Wednesday, 31 May 2017

ஓலாவும் நானும்.

ஓலாவும் நானும்.

ஏர்போர்ட்டில் இறங்கியவுடன், அடிக்கடி கூரைய பிச்சிட்டு கொட்டற சிமெண்ட்டும் கல்லும் கண்ணாடியும் எந்த பக்கம் என்று விசாரித்து, அந்த பக்கம் போகாமல் டேக்ஸி பிடிக்க வெளியே வந்தேன்

Fast track டாக்ஸி புக்கிங் விசாரித்ததில் விமான டிக்கெட்டில் பாதி விலை கேட்க, மறுபடி விமானம் ஏறி ஊருக்கே போய்விடலாமா என்று தோன்றியது. சரி நமக்கு இருக்கவே இருக்கு ola என்று ஒரு டாக்ஸியை புக்கினேன்

ஏர்போர்ட் பில்டிங் விட்டு வெளியே வந்து ட்ரைவருக்கு கால் செய்தேன். ரொம்ப பணிவாக பேசினார் முத்து

'எங்க நிக்கறீங்க மேடம்?'

'மெட்ராஸ் காஃபி ஹவுஸ் பக்கத்துலங்க'

'மேடம் அங்கயிருந்து அப்பிடியே அந்த காஃபி ஹவுஸ் பின்னாடி பாருங்க, தேசிய கொடி இருக்கா?'

சினிமா ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி தேசிய கீதம் மாதிரி ஓலா டாக்ஸில ஏறத்துக்கு முன்னால கொடிக்கு சல்யூட் அடிக்கணும்னு கோர்ட் ஆர்டர் ஏதும் வந்திருக்குமோ

'கொடி இருக்குங்க'

'அங்க போய் வெயிட் பண்ணுங்க. அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்'

'சரிங்க'

கொடி காத்த குமரன் மாதிரி கொடி கம்பத்துக்கு கீழே எனக்கு முன்னாடியே நிறைய பேர் நின்று சல்யூட்  அடித்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு தேசப்பற்று ஜோதியில் ஐக்கியமான போது வேறு ஒரு நம்பரிலிருந்து ஃபோன்

'ஹலோ மேடம்'

'சொல்லுங்க'

'ஓலா டாக்ஸி புக் பண்ணியிருந்தீங்களே'

'ஆமா. நீங்க சொன்ன இடத்துல தான் நிக்கறேன். இது வேற நம்பர்லயிருந்து பண்றீங்களா?'

'இல்லையே மேடம். நான் இப்ப தான் பண்றேன். என் பேர் காமேஷ்'

'முத்துன்னு ஒருத்தர் பேசி இங்க நிக்க சொன்னாரே'

'தெரில மேடம் எனக்கு இப்ப தான் மெசேஜ் வந்தது. நீங்க அங்க நம்ம கொடி இருக்கும் பாருங்க. அந்த கம்பத்துக்கு பக்கம் வந்துருங்க'

ஓலாவின் தேசபக்தியை பாராட்டியே ஆக வேண்டும்.

'நான் அங்க தாங்க நிக்கறேன். ஆனா இருங்க நான் முத்து கிட்ட கேட்டுடறேன். அவர் வர்றாருன்னா நான் அந்த கேப்ல போறேன்'

' சரி மேடம்'

முத்துவுக்கு ஃபோன் போட்டேன்

'வந்துட்டேன் மேடம். ரெண்டு நிமிஷம்'

'சரிங்க'

அடுத்து காமேஷுக்கு ஃபோன்

'முத்து வந்துட்டாருங்க. நான் கிளம்பறேன். சாரி. உங்க ஆபீஸ்ல கேளுங்க, ஏன் இரண்டு புக்கிங் எடுத்தருக்காங்கன்னு

'ஓகே மேடம்'

முத்துவின் காரில் ஏறி காமேஷ் கதையை சொன்னேன். கார் நகர்ந்தது

'உங்களுக்கு ஏதும் மெசேஜ் வந்திருக்கா பாருங்க மேடம்'

பார்த்தேன். அட ஆமா. காமேஷ் எனக்காக காத்துக்கொண்டு இருப்பதாக ஓலா வாஞ்சையுடன் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தது. அப்ப முத்துவ என்னடா பண்றது

'சரி மேடம் நீங்க OTP சொல்லுங்க

சொன்னேன். நம்பரை அழுத்தினார்

'மேடம் OTP கரெக்ட்டா? இது இல்ல போல இருக்கே'

'இந்த OTP தாங்க வந்தது. ஆனா காமேஷுக்கும் இதே OTP தான் வந்திருக்கு'

'நீங்க ப்ரியா தான? '

சந்தோஷம். A status in the making - என் நண்பனிடம் நான் என் அனுபவத்தை சொல்லும் போதெல்லாம் இப்படி ஏதாவது கமெண்ட் பண்ணுவான் என்பது இப்போது ஞாபகம் வந்தது

'இல்லைங்க'

இந்த ஹீரோயினுக்கான யுனிவர்சல் பேரை விடவே மாட்டாங்க போல. அதற்குள் இன்னொரு மெசேஜ் வந்தது. யுவர் புக்கிங் வித் முத்து ஈஸ் கேன்சல்டு. அடப்பாவிங்களா. இவங்களே அனுப்புவாங்களாம் இவங்களே கேன்சல் பண்ணுவாங்களாம்

'உங்க ரைட் கேன்சல்னு வருதுங்க முத்து'

' அப்படியா? நீங்க காமேஷ்க்கு ஃபோன் பண்ணுங்க மேடம்'

பண்ணினேன்

'மேடம் ரெண்டு முறை புக்கிங் குடுத்திருக்கீங்கன்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க'

'இல்லையேங்க. சரி பரவாயில்ல. முத்து கூட ரைட் கேன்சல்னு வருது. நீங்க வர்றீங்களா பிக் அப் பண்ண? '

'அச்சோ மேடம் நீங்க கிளம்பிட்டதா ஃபோன் பண்ணதால உங்க ரைட நான் இப்ப தான் கேன்சல் பண்ணேன்'

ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? ஒரு வேள ஓலால என்னோட FB ஃபேன் யாராவது இருக்காங்களோ?

'நீங்க இன்னொரு முறை ஃபரெஷ்ஷா ரைட் புக் பண்ணுங்க மேடம்' என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் காமேஷ். அதற்குள் ப்ரியவிடமிருந்து முத்துவுக்கு ஃபோன்

'நீங்க அந்த கொடி இருக்கு இல்லைங்க... ' என்று தனது தேசபக்தியை மீண்டும் விவரித்தார் முத்து
முத்துவின் காரில் கொடி கம்பத்தை கடந்து 100 மீட்டருக்கு மேல் வந்துவிட்டிருந்தேன். நான்  வேறு ரைட் புக் செய்து, புது  காரோட்டி அர்ஜுனனுக்கு கால் செய்தேன்

'மேடம் அங்க ஒரு கொடி கம்பம் இருக்குல்ல....'

'தெரியுங்க தெரியுங்க வந்துடறேன்'

இன்னைக்கு தேஷ்பக்தில முங்கி குளிச்சு அநேகமா ராத்திரி அட்டென்ஷன்ல ஜனகணமன பாடிட்டு தான் தூங்குவேன்னு நெனக்கிறேன்

அதற்குள் முத்து,' மேடம் நான் அந்த கொடி கம்பத்துக்கிட்ட தான் அடுத்த ரைட் பிக் பண்ணனும். இப்படி ரிவர்ஸ்ல போக முடியாது. சுத்திவரணும் . நீங்க உட்காருங்க நான் ட்ராப் பண்றேன்'

'வேண்டாம் முத்து. தாங்கயூ. நான் நடந்துடறேன்'

இறங்கியபின் அழகாக டாட்டா காண்பித்தார் முத்து. நானும் டாட்டா காட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். இது ஓலாவே நட்டு வச்ச கொடி கம்பமா இருக்குமோ? யோசித்தபடியே நடந்து வந்து மறுபடி கொடிக்கு சல்யூட் அடித்தபடி காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் , எனக்கு முன்னே கொடி கம்பத்திடம் வந்து அட்டென்ஷனில் நின்று கொண்டிருந்த ப்ரியாவை பிக் அப் செய்ய முத்து வந்தார்

என்னைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி கண்ணாடி இறக்கி 'மேடம் இன்னும் வரலையா கார்? ' 

'வந்துடும் முத்து. தாங்க்யூ

இந்த கர்டஸியை எல்லா ட்ரைவர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. என்ன ஒரு கனிவு. மறுபடியும் அழகாக டாட்டா காட்டிவிட்டு நகர்ந்தார். ஸ்வீட் பர்சன்

காரோட்டி அர்ஜுனன் வந்தார்

'நீங்க அர்ஜுனன் தான? '

இல்ல நான் கர்ணன்னு சொல்லிடுவாரோ என்று பயந்தபடியே கேட்டேன்

'ஆமா மேடம் OTP சொல்லுங்க......'. 

ஓலாவுக்கும் எனக்குமான பூர்வ ஜென்ம பந்தம் வலுப்பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை எந்த சமாதியிலும் தியானம் செய்யாமலே உணர்ந்து கொண்டேன் . ஓலாவும் நானும்- பயண கட்டுரை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறேன்

பயணங்கள் முடிவதில்லை

No comments: