது அபத்தமில்லையா? 

மருத்துவர்களை பற்றி இவ்வளவு கிழிப்பவர்கள் அடுத்த முறை உங்கள் ஆஸ்தான மருத்துவரிடம் செல்ல வேண்டி நேர்ந்தால் மருத்துவர்கள் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அவர்களை முகநூலில் துவைத்து தொங்கவிட்டதையும் தில்லாக சொல்லிவிட்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்களேன்? 

உங்கள் உடலைப் பரிசோதனை செய்துக்கொள்ள எங்கே செல்ல வேண்டும் என்ற முடிவை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். பணம் பிடுங்கும் ஏதோ ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் சிகிச்சையை நிராகரியுங்கள்.உங்க‌ளுக்கு தோதான, நம்பிக்கையான மருத்துவரையும் மருத்துவமனையையும் அணுகுங்கள். அதை விடுத்து மருத்துவர்கள் எல்லாம் உயிர் காக்க அவதரித்த தெய்வங்கள், தவறே செய்யக்கூடாத ஜாம்பவான்கள், காசு பற்றி நினைக்கவே கூடாத தியாகிகள் என்று அவசியமற்ற பட்ட பேர்களையும் பிம்பங்களையும் நீங்களாக உருவாக்கிக்கொண்டு அந்த கட்டத்துக்குள் தான் மருத்துவர்கள் இருக்க வேண்டுமென அசட்டுத்தனமாக எதிர்ப்பார்க்காதீர்கள். காசே வாங்காமல் பணி புரிவது மட்டும் தான் உங்கள் அகராதியில் 'சேவை'என்றால் அதை செய்யும் மருத்துவர்களும் இங்கு இல்லாமல் இல்லை. அடையாளம் காண வேண்டியது உங்கள் சாமார்த்தியம். 

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கே வரவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை உங்கள் தெரு முனை திரும்பினால் இருக்கும் க்ளீனிக்கு கூட போகலாம். அரசு மருத்துவமனைக்கு செல்லுவதால் உங்கள் குலப்பெருமை பாதிக்காமலும் சிறிய க்ளீனிக்கு செல்வதால் உங்கள் அறிவை யாரும் மட்டம் தட்டி விடாமலும் கவனித்துக்கொள்ளவும். 

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். உங்க‌ளுக்கோ உங்கள் பிரியமானவர்களுக்கோ ஒரு இதய அறுவை சிகிச்சையோ எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையோ நடப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு அறுவை சிகிச்சையில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.சாதாரண டான்சில்ஸ் ஆபரேஷனில் இறந்துப் போன குழந்தையும் உண்டு கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்டில் உயிர் பிழைத்து சுகமாக வாழ்பவர்களும் உண்டு. ஆக இது போன்ற அறுவை சிகிச்சைகளில் உங்கள் உயிர் அந்த மருத்துவரின் கைகளில் மட்டுமே. அந்த உயிர் காக்கும் தொழிலுக்குரிய மரியாதையை மட்டும் மனதில் நிறுத்துங்கள். தனிப்பட்ட பாதிப்பினால் உண்டாகும் எரிச்சலை 'அறச்சீற்றம்' என்ற பெயரில் பொதுவெளியில் தெளிக்காதீர்கள். 

பேருந்து விபத்துக்கு பிறகு காட்சியளிக்கும் அவசர சிகிச்சை/ ட்ராமா வார்ட்டை போல் ரணகளமாக இருக்கிறது முகநூல்.இங்கு மருத்துவர்களை கிழிப்பவ‌ர்கள் எல்லாம் , நேரம் கிடைத்தால் ஒரு சாலை விபத்தோ, தீ விபத்தோ நடந்து முடிந்த அன்றோ அதற்கு மறுநாளோ அவசர சிகிச்சை/ ட்ராமா வார்ட் போன்ற இட‌ங்க‌ளுக்கு ஒரு விசிட் அடிக்கவும்..நீங்கள் இங்கே ஃப்ரன்ட் லோடிங்  வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அங்கே என்னத்த கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என கண்கூடாக பார்க்க முடியும்.  

அதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து மருத்துவர்கள் லெமன் சேவை செய்கிறார்களா இல்லை பிரியாணி கிண்டுகிறார்களா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். 

Sunday, 10 August 2014

இதுவும் கடந்து போகும்


ஏழெட்டு வயதான சிறுமி ஒருத்தி, படுத்தால் மூச்சு விடச் சிரமமாக உள்ளதாகத் தன் தாயுடன் பல் மருத்துவமனைக்கு வருகிறாள். இடது பக்க அன்னத்தில் ஒரு சிறிய கட்டி. அரசு மருத்துவமனைக்கே உரிய சாங்கிய சம்பிரதாயங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டியிலிருந்து திசு எடுத்து,பரிசோதனைக்கு (பயாப்சி) அனுப்பப்படுகிறது.அந்தக் கட்டி,அன்னத்தில் சிறிதாக தெரிந்தாலும்,இடது மேல் தாடையின் சைனஸ் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது சி டி ஸ்கேனில் தெரிய வருகிறது. அதற்குள் அது புற்றுநோய் கட்டி அல்ல, சாதாரணக் கட்டி தான் என்று திசுப்பரிசோதனை ரிப்போர்ட் வரவே, கட்டியை மருந்துகள் மூலமாகக் குறைத்து, பின்னர் தேவையெனில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தத் திசுவைப் பரிசோதனைக்கு அனுப்பிய பல்மருத்துவருக்கு திருப்தி ஏற்படாமல் தன்னிடம் பயிலும் முதுகலை மாணவர்களின் உதவியோடு கொஞ்சம் பணம் சேர்த்து மேலும் ஒரு முறை கட்டியிலிருந்து திசுவை எடுத்து,வேறு சில சிறப்பு பரிசோதனைகளுக்காக அபோல்லோ கேன்சர் மருத்துவமனைக்கு அனுப்புகிறார். அவர் சந்தேகித்தபடியே படியே அது ஈவிங்க்ஸ் சார்கோமா என்ற புற்று நோய்க் கட்டி என்று ரிப்போர்ட் வருகிறது. உடனே அந்தச் சிறுமி பல் மருத்துவக்கல்லூரியிலிருந்து, அரசு பொது மருத்துவமனையின் கேன்சர் பிரிவுக்கு கீமோதெரபிக்காக.
பரிந்துரைக்கப்படுகிறார். கீமோதெரபி கொடுக்கக் கொடுக்க கட்டியின் அளவு சிறியதாகத் தொடங்கியது. ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் இங்கிருந்து ஆரம்பமாகியது.

அந்தச் சிறுமி, மருத்துவமனைக்குத் தன் தாயுடனேயே வருவாள். தாய்க்கு கூலி வேலை. தந்தைக்கு நமது அரசு வேறு சில முக்கியப் பொறுப்புகள் அளித்துள்ளதால் அவர் அதைச் சிறப்பாக செய்துக்கொண்டிருந்தார்.  தாம்பரத்தைத் தாண்டி வீடு. அரசுப் பொது மருத்துவமனை இருப்பதோ  சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில். பஸ் கட்டணமே, இருவர் வந்து போக ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகும். இது தவிர சாப்பாடு செலவுகள். தாய் கூலி வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு. தந்தை பல நேரங்களில் தாயிடம் உள்ள பணத்தையும் பிடுங்கி, அரசின் வருமானத்தை அதிகரிக்க உதவிக்கொண்டிருந்தார். இதனால் தாம்பரத்திலிருந்து அந்த சிறுமியை கூட்டிக் கொண்டு நேரத்துக்கு வைத்தியத்துக்கு வர முடியாமல் தாயும் திண்டாடினார். மேலும்  அவர் அடிக்கடி தாமதமாக வரவே, லேட்டாக வருவதால் மருந்து போட முடியாது என்று இரண்டு மூன்று முறை மருத்துவமனையிலுருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தாய், வைத்தியத்துக்கு வருவதையே நிறுத்தி விட்டிருக்கிறார். பல் மருத்துவர் தரப்பிலிருந்து பல முறை தொலைபேசியில் அழைக்க முயற்சித்தும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, அவரும் விட்டு விட்டார். கிட்டத்தட்ட இரண்டுவருடம் கழித்து மறுபடி தொடர்பு கொண்டு அந்தத் தாயிடம் பேசி, வைத்தியத்திற்கு வரவழைத்தனர். அந்தச் சிறுமியின் அன்றைய நிலையை ஃபோட்டோவில் பார்த்த மாத்திரத்திலிருந்து நடு மண்டையில் யாரோ சுத்தியால் அடித்ததைப் போன்ற பாரம்.

வாயை  திறந்துக் காட்டினாலொழிய எங்கே இருக்கிறது என்றே தெரியாத அந்தக் கட்டி, சிகிச்சை எடுக்காததால் அந்தச் சிறுமியின் முகத்தில்  கோர  தாண்டவமாடியிருந்தது. வாய் என்று சொல்லப்படும்  துவாரம்  முக்கால்வாசிக்கு மேல் அந்தப் புற்று நோய்க் கட்டியால் அடைக்கப்பட்டு எங்கேயோ வலது புறம் தள்ளபட்டிருந்தது.  இடதுகண் வேறு திசையை நோக்கி இருந்தது. சில புகைப்படங்கள் நம் மனதில்  ஆழப்பதிந்து விடுகின்றன. கும்பகோணம் தீ விபத்தில் கரிக்  கட்டைகளாய் கிடந்த குழந்தைகள், முள் வேலிக்குப் பின்னால் நிற்கும் குழந்தைகள், துப்பாக்கியோடு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போராளிக் குழந்தைகள்...அந்த வரிசையில் இதுவும்.

இந்தச் சிறுமி விஷயத்தில் யாரோ ஒருவரை நிச்சயம் குறை கூற முடியாது. குடியினால் குலைந்து போகும் குடும்பங்களைப் பற்றி கவலையில்லாமல், இத்தனை கோடி வசூல் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் அரசாங்கம் முதல்,அரசுமருத்துவமனையில்
நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்கத் தவறியவர்கள் வரை எல்லோரும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு இந்தச் சிறுமியின் பரிதாபமான நிலைக்குப் பங்களித்துள்ளனர். தன் குடும்பத்தைப் பற்றிக் கவலையே படாத எத்தனையோ ஆண் குடிமகன்களில் இந்த தந்தையும் ஒருவரே. ஒருவர் தவறு செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துக்கொண்டே அவர் திருந்த வேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. அந்தப் படிப்பறிவில்லாத தாயையும் குறை சொல்ல முடியவில்லை. இருவரின் வறுமை, அறியாமை, இயலாமை, முயலாமை என்று ஏகப்பட்ட ஆமைகள் சேர்ந்து இவர்கள் மீது பரிதாபமே மிஞ்சுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் எந்நேரம் ஆனாலும் பார்க்கப்படும் வைத்தியம், ஏனோ பகல் நேரங்களிலேயே கூட அரசு மருத்துவமனைகளில் சாத்தியமாவதில்லை.
பணம் தான் எல்லாவற்றுக்கும் எல்லா இடங்களிலும் அடிப்படை என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், மேலோட்டமாகப் பார்க்கும் போது தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் வேலையாவது நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டியுள்ளது.அரசு மருத்துவமனைகளிலும் பணம் புழங்காமல் இல்லை.அடிமட்டப் பணியாளர் நிலையிலேயே ஆரம்பமாகி விடுகிறது வசூல் வேட்டை. யாருமே அரசுத் தரப்பில் சம்பளமில்லாமல் வேலை செய்து விடவில்லை. அரசு கொடுக்கும் ஊதியம், பிற மாநிலங்களின் மருத்துவத் துறைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே. அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தனியாக சேவை மனப்பான்மை பொங்கி ஊற்றெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் அவரவர் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற கடமையைச் செய்தால் கூட போதுமானது. வேலையே செய்ய வில்லை என்றாலும் அரசு தரும் சம்பளம் வந்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது (lack of accountability) என்ற மெத்தனமே இது போன்ற அலட்சியமான அணுகுமுறைக்கு அடிப்படையாகிறது.மேலும் நம்முடைய நேரம் தவறாமை,கடமை உணர்ச்சி,அதிகார பலம் போன்ற நமது 'சிறப்புத் தகுதிகளை' எதிர்க்கத் திராணி இல்லாத ஒருவனிடம் முழுவீச்சுடன்  உபயோகிப்பதில் தானே நாமெல்லாம் கில்லாடிகள்!

வேறு எங்கும் பரவி இருக்காத நிலையில் ஆரம்பம் முதலே முறையான வைத்தியம் எடுத்துக்கொண்டிருந்தால் கூட இந்த வகை புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 25- 35 சதவிகிதம் மட்டுமே. அதனால் இதில்  பெரிதாக அலட்டிக்கொள்ள  எதுவும் இல்லை என அவரவர் வேலையை கவனிக்கக்  கிளம்பி விட்டாலும்  அந்தச் சிறுமியின் முகம் ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு கையாலாகாத்தனமும் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. என்னத்த படிச்சி என்ன பிரயோஜனம் என்று தாறுமாறாக மேலெழும்பும் எண்ணங்களை வழக்கம் போல் ஓர் ஓரமாக ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு, முகநூலில் ஃப்ரொஃபைல் ஃபோட்டோ என்ன வைக்கலாம் என்ற அதிமுக்கியமான வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த சிறுமியின் ஃபோட்டோவை பார்த்துவிட்டு வந்து பல நாட்கள் கழித்தே இந்தப் பதிவை எழுதுகிறேன். அண்மையில் தான் தெரியவந்தது அந்தச் சிறுமி இப்போது உயிரோடு இல்லை என்று. உண்மையில் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கிறது.

இதுவும் கடந்து போகும், நமக்கு எந்த பாதகமுமின்றி.

Thursday, 7 August 2014

ஆதங்கம்

சமீப காலமாக தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் ஊருக்கு வெளியே ஏகத்துக்கு முளைத்துள்ளன. சென்னைக்கு மிக மிக அருகில், திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் என்று ஃப்ளாட் ப்ரமோட்டர்கள் விளம்பரம் செய்வதைப் போல டிவி, ரேடியோவில் எல்லாம் கூவி கூவி அழைக்கிறார்கள். தாம்பரத்திலிருந்து பத்தே நிமிட பயணம் என்று சொல்லப்படும் கல்லூரிகளுக்கு பத்து நிமிடத்தில் செல்ல நாம் மைக்கேல் ஷூமேக்கரோடு தான் போக வேண்டும். சென்னையிலிருந்து இந்த கல்லூரிகளில் படிக்க வருபவர்கள் கல்லூரியில் இருப்பதை விட அதிக நேரம் கல்லூரி பேருந்தில் தான் செலவழிக்கிறார்கள்.

ஜன நடமாட்டமே இல்லாத, நோயாளிகளுக்குப் போதுமான  போக்குவரத்து வசதியும் இல்லாத,ஊருக்கு ஒதுக்கப்புறமாக பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள இக்கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும்பாலும் எந்த குறைச்சலும் இருப்பதில்லை. இது போன்ற தனியார் கல்லூரிகளில் நோயாளிகளை சப்ளை செய்வதைத் தவிர மற்ற எல்லா வசதிகளையுமே நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு செய்து தர முடிகிறது.

இந்த ஆளே இல்லாத டீ கடைகளுக்கு நோயாளிகள் வருவது பிள்ளையார் பால் குடிப்பதைப் போல அபூர்வ நிகழ்வாகும். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் வாங்கும் காபிடேஷன் பத்தாது என்று 
வரும் சொச்ச நோயாளிகளிடமும் வைத்தியத்திற்கு  கட்டணம் வசூலிக்கின்றனர்.நோயாளிகள் வரத்து குறைவாக உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.கட்டணத்திற்கு பயந்து பாதி வைத்தியத்தில் அரசு மருத்துவமனைக்கு ஓடி வரும் நோயாளிகள் ஏராளம்.ஆடிக்கும் அமாவாசைக்கும் வரும் அந்த கொஞ்ச பேருக்காகவாவது இலவசமாக சிகிச்சை அளித்தால் தான் என்ன? மாட்டார்கள். எல்லா வகையிலும் காசு பார்க்க வேண்டுமே! 

இது ஒரு கலைக்கல்லூரியாகவோ பொறியியல் கல்லூரியாகவோ இருக்கும் பட்சத்தில் கல்லூரி எந்த ஆள் நடமாட்டமில்லாத தனித்தீவில் இருந்தாலும் யாரும் அதனால் பாதிப்படைய போவதில்லை. ஆனால் மருத்துவம் பயில அடிப்படையே மனிதர்கள் தானே? அதற்கான வசதியே இல்லாத போதும் எந்த நம்பிக்கையில் இது போன்ற கல்லூரிகளில் எக்கச்சக்கமாக காசு கொடுத்து மாணவர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர் என்றே புரியவில்லை.உபரித் தகவலாக 90% கல்லூரிக் கட்டிடங்கள் அரசு அனுமதி பெற்று கட்டப்படவில்லை என்ற உண்மையை வேறு ஏதோ ஒரு அமைச்சர் சமீபத்தில் உளறிக் கொட்டி கிளறி மூடி அடங்கியுள்ளார். நம் நாட்டில் இதுப் போன்ற கல்லூரிகளுக்கு எவ்வாறு அனுமதி கிடைக்கிறது என்று அமெரிக்கா ரிடர்ன் மப்பிள்ளை நம்மூர் ரோட்டில் குப்பையை பார்த்து அதிர்ச்சி ஆவதைப் போல ஜர்க் எல்லாம் கொடுக்க கூடாது. நம்நாட்டில் எதுவும் சாத்தியம் என்பது அனைவரும் அறிந்ததே.

அரசிடம் அனுமதி பெற்று நடத்தப்படும் இந்த கல்லூரிகள் அனைத்தும் அடுத்த கட்டமாக நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மேலும் 'தரம் உயர்ந்து' நாற்பது ஐம்பது லட்சங்கள் காபிடெஷன் ஃபீஸ் வாங்கி தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கும் சேவையையும் நம் தமிழ்த்திருநாட்டில் செவ்வனே செய்யும். மருத்துவம் படிக்கும் போது நோயாளிகளையே பார்க்காதவன் எல்லாம் நம்ம இளைய தளபதி டாக்டர்.விஜய் வைத்துள்ள டாக்டர் பட்டத்தைப் போல ஒரு டிகிரியோடு வெளியே வருவான். இவர்களை நம்பி வைத்தியம் செய்துக் கொள்ளப்போகும் மக்களின் நிலை நமது புரட்சிக் கலைஞரிடம் சிக்கிய வேட்பாளர் நிலைமை போலத்தான்.எப்படியாவது பெயருக்கு முன் டாக்டர் என்ற இரண்டெழுத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் இந்த விபரீத விளையாட்டு மேலும் மேலும் பணத்தாசை பிடித்தவர்களால் ஊக்குவிக்கப்படுகிறதேயொழிய இந்த தவறான ஆசையை ஒடுக்குவார் யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

இந்த 'அனுமதி' அளிப்பது 'தரச்சான்றிதழ்' தருவது போன்றவை எத்தனையோ உயிர்களை பணயம் வைத்து செய்யப்படும் விஷயம். தனக்காக கட்டிக்கொள்ளும் தன் சொந்த வீட்டைத் தவிர, மற்ற எல்லாவற்றுக்கும்- அது ஒரு அடுக்கு மாடி கட்டிடமோ, பள்ளியோ, ஆஸ்பத்திரியோ, சினிமா தியேட்டரோ, மேம்பாலமோ- அவற்றின் தரத்தை நிர்ணயம் செய்ய மனித உயிர்களைக் காட்டிலும் விலைமதிப்பில்லாதது பணம் மட்டுமே என நினைக்கும் அதிகாரிகளின் பங்கு அசாத்தியமனது. இவர்கள் உள்ளவரை தகுதியற்ற அங்கீகாரங்கள் வழங்கப்படுவதையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் அந்நியன், ரமணா , கந்தசாமி மாதிரி யாராவது வந்து தடுத்து நிறுத்தினால்  தான் உண்டு! 

டிஸ்கி : இந்த கட்டுரை மருத்துவக்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் கண்ட ஆதங்கத்தின் வெளிப்பாடே அன்றி எந்த தனியார் அமைப்பை சாடும் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.