Wednesday, 31 May 2017

ரேஷன் கார்ட்


இதை பண்ணியே ஆகணுமா  சென்றாயன்

ரேஷன் கார்டை ஆதார் அட்டையோடு இணைக்கவேண்டுமாம். என்னிடம் இரண்டு கார்டுகளும் உண்டு. ஆனால் புது வீடு  மாறிய இரண்டு வருடத்தில் ரேஷன் அட்டையில் அட்ரஸ் மாற்றி பதிந்ததோடு சரி. இரண்டு வருடங்களாக ரேஷன் கடை பக்கம் தலை,கால் , கை எதையும் வைத்துப் படுக்கவில்லை

அதனால் எங்கள் வீட்டுக்குரிய ரேஷன் கடை எது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டி பழைய ரேஷன் கடைக்கு சென்றேன். கடையை காணவில்லை. ஆரம்பமே சுபிட்ஷம். அட்ரஸ் விசாரித்தேன். ஃபர்ஸ்ட் ரைட் லாஸ்ட் லெஃப்ட் அப்படியே மூணாவது  ரைட்டுல நாலாவது கடை. இன்னும் ஒரு  லெஃப்ட் ரைட் சேர்த்து சொல்லியிருந்தா நேராக வீட்டுக்குப் போயிருப்பேன். ஜியாக்ரஃபில பில்டிங் பேஸ்மென்ட் சகலமும் வீக். பழைய கடையை கண்டுபிடித்தேன். இரண்டு பேர் அமர்ந்து கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர்

'ஸார் இந்த நம்பர் ரேஷன் கடை எங்க இருக்கு?' கார்டை காண்பித்து கேட்டேன்

'எங்களுக்கு தெரிலைங்க நாங்க சேர்ந்தே பத்து நாள் தான் ஆகுது' என்றார். பாவம் அவருக்கு அவர் வேலை செய்யும் கடையை தினமும் கண்டுபிடித்து வருவதே பெரிய வேலையாக தான் இருக்க வேண்டும். அப்படி ஒரு இண்டு இடுக்கில் இருந்தது ரேஷன் கடை

கூட இருந்த அம்மா 'நீங்க மூணு மணிக்கு மேல வாங்க ,இங்க இன்னொரு மேடம் இருப்பாங்க. அவங்களுக்கு தான் தெரியும்' என்றார்

அடுத்த நாள் 3 மணிக்கு அந்த இன்னொரு மேடத்தை பார்க்கப் போனேன். அந்த இரண்டு பேர் அதே போஸில் உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்தவுடன் 'இப்ப தான் மேடம் ஆபீஸ் போனாங்க. பத்து நிமிஷத்துல வந்துருவாங்க'. அந்த பத்து நிமிடம் முக்கால் மணி நேரமாக ஆகவே இல்லை. மேடத்தை காணோம். நான் கிளம்பிவிட்டேன். நண்பனிடம் புலம்பினேன். ' சென்ஸ் ஸ்டேட்டஸ் ஹியர்' என்று நம்பியார் மாதிரி சிரித்தவனை மென்று துப்பிவிட்டு ஃபோனை வைத்தேன்

மூன்றாம் நாள் மதியம் மறபடியும் மூன்று மணிக்கு டாணென்று ரேஷன் கடையின் முன் ஆஜர். நான் வேலைக்கு கூட இவ்வளவு பங்க்சுவலா இருந்ததில்லை. அந்த இரண்டு பேரும் அதே போஸில். 'ரெண்டு நாளா வராங்க உங்கள பாக்க' என்று டேபிள் மேல் கவிழ்ந்து படுத்திருந்த அந்த 'இன்னொரு மேடத்தை' எழுப்பினார்கள். அரை தூக்கத்திலேயே எனது ரே.கா. ஹிஸ்ட்ரியை கேட்டார்

'நீங்க ஸ்ரெய்ட்டா போய் லெஃப்ட் எடுத்தீங்கன்னா ஒரு ஸ்கூல் வரும். அதே ரோட்ல நேரா போனா இதே மாதிரி ஒரு ரேஷன் கடை வரும்'. 

' அந்த கடையா . எனக்கு தெரியும் . ஓகே மேடம், தாங்க்ஸ்'

'இல்ல நீங்க அந்த கடைல போய் இந்த நம்பர் காமிச்சு கேட்டீங்கன்னா அவங்க கரெக்டா சொல்வாங்க எங்க இருக்குன்னு

'அய்யோ அப்ப அந்த கடை இல்லையா?! '

'இல்லைங்க'

எனக்கு பிஎஸ்என்எல் மோடத்துக்காக அலைந்தது தேவையில்லாமல் ஞாபகம் வந்ததுடி. என். சேஷனை கூட  பாத்துரலாம் ஆனா ரேஷன் கடைய கண்ணுல காமிக்க மாட்டேங்கறாங்களே! நண்பன் சொன்ன மாதிரி நெஜமாவே ஸ்டேட்டஸ் எழுதப் போறமோ என்ற கவலை வேறு சேர்ந்து கொண்டது
                                                 

அந்த மேடம் கூறிய அட்ரஸ் கண்டுபிடித்து போய் ரேஷன் கார்ட்டை நீட்டினேன்

'இது அந்த கடை இல்லீங்க!

'அது தெரியும் ஸார் இந்த நம்பர் கடை எங்க இருக்கு?' 

'அது தெரியாதே மேடம் . பக்கத்து கடைல வேணா கேட்டுப் பாருங்க'

பக்கத்து கடையில் ஓர் உயரமான மனிதர் இருந்தார். ரே. கா வாங்கிப் பார்த்தார். கூகுள் மேப்ஸில் வரும் பெண் குரல் பேண்ட் சட்டை போட்டது போல  அழகாக வழி சொல்ல ஆரம்பித்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் பைக்கில் வந்து கடை முன்னே நின்றார். அந்த கூகிள் மேன் உற்சாகத்துடன்  'நீங்க போக வேண்டிய கடை இவரோடது தாங்க. அவர்கிட்டயே பேசிடுங்க' என்றவுடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஆனால் வேற சிச்சுவேஷனுக்காக 'கும்பிட போன தெய்வம்' பாட்டு பிஜிஎம்மாக ஒலிக்க ஆரம்பித்தது

ரே. கா. டை பார்த்தவர்,' மேடம் நேரா இந்த ஏரியா ரேஷன் ஆபீஸுக்கு போய்டுங்க. ரே. கா. டை காமிங்க.அநேகமா கார்ட் கேன்சல் ஆகியிருக்கும். புது கார்ட் எடுத்தீங்கன்னா எங்க கடைக்கு தான் வரணும்' என்று அவருடைய கடை அட்ரஸ் சொன்னார்

எனக்கு அந்த ரேஷன் ஆபீஸ்  அட்ரஸ் தெரியுமாதலால் அனைவருக்கும் நன்றியுரை வாசித்துவிட்டு கிளம்பினேன். ரோட்டில் காரை நிறுத்திவிட்டு  ஆபீஸை தேடினேன். வழக்கம் போல காணவில்லை. விசாரித்ததில் ஆபீஸ் வேறு முகவரிக்கு மாறி விட்டதாக சொன்னார்கள். அட்ரஸ் மாறிப் போயிருக்கும் ஆபீஸுகளை தேடி கண்டுப்பிடிப்பதை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் என்ன என்ற யோசனை வலுத்துக்கொண்டே வந்தது

எதிரே சைக்கிளை உருட்டியபடி வந்த இருவரிடம் புது ரேஷன் கடை அட்ரஸ் கேட்டேன்

'தூரமாச்சே, எப்படி போனாலும் சுத்திட்டு தான்   போக வேண்டியிருக்கும்'

கரெக்டா வழி சொன்னாலே சுத்துவேன், வழியே சுத்துன்னா....!மிதுன ராசிக்கு இந்த வாரம் அலைச்சல்னு கூட என்ற ஆத்தா சொல்லலையே

'ஒரு ஆட்டோ பிடிச்சிக்கோங்க'

'இல்லைங்க, கார் இருக்கு'

'அப்ப சரி . மெயின் ரோடு போய் லெஃப்ட் எடுத்து நேரா போய்ட்டே இருங்க'

'ம்ம்'

'ரெண்டாவது லெஃப்ட் வரும் '

'சரி '

'அங்க ரைட்ல திரும்பிடுங்க '

'எத்தனாவது ரைட்டு ? '

'ரெண்டாவது லெஃப்ட்டுங்க'

'சரி சொல்லுங்க ( ஆண்டவரே!) '

'ரைட்டுக்குள்ள போய் பஸ் ஸ்டாண்ட் எங்கன்னு கேளுங்க'

'அங்கயிருந்து பஸ்ல போகணுமா? '

'இல்லம்மா பஸ் ஸ்டான்ட்ல கேளுங்க ரேஷன் கடை எங்கன்னு சொல்லுவாங்க'

அவர்கள் சொன்னபடி மெயின் ரோட்டில் இரண்டாவது லெஃப்டில் ரைட் (!) எடுத்து பஸ் ஸ்டான்ட்  கண்டுபிடித்து அருகிலிருந்த ஆட்டோ ஸ்டான்ட்டில் ரே. கடையை பற்றி கேட்டேன்

'அது ரொம்ப தூரம் போகணுமேம்மா 'என்று இடியாப்பம் பிழிவது போல ஒரு ரூட் சொன்னார்

இன்னும் தூரமா? இதுக்கு நான் கிருஷ்ணகிரி ரேஷன் கடைக்கே போயிடுவேனே ! அவர் சொன்ன ரூட்டை மனதுக்குள் வரைந்து பார்த்ததில் மறுபடி பஸ் ஸ்டான்ட்டிலேயே வந்து முடிவடைந்தது. இடியாப்பத்தை பியத்து போட்டு சேவை செய்யாமல் நன்றி கூறிவிட்டு கிளம்பினேன்

காரை கிளப்புவதற்குள் இடியாப்ப ஸ்பெஷலிஸ்ட் மறுபடி வந்து ரேஷன் கடையாரேஷன் ஆபீஸா என்றார். ( ரெண்டும் வேற வேற இடத்துல இருக்கா புண்ணியாத்மாவே! ) ரேஷன் ஆபீஸ் என்றவுடன் அது இங்க பஸ் ஸ்டாண்ட் பின்னாடி தான் இருக்கு என்று ருசிகர சேவரிட் சேமியா போல ஈஸியாக ஒரு ரூட் சொன்னார்

இடியாப்பம்/ சேவை இரண்டையும்  சாப்பிடவேண்டாம் என்பதே ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தந்தது. முதல் மாடியில் இருந்த போர்டு கூட இல்லாத அந்த ஆபிஸை கண்டுபிடித்து சென்று விசாரித்தேன். புதுகார்ட் தான் வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்

இனிமேல் தான் அவர்கள் கூறியதை எல்லாம் எடுத்துக் கொண்டு புது கார்ட் அப்ளை பண்ண செல்லவேண்டும். என்னை இன்னொரு ஸ்டேட்டஸ் எழுதாமல் இருக்க 








பேட்டி


எனது பேட்டி.....

 சிறந்த பதிவராக தேர்நதெடுக்கப்பட்டு, தற்போது பிரபலமாகி வரும் எழுத்தாளர் அருணாராஜ் அவர்களின் ப்ரத்யேகப் பேட்டி.....

'உங்களுக்கு பிடிச்ச பொழுது போக்கு என்ன மேடம்?'
'யார் கூடவாவது சண்டை போடுறது ரொம்ப பிடிக்கும். தெரியாத நம்பர்க்கெல்லாம்  மிஸ்டு கால் குடுக்க பிடிக்கும். அப்புறம் பக்கம் பக்கமா கவிதை எழுத பிடிக்கும்... '
.....................

'உங்க கவிதை எந்த புக்லயாவது வந்திருக்கா மேடம்? '
' , ஃபேஸ் புக்ல நெறைய வந்திருக்கு. அடுத்த வருஷம் பாஸ்புக்ல வரும்னு எதிர்பார்க்கறேன்'. 
.........................
'உங்களுக்கு பிடிச்ச ஆத்தர் யாரு? '
'சின்னதா ஒரு புக் வருமே வார வாரம் பளபளன்னு அட்டை...'
'குமுதம், குங்குமம் எது மேடம் ?'
'ஆங் , குமுதம் . அதுல என்ன கொஸ்டின் கேட்டாலும் ஹி ஹி ன்னு பதில் சொல்வாரே ஒருத்தர்...'
'அரசு பதில்களா மேடம் ? '
'ஆமா ஆமா அவரு தான் ரொம்ப பிடிக்கும்'
.............................
'பிடிச்ச நாவல் எது மேடம்? '
'குமுதம், ஆனந்தவிகடன் ரெண்டுமே பிடிக்கும். ஆனந்தவிகடன்ல டைம்பாஸுக்குன்னே தனியா  ஒரு புக் போடறாங்க பாருங்க. அது அருமையான புக்'
............................
'பிடிச்ச நடிகர் யார் மேடம்? '
'ஒருத்தர் நல்லா டான்ஸ் ஆடுவாரே... அவர் ப்ரதர் கூட டான்ஸர் '
' பிரபுதேவா வா  மேடம்'
'ஆங், அவரோட அண்ணா ராஜு சுந்தரம். அவர் தான் பிடிக்கும்'
'அவர் டான்ஸ் மாஸ்டராச்சே  '
'ஆமா ஆனா நடிச்சிருக்காரே படத்துல?'
'ஆமா மேடம்'
...............................
'சரி , பிடிச்ச நடிகை யாரு மேடம்?' 
'எனக்கு சசிகலா ரொம்ப பிடிக்கும்'
'அய்யோ மேடம் அவங்க நடிகை இல்லை!'
'நீங்க வெற்றி விழா படம் பாத்ததில்லையா? அதுல மாறுகோ பாட்டுல ஆடுவாங்களே. அவங்க தான்'
' ஓகே மேடம். ஒரு நிமிஷம் பயந்துட்டேன்'. 
..................................
'பிடிச்ச பாட்டு எதுவும் இருக்கா மேடம் ? '
'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா சாங் என்னோட ஃபேவரேட்'
' சாமி பாட்டு மட்டுந்தான் கேப்பீங்களா மேடம்?'
'இது சினிமா பாட்டுங்க... ராஜூவோட தம்பி பிரபு தேவா ஆடுவாரே அந்த பாட்டு'
......................................
'ஓஓ. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா மேடம்?'
'நெறைய. நான் நெனச்சது எது நடந்தாலும் என் ஃப்ரெண்ட்ஸ் யாருக்காவது கட்டாயம் மொட்டை போட்ருவேன். அலகு குத்த கூட வேண்டியிருக்கேன்'
'உங்களுக்கா மேடம்'
'ச்சே ச்சே எனக்கு எல்லாமே என் நண்பர்கள் டதான்'
...................................
'உங்களுக்கு பிடிச்ச மியூசிக் டைரக்டர் ? '
'ரெண்டு பேரு ஒன்னா ம்யூசிக் போடுவாங்கல்ல அவங்க ப்ரதர் '
'சங்கர் கணேஷா மேடம்? '
'இல்ல... நல்ல பாட்டெல்லாம் போட்ருக்காங்க'
விஸ்வநாதன் ராமமூர்த்தியா மேடம் '
'இல்ல...'
'சபேஷ் முரளியா மேடம் ?'
'ஆமா ஆமா அவங்க ப்ரதர் பேரென்ன ? '
'தேவா மேடம்'
'ஆங், அவரு தான் அவரு தான்
....................................
'நீங்க நெறைய அவார்ட் வாங்கியிருக்கறதா சொல்றாங்க. என்னெல்லாம் அவார்ட் வாங்கியிருக்கீங்க மேடம் ? '
'ஆக்சுவலா நான் எவ்ளோ அவார்ட்ஸ்னு கணக்கு வச்சிக்கல... பட் செல்ஃபி குயின், பெஸ்ட் மாம் , பெஸ்ட் காமெடி பீஸ், பல்லு பார்ட்டி இப்படி நெறைய அவார்ட்ஸ் குடுத்துட்டே இருக்காங்க'
..........................................
'ஒரு எழுத்தாளரா டீமானிடைசேஷன் பத்தி என்ன நெனக்கறீங்க? '
' லவ் தட் பர்பிள் கலர் நோட் . இதுவரைக்கும் யாருமே இவ்ளோ அழகான கலர்ல ரூபா நோட்டு வெளியிட்டதேயில்ல. அதுக்காகவே எனக்கு பேடிய  புடிக்கும்
'கிரண் பேடியா மேடம் ? '
'அய்யோ நம்ம  பிஎம் ங்க! '
'அவர் மோடி மேடம்'
'ஆங், அவரு தான்'
.........................................
'மேடம்  2016 நடந்த சோகமான விஷயம்னா எதை சொல்லுவீங்க ...'
'2016 ல் எனது மிகப் பெரிய சோகமே எனக்கு முடி அதிகம் கொட்டுனது தான்
'இல்ல மேடம் பொதுவா கேட்டேன்'
'பொதுவாவே இப்ப நெறைய பேருக்கு முடி அதிகமா கொட்றதா கேள்விப்படறேன். இன்ஃபாக்ட் 'முடி கொட்றவங்க'ன்னு வாட்ஸப்ல ஒரு க்ரூப் கூட ஆரம்பிச்சிருக்கோம்
.......................... ...

'அப்ப ரொம்ப சந்தோஷமான விஷயம் என்ன சொல்லுங்க?' 
'ஃபேஸ்புக் அப்டேட்டட் வெர்ஷன்ல நெறைய ஸ்டிக்கர்ஸ் வருது இப்ப. ஐயம் ரியலி ஹேப்பி அபௌட் இட்'
......................   ..........
'உங்க கதை கூட சமீபத்துல பரிசு வாங்கிச்சே மேடம், அதை பத்தி சொல்லுங்க
'ஆமா அது தினமலர்ல வந்தது'
'மேடம் அது நியூஸ் பேப்பர் '
'ஆங் வீக்லி மலர் சாரி வாரமலர்ல வந்தது'
........................................
'இன்னும் நெறைய கதை எழுதறீங்களா மேடம் ? '
'நல்ல கரு தேடிட்டு இருக்கேங்க. ஆனா இப்ப வர்ற முட்டைங்களே சரியில்லை. இதுல ப்ளாஸ்டிக் முட்டை வேற வருதுங்களாம்'
........................................
'.. ஆமா மேடம். உங்க டைம் ஒதுக்கி எங்களுக்கு இவ்ளோ நேரம் பேட்டி தந்ததுக்கு ரொம்ப நன்றி மேடம்'
'நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். சரி இது எப்ப டிவில வரும் ? '
'அச்சோ மேடம் மொதல்லயே சொன்னோமே இது ஒரு வார பத்திரிக்கைக்காக எடுத்த பேட்டி
டிவி க்காக இல்ல'
' அப்படியா ! நான் டிவின்னு நெனச்சு தான் காமிராமேன் பாத்து அசையாம உக்காந்து பேட்டி தந்தேன்'
'அவரு ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் மேடம்'

' தட்ஸ் ஓகேதட்ஸ் ஓகே. தாங்க் யூ'