எங்கே செல்லும் இந்த பாதை.....
யோஹானுக்கு மாநில அளவிலான ஒரு கராத்தே போட்டிக்காக திருவள்ளூர் செல்ல வேண்டி இருந்தது. காலை எட்டு மணிக்கு முன்னே அங்கே இருக்க வேண்டும். இது வரை திருவள்ளூரை மேப்பில் கூட பார்த்ததில்லை. பெயர் கேள்விபட்டதோடு சரி. அதுவும் நானே காரை ஓட்டிக்கொண்டு மகனுடன் செல்லவேண்டும். முகநூலுக்கு போஸ்ட் ரெடியாயிடுமோ என்ற பயம் லேசாக தலை தூக்கியது.
தெளிவாக வழி சொல்லக்கூடிய நண்பர் ஒருவரிடம் ஏற்கனவே வழி விசாரித்து வைத்திருந்தேன். அவரிடம் எங்கு செல்ல வழி கேட்டாலும் எங்கள் வீட்டு வாசப்படியிலிருந்து ஆரம்பிப்பார்.
'இப்ப நீங்க லிஃப்ட்ல கீழ இறங்குறீங்க....'
'படிகட்டுல எறங்க கூடாதா? '
'டிஸ்டர்ப் பண்ணாம கேளுங்க' என்று மறுபடி என்னை லிஃப்டில் வர சொல்லுவார்.
கடந்த சில நாட்களாக கூகுள் அக்காவின் குரலில் நான் மையல் கொண்டிருந்ததால் அக்காவிடமும் வழி கேட்டு விடலாம் என்று காலையில் எழுந்து கூகுள் மேம்பை ஆன் செய்தால் அது வேறு ஒரு சுலபமான வழியை காட்டவே நண்பர் சொன்னபடி லிஃப்டில் இறங்காமல் படிக்கட்டில் இறங்கி கூகுள் குரலழகியிடம் தஞ்சமானேன்.
மகனும் நானும் ஏழுமணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம். காரில் சிறிது தூரம் சென்ற பிறகு கூகுள் மேப்பை ஆன் செய்தால் அக்கா குரல் கேட்கவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஃபோனை நோண்டி எடுத்துவிட்டேன். அக்காவுக்கு என்ன கோவமோ, வரவேயில்லை. மேப்பை மட்டும் ஆன் செய்துவிட்டு பையனிடம் ஃபோனை தந்துவிட்டேன் வழி பார்த்து சொல்லும்படி.
அம்மா அந்த கடை வருது, இந்த ரோடு தான், கரெக்டா தான் போறீங்க,ஏம்மா மேப்ல இவ்ளோ ஸ்லோவா மூவ் ஆகுது கார் என்று ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டே வந்தான்.
திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸுக்கு பின்புறம் உள்ள ஸ்டேடியத்தில் தான் போட்டி. பதினைந்து நிமிடங்களில் கலெக்டர் ஆபீஸ் என்று மேப் காட்டியது. ஆனால் ரொம்ப நேரமாகியும் ஆபீஸ் வரவே இல்லை.
'கண்ணா கரெக்டா தான் போறோமா? '
'கரெக்ட் தாம்மா'
'கலெக்டர் ஆபீஸே ரோட்ல வரவேயில்லையேடா'
'ஆனா மேப்ல அப்பவே வந்துருச்சேம்மா'
'அய்யோ அப்ப தப்பான ரூட்ல போறோம்டா!!'
காரை நிறுத்தி திருவள்ளூர் வழி கேட்டேன்.
'இன்னும் இருவது கிமீ போகனுங்க'
'அப்ப கலெக்டர் ஆபீஸ்? '
'அது திருவள்ளூர்ல தாங்க இருக்கு, அதே இருவது கிமீ போகனும்'
மேப்பை ஆஃப் செய்தேன். கூகுள் மண்டையா இப்படி காலவாறிட்டியே என்று திட்டிக்கொண்டே காரை ஓட்டினேன். கூகிள் அக்கா இருந்திருந்தா எனக்கு தப்பா வழி சொல்லி இருக்காது. என்ன இருந்தாலும் நமக்கு பிடித்தவர்களை விட்டு கொடுக்க மனம் ஒப்புவதில்லை.
திருமழிசை, திருமுல்லைவாயில், திரு திரு என்று நிறைய ஊர்களை கடந்து ஒரு இடத்தில் போர்ட் பார்த்தேன் திருப்பதி ...கிமீ என்று போட்டிருந்தது. அய்யோ வழி மாறி வந்துட்டேனோ? நல்லபடியாக திருவள்ளூர் போய் சேர்ந்தால் எனக்கு வழி சொன்ன நண்பருக்கு திருப்பதியில் மொட்டை அடிப்பதாக வேண்டி கொண்டேன்.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா ?'
'என்ன லட்டும்மா? '
'திருப்பதி லட்டு கண்ணா'
'ஏது? '
'அங்க தான் போய்ட்டு இருக்கோம்னு நெனக்கறேன்'
'அய்யோ அப்ப ஸ்டேடியதுக்கு போகலையாம்மா'
'அங்க திரும்புன பக்கமெல்லாம் ஸ்டேடியம் தான் கண்ணா'
'அம்மா மேட்சுக்கு லேட் ஆயிடும். ஒழுங்கா வழி கேளுங்க யார்கிட்டயாவது.'
மறுபடி வழி விசாரித்தேன். சரியான ரூட்டில் போவதாகவே விசாரித்தவர்கள் சொன்னார்கள்.
கிட்டதட்ட திருவள்ளூரை அடைந்து காரை நிறுத்தி மறுபடி வழி விசாரித்தேன்.
'ஸ்டேடியம் எங்க இருக்கு? '
'அது சென்னைல இருக்குங்க'
'நாங்க அங்க இருந்து தாங்க வரோம் ,இங்க ஸ்டேடியம் எங்க இருக்கு'
'இங்க அப்படி எதுவும் இல்லையே'
'இது திருவள்ளூர் தான? '
'ஆமா,ஆனா ஸ்டேடியம் சென்னைல தான் இருக்கு'
'சரி கலெக்டர் ஆபீஸ் எங்க இருக்கு?'
வழி சொன்னான்.
'அங்க பக்கத்துல எங்கயும் விளையாடற இடம் எதுவும் இருக்கா? '
'ஓ அந்த க்ரவுண்டா? அப்படி கேக்கலாமில்லக்கா'
வழிகேட்டு சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தோம். போட்டியில் யோஹான் பரிசு வென்றதால் பரிசளிப்பு விழா வரை இருக்க வேண்டியதாகிவிட்டது. மற்ற போட்டிகள் , பரிசளிப்பு விழா எல்லாம் முடிய இரவு ஏழரை மணியானது. நமக்கும் காருக்கும் ஏற்கனவே ஏழரை, வந்த வழியை விசாரித்து மறுபடி இருட்டில் வண்டி ஓட்ட வேண்டும் என்று நினைத்த போதே பகீரென்றது.
வந்து சேர்ந்த கதையே இப்படியென்றால் திரும்பி வீட்டுக்கு போன கதை எப்படியிருக்கும்?
ஒரு சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.....
No comments:
Post a Comment