Monday, 29 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்... தொடர்ச்சி - 2

மக்கள் சிறுதானியத்திற்கு மாற யோசிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். 

ஒன்று சுவை. அடுத்து விலை.

சுவையை பொறுத்தமட்டில் அரிசியை உபயோகிக்கும் அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களை சப்ஸ்டியூட் செய்யலாம். சுவையில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. மாற்றம் தெரிந்தாலுமே அதை பழகிக்கொள்வதில் தவறேதும் இல்லை. 

சிறுதானியத்தை சோறாகத் தான் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரவை, சேமியா, மாவு என எல்லா வடிவங்களிலும் சிறுதானியங்கள் கிடைக்கின்றன. அன்றாடம் உண்ணக்கூடிய இட்லி, தோசை, ரொட்டி , உப்புமா, பொங்கல் , அடை, வடை ,பனியாரம், இடியாப்பம், புலவ்  என எல்லாவற்றையும் இந்த சிறுதானியங்களில் செய்யலாம். இதற்காக ஏகப்பட்ட ரெஸிபி புத்தகங்களும் கிடைக்கின்றன. அவற்றை விரும்பி சாப்பிடுவதற்கு நம் வயனமான நாக்கை காட்டிலும் நம் மனநிலையே முக்கியம். 

அடுத்து விலை.

 நமக்கு நன்கு  பரிச்சயமான கேழ்வரகு, கம்பு ஆகியவை குறைந்த விலையில் தான் கிடைக்கின்றன. புதிதாக மார்கெட்டை பிடித்திருக்கும் மற்ற சிறுதானியங்கள் தான் ஏகத்துக்கு விலை. கிலோ 120 ரூபாய்  என்பது ரொம்பவே அதிகம். அரசாக பார்த்து சாதாரண வெள்ளை அரிசி, கோதுமை போல இந்த சிறுதானியங்களை பல்பொருள் அங்காடிகளில் விநியோகம் செய்ய ஆரம்பித்தால் தான் விலை குறைய வாய்ப்புள்ளது. 

உலகிலேயே இந்தியா தான் இந்த தானியங்கள் (major & minor millets) உற்பத்தியில் முதலிடம் என்பது ஆச்சர்யமான விஷயம். எழுபதுகளில் ஸ்டேபில் (staple) டயட்டாகவே இருந்த சிறுதானியங்கள், 2000 மாவது ஆண்டில் கிட்டதட்ட 75% குறைந்து விட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. 2005 ம் ஆண்டு முதல் இவை பெரும்பாலும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவாகவே (fodder) மாறிவிட்டது. 

நம் ஊரில் மனிதர்கள் இந்த தானியங்களை சீண்டுவதே இல்லையா என்று கவலை கொள்ள வேண்டாம். ஆல்கஹால் (மது) உற்பத்தியில் இவை பயன்படுகின்றன. மில்லட் பீர் நேபால், ஜப்பான்,ஆப்பிரிக்கா,இந்தியா நாடுகளில் டோங்பா(tongpa), அஜோனோ(ajono), ரக்‌ஷி, போஸோ (bozo ) என வெவ்வேறு பெயர்களில் பிரசித்தம். 

சரி இங்கே விளையும் தானியங்கள் அனைத்தும் என்ன தான் ஆகின்றன? வழக்கம் போல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் , உற்பத்தி செய்யப்படும் நாட்டிலேயே கொள்ளை விலை போவது புதிய விஷயம் அல்ல . இங்கே அவற்றுக்கான சந்தை இல்லாத போது வேறு என்ன செய்ய முடியும் ? இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் நம் நாட்டில் இந்த தானியங்களின் உபயோகத்தை அதிகரிக்க 'விலைக் குறைப்பு' என்ற அத்தியாவசிய தேவை தவிர மற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக வழக்கமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

எளிதில் கிடைக்கக் கூடிய/ கிடைக்க வேண்டிய பொருள்களே நான்கு குட்டி கர்ணம் அடித்து, வராத சாகசங்களை எல்லாம் செய்து காட்டினால்  தான் சாமானிய மனிதனுக்கு கிட்டுகிறது (உ.த. எல் பி ஜி சிலிண்டர்).  சுலபமாக சல்லிசாக கிடைக்க கூடிய தானியங்கள்களை சந்தைப்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ளுமா? செய்தால் நன்றாகத் தானிருக்கும். அரசு இந்த வகை தானியங்களை விநியோகிக்க முன் வரும் நிலையில், இதனை எவ்வளவு பேர் அரசு பல்பொருள் அங்காடிகளில் வாங்க முன் வருவர்?

இன்று சிறுதானிய உணவு ஒரு வகையான லக்‌ஷுரி உணவாகவே பார்க்கப்படுவது வருந்தத்தக்க விஷயம்.  'ப்ரௌன் ரைஸ்' சாப்பிடுவதையே மட்டமாக நினைப்பவர்கள் நம்மிடையே இருக்கதானே செய்கிறார்கள். அரிசி சோறு சாப்பிடுவதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைத்த/ நினைக்கும் தலைமுறை நாம்.

சில யோசனைகள்...

பள்ளியில் பாட திட்டத்தில் சிறுதானியங்கள்  பற்றி சேர்த்து குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அவற்றின் அருமை பெருமையை புரிய வைக்கலாம். 

பண்டிகை கொண்டாட்டங்களில், கோவில்களில் நிறைய பயன்படுத்தலாம். 

தரம் குறைந்த அரிசியை உபயோகிப்பதாக வரும் சத்துணவு புகார்களுக்கு சிறுதானியங்கள் மூலம் பதில் தரலாம். 

அதே இட்லி தோசை பனியாரத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புதிது புதிதாக சமைக்கும் முறைகளை கண்டறியலாம். 

இது போன்ற ஏதாவது புது ஐடியாக்களை இப்போதே செயல்படுத்த ஆரம்பித்தால் கூட சிறுதானிய உணவு மாற்றம் அடுத்த தலைமுறையில் நிச்சயம் சாத்தியப்படலாம். 

சிறுதானிய உணவு முறைக்கு மாறுவது ஒன்றும் தலைகீழாக நின்று தண்ணி குடிக்கும் சாசகசமல்ல.சைனீஸ் ஃப்ரைடு ரைஸையும் நூடுல்ஸையும் எவ்வளவு மோசமாக இருந்தாலும் உண்ணத் தெரிந்த நமக்கு சத்துள்ள இந்த சிறுதானிய சுவையை பழகுவதிலும் சிரமம் இருக்காது. 

முயற்சி செய்வோம். 

Monday, 22 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்...


சீரில்ஸ் என்ற பெயரில் நமக்கு ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், ம்யுஸ்லி (muesli)  பரிச்சயமான அளவு  சமீபகாலங்கள் வரை சிறுதானியங்களின் பெயர்கள் கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. 

மொத்தம் ஏழு சிறுதானியங்கள்
(லிட்டில் மில்லெட்) . வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் (மக்கா சோளம் அல்ல), கேழ்வரகு. இதில் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் எல்லாம் சிறு வயதிலிருந்தே ஓரளவு பரிச்சயம்.  மீதமுள்ள நான்கும் சமீபத்தில் தெரிந்து கொண்ட பெயர்கள். 

இந்த சிறுதானியங்கள் வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை வெளிர் பச்சை, மஞ்சள் , ப்ரவுன் என பல கலர்களில் இருந்தாலும் பாலிஷ் செய்யப்பட்டு கடைகளில் வைக்கப்பபட்டிருக்கும் பாக்கெட்டுகளில் எல்லாம் உருண்டை உருண்டயாக ஹோமியோபதி குளிகை மாதிரியே இருக்கின்றன.ஹோமியோபதி மருந்தை பார்த்திராதவர்கள் பாலிஷ் செய்யப்படாத ஜவ்வரிசியின் மினியேச்சர் சைஸை கம்பேர் செய்துக் கொள்ளலாம். 

அதனால் சிறுதானியங்களை பாக்கெட்டுகளில் போடப்பட்டுள்ள பெயரை வைத்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது.பெயரை மாற்றி ஒட்டி வைத்திருந்தால் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். இவை பார்ப்பதற்கு மட்டுமல்ல சுவையிலும் ஒரே மாதிரி தான்.  கம்பு , கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் தனித்துவமான சுவையை போல மற்ற சிறுதானியங்களுக்கு ப்ரத்யேக சுவை என எதுவும் உணர முடிவதில்லை. 

கேழ்வரகு,கம்பங் கூழ் தவிர்த்து வேறு எதையும் நாம் இது நாள் வரை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போதுமே கூட சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று எதையாவது சொல்லி பயமுறுத்தி தான் ஓட்ஸின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நம் கவனத்தை சிறுதானியங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சக்கரை நோயாளிகள் மட்டுமில்லாது பொடென்ஷிடயல் டயாபிடிக் லிஸ்ட்டில் வருபவர்களும் இந்த வகை உணவுகளுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். 

பல் துலக்கும் பேஸ்டில் ஆரம்பித்து இரவு உபயோகிக்கும் கொசுவத்தி வரை உலகமயமாக்கலின் தாக்கத்தை எல்லா நிலைகளிலும் உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்ம ஊர் மக்கா சோளத்தை விட்டு விட்டு குழந்தைகளுக்கே அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் தானே வாங்கித் தருகிறோம்? எதற்கு மவுசு அதிகமோ அதற்கு விலையும் அதிகமாக இருப்பது ஆச்சர்யமில்லை. கிலோ நாற்பது ரூபாய்க்கு அரிசி வாங்குவதை தவிர்த்து கிலோ நூற்றியிருபது ரூபாய்க்கு விற்கப்படும் வரகு, சாமை, தினையை எவ்வளவு பேர் வாங்கி சாப்பிட முடியும்? அந்த காலத்தில் கேட்பாரற்று கிடந்த உணவை இன்று எங்கேயோ தூக்கி வைத்துள்ளோம்! ஆர்கானிக் ஸ்டோர் என்ற பெயரில் தனியே கொள்ளையடிக்க விட்டுவிட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறோம். நம்முடைய சிறுதானியங்களை கண்டுகொள்ளாமல் ஓட்ஸின் பின்னால் அலைந்ததற்கான விலையே இந்த நூற்றியிருபது ரூபாய். 

என் அப்பா காலத்தில் இது போன்ற சிறுதானிய உணவை தாத்தாவின் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் தான் சாப்பிடுவார்களாம். அதாவது அரிசி சோறு பொங்கி சாப்பிட வசதி இல்லாதவர்கள்.என்றைக்காவது ஒரு நாள் பாட்டி வரகு அரிசியிலோ சாமை சோறோ பிள்ளைகளுக்கு வடித்துப் போட்டால் தாத்தா பாட்டியை அடிக்கவே வந்து விடுவாராம். இன்று அப்பாவிடம் வரகரிசி சாதம் , தினை இட்லி , குதிரைவாலி தோசை , சாமை பொங்கல் என்று ஏதோ புது ரெஸ்பி கண்டுபிடித்துவிட்ட களிப்பில் சிலாகித்தால் அப்பா அவருடைய அந்த கால கதையை சொல்லி சிரிக்கிறார். 




Thursday, 18 December 2014

என்னமோ போங்க!



என்னமோ போங்க! 


நம் ஊரில் வீடு வேலை செய்பவர்,குழந்தை பார்த்துகொள்கிறவர்கள் , சமையல் செய்வோர் ஆகியோரை பெரிதும் நம்பியே வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை நகர்கிறது. எல்லா வேலைகளையும் தானே செய்தாலும் கூட கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த காலத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியாவது  ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.  

வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த பிரச்னையை சந்தித்திருப்பீர்கள்  என்றே நம்புகிறேன். ஊருக்குச்  செல்லும் வேலைசெய்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவது. ஊருக்கு போகும்  போது நன்றாகவே பேசிவிட்டு செல்பவர்கள் ஊருக்கு போன பின் நம்மை சுத்தலில் விட்டு விடுகிறார்கள். நிச்சயமாக சொன்ன தேதியில் கிளம்பி வர மாட்டார்கள். நாம் போன் செய்தால் பெரும்பாலும் சுவிட்ச் ஆப் என்றே வரும்.அப்படியே தவறி போன் எடுத்து பேசினாலும் இது வரை கேள்வியே பட்டிராத அவங்க  ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட தங்கச்சியோட மச்சினனுக்கு கையில நகசுத்தி, ஆபரேஷன் பண்ணனும் என்பார்கள். நமக்கோ ஆபீசில் போட்ட லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியாத நிலைமையா  இருக்கும்.அப்போது  தான் வேலையிடத்தில்  எக்ஸாம் வரும்,மினிஸ்டர் வருவார், ஹெல்த் செக்ரட்டரி திடீர் விசிட் அடிப்பார் , இன்ஸ்பெக்ஷன்  வரும், மாதாந்திர கிளினிகல் மீட்டிங் வரும்... கட்டாயம் வந்துடறேனு சொல்லிட்டு போன வேலையாள் தவிர மற்ற எல்லோரும் கும்மி கொட்டிக்கொண்டே ஒரு சேர வந்து நிற்பார்கள்.  

மேலதிகாரியிடம் லீவ் கேட்கவும் தர்மசங்கடம்.யார் என்றே தெரியாத ஒருவரின் நகசுத்து  எனக்கே வந்திருந்தால் தேவலை போல தோன்றும். 
சரி எப்போ தான் வருவீங்க என்று கேட்டால் இதோ நாளைக்கு ,இன்னும் ரெண்டு நாள் ,இன்னும் நாலு நாள்...இப்படி வரையறை இல்லாமல் நீண்டு கொண்டே போகும் அவர்களின் லீவும் வேலையிடத்தில் சகட்டு மேனிக்கு லீவ் எடுக்கும் எனது கிரைம் ரேட்டும்.வேலையாள் வரும் வரை சூர்யாவின் அவள் வருவாளா தான் எங்க பேமிலி சாங்.டெய்லி ஒரு முறையாவது பாடிவிடுவோம். 

வேலைக்கும் செல்ல முடியாமல், முழுமனதோடு வீட்டிலும் ஒன்றி வேலை செய்ய முடியாமல்,வேலைக்கு வேற ஆள் தேடலாமா இல்லை  நானே வேலையை விட்டுவிடலாமா என்று போராட்டமாக இருக்கும் போது போன் வரும் வேலைக்காரியிடமிருந்து .லவ் பண்ணும் போது அவர் நம்பர் பார்த்து கூட இவ்வளவு குஷியாகி இருக்குமா மனது தெரியவில்லை! வேலையாள் ஒரு சிறிய தயக்கம் கூட இல்லாமல் ,' யக்கா நான் இனிமேல் வேலைக்கு வரலைக்கா ' என்பாள். இன்று வருவாள் நாளை வந்து விடுவாள் என்று நம்பி இருந்துவிட்டு வரவே மாட்டாள் என்பதை ஜீரணிக்க எத்தனை பாட்டில் ஜெலுசில் தேவைப்படும் என்றே புரியாமல் குழம்பி நின்ற தருணங்கள் கணக்கே இல்லை!  தான் வேறு இடம் பார்த்துவிட்டதாக படு கேஷுவலாக சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். 

வீட்டில் உள்ளவர் சொல்லும் சமாதானம், பரவயில்லையே சொல்லிட்டு தான நின்னுச்சி   என்பதே. இதை முன்பே சொல்லி இருந்தால் லீவில் இருந்த போதே வேறு ஆளையாவது தேடி இருப்பேனே என்று அங்கலாய்ப்பாக இருக்கும். வெளியில் இருந்து பார்ப்போருக்கு ( பல நேரம் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கே கூட)இது ஒரு மேட்டரா    என்று தோன்றும். புது ஆளை தேடிப்பிடித்து , நமக்கு ஏற்றார் போல டியூன் செய்வது லேசான வேலை அல்ல. குழந்தையைப் பார்த்துக் கொள்பவரை குழந்தைக்கும் வேறு பிடிக்க வேண்டும்! 

நமது தேவைக்கு ஏற்ப ஆட்கள் கிடைப்பது பெண் தேடுவதை விட சிரமமான  ஒன்று.ஏஜென்சி மூலம் தேடிச் சலித்துவிட்டேன் . பெரும்பாலான ஏஜென்சிகள் ப்ராத்தல் நடத்தும் இடங்களைப்  போலவே உள்ளன. அதுவும் நடக்குமோ என்னவோ யார் கண்டா! இத்தனைக்கும் ஏஜென்சியின் நம்பர் மற்றும் அட்ரஸ் பெருமைமிக்க JUS DIAL லில் வாங்கியது. ஒரு மட்டமான தெருவில் ஏஜென்சி என்று எந்தவித போர்டும் இல்லாத ஒரு அரதப்பழசான வீட்டின் மாடியில் ஒரு குறுகலான அறையில் வரிசையாக லேடீஸ் எல்லோரும் அமர்ந்து இருப்பார்கள். நாம் அவர்களில் யார் வேண்டுமோ செலக்ட் செய்து கொள்ளலாம். எனக்கு கமல்ஹாசன் படங்களில்  பார்த்த பலப்பல காட்சிகள் மண்டைக்குள் ஓடும்.ஒன்றிரண்டு இடங்களை  பார்த்த(!) பின்பு ஏஜென்சிகளுக்கு நேரில் செல்வதையே விட்டு விட்டேன்.

இதனால் கண்ட சிக்கல்களும் பல. அட்ரஸ் கொடுத்து விட்டால் வீட்டிற்கு ஆள் அனுப்பி வைப்பார்கள்.ஒரு முறை அது போல சமையலுக்கு ஒரு ஆள் வந்தது.35 வயது அம்மா என்று சொல்லியிருந்தார்கள். நேரில் பார்த்த போது பகீரென்றது.  ஒரு 55வயது சொல்லலாம் . ஆயா என்பதே சரி.வயதானவர்களை எப்போதுமே வேலைக்கு வைத்ததில்லை. ஏஜென்சிக்கு போன் போட்டு திட்டினேன். ஆள் இல்லை மேடம் அதுவரைக்கும் அட்ஜஸ்ட்  பண்ணிக்கோங்க என்றார்கள். வேற வழி? 

ஆயா கேஸ் அடுப்பில் சமைத்ததில்லையாம்.மற்றபடி எல்லா வகை சமையலும் தெரியுமாம்.எந்த அடுப்பில் எல்லா சமையலும் பழகி இருக்கும் ஆயா என்ற யோசனை வராமல் இல்லை. ஒரு மாதம் ஆளில்லாமல் கஷ்டப்பட்டதற்கு வந்திருந்த ஆயா மல்லிகா பத்ரிநாத் போலவே தெரிந்தார் எனக்கு!ஒரு வேளை தந்தூரி, க்ரில்ட் ஐடம்ஸ் மட்டும் செய்யுமோ ஆயா  என்று நினைத்துக்கொண்டே  முதல் நாள் அடுப்பை பற்ற வைக்க செய்ய சொல்லி கொடுத்து நானே சமைத்தும் வைத்தேன். எல்லாம் புரிந்ததாக மண்டைய மண்டைய ஆட்டினார் ஆயா. அடுத்த நாள் காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம்.நாங்கள் கிளம்பும் போது ஆயா ஒரு கேள்வி கேட்டது. ஏம்மா அந்த அடுப்பு அணையலேனா  தண்ணி தெளிச்சு அணைசிக்கலாமா? வாயே திறக்கவில்லை நான்.  லீவ் போட்டு  வீட்டிலேயே உட்கார்ந்து விட்டேன். 
ஏஜென்சி கதை இப்படி! 

தற்போது அடுத்து வேலையாள் தேடும் படலம் இனிதே ஆரம்பமாகி உள்ளது.தெரிந்தவர் அறிந்தவர் புரிந்தவர் மற்றும் பல வர்கள் மூலம் ஆள் தேட ஆரம்பித்துள்ளேன்.வேலைக்கு ஆள் தேடி அலைந்து அலைந்து, வேலைக்கரர்களோடு  எனக்கு இருக்கும் அனுபவத்தை கணக்கில் கொண்டு  டாக்டர் தொழிலை விட்டு விட்டு ஒரு மேன் பவர்  ஏஜென்சி ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும். வேலைக்கு விருப்பமுள்ளோர் உங்கள் ரெசுமே கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

vaippome_ aappu@ yakov . co.in


Aruna😊

Monday, 15 December 2014

என்ன சாப்பிடுகிறோம் -2

GI பற்றிக் கொஞ்சம் இன்னும் சமாச்சாரம்....

GI குறைவாக உள்ள உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீரமைக்க உதவுவதுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய கோளாறுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகின்றன. புரத சத்து, கொழுப்பு சத்து, நார் சத்து, முழு தானியங்கள், பயிறு வகைகள், பழங்கள், காய்கறிகள் என GI குறைவாக உள்ள ஏராளமான உணவுகள் சடுதியில் ஜீரணம் அடையாது. அதாவது நீண்ட நேரம் நம்மால் பசியை தாக்குப்பிடிக்க முடியும். அதிக GI உள்ள உணவு வகைகள் இதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும். 

ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் குறைந்த GI உள்ள உணவுகளின் பங்கு கேள்விக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. 
ஏனெனில் ஒரு உணவுப் பொருளின் GI அதைப் பதப்படுத்தும் முறை, சமைக்கும் முறை, அதனோடு சேர்த்து சமைத்து , பரிமாறப்படும் மற்ற உணவுகள் போன்ற வெவ்வேறு காரணிகளை சார்ந்துள்ளது. 

GI என்பதே அவசியமற்ற ஒன்று, அது சர்க்கரை நோயாளிக்களுக்கு மட்டும் தான் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.GI யை மட்டும் கணக்கில் கொண்டு சாப்பிடுவதனால் உடலுக்குத் தேவையான மற்ற அத்தியாவசிய சத்துக்களை நாம் இழக்கிறோம் என ஒரு கோஷ்டி கூவிக்கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்கான மாற்றுக் கருத்தையும் ஆராய்ந்து பார்ப்பதே புத்திசாலித்தனம். யாராவது ஒரு சாரார் சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு வண்டிமாடு போல ஒரே தடத்தில் போக வேண்டிய அவசியமில்லை. 

டயடிங் என்பதை எடைக்குறைப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்காமல், உடல் ஆரோக்கியம் என்ற பரந்த சிந்தனையோடு அணுகலாம். உடலுக்கு நல்லது வயிற்றுக்கு நல்லது என்று சொல்லப்படும் பெரும்பாலான உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதி. இதனாலேயே டயடிங் என்று பேச்செடுத்தாலே பலரும் தெறித்து ஓடிவிடுகின்றனர். 

உணவு முறையை பொருத்தமட்டில் ஹார்ட் அன்ட் ஃபாஸ்ட் ரூலாக (hard & fast) எதை மேற்கொண்டாலுமே சில நாட்களிலேயே சலிப்பு தட்டும். அதைப்போல ஒரே மாதிரியான உணவு வகைகளை அன்றாடம் உண்பதும் சீக்கிரமே உணவு கட்டுப்பாட்டின் மீதே வெறுப்பை உண்டாக்கிவிடும். இந்த சலிப்பு வெறுப்போடு சேர்த்து நமக்கு பிடித்தமான உணவினை பார்க்கும் போது காஞ்ச மாடு கம்பங்கொல்லையை பார்த்த கதையாகிவிடுகிறது.

நாம் கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு ருசியான உணவினை மட்டும் இஷ்டம் போல முழுங்குவதை தவிர்த்து GI குறைவாக உள்ள உணவுகளோடு சேர்த்து உடலுக்கு தேவையான மற்ற வகை உணவுகளையும் உட்கொள்ளலாம். வொயிட் ப்ரெட்டுக்கு பதிலாக ஹோல் வீட்(whole wheat)  ப்ரெட் சாப்பிடலாம்.(நாங்கெல்லாம்  காய்ச்சல் வந்தால்  தான் ப்ரெட் சாப்பிடுவோம் வம்சாவளியில் வந்தவர்கள்,மன்னிக்க )வெள்ளை அரிசிக்குப் பதில் கைக்குத்தல் அரிசியோ சிறுதானிய சோறோ சாப்பிடலாம். அதோடு சேர்த்து கொஞ்சம் பச்சை காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், முட்டை, மாமிசம் என கதம்பமாக நமது டயட்டை நாமே சுவாரஸ்யமாக டிசைன் செய்து கொள்ளலாம்.

 சிக்கன் என்றாலே செக்கச்செவேலென எண்ணெயில் பொறித்த சிக்கன் 65 தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காமல், கோழியையும் மீனையும் அவித்தோ, குழம்பு வைத்தோ உண்ணலாம். சுவைக்காக சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், நன்றாக இல்லையென்றாலும் கூட ஆரோக்கியத்துக்காக சில உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும் என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே இருந்தே பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். எல்லாவற்றையுமே ஸ்பூன்ஃபீட் செய்து பழகிக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையில் நல்ல உணவு முறைகளையும் பழக்கிவிடுவதில் தவறேதும் இல்லை. 

உணவுக் கட்டுப்பாட்டை எவ்வளவு சீராக கடைப்பிடிக்க முடிந்தாலும் தினமும் ஏதோவொரு வகையில் உடலுக்கு கொஞ்ச‌ம் வேலையும் தருவது அவசியம். ரிமோட்டில் சானல் மாற்றுவதையே மாபெரும் வேலையாக நினைக்கும் உழைப்பாளிகள் வீட்டுக்கு வீடு இருக்கத்தான் செய்கிறார்கள்.தானாக எழுந்து நடந்து தாகத்துக்கு தண்ணி மோந்து குடிப்பதை கூட மானக்கேடாக நினைத்து அடுத்தவரை வேலை வாங்குபவர்கள் அதிலிருந்தே ஆரம்பிக்கலாம், அதாவது தங்கள் வேலையை தானே செய்துக்கொள்ள. வாக்கிங், ஜாகிங், வொர்க்கவுட், ஸ்விம்மிங், டென்னிஸ் , பேட்மின்ட்டன் என ஏதாவது ஒரு பயிற்சி உடலுக்கு நிச்சயம் தேவை. நாம தான் நடக்கிறோமே, ஓடுறோமே என்று இஷ்டப்படி உண்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.மூக்கு பிடிக்க முழுங்கிவிட்டு மூச்சு வாங்க ஓடுவதில் பெரிய பலனேதும் எதிர்பார்க்க கூடாது.  

 நீங்க இதையெல்லாம் தொடவே கூடாது , அதையெல்லாம் வாசனை கூட பிடிக்க கூடாது, வாக்கிங் போகாமல் தூங்கவே கூடாது  என்று டாக்டர் வந்து ஏகத்துக்கு ரூல்ஸ் போடும் வரை காத்திருக்க வேண்டாம் .பிறகு நாம் சாப்பிடாமல் இருக்க அவருக்கு வேறு மொய் எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து மோட்டு வலையை பார்த்து கேவி கேவி அழுவதற்கு நாமே என்ன சாப்பிடுவது என்பதை தேர்ந்தெடுத்து உண்பது நல்ல பழக்கம் தானே? 

முயற்சிப்போம். 

சந்தூர் அம்மாக்கள்


காலையில் பிள்ளையை பள்ளியில் கொண்டு விடுவதை என்ஜாய் பண்ணுவதற்கு ஒரு ஜென் மனநிலை தேவைப்படுகிறது. ஆனால் மதிய வேளையில் பிள்ளைக்காக காத்திருந்து பள்ளியிலிருந்து அழைத்து வருவது ஒரு சுகமான அனுபவம். எப்போதாவது தான் வாய்க்கும் இந்த பாக்கியம். அதனாலேயோ என்னவோ வேலைக்கு செல்லாத அம்மாக்களின் மேல் எனக்கு எப்போதுமே துக்கிளியூண்டு பொறாமை உண்டு. 

ஆடிக்குப் போனால் அடுத்து புரட்டாசிக்கு தான் பள்ளிக்கு செல்லும் ப்ராப்தம் வாய்க்கிறது எனக்கு. இதனால் க்ளாஸ் மிஸ்ஸை தவிர வேறு யாரையும் தெரிந்துவைத்துக்கொள்ள முடிவதில்லை. அப்பாக்களை பற்றி கேட்கவே வேண்டாம், பிள்ளைகளுக்கே பல நேரங்களில் அவர்களை அடையாளம் தெரிவதில்லை. அதனால் பள்ளியில் பிள்ளையுடன் படிக்கும் சக மாணவர்களின் அம்மாக்கள் சுத்தமாக பரிச்சயம் கிடையாது. 

யோஹானின் பள்ளி விளையாட்டு விழாவின் போது சுமார் பத்து பேர் அடங்கிய பெண்கள் கூட்டம் ஒன்று  ஒரே மாதிரி கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிறத்தில் உடையணிந்திருந்தனர். ஏதோ டான்ஸ் ட்ரூப் போல என்று நினைத்து விசாரித்தால் அந்த அழகு கும்பல் முழுக்க  எல்கேஜி குழந்தைகளின் அம்மாக்களாம்!கூடி கூடி க்ரூப் செல்ஃபி எடுப்பதை  தவிர பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் அந்த அழகு அம்மாக்களை பார்த்த  போது காலேஜ் படிக்கும் காலத்தில் சொல்லி வைத்து ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு வந்த அலப்பரை விட்டது ஞாபகம் வந்தது. திருமணம் முடித்து, குழந்தை பெற்று, பிள்ளையின் பள்ளி விழாவிற்கு இவ்வாறு இந்த அம்மாக்களால் வர முடிந்தது என்னைப் பொருத்த மட்டில் ஆச்சர்யமான விஷயம். 

சாயங்காலம் ஸ்கேடிங், ட்ராயிங் , ஃபோனிக்ஸ்,டென்னிஸ் போன்ற எக்ஸ்ட்ரா க்ளாஸ்கள் நடக்கும் இடங்களில் அழகழகான இளம் அம்மாக்களை காணலாம். எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் இந்த சந்தூர் அம்மாக்களை வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடிக்கும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. 

முக்கால்வாசி பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்து மதியம் அரைகுறையுமாக தூங்கியெழுந்து பாதி தூக்கத்தில் தள்ளாடியபடியே தான்  வரும் க்ளாஸுக்கு.ஆனால் அம்மாக்கள் படு ஃப்ரெஷ்ஷாக  ஸ்டைலான கெட்டப்பில் தினமும் அசத்துகிறார்கள். 

பிள்ளையை டென்னிஸிலோ ஸ்கேட்டிங்கிலோ விட்டுவிட்டு தங்கள் ஜாக்கிங், வாக்கிங்கை முடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே ஹவுஸ் பார்ட்டி, ட்ரீட், அவுட்டிங் என அழகாக நேரத்தைப் பிரித்து அட்டவணை போட்டுக் கொள்கிறார்கள். 

ஜாக்கிங்,  வாக்கிங் போகாதவர்கள் காலையில் தூங்கி எழுந்து பிள்ளைக்கு வாயில் ப்ரஷை வைத்தது முதல் ஆரம்பிக்கிறார்கள் அரட்டையை. அப்படியே சினிமா, ம்யூசிக், சமையல், ட்ரெஸ், பார்ட்டி, ஷாப்பிங் ,கணவர், ஸ்போர்ட்ஸ் என டேக் ஆஃப் ஆகி மறுபடி அடுத்த நாள் பிள்ளைக்கு என்ன ஸ்நாக் தருவது என்பதில் முடிகிறது கச்சேரி. 

இந்த இளம் அம்மாக்கள் அனைவருமே  பட்டதாரிகள். பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டவர்கள். குழந்தை ஒரளவு வளர்ந்து வரும் வரையோ அல்லது 'நாம் இருவர் நமக்கு இருவர்'என்ற எழுதப்படாத திட்டத்தை பூர்த்தி செய்யவோ வேலைக்கு செல்வதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளவர்கள். 

பேச்சில் தெறிக்கும் இளமை, குறும்பு, அலட்சியம் அவற்றோடு கூட இழையோடும் ஒரு வெகுளித்தனம் தான் இந்த சந்தூர் அம்மாக்களின் ஈர்ப்புக்கு காரணம் எனலாம். வயது ஏற ஏற பெண்கள் இளமையோடு சேர்த்து முதலில் தொலைப்பது அவர்களுக்கே உரிய வெகுளித்தனத்தை தான். இதனாலேயே பெரும்பலான பெண்கள் முப்பது வயதைக் கடக்கும் போதே நாற்பதை கடந்த முதிர்ச்சியோடு ஆளே உருமாறி வான்டடாக பெருசுகள் ஜீப்பில் ஏற முயலுகின்றனர். முகத்தின் முதிர்ச்சியும், உடலின் தளர்ச்சியும் அளவுக்கு மீறி வெளிப்படுவது இந்த வெகுளித்தனத்தை தொலைக்கும் போது தான் என தோன்றுகிறது. 

இவர்கள் வயதில் நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என யோசித்துப் பார்த்தால்.. கண்றாவி, அப்போதும் ஏதோ ஒரு நுழைவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டுத்தானிருந்திருக்கிறேன். 
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேடிக்கை பார்க்கும் எனக்கு இந்த சந்தூர் அம்மாக்களின்  குதூகலம் பட்டாம்பூச்சி போல சடுதியில் தொற்றிக்கொள்கிறது. காலேஜ் வாழ்க்கை முடிந்த பின்பு இது போன்ற இளமை கச்சேரிகள் சாத்தியப்படாததால் தான் இன்னமும் இவர்களை ரசிக்க முடிகிறதோ என்னவோ .ஆனால் அதிக பட்சம் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் இந்த அழகு அம்மாக்கள் அனைவரும் ஒரு 'டிபிகல் அம்மா'வாக மாறி இருப்பார்கள் என்பதே நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனம் . 


பி. கு

இது போன்ற இடங்களில் அப்பாக்களை பார்க்கவே முடிவதில்லை.உண்மையில் அப்பாக்களுக்கு பொழுது போக்க அருமையான இடம் இந்த மாலை நேர எக்ஸ்ட்ரா க்ளாஸ்கள். 

Thursday, 4 December 2014

என்ன சாப்பிடுகிறோம்?

உணவுக் கட்டுப்பாடு என்பது எதாவது உடல் உபாதை வந்த பிறகோ, வரக்கூடிய அபாயம் உள்ளது என்று எதிர்பார்த்தோ , ஒரு எச்சரிக்கை மணிக்குப் பின்னே தான் நம்மால் மேற்கொள்ள முடிகிறது. சுயமாக முடிவெடுத்து நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்வோம் என்றெல்லாம் தினமும் கட்டுப்பாடாக சாப்பிடுவது நடைமுறையில் சிரமமான விஷயம். அவ்வாறு தாமாகவே மனமுவந்து உணவுகட்டுப்பாட்டுடன் இருப்பவரை ஹெல்த் ஃப்ரீக் என்று அழைப்பதுண்டு. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நானெல்லாம் எப்பவுமே ஸ்ட்ரிக்டா ஹெல்த்தி ஃபுட் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்பவர்களுக்கு ஒரு ஷொட்டு. ஸ்கிப் திஸ் போஸ்ட். 

என்னைப் போன்ற ஆட்கள் மேலே தொடரலாம். 

டயடிங் / உணவுக் கட்டுப்பாடு மற்றும் எடை குறைத்தல் என்று ஆரம்பித்தாலே முதலில் காதில் விழும் வார்த்தை ரைஸ் சாப்பிடாதீங்க என்பதே.அரிசி சார்ந்த கார்போஹைட்ரேட் வகை உணவு வகைகளை நம் மருத்துவர்கள் நம்மை தவிர்க்கச் செய்யச் சொல்வதற்கான அடிப்படை காரணத்தை  ரொம்ப மேலோட்டமாக கீழே சொல்லியுள்ளேன். 

காருக்கு பெட்ரோல்/ டீசல் மாதிரி நம் உடலுக்கு தேவையான எரிபொருளை (fuel) இரண்டு வகையில் பெற முடியும்.   ஒன்று சர்க்கரை(glucose) இன்னொன்று கொழுப்பு (fat) . சர்க்கரை சத்து அதிகமுள்ள அரிசி சோறு உண்ணும் போது, உடலுக்குத் தேவையான எரிபொருளை சர்க்கரையிலிருந்தே எடுத்துக்கொள்கிறோம். நாம் சேர்த்து வைத்துள்ள கொழுப்பு (உ.த. தொப்பை)  உபயோகிக்கப்படாமல் அப்படியே உடலில் நின்று விடுகிறது. அதாவது வெயிட் குறைவதில்லை. மேலும், உபயோகப்படுத்தியது போக மிச்சமுள்ள சர்க்கரை மீண்டும் கொழுப்பாக மாற்றப்பட்டு நம்மை டிஸ்ஃபிகர் செய்யக்கூடிய அனைத்து இடங்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது. அளவுக்கதிகமாக போகும் பட்சத்தில் இரத்த நாளங்களிலும் படியத் தொடங்கும். 

ஒரு குறிப்பிட்ட உணவில் சர்க்கரையின்  அளவு எவ்வளவு உள்ளது என்பதை க்ளைஸிமிக் இன்டெக்ஸ் (glycemic index) நம்பரை வைத்து சொல்கிறார்கள்.GI  அதிகம் உள்ள உணவு எளிதில் ஜீரணமடைந்து  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடுதியில் அதிகப்படுத்தும். உதாரணத்திற்கு க்ளூகோஸின் GI-100 , பொன்னி அரிசியின் GI-75, கைக்குத்தல் அரிசியின் GI - 50 , ஓட்ஸ் GI- 49 ... இப்படி. 
GI -75க்கு அதிகம் உள்ள உணவு அதிகமான GI உள்ள உணவாக கருதப்படுகிறது. பழங்கள் காய்கறிகளுக்கு GI மிகவும் குறைவு.

GI வால்யூ (value) முழுக்க முழுக்க க்ளூகோஸை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது. அதிக  GI உள்ள உணவினை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் உடல் பருமன் (obesity), சர்க்கரை நோய், இருதய கோளாறு(coronary heart disease)  போன்று பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கிலியூட்டுகிறார்கள். சிகரெட் பிடித்தால் கான்சர் வரும், சீக்கிரம் செத்துப்போய்டுவீங்க போன்ற மிரட்டல்களுக்கே அசராதவர்கள் ஆச்சே நாம். என்னத்த பெரிசா நமக்கு வந்துடப் போகுது என்று தெனாவட்டாக திரிபவர்கள் எல்லாம் சர்க்கரை நோயோ,ஹார்ட் அட்டாக்கோ வந்த ஒரே மாதத்தில் உருக்குலைந்து போய் விடுகிறார்கள் என்பதே நிதர்சனம். 

குறைந்த GI உள்ள எல்லா உணவும் உடலுக்கு நல்லது என்றும் சொல்லவிட முடியாது. உதாரணமாக சாக்லேட் கேக், ஐஸ்க்ரீம் போன்றவை உடலுக்கு நல்லது அல்ல எனினும் இவற்றின் GI 50க்கும் குறைவு. எனவே GI ஒன்றை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு உணவை தெரிவு செய்ய முடியாது.

GI 100 உள்ள வெள்ளை அரிசியையும் உருளைக்கிழங்கையும் மட்டும் சாப்பிட்டு எந்த தொந்தரவும் இல்லாமல் நலமாக வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புகை பிடிக்கும் அனைவருக்கும் புற்றுநோய் வருவதில்லையே அது போல. அது அவரவர் உடற்கூறு (constitution of body) பொறுத்த விஷயம். பிரச்சனை இல்லாத பத்து பேரை முன்மாதிரியாக வைத்து நமது உணவுப் பழக்க வழக்கங்களை தீர்மானிப்பதை விட பிரச்சனை உள்ளவர்களின் காரணத்தை தெரிந்துக் கொண்டு அதை தவிர்க்க முயல்வது புத்திசாலித்தனமில்லையா? 

இந்த அரிசி மோகத்திலிருந்து விடுபடுவது சாதாரண விஷயமே அல்ல. நாம் எல்லோருமே ஒரு வகையில் சோத்துமாடு தான்.நாம் அவ்வாறே பழக்கப்பட்டுவிட்டோம். மன அழுத்தத்துடன் கூடிய செடன்ட்ரி வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டது நாம் தானே? அப்படியானால் அந்த வாழ்க்கை முறைக்கேற்ற உணவு பழக்கத்தையும் நாமாக மாற்றிக் கொள்வது நல்லதில்லையா?  

அதனால் ஏதாவது வியாதி வந்த பின்பு தான் அரிசி சோறு தின்பதை நிறுத்துவேன் என்று அடம் பிடிப்பவர்கள் கொஞ்சம் உஷாராக முன்கூட்டியே அரிசியை குறைத்து சிறுதானியங்கள், நிறைய பழங்கள்,  காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம்.ஏழு வகை சிறுதானியங்களுக்குமே அரிசியை விட GI குறைவு. அதைப்பற்றி அடுத்த பதிவில் காண்போம். 

இன்றைய காலகட்டத்தில் நலிந்திருக்கும் வியாதிகளையும் கட்டுப்பாடற்ற பழக்க வழக்கங்களையும் கருத்தில் கொண்டால் ஒவ்வொருவருமே ஹெல்த் ஃப்ரீக்காக இருப்பது நல்லது. முப்பத்தி ஐந்து , நாற்பது வயது வரை நம் உடலை இப்படி பார்த்து பார்த்து பேண வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அது வரை தன்னை தானே தட்டி கொடுத்து ஒடத் தெரிந்த நமது உடல் நாற்பதை எட்டும் போது என்னையும் கொஞ்சம் கவனிக்கலாமே என்று குரல் கொடுக்க ஆரம்பிக்கிறது. 'லைஃப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபார்டி'என்பதை வேண்டுமானால் 'ஹெல்த்தி லைஃப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபார்டி' என்று மாற்றிக் கொள்ளலாம். 'ஸ்டேயிங் ஹெல்த்தி' என்பதை ஒரு வாழ்க்கைமுறையாகவே கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.                                

(தொடரும்) 


Wednesday, 26 November 2014

இக்கரைக்கு அக்கரை...

ஒரு நாளின் முடிவில் இன்று முழுக்க என்ன செய்தேன் என்று யோசித்துப் பார்த்ததால்  "நாய்க்கு நிக்க நேரமும் இல்ல வேலையும் இல்ல" என்று நண்பன் சொல்வது தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. 

இந்நேரம் ஒரு ஹோம் மேக்கராக இருந்திருந்தால் வேலைக்கு செல்பவர்களை பார்த்து ஜெலூசில் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டேடஸ் போட்டிருப்பேன்.வேலைக்கு செல்வதைக் காட்டிலும் கடினம் ஹோம்மேக்கராக இருப்பது. ஆனால் அம்மாவை வேலைக்குப் செல்பவராகவே பார்த்துப் பழகியவர்கள் ஹோம்மேக்கராக இருக்க முடியும் என்று தோணவில்லை. பதினைந்து இருபது நாட்கள் லீவ் எடுத்தால் கூட பத்து நாட்களுக்கு மேல் வீட்டில் இருப்பு கொள்ளாது. இந்த பர பர வாழ்க்கை பழகிவிட்டது. 

வேலையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பிரச்சனை இல்லாமல் பேலன்ஸ் செய்ய முடிகிறது என்றாலும், அது முழு திருப்தியை தருகிறதா என்று கேட்டுப் பார்த்தால் விடை தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு வேலை முடித்து, அதற்கு பிறகு பிள்ளையை எக்ஸ்ட்ரா வகுப்புகளுக்கு அழைத்து வரும் அம்மாக்கள், பகல் முழுதும் வேலை செய்துவிட்டு மாலையும் க்ளினிக் ஓடும் அம்மாக்கள்... என்று பிஸியான அம்மாக்களோடு ஒப்பிட்டு  பார்த்து நம்ம நிலைமை பரவாயில்லை தான் போல என்று மனதை தேற்றிக் கொள்ள முடிந்தாலும் ப்ரொஃபஷனல் லைஃபில் ஒரு வெற்றிடம் உருவாகி இருப்பதை முழுவதுமாக அகற்ற முடியல்லை.

முழு நேர வேலையை தியாகம் செய்யத் தோன்றாவிட்டாலும் எனக்கான விருப்பங்கள் கனவுகள் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு பிள்ளைக்காக மாலை வேளை முழுவதையும் டெடிகேட் செய்ய முடிவது ஒரு வகையில் கொடுப்பினை தானோ? தெரியவில்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு காலந்தள்ள சௌகர்யமாக உள்ளது என்பது தான் நிதர்சனம். 

எனது உடனடி தேவை எனக்கே எனக்கான நேரம் எனப்படும் "மீ-டைம்". இருபத்திநாலு மணி நேரத்தில் தூங்கும் அந்த ஐந்து மணி நேரம் மட்டும் தான் என்னுடயது என்று நினைத்தால் அந்த நேரம் கூட பெரும்பாலும் கனவுகளுக்கு சொந்தமாகிப் போகிறது. கஞ்சூரிங் பேய் முதல் பழக்கடைக்கார சின்ன பையன் வரை கனவில் வருகிறார்கள். பின் எனக்கான நேரம் தான் எது? 

பல நேரங்களில் நாம்  இருக்கும் கரையை தவிர்த்து மற்ற எல்லா கரையுமே பச்சையாக தெரியும் வியாதிக்கு இன்னும் சரியான பெயர் வைக்கப்படவில்லை. இந்த வியாதிக்கெல்லாம்  அமேசான் காடுகளில் அரிய வகை மூலிகை மருந்து எதுவும் கிடைப்பதில்லையா? 

இருப்பதை வைத்து திருப்தி அடைந்து இல்லாத ஒன்றை நினைத்து ஏங்கிப் புலம்பாமல் இருந்தால் இந்நேரம் 'மாதா அருணானந்தமை' ஆகி என் பக்த கோடிகளுக்கு  தீட்சை வழங்கிக் கொண்டிருந்திருப்பேனோ என்னவோ. அக்கரைக்கே வெளிச்சம்! 


ட்ராயிங்



எல்லா குழந்தைகளையும் போல வண்ணங்களுடன் விளையாடுவதில் யோஹானுக்கு அலாதி பிரியம்.கலர் பென்சில்,க்ரேயான்,ஸ்கெட்ச்,வாட்டர்கலர்,வாட்டர் பெயின்ட் என வண்ணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து உபகரணங்களும் சகட்டுமேனிக்கு வீடெங்கும் சிதறி இருக்கும். வண்ணங்கள் மீதான அவனது மோகம் போதாதா ட்ராயிங் க்ளாஸில் சேர்க்க?

கிட்டதட்ட இரண்டு மாதமாக சென்றுக் கொண்டிருக்கிறான் டிராயிங் க்ளாஸுக்கு. நடுவில் இரண்டு முறை மிஸ் திட்றாங்க, ரொம்ப ரூடா(!) பேசுறாங்க என்று மக்கர் பண்ணினான். அவனது மிஸ் மற்றும் அவருடைய இரண்டு காலேஜ் செல்லும் மகள்கள் அனைவருமே யோஹானின் வயதொத்த குழந்தைகளுக்கு டிராயிங் சொல்லி தருபவர்கள். டிராயிங் க்ளாஸில் போய் என்னத்த திட்ட முடியும் என்று அவனை சமாதானப்படுத்தி கொண்டு போய் விட்டுவிட்டேன்.

இரண்டு வாரங்க‌ளுக்கு முன் டிராயிங் க்ளாஸிலிருந்து அவனை அழைத்து வர சென்ற போது, ஒர் ஓரமாக நின்று அழுதுக்கொண்டிருந்தான். 
என்னவென்று விசாரிக்கும் முன்னரே மூன்று பேரும் சரமாரியாக கம்ப்ளைன்ட் யோஹானின் மீது. 

ஒரு மணி நேரத்திற்கு முன்பு ... 

 நன்றாக கலர் செய்தால் ஸ்டார் போடுவார்கள் ட்ராயிங் டீச்சர்ஸ். அன்று கலரிங் செய்யும் போதே ஸ்டார் வேண்டும் என கேட்டிருக்கிறான் பையன். நீ நல்லா கலர் பண்ணா தான் ஸ்டார் தருவேன் என்று மிஸ் கூற, நீங்க தரலைன்னா பரவாயில்ல, நானே வீட்ல போய் ஸ்டார் போட்டுக்குவேன் என்று கூறியுள்ளான்.அதோடு நிற்காமல் நீங்க ஸ்டார் தரலைன்னா நான் இந்த க்ளாஸுக்கே வர மாட்டேன் என்று வேறு சொல்லியிருக்கிறான். இப்படி பேசினா அடி விழும் என்று மிஸ மிரட்ட சற்றே அடங்கியுள்ளான் .ஆனால் இது நடந்து முடிந்து கிளம்பும் வேளையில், எல்லோர் முன்னிலையிலும் உங்களுக்கு சின்ன பிள்ளைங்க கிட்ட எப்படி பேசனும்னு தெரியாதா என்று கேட்டுள்ளான். ட்ராயிங் மிஸ்ஸின் இரண்டு மகள்களும் அவனை ஸாரி கேட்கச் சொல்ல , தலைவர் முடியாது என்று மறுக்க, அவர்கள் திட்ட, இவன் அழ ஆரம்பித்திருக்கிறான். 

பேக் டு முந்தின பத்தி... 

பையன் பேசியதற்காக டிராயிங் மிஸ் மற்றும் அவரது மகள்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.இவனால் மற்ற குழந்தைகளும் கெட்டு விடுவார்களோ என்று பயமாக உள்ளதாக மிஸ் புலம்பினார்.தர்மசங்கடமான நிலை. மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேல் இப்படி பேசமாட்டான் என்று உறுதியளித்துவிட்டு வந்துவிட்டேன்.
காருக்குள் ஏறினது தான் தாமதம் என்னைக் கட்டிக்கொண்டு ஓவென கதற ஆரம்பித்து விட்டான். அவனிடம் ஒன்றுமே கேட்காமல் அவனை சமாதானம் செய்து அழுகையை நிறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தேன். 

யோஹான் அவனது மிஸ்ஸிடம் பேசியது குறித்து எனக்கு மிகுந்த வருத்தம். கொஞ்சம் துடுக்குத்தனமாக பேசக் கூடியவன் தான், ஆனால் இந்த வயதில் மிஸ் ஸை கேள்வி கேட்பதெல்லாம் அதிகம். மண்டை குடைச்சல் தாளாமல் என் அம்மாவிடம் புலம்ப உன் பிள்ளை எப்படி இருக்கும், நாங்க கேட்காத மன்னிப்பா என்று சிம்பிளாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்கள். இப்படி எல்லாமா இருந்திருக்கிறேன் என்று யோசித்தாலும், மனது சமாதானம் அடைய மறுத்தது.

 கிட்டதட்ட ஒரு வாரமாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவனுக்கு அவனுடய தவறை உணர வைத்தேன். எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஸ்டார் தர மாட்டார்கள், மிஸ்ஸிடம் எப்படி பேச வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று என்னைப் பார்த்தாலே தெறித்து ஓடும் அளவுக்கு வேப்பிலை அடித்திருந்தேன். இரண்டு வருடம் அந்நியன் வரவே இல்லைன்னா தான் அம்பிய வெளில விடுவாங்க மாதிரி எப்படா இந்த கச்சேரியை நிறுத்துவேன் என்று பையன் பரம சாதுவாக என்ன சொன்னாலும்  புரிந்தது போலவே தலையை ஆட்டினான். 

ஆனால் எனக்கு தான் சில விஷயங்கள் விளங்கவேயில்லை. குழந்தைகள் எதிர்பார்ப்பது ஒரு சிறு அங்கீகாரம் தானே, அவர்களை உற்சாகப்படுத்த அதை கொடுத்துவிட்டு போனால் தான் என்ன? அதற்கு ஏன் இத்தனை கெடுபிடிகள்? இது ஒன்றும் பள்ளிக் கூடமில்லையே, இவ்வளவு கறாராக இருக்க. எந்த பெயின்டிங் காம்ப்படீஷன் போக வேண்டியும் இவனை நான் க்ளாஸில் சேர்க்கவில்லை. அவனுக்கு கலரிங்கில் உள்ள ஆர்வம் மட்டுமே காரணம். ஒரு வேளை மற்ற குழந்தைகள் அந்த நோக்கத்தோடு தான் க்ளாஸுக்கு வருவதனால் தான் இவ்வளவு கண்டிப்பும் கறாருமா? 

மேலும் பையன் முதல் முறை க்ளாஸுக்கு போகமாட்டேன் என்று சொல்லும் போதே என்னவென்று விசாரித்திருக்க வேண்டும். எந்த எக்ஸ்ட்ரா க்ளாஸுமே கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்பது பையனை அழ வைத்து நான் கற்ற பாடம். 

அன்று வீட்டுக்கு வந்தவுடன் அவன் என்னிடம் கேட்டது இரண்டு விஷயங்கள் தான்.1. எனக்கு நீங்க ஸ்டார் போடுவீங்களா. 2. என்னை இனிமேல் அந்த டிராயிங் க்ளாஸுக்கு கூட்டிட்டு போக மாட்டீங்க தானே.  இரண்டுக்குமே யோசிக்காமல் சரியென்று தலையாட்டினேன். 

Friday, 24 October 2014

சந்தோஷ்- ஜிப்ரான்


நமக்கு எல்லாவற்றிலும் வெரைட்டி வேண்டும். குடும்பம், அலுவலகம் போன்ற மாற்ற முடியாத சில  விஷயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும்  வெரைட்டியை எதிர்ப்பார்த்தால் தான் மனித இனத்தில் சேர்த்தி.லெட்டரை ஈமெயிலாக்கி, ஈமெயிலை எஸ் எம் எஸ் ஆக்கி,அதையும் சுருக்கி சாட்டாக்கி, பிங் மீ, போக் மீ என்று வேகமாக எல்லோரும் மங்கள்யானைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரே மாதிரியான விஷயங்கள் நம் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பதுமில்லை, ஈர்த்தாலும் பெரிதாக நிலைத்திருப்பதுமில்லை. அதிலும் என்டெர்டெயின்மென்ட்- பொழுதுபோக்கு என்று வரும் பொழுது நமது எதிர்ப்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கும்.இசை இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரே மாதிரியான படங்களைப் பார்க்கவோ பாடல்களைக் கேட்கவோ  எப்போதும் யாரும் விரும்புவதில்லை.

ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று இசையமைப்பாளர்களாவது பதிதாக அறிமுகமாகிறார்கள். இசையிலோ அல்லது பாடும் குரல்களிலோ வித்தியாசமும் புதுமையும் இல்லையெனில் ஒன் ஃபிலிம் ஒன்டரோடு காணாமல் போய்விடுகிறார்கள். ஒரே மாதிரியான குரல்கள் மூலமோ இசை மூலமோ நமக்கு சலிப்பு ஏற்படாமல் நமது மாறிக்கொண்டே இருக்கும் ரசனைக்கும்  எதிர்ப்பார்பிற்கும் தீனி போடும் இசையமைப்பாளர்கள் வெகு சிலரே. 

இன்றைய நிலையில் நம்பிக்கை தரும் இசையமைப்பாளர்கள் பட்டியலில் போட்டியின்றி சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிப்ரானை சேர்த்துக்கொள்ள முடியும். 

சமீப காலங்களில் ஹிட்(மட்டுமே) அடித்துக்கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன்,பாடல்களோடு பிண்ணனி இசைக்கோர்வையிலும் பின்னி எடுக்கிறார். (அதற்காக பத்து படம் கூட முடிக்காத ஒருவரை இளையராஜாவோடு கம்பேர் செய்வதெல்லாம் அநியாயம்) சந்தோஷ் நாராயணன் இசை என்றாலே  வழக்கமான குரல்களை தவிர்த்து சற்றே வித்தியாசமான குரல்களை கேட்க முடிகிறது.வழக்கமான கார்த்திக், ஹரி சரண், ஹரன்... இவர்களின் குரல்களை எல்லாம் சந்தோஷின் இசையில் கேட்க முடிவதில்லை. ப்ரதீப் குமார், திவ்யா ரமணி, ஆன்டனி தாசன், கானா பாலா ( சில படங்க‌ளில் ஷான் ரோல்டன்) போன்றோர் குரல்களை நிறைய கேட்கலாம். ஆனால்  அட்டக்கத்தி தொடங்கி அவரது ஏழாவது தமிழ் படமான மெட்ராஸ் வரை எல்லா படங்க‌ளிலும் கூட  குறைய இந்த குரல்களை மட்டுமே திரும்ப திரும்ப கேட்க வேண்டியுள்ளது தான் சலிப்பு. 

சந்தோஷ் நாராயணின் இசையில் தொடர்ந்து கேட்கும் குரல்களை (கானா பாலா விதிவிலக்கு) வேறு யார் இசையிலும் கேட்க முடிவதில்லை. இவர்களின் குரல்கள் ஓரளவு வித்தியாசமானதாகவே இருந்தாலும் கூட இந்த குரல்களை கேட்டாலே கண்ணை மூடிக்கொண்டு இது சந்தோஷ் நாராயணன் இசையோ என்று சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. மெட்ராஸ் படத்தில் 'ஆகாயம் தீ பிடிச்சா' என்ற பாடலை முதல் முறை எந்த படம் , இசையமைப்பாளர் பெயர் எல்லாம் தெரியாமலே கேட்டு , சந்தோஷ் நாராயணன் இசை போல் உள்ளதே என்று நண்பர்களிடம் விசாரித்தால், அட ஆமாம்! இது டிபிகல் ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக் என்று சொல்லும் நிலையை தனக்குத்தானே ஹாரிஸ் நிறுவியுள்ளதைப் போல சந்தோஷ் நாராயணனும் அதே சலிப்பூட்டும் குரல்கள் மூலம் ஒரு வட்டத்துக்குள் சிக்கி இருக்கிறாரோ? 

இந்த ஒரு விஷயத்தில் சந்தோஷிடமிருந்து அழகாக வேறுபடுகிறார் ஜிப்ரான். 
ரஹ்மானுக்கு அடுத்து, இன்றைய நிலையில் 
ஜிப்ரான் இசையில் இருக்கும் வெரைட்டி மற்றும் சாய்ஸ் ஆஃப் வாய்ஸ் வேறு எவரிடமும் இல்லை என்று தைரியமாக சொல்லலாம்.சுந்தர் நாராயண ராவை மட்டும் இவர் இசையில் அடிக்கடி கேட்க முடிகிறது.மேலும் தன்னுடைய பல படங்களில் ஜிப்ரானே பாடியும் விடுகிறார். 

வாகை சூடவா மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜிப்ரான் , தொடர்ந்து இசையமைத்த வத்திக்குச்சி, நையாண்டி, குட்டிபுலி போன்ற படங்களும் சோபிக்கவில்லை, இசையும் சொல்லிக்கொள்ளும்படி  இல்லை. சந்தோஷ்  நாராயணன் அளவுக்கு இவர் பிரமலாகாதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் ஒரு காரணம் எனலாம். திருமணம் எனும் நக்காஹ, அமரகாவியம்  ஆகிய படங்களும் சரியாக போகவில்லை எனினும்,இசை உலகில் அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்துள்ளது என்று சொல்லலாம்.அதன் விளைவே கமல்ஹாசனின் அடுத்த மூன்று படங்களுக்குமே இவர்தான் இசை. ஆனால்  தொடர்ந்து கமல் படங்களுக்கு இசை என்பதே சற்று கலவரமளிப்பது வேறு விஷயம். காணாமல் போனவர்கள் லிஸ்டில் ஜிப்ரான் சேராதவரை நமக்கு அதிர்ஷ்டமே. 

எல்லா இசையமைப்பாளர்களுமே ஓவ்வொரு கட்டத்தில் ஒரு பாடகன் அல்லது பாடகியின் குரல் மீது மையல் கொள்வது ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.தமன் இசையில் சுசித்ரா,அனிருத் இசையில் தனுஷ், ஜிவிபி இசையில் சைந்தவி, இமான் இசையில் ஷ்ரேயா, விஜய் ஆன்டனி இசையில் சாருலதா மணி- இப்படி எல்லா இசைய‌மைப்பாளர்களுக்கும் ஆஸ்தான பாடகர்கள் உண்டு. ஆனால் இந்த இசையமைப்பாளர்களின் ஃபேவரைட் பாடகர்கள் வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடுவதால் ஒரே குரலை மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரு வித சலிப்பு  சுலபத்தில் வருவதில்லை.

ஆடிக்கு ஒரு குத்து பாட்டும் அமாவாசைக்கு ஒரு மெலடியும் கொடுத்து யுவன், இமான் ,அனிருத் ,ஜிவிபி ,விஜய் ஆன்டனி ,செல்வ கணேஷ்,தமன்,  ஜோஷ்வா ஶ்ரீதர் ,ஷான் ரோல்டன் , விஜய் எபினேசர், தரண் ஆகியோர் களத்தில் இருந்தாலும் சகலரையும் ஓரங்கட்டி தங்களுக்கென ஒரு தனி இடத்தை தங்களின் கன்சிஸ்டென்சி மூலம்  சந்தோஷும் ஜிப்ரானும் நிறுவிய வண்ணம் உள்ளனர். இன்னும் அருமையான இசைக் கோர்வைகளையும் வித்தியாசமான குரல்களையும் இருவரிடமிருந்துமே வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன். 

Thursday, 9 October 2014

மாறுவேடம்


மிஸ்டிக் மெட்ராஸ் மற்றும் க்ராண்ட் பேரன்ட்ஸ் டே இரண்டையும் சேர்த்து குழந்தைகளின் அலங்கார அணிவகுப்புடன் கொண்டாடியது யோஹானின் பள்ளி. தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற புள்ளிகள் போல குழந்தைகளுக்கு மாறுவேடம் தான் ஹைலைட்.வீரபாண்டிய கட்டபொம்மன்  முதல் விஜய் அமிர்தராஜ் வரை, டாக்டர் முத்துலக்ஷமி ரெட்டியிலிருந்து அம்மா வரை என்று ஏகத்துக்கு கவர் செய்திருந்தனர். எந்த அடிப்படையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பெர்சனாலிட்டியின் பெயர் தரப்பட்டதோ யாமறியேன் பராபரமே. யோஹானின் நண்பனுக்கு புஷ்பவனம் குப்புசாமி வேடம்! அந்த பையனின் அம்மா என்னிடம் அவர் யார், என்ன செய்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். யோஹானுக்கு 
சர்.சி.வி. ராமன் வேடம். 

சர்.சி.வி. ராமனைப் பற்றி தெரிந்ததெல்லாம் ராமன் எஃபெக்ட்டும் நோபல் பரிசும் மட்டுமே. விக்கியில் தேடியதில், அவரைப் பற்றியும் அவர் உடுத்திய உடையை பற்றியும்  ஒரளவுக்கு ஐடியா கிடைத்தது. இந்த வேடத்திற்கான உடையை பற்றி இந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டையோடு விழுங்கியவர்களை  விசாரித்ததில் ஏகப்பட்ட கடைகளை பட்டியலிட்டனர். குழந்தைகளின் உடையலங்காரத்திற்கென சினிமா நாடக கம்பெனி போல தனியாக கடைகளே இருப்பது எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

முகப்பேரின் ஒரு குறுக்குச் சந்தின் ஒரு இடுக்கான கட்டிடத்தின் குறுகலான மாடியின் கடைசியில் ஒரு சிறிய அறை. அது தான் கடை. கடையின் வெளித்தோற்றத்திற்கும் உள்ளே இருந்த விதவிதமான ஆடைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை.அன்னி பெஸன்ட் முதல் சுனிதா வில்லியம்ஸ் ஆடை வரை எல்லா விதமான ஆடைகளும் இருந்தன. ஆனால் எல்லா ஆடைகளையுமே சௌகார்பெட் ஹோல் சேல் வியாபாரி கணக்காக குப்பைப் போல குவித்து வைத்திருந்தார்கள். 

நான் சர்.சி வி ராமன் உடை என கேட்டவுடன் ஒரு கருநீல கலர் அங்கியை ஹேங்கரில் இருந்து எடுத்து 'நேரு, ராதாகிருஷ்ணன் எல்லாருக்கும் இதே தான்' என்று கொடுத்தார் கடையில் இருந்தவர். அந்த குப்பை மேட்டை கலைக்கவில்லை என்று ஒரு சின்ன திருப்தி. ஆனால் அந்த திருப்தி கொஞ்ச நேரம் கூட நீடிக்க வில்லை. 'கீழ போட தோத்தி' என்று கேட்டது தான் தாமதம் அந்த குப்பயைக் கிளறத் தொடங்கி மேட்டுக்குள் தலைமறைவானார் அந்த அங்கி தந்த மனிதர். 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ஒரு பழுப்பு கலர் தோத்தியை உருவி நீட்டினார்.

'ப்ரவுன் வேண்டாம் வெள்ளை குடுங்களேன்'
'இது வெள்ளை தான் மேடம் கொஞ்சம் (!!) கலர் டல் ஆயிடுச்சி'
'எப்ப துவச்சது கடைசியா?'
'ஞாபகமில்லையே'
'தலைப்பாகை ? '
'பாரதியாருக்கு போடுறது தான் மேடம் இவருக்கும்'  

அழுக்கேறிய தலைப்பாகை ஒன்றை தந்தார்.சர் சி. வி ராமன் என்றாலே இதெல்லாம் செட்டாக தான் தருவார்களாம். தோத்தி வேண்டாம் என்று சொன்னாலும் அதே காசு தானாம். வாடகைக்கு எடுத்துத் தொலைத்தேன் எல்லாவற்றையும். கிளம்பும் போது 'கண்ணாடி மறந்துட்டீங்க , காந்திக்கும் இவருக்கும் ஒரே கண்ணாடி தான், இந்தாங்க'  என்றார். 

என்னைப் போல் வேறு யாராவது காந்தி, நேரு, ராதாகிருஷ்ணன்,பாரதியார் ஆகியோரது காஸ்டியூம்  தனித்தனியாக கேட்டு வந்தால் என்ன செய்வார்கள்  என்ற யோசனையோடு அந்த அழுக்கு துணிமணிகளை அள்ளிக் கொண்டு கிளம்பினேன். சர். சி. வி .ராமனுடைய உடை இத்தனைப் பேருடைய உடைகளையும் கலந்து கட்டிய ஒரு ராமன் எஃபெக்ட் என்று அன்று தான் தெரிந்தது. அவர் ஷெர்வானி குர்தா போட்ட புகைப்படங்களும் இருந்தன. ஆனால் அந்த ஆடைகள் அனைத்தும்  சூப்பர் சிங்கர் அனந்த் வைத்தியநாதனை ஞாபகப்படுத்துவதாய் இருந்ததால் வேண்டாமென ஒதுக்கிவிட்டேன். 

சர். சி. வி ராமனுடய ட்ரெஸ்ஸை சர்ஃப் எக்ஸல் போட்டு துவைத்து காய வைத்து ரெடி பண்ணியாகிவிட்டது. அடுத்து சிவி ராமனை தயார் பண்ண வேண்டும். 

'ஃபுல் நேம் சொல்லு கண்ணா- சர்.சந்திரசேகர வெங்கட ராமன்'.
'சர் னா? '
'அது ஒரு பட்டம் மாதிரி கண்ணா'
'பட்டம் னா கைட் டாம்மா?' 
'இல்ல கண்ணா சர் வேண்டாம்,
சந்திரசேகர வெங்கட ராமன் மட்டும் சொல்லு'
'சந்திரசேகர வாமன ரூப ... '
'அய்யோ கண்ணா அது கணபதி ஸ்லோகம். சந்திரசேகர வெங்கட ராமன். எங்க சொல்லு'
'சந்திரசேகர...
'ம்ம்ம் சொல்லு'
'வாமன வெங்கட...'
'கண்ணா, வாமன விட்ரு, இன்னொரு முறை சேர்த்துக்கலாம் . இப்ப சொல்லு..'

 முழு பெயரையும் ஒரு வழியாக சொல்ல வைத்து கூட நாலு வரியையும் மனதில் ஏற்றி...சர்.சி வி ராமன் ரெடி. 

எல்லா ஆடைகளையும் திரும்பத் தருகையில் மறுபடியும் துவைத்து அயர்ன் செய்து கொடுத்தேன். பாவம் அடுத்து இந்த உடையை உடுத்தப் போகும் நம் தேச தலைவர்களின் அம்மாக்களுக்கு துவைக்கும் வேலையாவது குறையட்டும். 

Wednesday, 27 August 2014

ட்ரங்கன் ட்ரைவிங்

சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த செய்தி."கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் பலி. மூன்றாமவர் படுகாயம்." 

அந்த விபத்தில் இறந்த இரண்டு இளைஞர்களுக்குமே இருபத்தியேழு வயது.இரவு ஒன்பது மணிக்கு ஊருக்குள் இருக்கும் ஒரு முக்கியச் சாலையில் (புறவழிச்சாலை அல்ல)குடித்துவிட்டு காரை தறிக்கெட்டு ஓட்டியதால் விபத்து நேர்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் (அன்று) குடித்திருக்கவில்லை. இவர்கள் கெட்ட நேரம் அன்று குடித்திருந்தது கார் ஒட்டுனர் மட்டுமே. 

இரு சக்கர வாகன விபத்தில் பலி என்ற செய்தியை படிக்கும் போதெல்லாம் மனதிலெழும் காரணங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது தண்ணி. இரண்டாவது ஹெல்மெட். ஒன்றைப் போடக்கூடாது, இன்னொன்றை கட்டாயம் போடவேண்டும். பெரும்பாலான வாகன விபத்துகள் இந்த இரண்ணடையும் மாற்றிப் பின்பற்றுவதாலேயே ஏற்படுகின்றன. 

குடி போதையில் வண்டி ஓட்டி தன் குடியோடு சேர்த்து அடுத்தவன் குடியையும் கெடுக்கும் புண்ணியாத்மாக்கள் கத்துக்குட்டிகளாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.பல முறை இதே முக்திநிலையில் வண்டி ஓட்டி எந்த விபத்தும் செய்யாத, செய்தாலும் யாரிடமும் சிக்காத,சிக்கினாலும் சுலபத்தில் சிக்கலிலிருந்து விடுபடத் தெரிந்த, ஆள், பதவி, பணம் என ஏதோ ஒரு வகையில் பலம் பொருந்தியவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

இப்போதெல்லாம் 'ட்ரங்கன் ட்ரைவிங்' என்ற வார்த்தை தினமும் ஒரு முறையாவது எங்கேயாவது எப்படியோ காதில் விழுந்துத் தொலைத்து விடுகிறது. குடித்துவிட்டு வண்டியை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பது ஆட்டோவின் பின் எழுதப்பட்டுள்ள பெண்ணின் திருமண வயது 21 மாதிரி அழுத்தமில்லாத ஒரு சாதாரண வாக்கியமாகிவிட்டது. நம் ஊரில் ஒருவன் குடித்துவிட்டு வண்டியை ஓட்டி மாட்டும் போது முதல் முறை அபராதம் விதிக்கப்படுகிறது. மாத கடைசியாக இருந்தால் இந்த அபராதமும் அவசியமற்று போகும். இரண்டாவது, மூன்றாவது முறையும் அதே தவறு செய்தால் அந்த அபராதத் தொகையும் அது போய்ச் சேரும் இடமும் மட்டுமே மாறுபடுகின்றன. 

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பதைக் கடுமையாகப் பின்பற்றினால் வாரா வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஊரெங்கும் நடக்கும் உற்சவங்களில் ஊரில் பாதிப் பேருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் இல்லாமல் போயிருக்கும். திங்கட் கிழமை காலை ஆட்டோக்காரர்களுக்கு அமோகமாய் விடிந்திருக்கும். ஆனால் நம் ஊரில் 'குடி போதையில் வண்டி ஓட்டியவர் ஓட்டுனர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது' போன்ற செய்திகள் ரமணன் சொல்லி மழை வரும் கதை மாதிரி தானே உள்ளது? 

சாலை விபத்தினால் மரணம் எனும் செய்தி தினமும் டிவியிலும் பேப்பரிலும் ராசிப்பலன், வானிலை, தங்கம் விலை நிலவரம் மாதிரி தினமுமே சொல்லப்படும் வழக்கமான செய்தியாகிப் போய்விட்டது. பாதிக்கப்பட்டவரோ இறந்தவரோ நமக்குத் 
தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் நாம் இது போன்ற சம்பவங்களைச் செய்தித்தாளின் அடுத்தப் பக்கம் திருப்பும் போதே பெரும்பாலும் மறந்து விடுவோம். 
மேற்கூறிய சம்பவமும் அவ்வாறான ஒன்றே. 

நாலு ரவுண்டுக்குப் பின்னாடியும் நானெல்லாம் ஸ்டெடியா ஏரோப்ளேனே ஓட்டுவேன் போன்ற வீர வசனங்கள் பப்ளிக்காக ஒலிக்கத் தொடங்கியுள்ள காலம் இது. குடி இந்த அளவு ஊக்குவிக்கப்படும் நம் ஊரில் லோக்கல் சரக்கடித்தால் மூன்று ரவுண்டு ,ஃபாரின் சரக்கு என்றால் இரண்டு ரவுண்டு வரை வண்டி ஓட்டலாம், அதற்கு அதிகமானால் வண்டி ஓட்டக்கூடாது போன்ற புது மாதிரி சட்டங்களைக் கூட வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம். 

சாலை விபத்துகளுக்கான வேறு பல சில்லறைக் காரணங்கள் என்று பார்த்தால் ஓவர் ஸ்பீடிங், இருவர் செல்ல வேண்டிய வாகனத்தில் சர்க்கஸ் மாதிரி எத்தனை பேர் வேண்டுமானலும் தொற்றிக்கொண்டு பயணித்தல், நோ என்ட்ரியில் வண்டி ஓட்டுதல், அவரவர் வசதிக்கேற்ப சிவப்பு மஞ்சள் பச்சையை மதித்தல் என ஒரு லிஸ்டே போடலாம். குடித்துவிட்டு ஓட்டுவது குற்றமாகப் பார்க்கப்படுமளவு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர்,சில சமயங்களில் ஐந்து பேர் (பெட்ரோல் டாங்கின் மீது ஒன்று,அப்பாவுக்குப் பின்னாடி ஒன்று,அம்மா மடியில் ஒன்று) அடங்கிய குடும்பமே அசாதாரணமாகப் பயணிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை,அந்த குடும்பத்துக்கும் இது போன்ற ஒரு விபத்து நேரும் வரை. 

கூட்டிக் கழித்துப் பெருக்கி துடைத்துப் பார்த்தால் இத்தகைய விபத்துகள் எல்லாவற்றுக்குமே மூலக்காரணம் சாலை விதிகளை அவரவர் இஷ்டப்படி மதிப்பதே என்பது தெளிவாகப் புரியும் .முதல் முறை கண்டுக்கொள்ளாமல் விடப்படும் சிறு சிறு தவறுகள் அனைத்தும் பூதாகரமாக அதன் விளைவுகளைக் காண்பிக்கத் தொடங்கிய பின்னரே கதறுவது நமக்கும் ரொம்பவே பழகிவிட்டது.சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக உள்ள நாடுகளில் கூட மற்ற குற்றங்கள் எப்படியோ ஆனால் 'சாலை விபத்தின் மூலம் உயிரிழப்பு' நம் நாட்டைப் போல எங்குமே மலிந்து காணப்படுவதில்லை. 

முதல் பத்தியில் கூறிய விபத்தை நிகழ்த்தியவர் என்னவோ அதற்கான சுவடே தெரியாமல் தனது அன்றாட வாழ்வினை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.ஏற்கனவே இரண்டு முறை இதே பரவச நிலைமையில் விபத்து உண்டாக்கிய பெருமையும் இவரைச் சேரும்.சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கும் இந்தப் புத்திசாலிக்குத் தண்டனைப் பெற்றுத் தருவது அத்தனை எளிதான விஷயமல்ல என்பதை நன்றாகப் புரிந்துக்கொண்டுள்ள இறந்த இளைஞர்களின் பெற்றோர், இன்னமுமே வழக்குப் பதிவுசெய்யாமல் தயங்கி தயங்கி நிற்கின்றனர் என்பது கூடுதல் செய்தி. 

நம் நாட்டில் என்ன தவறு செய்தாலும் பணம்,பதவி,பலம் இருந்தால் எப்பேர்பட்ட குற்றங்களிலிருந்தும் வெளியே வந்துவிட முடியும் என்ற மோசமான முன்னுதாரணம் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் பதிய வைக்கப்படுவது வேதனையான விஷயம். இந்த விபத்தும் அதே தர்ம கணக்கில் தான் சேர்த்தி. இதுவே விதி மீறல்களுக்கான அடிப்படை காரணமாகவும் அமைந்து போவது நமது துரதிஷ்டமே. 

Saturday, 23 August 2014

எல்லா மருந்தும் கசப்பானதல்ல!

மருத்துவர்கள் பற்றிய பதிவுகளைப் படித்து படித்து ஒரு வித சலிப்பே மேலோங்கி நிற்கிறது. 

ஒரு புறம் இது தாண்டா சான்ஸ் இதை விட்டா இவனுங்கள நாம பப்ளிக்கா திட்டவே முடியாது என்று வரிந்து கட்டிக் கொண்டு ஆளாளுக்கு மருத்துவர்களை சகட்டுமேனிக்கு காய்ச்சுகிறார்கள். தன்னுடைய அப்பாவுக்கு மருத்துவம் பார்த்தது முதல் சின்ன மாமியாருக்கு சுண்டு விரல் சுளுக்கிக் கொண்டது வரை எல்லாவற்றையும் பதிவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் நடு நடுவே மருத்துவர்களுக்கு வசையோடு கூட என்ன ட்ரீட்மென்ட் செய்திருக்க வேண்டும், எந்தெந்த பரிசோதனை செய்திருக்க வேண்டும்,எவ்வளவு ஃபீஸ் வாங்கியிருக்க வேண்டும் என்று அவரவரின் இஷ்டத்துக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு தங்களின் வேலை பற்றி புரிய(!) வைக்க தான் வாங்கும் சம்பளம் முதல் வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் வரை பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர். 

மருத்துவர்களை சாடி பதிவிடுபவர்கள் அனைவரும் தனக்கு ஏற்பட்ட ஒரு  ஒரே ஒரு கசப்பான அனுபவத்தை வைத்து மருத்துவ துறையே மோசம் என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கோபிநாத்தைக் காட்டிலும் மட்டமாக பேசிவருவதைப் பார்க்க பாவமாகத் தான் இருக்கிறது. 
இவர்களின் பதிவுகளை படித்து படித்து சலிப்பும் எரிச்சலும் மட்டுமல்லாது சில கேள்விகளும் மனதில் எழுகின்றன.  

முதலில் இவர்களுக்கு அந்த கசப்பான மருந்தை அளித்தது யார்? தேவையில்லாத பரிசோதனைகளை செய்ய சொல்கிறார், வேறு இடத்தில் செய்த பரிசோதனைகளை மறுபடி செய்ய சொல்கிறார், நிறைய காசு கேட்கிறார்....இதை எல்லாம் செய்ய சொல்லும் மோசமான மருத்துவரிடம் உங்களை போகச் சொன்னது யார்?இந்த மாதிரி மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நிர்ப்பந்தித்தது யார்?
எனக்கு இந்த பரிசோதனை செய்துக்கொள்ள விருப்பமில்லை என்று ரைட் ராயலாக வெளியே வராமல் குத்துதே குடையுதே என்று புலம்ப வேண்டிய அவசியம் என்ன? 

மூன்று மணி நேரம் செலவழிக்கும் ஒரு படத்தைப்  பார்க்க எத்தனை பேரிடம் விசாரிக்கிறோம், எத்தனை விமர்சனங்களைப் தேடி தேடி படிக்கிறோம்? ஒரு புடவை எடுக்க பத்து கடை ஏறி இறங்குவதில்லையா? உங்கள் உடலைப் பரிசோதிக்க நல்ல மருத்துவரைப் பற்றியும் மருத்துவமனைகளைக் கட்டணங்களைப் பற்றியும் விசாரித்து, இது நமக்கு ஒத்து வருமா என்று யோசித்து செயல்படலாமே?இதில் ஏதேனும் ஒரு காரணம் உதைத்தாலும் வேறு மருத்துவமனையை அணுகலாம் தானே? உங்கள் அதிருப்தியை சம்பந்தப்பட்ட மருத்துவரிடமே இது நாள் வரை தெரிவித்ததுண்டா? இதை எல்லாம் செய்யாமல் எனக்கு சரவணபவனில் அதுவும் லெக் பீஸோடு தான் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடிப்பது அபத்தமில்லையா? 

மருத்துவர்களை பற்றி இவ்வளவு கிழிப்பவர்கள் அடுத்த முறை உங்கள் ஆஸ்தான மருத்துவரிடம் செல்ல வேண்டி நேர்ந்தால் மருத்துவர்கள் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அவர்களை முகநூலில் துவைத்து தொங்கவிட்டதையும் தில்லாக சொல்லிவிட்டு வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்களேன்? 

உங்கள் உடலைப் பரிசோதனை செய்துக்கொள்ள எங்கே செல்ல வேண்டும் என்ற முடிவை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். பணம் பிடுங்கும் ஏதோ ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் சிகிச்சையை நிராகரியுங்கள்.உங்க‌ளுக்கு தோதான, நம்பிக்கையான மருத்துவரையும் மருத்துவமனையையும் அணுகுங்கள். அதை விடுத்து மருத்துவர்கள் எல்லாம் உயிர் காக்க அவதரித்த தெய்வங்கள், தவறே செய்யக்கூடாத ஜாம்பவான்கள், காசு பற்றி நினைக்கவே கூடாத தியாகிகள் என்று அவசியமற்ற பட்ட பேர்களையும் பிம்பங்களையும் நீங்களாக உருவாக்கிக்கொண்டு அந்த கட்டத்துக்குள் தான் மருத்துவர்கள் இருக்க வேண்டுமென அசட்டுத்தனமாக எதிர்ப்பார்க்காதீர்கள். காசே வாங்காமல் பணி புரிவது மட்டும் தான் உங்கள் அகராதியில் 'சேவை'என்றால் அதை செய்யும் மருத்துவர்களும் இங்கு இல்லாமல் இல்லை. அடையாளம் காண வேண்டியது உங்கள் சாமார்த்தியம். 

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கே வரவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை உங்கள் தெரு முனை திரும்பினால் இருக்கும் க்ளீனிக்கு கூட போகலாம். அரசு மருத்துவமனைக்கு செல்லுவதால் உங்கள் குலப்பெருமை பாதிக்காமலும் சிறிய க்ளீனிக்கு செல்வதால் உங்கள் அறிவை யாரும் மட்டம் தட்டி விடாமலும் கவனித்துக்கொள்ளவும். 

ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். உங்க‌ளுக்கோ உங்கள் பிரியமானவர்களுக்கோ ஒரு இதய அறுவை சிகிச்சையோ எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையோ நடப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு அறுவை சிகிச்சையில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.சாதாரண டான்சில்ஸ் ஆபரேஷனில் இறந்துப் போன குழந்தையும் உண்டு கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்டில் உயிர் பிழைத்து சுகமாக வாழ்பவர்களும் உண்டு. ஆக இது போன்ற அறுவை சிகிச்சைகளில் உங்கள் உயிர் அந்த மருத்துவரின் கைகளில் மட்டுமே. அந்த உயிர் காக்கும் தொழிலுக்குரிய மரியாதையை மட்டும் மனதில் நிறுத்துங்கள். தனிப்பட்ட பாதிப்பினால் உண்டாகும் எரிச்சலை 'அறச்சீற்றம்' என்ற பெயரில் பொதுவெளியில் தெளிக்காதீர்கள். 

பேருந்து விபத்துக்கு பிறகு காட்சியளிக்கும் அவசர சிகிச்சை/ ட்ராமா வார்ட்டை போல் ரணகளமாக இருக்கிறது முகநூல்.இங்கு மருத்துவர்களை கிழிப்பவ‌ர்கள் எல்லாம் , நேரம் கிடைத்தால் ஒரு சாலை விபத்தோ, தீ விபத்தோ நடந்து முடிந்த அன்றோ அதற்கு மறுநாளோ அவசர சிகிச்சை/ ட்ராமா வார்ட் போன்ற இட‌ங்க‌ளுக்கு ஒரு விசிட் அடிக்கவும்..நீங்கள் இங்கே ஃப்ரன்ட் லோடிங்  வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அங்கே என்னத்த கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என கண்கூடாக பார்க்க முடியும்.  

அதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து மருத்துவர்கள் லெமன் சேவை செய்கிறார்களா இல்லை பிரியாணி கிண்டுகிறார்களா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். 

Sunday, 10 August 2014

இதுவும் கடந்து போகும்


ஏழெட்டு வயதான சிறுமி ஒருத்தி, படுத்தால் மூச்சு விடச் சிரமமாக உள்ளதாகத் தன் தாயுடன் பல் மருத்துவமனைக்கு வருகிறாள். இடது பக்க அன்னத்தில் ஒரு சிறிய கட்டி. அரசு மருத்துவமனைக்கே உரிய சாங்கிய சம்பிரதாயங்களுக்குப் பின்னர் அந்தக் கட்டியிலிருந்து திசு எடுத்து,பரிசோதனைக்கு (பயாப்சி) அனுப்பப்படுகிறது.அந்தக் கட்டி,அன்னத்தில் சிறிதாக தெரிந்தாலும்,இடது மேல் தாடையின் சைனஸ் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது சி டி ஸ்கேனில் தெரிய வருகிறது. அதற்குள் அது புற்றுநோய் கட்டி அல்ல, சாதாரணக் கட்டி தான் என்று திசுப்பரிசோதனை ரிப்போர்ட் வரவே, கட்டியை மருந்துகள் மூலமாகக் குறைத்து, பின்னர் தேவையெனில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தத் திசுவைப் பரிசோதனைக்கு அனுப்பிய பல்மருத்துவருக்கு திருப்தி ஏற்படாமல் தன்னிடம் பயிலும் முதுகலை மாணவர்களின் உதவியோடு கொஞ்சம் பணம் சேர்த்து மேலும் ஒரு முறை கட்டியிலிருந்து திசுவை எடுத்து,வேறு சில சிறப்பு பரிசோதனைகளுக்காக அபோல்லோ கேன்சர் மருத்துவமனைக்கு அனுப்புகிறார். அவர் சந்தேகித்தபடியே படியே அது ஈவிங்க்ஸ் சார்கோமா என்ற புற்று நோய்க் கட்டி என்று ரிப்போர்ட் வருகிறது. உடனே அந்தச் சிறுமி பல் மருத்துவக்கல்லூரியிலிருந்து, அரசு பொது மருத்துவமனையின் கேன்சர் பிரிவுக்கு கீமோதெரபிக்காக.
பரிந்துரைக்கப்படுகிறார். கீமோதெரபி கொடுக்கக் கொடுக்க கட்டியின் அளவு சிறியதாகத் தொடங்கியது. ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில் இங்கிருந்து ஆரம்பமாகியது.

அந்தச் சிறுமி, மருத்துவமனைக்குத் தன் தாயுடனேயே வருவாள். தாய்க்கு கூலி வேலை. தந்தைக்கு நமது அரசு வேறு சில முக்கியப் பொறுப்புகள் அளித்துள்ளதால் அவர் அதைச் சிறப்பாக செய்துக்கொண்டிருந்தார்.  தாம்பரத்தைத் தாண்டி வீடு. அரசுப் பொது மருத்துவமனை இருப்பதோ  சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில். பஸ் கட்டணமே, இருவர் வந்து போக ஐம்பது ரூபாய்க்கு மேல் ஆகும். இது தவிர சாப்பாடு செலவுகள். தாய் கூலி வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு. தந்தை பல நேரங்களில் தாயிடம் உள்ள பணத்தையும் பிடுங்கி, அரசின் வருமானத்தை அதிகரிக்க உதவிக்கொண்டிருந்தார். இதனால் தாம்பரத்திலிருந்து அந்த சிறுமியை கூட்டிக் கொண்டு நேரத்துக்கு வைத்தியத்துக்கு வர முடியாமல் தாயும் திண்டாடினார். மேலும்  அவர் அடிக்கடி தாமதமாக வரவே, லேட்டாக வருவதால் மருந்து போட முடியாது என்று இரண்டு மூன்று முறை மருத்துவமனையிலுருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தாய், வைத்தியத்துக்கு வருவதையே நிறுத்தி விட்டிருக்கிறார். பல் மருத்துவர் தரப்பிலிருந்து பல முறை தொலைபேசியில் அழைக்க முயற்சித்தும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, அவரும் விட்டு விட்டார். கிட்டத்தட்ட இரண்டுவருடம் கழித்து மறுபடி தொடர்பு கொண்டு அந்தத் தாயிடம் பேசி, வைத்தியத்திற்கு வரவழைத்தனர். அந்தச் சிறுமியின் அன்றைய நிலையை ஃபோட்டோவில் பார்த்த மாத்திரத்திலிருந்து நடு மண்டையில் யாரோ சுத்தியால் அடித்ததைப் போன்ற பாரம்.

வாயை  திறந்துக் காட்டினாலொழிய எங்கே இருக்கிறது என்றே தெரியாத அந்தக் கட்டி, சிகிச்சை எடுக்காததால் அந்தச் சிறுமியின் முகத்தில்  கோர  தாண்டவமாடியிருந்தது. வாய் என்று சொல்லப்படும்  துவாரம்  முக்கால்வாசிக்கு மேல் அந்தப் புற்று நோய்க் கட்டியால் அடைக்கப்பட்டு எங்கேயோ வலது புறம் தள்ளபட்டிருந்தது.  இடதுகண் வேறு திசையை நோக்கி இருந்தது. சில புகைப்படங்கள் நம் மனதில்  ஆழப்பதிந்து விடுகின்றன. கும்பகோணம் தீ விபத்தில் கரிக்  கட்டைகளாய் கிடந்த குழந்தைகள், முள் வேலிக்குப் பின்னால் நிற்கும் குழந்தைகள், துப்பாக்கியோடு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போராளிக் குழந்தைகள்...அந்த வரிசையில் இதுவும்.

இந்தச் சிறுமி விஷயத்தில் யாரோ ஒருவரை நிச்சயம் குறை கூற முடியாது. குடியினால் குலைந்து போகும் குடும்பங்களைப் பற்றி கவலையில்லாமல், இத்தனை கோடி வசூல் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் அரசாங்கம் முதல்,அரசுமருத்துவமனையில்
நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்கத் தவறியவர்கள் வரை எல்லோரும் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு இந்தச் சிறுமியின் பரிதாபமான நிலைக்குப் பங்களித்துள்ளனர். தன் குடும்பத்தைப் பற்றிக் கவலையே படாத எத்தனையோ ஆண் குடிமகன்களில் இந்த தந்தையும் ஒருவரே. ஒருவர் தவறு செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்துக்கொண்டே அவர் திருந்த வேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. அந்தப் படிப்பறிவில்லாத தாயையும் குறை சொல்ல முடியவில்லை. இருவரின் வறுமை, அறியாமை, இயலாமை, முயலாமை என்று ஏகப்பட்ட ஆமைகள் சேர்ந்து இவர்கள் மீது பரிதாபமே மிஞ்சுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் எந்நேரம் ஆனாலும் பார்க்கப்படும் வைத்தியம், ஏனோ பகல் நேரங்களிலேயே கூட அரசு மருத்துவமனைகளில் சாத்தியமாவதில்லை.
பணம் தான் எல்லாவற்றுக்கும் எல்லா இடங்களிலும் அடிப்படை என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், மேலோட்டமாகப் பார்க்கும் போது தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் வேலையாவது நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டியுள்ளது.அரசு மருத்துவமனைகளிலும் பணம் புழங்காமல் இல்லை.அடிமட்டப் பணியாளர் நிலையிலேயே ஆரம்பமாகி விடுகிறது வசூல் வேட்டை. யாருமே அரசுத் தரப்பில் சம்பளமில்லாமல் வேலை செய்து விடவில்லை. அரசு கொடுக்கும் ஊதியம், பிற மாநிலங்களின் மருத்துவத் துறைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே. அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தனியாக சேவை மனப்பான்மை பொங்கி ஊற்றெடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் அவரவர் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற கடமையைச் செய்தால் கூட போதுமானது. வேலையே செய்ய வில்லை என்றாலும் அரசு தரும் சம்பளம் வந்துக்கொண்டே தான் இருக்கப்போகிறது (lack of accountability) என்ற மெத்தனமே இது போன்ற அலட்சியமான அணுகுமுறைக்கு அடிப்படையாகிறது.மேலும் நம்முடைய நேரம் தவறாமை,கடமை உணர்ச்சி,அதிகார பலம் போன்ற நமது 'சிறப்புத் தகுதிகளை' எதிர்க்கத் திராணி இல்லாத ஒருவனிடம் முழுவீச்சுடன்  உபயோகிப்பதில் தானே நாமெல்லாம் கில்லாடிகள்!

வேறு எங்கும் பரவி இருக்காத நிலையில் ஆரம்பம் முதலே முறையான வைத்தியம் எடுத்துக்கொண்டிருந்தால் கூட இந்த வகை புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 25- 35 சதவிகிதம் மட்டுமே. அதனால் இதில்  பெரிதாக அலட்டிக்கொள்ள  எதுவும் இல்லை என அவரவர் வேலையை கவனிக்கக்  கிளம்பி விட்டாலும்  அந்தச் சிறுமியின் முகம் ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு கையாலாகாத்தனமும் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. என்னத்த படிச்சி என்ன பிரயோஜனம் என்று தாறுமாறாக மேலெழும்பும் எண்ணங்களை வழக்கம் போல் ஓர் ஓரமாக ஒதுக்கித்தள்ளி வைத்துவிட்டு, முகநூலில் ஃப்ரொஃபைல் ஃபோட்டோ என்ன வைக்கலாம் என்ற அதிமுக்கியமான வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த சிறுமியின் ஃபோட்டோவை பார்த்துவிட்டு வந்து பல நாட்கள் கழித்தே இந்தப் பதிவை எழுதுகிறேன். அண்மையில் தான் தெரியவந்தது அந்தச் சிறுமி இப்போது உயிரோடு இல்லை என்று. உண்மையில் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கிறது.

இதுவும் கடந்து போகும், நமக்கு எந்த பாதகமுமின்றி.

Thursday, 7 August 2014

ஆதங்கம்

சமீப காலமாக தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் ஊருக்கு வெளியே ஏகத்துக்கு முளைத்துள்ளன. சென்னைக்கு மிக மிக அருகில், திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் என்று ஃப்ளாட் ப்ரமோட்டர்கள் விளம்பரம் செய்வதைப் போல டிவி, ரேடியோவில் எல்லாம் கூவி கூவி அழைக்கிறார்கள். தாம்பரத்திலிருந்து பத்தே நிமிட பயணம் என்று சொல்லப்படும் கல்லூரிகளுக்கு பத்து நிமிடத்தில் செல்ல நாம் மைக்கேல் ஷூமேக்கரோடு தான் போக வேண்டும். சென்னையிலிருந்து இந்த கல்லூரிகளில் படிக்க வருபவர்கள் கல்லூரியில் இருப்பதை விட அதிக நேரம் கல்லூரி பேருந்தில் தான் செலவழிக்கிறார்கள்.

ஜன நடமாட்டமே இல்லாத, நோயாளிகளுக்குப் போதுமான  போக்குவரத்து வசதியும் இல்லாத,ஊருக்கு ஒதுக்கப்புறமாக பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள இக்கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும்பாலும் எந்த குறைச்சலும் இருப்பதில்லை. இது போன்ற தனியார் கல்லூரிகளில் நோயாளிகளை சப்ளை செய்வதைத் தவிர மற்ற எல்லா வசதிகளையுமே நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு செய்து தர முடிகிறது.

இந்த ஆளே இல்லாத டீ கடைகளுக்கு நோயாளிகள் வருவது பிள்ளையார் பால் குடிப்பதைப் போல அபூர்வ நிகழ்வாகும். கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் வாங்கும் காபிடேஷன் பத்தாது என்று 
வரும் சொச்ச நோயாளிகளிடமும் வைத்தியத்திற்கு  கட்டணம் வசூலிக்கின்றனர்.நோயாளிகள் வரத்து குறைவாக உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.கட்டணத்திற்கு பயந்து பாதி வைத்தியத்தில் அரசு மருத்துவமனைக்கு ஓடி வரும் நோயாளிகள் ஏராளம்.ஆடிக்கும் அமாவாசைக்கும் வரும் அந்த கொஞ்ச பேருக்காகவாவது இலவசமாக சிகிச்சை அளித்தால் தான் என்ன? மாட்டார்கள். எல்லா வகையிலும் காசு பார்க்க வேண்டுமே! 

இது ஒரு கலைக்கல்லூரியாகவோ பொறியியல் கல்லூரியாகவோ இருக்கும் பட்சத்தில் கல்லூரி எந்த ஆள் நடமாட்டமில்லாத தனித்தீவில் இருந்தாலும் யாரும் அதனால் பாதிப்படைய போவதில்லை. ஆனால் மருத்துவம் பயில அடிப்படையே மனிதர்கள் தானே? அதற்கான வசதியே இல்லாத போதும் எந்த நம்பிக்கையில் இது போன்ற கல்லூரிகளில் எக்கச்சக்கமாக காசு கொடுத்து மாணவர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர் என்றே புரியவில்லை.உபரித் தகவலாக 90% கல்லூரிக் கட்டிடங்கள் அரசு அனுமதி பெற்று கட்டப்படவில்லை என்ற உண்மையை வேறு ஏதோ ஒரு அமைச்சர் சமீபத்தில் உளறிக் கொட்டி கிளறி மூடி அடங்கியுள்ளார். நம் நாட்டில் இதுப் போன்ற கல்லூரிகளுக்கு எவ்வாறு அனுமதி கிடைக்கிறது என்று அமெரிக்கா ரிடர்ன் மப்பிள்ளை நம்மூர் ரோட்டில் குப்பையை பார்த்து அதிர்ச்சி ஆவதைப் போல ஜர்க் எல்லாம் கொடுக்க கூடாது. நம்நாட்டில் எதுவும் சாத்தியம் என்பது அனைவரும் அறிந்ததே.

அரசிடம் அனுமதி பெற்று நடத்தப்படும் இந்த கல்லூரிகள் அனைத்தும் அடுத்த கட்டமாக நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மேலும் 'தரம் உயர்ந்து' நாற்பது ஐம்பது லட்சங்கள் காபிடெஷன் ஃபீஸ் வாங்கி தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கும் சேவையையும் நம் தமிழ்த்திருநாட்டில் செவ்வனே செய்யும். மருத்துவம் படிக்கும் போது நோயாளிகளையே பார்க்காதவன் எல்லாம் நம்ம இளைய தளபதி டாக்டர்.விஜய் வைத்துள்ள டாக்டர் பட்டத்தைப் போல ஒரு டிகிரியோடு வெளியே வருவான். இவர்களை நம்பி வைத்தியம் செய்துக் கொள்ளப்போகும் மக்களின் நிலை நமது புரட்சிக் கலைஞரிடம் சிக்கிய வேட்பாளர் நிலைமை போலத்தான்.எப்படியாவது பெயருக்கு முன் டாக்டர் என்ற இரண்டெழுத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் இந்த விபரீத விளையாட்டு மேலும் மேலும் பணத்தாசை பிடித்தவர்களால் ஊக்குவிக்கப்படுகிறதேயொழிய இந்த தவறான ஆசையை ஒடுக்குவார் யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

இந்த 'அனுமதி' அளிப்பது 'தரச்சான்றிதழ்' தருவது போன்றவை எத்தனையோ உயிர்களை பணயம் வைத்து செய்யப்படும் விஷயம். தனக்காக கட்டிக்கொள்ளும் தன் சொந்த வீட்டைத் தவிர, மற்ற எல்லாவற்றுக்கும்- அது ஒரு அடுக்கு மாடி கட்டிடமோ, பள்ளியோ, ஆஸ்பத்திரியோ, சினிமா தியேட்டரோ, மேம்பாலமோ- அவற்றின் தரத்தை நிர்ணயம் செய்ய மனித உயிர்களைக் காட்டிலும் விலைமதிப்பில்லாதது பணம் மட்டுமே என நினைக்கும் அதிகாரிகளின் பங்கு அசாத்தியமனது. இவர்கள் உள்ளவரை தகுதியற்ற அங்கீகாரங்கள் வழங்கப்படுவதையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் அந்நியன், ரமணா , கந்தசாமி மாதிரி யாராவது வந்து தடுத்து நிறுத்தினால்  தான் உண்டு! 

டிஸ்கி : இந்த கட்டுரை மருத்துவக்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் கண்ட ஆதங்கத்தின் வெளிப்பாடே அன்றி எந்த தனியார் அமைப்பை சாடும் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல. 

Friday, 23 May 2014

மார்க்'கோமேனியா!


இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னால்  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் 481 முதல் மதிப்பெண்ணாக இருந்தது. அந்த 481க்கு ஏகப்பட்ட பெருமைகள் இருந்தன.ஒரு அரசுப் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவது முதல் பெருமை. கல்வித்துறையில் மிகவும் பின் தங்கிய ஒரு மாவட்டத்தில் இருந்த இந்த பள்ளி இதனால் வெளிச்சத்துக்கு வந்தது இன்னொரு பெருமை.இது வரை இல்லாத மற்றுமொரு பெருமை சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம். இந்த காலத்தைப் போல எந்தவித சிறப்பு கோச்சிங்கும் இல்லாமல், டியூஷனும் இல்லாமல் மரத்தடியில் படித்து மதிப்பெண் பெற்றது  மற்றுமொரு பெருமை. இரண்டு பாடங்களில்(கணிதம் மற்றும் சமூக அறிவியல்)நூறு மதிப்பெண் என்பது இருபது  வருடங்களுக்கு முன்னால் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.இன்று மாநிலத்தில் ரேங்க் வாங்கியுள்ள மாணாக்கியர் படிக்கும் பள்ளிகளில் 481என்பது சற்றே குறைவான மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 481லிருந்து 499க்குள் குறைந்தது ஐநூறு பேராவது இருப்பார்கள் என்று நம்புகிறேன்.சில பல வருடங்களுக்கு முன்பு வரை 490க்கு மேல் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன்/ மாணவி என்றிருந்த நிலை மாறி இப்போது 499மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலேயே பத்தொன்பது பேர் உள்ளனர்.

இதற்கு மாணவர்கள் இப்போதெல்லாம் அருமையாக படிக்கின்றனர் என்பது தான் சரியான காரணமாக இருக்க முடியும் என்பதை என்னால்  முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை. தேர்வுத்தாள்களை மதிப்பிடும் முறைகள் மிகவும் 
தளர்த்தப்பட்டுவிட்டனவா?நிச்சயமாக. ஏன்?  மதிப்பெண்களை வாரி வாரி வழங்க என்ன காரணம்?  பள்ளிகளை ப்ரொமோட் செய்யவா? இருக்கலாம். தெரியவில்லை. இப்போதைய மதிப்பெண்கள் கணக்கு இவ்வாறு ஏகப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறது.இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நாம் எல்லோருமே பெருமையுடன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.   ஆனால் ஏதோ இடிக்கிறது. 

அடிப்படையாக மாணவன் பயிலும் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். மாணவன் ஒரு கேள்விக்கு என்ன தேவையோ அத்தனை பாயின்ட்டுகளையும் ஒன்றை கூட தவற விடாமல் வரிசையாக எழுதினால், மதிப்பெண்ணை எப்படி குறைக்க முடியும்?இவ்வாறு எல்லா பாயின்ட்டுகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பி கேட்டால் கூட அந்த மாணவனால் யோசிக்காமல் கடகடவென ஒப்பிக்க முடியும். ஏனெனில் அத்தனையும் கணினி போல அவனுள் பதியப்பட்டு இருக்கும். அவ்வளவும் பயிற்சி. 

கணிதத்திற்கு  மட்டுமே உரித்தான நூறு இன்று மொழிப் பாடங்களுக்கு கூட வழங்கப்படுகிறது. இந்த நூறுக்கு ஆசைப்பட்டு வெவ்வேறு மொழிகளை கற்கிறார்கள் மாணவர்கள். பல்வேறு மொழிகளைக் கற்பது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய  விஷயம். சமஸ்க்ரிதம் ,பிரெஞ்சு படிப்பது தவறே அல்ல ஆனால் அதைப் படித்தவர்கள் கோவிலில் அர்ச்சகராகவா அல்லது பிரெஞ்சு டீச்சராக போகப் போகிறார்களா ? எல்லாமே மதிப்பெண்ணுக்காக மட்டுமே. இதற்காக அவர்கள் தியாகம் செய்வது அநேகமாக அவரவர் தாய் மொழியாகவே இருக்கும். பள்ளிப் பருவத்திலேயே இந்த மதிப்பெண் ஊசியை குழந்தைகளுக்கு ஏற்றி விடுகிறோம். தடுப்பூசி போல பள்ளிப்பருவம் முடியும் வரை இந்த மருந்து வேலை செய்யும். கல்லூரியில் சேர்ந்த பிறகே அங்குள்ள கல்வி முறைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிள்ளை திணறுவது தெரியும். 

கீ கொடுத்த பொம்மை போல அனைத்தையும் உருப்போட்டு பரீட்சையில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் பெற்றவுடன் கீ கொடுத்த பொம்மை ராசிபுரத்திலோ,   ஊத்தங்கரையிலோ செக்கு மாடாக மாற்றப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து செக்கிழுத்த செம்மல்கலாக வெளியேறி ஒரு வழியாக மருத்துவக்கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ தஞ்சம் புகுகிறார்கள். இவை இரண்டும் கிடைக்காத பட்சத்தில் தான் பயோ டெக்னொலொஜி, ஜெனெடிக் எஞ்சினீரிங் ,ஆர்கிடெக்சர் போன்ற சற்றே வித்தியாசமான படிப்புகளில் செம்மல்கள் தள்ளப்படுகிறார்கள். 
இப்படி வரிக்கு வரி டப்பா அடித்தே பனிரெண்டாம் வகுப்பு வரை வந்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் தலையணை அளவு புத்தகங்களை உருப்போட முடியாமல் திணறுவதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். பள்ளியில் உருப்போடுவதைப் போல படித்ததையே திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்க கல்லூரியில் நேரம் ஏது?பள்ளியில் முதல் ரேங்க் வாங்கிய மாணவன் ப்ரொஃபெஷனல் கல்லூரியில் ஃபெயில் ஆவது சர்வ சாதரணமான விஷயம். என்ன பெற்றோர் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

 'லாஜிகல் ரீசனிங்'  என்பது இம்மாதிரியாக 'கண்டீஷனிங்' செய்யப்பட்ட மாணவர்களிடம் மிகவும் குறைவு. என்ன சொல்லிக் கொடுத்தாலும் கற்பூரம் போல கப்பென்று பிடித்துக்கொள்வார்கள். ஆனால் அதை தாண்டி (வேறு யாராவது சொல்லிக் கொடுத்தாலொழிய) அவர்களால் யோசிக்கவே முடியாது. யோசிக்கத் தெரியாது என்பது தான் கசப்பான உண்மை. வண்டி மாடு போல ஏற்கனவே உள்ள தடத்தில் மட்டுமே போகத் தெரியும். அவர்களின் இந்த நிலைமைக்கு பெற்றோரை தவிர வேறு யாரையுமே குறை கூற முடியாது. இந்த செய்முறையை இப்படித் தான் செய்ய வேண்டுமென ஆசிரியர் ஏன் சொல்கிறார் என்ற சாதாரண  கேள்வி கூட ஒரு மாணவனுக்குள் எழவில்லை எனும் போதே  அவனது  அடிப்படைக் கல்விமுறையில் நாம் செய்துள்ள தவறு புரியும்.

மாணவர்களின் சுயமாக  சிந்திக்கும் திறனையும், ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு புரிந்து கொள்ளும் ஆற்றலையும் மழுங்கடிக்கும் சேவையைத்தான் இன்றைய எண்ணெய் மில்கள் போட்டிப் போட்டுக்கொண்டு செவ்வனே செய்து வருகின்றன. மதிப்பெண்கள் அதிகமாக அதிகமாக அதன் மதிப்பு குறைந்து வருவது பெற்றோர்களுக்கு புரிகிறதா தெரியவில்லை.  மதிப்பெண்களுக்கு முக்கித்துவம் கொடுத்து கொடுத்து இன்னும் சில வருடங்களில்  நூற்றுக்கு நூறு எடுப்பவன் மட்டுமே தொழிற்கல்வி பயில முடியும் என்ற நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் மிகையாகாது. மதிப்பெண்களை மட்டுமே நோக்கிய நமது ஓட்டப்பந்தயம் முடிவுறும்  காலம் வரை மில் முதலாளிகள் நம் பிள்ளைகளை சக்கையாக பிழிந்து எண்ணெய் எடுப்பதை நிறுத்த வாய்ப்பே இல்லை.

இதற்காக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களையோ அவர்கள் பெற்றோர்களையோ நான் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ள  வேண்டாம்.மார்க் வாங்குவது மட்டுமே போதுமானது அல்ல என்று முதலில் பெற்றோர் தெளிய வேண்டும்.அந்தந்த மதிப்பெண்களுக்கு ஏற்ற  எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகளை, பிள்ளைகளுக்கு உருவாக்கி தருவதோடு எதையும் சமாளித்து மேலே வருவதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டாலே போதுமானது. அருகே இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் ஸ்பூன் பீட் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது.மதிப்பெண்களைத் தாண்டிய,ரேங்க்குகளை  மீறிய அவனது சுயமாக சிந்திக்கும் ஆற்றலுக்கு முக்கியத்துவம்   கொடுத்து வளர்த்து விட்டாலே போதும். எப்படி படித்து எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை மாணவனே முடிவு செய்துக் கொள்வான். 

Tuesday, 6 May 2014

மொட்டை




மொட்டைகளின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. நல்ல உருண்டையான முகங்களின் மண்டைகள் லேசான மேடு பள்ளங்களோடு உருளை கிழங்கு போலவே இருக்கும். நல்ல சிவப்பான மொட்டை  வெள்ளைக்காரரைப் பார்த்தால் பீட் ரூட் போலவும் நீள்வட்ட முக அமைப்புக்கு மொட்டை சுரைக்கையாயை போல் தெரியும் எனக்கு. 
காய்கறிகள் ஏன் மொட்டைகளோடு எனக்கு ஞாபகம் வருகின்றன என்பது விளங்காத புதிர்   

குழந்தைப் பருவத்தில் போட்டப்படும் முதல் மொட்டை எப்போதுமே விசேஷமானது. வளர்ந்து பெரியவனாகும் வரை பெற்றோர் முடிவு செய்யும் காரணங்களுக்காக மட்டுமே மொட்டை . கல்லூரிக்கு  வந்த பிறகு பெரும்பாலும் பெற்றோர் மொட்டை விஷயத்தில் 'தலை'யிடுவதில்லை. மகனாக விருப்பப்பட்டு மொட்டை அடித்துக்கொண்டால் தான் உண்டு. பெரும்பாலும் கல்லூரியில் இடம் கிடைத்தது,பாஸ் செய்தது, பின்னர் வேலை கிடைத்தது, நல்லபடியாக கல்யாணம் நடந்தது என்று எல்லாவற்றுக்கும் அப்பா அம்மா என்று இரு ஜீவன்கள் நமக்கு முன்னே மொட்டை போட்டுக் கொண்டு   நிற்பதை பல குடும்பங்களில் காணலாம்.என்   திருமணம்   நன்றாக நடந்து  முடிந்த கையோடு என் அப்பா  நான் இவ்வளவு  நாட்கள்  அவருக்கு  அடித்த மொட்டை  போதாது என்று  புது மொட்டையோடு வந்து நின்றார்.நல்ல அழகான  மொட்டை அது . மறக்க முடியாத சில மொட்டைகளில் அதுவும் ஒன்று.

ஒருவர் மொட்டை அடித்துக்கொள்ள  அன்றாட வாழ்வில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன . சடங்கு மொட்டை, சம்பிரதாய  மொட்டை,வேண்டுதல் மொட்டை, வெயில் மொட்டை, பேஷன் மொட்டை,சொட்டைமொட்டை,
சரும நோய் மொட்டை,
ஹீரோவுக்காக மொட்டை,அரசியல்   தொண்டன் மொட்டை, கவன ஈர்ப்பு மொட்டை  என மொட்டைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.  
இதெல்லாம் நமக்கு நாமே திட்டமிட்டு போட்டுக்கொள்ளும் மொட்டை. நம்  சம்மதம் இல்லாமல் நமக்கு மொட்டை அடிக்கப்படுவது மண்டையைப் பிளந்து பார்க்கும் அறுவை சிகிச்சைக்காகவே இருக்கும். 

வேண்டுதலுக்காக அடிக்கப்படும்  மொட்டை கடவுளிடம் நாம் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் தானே. ஆனால் அதிலேயும் வெளிச்சம் பட்ட மொட்டையைப் போல நம் சுயநலம் பளிச்சிடும்.இல்லையா பின்ன? எடுக்கும் போதும் வலிக்காமல், எடுத்த சுவடே  தெரியாமல்  எடுத்தால் வளர்ந்து விடும் என்று தெரிந்து தானே மொட்டை போடுகிறோம்? ஒரு முறை  மொட்டை அடித்தால்  மறுபடி வளரவே வளராது  என்று படைக்கப்பட்டிருந்தால்  எத்தனைப்  பேர் முடி கொடுக்க முன் வருவார்கள்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டிக்கு வேலையே இல்லாமல் நின்று நிதானமாக பெருமாளை  ரசித்து சேவித்து வரலாம் தானே? உடனே சாமிக்கு மொட்டை போடுவதை  கிண்டல் செய்வதாக யாரும் பொங்கத் தேவையில்லை.

 வாழ்க்கையில் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கோ   நம்மை சார்ந்தவருக்கோ மொட்டைப் போட்டிருப்போம் . பிறந்த போது மண்டையில் முளைத்த முடியோடு மண்ணுக்குள்   செல்பவர்கள் குறைவு.கிட்டத்தட்ட எல்லா மதங்களிலுமே மொட்டை போடும் வழக்கம் உண்டு. ஹிந்து, கிருத்துவம், முஸ்லிம், ஜியூஸ், புத்திசம், சைனீஸ்... எல்லாவற்றிலும் முதல் முடி எடுத்தலை ஒரு சடங்காகவே கொண்டுள்ளனர். அதிலும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பாகவே செய்கின்றனர். ஏனெனில் அதற்கு பிறகு ஆண்களைப் போல பெண்கள் மொட்டை போடுவதில்லை என்ற காரணத்தினால். 

ஆண்களுக்கு எப்படியோ கூந்தல் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய அசெட்.நீண்ட கூந்தலே ஒரு தனி அழகு தான்.பெண்களின்  மொட்டைக்கான  காரணத்தை  தெரிந்துக்  கொள்ள எல்லோரிடமும் ஒரு சிறு ஆர்வம் எப்போதுமே தொக்கி நிற்கத்தான் செய்கிறது.பெண்கள் பெரும்பாலும் பூ முடி கொடுப்பதோடு நின்று விடுவார்கள்.மூன்று இன்ச்சுக்கும் குறைவாக முடியை வெட்டிவிட்டு அது வளருதா வளருதா என்று அளந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் துணிந்து மொட்டை போடும் பெண்களும் உண்டு. அது பெரும்பாலும்  கணவனின் உடல் நிலைக்கோ, குழந்தையின் உடல் நிலைக்கோ நேர்ந்துக்கொண்டதாகவே இருக்கும். தனது காதலை பெற்றோர் ஒத்துக்கொள்ள வேண்டும் அதே சமயம்  தன்னைப் பார்க்க வேறு வரனும் வரக்கூடாது என்று மொட்டைப்  போட்ட  பெண்களும் உண்டு.

சில குடும்பங்களில் இன்றளவும் முதல் குழந்தை பிறந்தவுடன் மருமகள் கட்டாயம் மொட்டை போட வேண்டும் என்ற சடங்கு உண்டு. அது இருபது வயது மருமகளானாலும் சரி முப்பது வயதான மருமளானாலும் சரி அதே மொட்டை தான். அந்த காலத்தில் சில வீடுகளில் இந்த பழக்கம் உண்டு. அடுத்த குழந்தை உடனே வேண்டாம் என்பதற்காக பெருசுகள் முதல் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கு முன்னரே தாய்க்கு மொட்டை போட்டு விடுவார்களாம். தாய்க்கு மொட்டை போட்டால் அடுத்த குழந்தையை எப்படி தள்ளி போட முடியும் என்று சின்னப்பிள்ளைதனமாக கேட்க கூடாது. ஆனால் நாளாக நாளாக அதை ஒரு சடங்காகவே மாற்றிவிட்டது வீட்டில் உள்ள பெருசுகள்.மொட்டையும் போட்டு அடுத்த ஒன்றரை  வருடத்துக்குள்  இரண்டாவது குழந்தை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தேர்தல் முடிந்த சமயம் எதற்கு இந்த மொட்டை புராணம்?  கூந்தல் பற்றியே எழுதி போர் அடித்துப் போனதால் ஒரு மாறுதலுக்காக மொட்டை... 

Friday, 2 May 2014

தங்கம்


தங்கம் 

அக்ஷய த்ருதியைக்கு தங்கம் வாங்கச் சொல்லி கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தங்க நகை கடைக்காரர்கள் விழுந்து புரண்டு மார்க்கெடிங் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் நகை கடைகளில் இந்த ஏப்ரல் மாத கூட்டம் மட்டும்  குறைவதே இல்லை. அக்ஷய த்ருதியைக்கு நகை வாங்கினால்  தங்கம்  சேரும்  என்பதை நம்பி கடன் வாங்கியாவது நகை வாங்கிவிடுகின்றனர் பலர். அவர்களுக்கு வருடம் முழுதும்  நகை சேருதோ இல்லையோ அடுத்த அக்ஷய த்ருதியைக்கு மறுபடியும் நகை வாங்க கூட்டம் கூட்டமாக கிளம்பி விடுகின்றனர். தங்கம் விலையேற்றத்தை பார்த்து தெறித்து ஓடுபவர்கள் கூட இந்த அக்ஷய த்ருதியைக்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்று தவித்து போகிறார்கள். 

தங்கம் விலை உயர உயர சீட்டு கம்பனிகளுக்கு நிகராக நகைக்கடைகள் நடத்தும்  வித விதமான நகைச் சீட்டு திட்டங்களும் சூடு பிடித்துவிட்டன.பதினோரு மாதங்கள் கட்டினால் பன்னிரெண்டாவது மாதம் தொகையை நிறுவனமே போடும் போன்ற திட்டத்திலிருந்து ஒரு வருட முடிவில் குலுக்கல் முறையில் ஒரு கிராம் தங்கம் இலவசம் போன்று  பல கவர்ச்சிகரமான திட்டங்களை வைத்து விலை சகட்டுமேனிக்கு ஏறினாலும் மக்களை கடைக்கு இழுக்கும் அத்தியாவசியமான சேவையை நகைக்கடைகள் செவ்வனே செய்து வருகின்றன. நகை  சீட்டுக்கு பெரிய கெடுபிடிகள் இல்லாமல் சுலபமாக  
ஈ சி எஸ் முறையிலும் பணம் செலுத்த முடியும். இந்த நகை கடைகளிடம்  ஒரு  கான்செல்  செய்த  காசோலை  மட்டும்  கொடுத்தால் போதும்.மிச்சத்தை  அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள்.நகை சீட்டு கட்டுபவர்களுக்கு அக்ஷய த்ருதியைக்கு  கூடுதல் சலுகை உண்டு.நகை சீட்டு போட்டு ஒரு கல்யாணமே நடத்திய காலம் போய் ஒரு பவுன் வாங்கவே வருடம் முழுதும் சீட்டு கட்ட வேண்டிய நிலையிலேயே உள்ளது தங்கத்தின் விலை.

அக்ஷய த்ருதியைக்கு  இந்த வருடம் ஒரு பிரபலமான நகை கடை பிக் அப் ட்ராப் சர்வீஸ் வேறு ஏற்பாடு செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் இந்த மொட்டை வெயிலில் நாம் சிரமப்பட கூடாதாம். என்ன கரிசனம்! நீங்கள்  அந்த   நகை  கடை   வண்டியில் ஜாலியாக   போய்  இறங்கி  நகை கடைக்குள்  பிடித்த  நகையெல்லாம்  போட்டு  பார்த்துவிட்டு  எதுவுமே  வாங்காமல்  கையை  வீசிக்கொண்டு  வந்தால்  திரும்பவும்  அதே  வண்டியில் ட்ராப்  உண்டா , உண்டெனில் உங்கள்   வீட்டில்  தான்  ட்ராப் செய்வார்களா  என்பதை உறுதி படுத்திக்  கொண்டு  வண்டியில் ஏறுவது நல்லது.

செய்கூலி இல்லை சேதாரம் இல்லை கிராமுக்கு இருநூறு குறைவு முன்னூறு குறைவு என்று கூவி கூவி அழைக்கிறார்கள். நகை கடைக்காரனுக்கு என்னைக்கு சேதாரம் ஆகி இருக்கிறது ? சேதாரம் எப்போதுமே நம்ம பர்ஸுக்கு தான். தங்கம், வெள்ளி, ஸ்டெயின்லெஸ்  ஸ்டீல் எல்லாவற்றிலுமே கண்ணுக்கு தெரியாத லாபம்.இதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எத்தனை விதமான க்ளியர் ப்ரைஸ் டாக் வந்தாலும் நமக்கு கடைகாரரின் ஹிட்டன் காஸ்ட் தெரியப்போவதில்லை! 

 கடன் வாங்கி நகை வாங்கி அதை  அணிந்து அழகு பார்கிறார்களோ  இல்லையோ அதை வங்கியில் வைத்து மறுபடியும் கடனாவது  வாங்கி விடுகிறார்கள்.தங்கம் விலை உயர  உயர கிராமுக்கு  ஆயிரம்  ஆயிரத்தி  ஐநூறு  இருந்த  நகை கடன் தற்போது     கிராமுக்கு   இரண்டாயிரம் வரை கிடைக்கிறது.

பெட்ரோல் டீசல் விலையைப் போல தங்கம் விலையும்  இதுவரை ஏறுமுகமாகவே இருந்து வந்துள்ளது.ஆடித்தள்ளுபடியில் விலையை ஏற்றி வைத்து பின்னர் தள்ளுபடி தருவது போலவே ஆகிவிட்டது தங்கத்தின் விலையேற்றமும்  இறக்கமும். கிராமுக்கு நானூறு ரூபாய்  ஒரேடியாக ஏற்றி விட்டு அதை ஐம்பது நூறு என்று இரண்டு மூன்று முறை குறைப்பார்கள். ஒரு மாத முடிவில் பார்த்தால் சென்ற மாதத்தை விட கிராம் விலை நூறு ருபாய் அதிகமாகவே இருக்கும். ஐம்பதாயிரம் கொண்டு போனால் இரண்டு பவுன் முழுதாக தேறுவது கூட கஷ்டமே. ஆனால்  இதற்காகவெல்லாம்  தங்கம் வாங்காமல் இருக்க முடியுமா என்ன! என்ன தேர்தல் அவர்கள் தொகுதியில் யார் தேர்தலில் நிற்கிறார்கள் என்று எதையுமே தெரிந்துக் கொள்ள விரும்பாத பெண்மணிகள் கூட  அன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை சரியாக சொல்வார்கள். 
தங்கத்தின் மேல் பெண்களுக்கு உள்ள மோகமும் மாமியார்களுக்கு உள்ள தேவையும் பேராசையும் குறைய வாய்ப்பே இல்லை. தங்க விலையும் அப்படியே!