எங்கே செல்லும் இந்த பாதை.....Return journey.
யோஹானோடு போட்டியில் கலந்து கொண்ட
மற்ற பையன்களின் அம்மாக்களிடம் வழி விசாரித்து கொண்டிருந்தேன்.
'நீங்க போகும் போது சொல்லுங்க, நானும் கூடவே வரேன்'
'வாங்க ஒன்னாவே போயிடலாம். ஆனா ட்ரெயின் எத்தனை மணிக்குன்னு தான் தெரியலை'
ஆத்தீ, ட்ரெயினா! ட்ரெயின் ட்ராக்கில் கார் ஓட்டி பழகாத காரணத்தால் மேலும் சில பேரிடம் விசாரித்தேன். ஒரு பையனின் அம்மா கூகுள் சொதப்பிதை பற்றி புலம்பி கொண்டிருந்தார். ஆஹா, கூகுள் எனக்கு மட்டும் துரோகம் பண்ணவில்லை, மற்றவருக்கும் அதே நிலைமை தான் என்று தெரிந்த பின் என்னைக் கடித்த கொசுவை கொசு பேட் உதவியில்லாமல் நானே அடித்து கொன்ற குரூர திருப்தி!
கூகுளால் பாதிக்கப்பட்ட பெண்மணி (பெயர் கூடக் கேட்கவில்லை)தனது தம்பி தான் பல இடங்களில் விசாரித்து வண்டி ஓட்டி வந்ததாக சொன்னார்.சரி அவரோடவே ஒட்டிக்கொண்டு சென்னை சென்றுவிடலாம் என்று 'உங்க தம்பிய ஃபாலோ பண்ணியே வரேங்க' என்று எழுதப்படாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு
காரில் ஏறினேன்.
ஸ்டேடியம் விட்டு வெளியே வந்த முதல் சிக்னலில் அந்த தம்பி லெஃப்ட் திரும்பினார். வரும் போது அந்த சிக்னலில் ஒரு போலீஸ் அண்ணாத்தேவிடம் ஸ்டேடியத்துக்கு வழி கேட்டதால் எந்த வழியையும் ஞாபகம் வைத்துக்கொள்ளாத எனக்கே அந்த சிக்னலில் நேராக செல்லவேண்டும் என்று தெரிந்தது. சரி, தம்பி நமக்கு தெரியாத ஷார்ட் கட்ல போறார் போல என்று ஃபாலோ செய்தேன். ஒரு கிமீ சென்றிருப்போம். தம்பி வண்டியை ஓரங்கட்டினார். ஏதோ வாங்கப் போகிறார் என நினைத்தேன். ஆனால் சென்னை செல்ல வழி கேட்டுக்கொண்டிருந்தார்! அடடா அவங்க ஃபோன் நம்பராவது வாங்கி வச்சிருக்கலாமே என்று அப்போது தான் உறைத்தது.
'இன்னும் கொஞ்ச தூரம் போய் யூ டர்ன் போட்டு வந்த வழியிலேயே திரும்ப போயிடுங்க, இல்லைன்னா இப்படியே நேரா போய்..' என்று புது ரூட்டை விளக்கி கொண்டிருந்தார் ஒரு வேட்டி கட்டிய கூகுள். முன் வைத்த காலை பின் வைக்காத தம்பி எந்த டர்ன்னும் போடாமல் அப்படியே நேராக சென்றார். கொசு மருந்து அடிக்கும் வண்டி போல எல்லா சந்துகளிலும் புகுந்து வெளியே வந்தோம்.
'அம்மா இப்ப தான இந்த கோயில க்ராஸ் பண்ணோம் ?' என்று யோஹான் சொன்னவுடன் தான் கவனித்தேன் தம்பி பின்னாடியே அதே இடத்தை இரண்டாவது முறையாக ரவுண்ட் அடித்திருக்கிறேன் என்று. திருவள்ளூர் தேர்தல் பிராச்சரத்திற்கு கூட இத்தனை சந்துகளை பார்த்திருப்பார்களா தெரியவில்லை. மறுபடியும் தம்பி சந்து சந்தாக சுற்றினார். நானும் கூடவே. இன்னும் ஒரு ரவுண்ட் வந்தால் கோயிலை நவீன முறையில் காரிலேயே மூன்று முறை சுற்றியதற்கான நற்பலன்களையாவது பெற்றிருப்பேன்.
இருபது நிமிட தலைசுற்றலுக்கு பின் மெயின் ரோட்டை பிடித்தார் தம்பி.
'அம்மா அண்ணா தப்பா போறார்னு தெரிஞ்சு ஏம்மா அவரை ஃபாலோ பண்றீங்க?'
'ஏன்னா அம்மா இதை விட தப்பா போவேன் கண்ணா'.
'அம்மா எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க ' என்று சொல்லிவிட்டு பின் சீட்டில் போய் படுத்துக்கொண்டான்.
பாடி ஜங்க்ஷனை நெருங்கும் வரை ஒரே ரோடு. ஒரு வழியாக பாடி வரை வந்துவிட்டோம் என்ற நினைத்துக் கொண்டிருக்கும் போதே மறுபடி ஒரு குறுக்கு சந்துக்குள் நுழைந்துவிட்டார் தம்பி. தெருவிளக்கு, ரோடு எதுவுமில்லை. வீடுகள் மட்டும் இருந்தன. மேடு பள்ளமான மண் ரோட்டில் பைக் பந்தயம் ஒன்று நடக்குமே கிட்டதட்ட அதே மாதிரி ரோடு. கார் 'மானாட மயிலாட' போட்டியாளர் போல ஆனதில் பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்த பையன் எழுந்தே விட்டான் .
'அம்மா எங்க இருக்கோம், திருப்பதியா?'
'கண்ணா முன் சீட்டுக்கு வாடா அம்மாவுக்கு பயமாயிருக்கு' என்று அவனை கூப்பிட்டு பக்கத்தில் அமர்த்தி கொண்டேன்.
Dirt track racing க்கு குவாலிஃபை ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை துளிர் விடும் நேரத்தில் எங்கே செல்லும் இந்த பாதை பிஜிஎம் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது. ஓட்டப்பந்தய வீராங்கனைப் போல கார் ஓட்டியே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது எனக்கு மட்டும் தானிருக்கும். தம்பியை துரத்தி பிடித்து மெயின்ரோட்டை தொட்டுவிட்டேன். தம்பி பாடி ப்ரிட்ஜுக்கு வழி காண்பித்துவிட்டு எனக்கு டாட்டா காட்டினார்.
'ஷார்ட கட்ல வந்ததுனால ரோடு கொஞ்சம் மோசம்' என்றார்.
'பரவாயில்லைங்க, அடுத்த முறை வர்றதுகுள்ள போட சொல்லிருங்க '
என்று நன்றி சொல்லிவிட்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த போது மணி 10க்கு மேல் ஆகியிருந்தது.
இந்த கூகுள் தம்பியிடம் பிடித்த விஷயமே அவருடைய கடமை உணர்ச்சி தான். தப்பான ரூட்டில் போனாலும் சந்து பொந்துகளில் போனாலும் பின்னால் என் வண்டியை காணவில்லை என்றால் அழகாக ஓரங்கட்டி எனக்காக காத்திருப்பார். அடுத்த முறை பார்க்கும் போதாவாது அந்த தம்பி, அவர் அக்கா , அக்கா பையன் பெயர்களை எல்லாம் கேட்க வேண்டும்.
'கராத்தே போட்டியை விட செம த்ரில்லிங் எக்ஸ்ப்பீரியன்ஸ் இல்ல கண்ணா நாம ட்ராவல் பண்ணது ? '
'அம்மா எப்பதாம்மா ஒழுங்கா வழியெல்லாம் தெரிஞ்சு வண்டி ஓட்ட கத்துக்குவீங்க?'
அதெல்லாம் எப்பவுமே பழகிக்க மாட்டேன்னு பையன்கிட்ட சொன்னா என்னோட இமேஜ் என்ன ஆகுறது?!
------------
No comments:
Post a Comment