Wednesday 31 May 2017

பாஸ்போர்ட் சேவா கேந்திரா

பாஸ்போர்ட் சேவா கேந்திரா.  

மகனுக்கு பாஸ்போர்ட் ரெனியூவல். எனக்கு அட்ரெஸ் மாற்றம். 10.15 ரிபோர்ட்டிங் டைம். நான் அந்த சேவா கேந்திரந்துக்கு சென்று சேர்ந்த போது  மணி சரியாக 10.

நம் மக்களில் பலருக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணா வியாதி உண்டு.(உஷாராக இருப்பது வேறு). எங்கேயாவது 11 மணிக்கு வரச்சொன்னால் முன்னாடி நாள் இரவே வந்து பாய்விரித்து விடுவது, பத்தாவதுக்கு பயன்படும் என்று மூணாவது படிக்கும் குழந்தைக்கு  trigonometry சொல்லி தருவது, பத்து மணி டரெய்னுக்கு , ஏர்போர்ட்டில் இன்டர்நேஷனல் போர்டிங் பாஸ் வாங்குவதை போல ஆறு மணிக்கே குடும்பத்தில் இருப்பவர்களையெல்லாம் மிரட்டி, விரட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு இழுத்துவருவது என ஒரு லிஸ்டே எழுதலாம்

காற்றோட்டமே இல்லாத இடுங்கிய படிக்கட்டுகளின் வழியே அந்த சேவா கேந்திராவின் முதல் தளத்தை அடைந்தால் மாலை நேர டாஸ்மாக் போல  கூட்டம் நிரம்பி வழிந்தது

 எனக்கு முன்னே நின்றிருந்த ஒரு அண்ணாத்தேவிடம் - 'உங்க ரிப்போர்டிங் டைம் என்னங்க?'
'11.30.'
'தாங்க்யூ'

நான் முதல் பத்தியில் கூறியது இதை தான்

10 மணி ரிப்போர்டிங் டைம் எல்லாம்  வாங்க, மத்தவங்க எல்லாரும் பின்னாடி போங்க  என்று ஒரு கேட்கீப்பர் குரல் கொடுக்க , அந்த கும்பலிலிருந்து பத்து பேருக்கும் குறைவாக தான் முன்னாடி சென்றனர். மிச்சம் நின்றிருந்த அத்தனை பேரும் அந்த முத்தண்ணா கோஷ்டியை சேர்ந்தவர்கள்

அந்த வெயிட்டிங் ஏரியாவாக கருதப்பட்ட dungeonல் இருந்தது ஒரே ஒரு ஓப்பன் ஜன்னல். அனைவருக்குமான காற்றை அடைத்துக் கொண்டு நிற்கிறோம் என்ற ப்ரக்ஞையே இல்லாமல் அந்த ஜன்னலை முழுக்க அடைத்து நின்றபடி  ஃபோனில் 'பாயியோ அவுர் பெஹனோ ..!' என உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி

இங்கு ஏன் ஒரு முறையான வெயிட்டிங் ஏரியா வைக்க கூடாது? எல்லோரும் மாடி படிக்கட்டுகளில் நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் ஜன்னலை அடைத்துக்கொண்டும்...காத்திருந்த 15 நிமிடமும் இட்லி பானைக்குள் உட்கார்ந்திருந்த எஃபெக்ட். இதில் நிறைய கைக்குழந்தைகள் வேறு பரிதாபமாக

10.20 க்கு இட்லி பானையிலிருந்து ஃப்ரிஜுக்கு மாற்றிவிட்டார்கள். பாதிவேலை முடித்த திருப்தியை   தந்தது தட்பவெப்ப மாற்றம். உள்ளே மூன்று கவுன்டர்களுக்கு செல்ல வேண்டும் என டோக்கன் கொடுக்கப்பட்டது. எனக்கு ஆறு - மகனுக்கும் சேர்த்து. ரிசப்ஷன் மற்றும் கவுன்டர் இரண்டிலும் இள வயது ஆண்களும் பெண்களும், எல்லாம் தமிழ். அசாத்திய சுறுசுறுப்பு. சுலபமாக முடிந்தது வேலை. ஆனால் என் அப்பா அம்மா கல்யாணப்பத்திரிக்கை தவிர அனைத்தையும் கேட்டார்கள். நல்லவேளை எல்லாம் எடுத்து சென்றிருந்தேன்

கவுன்டர் வில் நமது பாஸ்போர்ட் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள 45 ரூபாய் எஸ்எம்எஸுக்காக கட்ட சொன்னார்கள். வருஷம் முழுக்கவே நான் எஸ்எம்எஸ்ஸுக்கு நூறு ரூபாய் தாண்டி காசு கட்டியதில்லை.வேறு வழியில்லை , காசு கட்டினேன்ஃபுல் பாடி மசாஜ் done by females னு எனக்கு மெசேஜ் அனுப்பாத வரைக்கும் சந்தோசம். 45 ரூபாய் கட்டியதற்கு A4 ஷீட் சைஸில் ரிசிப்ட் வேறு தந்தார்கள் . நாங்கெல்லாம் அம்பதாயிரம் ரூபா பொருளையே பில் இல்லாம வாங்கறவங்க ,45 ரூபாய்க்கு இத்த சோடு ரிசிப்டா

அதிலும் அந்த ரிசிப்டில் இருந்த  terms and conditions சில கீழே வருமாறு...
நீங்கள் கொடுத்துள்ள நம்பருக்கு மட்டுமே sms அனுப்பப்படும் (வேற எந்த நம்பர்ல எனக்கு அனுப்ப முடியும் ? )
உங்கள் மொபைலில் ஏதும் ப்ரச்சனையோ, நெட்வொர்க்கில் ப்ரச்சனையோ இருந்தால் sms வராது. (செல் ஃபோன் அறிமுகமான போது தரப்பட்ட விளக்கமல்லவா இது! ) 
நான்கு மணி நேரத்துக்கு மேல் ஃபோனை ஆஃப் செய்திருந்தாலோ , தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலோ உங்களுக்கு அனுப்பப்பட்ட sms உங்கள் மொபைல் நெட்வொர்க்கே டெலீட் செய்துவிடும். (இதெல்லாம் அநியாயம் யுவர்ஆனர்
இந்த sms ரெஜிஸ்டர் செய்வதன் மூலம் நீங்கள் தான் உங்கள் ஃபோனின் legitimate ஓனர் என்பதை ஊர்ஜிதம் செய்கிறீர்கள்( திருட்டு ஃபோன் யூஸ் பண்ணகூடாது , be careful). 

இதே மாதிரி இன்னும் நிறைய valid பாயின்ட்ஸ் இந்த ரிசிப்டில் உள்ளது. எல்லாம் பயங்கரவாதத்தை குறைப்பதற்காக இருக்கும். வாயப்பு கிடைத்தால் படித்து உய்யவும்

கவுன்டர் ஏவில் ஃபோட்டோ எடுத்தார்கள். லைட்டிங் சரியில்லாததால் 'பார்பெக்யூ சிக்கன்'மாதிரி இருந்தேன் ஃபோட்டோவில். இல்லன்னா மட்டும் என்ற மைண்ட் வாய்ஸை 
அமுக்கிவிட்டு
'என்னை மாதிரியே இல்லையே, இன்னொரு முறை எடுக்கலாமா? '
'இல்ல மேடம் ஒரு முறை தான் எடுப்போம்' . 

கவுன்டர் முடித்து கவுன்டர் பி அழைப்புக்காக காத்திருந்தேன்
பூங்கோத்தி பால்சப்ரமாணி. 'பூங்கோதை பாலசுப்ரமணியத்தை' பான பராக் போல மென்று குதப்பிக்கொண்டிருந்தார் பி கவுன்டரில் இருந்த வடநாட்டவர் ஒருத்தர்

எனக்கும் அதே வடநாட்டவர். என்னுடைய டோக்கன் டிஸ்ப்ளே ஆன உடனே , அவர் என் பெயரை அழைக்க வாயை திறக்குமுன், ஓடிச்சென்று 'நான் தாங்க அருணா ராஜ்' என்றேன். பிறந்ததிலிருந்து இப்படி ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசியிருப்பேனா தெரியவில்லை, அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முழுக்க முழுக்க தமிழிலேயே பதிலளித்து கொண்டிருந்தேன். ஏனோ தெரியவில்லை வடநாட்டவரை பார்த்தால் என் தாய்மொழிப்பற்று அபரிதமாக பொங்கி வழிகிறது ஆஃப்லேட்

ஆதார் கார்டை அதன் நீளமான அட்டைப்பகுதியுடன் முழுதாக கேட்டார். வெட்டறதுக்கு முன்னாடி சொல்ல மாட்டீங்களா வெளக்கெண்ணெய் ஆபீசர்ஸ்? வழக்கமாக டிரைவிங் லைசன்ஸ் அளவிற்கு லேமினேட் செய்த ஆதார் கார்ட் தானே வைத்திருப்போம், இதென்ன புதுக்கதை? விட்டால்  ஆதார் கார்ட் டெலிவரி செய்யப்பட்ட போஸ்டல் கவர் , ஸ்பீட் போஸ்டில் டெலிவரி ஆன ச்சலான், டெலிவரி செய்த போஸ்ட்மேன் ஐடி கார்ட் எல்லாவற்றையும் கேட்பார்கள் போல

'இவ்ளோ தாங்க ஆதார் கார்ட்'

'மிச்ச பார்ட் என்ன பண்ணிங்க? '

( அதை வச்சு ராஜா அண்ணாமலை புரத்துல ரெண்டு க்ரவுண்டு நிலம் வங்கிட்டேன் -வேறென்ன,என் மைண்ட் வாய்ஸ் தான்)

'தெரியலைங்க. இது போதும்னு சொன்னாங்க'

'கவர்மென்ட்ல ஃபுல் கார்ட் காமிச்சா தான் அக்சப்ட் பண்ண சொல்லி எங்களுக்கு சொல்லியிருக்காங்க'

'எங்களுக்கு சொல்லலியே...'

அதற்கு மேல் நோண்டவில்லை என்னை.

அடுத்து கவுன்டர் சி. இதுவரைக்கும் டிசிஎஸ் (TCS) மக்கள். இனி வருபவர்கள் நம் ஆட்கள். அரசு துறை ஆட்கள் என பார்த்தமாத்திரத்தில் சொல்லிவிடலாம். அப்படி ஒரு அலட்சியம். Lethargy. 

சி கவுன்டரில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மேடம். என் பாஸ்போர்டை வெரிஃபை செய்தபின்னர் படு அலட்சியமாக டேபிள் மீது விட்டெறிந்தார். அதை பொறுக்கிக் கொண்டு
'அவ்வளவு தானா,முடிந்ததா மேடம் ?' என கேட்டது தான் தாமதம் .  
 'லொல் லொல் லொல் லொல்' - அர்த்தம் - 'இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?'
'எனக்கு எதுவும் வேண்டாங்க, எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னா வீட்டுக்கு போவேன் அவ்வளவு தான்'
மறுபடியும் லொல்லுமோ என்று பார்த்தேன். இதுக்கெல்லாம் பதில் சொல்லனுமா என்று என் முகத்தை கூட பார்க்கவில்லை, அடுத்த ஆளை பார்த்து நெக்ஸ்ட் என்றது டாபர்வுமன். இந்த 'லொல்' லின் அர்த்தம் 'நீ இடத்தை காலி பண்ணு'

எங்கிருந்து மேடம் வருது இவ்வளவோ  திமிரும் அலட்சியமும்  என்று அலைபாயுதே ஷாலினி அப்பா ஸ்டைலில் கேட்க ஆசைப்பட்டு, அவர் வயதை மனதில் கொண்டு , எதுவும் கேட்காமல் இடத்தை காலிசெய்தேன். வீட்டிற்கு வந்த பிறகும் இந்த டாபர்வுமனின் அலட்சியம் வெயிலை விட அதிக  எரிச்சலை தந்துக்கொண்டிருந்தது

45 ரூபாய் கட்டியதற்கு வீடு வந்து சேர்வதற்குள் நான்கு மெசேஜ் வந்திருந்தது. அதில் மூன்று ,சேவா கேந்திரத்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து. நான்காவதில் ஒரு லிங்க்- ஃபீட் பேக் எழுதச்சொல்லி. அந்த டாபர்வுமன் பற்றியும், முறையான வெயிட்டிங் ஏரியா பற்றியும் எழுதலாம் என்று யோசனை











No comments: